எமது மொழியைப் போலவே இருக்கிறது
எம் வாழ்வும்...
சிதைக்கப்பட்ட
அதன் சொற்கள்
வெட்டுண்ட பல்லி வாலைப்போல்
எம் வரவேற்பறைகளில்
விழுந்து துடிக்கிறது...
எரியூட்டப்பட்ட
அந்தச் சுவடிகளின்
தீய்ந்த வாசம்
எம் அறைகளெங்கும்
சுழன்றடிக்கிறது...
அழிக்கப்பட்ட
அந்த விழுமியங்களின் ஓலம்
யாருமற்ற பொழுதுகளில்
ஒரு பைத்தியக்காரனின்
அலறலாய்
எம் தெருக்களெங்கும்
எதிரொலிக்கிறது...
திரிக்கப்பட்ட
அதன் வரலாறு
பகலிலும் இரவிலும்
கரிய நிழலைப்போல்
எம்மைப் பின்தொடர்கிறது
தன் முகமிழந்து...
யாருமறியாமல்
புதைக்கப்பட்ட
சிசுவொன்றைப் போல
கவனிப்பாரற்று
மண்மூடிக் கிடக்கின்றது
எமது வாழ்வும்
ஆயினும்
சிதைவுகளையும்
திரிபுகளையும் தாண்டி,
இம்மண்ணில்
வெட்டி வீழ்த்தப்பட்ட
எம் பெருமரத்தின் விதைகள்
விழுந்த இடத்திலெல்லாம்
வேர் கொள்ளும்...
அன்றதன்
நிழலில் நின்று நாம் சொல்வோம்,
எம் வாழ்வைப் போலவே இருக்கட்டும்
எமது மொழியும்
எமது மொழியைப் போலவே இருக்கட்டும்
எம் வாழ்வும்..
கீற்றில் தேட...
சமூக விழிப்புணர்வு - ஜூலை 2007
மொழி
- விவரங்கள்
- கி.சரவணக்குமார்
- பிரிவு: சமூக விழிப்புணர்வு - ஜூலை 2007