வெங்காளூரில் திருவள்ளுவர் சிலை நிறுவி ஆண்டுகள் பதினெட்டு கடந்தபின் சென்ற தி.ஆண்டு 2040 கடகம் 24 ஆங். 09-08-2009 ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது, ஓர் உடன்பாட்டின் அடிப்படையில் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது. “திருவள்ளுவர் சிலை வெங்காளூரில் திறக்கப்படுமெனில், சென்னையில், “புரட்சிப்பாவலர்” என்று கருநாடகத்தில் அழைக்கப்பெறும் போற்றற்றிரு (பூஜ்யஸ்ரீ) சர்வக்ஞர் சிலை திறக்கப்படும் என்பதுதான் அது. அதன்படி கடந்த தி.ஆ.2040 கடகம் 28 (ஆங். 13-08-2009) வியாழக் கிழமை புரட்சிப்பாவலர் சிலை சென்னையில் திறக்கப்பட்டது.

கன்னடப் பாவலர் சர்வக்ஞர் புரட்சிக் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகக் கூறியவர். சாதி பாகுபாடு குறித்தும், வேதம் குறித்தும், பார்ப்பனர் குறித்தும் இவர் பாடியுள்ள கருத்துக்களே இவரை முற்போக்காளராக - புரட்சிப் பாவலராகப் போற்றச் செய்தன. சர்வக்ஞரின் பாடல் மூன்றடி அளவுள்ள பாடல் என்பதால் “திரிபதி” என்று கன்னடத்தில் பெயர் பெறுகிறது. ஒவ்வொரு பாடலின் இறுதியில் “சர்வக்ஞ” என்றே முடிவுறும். அதனாற்றான் அவரை “சர்வக்ஞர்” என்று அழைத்தனர் போலும். ஏனெனில் சர்வக்ஞர் இயற்பெயர் குறித்தும், வாழ்வியல் குறித்தும் சரிவர அறிந்திலர்!

இங்கு நாம் கவனிக்கக்கூடியது; கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்து வாழ்வியல் நூலை “உலகருக்கு” அளித்த திருவள்ளுவரையும், கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த சர்வக்ஞரையும் ஒன்றிணைத்துப் பேசுவது, ஒன்றாக வைத்து எண்ணுவது எவ்வாறு என்பதைத்தான்!

வள்ளுவப் பெருந்தகையின் கருத்துக்களைத் தமது பாடல்களில் படைத்துள்ளார் என்பது மட்டுமன்றிச் சொல்லும் கருத்துக்களைத் துணிவாகவும் எடுத்துரைத்தவர் என்பதனால் அவரை வள்ளுவப் பெருந்தகையோடு இணைத்துப் பேசுகின்றனர் போலும்.

சர்வக்ஞரின் காலம் குறித்துப் பல ஆய்வுகள் உண்டு. அதை மேலோட்டமாக நாம் அறிந்தால் போதும். இவருடைய பாடல்களைக் கொண்டும் இவரின் காலத்தை அறியலாம். இவர் மைசூர் நகரின் பக்கத்தில் உள்ள சீரங்கப்பட்டணம் என்ற ஊரை ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானிடமிருந்து கைப்பற்றியதைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். “திருவரங்கப் பட்டணத்தை ஆங்கிலேயர்கள் தம் வயப்படுத்திக் கொண்டதைப் போன்று இவ்வுலகையே (தம்) வயப்படுத்திக் கொள்வர் சர்வக்ஞ” என்று பாடியுள்ளார்.

“ஆங்கள தேஷதிம்பி ரங்கீரு பந்து

ரங்க பட்டணவ தெகெதெல்ல ஜகவன்னு

பங்க படிணுவரு சர்வக்ஞ” (688)

“ஆங்கிலேயர்கள் மைசூர் நாட்டோடு ஐதர்அலி காலத்திலிருந்து அவர் மகன் திப்புசுல்தான் காலம்வரை போராடி (நான்கு மைசூர் போர்) இறுதியில் திப்புவைக் கொன்று நாட்டைக் கைப்பற்றினர். (நான்காம் மைசூர் போரில் ஏறக்குறைய முப்பத்தேழாயிரம் படைவீரர்களைக் கொண்டு வெற்றி பெற்றது ஆங்கில அரசு. அப்போரில் திப்பு வீரச்சாவு எய்த திருவரங்கம் கி.பி. 1799ஆம் ஆண்டு மே திங்கள் 4ஆம் நாள் ஆங்கிலேயர் கைக்குள் அடங்கியது).

இதனைப் பாடியுள்ள சர்வக்ஞர் அதனை ஒட்டிய காலத்தில் வாழ்ந்தார் என்று கூறலாம். (வேறு ஆய்வுகளின்படி அவர் வாழ்ந்த காலம் கி.பி. 1700 என்றும் கி.பி. 1600 என்றும் கூறுவர்). இவருடைய தந்தை பசவரசர் என்றும் தாயார் மாலி என்றும் அறியமுடிகிறது. இவர் துறவு மேற்கொண்டு யாருடைய விருப்பத்திற்கும் ஆளாகாமல் தன் விருப்பப்படி வாழ்ந்தவர்.

ஆசிரியர் (குரு), மாணவர் (சீடர்), படைப்பு, தானம், செங்கோன்மை, கொடுங் கோன்மை, பெரியார் துணை, சிற்றினம், ஊழ், மழை, மனைவி, வறுமை, நாவன்மை, களவு, சினம், நன்மை (நல்லது), தீமை (கெட்டவை) எனப் பல திறப்பட்ட தலைப்புக்களில் பாடியுள்ளார். மேலும் இவர், குமுகாயச் சீர்கேடுகளைக் களைந்திட அரும்பாடுபட்டு இலிங்காயத அறத்தினை உலகிற்கு அளித்த பெம்மான் பசவன்னரை விடக் காலத்தால் பிற்பட்டவர். அவரைப் போன்றே இலிங்காயத அறத்தைப் போற்றுவதோடு, பசவன்னரின் கருத்துக்களை ஏற்றும் அவரைப் போற்றியும் பாடியுள்ளார்!

சர்வக்ஞருடைய பாடல்களைத் தொகுத்தவர்கள், பாடல்களின் எண்ணிக்கையில் வேறுபடுகின்றனர். எம்.எசு. சாபாதி (M.S. Shaabhadhi Mutt)) மட வெளியீட்டின் படி 1343 பாடல்களைக் காணலாம். கன்னட சாகித்திய பரிசத்து வெளியீட்டின்படி 2100 பாடல்கள் என்றும் அறிய முடிகின்றது.

உலக மாந்தருக்கான வாழ்வியல் நூலை உலகிற் களித்த வள்ளுவப் பெருந்தகையினரைக் கவனிப்போமானால் இவர் கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்தவராவார். எம் மதத்தையும் சாராது, குறிப்பிட்ட எக்கடவுளரையும் சுட்டாது எம்மொழியையும் நிலைப்படுத்தாமலும், உலக இனத்தில் எவ்வினத்தையும் சாராமலும் தம் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக உரைத்தவர் இப் பொய்யாமொழிப் புலவர்!

உலக நயன்மை (நீதி) நூல்களில் முன்வரிசையில் இருக்கும் நூல் வள்ளுவமாகும். 1330 குறட்பாக்களைக் கொண்ட இந்நூல் மூன்று பால் கொண்டு, முப்பால் என்றும் பெயர்பெறும். மாந்த இனத்தைச் சாதியால் பிரிக்கும் (இந்தியா வில் மட்டும்) மனுக் கொள்கையைத் தடையிட்டு, மடை கட்டி மாந்தவியலைப் போற்றும் மாந்த நூல் திருக்குறளாம்.

பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று அறத்துப்பாலிலும், அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என்று பொருட்பாலிலும், களவியல், கற்பியல் என்று இன்பத்துப் பாலிலும் ஆக 133 அதிகாரங்களில், ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துக் குறட்பாக்களை இரண்டு அடிகளில் கொண்டதாம், இவ்வாழ்வியல் நூல். அனைத்து மதத்தினரும் புகழ்ந்து போற்றுவதோடு இந்நூல் தமது மத்தைச் சார்ந்தது என்று சொந்தம் கொண்டாடுவதில் முனைப்புப் பெறுகின்றனர்.

சாதி, சமயத்தைப் போற்றும் மனுவின் கொள்கையை எதிர்ப்பதில் சர்வக்ஞர் பின்னடைவு கொண்டதில்லை. தான் சிவனிய மதத்தைச் சார்ந்த போதிலும், இலிங்காயத அறவழி யைப் போற்றியிருப்பினும், எக்கடவுள், எல்லா உயிர்களை யும் காக்கின்றாரோ, அவர்தான் “கடவுள்” என்று கூறுவார். பார்ப்பனியத்தையும், சாதியையும் சாடி ஆகமங்களை ஆய்ந்து அதன் குழறுபடிகளை உள்ளபடியே கூறுவதாலும் இவர் புரட்சிப் பாவலர் என்று அழைக்கப்படுகின்றார். மேலும் அரண்மனையைவிடத் தன் விருப்பப்படி வாழ்வதற்கேற்ற சிறுகுடிலே சிறந்தது, வெட்கத்தை விட்டும், மானத்தைத் துறந்தும் உண்ணப்பெறும் அறுசுவை உணவை விடத் தம் வீட்டிலிருக்கும் பழைய சோறே சிறந்தது என்று கூறுகின்ற கருத்துக்களாலும் இவரைப் புரட்சிப் பாவலர் என்றழைத்துப் பெருமைப்படுத்துவர் மக்கள்.

இனி வள்ளுவப் பெருந்தகையின் கருத்துக்களையும் சர்வக்ஞர் கருத்துக்களையும் காணலாம்.

உயிர் கொன்று அதன் ஊன் உண்ணானை எல்லா உயிர்களும் தொழும் என்பார் திருவள்ளுவர். அதேபோல் எல்லா உயிர்களைக் காப்பவனே கடவுள் என்பார் சர்வக்ஞர்.

“கொல்லான், புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்” - குறள் 260.

“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை” - கு. 327

- தன்னுயிர் போவதாக இருந்தாலும் தான் பிறிதொன்றின் இனிய உயிரைப் போக்கும் செயலைச் செய்தல் கூடாது.

“ஆதேவா ஈதேவா மாதேவனென பேட

ஆதேவா தேவ புவதை பிராணிகளி

காதவனே தேவ ஸர்வக்ஞ! - (104)

- அந்தக்கடவுள் இந்தக் கடவுள் தம்முடைய கடவுள் என்று கூறாதீர், எந்தக் கடவுள் உலகில் உள்ள உயிரினங்களைக் காப்பவனோ அவனே கடவுள் என்று உணர் என்பது சர்வக்ஞர் கூற்று.

துறவு குறித்து திருவள்ளுவர் கூறுவார்:

மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க் குடம்பும் மிகை - கு. 345

தம்முடைய பிறப்புநீக்கும் முயற்சியை மேற்கொண்ட வர்க்கு அதை நீக்கும்வரை, கருவியாயிருக்கும் தமது உடலே மிகையாய் இருப்பதால் வேறுபொருள்களின் தொடர்பு எதற்காம்! (இவ்வுலகப் பற்றினைத் துறந்தவர்களுக்குத் தமது உடலே மிகையாக இருக்கும்போது இதன்வழிப் பெறப்படும் தொடர்புகள் எதற்கென்பதாம்.)

இதனைச் சர்வக்ஞர்;

முத்து நீரொளு புட்டி மத்தெ நீரப்புதே

ஸத்ய வனறித ஞானி ஸம்ஸாரவன்னு

மத்தெ ஹொத்துவனே ஸர்வக்ஞ! (191)

“கடல்நீரில் பிறந்த முத்து மீண்டும் (கடல்) நீராகுமா? உண்மை அறிவு எதுவென்று அறிந்த அறிஞர் மீண்டும் உலக வழக்குகளில் சிக்குவரோ - (உலக இன்பதுன்பங்களில் மூழ்குவரோ) சர்வக்ஞ என்பார்.

குமுகாயச் சீர்கேடுகளைச் சாடிச் சாதியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்ததுமின்றி, வேதப் பிராமணங்கள் உபநிடதங்கள் - பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் படித்திடக்கூடாது என்று இருந்ததைச் சாடி சர்வக்ஞர் கூறுவார்.

“வேத ஷாஸ்த்ரா கமவ நோடி தடெ பலவேனு?

சேதிஸ§வ சித்த ஸமரஸ வில்லதடெ

பூதியலி ஹோம ஸர்வக்ஞ” - 244

மறை (வேதம்) அதைவிளக்கும் நூல் (ஆகமம்) துணை மறைநூல் என்பனவற்றைப் படித்திடத் தடை போடுவதால் பயனென்ன? அவரவருடைய மனமானது ஒரேநிலையில் இல்லையென்றால் சாம்பலில் வேள்வி செய்வதைப் போன்று பயனற்றது சர்வக்ஞ! - என்றும்

“ஸாலு வேதகளேகெ? மூலமந்த்ர களேகெ

மேலு கீலு எம்ப நுடியேகெ தத்வத

கீல நரிதவகெ ஸர்வக்ஞ” - (248)

“மெய்யறிவின் உண்மை நிலையறிந்த அறிவர்களுக்கு நான்கு மறை (வேதங்கள்)கள் எதற்கு? மூல மந்திரங்கள் தான் எதற்கு? மேல்கீழ் என்ற சொல் எதற்கு சர்வக்ஞ” (உண்மையான மெய்யியலை அறிந்தவர்களுக்கு, மறைகள் கமுக்கமந்திரங்கள், மேல்கீழ் என்ற பாகுபாடு ஏதும் இருப்பதில்லை என்பதாம்). - என்றும்

“நடெவு தொந்தே பூமி, குடிவு தொந்தே நீரு,

ஸ§டுவக்னியந்தே இருதிரலு குல கோத்ர

நடுவெ எத்தணது ஸர்வக்ஞ!” - (609)

நடப்பது ஒரே நிலத்தில், குடிப்பதும் ஒரே நீர், சுடுகின்ற சூரியனும் ஒன்றே என விருக்கும் போது இடையில்  குலம், கோத்திரம் என்பதெல்லாம் எதற்கோ சர்வக்ஞ என்றும்

“தாது ஏளனு கலெது பூத பஞ்சகவாகி

ஓது தேஹவனு தரிஸிர்த மனு, ஜர்கெ

ஜாதி, எத்தணது? ஸர்வக்ஞ!” - (612)

மனித இனம் படைக்கப்பட்ட உயிரினம் இல்லை - உலகில் மண்ணில் சூரிய ஒளியினால் நிகழ்ந்த பல நிகழ்வுகளில் ஒன்றானது உயிரினத் தோற்றமாகும். அத் தோற்றமானது மூலப் பொருட்கள் அல்லது அடிப்படையி லான பொருட்கள் முகாமையாக ஏழு கொண்டது என்பர் அறிவியலறிஞர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனையே போற்றற்குரிய சர்வக்ஞரும் வலியுறுத்தியுள்ளார்!

இராமலிங்க அடிகளாரும் இம்மூலப் பொருட்கள் ஆணிடத்தில் மூன்றும் பெண்ணிடத்தில் நான்கும் அடங்கியுள்ளது என்பார். இனி உயிர் தோன்றுவதற்கான அடிப்படையானவை உலகம், நீர், நெருப்பு, காற்று, வானம், என்ற ஐந்து என்பர். இவற்றின் இயல்பான மாற்றங் களால் மூல உயிரித் தோன்றியபின் இயக்கம் கொள்ள பால்நிலை கொண்டது. இவ்வடிப்படையில் சர்வக்ஞரும்-

“உடலின் மூலப் பொருட்கள் (குருதி, மூளை, கொழுப்பு, தசை, எலும்பு, காற்று, விந்து) ஏழுடன் ஐந்து மூலப் பொருட்கள் (ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம்) கலந்து உடலாகக் கொண்ட இந்த மனிதர் களுக்குச் சாதி என்பது எதற்காக? அல்லது எங்கிருக்கிறது? சர்வக்ஞ - என்கிறார்.

“ஜாதி ஹீரை மனெய ஜோதிதா ஹீனவே?

ஜாதி விஜாதியென பேட

தேவ்னொலி தாதனே ஜாத, ஸர்வக்ஞ!” - 613

“கீழ் சாதியென்று ஒதுக்கப்பட்டவர்களின் வீடுகளில் உள்ள விளக்கின் ஒளியும் கீழ்மையானதோ? சாதி - வெவ்வேறு என்று சொல்லாதீர், சாதியைத் தெய்வந்தான் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளானோ? சர்வக்ஞ” என்று கூறி மேலும்,

“உத்தமத வர்ணிகளே உத்தமரு எனபேட

மத்தெ தன்னந்தெ பகெவரனெல்லரனு

உத்தமரு என்னு ஸர்வக்ஞ!”

“உயர்வு என்ற படிநிலையிலுள்ள சாதியினரெனில், அவர்கள் நல்லவர்கள், சிறந்தவர்கள் என்று எண்ணாதீர் - “தன்னைப் போலவே” பிறர் அனைவரும் நல்லவரோ என்று எண்ணுதல் வேண்டும் “சர்வக்ஞ.”

இங்குத் தன்னைப் போலவே என்பது தனக்கு உயர்வு என்றால் பிறருக்கும் உயர்வு உண்டு என்றும், பிறருக்குத் தாழ்வு எனில் தமக்கும் தாழ்வு என்றும், தமக்கு ஏற்படும் இன்பதுன்பங்கள் பிறருக்கும் ஏற்படும் என்றும் உணர்வது அறமாகும் என்று கூறுவார் சர்வக்ஞர்.

சாதி குறித்து வள்ளுவர் குறிப்பிடவில்லை எனினும் குடிமை என்றும் மேல்கீழ் என்றும், நற்குடி என்றும், பழங்குடியென்றும் அந்தணர் என்றும், பிறப்பு என்பது உயிருள்ள அனைத்திற்கும் அனைவருக்கும் பொதுவானது என்றும் கூறுவார்.

“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும் - கு. 133

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்

இழுக்கார் குடிபிறந் தார் - கு. 952

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும், பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று - கு. 955

குடிமை என்றது தமிழ்க்குலப் பாகுபாடு, கல்வி, காவல், வணிகம், உழவு என்னும் பரந்த தொழிற்பகுப்பு ஆகும்.

ஒழுக்கம், வாய்மை, நாணம் முறையே மெய், மொழி, மனம் என்னும் முக்கரணம் பற்றியவாம் - எனவே பழி நேருமே என்று அஞ்சுவோர் மூன்றையும் ஒருபோதும் தவறார்.

பழங்குடி என்றது தொன்று தொட்டுப் பரவி வருகின்ற குடியினர். (பழங்காலத்திலிருந்தே வரும் சேரர், சோழர், பாண்டியர் குலத்தினர் என்று பரிமேலழகர் குறிப்பிடுவார்)

வள்ளுவர் உயர்குடி என்றும் கீழ்க்குடி என்றுமே சுட்டுவார். ஒழுக்கம் முதலான நற்குணம் நற்செயல் நல்மனம் கொண்டோர் உயர்குடியோர் என்றும் அவை அற்றோர் தாழ்குடியோர் என்று பிரித்துக்காட்டுவார்.

“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்” - கு. 543.

இங்கு அந்தணர் என்போர் - அறவோர். அறவழியில் வாழ்வோர் என்பதே வள்ளுவர் கருத்தாகும். “அந்தணர் என்போர் அறவோர்” (கு. 30) என்று சுட்டியது. காண்க! மேலும்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்” - கு. 972.

பிறப்பென்பது அனைத்து உயிர்களுக்கும் உடையது. பிறப்பென்பது உயிரோடு உடல் தோன்றல் அல்லது உண்டாதல் என்பதாம். இங்கு வள்ளுவர், “உயிர் என்றது மக்கள் உயிரை. செய்தொழில் என்றது மாந்தர் செய்கின்ற எத்தொழிலாயினும் என்பதாம். அரிய செயல் எளிய செயல் என்று பிரிக்கலாம். அல்லது பெருமை உடைய செயல் செய்வதும், சிறுமை உடைய செயல் செய்வதும் - அவ்வாறு செய்யப்படும்போது ஏற்படும் விளைவு நோக்கற்குரியது. எனவே சிறப்பற்ற செயலைச் செய்வதில் சிறுமையும், சிறப்பிற்குரியவனவற்றைச் செய்தால் பெருமையும், புகழும் உண்டாகும் என்பதாம். எனவே சாதி என்று சுட்டாது வள்ளுவர் மேன்மக்கள், கீழ்மக்கள் என்று சுட்டிக் காட்டுவார். மேலான எண்ணம், செயல், கொள்கை உடையவரே மேன்மக்கள். அஃதன்றி ஒழுக்கம் கெட்டு, கயமைக்குரிய செயல் செய்வோர் கீழ்மக்கள் என்பார்.

நன்மை தீமைகளைக் குறித்துத் திருவள்ளுவர் கூறியனவற்றில் சிலவற்றைக் காண்போம்.

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று” - கு. 259

நெய் முதலியவற்றைத் தீயிலிட்டு - ஆயிரமாயிரம் வேள்விகளைச் செய்து, நல்லவைக்கு வழி தேடுவதைக் காட்டிலும், ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணா திருத்தலே சிறந்தது என்று கூறி ஒவ்வொரு உயிரையும் மதித்து அதற்கு எவ்வொரு துன்பமுமே செய்யாதிருப்பதே சிறந்தது என்பார் வள்ளுவர்.

மேலும் உயிரைவிடச் சிறந்தது ஒழுக்கம் - மானம், ஒருவர் செய்த உதவியை மறவாதிருத்தல், பிறன்மனை சேராது வாழ்தல், பொய்சொல்லாமை என்று பல அதிகாரங்களில் விளக்கும் பெருந்தகையார்,

“அறங்கூறான் அல்ல செய்யினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது” - கு. 181.

என்றும்,

“புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கந் தரும்” - கு. 183

என்றும் கூறுகிறார்.

புறம் பேசுதலை வள்ளுவர் பெருங்குற்றமாகக் கருதியிருப்பதனை ஒருவன் இருக்கும்பொழுது அவனைப் புகழ்ந்தும் அவன் இல்லாத போது பழித்தும் கூறுவதான புறம்பேசுதல் என்பது பேசுபவருடைய கீழ்மையினையே வெளிப்படுத்துவதாம். எனவேதான் நல்லவை என்று எதையும் பேசாமலும், தீயவற்றைச் செய்திருப்பினும் ஒருவரைக் குறித்துப் புறம் பேசாதிருப்பதே சிறந்தது மட்டுமல்ல; அவ்வாறு புறம்பேசி வாழ்தலின் மடிவதே சிறப்புப் பெறும் அஃது அறநூலின் நல்லாக்கத்தைத் தரும் என்றும் சுட்டிக்காட்டுவார். சர்வக்ஞரோ சற்று மாறுபட்டுக் கூறுவார்;

“ஹுத்து ஹாவிகெ லேஸு

முத்து கொரளிகெ லேஸுகத்தெய ஹேரு தரலேஸு துப்பத

துத்து லேஸெந்த சர்வக்ஞ (711)

நல்லது என்ற சொல்லில் (பாது)காப்பினைச் சொல்வார் சர்வக்ஞர்.

“பாம்பு புற்றில் உறைவது நல்லது. கரணியம் புற்றினைப் போல் ஒரு பாதுகாப்பு வேறில்லை. கழுத்தில் முத்தினை அணிந்து கொண்டால், கழுத்து அழகுபெறும். மேலும் கழுதையின் முதுகில் பொதி ஏற்றுவது அதன் உரிமையாளனுக்குப் பயனாகும். உணவில் நெய் சேர்த்து உண்ணுதல் உடல்நலத்திற்கு நல்லது சர்வக்ஞ என்பார்.

அடுத்து,

ஞானெய நுடிலேஸ, வீணெய ஸ்வர லேஸ

மாணதலெ வதன ஷசிலேஸ - கூர்பவர

காணுவதெ லேஸு சர்வக்ஞ! (713)

அறிவர்களின் பேச்சு (உரை) நல்லது (நன்மை பயக்கும்), வீணையின் கோவை (ஒலி) நல்லது (கேட்டிட இனிமை பயக்கும்), எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் மாசற்று இருப்பது நல்லது, மேலும் அன்புடையவர்களைக் காண்பதும் நல்லது சர்வக்ஞ என்று வெவ்வேறு கோணங்களில் சுட்டிக் காட்டுவார் சர்வக்ஞர்.

“தீமை” என்பது குறித்துக் காணும் போது “சினம் தீது” என்று வள்ளுவர் கூறுவார்!

“செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்லதனின் தீய பிற.” - கு. 302.

“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்” - கு. 301.

“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புனையைச் சுடும்” - கு. 306

சினம் எத்தகைய தீமையைச் செய்யக்கூடியது என்று வள்ளுவனார் கூறுவார். ‘தன்னைவிட வலியவர் மீது சினங்கொண்டால், அது சினங் கொண்டவருக்கே கேடாய் முடியும்; ஆனால் தன்னைவிட மெலியார்முன் சினங் கொண்டால் அதைவிடத் தீமை விளைவிக்கக் கூடியது வேறு இல்லை என்று கூறுவதோடு, அச்சினத்தைத் தன்னைவிட மெலியார் மீது காட்டுவதைவிட, அதனை அடக்கிக் கொள்வதால் - தன்னைக் காத்துக் கொள்வதாகும், அதைப் போல் அல்லிடம் என்பதான தன்னைவிட வலிமை மிக்கவர்கள், அல்லது தவத்தால் உயர்ந்தவர்கள் காட்டு வதால் தீமை அவர்க்கில்லை. எனவே சினத்தைக் காட்டி னால் என்ன? அடக்கிக் கொண்டால் தான் என்ன - ஒன்று மில்லை. அதோடு அச்சினமானது தன்னை மட்டுமல்லாது, தன்னைச் சார்ந்தவர்களையும் சுடும் நெருப்பு என்னும் கொலையாளியும் ஆகும். மேலும் தன்னினத்தையும் சுடுவதோடு, இனத்திற்குச் சார்பாகவும், உற்றவராக இருப்ப வரையும் சுடும் - நெருப்பாக இருக்கும் என்பார் திருவள்ளுவனார்!

சர்வக்ஞர் கூறுவார்:

ஸாவிங்கெ, ஸமதிங்கெ ஆவுதந்தரவய்ய!

ஸாவுதா ஸமதெகளவல்ல கோபவனு

காவுதே ஸமதெ ஸர்வக்ஞ (291)

இறப்பிற்கும், ஒத்த உரிமை (சமத்துவம்)க்கும் எவ் வகையான வேறுபாடு உள்ளது. இறப்பு ஒத்த உரிமை யாகாது. சினத்தைக் காப்பதே ஒத்த உரிமை (சமத்துவம்) யாகும் சர்வக்ஞ!

இறப்பில் எவ்வித வேறுபாடும் இல்லை. இறப்பிற்கு இடமான சுடுகாடு அல்லது இடுகாட்டில் எங்குமில்லாத ஒரு நிலைப்பாட்டினைக் காணலாம் என்று அறிவர்களும் சித்தர்களும் கூறியுள்ளது இங்கு எண்ணத்தக்கது. ஆயினும் சாதிக்கொரு இடுகாடு அல்லது சுடுகாடு இருப்பதை மறுப்பதற்கில்லை. அறிவியல் காலம் என்று சொல்லத்தக்க இன்றைய காலத்தில் என்றால் சர்வக்ஞர் காலத்தையும் அவர் நோக்கில் காணத்தக்கது நன்றே! சர்வக்ஞர் சினத்தைக் காப்பதே வேறுபாடின்மையைக் காட்டும் என்றது, ‘சினத்தை மெலியார் மேல் காட்டும் முன் தான் வலியார் முன் நிற்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற வள்ளுவரின் கருத்தினை உள்ளடக்கியது அல்லவா!

“தீயவை” என்று சுட்டும்போது ‘பெரியாரின்’ துணை விடுத்திருப்பது பேரிடரை, தீமைகளைத் தரும் என்று வள்ளுவனார் பெரியாரைப் பிழையாமை என்று பத்துக் குறட்பாக்கள் கொண்ட ஓர் அதிகாரம் கூறுவதோடு பெரி யாரைத் துணைக்கோடல் என்று மற்றொரு அதிகாரமும் கூறுவார்.

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வெந்து கெடும்” கு. 899

“எரியால் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்” கு. 896

உயர்ந்த கொள்கையுடையோர் சினத்திற்கு ஆட் பட்டால் அரசனேயிருந்தாலும், தன் அரச நிலையிழந்து அழிவான்.

ஒருவர் எரிநெருப்பால் சுடப்படுபவராய் இருந் தாலும் பிழைத்திடுவர் ஆயின் (தவத்தில்) உயர்ந்த பெரியவர்களின் சினமென்னும் நெருப்பில் சிக்கியவர்கள் பிழைப்பது அரிதாகும் என்று கூறுவதோடு,

“கொடுப்பதூஉங் கெட்டார்க்கு சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை” - கு. 15

இவ்வுலகில் நல்லது செய்வது மழைதான். அதே நேரம் பெய்திடாது தீமை செய்வதும் மழையே - என்று மழையின் நன்மை தீமையிரண்டையும் கூறும் வள்ளுவர்,

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்” - கு. 52

இல்லறத்திற்கான நல்லியல்புகள் இல்லாத மனைவி வாய்க்கப்பெற்றால் அவ்வில்வாழ்க்கை கொண்ட தலைவன் எத்தகைய பல சிறப்புக்களைப் பெற்றிருந்தாலும் ஏது மில்லாதவனாவான் என்று கூறுவதோடு அத்தகைய மனைவி யினால் தான் பெற்ற சிறப்புகள் அனைத்தும் இழக்கின்ற தைப் போன்றதொரு தீமையிருந்திடும் என்று சொல்லாமல் சொல்வதை அறிந்திடலாம்.

மேலும் ஒன்றைக் கூறுவார்,

“எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு” - கு. 889

“எள்ளைவிட சிறியதே ஆயினும் உட்பகையானது பெருங்கேடு விளைவிக்கக்கூடியது.” உடலில் ஏற்பட்ட சிறு புண்ணானது ஆறாது உள்ளுக்குள் புறையோடி விட்டால் அஃது உயிருக்கே இடராவதைப் போன்று, உள்ளுக்குள் இருக்கும் பகையானது வெளிப்படும்போது பேரிடராக மாறுவது தமிழர்களின் பட்டறிவாகும் என்றால் தவறாகாது. தமிழ் மன்னர்கள் வேற்று மன்னர்களோடு போரிட்டு அழிந் ததைக் காட்டினும் தங்களுக்குள் போரிட்டு அழிந்ததே மிகுதி. தம் நாட்டை தாமே ஆளாது (பிற்காலத்தில்) பிறன் ஆள தாம் அடிமைபட்டு வாழ்ந்ததுதான் மிகுதி என்பதை வரலாறு காட்டும்.

இனிக் கருநாடகப் புரட்சிப்பாவலர் கூறுவதைக் காணலாம்.

“தோட்டதல்லி களெஹொல்ல கீட பௌஸிகெ ஹொல்ல

பேடவது ஹொல்ல - பரஸதிய துர்ஜனர

கூடவே ஹொல்ல சர்வக்ஞ” (508)

தோட்டத்தில் (விளைநிலத்தில்) களை கெட்டது. விளைச்சல் எனும் பயிர்களுக்கு நச்சுயிரி கெட்டது. பரத்தையினர் தொடர்பும் கெட்டது. அதுபோல் சிற்றினம் எனப்படும் கெடுமதியருடன் பழகுதலும் கெட்டது, சர்வக்ஞ.

“உப்பில்லதுண ஹொல்ல, முப்பு படவகெ ஹொல்ல

தப்பதா நுடிவ ஸதிஹொல்ல - ஒப்பிரலு

தப்புவதே ஹொல்ல ஸர்வக்ஞ!” (733)

உப்பில்லாத உணவு கெட்டது. ஏழையரின் முதுமை கெட்டது. (கணவருடன்) (தவறானது என்று தெரிந்தும்) தவறானவற்றைப் பேசும் மனைவியும் கெட்டவள். அதுபோல் நல்லவழி இருக்கும்போது, தவறானவழி செல்வதும் கெட்டது, சர்வக்ஞ என்று கூறுவதோடு, ஒழுகும் வீடும், சுவரில் துளையிட்டுக் களவு செய்வதும் கெட்டதே! (734) என்று கூறுவார் சர்வக்ஞர்!

இவ்வாறாகக் கி.மு. முதலாம் நூற்றாண்டினரான திருவள்ளுவரின் கருத்துக்களோடு கி.பி. 18ஆம் நூற் றாண்டில் வாழ்ந்திருந்த அறிஞர் சர்வக்ஞரின் கருத்துக்கள் நேர்பட இருந்தமையாலும் தீயவை என்று தாம் கருதியவற்றைத் தீதே என்று துணிந்து கூறிய பெருமான் என்று கூறலாம். அதனால்தான் திருவள்ளுவரோடு இணைத்துப் பேசப்படுவராகின்றார் புரட்சிப்பாவலர் சர்வக்ஞர்.

துணைநின்ற நூல்கள்:

1.திருக்குறள் (1) தேவநேயப்பாவாணர் உரை,

(2) புலவர் குழந்தை உரை

2.தென்னாட்டுப் போர்க்களங்கள் - பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார்

3.சர்வக்ஞர் வசனகளு - எம்எசு. சாபாதிமட, புக் டிப்போ, கதக்.

4.சர்வக்ஞர் வசனகளு - கன்னட சாகித்ய பரிசத்து, வெங்காளூர்.

Pin It