ஞாயிறு போற்றுதும் திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும்... என்றவாறு இயற்கையை இரசிப்பதே அதன் பாதுகாப்பு அடிப்படைக் கருதுகோள்களில் முக்கியமானதாகும். இத்தகைய பாரம்பரிய வெளிப்பாட்டின் ஊடகமான நமது மொழியின் மிக நீண்ட கால வரலாற்றில் இயற்கை விஞ்ஞானம் என்ற அழகியலின் வளமான கணக்கீடுகள் பற்றிய குறிப்புகள் யாவும் மறைக்கப்பட்டு மண்ணாய் போய்விட்டனவோ? அண்மையில் ஆங்கிலம் வந்த பிறகே இயற்கையின் பல முகங்கள் அறியப்படலாயிற்று. ஆம்.

இந்த வழியில் இயற்கை வளப்பாதுகாப்புக்கு ஒரு மொழியின் பயன்பாடு அதன் கலைச் சொல்லாக்கத்தில் இருப்பதையும் ஆங்கிலமே உணர்த்தியுள்ளது, நமது தொன்மைக்கு அவமானமே. ஆனால் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் அடையாளமே தெரியாதவாறு அமுக்கப்பட்டது ஆங்கிலத்தால் மட்டும் அல்ல. இன்றைய சூழலில் அறிவியல் தமிழ் ஆன்றோரின் தமிழாக்க ஆர்வம், இயற்கை வரலாறு மற்றும் காட்டுயிர் துறைகளில் மட்டும் ஏன் மனங்கொள்ளப் படுவதில்லை? குறிப்பாக அழகியலின் அல்லது மனித வளத்தின் அடையாளமாம் இயற்கை வரலாற்றுத் துறையில் (Natural history) நமது சொல்லுக்குச் சொல் சுருக்கி, மறைத்து வைக்கப்பட்டுள்ள சூத்திரங்களை மீட்டெடுப்பின் அவசியத்தை அறிஞர்கள் ஏன் புரிந்து கொள்ள முன்வருவதில்லை?

எடுத்துக்காட்டாக குரங்குக்கும், மந்திக்கும் உள்ள பொருள் புரியாத போக்கு இன்றைய தமிழரின் பண்பாட்டுச் சிதைவுகளில் ஓர் முக்கியக் கூறு எமது முயற்சிகளே, இவற்றில் ஒரு துவக்கம் எனக் கூற வருத்தம்தான். அறிவியலின் பெயரால் வறட்டு மொழிபெயர்ப்பை மட்டுமே செய்து கொண்டிராமல் ஆக்கப்பூர்வமான கலைச் சொல்லாக்க வழியில் இயற்கையின் தமிழ் உலகம் சிலிர்த்து நிமிர அண்மையில் உருவான ஒரு சொல்லே பல்லுயிரியம் ஆகும். வள்ளுவரிடமிருந்து பெறப்பட்ட பல்லுயிரியம் என்பதை பையோடைவர்சிடி (Bio - diversity) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக மொழியாக்கம் செய்திருப்பது பெருமைக்குரியது. செய்தவர் வாழ்க.

சென்ற 1999 ரியோடிஜினிரோ - புவி உச்சி மாநாட்டில் அமெரிக்கா சர்ச்சை எழுப்பியது. இது குறித்த ஒப்பந்தத்தால்தான். அப்படி என்ன இதில் சிறப்பு? பல்லுயிரியம் என்பதின் சுருக்க விளக்கம்: இன்றைய நாள்வரை புவியில் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்ட சுமார் 8 மில்லியன் அதாவது 80 இலட்சம் உயிரினங்களும் இன்னும் கண்டறியப்படாத, பெயரிடப்படாத தாவர, விலங்கினங்களும், நம்முடன் வாழும் வளர்ப்பு விலங்குகளுடன் சேர்ந்த சூழல் அமைப்பே பல்லுயிரியமாகும்.

இவ்வமைப்பு செழித்துக் காணப்படும் பகுதிகள் அதாவது ஒவ்வொரு அங்குலத்திலும் பல்லாயிரம் உயிர்ப்பொருட்கள் எங்கெங்கு உள்ளன என்றால் இந்தியாவைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில்தான். இதற்கு பிரபலமானதோர் உதாரணம் பிரேசில் மழைக் காடுகள். ஏன் நம்மிடமும் மழைக் காடுகள் உண்டு; சிறுவானி, வால்பாறை போல பிரேசில் மழைக் காடொன்றில் ஒரு மரத்தில் மட்டும் சேகரிக்கப்பட்ட பூச்சிகளை வகை காண முற்பட்ட பூச்சியியலாளர் ஒருவர், அவற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத சில நூறு பூச்சி இனங்கள் இருந்ததாக சென்ற ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தார்.

மத்திய அமெரிக்க நாடான பெருவில் மற்றொரு ஊர்வனவியலாளர் தரைக்கு வராமல் மரங்களிலேயே வாழும் அரிய சிலவகைப் பல்லி இனங்களைக் கண்டிருக்கிறார், என்றால் அக்காடுகளின் உயிர்ச் சூழலின் சிறப்பை சொல்லவும் வேண்டுமா? நமக்குத் தெரியாத இன்னும் என்னென்ன இருக்குமோ? இவையெல்லாம் நுண்மாண் நுழைபுலத்தோடு ஆராய்ந்தறிந்தால் மருத்துவத்துறைக்கும், பொருளாதாரத் துறைக்கும் மிகப்பெரிய சாதனைகள் கைவரக்கூடும்.

இதையெல்லாம் குறிப்பிடும் போது உங்கள் மனத்தில் பெருத்ததோர் சந்தேகம்.... எதற்காக இத்தனை கோடி உயிரினங்கள்? நமக்குப் பயன்படக்கூடிய சிலவற்றை தெரிவு செய்து காப்பாற்றினால் போதாதா? கூடாது. உண்மையில் ஒவ்வொரு இனமும், வகையும் ஒன்றுடன் ஒன்று சூழலியலில் (Ecology) பின்னிப் பிணைந்துள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றையழித்தால் அதன் விளைவு சங்கிலித் தொடராக மற்றொன்றைத் தாக்கும். எடுத்துக்காட்டாக நமது நீலகிரியில் உள்ள இருவாசிப் பறவை (Horn bill)கள் அழிந்தால் இதன் தொடர்பான சுமார் 10 வகை மரங்களும் அழியும். காரணம் இருவாசி உட்கொண்டு வெளியேற்றும் விதைகளே உயிர்ப்புத்தர மிக்கதாக உள்ளன. இப்படியாக மட்டுமே அம்மரங்கள் பரவியுள்ளன. இது போல எல்லாவற்றையும் விரிவாக்கிப் பார்க்கலாம். அடுத்து உங்கள் சிந்தையில் தோன்றுவது என்ன? இந்தப் பல்லுயிரியம் நமது அன்றாட வாழ்வில் எப்படி பயன்படுகிறது என்பது தானே?

தற்போது உலகில் பயிரிடப்படும் 30 முக்கிய தானியங்கள் காடுகளில் இருந்தவை. மனிதனே அதை எடுத்து செயற்கையாகப் பண்படுத்தி தமக்கேற்றார் போல் பயனாக்கிக் கொண்டுள்ளான். இவ்வழியில் இப்போதும் ஒரு பயிரின் தரத்தை மேம்படுத்த காட்டிலுள்ள அதன் உறவோடுதான் கலப்பினம் செய்யப்படுகிறது. உதாரணமாக 1970இல் ஆசியாவில் சுமார் 6 கோடி ஏக்கர் நெல்வயல்கள் சிராசிஸ்டன்ட் என்ற ஒரு வகை வைரஸ் நோயால் தாக்குண்டு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைச் சமாளிக்க பிலிப்பைன்சில் உள்ள பன்னாட்டு அரிசி, ஆராய்ச்சி நிலையம் அந்நோய்க்கு எதிர்ப்புள்ளதோர் அரிசி இனத்தைக் கண்டறிய தமது சேகரிப்பில் இருந்த 6273 காட்டுப் புல் வகைகளைச் சோதித்ததில் (நெல்லும் ஒரு புல்வகை தானே) 1966இல் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அடிவாரக் காட்டுப் பகுதியில் இயற்கையாக செழித்திருந்த ஒரு வகை மட்டுமே தகுதி பெற்றது. இதனுடன் ஒப்பீடு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட அரிசி வகையே பின்னாட்களில் ஐ.ஆர்.20 என உலகப் புகழ் பெற்ற அரிசி ரகமாகும்.
இதிலிருந்து வந்த ஐ.ஆர்.50 ரகம்தான் இன்றும் உலகில் அதிகம் பயிரிடப்படும் வகையாக இருக்கிறது.

உயிரினங்கள், யாவற்றையும் இயற்கை தன் கட்டுக்குள் வைத்திருக்க நவீன மனிதன் மட்டும் பெருகிக் கொண்டே உள்ளான். இந்நிலை நீடித்தால் எவ்வளவு தீவிர வேளாண்மை நடப்பினும் (பொதுவுடைமை ஏற்பட்டால் ஒழிய) ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் 10 முதல் 400 கோடி மக்கள் கடும் பற்றாக்குறையால் அழிய நேரிடும் என்கிறது உலக வேளாண் ஆய்வுக் கழகம். இதே கழகம் தான் நாம் பல்லுயிரியத்தைப் பாதுகாத்தால் மேலும் புதிய 75,000 வகை உணவு வளங்கள் கிடைத்திட வாய்ப்புண்டு என்றும் கூறியிருக்கிறது. நமது அன்றாட வாழ்வின் அடையாளமாகி விட்ட காப்பி எதியோப்பியக் காடுகளைத் தாயகமாகக் கொண்டது.
இன்னும் காப்பியின் 150 வகை உறவினச் செடிகள் அங்கு காட்டில் உள்ளனவாம். பழங்களைக் குறிப்பிடும்போது 1961இல் சீனக் காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கிலி என்ற பழத்தின் தற்போதைய ஆண்டு விற்பனை அமெரிக்கச் சந்தையில் 22 மில்லியன் டாலர்.

செடி, கொடிகளில் குறிப்பிடப்பட்டவற்றை விலங்குகளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். தென் கிழக்கு ஆசிய காட்டுமாடான பென்டெங், இந்தோனேசியாவில் பழக்கப்படுத்தப்பட்டு 15 இலட்சமாக பெருக்கப்பட்டுள்ளது. மீன் இனங்கள் சிலவும் அப்படியே, இன்று தமிழன் உண்ணும் மீன்களில் 90 விழுக்காடு கடலிலிருந்தே பிடிக்கப்பட்டவை. ஆனாலும் உலகிலேயே மீன் பற்றாக்குறையும் நமக்குத்தான். போதிய அளவு நீர்நிலைகள் இங்கிருந்தும் நன்னீர் மீன்களின் மாபெரும் தட்டுப்பாடு நமக்குள்ள அறியிவியலின்மையை உணர்த்துகிறது. எனவே சிந்தித்தால் பல்லுயிரியத்தின் அரவணைப்பில் நம்மிடமுள்ள மான்கள், ஆமைகள், முதலைகள் போன்றவை நன்கு உதவ முடியும். ஆக வறுமை மாறி வளம் பொங்கிட நமது கைகளை விட மூளைகளுக்கே வேலை தேவை.

தமிழ்நாடு, சுமார் 100 வகைப் பாலூட்டிகளுக்கும் 400 வகைப் பறவைகளுக்கும், 160 வகை ஊர்வனவற்றுக்கும், 12,000 வகைப் பூச்சிகட்கும், 5,000 வகைத் தாவரங்களுக்கும், 10,000 வகை சங்கு, சிப்பி, கடல்வாழினங்களுக்கும் ஓர் அற்புத உறைவிடமாகும். இயற்கையின் பெருமைமிகு இப்பெட்டகத்தைப் பற்றி எத்தனை தமிழர் அறிவர்? ஆனால் இத்தனையும் குறித்த ஆய்வறிக்கைகள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சாதாரணமாக கிடைக்கின்றன. நீலகிரி உயிர் மண்டலத்திற்கு (Nilgiri Biosphere Reverve) மேற்குறிப்பிட்ட வகையில் மிக நல்ல எதிர்காலம் உள்ளது. பங்கு பலவகைச் சூழியலமைப்புகள் ஒருங்கே இருப்பதால் வேறுபட்ட பல இனவகைகள் எஞ்சிப் பிழைத்திருக்கின்றன. கண்டறியப்பட்ட செடி கொடி இனங்கள் 3,500இல் சுமார் 1,500 வகை நீலகிரிக்கு மட்டுமே உரியன.(Indigenous)

ஒரு ஆய்வுக் குறிப்பு கூறுவதாவது: 85 வகைப் பாலூட்டிகள் நீலகிரியில் அழிவின் விளிம்பிலுள்ளன என்று. இதற்கான முக்கிய காரணம் தேயிலை வளர்ப்பு எனலாம். இது உணவுப்பொருள் அல்லவென்று உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்து விட்டதால் இதை ஒழித்துக் கட்டி காடுகளையும், காட்டுயிர்களையும் காப்பாற்ற உங்கள் பங்கு என்ன? நமக்கு முதல் தேவை மூடநம்பிக்கையில்லா ரசிக்கும் தன்மை. இரண்டாவது மதம் சாராததொரு இயற்கைவாதியிடம் நட்பு. மூன்றாவது நேர்மையானதொரு ஆராய்ச்சியாளரின் நூல்களில் ஈடுபாடு.
நான்காவது எளிய அறிவார்ந்த வாழ்வு. முதலில் இரசிக்கத் தொடங்குங்கள்.

பின்னர் ஆர்வத்துடன் எதையும் ஒப்பிடும் படியான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் என்ன? ஏன்? எப்படி? எனக் கேட்டு, பேசி,பார்த்து, அறிந்து, புரிந்து பின்னர் பாதுகாக்க ஏதாவதொரு முயற்சியை விரைவாகச் செய்யுங்கள். ஏனெனில் நம் நாட்டைப் பொறுத்தவரை பல உயிரினங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னமே அழிந்து போகின்றன. உங்களுக்கு உதவ பல அமைப்புகள் உள்ளன. பொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை, சென்னை உலக இயற்கைவளப் பாதுகாப்பு நிதியம், இராஜபாளையம் காட்டுயிர்ச் சங்கம், மேட்டுப்பாளையம் காட்டுயிர் அன்பர்கள் கழகம், உதகை சுற்றுச் சூழல் மற்றும் கானுயிர் சங்கம் போல. இந்திய அரசின் நிறுவனமான காட்டுயிர் கல்வி நிறுவனம் - தேராதூண், மும்பாயின் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் ஆகியன இந்தியத்துணைக் கண்டத்தின் புகழ்பெற்ற பழைமையான அமைப்புகளாகும். இவற்றின் நூல்கள், சஞ்சிகைகள், இதழ்கள் போன்றவை இயற்கை குறித்த பனுவல்களில் முன்னோடித் தன்மை மிக்கனவாகும்.

பல்லுயிரியப் பாதுகாப்பு குறித்ததொரு கடைசி வேண்டுகோள்: இயற்கையான நமது வனப்பகுதியில் அயல்நாட்டு செடி, கொடி, மர, விலங்கினங்களை அனுமதிக்கவே வேண்டாம். இது சரி செய்திட முடியாத தவறாக அமைந்துவிடும். உங்கள் லாபத்திற்காக இதையும் செய்தால் அது இயற்கையை அழிப்பதாக இருக்கும். இயற்கை அழிந்தால் அது எல்லோரையும் அழிப்பதாக அர்த்தம். மேலும் இப்பல்லுயிரியம் பேணல், இரசணை, தேவை போன்ற விசயங்களை உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் எடுத்துக் கூறி இது குறித்து தமிழில் ஒரு ஆழமான விவாதத்தையும் ஏற்படுத்துங்கள். இது போன்று நீங்கள் செய்யும் சிறுசிறு செயல்களே தமிழ்கூறு நல்லுலகை நீண்டகாலம் மகிழ்ச்சி உள்ளதாக்க உதவும்.
Pin It