இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்பது மார்க்சியத்தின் தத்துவமாகும். மார்க்சியம் என்பது மூன்று அடிப்படைகளைக் கொண்டது. அதாவது தத்துவம், பொருளா தாரம், அரசியல் என்பதுதான் அது. மேலும், விளக்கமாக மார்க்சிய சொல்லாடல்களுடன் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்

1.     இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல் வாதம் இதைப் பொருள் முதல் வாதம் என்று சுருக்கமாகவும் அழைக்கலாம். இதுதான் மார்க்சிய தத்துவு இயலின் அடிப்படை.

2.     மார்க்சியப் பொருளாதாரம் இது தொடக்கத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்டது. உபரி மதிப்புக் கோட்பாடுகள்தான் இதன் அடிப்படை.

3.     விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம். இதுதான் மார்க்சிய அரசியலின் அடிப்படையாகும். அதாவது பொதுவுடை மைப் புரட்சியின் அரசியல் கோட்பாடு.

இம்மூன்று மார்க்சியக் கோட்பாடும் திடுமென வந்தவையல்ல. இம்மூன்று கோட்பாட்டு முடிவுகளுக்கும் வரலாற்றுத் தொடர்பும் தொடர்ச்சியும் உண்டு. இதை அவரே வெளிப்படையாக அறிவித்திருக் கிறார்.

மார்க்சியத் தத்துவம் அதாவது பொருள் முதல்வாதம் ஜெர்மானியத் தத்துவ இயலி லிருந்து செழுமையடைந்து வந்தவை. அதேபோல் பிரித்தானிய அரசியல் பொருளா தாரத்தின் தோற்றுவாயிலிருந்து மார்க்சியப் பொருளாதாரமும், பிரெஞ்சு கற்பனா சோசலிசத்தி லிருந்து மார்க்சிய விஞ்ஞான சோசலிசம் உருக் கொண்டது. இதுதான் "மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் மூன்று தோற்றுவாய்களும்' என்பது.

இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது இயக்க வியல் வரலாற்றுப் பொருள் முதல் வாதம். அதாவது மார்க்சியத் தத்துவவியல்.

முதலில் தத்துவம் என்றால் என்ன?

(தத்துவம் என்பது தமிழில் மெய்யியல் என்றும் தத்துவ ஞானம் என்பதை மெய்யியல் அறிவு என்றும் புரிந்து கொள்வோம்)

தத்துவம் என்பது உலகைப் பற்றிய கருத்தோட்டங் களின் தொகுப்பு. அதாவது உலகைப் பற்றிய அனைத் தும் தழுவிய உலகக் கண்ணோட்டமே தத்துவமாகும். இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டு மென்றால் தத்துவ ஞானம் உலகம் முழுவதையும் பற்றி ஒரு கருத்தோட்டத்தை உருவாக்குகிறது. அதற்கேற்ப ஒரு அமைப்பு முறையை வளர்க்கிறது. மேலும் உலகிற்குள் நிகழும் நிகழ்வுப் போக்குகளைப் பற்றி ஒரு பொதுவான விளக்கத்தைத் தருகிறது. இறுதியில் அது மக்களின் உலகக் கண்ணோட்டமாக இருக்கிறது. இதுவே தத்துவமாகும்.

(உலகம் என்று சொல்வது இப்பிரபஞ்சம் முழுவதும். தமிழில் சொல்வதென்றால் அண்டம் அல்லது பால்வெளி)

மேற்குறிப்பிட்ட உலகைப் பற்றிய தத்துவ ஞானம் இரு வகையாகப் பிரிந்துள்ளது. அதில் 1. பொருள் முதல்வாதம், 2. கருத்து முதல் வாதம். இவ்விரண்டு தத்துவங்களும் வேறுபடுகின்ற இடம் பொருளுக்கும் உணர்வு நிலைக்கும், இயற்கைக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவு நிலைகளைப் பற்றிய படிப்பாய்வின் வேறுபட்ட முடிவுகளே இவ்விரு வேறுபாட்டிற்கு அடிப்படையாகும்.

அதாவது உலகின் தோற்றம் குறித்தான ஆய்வின் முடிவுகளின் வேறுபாடே இவ்வகைக் கண்ணோட்டங் கள். இந்த இயற்கையில் மனிதன் மனிதனாக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தபோது அவன் எழுப்பிய முதல் கேள்வி இந்த உலகம் எப்படித் தோன்றியது?

அடுத்தது இந்த உலகில் எது முதலில் தோன்றியது? என்பதுதான். இயற்கையின் வியப்புமிக்க நிகழ்வுப் போக்குகள் மனிதனைச் சிந்திக்கவும் வைத்தது. அதைவிட அதிகமாக அச்சமூட்டியது. இவ்வச்சம் விரைவாக இவனை ஒரு முடிவை நோக்கித் தள்ளியது. இதன் விளைவு தனக்கு மீறிய ஏதோ ஒன்று இருக்கிறது. அதுதான் இவ்வுலகை இயக்குகிறது என்ற முடிவுக்கு வந்தான். சரி அது எது என்ற கேள்விக்கு? அது கண்ணுக்குத் தெரியாது. ஆனால் எல்லா இடத்திலும் இருக்கிறது. அது ஏதோ ஒன்று நம்மை மீறிய சக்தி. இதுதான் மனிதனின் தொடக்க நிலை முடிவு.

இறுதியில் அந்த ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. அதுதான் கடவுள். இப்போது உலகைப் படைத்தவர் கண்டுபிடிக்கப்பட்டார். உலகைப் படைத்த கடவுள் அவரின் சிந்தனைச் சக்தியின் வெளிப் பாடாக மனிதனையும் மற்ற உயிரினங்களையும் படைத்து விட்டார்.

ஆக உலகம் கடவுளால் படைக்கப்பட்டதென்றும், சிந்தனையின் வெளிப்பாட்டில்தான், மற்ற பொருட் கள் அனைத்தும் (உயிருள்ளது உயிரற்றது) தோன்றின என்பதுதான் கருத்து முதல் வாதத்தின் மையத் தத்துவம். அதாவது கருத்தே முதலானது மற்றவை யெல்லாம் அதற்கடுத்ததுதான். இதனடிப்படையில் புதிய புதிய கடவுள்களும், மதங்களும் மதக் கோட்பாடு களும் உருவாயின.

அடுத்து இந்த உலகம் யாராலும் படைக்கப்பட்ட தில்லை. இது இயற்கை பொருட்களாலானது. இது எப்போது இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருக்கும். இதற்கு முதலுமில்லை. முடிவுமில்லை. இயற்கைப் பருப் பொருட்களின் இயக்க நிகழ்ச்சிப் போக்கின் விளைவே மனிதனும், மற்ற உயிரினங் களும் தோன்றக் காரணம். எனவே பொருளே அனைத்து மூலத்திற்கும் அடிப்படை என்பதுதான் பொருள் முதல் வாதத்தின் அடிப்படைத் தத்துவ மாகும். இது கடவுள், மதம், ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம் இப்படி எந்த மாயக் கோட்பாடுகளையும் ஏற்பதில்லை. ஐம்புலன்களால் அறியப்படாதது எதையும் ஏற்பதில்லை. அறிவியல் வழிப்பட்ட ஆய்வு முடிவுகளை மட்டுமே ஏற்கிறது.

இவ்விரு வாதங்களையும் கடந்து மூன்றாவதாக "இருமை' வாதத் தத்துவங்களும் இருக்கின்றன. இருமைக் கோட்பாட்டாளர்கள் முன் வைப்பது கருத்தும், பொருளும் இரண்டும் ஒன்றோடொன்று நெருக்கமாகத் தொடர்புடையது. எனவே இரண்டும் முதன்மையானதுதான் என்பதுதான் இதன் கோட்பாட்டு அடிப்படையாகும். இருந்த போதிலும் இருமைக் கோட்பாடு தனித்துவமான செல்வாக்குப் பெறவில்லை. மேலும் சாரம்சத்தில் இது கருத்து முதல்வாதக் கோட்பாட்டின் அடிப்படையைக் கொண்டிருப்பதால், இது கருத்து முதல் வாத வகையைச் சேர்ந்ததாகவே கருதப்படுகிறது.

கருத்து முதல் வாதத்தை மறுத்து வந்த தத்துவம் தான் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதம். மார்க்சு பொருள் முதல் வாதத் தத்துவத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஞானமாக வரையறுத்து உலக அரங்கில் அதை நிறுவுவதற்கு முன்பாக பொருள் முதல்வாதக் கோட்பாடு உருவாகியிருந்தன. ஆனால் அது முழுமை பெற்ற ஒரு வடிவம் பெறவில்லை.

இருந்த போதிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள் முதல் வாதச் சிந்தனையாளர்கள் உலகம் முழுவதுமே இருந்துள்ளனர். அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒருசிலரை நாம் தெரிந்து கொள் வோம்.

கி.மு.530 470 களில் பொருள் முதல் வாத உலகக் கண்ணோட்டத்தின் வளர்ச்சிக்கு எபிஸஸ்ஸைட் சேந்த ஹெராக்ளிட்டஸ் என்னும் கிரேக்கத் தத்துவ ஞானி பெரும் பங்காற்றியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து கிரேக்கத் தத்துவஞானி டெமாக்ரீட்டஸ் பொருளைப் பற்றிய அணுத்தத்து வத்தை முன்வைத்து பொருள் முதல்வாதக் கோட்பாட்டை மேலும் வளர்த்தார்.

இவரைத் தொடர்ந்து கி.மு. 43ம் நூற்றாண்டு களிலும் கி.மு. முதலாம் நூற்றாண்டுகளிலும் முறையே எபிக்குரஸ் என்ற கிரேக்கத் தத்துவ ஞானியும் ரோமன் தத்துவ ஞானியான டைடஸ் ஒக்கரைட்டியஸ் காரஸ் என்பவரும் பொருள் முதல்வாத அணுத் தத்துவத்தை மேலும் வளர்த்தார்கள். அன்றைய காலத்தில் இதற்கு எதிராக கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 347) அணுத் தத்துவத்தையும், பொருள் முதல் வாதத்தையும் எதிர்த்த கருத்து முதல்வாதி.

பிளாட்டோவின் வெளிப்படையான கருத்து முதல் வாதத்திற்கு எதிராக (கி.மு. 384 322) அரிஸ்டாட்டில் கடுமையாக விமர்சனம் செய்தவர். இவர் அடிப்படை யில் பொருள் முதல் வாத உலகக் கண்ணோட்ட முடையவர். இருந்த போதிலும் கருத்து முதல்வாத எண்ணவோட்டங்களும் இவரிடம் இருக்கவே செய்தன. 

கி.பி. 17ம் நூற்றாண்டுகளில் பொருள் முதல் வாதச் சிந்தனை மேலும் வலுப் பெற்றது. பிரஞ்சுத் தத்துவஞானி பிரான்ஸ்லின் பேக்கன் (1561 1625) பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்திற்கு மிகப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து ஆங்கிலேயத் தத்துவஞானி தாமஸ் வேறாப்ஸ் (கி.பி.1588 1679) பேக்கனுடை பொருள் முதல் வாதச் சிந்தனையை மேலும் வளர்த்தார்.

18ம் நூற்றாண்டில் இரசியப் பொருள் முதல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவர்கள், மைக்கேல் லோமோனோ சோவ், அலெக்சாண்டர் ராதிஷ் சேவ் ஆகியோர் முதன்மையானவர்கள்.

அதேபோல் இந்திய ஆட்சிப் பகுதியிலும், தமிழகத் திலும் பொருள் முதல் வாதச் சிந்தனையாளர்களின் பெரும் பங்களிப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியச் சமூக அமைப்பில் பார்ப்பன வேத மந்திரங்களே கருத்து முதல் வாதத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. பார்ப்பனர்களின் வேத, யாக கருத்தமைவு என்பது வெறும் கருத்து முதல் வாத அளவுகோலோடு மட்டும் அவர்கள் தத்துவம் இருக்கவில்லை. அது சமூக ஒடுக்குமுறைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும், வெளிப்படையாக வலியுறுத்தி விரிந்த உலகப் பார்வையைக் கொண்டதல்ல. குறுகிய தங்களின் ஆளுமைத் தன்மை நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தத்துவங்கள்தான். வேத காலத் தத்துவங்கள், இருந்த போதிலும் இது உலகத்தைப் பற்றியும் பேசுகிறது.

ரிக் வேதம்

ஆரியர்களின் வேத காலம் கி.மு.1500 இக்காலத்தில் தான் "ரிக் வேதம்', "சாம வேதம்', "யஜுர் வேதம்' அதர்வ வேதம் என நான்கு வேதங்களை உருவாக்கினார்கள். அதற்கடுத்து மனு எழுதிய "மனு சாஸ்திரம்' அடுத்து வந்த "பகவத் கீதை' போன்றவை ஆரியத் தத்துவ இயலை வெளிப்படுத்தும் தத்துவ நூலாகும். இதுவே இந்தியக் கருத்து முதல் வாதத் தத்துவமாகவும் அறியப்படுகிறது. இதைக் கடந்து பல்வேறு கருத்து முதல்வாதத் தத்துவங்களும் இருக்கிறது. இருந்த போதிலும் கி.மு. 1500 ரிக் வேத காலம் தொடங்கி இன்று வரை ஆரியத் தத்துவங்களை முதல் நிலையில் இருப்பதால் இதையே நாமும் முதன்மைப்படுத்து கிறோம்.

மேலும் இவ் ஆரியத் தத்துவம் கருத்து முதல் வாதத்தை எதிர்த்தே அனைத்துப் பொருள் முதல் வாத சிந்தனைகளும் உருவானது என்பதும் குறிப்பிடத் தக்கது.

உபநிடதம்

கி.மு. 8ம் நூற்றாண்டுக்குப் பிறகு பொருள் முதல் சிந்தனைகள் வெளிப்பட்டன. குறிப்பாக இந்தக் கால கட்டத்தில் "உபநிடதம்' தோன்றின. (இதில் வேதத்தை ஏற்றுக் கொண்ட கருத்து முதல் வாத உபநிடதங்களும் பெருமளவில் இருந்தன) குறிப்பாக "முண்டக உபநிடதம்' பிரம்மத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:

""பிரம்மம் பிறப்பற்றது; இறப்பற்றது.

அது எதிலிருந்தும் தோன்றவில்லை; எதையும் தோற்றுவிக்கவில்லை.

அது பிறந்ததும் இல்லை; இறந்ததும் இல்லை.

அது நித்தியமானது, ஊழிக் காலமாய் இருந்து வருகிறது.

அதன் உடல் துண்டிக்கப்பட்டாலும் அது துண்டிக்கப்படுவதில்லை''

இப்படி ஏராளமான உபநிடதங்கள் உலகம் இயற்கையானது. உலகத்தை யாராலும் படைக்க முடியாது. படைக்கவும் இல்லை. கடவுள், சொர்க்கம், மறு பிறப்பு என்று எதுவுமில்லை என்று சொல்கிறது.

வைசேசியம் கணாதர்

கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் "கணாதர்' என்பவர் வைசேஷிக சிந்தனையைத் தோற்றுவித்தார். (விசேசமானது என்ற பெயராலும் அழைக்கப்பட்டது) அது உலகின் தோற்றத்தை இயற்கையைச் சார்ந்தே வெளிப்படுத்தியது. மேலும் உலகத் தோற்றத்தின் காரணம் அணுவே என்று விளக்கியது. அணுக் கொள்கையை விரிவாக ஆய்வு செய்தது. கணாதர் பொருள் முதல்வாதச் சிந்தனைவாதி.

நியாயம் கவுதமர்

கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் கவுதமர் நியாயக் கோட்பாட்டை உருவாக்கினார். நியாயம் என்ற சமஸ்கிருதச் சொல் "ஆய்வுப் பொருளை நாடிச் செல்லுதல்' என்று பொருள்படும். அதாவது தருக்க முறையில் காரண காரியங்களைப் பகுத்தாய்தல் என்பதாகும். அதாவது தீர்வை எட்டுதல் என்பதே நேரடிப் பொருளாகும். கவுதமர் வைசேஷிகர்களின் அணுக் கொள்கையையும் ஏற்றுக் கொண்ட பொருள் முதல் வாதி. நியாய மரபின் அடிப்படை தர்க்கவியலை அடிப்படையாகக் கொண்டது.

சாங்கியம் கபிலர்

கி.மு. 7ம் 6ம் நூற்றாண்டுகளின் இடைப்பட்டக் காலத்தில் வாழ்ந்தவர் கபிலர். இவர் தோற்றுவித்த சிந்தனை மரபு சாங்கியம். சாங்கியம் என்ற சொல் (கணக்கிடுதல்) சாங்கிய என்ற சமஸ்கிருத வேர்ச் சொல்லிலிருந்து கிளைத்தது. உலகின் படிமுறைச் செயல்பாடுகளைப் பகுத்தறிவுடன் கவனித்து விளக்கம் கூறுவதால் சாங்கியம் என்ற பெயர் பெற்றது. சாங்கியக் கருத்துக்கள் வெறுமனே மெய்ஞானச் சிந்தனை மரபு மட்டுமல்ல. பிரபஞ்சத்தின் ஆற்றல் களை மாற்றுதலும், அழித்தலும், திரட்டுதலும் பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கமும் ஆகும்.

கபிலர் வேத, யாக தத்துவத்திற்கு எதிரான மிகப் பெரிய பொருள் முதல் வாத சிந்தனைவாதி. "புலனுறுப்புகள் இயற்கையின் உருவாக்கமே' புலனுறுப்புகள், புறவுலகு பற்றிய உண்மையான தோற்றத்தை அப்படியே நமக்குப் புலப்படுத்துகிறது என்பது கபிலரின் திட்டவட்டமான கூற்று. இல்லாத ஒன்றிற்கு எதுவுமே உருவாகாது என்பதே சாங்கியத் தின் ஆதாரக் கொள்கை. மேலும், சாங்கியம் அறிவியல் வழிப்பட்ட தர்க்க முறைகளையும், பரிணாமக் கோட்பாடுகளையும் சாங்கிய மெய்ம்மை ஏற்றுக் கொள்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கபிலர், பார்ப்பனியக் கருத்தியலை முற்றாக மறுத்த புரட்சியாளர். இவர் காலத்திற்கு பிறகு தொடங்கி இன்றுவரை பார்ப்பன எதிர்ப்பு சிந்தனை மரபுகளின் நீட்சியாக சாங்கியம் இருந்தது, இருக்கிறது. சாங்கியத்தை பார்ப்பனியம் சிதைத்து அழித்து விட்டாலும் அதன் சிந்தனை மரபு தொடர்கிறது.

லோகாயதவாதம் பிரகஸ்பதி

"லோகாயதாம்' சரியான காலத்தை குறிப்பிட முடியவில்லை. ஒரு சிலர் கி.மு. 6 ம் நூற்றாண்டு என்றும், ரிக் வேத காலத்திலேயே இந்து இதிகாங்களில் இதுபற்றி குறிப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். குறிப்பாகப் பிரகஸ்பதியின் லோகாயதா சூத்திரம். கி.மு.600 களில் அழிக்கப்பட்டது. ஆரியப் பார்ப்பனர் கள் எதிர் சிந்தனை என்ற அடிப்படையில் இதன் மீதான எதிர்ப்பின் பதிவுகளே இப்பொருள் முதல் வாதச் சிந்தனையின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. லோகாயத்தை அசுரர்களின் கோட்பாடு என்றே பார்ப்பன வேத நூல்கள் கூறுகின்றன.

லோகாயதா என்றால் "உலக மக்களுக்காக' என்பதாகும். பொறிக் காட்சிகளில் உணரப்படுபவை மட்டுமே லோகாயத மரபில் திடமான சான்றுகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சான்றாகக் கூறப்படும் பருப் பொருள்கள் மண், நீர், நெருப்பு, காற்று, செல்வமும், மகிழ்ச்சியுமே மனித வாழ்வின் தேவைகள் பருப் பொருட்களுக்கு உணர்வு உண்டு. வேறு உலகம் என்று ஒன்றில்லை. இறப்புக்குப் பின் எதுவுமில்லை என்பது இதன் தத்துவமாகும். சிறந்த பொருள் முதல் வாதமான லோகாயதம் சாதி, வேதம், யாகம் போன்ற எல்லாப் பிற்போக்குத் தனங்களையும் இரக்கமின்றி விரிவாக, விரிவான விளக்கவுரையுடன் எழுதப்பட்டது. இது இந்தியாவின் பொருள் முதல் வாதத் தத்துவமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. சமணமும் பௌத்தமும் தோன்றுவதற்கு சார்வாகரின் (லோகாயதம்) தத்துவம் அடிப்படை யானது.

பௌத்தம் புத்தர்

கி.மு. 543ம் ஆண்டு வாக்கில் சாக்கிய மன்னன் சுத்தோ தனனுக்கும், அரசி மாயா தேவிக்கும் மகனாகப பிறந்த சித்தார்த்த கௌதமன், பார்ப்பன வேத, சமயத் தத்துவங்களைத் தோலுரித்தார். இவர் இயற்கையின் நிகழ்வுகளையும், அதன் இயக்கப் போக்குகளையும் ஏற்கிறார். "உலகிலுள்ள அனைத்துமே நிலையற்றவை. பிறப்பும், இறப்பும் தொடர் நிகழ்வுகள். வாழ்க்கை என்பது நீரோட்டம் போன்றது. வருவதும் போவது மெய்ம்மையின் அடிப்படை என்றார். இவருடைய சிந்தனைகள் பெரும்பாலும் மனித வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. இல்லாத ஒன்றைப் பற்றி இவர் அதிகமாகச் சிந்திக்கவில்லை. இவரின் செயல், தருக்க முடிவு, சிந்தனைகள் அனைத்தும் பார்ப்பன வேத மரபுகளை முற்றாக எதிர்த்தது. இவ் எதிர்ப்பில் எவ்வித இரக்கமும் காட்டவில்லை. இவரின் தத்துவம் பொருள் முதல் வாத தர்க்கவியலைக் கொண்டிருந்தாலும், அதாவது அணுக் கொள்கையின் அடிப்படையில் உலகம் பற்றிய தங்களது சொந்தக் கருத்துக்களை உருவாக்கிக் கொண்ட பௌத்த மதத்தினர் வாழ்க்கையைப் புறவயமானது (பருப் பொருள்) அகவயமானது (மன உணர்வு) என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள். அணுக்களின் கூட்டு, அதாவது தனிமங்களின் வினோதமான சேர்மானத்தைச் சார்ந்துதான் மன உணர்வு உள்ளது. எனவே, புறப் பொருட்களின் செயல்பாட்டிலிருந்து தான், அக உணர்வு உருவாகிறது. அணுக்களின் கூட்டு ஓர் இயக்கத்தை உண்டு பண்ணுகிறது. அந்த இயக்கம் இருத்தலின் பகுதிகளாகிய உணர்வாகவும், அரிதலாகவும் வெளிப்படுகிறது என்பது புத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். இதையும் அறிவுக்குப் பொருந்தி நிற்கின்றனவா என்று ஆய்ந்தறிந்து அதன் பின்பு அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதே புத்தரின் அறிவுரையாக இருந்தது.

இருந்த போதிலும் கடவுள் மறுப்பிறப்பு பற்றி தெளிவான முடிவுக்கு அவர் வந்தடையவில்லை.

சமணம் மகாவீரர்

புத்தருக்கு முந்தைய காலத்தவரான (கி.மு. 598) வர்த்தமானர் (மகாவீரர்) புத்தருக்கு இணையான சிந்தனையாளராக இருந்தவர். இவர் சமண மதத்தை நிறுவினார் (ஜைனம்). இதன் அடிப்படைக் கொள்கையாக,

1. இருத்தல் மீது உண்மையான நம்பிக்கை.

2. உள்ளதை உள்ளமபடியே அய்யமின்றித் தெளிவாக அறிவது.

3. புற உலகப் பொருட்கள் மீது விருப்பமின்றி வாழும் நல்ல நடைமுறை.

 இதுவே சமணர்களின் அடிப்படையாகும். 1. கொல்லாமை, 2. வாய்மை, 3. கள்ளாமை, 4. நியமங் களைக் கடைப்பிடித்தல், 5. பொருளாசை இல்லாமை போன்ற ஒழுக்க நெறிகளை வகுத்துச் செயல்பட்டனர்.

மகாவீரர் கடவுள் வழிபாட்டை முழுவதும் தடை செய்தார். கடவுள் என்று ஒன்று இல்லை. உள்ளது உலகு மட்டுமே. பாவம் என்பது கடவுளுக்கு எதிரானது அல்ல. அது சக மனிதனுக்கு எதிரானது என்பது சமணர்களின் உறுதியானக் கொள்கை.

சமணமும் பௌத்தம் போலவே பார்ப்பன வேத, யாக வேள்வித் தத்துவத்திற்கு எதிரானது. இதன் தத்துவங்கள் வாழ்வின் தேவையிலிருந்து உருவா னவை. சமணமும் பொருள் முதல் வாதச் சார்புடையதே.

இப்படி கருத்து முதல் வாதச் சிந்தனைக்கு எதிராக பொருள் முதல் வாதச் சிந்தனைகள் தோன்றினாலும் அது ஒரு வடிவம் பெறாமல் தன்னை முழுமையாக மீட்டுருவாக்கம் செய்து கொள்ளாமல் காலப் போக்கில் கருத்து முதல் வாதச் சிந்தனைகளோடு கலந்து போயின. இதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியைக் கேட்டு வைத்துக் கொள்வோம்.

தொல்காப்பியர்

3000 ஆண்டுகளுக்கு முன்பாக தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் வெறும் மொழி இலக்கண நூல் மட்டுமன்று. வாழ்வியல் இலக்கணமும் இரண்டறக் கலந்த மெய்யியல் தான் தொல்காப்பியம். இதில் உலக வாழ்வை புறம், அகம் என்று பிரிக்கப்பட்டு விளக்குகிறது. மேலும் உலகத்தின் மூலமே பொருள்தான் என்றும், அது முதல், கரு, உரிப் பொருள்தான் என முப் பொருள்களைக் கொண்டது என்றும் விளக்குகிறது. தில் முதல் பொருள் நிலம், பொழுது என்றும் கூறுகிறது.

(பொருள்கள் மூன்று (தொல்காப்பியம்)

949.   முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றே

       நூலலுங்காலை முறை சிறந்தனவே

       பாடலுள் பயின்றவை நாடும் காலை.

முதல் பொருள்

950.   முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பு என மொழி இயல்பு உணர்ந்தோரே)

தொல்காப்பியரை முழுமையான பொருள் முதல் வாதி என்று நாம் சொல்ல முடியாது. புற, அக வாழ்வை முன்னிறுத்துதலின் வழி இவர் "இருமை வாதியாக' இருந்துள்ளார். இருந்த போதிலும் இயற்கையின் ஒழுங்குமுறை இயக்கத்தை ஏற்று அதன் வழி எதார்த்த வாழ்விற்குத் தேவையான ஒழுக்க விதிகளை இயற்கை விதிகளோடு விளக்கியிருப்பது இதன் சிறப்பு. கடவுள், மதம் சம்பந்தமான நேரடியான கருத்து முதல் வாத அடிப்படைகளை இவர் வலியுறுத்தவில்லை. மாறாக பொருள் முதல்வாத சார்பு சிந்தனையின் தர்க்க முடையவராகவே இருந்துள்ளார். மொழியின் இயற்கை அமைப்பையும், மனித வாழ்வின் இயற்கை அமைப்பையும் இலக்கணமாக்கிய தமிழகத்தின் முதன்மையான சிந்தனையாளர்.

திருவள்ளுவர்

2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த திருவள்ளு வர் ஒரு பொருள் முதல்வாதச் சிந்தனையாளர். அவரின் சிந்தனைகள் அனைத்தும் இவ்வுலகின் இருப்பு நிலைகளைப் பற்றியதே! இல்லாத ஒன்றை அவர் எப்போதும் எங்கும் சொன்னதில்லை.

திருக்குறளில் வரும் கடவுள் வாழ்த்துப் பகுதி என்பது இடைக் காலத்தில் செறுகப்பட்ட இடைச் செறுகளே!

கடவுளின் தேவை திருக்குறளில் எந்த இடத்திலும் இல்லை. எல்லாவற்றையும் மனிதனே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற இயற்கை சார்ந்த நடைமுறை வாழ்வியல் தத்துவமே திருக்குறள்.

*      எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள்

       மெய்ப்பொருள் காண்ப தறிவு.

*      பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பெனும்

       செம்பொருள் காண்ப தறிவு.

போன்ற குறள்கள் பொருள் வாதத் தத்துவத்தைச் சார்ந்தவை. அதுபோல் வான் சிறப்பில்,

*      வானின் றுலகம் வழங்கி வருவதால்

       தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

*      நீரின் றமையா துல கெனின் யார்யார்க்கும்

       வானின் றமையா தொழுக்கு.

இக்குறள் உலக உயிரினங்களின் உருவாக்கத்திற்கு நீரே ஆதாரம். நீரில்லையேல் இவ்வுலக உயிரினங்கள் இல்லை என்று சொல்கிறது. "சார்லஸ் டார்வினின்' உயிரியல் தத்துவத்தின் கோட்பாட்டை 2000 ஆண்டு களுக்கு முன்பாகவே திருவள்ளுவர் சொல்லியிருக் கிறார்.

இவ்வுலகின் தோற்றத்திற்கு பொருளே ஆதாரம். உயிரினங்களின் தோற்றத்திற்கு நீரே ஆதாரம். இங்கே கடவுளுக்கு என்ன வேலை? எனவே திருவள்ளுவர், அய்யத்திற்கு இடமற்ற பொருள் முதல்வாதிதான்.

சித்தர்கள்

தமிழகத்தில் சித்தர்களின் சிந்தனைகள் பெரும் பாலும் இயற்கை சார்ந்தவைகளே. இருப்பு உலகைப் பற்றியே அதிகமாகச் சிந்தித்தனர். கடவுள், மறுபிறப்பு, சொர்க்கம் என்ற இல்லாத ஒன்றுக்காக எப்போதும் கவலைப்படாமல் இயற்கையின் உண்மைகளை ஏற்றுக் கொண்டார்கள். அணுக் கோட்பாடுகளையும் பெரும்பான்மையான சித்தர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இவர்கள் சாதி, மதம் போன்ற பிற்போக்கு அமைப்புகளை மறுதலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சித்தர்களில் பெரும்பாலானோர் பொருள் முதல்வாதச் சிந்தனைச் சார்பாளராக இருந்துள்ளனர்.

இப்படி உலகம் முழுவதும் கருத்து முதல்வாத உலகக் கண்ணோட்டத்திற்கு எதிராக பொருள் முதல் வாதச் சிநதனையாளர்களும் பொருள் முதல் வாதத் தத்துவங்களும் இருந்தன. இருந்த போதிலும் இதை முழுமைப்படுத்தியது மார்க்சும், எங்கல்சும்தான். சமூக நோக்கில் இவ்விரு தத்துவங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அறிந்தனர். குறிப்பாக கருத்து முதல் வாதத் தத்துவத்திற்கும், பொருள் முதல் வாதத் தத்துவத்திற் கும், இருவேறு வர்க்கக் கண்ணோட்டங்கள் உண்டென வெளிப்படுத்தினார்கள். இதனடிப்படை யில் உருப்பெற்ற தத்துவம்தான் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல் வாதம். இது உலகப் பொருள் முதல்வாதத் தத்துவத்திற்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது.

Pin It