தமிழக அரசு கோவையில் நடத்திய மாநாடு உலகத் தமிழ் மாநாட்டின் தொடர்ச்சியான மாநாடு. செம்மொழித் தமிழின் பேரில் இது நடத்தப்பெற்றிருந்தாலும் இதன் உள்ளடக்கம் புதிய மொந்தையில் பழைய கள். செம்மொழிக்கு அரசு வரையறுத்துள்ள காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்புவரைதான். அதுவரையிலான ஆய்வு நடத்தப்பெற் றிருந்தால் மட்டுமே அதைச் செம்மொழி மாநாடு என்று செப்பலாம்.

தமிழின் பெயரால் மாநாடு, உலகத் தமிழர்கள் மாநாட்டை உற்று நோக்கினார்கள், பங்கெடுத்தார்கள், பாராட்டினார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் தமிழர்கள் அண்மையில் நிகழ்ந்த ஈழ அவலத்தை மறந்துவிடவில்லை என்பதும் உண்மை. இதை அரசு மறந்துவிடக்கூடாது.

மாநாட்டின் விளைவு என்னவென்று பார்த்தால், மாநாடு முடிவதற்கு முன்பு முதல்வர் தமிழ் வளர்ச்சிக்கென்று வரவுசெலவுத் திட்டம் வரப் போகிறதென்று தமிழர்களை உசுப்பிவிட்டார். முடிவில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. எல்லோருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. செம்மொழி மாநாட்டுக்கு இணையாக நடந்த கணினி மாநாட்டு முடிவும் பெரிதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஓரிலக்கம் பரிசுத் திட்டத்தோடு அதுவும் முடிந்தது.

மாநாட்டுத் தீர்மானங்களைப் பார்ப்போம். இவைகூட அறிவிப்புகளாகவே அறிவிக்கப்பட்டன.

«  தமிழகத்தில் ஐந்து இடங்களில் மரபணுப் பூங்கா நிறுவப்படும். அதற்கு மா.சு. சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.

«இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவையான வற்றைச் செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

«  நடுவணரசில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது. அனைத்துத் தேசிய மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிப்ப தில் காலத் தாழ்த்தம் ஏற்படுமேயானால் செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.

« சென்னை உயரறமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றி உயரறமன்றத்தின் பரிந்துரையும் பெற்று நடுவணரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனைக் காலந் தாழ்த்தாமல் ஏற்பளிக்க வேண்டும்.

«  சமற்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவது போன்று தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத் தொகையை நடுவணரசு வழங்க வேண்டும்.

« இந்தியா முழுவதும் ஓரிலக்கம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் அறுபதாயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இந்திய அரசு அமைக்கவுள்ள இந்தியத் தேசியக் கல்வெட்டியல் நடுவத்தைத் தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

« கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டப் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய நடுவணரசு திட்டமிட வேண்டும்.

« தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும் பொது மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

«  தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

« தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்குக் கணியன் பூங்குன்றனார் விருதும் ஓரிலக்க உருவாய்ப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

«  பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.

«  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியர் உலகச் செம் மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.

«  குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துதல்

«  திராவிட மொழிகளின் கலை - பண்பாடுகளை நினைவுறுத்தும் வகையில் நிலையான கண்காட்சி அரங்கம் அமைத்தல்

«  மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக் காப்பகம் அமைத்தல்

«  சிதறுண்டு கிடக்கும் ஆராய்ச்சிக் குழுக்களை ஒருங்கிணைத்தல்

«  மொழி ஆராய்ச்சியிலும் மொழித் தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கு  ஆதரவளித்துத் துணைபுரிதல்

«  உலகத் தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுதல்

«  உலகத் தமிழர்களைத் தொடர்புகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்

«  கோவைச் செம்மொழி மாநாட்டின் நினைவாகக் காந்திபுரத்தில் ஒரு கி.மீ. நீளத்துக்கு நூறு கோடி உருவாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.

« தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும் ஆசிய ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்த்தல், பிறமொழிப் படைப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

« அறிவியல் தமிழை மேம்படுத்த கணினி, மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களைத் தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தல்.

«  தமிழ் வளர்ச்சிக்குத் தனியாக நூறு கோடி உருவாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இதற்கு நடுவணரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும்.

இவைதான் மாநாட்டு அறிவிப்புகள். ஈழத் தமிழர் அவலம் முதல்வரையும் உலுக்கிக் கொண்டுள்ளதைத்தான்  இரண்டாம் தீர்மானம் எடுத்துச்சொல்கிறது.

நாட்டை உரக்கிடங்கில் தள்ளி மண்ணை மலடாக்கிய மாசு சாமிநாதன் தமிழ் மரபணுப் பூங்கா அமைப்பாராம். இவருக்கு எந்தத் தமிழ் மரபு தெரியும். இதற்கு நம்மாழ்வார் போன்ற நல்ல அறிஞர்களைப் பயன்படுத்த வேண்டும்.

மாநாட்டின் போது தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று போராடிய மதுரை, சென்னை வழக்கறிஞர்களைத் தளைப்படுத்திய அரசு தமிழை வழக்குமொழியாக்குமா என்பது கேள்விக்குறி.

சமற்கிருதத்திற்கு நடுவணரசு ஆண்டுக்கு ஆயிரம் கோடி உருவாய் செலவு செய்கிறது. அதுபோல் நாம் மானியம் கேட்பது ஞாயமே.

தமிழ்க் கல்வெட்டுகள்தான் இந்தியாவில் மிகுதி. ஒரியா வரை நமக்குத் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. தேசியக் கல்வெட்டியல் நடுவத்தைத் தமிழ்நாட்டில்தான் அமைக்க வேண்டும்.

பூம்புகார், குமரிக்கண்ட ஆய்வுகளை நடுவணரசு செய்யாது. தமிழக அரசுதான் முனைந்து நடுவணரசு உதவி பெற்றுச் செய்ய வேண்டும்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்ற அதிகாரம் உள்ள ஆணையம் அமைக்க வேண்டும்.

தமிழ் படித்தவர்களுக்கும் தமிழ்வழியில் படித்தவர் களுக்கும் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை தரவேண்டும்.

கணினியைத் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும். விருது வழங்குவதால் பயன் கிடைக்காது.

பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் பயிற்றுமொழியாக வேண்டும். செம்மொழி ஆய்வு மட்டும் நடத்துவதால் பயன் இல்லை.

உலகத் தமிழ்ச் சங்கம் 1981இல் நிறுவப்பட்டது. அதன் பணி தொடங்கப்படவில்லை. முப்பதாண்டுகளுக்குப் பின்னும் தொல்காப்பியர் உலகச் செம்மொழிச் சங்கம் என்று பெயரை மாற்றுவதால் பயனில்லை. தமிழ் மாநாட்டை உலகத் தமிழ் மாநாடு என்றும் உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்றும் இரண்டாகப் பகுத்து நடத்த வேண்டும். செம்மொழித் தமிழின் சிறப்பு தனியே ஆராயத்தக்கதாகும். செவ்வியல் காலத்தையும் இக்காலத்தையும் இணைத்துக் குழப்பக்கூடாது. இரண்டுக்கும் தொடர்பிருந்தாலும் தனித்தனியே ஆயத்தக்கவை. அவ்வளவு வளம் தமிழில் உள்ளது.

மாநாட்டின் உடனடிப் பயன் கோவைக்கு மேம்பாலம் கிடைத்ததுதான். மொழிபெயர்ப்புப் பணியை வரையறை செய்ய வேண்டும். செவ்வியல் இலக்கிய மொழிபெயர்ப்பைச் செம்மொழி நிறுவனத்திடமும் பிற மொழிபெயர்ப்புகளைத் தொடர்புடைய நிறுவனங்களிடமும் வழங்க வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கு நூறு கோடி சிறப்பு நிதியம் போதாது. மேலும் நிதி ஒதுக்க நடுவணரசை வற்புறுத்தலாம்.

உலகத் தமிழ் மாநாட்டை மூன்றாண்டுக் கொரு முறையும் உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டை ஐந்தாண்டுக் கொருமுறையும் நடத்தினால் தமிழ் வளர்ச்சி முறையாக மதிப்பிடப்பெறும்.

Pin It