"ஏய் பூசாரி....அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்...? என ஏகவசனத்தில் பேசுவதற்கு நாம் என்ன கலைஞரா என்ன...? அதுவும் குருக்கள்களுக்கெல்லாம் குற்றவியல் சட்டப் பிரிவிலிருந்து விலக்களித்துவிட்டு பூசாரிகள் மீது மட்டும் பாய்வது எம்பெருமானையோ அல்லது எம்பெருமாளையோ அதுவுமல்லது எம்பெருமாள் கோயில் யானையையோ ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்புடையதாகாது. அதுவும் நாஸ்திகர்கள் என்றால் நாக்கில் நரம்பில்லாமல் பேசுபவர்கள் என்பது நாம் அறிந்ததுதானே. நரம்பை விடுங்கள்...எலும்போ அல்லது எறும்போ எது இருந்தாலும் நம்மால் நாக்கைக்கூட அசைக்க முடியாது என்பது வேறு சங்கதி.

Faces
"இப்படி பராசக்தி காலத்திலிருந்து பரமசிவன் காலம் வரையிலும் நம்மவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறார்களே இந்த நபுன்சகர்கள்" என மனம் பதைபதைத்து...உளம் உருகி...ஊன் உருகி... மாநாடொன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதுவும் எங்கே தெரியுமா...? அந்த துஷ்டர்கள் அடிக்கடி பீற்றிக் கொள்வார்களே.... பெரியார் பிறந்த மண்...பெரியார் பிறந்த மண்....என்று....அங்கேயேதான். நடத்தியவர்கள் மற்றவர்களைப்போல சாதாரண ஆசாமிகளில்லை... வடலூர் இராமலிங்க வள்ளலாரின் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ இதயத்தை இரவலாக அல்ல... பர்மணென்ட்டாகவே பெற்ற கட்சிக்காரர்கள்.

என்ன இன்னுமா புரியவில்லை...? நம்ம 'லோககுருவை' இந்த துஷ்ட ஆட்சி கைது செய்தபோது அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க... இந்த லோகம் மட்டுமன்று ஏழேழு லோகங்களும் நடுநடுங்க ஹர்த்தாலும்...ஆர்ப்பாட்டமும்.... சைக்கிள் மறியல் தொடங்கி ஏர் சகாரா மறியல் வரையிலும் நடத்தி 'ஜெயமீட்டிய' விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள்தான் கிராம பூசாரிகளுக்கான இந்த மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்கள். அங்கேயும் இந்த நாஸ்திகர்கள் விடவில்லை. "மாநாட்டை தடை செய்..." "வடை செய்" என்று கூப்பாடு போட்டு விட்டு கலைந்து போனார்கள்.

'கதியற்றவர்களுக்கு கடவுளே துணை' என்று தவிக்கும் மக்களுக்காக அர்ச்சனைகள் மற்றும் தனிப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்யும் பூஜாரிகளின் கதியே அதோகதியாகி விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவர்கள் கூட்டியிருக்கிறார்கள் அம்மாநாட்டை. இதில் எதற்கு இந்த நாஸ்திகர்கள் தலையிட வேண்டும் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.

சர்க்கார் கூட தீர்க்கமுடியாத அநேக சமாச்சாரங்களை ஆண்டவனுக்கு ‘அப்பீல்' போட்டுத் தீர்த்துவைக்கும் இந்தப் பூஜாரிகள் ஏன் தங்களது பிரச்சனைகளுக்கு நேரடியாகவே நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கக்கூடாது என்று உங்களுக்கும் தோன்றலாம். ஆனால் இறைவனுக்கு தொண்டூழியம் செய்பவர்கள் லோகத்திலுள்ள ஜனங்களுக்காக அப்ளிக்கேஷன் போட்டு வேண்டிக் கொள்வதை விட்டுவிட்டு.... "எங்க அத்திம்பேர் ஆறுகால பூஜை செய்தாலும் அறநூறுதான் கிடைக்கிறது...."

"எங்க சகலப்பாடி... சகல பாடிகளையும் கண்டா வெறிச்சு வெறிச்சு பார்த்திண்டே இருக்கா..." என்று சொந்த சமாச்சாரங்களுக்கெல்லாம் வேண்டிக்கொண்டே போனால் மத்த மனுஷாளுக்காக யார்தான் வேண்டுவா...? அதுதான்.... நம்ம பிரச்சனையைத் தீர்க்க வேண்டியது பூஜாரிகளின் வேலை. பூஜாரிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியது நம்ம வேலை. உண்மையிலேயே... "பக்தி பெருகிடுச்சு...." "நாஸ்திகம் நாண்டுகிச்சு..." என்று தொண்டை கிழியக் கத்தினாலும்.... தட்டில் விழுவதையும்.... உண்டியலில் விழுவதையும் எண்ணிப்பார்த்தால்தான் அந்த வேதனை புரியும். நமக்கென்னவோ இந்த விஷயத்தில் நாஸ்திகர்களே மேல் என்றுதான் தோன்றுகிறது.

பூஜாரிகளும் பாவம்தான். "கடவுளே இந்த ஜனங்களுக்கு பரோபகார எண்ணம் வர வை..." என்று அவர்கள் கூப்பாடு போடும் நேரம் பார்த்து ஆழ்ந்த நித்திரையில் பள்ளி கொண்டுவிடுகிறார்கள் இந்தப் 'படைப்பாளிகள்'. எல்லா இறைத்தலங்களுக்கும் ஏகப்பட்ட வரும்படி என எவரும் சொல்லிவிட முடியாது. சிறீரங்கத்தில் ஓகோ என்று வரும்படி வந்தால்... சிறீவைகுண்டத்தில் சுமாராகத்தான் இருக்கும். கும்பகோணத்தில் கோபுரத்தைக் கிழித்துக் கொண்டு கொட்டினால்... கும்மிடிப்பூண்டியில் பஞ்சம் பாய் போட்டுப் படுத்திருக்கும். இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு கட்டத்தான் இத்தகைய மாநாடுகள்.... இதைக்கூட புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்களை என்ன சொல்வது.

இவையெல்லாம் பார்க்கும்போது நமக்கொரு யோசனை தோன்றுகிறது. கடவுளை மறுப்பவர்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும்.... வழிபடுபவர்களாவது காது கொடுத்தால் சொல்லத் தயாராக இருக்கிறேன். அது வேறொன்றுமில்லை.... நம்மவர்க்கெல்லாம் இறைவன் ஒன்றுதான். அது ஆதி நாராயணனாயிருந்தாலும் சரி... பாதி நாராயணனாயிருந்தாலும் சரி. மதுரை மீனாட்சி ஆனாலும் ஒன்றுதான்... மதுரை வீரனாயிருந்தாலும் ஒன்றுதான். சிவபெருமானாயிருந்தால் என்ன... சங்கிலிக் கருப்பராயனாய் இருந்தால் என்ன.... எல்லாம் ஒன்றுதான்.

நீக்கமற நிறைந்திருக்கிற இந்த இறைவனுக்கு வழிபாடு நடத்த... அந்த இடம்.... இந்த இடம்.... சொந்த இடம்... என்றெல்லாம் இல்லை என்பது நாம் அறிந்த 'பேருண்மை'. அதனால் கோயில்களில் உள்ளோரிலும் குறிப்பிட்ட சிலரே 'கப்பம் வசூலிப்பதில்' அசகாய சூரர்களாய் இருப்பதால் இதில் ஒரு சுழற்சி முறை கொண்டு வந்தால் என்ன என்பதுதான் நமது யோசனை. (இட ஒதுக்கீட்டு முறையில் குறிப்பிட்ட சிலரே பயன்பெறுகிறார்கள் என நாம் அடிக்கடி அலறிக்கொண்டிருப்பது போல்....)

ஆறு மாதம் மயிலாப்பூரில் மணியடித்துக் கொண்டிருப்பவரை மீதி ஆறு மாதம் ஐய்யனார் கோயிலில் அடிக்க விடலாம்.... ஐய்யனார் கோயிலில் ஆண்டவனுக்கு பணிவிடை செய்தவர் ஆறு மாதம் கும்பகோணம் கோயிலில் அதையே செய்யலாம்.... வயிற்றில் ஈரத்துணியை பர்மணென்ட்டாகவே கட்டிக்கொண்டு தூங்கும் பல பூஜாரிகளுக்கு இந்த சுழற்சி முறை நிச்சயம் விடிவைத் தரும் என்பது அடியேனது தாழ்மையான எண்ணம். அய்யனாருக்குப் படையல் போட்டவர் பெருமாள் கோயிலில் பிரசாதம் கொடுத்தால் பெருமாள் என்ன பெருமூச்சா விடப்போகிறார்?

இதை மட்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தால் போதும். நிரந்தர ஈரத்துணிக்காரர்கள் ஆறு மாதமாவது ஷேமமாயிருக்கலாம். நிரந்தர ஷேமக்காரர்கள் ஆறு மாதமாவது ஈரத்துணி அருமையை அனுபவித்துப் பார்க்கலாம்.

உலகின் சகல ஜீவராசிகளையும் படைத்த ஆண்டவன் இதற்கென்ன அப்ஜெக்ஷனா சொல்லப்போகிறார்........?
Pin It