இயற்கை மனிதனை நேசிக்கிறது. ஆனால் மனிதன் இயற்கை வளங்களையே நேசிக்கிறான்.

எனது தாத்தா ஆற்றில் நீரைப் பார்த்தார்
எனது தந்தை கிணற்றில் நீரைப் பார்த்தார். நான் குழாயில் நீரைப் பார்த்தேன்.
என் மக்கள் பாட்டில்களில் நீரைப் பார்க்கிறார்கள்.
என் பேரக் குழந்தைகள்...?

என்ற கவிதைகள் தமிழக நீர்நிலையின் அவலத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம். மண்ணின் உயிர்த்துளி. உயிரின் வாழ்க்கைச் சூழலின் அடிப்படை. தண்ணீர் இயற்கையின் கொடை. புல் பூண்டுகள் முதல் மனிதன் முதலான எல்லா உயிரினங்களுக்கும் சேர்த்து தான் தண்ணீரை இயற்கை வழங்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. பெரிய தொழிற்சாலைகளின் கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகள், நகர சாக்கடைகள், குப்பைகள் என அனைத்தும் சங்கமிக்கும் கழிவு நீர்க் குப்பைகளாக ஆறுகள் மாற்றப்பட்டு விட்டன.

அதே நேரம் மற்றொரு புறங்களில் ஆறுகள் தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களான கோகோ-கோலாவிற்கும், பெப்சிக்கும் அதன் அடிவருடிகளான இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படுகின்றன.

தமிழகத்தில் வைகை - பெப்சிக்கும், தாமிரபரணி கோக்கிற்கும் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திருப்பூரின் குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டதுதான். இதன் தொடர்ச்சியாக கோவை மக்களும் விரைவில் சிக்கவுள்ளனர். ஆம் கோவையின் நொய்யல் ஆறும் கோவை நகர மக்களும் சிறு துளி என்ற தொண்டு அமைப்பின் பிடியில் அதிவிரைவில் குடிநீருக்கு கப்பம் கட்டும் சூழல் உருவாகவுள்ளது.

ஆகவே நாம் சிறுதுளி அமைப்பினைப் பற்றிப் பார்ப்போம். சிறுதுளி அமைப்பானது கோவையில் கடந்த 2002 ஆம் ஆண்டின் இறுதியில் ஜெகத்குரு சங்கராச்சாரியார் என்று பொய்யாக அழைக்கப்படும் சுப்பிரமணியன் என்பவரால் துவக்கி வைக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்பில் ஆறு பேர் முக்கிய அங்கத்தினர்களாக உள்ளனர். 1) பாலசுப்பிரமணியன் (பண்ணாரி அம்மன் சுகர்ஸ்) 2) வனிதா மோகன் - பிரிகால் நிறுவனம் 3) ரமணி சங்கர நேந்த்ராலயா மருத்துவமனை 4) ரவி சாம் - லெட்சுமி மெஷின் ஒர்க்ஸ் 5) நாகசுப்ரமணியம் - வழக்குரைஞர் 6) கணக்கால் அபய் சந்த்(டி.வி.பிரதர்ஸ்)

மேற்கண்ட பின்னணியில் துவக்கப்பட்ட சிறு துளி அமைப்பானது கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய அமைப்பாக பிரமாண்டமாய் வளர்ந்துள்ளது. இன்று அந்த அமைப்பின் வனிதா மோகன் கோவையின் தன்னிகரற்ற தலைவராக கோவை நகரின் மேதாபட்கர் அளவுக்கு உருவகப்படுத்தப்படுகிறார். கோவை நகரின் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பெண்கள், விவசாயிகள் என அனைவரும் சிறு துளி அமைப்பின் அபிமானிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பானது குடிநீரின் பயன்பாட்டை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காகவும், ஆற்றைச் சுத்தப்படுத்துவதன் அவசியத்தை கொண்டு செல்வதற்காகவும், பள்ளிக் குழந்தைகளை வெயிலில் நடக்க வைத்து ஊர்வலம், இரவில் பெண்களை நடக்க வைத்து மெழுகுவர்த்தி ஊர்வலம், ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கு இளைஞர்களின் எதிர்பார்ப்பற்ற உழைப்பு. விவசாயிகளிடமிருந்து உழைப்பு, வணிகர்களிடமிருந்து நிதி உதவி, பெண்களிடமிருந்து பாராட்டு, அரசிடமிருந்து அங்கீகாரம், ஊடகங்களிடமிருந்து புகழ் போன்ற அனைத்தையும் பெற்றுக் கொண்டு நொய்யல் ஆற்றைச் சுத்தப்படுத்துகிறது. மேற்கண்ட அனைத்தையும் மற்றவர்களிடமிருந்து பெரும் சிறுதுளி அமைப்பும் அதன் நிர்வாகத்தினரும் நொய்யலுக்கு என்ன செய்கிறார்கள்? என்று கேள்வி எழுகிறதா? சரியான கேள்வி தான்.

பதில் நொய்யலை அசுத்தப்படுத்துகிறார்கள். தமிழகத்தின் நீராதாரங்களையும் மாசுபடுத்துகிறார்கள். மாசுபடுத்துபவர்களுக்கு துணை நிற்கிறார்கள்.

ஆம். சிறுதுளி அமைப்பில் தலைவராக உள்ள பாலசுப்ரமணியம் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் தலைவராக உள்ளார். இந்த குழுமத்தின் இன்னொரு நிறுவனம் சிவகங்கையில் உள்ள படமாத்தூரில் கோகோ கோலா பன்னாட்டு நிறுவனத்திற்கு குடிநீரை உறிஞ்சுவதற்கு துணை நிற்கிறது. அதற்கு எதிராகப் போராடும் அங்குள்ள விவசாயிகளை ஒடுக்குகிறது. அங்குள்ள நீராதாரங்களை அழிப்பதற்கு முன் நிற்கிறது. சிறுதுளி அமைப்பின் மேலாண் இயக்குனராக உள்ள வனிதா மோகன் பங்குதாரராக உள்ள --- என்னும் நிறுவனம் அமராவதி ஆற்று நீரை மாசுபடுத்துகிறது. சிறுதுளி அமைப்பின் இன்னொரு அங்கத்தினரான கணக்லால் அபய் சந்த் என்னும் மார்வாடி கருப்பட்டி தயாரிப்பதற்கான கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இதற்கெல்லாம் மேலாக நொய்யலுக்கு நூறு என்னும் பெயரில் பொதுமக்களிடம் வசூல் வேட்டையைத் தொடங்கிய நடிகர் சூர்யா கோகோ கோலாவின் அதிகாரப்பூர்வமான ஏஜெண்ட். உலகமெங்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி, நீரை மாசுபடுத்தி அதனை பாட்டிலில் அடைத்தும், குளிர்பானங்கள் என்ற பெயரில் விசத்தன்மை கலந்தவற்றை விற்றுக் காசாக்கும் நிறுவனம். அண்டை மாநிலமான கேரளாவின் பிளாச்சிமடா இதன் கொடூரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சிவகங்கையின் படமாத்தூர், நெல்லையின் கங்கை கொண்டான் போன்றவை நாளைய அபாயத்தின் அறிகுறிகள். அத்தகைய நிறுவனத்தின் விளம்பர ஏஜெண்ட் நடிகர் சூர்யா நொய்யலுக்கு வசூல் வேட்டை நடத்துகிறார். என்னே விந்தை!

சிறுதுளி அமைப்பின் இன்னொரு அங்கத்தினரான ரமணி என்பவர் சங்கர நேந்த்ராலயா என்ற கோவையில் அமைந்துள்ள கண் மருத்துவமனையின் நிர்வாகி. இந்த கண் மருத்துவமனை காஞ்சி சங்கரமடத்தின் ஒரு அங்கம். சிரிப்பாய்ச் சிரிக்கும் சங்கர மடத்தின் கதை அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு ஆற்றை அசுத்தப்படுத்துபவர்கள், அதற்குத் துணை நிற்பவர்கள், மதவாதிகள் என அனைவரும் ஜாதி, மொழி, இன வேறுபாடற்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் ஆற்றைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில். அதற்கான காரணங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

கோவை நகர மக்கள் அனைவரின் உழைப்பு, பணம் மற்றும் அரசின் அங்கீகாரம் போன்றவற்றைப் பெற்று நொய்யலைச் சுத்தப்படுத்துவதாகக் கூறும் இந்த அமைப்பு இன்னும் இரண்டு ஆண்டுகளிலோ, மூன்று ஆண்டுகளிலோ கோவை நகரின் குடிநீர் விநியோகத்தை கைப்பற்றி நொய்யல் ஆற்றின் நீரை விநியோகித்து பணம் பண்ணுவதும் இவர்களது திட்டத்தின் ஒரு பகுதி. கோவையில் உள்ள மக்கள் இன்று அவர்கள் கடந்து போகும் உக்கடம் பாலத்திற்கு கப்பம் கட்டுவது போல குடிநீருக்கும் கப்பம் கட்ட வேண்டி வரலாம்.

அடுத்ததாக நொய்யல் ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்காக இவர்கள் தற்பொழுது செய்துள்ள வேலைகளைச் சுட்டிக்காட்டி, திட்ட அறிக்கை தயாரித்து தங்கள் அமைப்பிற்கு உலகவங்கியிடம் இருந்து மிகப் பெரிய நிதி உதவி பெற்றுக் கொள்வது. சங்கராச்சாரி என்று கூறப்படும் சுப்பிரமணியன் சிறுதுளி அமைப்பை கோவையில் துவக்கி வைக்கும் பொழுதே 2010 ஆம் ஆண்டு பல நூறு கோடிகளை அவரது உதவியுடன் உலகவங்கியிடம் இருந்து பெறுவதற்காகவே இந்த அமைப்பு துவக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அடுத்த காரணம், புகழ் மற்றும் அரசியல் அதிகாரம். சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, கோவையின் தொழில் பிதாமகர்களாக கருதப்படுபவர்கள் தான்.
பொருளாதார பலம் மிகுந்த சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பவர்கள் தான். ஆனால் அரசியல் பலத்திற்கு இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. தங்களுக்குத் தேவையான காரியங்களை நிறைவேற்ற இவர்கள் எப்பொழுதும் பிறரையே நம்பியிருக்கின்றனர்.

இந்த சிறுதுளி அமைப்பின் மூலம் கோவையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தங்களுக்கு கிடைத்த ஏகோபித்த ஆதரவுடன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது. மேயர், பாராளுமன்ற உறுப்பினர் போன்றவற்றைத் தங்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தங்கள் கைகாட்டும் நபர்களுக்கும் பெறுவது போன்றவை. மேலும் இத்தனை வருடம் தொழில் செய்தும் மக்களிடம் இவர்களுக்கு ஏற்படாத புகழ் சிறுதுளி அமைப்பின் மூலம் கிட்டியுள்ளது. இதனையும் நன்கு அறுவடை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு தங்கள் வணிக நலன்களுக்காக ஆற்றை மாசுபடுத்தியவர்கள், தற்பொழுது அதே வணிக நலன்களுக்காக ஆற்றைச் சுத்தப்படுத்தவும் கிளம்பி விட்டனர்.

ஆற்றை மாசுபடுத்துவது காசுக்காக,

ஆற்றை சுத்தப்படுத்துவதும் காசுக்காக

மேற்கண்ட அவலங்களை எதிர்த்தும், கோவையின் நீர்நிலைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்தும் நமது கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் செஞ்சிலுவைச் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டத்தில் நொய்யலுக்கு நூறு கணக்கெங்கே கூறு நீர்நிலைகளைத் தனியாருக்கு தாரை வார்க்காதே குடிநீர் மக்களின் உரிமை போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. பின்பு இறுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. (மனு அளித்தது போராட்டத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் ஆட்சியரிடம் அளிக்கப்படும் மனுவுக்கு என்ன மதிப்பு என்று சட்டம் படிக்கும் எங்களுக்கு நன்கு தெரியும்) போராட்டத்தை வெண்மணி, ராஜீவ்காந்தி, ஆனந்தராஜ் போன்றோர் வழிநடத்திச் சென்றனர்.

கோவையில் நடைபெற்ற இந்தப் போராட்டமானது முடிவல்ல..... தொடக்கம்
Pin It