பொதுவாகப் பண்டைத் தமிழர் கலைத் திறங்கள் மறுக்கப் படுகின்றன. அல்லது, அவை மற்றையோர்க்கு உரியனவாகத் திரித்துக் கூறப்படுகின்றன.

சீனநாட்டு நுண்ணூசி மருத்துவம் உலகளாவப் பரவிப் புகழ் பெற்றுள்ளது. அது தமிழ் நாட்டு வர்மக்கலையின் வளர்ச்சி என்பதே உண்மை.

சீனநாட்டு மருத்துவ முறையும் சிறப்பித்துப் பேசப்படுகின்றது. ஆயின் 1600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுச் சித்த மருத்துவம் சீனத்துக்குச் சென்றுள்ளது. சீன நாட்டினர் இருவர் தமிழ்நாட்டுக்கு வந்து சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்து சித்தர்கள் ஆகியிருக்கின்றனர். தமிழில் சித்த மருத்துவ நூல்கள் எழுதியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தமிழ்நாட்டிலேயே தங்கி மறைந்தாராக, இன்னொருவர் அரபு, பெருசியம், துருக்கி ஆகிய நாடுகளுக்குச் சென்று பல நோய்களைக் குணப்படுத்தியிருக்கிறார். அவர்தம் அரபு நாட்டுச் செலவுக்குப் பின்னரே அரபியர் மருந்தாக்கக் கலையில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். பின்னர் அவர் சீனத்துக்குத் திரும்பியிருக்கிறார். அவ்விரு சித்தர்களும் புலிப்பாணியாரும் போகரும் ஆவர். அறிஞர் சாம்பசிவம் பிள்ளை அவர்களின் மருத்துவ அகராதி முன்னுரைச் செய்தியின் தமிழாக்கம் வருமாறு:

‘போகரும் புலிப்பாணியாரும் ஆகிய சித்தர்கள் சீனநாட்டினர் (புத்த சமயத்தினர்) என்றும், அவர்கள் தோராயமாக 1600 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவுக்கு வந்து சித்தர் பள்ளியில் தமிழ் மருத்துவத்தையும் பொன்னாக்கக் கலையையும் கற்றனர் என்றும் சித்தர்களின் நூல்களில் கூறப்பட்டுள்ளன. போகர் அரபுநாடு, பெருசியா, துருக்கி முதலான நாடுகளுக்குச் சென்று சித்த மருத்துவக் கலையைப் பரப்பியதோடு பல நோய்களைக் குணப்படுத்தி யிருக்கிறார் (போகர் 7000 காண்க). இறுதியில் அவர் சீனத்துக்குத் திரும்பியிருக்கிறார். புலிப்பாணியாரோ தமிழகத்திலேயே தங்கி மறைந்தார். போகர் அரபு நாட்டுக்குச் சென்ற பின்னரே மருந்தாக்கக் கலையில் அவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைந்து, நிலத்திணை கனிமப் பொருள்கள் பற்றி ஆராய்ந்தவை மாந்த இனத்துக்குப் பெருநன்மையாய் வாய்த்துள்ளது’ (மருத்துவ அறிவியல் அகராதி முன்னுரை பக்கம் 10-11)

இச்செய்தி சித்த மருத்துவம் சீன நாட்டுக்குச் சென்ற வரலாற்றைக் கூறுவதுடன், அரபு நாட்டு யுனானி மருத்துவ வளர்ச்சிக்கும் அதுவே மூலமாக அமைந்தது என்னும் குறிப்பையும் தருகின்றது.

Pin It