வருகிற 13.04.11 அன்று சட்டமன்றத் தேர்தல் திருவிழா நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் மக்கள் தம் சனநாயகக் கடமையாற்ற இத்தேர்தலிலும் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிடும்.

"ஒரு கவிஞன் பாடியது போல ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. ஆனால் மக்கள் மட்டுமே தொடர்ந்து தோற்றுக் கொண்டு இருக்கிறார்கள்'' என்பது போல இத்தேர்தலிலும் மக்களும் நாமும் தோற்றுத்தான் ஆக வேண்டும்.

“லஞ்சமும், ஊழலும் பெருத்து விட்ட இந்தத் தேசத்தை மீட்டெடுத்து ஒரு தூய்மையான அரசியலை உருவாக்க யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்பார்க்கும் நல்லவர்களும் நடுநிலையாளர்களும் இந்தத் தேர்தல் கட்சிகளின் கொள்கைகளையும், கோமாளி கூட்டங்களின் கூட்டணிகளைப் பார்த்து மக்கள் நொந்து சோர்ந்து போயுள்ளனர்.

அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திக்கிறார்கள். மக்கள் நேயத் தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். இன்றைய நிலையில் அத்தகைய தலைவர்களை அடையாளம் காண முடியவில்லை. ஊழல் அரசியல்வாதிகள் மட்டுமே புழுத்துப் போய் இருக்கும் இந்தத் தமிழ் மண்ணில், தமிழ்த்தேசத்தையும் தமிழக உரிமையையும் தமிழர் நலனையும் இக்கட்சிகளிடம் நாம் எதிர்பார்க்க முடியும்?

பிரமிடுகளின் தேசத்தில் இன்றைக்கு வெடித் திருக்கும் பிரளயம் இளைய தலைமுறையின் கொந்தளிப்பால்தான் என்பது தமிழக இளம் தலைமுறைக்கு மட்டும் புரியாதது ஏன்? புரட்சி என்பது வரலாற்றை நிரப்பும் வார்த்தை அல்ல. வரலாற்றைப் படைக்கும் வார்த்தை. நாம் புரிந்து கொள்ள வில்லையே! அதனால்தானே இன்று கொள்கையற்ற கூட்டமும், கொள்ளைக் கூட்டமும் நம்மையும் நம் மக்களையும் ஏமாற்றி வருகின்றன.

“அரசியல், அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்பார் பெர் னாட்ஷா. அரசிய லில் இருக்கிற சில தலைவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களை அக் கட்சி யில் உள்ள வர்கள் கூடக் கேலியாக பார்ப்பதை நாம் இன்றும் பார்க்க முடியும். உழைக்கும் மக்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள இடதுசாரித் தோழர்கள் கூட "பேய்களின் ஆட்சி நல்லதா அல்லது சாத்தான்களின் ஆட்சி நல்லதா?' என்றுதான் மக்களிடம் கொள்கை விளக்கக் கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதுதான் தேர்தல் திருவிழா நாட்களில் நடக்கும் பொம்மை நாடகங்கள், அந்நாடகங்களில்அப்பாவி நாயகர்கள்தான் மக்கள்.''

“தி.மு.க. வின் குடும்ப ஆட்சியை அகற்றுவது மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்பது என்ற கொள்கைகளுக்காகக் கூட்டணி அமைத்து இருப்ப தாகக் கூறும் கம்யூனிஸ்டுகள், அந்தக் கொள்கை வெற்றி பெறுவதற்காகச் சொந்தத் தொகுதிகளையும் சுயமரியாதையையும் தியாகம் செய்யத் தயங்க மாட்டோம் என்று விளக்கமும் சொல்வார்கள்.

பதவிக்காகச் சுயமரியாதையைத் தியாகம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் வைகோ. இரண்டையும் தியாகம் செய்யலாம் என்பது வலது இடதுகளின் நிலை.

ஆறு ஆண்டுகளாக அதிமுகவுடன் கூட்டு வைத்திருந்த திரு. வைகோ அவருக்கு இந்தத் தடவை 12 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என்று கடைசியாக அறிவித்த பின் வேறு வழி இல்லாமல் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைக்கு வந்து விட்டார். ஈழத் தமிழர் உரிமை, முல்லைப் பெரியாறு ஆற்றுச் சிக்கல், காவிரிச் சிக்கல், பாலாற்றுச் சிக்கல் போன்ற தமிழக நலன் சார்ந்து தொடர்ந்து போராடி வரும் இக்கட்சி தேர்தலில் பங்கு கொள்ளாமை என்கிற முடிவின் வழித் தமிழ் உணர்வாளர்கள் நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

சுயமரியாதையை விட்டுக் கொடுத்துத் தேர்தல் கூட்டணியில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் ம.தி.மு.க. பங்கேற்பதில்லை என முடிவு செய்தபின், எதிர் கூட்டணியில் உள்ளவர்கள் உடனே தி.மு.க.வுக்கு வைகோ ஆதரவு தர வேண்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை விடுகிறார்.

ம.தி.மு.க. மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கூட ஒன்றுபட்டு உழைப்போம் என மறைமுகமாக வைகோவுக்கு அழைப்பு என்ற பெயரில் தூது விடுத்துள்ளார்.

ம.தி.ம.க. தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும் பாஜக அணிக்குவந்தால் வரவேற்போம் என்றும் மாநில பாஜக தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் 2006 இல் திமுக அணியில் இருந்து அதிமுக அணிக்கு வைகோ சென்றதால்தான், திமுகவுக்கு அந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று தொடங்கப்பட்ட அமைப்புகள் பின்னாளில் கட்சியாக மாறித் தேர்தலில் நின்று சட்டப் பேரவை, நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் அனுப்பும் நிலையில், ஏற்கனவே தேர்தலைச் சந்தித்து வந்த ம.தி.மு.க. இப்போது ஒதுங்கி நிற்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை விடுத்து அம்மாவின் விசுவாசியாகவும் வைகோவின் நண்பராகவும் காட்டிக் கொண்டு ஒதுங்கிக் கொண்டன.

கூட்டணி அமைக்கும் அவசரத்தில் எல்லாக் கட்சிகளும் கொள்கையை மறந்து விட்டன. இப்போது அவர்களுக்கு இருப்பது ஒரே கொள்கைதான். அதிக எண்ணிக்கையில் இடம் ஒதுக்குகிறவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதே கொள்கையாகி விட்டது.

அரசியலில் பதவிகள் மேல் துண்டு போன்றது என்றும், கொள்கைகளோ கோவணம் போன்றது என்றும் தலைவர்கள் மேடை தோறும் பேசி வந்தனர். தேவை ஏற்பட்டால் பதவிகளைத் துறப்போமே தவிர கொள்கைகளை விட்டுக் கொடுக்க ஒருக்காலும் சம்மதிக்க மாட்டோம் என்றும் உறுதி கூறினர். ஆனால் இப்போது கூட்டணி பேரத்தில் கோவணம் போன இடமும் தெரியவில்லை. கொள்கை போன இடமும் தெரியவில்லை.

“திராவிட நாடு திராவிடருக்கே'' என்றும் “தமிழ்நாடு தமிழருக்கே'' என்றும் பேசப்பட்ட கொள்கைகள் ஒரு தடைச் சட்டத்துடன் கைவிடப்பட்டன. அதன்பின் "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற முழக்கம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, "உரிமைக்குக் குரல் கொடுப்போம்; உறவுக்குக் கை கொடுப்போம்' என்றனர்.

ஆனால், ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இந்திய அரசோ தமிழக அரசோ அதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. அந்த இன அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக அந்நாட்டு அரசுக்கு ஆயுதங்களும், ஆலோச னைகளும் அளிக்கப்பட்டனவே? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க இப்போது யாருக்கும் நேரம் இல்லை.

இந்தத் தேர்தல் சூதாடிகள் கொள்கைகளையும் சரி, கோட்பாடுகளையும் சரி, அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள்; மாறிக் கொள்ளும். 1952 இல் அண்ணா அவர்கள் தங்களின் உயிர்க் கொள்கையான திராவிட நாடு என்ற கொள்கையை ஒரே சட்டத்தில் கைவிட்டார். “இவர்கள் கொள்கையைக் கைவிடு வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும் தானே? திராவிட நாட்டுக் கொள்கையைத் தி.மு.க. கைவிட்டதற்குக் காரணம் கட்சியை ஒழிப்பதற்குச் சட்டம் வந்தபோது திராவிடர் நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்ற உறுதியான கொள்கை என்ற கொள்கை முடிவை எடுத்தவர்கள் இவர்கள்.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை தி.மு.க. ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பது அதன் தலைவர்கள் பேசும்போது தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, ஆ.ராசாவின் கைது, சிபிஐ விசாரணை என்று உச்சநீதிமன்றம் முடுக்கி விட்டிருக்கும் நிலையில் மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து வெளிவருவது தி.மு.க.வுக்குப் பாதகமாகப் போகக் கூடும் என்கிற நிலையில் காங்கிரசைப் பகைத்துக் கொள்ளத் தி.மு.க. தலைமை தயாராக இல்லை.

“ஆரம்பத்தில் "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு அமைச்சர் ஆ.ராசா மட்டுமே பொறுப்பாக இருக்க முடியாது என்றும், இவ்வளவு பெரிய ஊழலைத் தனிமனிதராக ஒருவர் செய்திருக்க முடியாது' என்றும் பேசிவந்த முதல்வர் கருணாநிதி, இப்போதெல்லாம் அந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதையே நிறுத்தி விட்டிருப்பதிலிருந்து எந்த அளவுக்குத் தி.மு.க. தலைமை சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.''

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழுமுதல் காரணமாகத் திகழ்கிறார்கள். சொல்லப் போனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத் துக்குப் பின் செல்கின்றனர்.

"இலவசம் வாங்கும் மக்களே! ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் நம் பணத்தை நம்மிடமிருந்து கொள்ளை அடித்து நமக்கே இலவசங்கள் தருகிறார்கள்.

மணல் திருடர்கள், கிரானைட் கொள்ளையர்கள், நாட்டு வளங்களைச் சூறையாடு பவர்கள், இயற்கைச் சூழலை மாசுபடுத்தும் மாபாவிகள், சாராய சாம்ராஜ்ய வாதிகள் போன்ற சமூக விரோதக் கூட்டமும் இரு கழகங் களின் தலைமைகள் எடுக்கும் முடிவுகளைத் திருத்தவும், திசை திருப்பவும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்கின்றன.

தேர்தல் கூட்டணிக் கட்சிகளை விட மிக அதிகமான செல்வாக்குப் படைத்ததாக இந்தக் கொள்ளைக் கூட்டணிகள் விளங்குகின்றன.

தேர்தல் கூட்டணிகளையே இவர்கள் தீர்மானிக்கிறார்கள். எவ்வித கூச்ச நாச்சமற்றவர்கள், மனசாட்சியை மறந்தவர்கள். தடித்த தோலர்கள், பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாதவர்கள். கைகோர்த்து நிற்கிறார்கள். தமிழக அரசையும், அதை நடத்தும் இரு கழகத் தலைமைகளையும் தங்களின் பண வலிமையால் ஆட்டிப் படைக்கிறார்கள்.

நாம் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நாம் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உழைக்கும் மக்களாகிய வாழ்க்கைத் தரமும் உயரப் போவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை. நம் வாழ்க்கைத் தரமும் மாறப் போவதில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தைப் பயன்படுத்தி தலித் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளைநிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டது.

அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப் பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலை யிலே தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள்.

ஒரு ஏக்கரைக் குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்தப் பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில் ஒரு கிரவுண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு.

அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிகச் செயற்கையே. விலைவாசி உயர்வு என்பது இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல் இது. இவர்கள் இப்படி என்றால்,

அடுத்து பார்ப்பன அம்மையார் பற்றிச் சொல் வதற்கு ஒன்றுமில்லை. தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழர் மீதான வெறுப்பு ஆகியவற்றையே தன் கொள்கை யாகவே வைத்துள்ளார். தமிழக அரசியல்வாதிகள், தமிழ் மக்களைப் போன்றே "சூடு சொரணை அற்றவர்கள்' "எட்டி உதைத்தாலும் எலும்பை வீசினால் வாலைக் குழைத்து வரும் நாய்களைப் போன்றவர்கள் இவர்கள் என்பதை அறிந்தேதான் செயலலிதா எவ்வளவு கேவலமாக இவர்கள் அனைவரையும் நடத்தினாலும் கடைசி நேரத்தில் பெட்டிக்குள் அடக்கி விடுகிறார்.

தன்னுடைய புலி ஆதரவுக் கொள்கைக்காகத் தான் வைகோ சிறையிலடைக்கப்பட்டார். தாம் கைது செய்யப்பட்டபோது "செயலலிதா ஆட்சி ஒழிக' "கொடுங்கோலாட்சி' என்றெல்லாம் விமர்சித்தார். ஆனால் அதன் பின் ஆறு ஆண்டுகள் கழித்து புத்த மர ஞானம் பெற்று வெளி வந்துள்ளார். இனிமேல் தன்மானம் சுயமரியாதை எல்லாம் வீண் பேச்சுகள்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதனால் தான் அரசியலில் நிலையான நண்பரும் இல்லை, நிலையான எதிரியும் இல்லை. பழைய விசயங்களை திரும்பிப் பார்த்து அதையே நினைத்துக் கொண்டி ருப்பதில் நம்பிக்கை இல்லை என்று செயலலிதா கூறி இருக்கிறார். அவருக்கு யார் தேவையோ அவரைப் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை வெளியேற்ற முடியும் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்துகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் "அடங்க மறுப்போம், அத்து மீறுவோம்.' தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையே சமூக விடுதலை என்ற உன்னத கோட்பாடுகள் எல்லாம் இன்று சமூக நீதி காத்த வீராங்கனையிடமும், முத்தமிழ் வித்தகரிடமும் மாறி மாறி அடகு வைத்து விட்டார்கள். சேரிகள் இன்னும் இன்னும் தாழ்ந்து கிடக்க இவரும் இவர் தம்பிகளும் பன்னாட்டு நிறுவன மகிழுந்துகளில் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

“வன்னியன் ஓட்டு அன்னியனுக்கு இல்லை' என் குடும்பத்தில் யாரும் தேர்தலில் நிற்க மாட்டார்கள் அப்படி நின்றால், முச்சந்தியில் வைத்துச் சாட்டையால் அடியுங்கள்'' என்று முழங்கிய தமிழ்க் குடிதாங்கி, தன் மகனுக்காக சோனியாவிடமும், சமூக நீதி காத்த வீராங்கனையிடமும், முத்தமிழ் வித்தகரிடமும் மாறி மாறித் தமிழ் மானம், தமிழர் உரிமை எல்லாம் இன்று காற்றோடு கரைத்து விட்டார்.

நாம் தமிழரின் சீமான் அவர்கள், “தேர்தலைப் புறக்கணியுங்கள்'' எனச் சொல்வது அது தற்கொலைக் குச் சமமான கோழைத்தனம்! குடுகுடுப்பைத்தனமோ கோழைத்தனமோ கூடாது என்பதால்தான் காங்கிரசை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன்.

கிடைக்கிற ஆயுதத்தைக் கொண்டு எதிரியை ஒழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாசி சுபாசு சந்திரபோசு, இட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே. உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா? என நேதாசியிடம் கேட்க முடியுமா?

இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது பிரேமதாசாவின் துணை யோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே. எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது? "காங்கிரசை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்' என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, அவர் போல் ஆகிவிடுவார். இவர் போல் ஆகிவிடுவார்.

சுண்ணாம்புச் சுவர் போல் ஆகிவிடுவார் என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும், கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக்கட்டி அல்ல. புலிக் குட்டி என்று சூளுரை ஏற்று இருக்கிறார். இந்திய நாட்டில் தேர்தல் வழி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற ஞானத்தை எங்கிருந்து பெற்றார் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.

சமூக மாற்றம், விடுதலை என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிற எந்த ஓர் இயக்கத்திற்கும் தேர்தல் என்பதே முதன்மை வழியாக இருக்க முடியாது. அனைத்துக்கும் அடிப்படை என்பதாகவும் இருக்க முடியாது. இதுதான் நம்மையும் பதவி அரசியல் கட்சிகளையும் வேறுபடுத்துகிற கோடு. அவர்களும் கூடப் போராடுகிறார்கள். மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுகிறார்கள்.

மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் அந்தப் போராட்டங்கள் தேர்தலைக் குறியாக வைத்து அதற்கேற்ப நடத்தப்படுகின்றன.

தேர்தல் களம் நாளுக்கு நாள் எத்தனையோ மேடு பள்ளங்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கும். அரசியலில் நிலையான நண்பர்களும் இல்லை. பகைவர்களும் இல்லை என்பதே நமது நிலையான கொள்கையாகும்.

எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதுதான் தற்காலிகக் கொள்கையாகும் என்று ஏமாற்றுப் பேர் வழிகள் காலங்காலமாகச் சொல்லி வரும் தேர்தல் தத்துவம்.

இந்தத் தத்துவத்தை நம்பி எத்தனை புரட்சிகர இயக்கங்கள் தங்கள் அடையாளங்களை இழந் துள்ளன.

இந்தியா என்ற சிறைச் சாலைக்குள் மொழி, பண்பாடு, தேசிய உரிமை என்று கொள்கைக்காகப் போராடுகிற இயக்கங்கள் தேர்தல் என்ற சகதிக்குள் சிக்கினால் வெளியே வர முடியுமா?

இந்தியத் தேர்தல் முறை இன்று பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டின் இயற்கை வளங்களை, கனிம வளங்களை, சுரண்ட வும் கொள்ளை கொண்டு போவதற்கும் வழி அமைத் துக் கொடுப்பதுதானே இவர்களின் வேலை. "தேர் தல் வழியாக சனநாயகத் தையோ, மக்களின் அடிப் படை வாழ்வாதாரத்தையோ மீட்க முடியுமா?

இந்தியப் பார்ப்பனக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடுகிற தேசிய இன விடுதலை இயக்கங்கள் எப்படி இந்தியத் தேர்தல் என்ற சாக்கடைக்குள் தமிழர் உரிமை, தமிழர் பண்பாடு, தமிழ் மொழிக் காப்பு, என்ற உன்னத இலக்குகளை நாம் தேடவும் முடியாது, அடைய வும் முடியாது என்பது தான் வரலாற்று உண்மை...

Pin It