மாறி வருகின்ற சூழல் மற்றும் கடந்த காலத்தில் நாம்  செய்த தவறை புரிந்து  கொண்டு செயல்பட வில்லை என்றால்,  இலக்கை அடைய முடியாமல் போய்விடும். இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒருபுறம்   ராணுவ மயமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கையில் இந்திய அரசு  அண்டை நாடுகளை முழுமையாக தன் எடுபிடிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த இறுக்கமான சூழலில் மனம் திறந்து சில உண்மைகளை ஆராய வேண்டும்.

7 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த தமிழ்நாட்டில் 54%ம் பேரின் தனி மனித வருமானம் வெறும் நூறு ரூபாய்தான். தமிழக நகர்ப்புறங்களில் இயங்கும் பல தொழிற்சாலைகள் வெளிநாட்டுக்காக நம் தமிழ்த்  தேசியத்தை மாசுபடுத்துகிறது. பல தனியார்,  அரசு உயர் பதவிகளில்   தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழக விவசாய பொருளாதாரம் கடன்  மூலதனம் மூலம் ஏகாதிபத்தியத்தின் காலடிகளுக்கு மாறிக் கொண்டு இருக்கிறது.

வெளிச்சத்திற்கு வராமல் போகும்  விவசாய தற்கொலைகள் இன்றும் நாம்  தன்மானத்துடன் இறுக்கத்   தூண்டும்  தேசிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுக்  கொண்டிருக்கின்றன. அதாவது மொழியிலும் பண்பாட்டிலும் திட்டமிட்டு சிதைவுகள் ஏற்படுத்தப்படுகிறது. மேற்சொன்ன அனைத்திற்கும் எதிராகப்  பலம் மிக்க மக்கள் இயக்கத்தையும் அதனை வழிநடத்த   புரட்சிகர இயக்கத்தினைக்க கட்டி அமைத்திருக்கிறோமா? தமிழக விடுதலைக்கு ஈழ விடுதலை முன் நிபந்தனையாக சொல்லப்படுகிறது.

ஆனால் எதார்த்தம்  தலைகீழாக இருக்கிறது. தெற்காசியாவில் அமைந்திருக்கும் அனைத்து தேசிய இன விடுதலைக்கு இந்திய அரசின் வீழ்ச்சி  முன் நிபந்தனையாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் மீது தீராத காதல் கொண்ட சில ஈழ ஆதரவாளர்களுக்கு இந்திய அரசு  அசாமில் மேற்கொள்ளும்  நயவஞ்ச கத்தை வெளிப்படுத்துவதன் மூலம்  இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை உணர்த்த  முடியும் என நம்புகிறோம்.

1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம்  தேதி அசாம் விடுதலையை இலக்காகக் கொண்டு துவங்கப்பட்ட உல்பா  இன்று எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் இந்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏன்? தூய இனவாதம் இந் நெருக்கடிக்கு காரணம் என்று பலரால் விமர்சிக்கப்படுகிறது. 

ஆனால் அடுத்தக்கட்டமாக பார்க்க வேண்டியது என்னவெனில் மாறி இருக்கின்ற சூழலைத்தான். உல்பாவிற்கு பிரதானமாக தளம் அமைத்துக் கொடுத்திருந்த பூட்டான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தியாவின் எடுபிடிகளாக மாறிய பின் இயக்கத்தின் உறுதித் தன்மை  தளர்வடையத் தொடங்கியது.

2003 ஆம்  ஆண்டில் பெரும்பான்மையான மூத்த தலைவர்கள்  பூட்டான்  ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம்  ஒப்படைத்த பின் பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தம்  இரு தரப்பிலும் ஏற்பட்டது. உல்பா  தரப்பில் பேச்சு  வார்ததைக்கு மூன்று முன் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

1.பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறாமல் மூன்றாம் நாட்டில் நடைபெற வேண்டும். 2. ஐ.நா. சபையின் முன்னிலையில் நடைபெற வேண்டும். 3. அசாமின் சுய நிர்ணய உரிமை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற  வேண்டும். ஆனால் இவை எதையும் இந்திய அரசு ஏற்றுக் கொள்வதாக  இல்லை. மிகப் பெரும் அளவில் ஆயுத மோதலுக்குப் பிறகு அசாமின் நடுத்தர வர்க்க கோரிக்கையினை ஏற்று உல்பா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது.

அதன் அடிப்படையில்  உல்பா   நியமித்த உறுப்பினர்களைக் கொண்டு மக்கள் ஆலோசனைக் குழு (பி.சி.ஜி.) இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. அக்டோபர் 26, 2005ல் இந்திய அரசுக்கும் பி.சி.ஜி.க்கும் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டது.ஆனால் எந்தவிதமான உறுப்படியான முடிவும் எடுக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் அசாமின் சுய நிர்ணய உரிமை பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இந்திய அரசு ஏற்க மறுத்ததால் 2005 இல் இந்திய அரசு தன் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது. ஆனால் குறுகிய  காலத்தில் உல்பா அமைதியை விரும்பவில்லை என்ற    குற்றம் சாட்டி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. செப்டம்பர், 21, 2006ல் பி.சி.ஜி. அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேற்றப்பட்டது. கடந்த 5  வருடங்களில் ஒட்டுமொத்த உல்பா தலைமையும் கைது செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இம்முறை உல்பா பேச்சுவார்த்தைக்கு எந்தவிதமான முன் நிபந்தனையும் முன்வைக்கவில்லை.

இந்தியஅரசை பொறுத்தவரை உல்பா  தேர்தல் அரசியல் சாக்கடையில்  மூழ்கடிக்க முயன்று வருகிறது. உல்பா  நிலைப்பாடு  என்பது விமர்சனத்திற்கு உட்பட்டு இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதம் தாங்கி போராடிய இவ்வமைப்பு இந்திய துணைக் கண்டத்தில் துயரத்தில் சிக்கி  உள்ள மக்கள் மற்றும் மாற்று தேசிய இனங்களை ஒருங்கிணைப்பது என்ற அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கிச்  செல்லாமல் அண்டை  நாட்டின் அரசு   இயந்திரத்தை  நம்பி இருந்தது.

இன்று பிரதான சிக்கல்களுக்கு காரணம் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் அமைதி பேச்சுவார்த்தையின் மூலம்  உல்பா  அசாம்  விடுதலை பயணத்தில் முன்னோக்கிச் செல்லாமல் தூய இனவாதம் பேசி இந்தியாவின் நயவஞ்சக வலையில் வீழ்ந்திருக்கிறது. அதாவது இன்று பிரதானமாக பேச்சுவார்த்தையில் பேசப்படுவது  என்னவெனில் அசாமில்  இருந்து பிரிக்கப்பட வேண்டும் என்ற போடோலாந்து கோரிக்கையை அங்கீகரிக்கப்படக் கூடாது அசாமிற்கு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து போல வழங்கப்பட வேண்டும்என  உல்பாவால் முன்வைக்கப்படுகிறது.

அசாமில் ஆதிக்கம் செலுத்தும் வந்தேரிக்கு எதிராக மட்டும்    போராடாமல்   பிழைப்பு  தேடி  வந்த பீகாரிகளுக்கு எதிராக ராணுவ தாக்குதலில் தொடங்கி இன்று அமைதிப் பேச்சுவார்த்தைமூலம் இந்திய அரசிடம் மண்டியிட்டு இருப்பது தொடக்க  கால தி.மு.க. இனவாத அரசியலை நினைவுபடுத்துகிறது. முதல்கட்ட  பேச்சுவார்த்தை டில்லியில்   கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியில் சம்பிரதாய ரீதியாக நடந்தது. சமீபத்தில் அசாம்  சென்ற பிரதமர்  மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை முறிக்கும் நினைக்கும் சக்திகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என்று எச்சரித்தார்.

உல்பா  துவங்கியதில் முக்கியப் பங்காற்றியவரும் ராணுவ தலைவருமான பிரேஷ் பவ்ரா தொடக்கத்தில் இருந்தே பேச்சுவார்த்தைக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இங்கு குறிப்பிட வேண்டியது என்னவெனில் இன்னும்  இவர் தலைமறைவாகத்தான் செயல்பட்டு வருகிறார். அவர் வெளியிட்ட  அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பத்தாயிரத்திற்கும்  மேற்பட்ட அசாமிகள் யு.எல்.எப்.ஏ. உடன் இணைந்து தங்கள் உயிரை விடுதலைக்காக உயிர் நீத்துள்ளனர். பேச்சுவார்த் தையை முறிக்கம் சக்திகள் என்று சொல்லப்பட்டு நாங்கள் இந்திய அரசுக்கு சொல்லும் செய்தி இதுதான். எங்களை சமரச பாதைக்கு செல்ல வற்புறுத்தாதீர்கள். "வாருங்கள்  எங்களை கொல்லுங்கள்.  ஆனால் நிச்சயம்  எங்கள்  நோக்கத்தையும்  உறுதியையும் கொல்ல முடியாது.''

இந்திய அரசால்  கைது செய்யப்பட்ட உல்பா தலைவர் அரபிற் ராஜகவ் தலைமையில் எட்டு முக்கிய தலைவர்கள்  கலந்துக் கொண்ட பொதுக் குழுவின் எந்த முன் நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்கு செல்வது என்ற முடிவு சட்டப்பூர்வமற்றது. ஏனெனில் இப்பொதுக் குழு  எங்கள் எதிரியின்  (இந்தியா) மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. நாங்கள் பவ்ரா தலைமையில் அவசரக் கூட்டம் நடத்தினோம். அதில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம் என்பதான பரேஷ் பவ்ரா தலைமையிலான அறிக்கை தெரிவித்து இருக்கிறது.

சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அனுப்பப்பட்ட ஒளி ஒலிக் காட்சியில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவ வீரர்களுடன் பரேஷ் பவ்ரா "நாங்கள் போலி  பேச்சு வார்த்தையை  ஆதரிக்க மாட்டோம்', "எங்களுக்கு விடுதலை வேண்டும். விடுதலை என்பது எங்கள் பிறப்புரிமை, எங்கள் ஆயுத போராட்டம் தொடரும் இலக்கை எட்டும்  வரை'' என்று அசாமிலும் ஆங்கிலத்திலும் முழக்கமிட்டனர்.

இருந்த   போதிலும் நாம்    ஒப்புக்  கொள்ள வேண்டியது என்னவெனில் உல்பா  இன்று நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அவ்வமைப்பு இழைத்த  தவறுகளை  நாம்   கணக்கில்  எடுக்க வேண்டும். அதே தவறுகளை நம் தமிழக விடுதலைப் போராட்டத்தில் இழைக்காமல் இருக்க  வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்திய பாசிச கட்டமைப்புக்கு எதிராக போராட வேண்டிய நாம் தூய இனவாதத்தில் சிக்கி  மாற்று தேசிய இனத்தவரை வெளியேற்ற வேண்டும் என்ற  முனை மழுங்கிய கோரிக்கைகளை எடுப்பது எதிரியின் பார்வையின் கீழ் நடக்கும் மல்யுத்தமாக மாறிவிடும்.

Pin It