நாமம், NAME என்பன பெயர்குறிக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிச் சொற்கள். முந்தைய ‘நாமம்’ சமற்கிருதம்; பிந்தையது ஆங்கிலம். திருவள்ளுவர் காலத்திலிருந்து ‘நாமம்’ தமிழில் வழங்குகிறது; ஆங்கிலேயர் வருகையின் பின் இந்த ‘NAME’ நம்மைத் தொடர்கிறது.

 

சமற்கிருதம், ஆங்கிலம் இவற்றிற்கு அப்பால் உள்ள பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் நாம, ‘NAME’ வடிவையத்த வேறு வடிவச் சொற்கள் பெயர் குறிக்க வழங்குகின்றன. பெயர் குறிக்கும் இந்தோ-ஐரோப்பியச் சொற்கள் பலவாயினும் இவை அனைத்தும் ‘gna’ எனும் ஒரேவோர் இந்தோ-ஐரோப்பிய மூலத்திலிருந்து பிறந்திருப்பதாக இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதி அறிஞர்கள் ஆய்ந்துரைத்துள்ளனர்.

 

“காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்”

என்னும் திருக்குறளின் நாமமும்,

 

“முன்னை அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தை ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”

என்னும் அப்பர் தேவாரப் பாடலின் நாமங்களும் போல நாமங்கள் பல தமிழில் இடம்பெற்றுவிட்டன.

 

தமிழ்ச்சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிச்சொற்கள் பலவற்றிற்கு மூலமாக இருப்பதைக் கால்டுவெல் பெருமகனார் முதன்முதல் விளக்கிக் காட்டினார். ஞானப்பிரகாசர் தமிழ், இந்தோ-ஐரோப்பிய மொழிகட்கே மூலமொழி என்று இயம்பி எடுத்துக்காட்டுகள் பல தந்து அகராதியும் வரைந்தார். பாவாணர், இவ்விருவர் வழியில் மிக விரிந்த நிலையில் தமிழ், இந்தோ-ஐரோப்பிய மொழிகட்கு மூலம் என்பதை ஆய்ந்து நிறுவினார்.

 

நாமம், ‘NAME’ ஆகிய இந்தோ-ஐரோப்பியச் சொல்வரலாற்றைச் சரியாக ஆயும்போது இவற்றின் வரலாறும் தமிழ் வரலாற்று வழியாகவே பிறந்துள்ளது தெரியவருகிறது.

 

‘அறிவு’ என்ற சொல்லிற்கு எவ்வளவோ விரிந்த பொருளைக் கூறலாம். இந்த உலகை அறிவதுதான் அறிவு என்று அதற்குச் சுருக்கமாகப் பொருள் உரைத்தால் அது சரியான வரையறையாக இருக்கும். இந்த உலகை மெய்யால் தொட்டும் வாயினால் சுவைத்தும் கண்ணினால் கண்டும் மூக்கினால் முகர்ந்தும் செவியினால் கேட்டும் மனத்தால் எண்ணியும் அறிந்து வருகிறோம். உலகம், ஐம்பொறிகட்குப் புலனாவதை ஒட்டித்தான் அதற்குப் புலன் என்ற இன்னொரு சொல்லும் தமிழில் பிறப்பதாயிற்று.

 

ஐம்புல அறிவொடு மனமாகிய அகப்பொறி அறிவும் சேர்ந்து பெற்றதன் வழியாகத்தான் மாந்தன் ஆறறிவுடையவன் என்ற தகுதியைப் பெற்றான்.

 

பொறிகள் ஐந்திலும் அறிவு அதிகம்பெற மாந்தர்க்குப் பெருந்துணையாயிருப்பது ‘கண்’ ஆகிய பொறியே.

 

அறிவைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களில் ளீஸீஷீஷ்றீமீபீரீமீ, ஷ்வீsமீ என்பன குறிப்பிடத் தக்கன. இந்த இரு சொற்களும் தமிழின் கண், விழி ஆகிய இருசொற்களின் வேர்வழியாகப் பிறந்துள்ளன என்பது உலகம் அறிய வேண்டிய செய்தி. கண்-கன்-க்னா, know+leche-knowledge எனவும் விழி-விடி-விசி-wise எனவும் தாம் இவ்விரு சொல்லும் விரிந்தன. இவ்வுண்மையை முழுமையாக அறிய கால்டுவெல் பெருமகனாரையும் பாவாணரையும் ஆங்கில வேர்ச்சொல் அகராதி அறிஞர்கள் எழுதிய விளக்கத்தையும் நாடவேண்டும். செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்கு யான் அளித்துள்ள “தமிழ் - வட இந்திய மொழிகட்கு இடையேயான வேர்ச் சொல், இலக்கண ஒப்புமைகள் குறித்த ஆய்வு” என்னும் ஆய்வேட்டில் knowledge, wise பிறந்த வரலாற்றை முழுதும் தொகுத்து ஆய்ந்து அளித்துள்ளேன்.

 

‘கண்’ ஆகிய தமிழின் உறுப்புச் சொல்லை முதற்கண் இந்தோ-ஐரோப்பியத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர் கால்டுவெல். வடமொழியின் “ஞானம்” ஆங்கிலத்தின் know என்பன கண்வழிப் பிறந்த நுட்பத்தை அவரே சுட்டினார்.

As. cnawan; Ice.kna; On.kna; ME.knowen; E.know; OHG. Chnaan, cnahan. L.gna, gnarus; OIrish.gnath; WB.gnaw; GK.gignnoska Skt.jna.

 

பெயரும் அறிதலே

உலகம் பொருள்களாலும், நிகழ்வுகளாலும் ஆனது. இந்தப் பொருள்கள் ஒவ்வொன்றையும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அடையாளப்படுத்தித்தான் உலக மக்களாகிய நாம் அவற்றை அறிந்து வருகிறோம். அவ்வகை யில் ஒவ்வொன்றையும் அறிந்து வழங்குகின்ற ஒலி அடையாளமே மொழியில் சொற்களாகின்றன.

தமிழின் ‘பெய்தல்’ வினைவழி உருவானதே பெயர் என்னும் சொல். பெய்தல் வினை, பலபொருளது. அவற்றில் ‘இடுதல்’ என்ற பொருள் குறிப்பிடத்தக்கது. உலையில் அரிசியை இடுதலை இப்பெய்தல் சொல் சுட்டும். “உலைப் பெய்து அடுவது போலும் துயர்” (நாலடி. 114) என்பது நாலடி.

 

note, notice, notify, notion, notorious, notable போன்றவை அறிதற்பொருளடு உறவுடைய சொற்கள். இவை பலவும் gna, gno வாகிய அறிதல்வழி உருவாகித் திரிந்தவையாகும். கண் - கன், gna, gno-gnote - note என்றவாறுதான் ஆங்கில வேர்ச்சொல் அகராதியில் note சொல்லைக் கீற்று வருவிப்பார். மேற்குறித்த வேறு சொற்களும் note உருவான வழியில் உருவானவையே.

 

வழங்குதல் பொருள்தரும் முன்னொட்டாகிய ‘de’ உடன்சேர்ந்து உருவானதே அடையாளப்படுத்துதலைக் (to markout) குறிக்கும் denote. Note இல் காணுதல்-அறிதல் சுட்டும் கண்வழி உருவான க்னோ ‘GNO’ இருப்பதை மேல் விளக்கினோம்.

 

கண் - ரீஸீணீ, ‘GNO’ வழியில் மேலும் பல அறிதற் சொற்கள் உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் உருவாகி ஆங்கிலத்தில் புழங்குகின்றன. cognisance, cognation, ignoble, ignominy, ignore போல் பல இவ்வகையில் உள்ளன

.

gna-gno ஆகிய இவ்வறிதல் சொல்வழியதாகவே பெயர் குறிக்கும் name சொல்லை வருவித்து விளக்கியுள்ளார் மாமேதை கீற்று.

 

name. A.S. nama+Du.naam; Icel.nafn, namn; Dan.navn; Swed. Namn; Goth. Namo; G.name. further allied to L.nomen or gnomen, a name; GK.gno-nai; Skt.naman from GNA, to know. see know என்று அவர் அளித்த விளக்கத்தில் இதனைக் காணலாம்.

 

காணுதல் வினைதரும் கண்-கண்ணு வழியாக அறிதல் பொருள்தரும் gna ஆகிய வேர், இந்தோ-ஐரோப்பியத்தில் பிறந்தது எனக் கால்டுவெல் விளக்கிய அதே வழியில்தான் உலகில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றையும் அறிந்து வழங்குதல் (de-gnote-denote) என்ற பொருளில் இந்த name ஆகிய பெயர் குறிக்கும் சொல்லும் gna, gnam-nam, name என ஆங்கிலத்தில் உருவானதென நாம் சுருக்கமாக அறிதல்வேண்டும். மேலை இந்தோ-ஐரோப்பிய ‘name’ இன் பிறிதொரு திரிபே gna, gnam, naam நாம-நாமம் ஆகிய கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருதத்தின் பெயர் குறிக்கும் சொல் என்பதையும் இவ்விடத்துச் சேர்த்தெண்ணுதல் நலம்.

 

‘காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்’

ஆகிய திருக்குறளின் ‘நாமம்’ சொல், தமிழ்க் கண் வழி gna, gnaam – naam என்று உருவானதென்று காமமின்றி வெகுளி யின்றி மயக்கமின்றி உரைப்போம்.

Pin It