கடந்த 1 மாதமாகவே, போலி, காலாவதி மருந்து குறித்தான சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்தான பின்புலங்கள், பொறுப்பு / அதிகாரம் குறித்தான தகவல்கள், உண்மை நிலவரங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இக்கட்டுரை.

போலி காலாவதி மருந்துகள் என்றால் என்ன?

போலி மருந்துகள்:

ஒரு மருந்தின் அளவு, குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட குறைவாக இருந்தாலோ (உ.ம் 500 மி.கி. இருக்க வேண்டிய அளவு வெறும் 200 மி.கி. மட்டுமே இருப்பது, மருந்தே இல்லாமல் வேறொரு வேதிப் பொருளை மருந்தென சொல்லி மக்களை ஏய்ப்பது. (போலி மருந்தை உறுதிப்படுத்துவது வேதிப் பொருள் ஆய்வகங்களில் மட்டும்தான் முடியும்)

காலாவதியான மருந்துகள்

ஒரு மருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் வேலை செய்யும் என இருக்கை யில் அந்தக் காலக் கெடு முடிந்த பிறகும் திருட்டுத்தனமாக வேறொரு புதிய தேதியை அச்சடித்து காலக்கெடு முடியாதது போல் காட்டி மக்களிடம் விற்பது.

போலி, காலாவதி மருந்து களின் உச்சபட்ச பாதிப்புகள் என்ன?

உயிரிழப்பு (உ.ம்) நல்ல ரத்த அழுத்த மாத்திரையை உட்கொள் ளும் ஒருவர் போலி மருந்து உட்கொள்ளும் போது, ரத்த அழுத்தம் கட்டுக்கடங்காமல் போய் மாரடைப்பை ஏற்படுத்த லாம். மேலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு பக்க வாதம் போன்ற நோய் களும் ஏற்படலாம். பெரியவர்களை பொறுத்தமட்டில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது பிறருக்கு தெரியப்படுத்த முடியும். ஆனால் குழந்தைகளுக்கு?

இந்தியாவில்/ தமிழகத்தில் (தாழ்த்தப்பட்ட மக்களுக்கு) குறிப்பாக குழந்தை இறப்பிற்கான முக்கிய காரணம் வயிற்றுப் போக்கும், நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா சுரமும்தான். இவ்விரு நோய் களுக்கும் கொடுக்கப்படும் கிருமி கொல்லி மருந்து போலியாக இருந்தால், கிருமி விரைவில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தும். மேலும் சிறு குழந்தைகளால் இதை தெரியப்படுத்தக் கூட முடியாது.

போலி மருந்துகள் குறித்தான புள்ளி விவரங்கள் முக்கியத்துவம்:

ஆறேழு வருடங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் செய்த ஆய்வில், உலகிலுள்ள 35% போலி மருந்துகள் இந்தியாவில்தான் விற்பனையாகிறது. இந்திய மருந்துகளில் மூன்றில் ஒரு மருந்து போலி என்னும் அதிர்ச்சி தகவல்தான், தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னை மட்டுமல்லாது, மதுரை, ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் போலி மருந்து தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இருப்பி னும் இதுகுறித்தான முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

போலி மருந்து குறித்தான தற்போதுள்ள அரசு, ஊடகங்கள், கூறும் செய்தி உண்மைதானா?

போலி மருந்து என்பது சட்ட ரீதியான குற்றம் இதற்குப் பின்னால் ஒரு மாஃபியா கும்பல் செயல்பட்டு வருகிறது. அரசு இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமா? எடுக் காதா? என்பது மட்டும்தான்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன?

அரசின் பொறுப்பும் குறைபாடு களும்

போலி மருந்து என்ற பிரச்சினை வரும்போது அது குறித்து விசாரிக்கவோ, உறுதிபடுத் தவோ, தண்டிக்கவோ அரசுக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. சாதாரண மக்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆக, அரசுக்குத்தான் முக்கிய பொறுப்பு இருக்கும் நிலையில் அரசின் செயல்பாடு எப்படி யுள்ளது?

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அவர்களே அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள 350 மருந்துகள் இந்தியாவில், தமிழகத்தில் உலா வந்து கொண்டுதான் இருப்பதாகவும், அதற்கு காரணம் அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், ஒழுங்கு விதி முறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படாமல் போவதும் தான் என்பதிலிருந்தே அரசு தன் கடமையிலிருந்து எவ்வளவு தூரம் தவறியிருக்கிறது என்பது சொல் லாமலே விளங்கும். மேலும் இந்திய அரசைப் பொறுத்த மட்டில் போலி மருந்தை உறுதிப்படுத்தும் ஆய்வகங்கள் 14 மாநிலங்களில் மட்டும்தான் இருப்ப தாகவும், அதிலும் 7 மாநிலங்களில் மட்டும்தான், முழுமையான ஆய்வக வசதிகள் இருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்தியிலிருந்து இந்திய அரசின் மெத்தனப் போக்கும் விளங்கும்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 42000 மருந்து கடைகள் இருந்தும், அதை பரிசோதிக்கும் ஆய்வாளர்கள் மொத்தம் 50 பேர் மட்டும்தான் உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்ற வாதம் முன் வைக்கப்பட்டாலும் அதில் ஓரளவுதான் உண்மையுள்ளது. இருப்பினும் அவர்கள் நேர்மையாக இல்லாமல் பணம் பெற்றுக் கொண்டு இத்தகைய செயல்பாடுகளுக்கு துணை போவது என்பதுதான் பரவலான உண்மை!

இந்தியாவை, தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அரசு துறை மூலம் கிடைக்கும் மருத்துவ சேவை, சரிவர கிடைப்பதில்லை என்பதின் காரணமாகவே ஏறத்தாழ 80% மக்கள் தனியார் துறையைத்தான் நாடி செல்கின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்துகளின் தரம், குறைவாக உள்ளதெனும் போக்கின் காரணமாகவே அவர்கள் தனியார் துறையை நாடிச் செல்கின்றனர். இதை அரசு மருத்துவர்களும் நன்கறிவர் என்ற நிலைதான் மக்கள் மனதில் இருந்தாலும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை அமைக்கக் கூடாது என்ற சட்டம் தமிழ்நாட்டில் இல்லாமலிருப்பதும் (பீகார், ஜார்கண்ட், கேரளாவில் இந்த சட்டம் அமலில் உள்ளது).

மக்கள், அரசு மருத்துவமனையில் கிடைக்கும் மருந்தின் தரத்தைக் கண்டறிய வாய்ப்பு இல்லாம லிருப்பதையும் கணக்கில் கொண்டு இவற்றை சரி செய்ய உள்ளூர் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சமூக ஆர்வலர்கள் குழுவை நியமிக்க அரசு முன் வருமா? இப்பிரச்சினை குறித்து தீர்வு காண பொது விவாதங்கள் நடத்த அரசு முன்வந்தால் அது நல்ல உதாரணமாக இருக்கும் (ஊடகங்களில் பேசப்படாதது போல் அரசு தன் பொறுப்பை உணர்ந்து இப்பிரச்சி னையில் தனக்கு அதிகம் பொறுப்புள்ளது என்பதை உண்ர்ந்து செயல்பட்டால்தான் தீர்வு)

மருத்துவர்களின் பங்கு:

மருந்து குறித்தான விவரங்கள் / செய்திகள் மக்களுக்கு தெரியாது! மருத்துவருக்குத்தான் தெரியும் என்றுள்ள தற்போதைய நிலையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சரியான மருந்தை கொடுத்த நிலையில் சரியான முன்றேன்றம் தென்படாத நிலையில் கொடுத்த மருந்து போலி மருந்தாகவும் இருக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு இதுகுறித்தான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த முன்வருவது சரியானதாக இருக்கும். நவீன மருத்துவத்தின் தந்தை வில்லியம் ஆஸ்லர் கூறிய மருத்துவர் நோய் குறித்தான முடிவெடுக்கும் அறிவை நோயாளியின் துணையுடன் மட்டுமே பெறுகிறார்' என்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சரியான உண்மை மருத்துவ செய்திகளை தெரியப்படுத்துவதை கடமையாக உணர்ந்து செயல் பட்டால் நல்லது. ஆனால் உண்மை நிலவரம் என்ன? போலி மருந்துகள் குறித்து பேசும் நாம் போலி மருத்துவர்கள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. சட்டப்படி, முறையான பட்டம் பெறாமல் ஆங்கில மருத்துவத்தை செய்து வருபவர்கள் மட்டுமே போலி மருத்துவர்கள் என சித்தரிக்கப்படுவது போதுமான தல்ல! வைரஸ் காய்ச்சலுக்கு ஊசி, கிருமிக் கொல்லி மருந்து (தேவையற்ற) பரிசோதனைகள், குளுகோஸ் ஏற்றுவது உதவாது எனத் தெரிந்தும், 90% மேலான மருத்துவர்கள் வணிக நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலனை புறந் தள்ளி, அவற்றை செய்து வருவதி லிருந்து (அதையும் வேண்டுமென்றே, தெரிந்தே செய்வது) அவர்களையும் போலி மருத்துவர்கள் என அழைப்பதில் தவறு என்ன இருக்கிறது? மக்களே சிந்திப்பீர்.

மருந்துகளைப் பொறுத்த மட்டில் இரு வகைகள் உண்டு. வேதிப் பொருள் பெயரை பயன்படுத்தி அரசு உரிமைப் பெற்று மருந்தை உற்பத்தி செய்வது. (Generic Medicine எனும் வேதிப் பொருள் மருந்து) மற்றொரு வகை, அதே வேதிப் பொருளை பயன்படுத்தி, ஆனால் மருந்து குழுமத்தின் தனிப்பட்ட பெயரை சேர்த்து அம்மருந்தை சந்தையில் விற்பது, (உரிமம் பெற்ற Patent மருந்து), Generic மருந்திற்கும், Patent மருந்திற்கும் பெருத்த விலை வித்தியாசம் உள்ளது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பல அறிவியல் ரீதியான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விலை குறைந்த Generic மருந்துகளே Patent மருந்துபோல் வேலை செய்வது உறுதி செய்யப்பட்டு Generic மருந்துகளை மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப் படுகிறது.

தரக்கட்டுப்பாடு விதிமுறைகள் அங்கு கடுமையாக அமல்படுத்தப்படுவதாலும், தரம் குறைந்தால் தண்ட னைகள் கடுமையாக இருப்பதாலும் அங்கு Generic மருந்துகளை எடுத்துக் கொள்வதில் சிக்கல்கள் அதிகம் இல்லை. ஆனால் தமிழகத்தில் என்ன நிலைமை? மருத்துவர்கள் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அங்கு கடுமையாக அமல்படுத்தப்படுவதாலும், தரம் குறைந்தால் தண்டனைகள் கடுமையாக இருப்ப தாலும் அங்கு Generic மருந்துகளை எடுத்துக் கொள்வதில் சிக்கல்கள் அதிகம் இல்லை. ஆனால் தமிழகத்தில் என்ன நிலைமை? மருத்துவர்கள் (Generic) வேதிப் பொருள் மருந்துகளை அதிகம் பயன் படுத்தாமலிருப்பதற்கு முக்கிய காரணம் சொல்வது தரக்குறைவுதான். இதில் ஓரளவு உண்மையிருந்தாலும் தரமான Generic மருந்துகளை சில மருந்து குழுமங்கள் தயாரிக்கத்தான் செய்கின்றன. போலி மருந்து குழுமங்கள் அரசு சார்ந்த அதிகாரிகள், ஆய்வாளர்கள், அமைச்சர்கள் போன்றவர் களுக்கு கையூட்டாக பணம் கொடுக்கும் பாவச் செயல் நடந்து தான் வருகிறது.

ஒரு மருந்து Generic மருந்து என்பதாலேயே தரக்குறைவாக இருக்கலாம் என்று சட்டத்தில் சொல்லப்படவில்லையே! மேலும் தரக்குறைவாக இருக் கும் பட்சத்தில் அரசதிகாரிகள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறதே! விஷயம் இப்படி இருக்க போலி மருந்தை தயாரிக்கும் Generic மருந்து குழுமங்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்தாலே குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யலாமல்லவா? இதை செய்யாமல் அரசு தனது கடமையிலிருந்து தவறி விட்டது. மருத்துவர்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு விலை குறைந்த ஆனால் தரமான Generic மருந்துகளை தயாரிக்க அரசுக்கும், மருந்துக் குழுமங்களுக்கும் நிர்பந்தத்தைக் கொடுக்க குரல் கொடுக்காமலிருப்பது வேதனையே!

மருந்துக் கொள்ளையும் அரசின் பங்கும்!

நோய் பாதிப்பு, அதிகமிருக்கும் சமயங்களில் நோயாளிகளுக்கு குளுகோஸ் ஏற்றுவது தேவையா கிறது. குளுகோஸ் ஏற்ற பயன்படுத்தும் ட்ரிப் செட்டின் விலை மருத்துவர்களுக்கும், மருந்துக் கடைகளுக்கும் 5 ரூபாய்க்குக் கொடுக்கப்படுகிறது. இதுவுமே உற்பத்தியாளர்களுக்கும் மொத்த விற்பனையாளர் களுக்கும் ஒரு லாபத்தைச் சேர்த்துத்தான். இதிலிருந்த அதன் உற்பத்தி விலை எவ்வளவு குறைவானது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் மருந்து கடைகளில் பொதுமக்களுக்கு அதே ட்ரிப் செட் ரூ.50/க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று ப்ளுகனசோல் என்னும் படைக்கான (பூஞ்சை) மாத்திரை ஒன்றின் விலை பொதுமக்களுக்கு ரூ.32/க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மருத்து வருக்கோ, மருந்துக் கடைகளுக்கோ அதன் விலை ரூ.4/ மட்டுமே. இலாபம் வைப்பது தவறில்லைதான். ஆனால் இத்தகைய மருந்து கொள்ளைக்கு அரசே துணை போவது நியாயமா? மருந்தின் விலை வித்தி யாசத்தை கருத்தில் காண்டே, அரசும் JADS - JAN AUSHADHI DRUG STORES எனும் திட்டத்தை அமல்படுத்தி வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவருக்கும் மருந்து கடை களுக்கும் கிடைக்கும் விலையிலேயே பொதுமக்களுக் கும் கிடைக்க செய்யத் திட்டம் வகுத்தும் அதைக் கிடப்பில் போட்டது எதனால்? அதை ஏன் திரும்ப அமல்படுத்தக் கூடாது?

மருந்து விலையை நிர்ணயிக்கும் அரசின் மருந்து விலைக் கட்டுப்பாட்டு வாரியம் மொத்த விற்பனை யாளர்கள் அதிகபட்சமாக 15% தான் லாபம் வைக்க வேண்டும் என்றும், சில்லரை மருந்துக் கடைகளில் அதிகபட்ச மாக 35%தான் லாபம் வைக்க வேண் டும் என்பதும் வெறும் பரிந்துரை யாக மட்டுமே உள்ளதேயன்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு சட்டமாக்கப்படவில்லையே! எதனால்? மக்களே சிந்திப்பீர்!

மக்களின் பங்கு:

""என்னுடைய சுகாதாரத்தின் மேல் எனக்கு அக்கறை அதிகமா? அல்லது வேறொரு நபருக்கு அக்கறை அதிகமா? எனக்குத்தான் அக்கறை அதிகம். ஆக எனக்குத் தெரியாத மருத்துவ விஷயங்களை எனக்குத் தெரியப்படுத்தி முடிவெடுக்கும் உரிமையை என்னிடம் விட்டு விடுங்கள்'' மகாத்மா காந்தி. இது நூற்றுக்கு நூறு உண்மையே! இந்திய சட்டப்படி மருத்துவர் ஒருவர் தன்னை நாடி வரும் நோயாளிக்கு வியாதியின் பெயர் என்ன? அதற்கான காரணம் என்ன? அதற்காக என்னென்ன மருந்துகள் கொடுக்கப்பட லாம்? ஒவ்வொரு மருந்தின் சாதக பாதகங்கள் என்ன? இவற்றை விளக்கி முடிவெடுக்கும் உரிமையை நோயாளியின் கையில்தான் கொடுத்திருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்ன? நோய் குறித்தான விளக்கங்கள், நோயாளிகள் கேட்குமு திறனை நம் சமுதாயம் வளர்க்கவில்லை. அப்படி கேட்டாலும் நான் மருத்துவரா? நீ மருத்துவரா? உனக்கென்ன தெரியும்? நீ எப்படி புரிந்து கொள்ள முடியும் எனும் போக்கே பெரும்பாலான மருத்துவர்களிடத்தில் காணப்படுகிறது. ஆக, நல்ல மருந்துகள் பற்றிய விவரங்களையே அறிய முடியாத சூழலில்தான் சாதாரண மக்கள் இருந்து வருகின்றனர். மேலும் அனைத்துக் கருத்துப் பரிமாற்றங்களும் தான் புரிந்து கொள்ளும் தாய்மொழியில்லாமல் இருப்பது சிக்கலைத்தான் உருவாக்கும். மேலும் படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு மருத்துவ விஷயங்களைப் புரிய வைப்பது சிரமமாக இருந்தாலும், அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டால்தான் நல்ல மருந்து களைப் பற்றியே மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மக்கள் புரிந்து கொள்வதற்காக Standard Medical Treatment (இன்னென்ன வியாதிகளுக்கு இன்னென்ன மருந்து கள்தான் இந்த அளவில்தான் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான மருத்துவ விவரங்கள்) என்பது இருப்பதுடன் சட்டமாகவும், அமல்படுத்தப்பட் டுள்ளது. இதனால் மருத்துவத்தில் தவறுகள் நிகழ்கிறதா எனக் கண்டறிய அது ஒரு கையேடு போன்றும் பயன்படுகிறது. ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் அது வெறும் பரிந்துரையாக மட்டுமே உள்ளதன்றி சட்டமாக்கப்படவில்லை. இதன் காரணமாக மருத்துவ சேவை நுகர்வோர் சட்டத்தின் கீழ் வந்தாலும் தண்டிக்கப்படுவது மிக அபூர்வமான செயலாகவே உள்ளது.

இத்தகைய சூழலில் நோயாளி ஒருவர் தனக்கு வந்துள்ள நோய் குறித்தும் தொடர்பான மருத்துவ செயல்கள் குறித்தும் அவருக்கு புரிந்த மொழியில் எடுத்துரைக்கப்பட வேண்டும் என்பது அமல்படுத்தப் பட்டு, அதைக் கண்காணிக்க அனைத்து தரப்பு உள்ளூர் பகுதி மக்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு ஏற்படுத்துவதும், மீறுபவர்களை தண்டிக்கும் அதிகாரமும் உள்ளூர் குழுமங்களுக்கு கொடுத்தால் மட்டுமே இது சாத்தியப்படலாம். ஆக என் சுகாதாரம் எனது உரிமை என்னும் கலாச்சாரம் மேலோங்கி நிற்க அடிப்படை மருத்துவம், மருந்துகள் குறித்தான உண்மை விசயங்கள் (உம்) நோய் வருவதற்கு பிரதான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே கிருமிகளல்ல என்பது போன்று) தெரியப்படுத்துவதற்கான கல்விக் குழுக்களை உருவாக்கி அதன் செயலையும் கண்காணித்து மக்களுக்குத் தேவையான மாற்றங்கள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சென்றடையுமாறு ஆவண செய்தல் வேண்டும்.

ஆய்வகங்கள் போலி மருந்தைக் கண்டறிய அனைத்து கிராம அளவிலும் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருந்து குழுமங்களின் பங்கு

அரசு மருந்துகளை, மிகத் தேவையான மருந்துகள், பிற மருந்துகள் என இரு வகையாகப் பிரித்து, மிகத் தேவையான மருந்துகளை விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. சில வருடங்கள் முன்பு விலைக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த 75 மருந்துகளை 25 ஆகக் குறைத்து வணிக நலனுக்கு சாதகமாக செயல்பட்டு உள்ளது. மருந்து குழுமங்களும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் மருந்துகளை உற்பத்தி செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்காது என்பதால் அதன் உற்பத்தியையே கணிசமாக குறைத்துள்ளது. மீண்டும் வணிக நலனையே முன்னிறுத்தி செயல்படுவதற்கு ஆதாரமாக உள்ளது. ஆக வணிக நலன் மேலோங்கி நிற்பது மக்கள் நலனுக்கு எதிராகத்தான் அமையும். மருந்துக் குழுமங் களும் லாபத்தைக் கணக்கில் கொள்ளும்போது மக்கள் நலன் பாதிக்கப்படாமல் இருக்கும் எண்ணம் மேலோங்கி நிற்கும்போதே இது சாத்தியம்.

மருந்து கடைகளின் பங்கு

போலி மருந்து உற்பத்திக்கு மூல காரணமாக இருப்பது அரசு தனது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையான சுகாதாரத்தை பேணுவதிலிருந்து தனது பொறுப்பை மாற்றி சுகாதாரத் துறையை தனியார் மயமாக்குவதுதான். ஆக அரசு மருத்துவமனைகளில் சரியான கவனிப்பு இல்லாததால்தான் மக்கள் தனியார் துறைக்கு செல்கின்றனர். மேலும் தனியார் துறையில் மருத்துவ செலவு மிக அதிகமாக இருப்பதால் அவர் களே மருந்துக் கடைகளுக்குச் சென்று, ஒன்றிரண்டு வேளைக்கு மருந்து வாங்குவதும் அதற்கான ரசீதை பெறாமல் விடுவதற்கும், காரணமாக உள்ளது. சட்டப்படி மருந்துக் கடைகள் மருத்துவரின் பரிந்துரை யின்றி மருந்து கொடுக்கவோ, ரசீது இன்றி மருந்துகள் கொடுக்கவோ கூடாது.

இருப்பினும் மிகப் பெருமளவில் மருந்து கடை களே இன்று மக்களுக்கு மருந்தைக் கொடுக்கும் சூழல் இருப்பது அரசுக்குத் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமலிருப்பது போலி மருந்துப் பிரச்சினைகள் பெருகத்தான் வழி செய்யும். ஆக மருந்து கடைகளும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மருத்துவர் பரிந் துரையின்படியே மருந்துகள் கொடுப்பதும் அதற்கான ரசீதைக் கொடுப்பதும் போலி மருந்துகளை கண்டு பிடிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

நிரந்தரத் தீர்வு:

கியூபா போன்ற நாடுகள் சுகாதார செலவுகள் என்பது ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனை வருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது. மேலும் அனைவருக்கும் போதிய சத்தான உணவு, தூய்மையான குடிநீர், அடிப்படை வசதிகள் (வீடு, நிலம்..) சுற்றுச் சூழல் தூய்மை, வேலைக்கேற்ற ஊதியம், குறைந்தபட்ச ஊதியம், மருத்துவத்தில் கிராமப்புறம், நகர்ப்புறம் பாகுபாடின்மை போன்ற வற்றைக் கிடைக்கச் செய்து மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது. ஆக மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு (வணிக நலன் மேலோங்கி நிற்காமல்) செயல்படும் சமதர்ம சமுதாயமே போலி மருந்து தடுப்பிற்கான நிரந்தர தீர்வாக அமையும். ஆக எந்த சமுதாயத்தில் அரசு, மருத்துவர்கள், மருந்து குழுமங்கள், மருந்து கடைகள், மக்கள், மக்கள் நலனில் முதன்மைப்படுத்தி, வணிக நலன்களை பின்னுக்குத் தள்ளி செயல்பட முன்வரும் போதுதான் இது முழுமையான சாத்தியமாகும்.

Pin It