“குட்டக் குட்டக் குனிபவன் மடையன்” என்ற பழமொழிக்கமைய அடிமை கொள்ளும் முயற்சியை அதே வேகத்துடன் எதிர்க்கும் விடுதலைக் குரல்களும் இடைவிடாது ஒலிக்கின்றன.

உரிமைக்குப் பால் பேதமில்லை,
உண்மைக்கு நிறமில்லை
கடவுளின் குழந்தைகளான நாம் அனைவரும் உடன்பிறப்புகளே;

Slave
என்ற முகப்பு வரிகளுடன் கி.பி.1847இல் அமெரிக்க மாநிலம் ஒன்றிலிருந்து வந்த இதழ் நோர்த் ஸ்ரார். இந்த இதழைத் தொடங்கி நடத்தியவர் பிரடெரிக்கு டக்கிளசு என்ற விடுதலைப் போராளி.

கி.பி.1619 முதலாக வட அமெரிக்கக் கண்டத்தில் மனிதரை மனிதருக்கு அடிமையாக்குவது வழமையாயிற்று. கி.பி. 1862இல் அடிமைகளின் விடுதலை அறிக்கையை அந்நாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் வெளியிடும் வரை, ஏறத்தாழ 250 ஆண்டுகள், சட்டபூர்வ அடிமைகளாக மனிதர், வட அமெரிக்காவில், சிறப்பாக அதன் தெற்கத்தைய மாநிலங்களில் வாழ்ந்தனர். அந்த அடிமைகளுக்கும் விலங்குகளுக்கும் உயிரற்ற நுகர்வுப் பொருள்களுக்கும் அசையாச் சொத்துக்களுக்கும் வேறுபாடு இருக்கவில்லை. அந்த அடிமைகள் யாவரும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கைப்பற்றிக் கப்பலில் ஏற்றிய கறுப்பு நிறக் காப்பிலி இனத்தவர்.

ஆண்டாராக வெள்ளையர், அடிமைகளாகக் கறுப்பர்; சவுக்குகளாக வெள்ளையர், அடி வாங்கும் முதுகுகளாகக் கறுப்பர். சொகுசு வாழ்வில் போர்வைகள் புத்தாடைகளுடன் வெள்ளையர், குளிரிலும் வெயிலிலும் ஆடையின்றிக் கறுப்பர். வேலை வாங்கலாம், கசையடி கொடுக்கலாம், துன்புறுத்தலாம், பசியுடன் வாட விடலாம், விற்கலாம், ஈடு வைக்கலாம், ஏலமிடலாம், அன்பளிப்பாகக் கொடுக்கலாம், பண்டமாற்றாக்கலாம். சட்டம் துணைநின்றது. வெள்ளையருக்கு மேல்நிலை, கறுப்பருக்கு இழிநிலை.

கல்வியூட்டலாகாது, தொழிற்பயிற்சி கூடாது, தத்துவப் போதனை தேவையில்லை, கேளிக்கை கிடையாது. வேலை..., வேலை...., விடுப்பில்லா வேலை அதற்குக் கூலி கிடையாது, அரை வயிற்றுக்குக் கஞ்சி, ஆண்டுக்கு இரு ஆடைகள், படுக்கப் போர்வையுமில்லை. வட அமெரிக்கா வின் தெற்கத்தைய மாநிலங் களின் வேளாண் பண்ணை களில் இந்தக் கொடுமை, ஆனால் வட மாநிலங்களில் இக்கொடுமை குறைவு; சட்டமோ எங்கும் ஒன்றுதான்.

வெள்ளை ஆண்டானும் கறுப்பு அடிமைப் பெண்ணும் பாலுறவு கொள்ளப் பிறந்தவர் பிரடெரிக்கு. மிகச் சிறு வயதிலேயே தாயைப் பிரிந்தவர், தந்தையைத் தெரியாதவர், வளர்ப்புப் பாட்டியுடன் வளர்ந்தவர். அடிமைக் கொட்டிலுக்குள் நடந்த அத்தனை அநியாயங்களுக்கும் சாட்சி. இளைஞனாகும் முன்பே பலமுறை கசையடி வாங்கி முதுகுத் தோலுரிந்தவர், உருட்டுக் கட்டை அடியில் இவரது மண்டை பிளந்தது, இடது கண் தேய்ந்தது, மாட்டிறைச்சித் துண்டால் கண்ணுக்கு மருத்துவம் செய்தவர்.

பண்ணையிலிருந்து மாற்றலாகி நகரக் குடும்பத்துக்கு அடிமையான விடலைப் பருவத்தில் களவாக எழுத்துகளை அறிந்தார், எழுதப் பழகினார், செய்தி இதழ்களைப் படித்தார், நூல்களைப் படித்தார், கிறித்தவ தத்துவத்தைப் படிக்க முயன்றார். அடிமை வாழ்வை வெறுத்தார், விடுதலை பெற்ற மனிதனாக வாழ முயன்றார், நண்பர்களுடன் தப்ப முயன்று கைதானார், சிறையிருந்தார், பின்னர் தன்னந் தனியாகத் தப்பியோடி தெற்கத்தைய மாநிலங்களிலிருந்து நியூயார்க் வந்தார். அங்கும் அவருக்குச் சோதனைகள்.

பண்ணையில் இருந்த நாள்களில் காதலித்த கறுப்பினப் பெண்ணை நியூயார்க்குக்கு வரவழைத்துத் திருமணம் செய்து கொண்டார். ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். நீண்ட காலம் இல்லறம் நடத்திய அவர், பிற்காலத்தில் நோயுற்ற மனைவி இறந்ததும் வெள்ளைக்காரப் பெண்ணை மணந்தார். சோதனைகளை மீறி, தன்னையொத்த விடுதலை வேட்கை யாளருடன் சேர்ந்தார், நிறைய வாசித்தார், சிறந்த பேச்சாளரானார், நிறைய எழுதினார், “நோர்த் ஸ்ரார்” இதழைத் தானே நடத்தினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆபிரகாம் லிங்கனின் வெற்றிக்காக உழைத்தார். அடிமைகள் விடுதலை அறிக்கை வெளியாவதில் ஆபிரகாம் லிங்கனுக்கு உதவினார் -250 ஆண்டு கால அடிமைச் சட்டங்களைத் தகர்த்தெறிவதில் சக போராளிகளுடன் இணைந்த பிரடெரிக்கு டக்கிளசுவின் பங்களிப்பைப் பல நூல்கள் எழுதின, பாராட்டின.

கறுப்பின மகக்ள் விடுதலை பெற்றது மட்டுமல்ல, வாக்குரிமை பெற்றனர், படையணிகளில் இணைந்தனர். இந்தப் போராளி, தனது இளமைக்கால அநுபவங்களை நூலாக்கினார். அந்த நூலே ஓர் அடிமையின் வரலாறு என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. சூத்திரதாரி மொழிபெயர்த்துள்ளார். தமிழினி வெளியிட்டுள்ளனர். இந்த நூலைத் தமிழில் வெளியிட ஊக்குவித்தவர் திலீப்குமார்.

தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று. திண்ணியத்தில் மலத்தை ஊட்டிய, தஞ்சாவுரருகே சிறுநீரை ஊட்டிய, சில பகுதிகளில் குவளைகள் இரண்டைக் கடையில் தனித்தனி வைத்திருக்கிற தமிழகத்திலும், கோயிலுக்குள் வழிபடப் புகமுடியா மக்கள் இன்னமும் வாழும் ஈழத்திலும் இந்த நூல் அத்தகைய கொடுமையாளரின் கண்களைத் திறக்கக்கூடும். பிறப்பொக்கும் என வள்ளுவர் சொன்னதைக் கேட்காதவரின் இரத்தமும் உறையும் நிகழ்வுகளை பிரடெரிக்கு இந்த நூலில் விவரித்துள்ளார். மனிதரின் மிகக் கேவலமான இயல்புகளின் வெளிப்பாடுகளை அமெரிக்காவில் 150 ஆண்டுகளின் முன்னர் சட்டத்தின் துணை கொண்டு நிகழ்த்திய வரலாறு, வருணாசிரம நெறிகளுக்கு அப்பாற்பட்டதல்ல.

நிற(வருண)பேதத்தின் கொடுமைகளைப் பல்லாயிரமாண்டுகளாக அநுபவித்து வரும் தெற்காசிய மக்கள், வட அமெரிக்காவில் 250 ஆண்டுகள் நடந்த கொடுமைக்கு முடிவு கட்டியதை எடுத்துக்காட்டாக்க வேண்டும். இந்த நூல் அதற்கு உதவும். ஆங்கில வாசகரை நோக்கிக் கடந்த நூற்றாண்டில் எழுதிய நூல். விரைந்து படிக்கக் கூடியதாகத் தமிழ் நடை அமைந்து, சிறு சிறு பத்திகளாக வாசித்துப் பழகி வரும் இக்காலத் தமிழ் வலிபெயர்ப்பில், வாக்கிய மொழியியலில், உரை நடையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். மணிப்பிரவாளத்தைத் தூக்கி எறிந்த தமிழர், தமிங்கலத்தைத் தூக்கி எறிவதில் காலத்தை விரயமாக்கில் வளர்ச்சியில் பின் தங்குவர். மணிப்பிரவாளமும் தமிங்கலமும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகள். மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்க மாநில அரசுகளுக்கு அடித்தளமில்லை. அனைத்துலகையும் ஆங்கிலேய வெள்ளையரின் மேலாதிக்கத்துள் கொண்டுவருவதற்கு இன்றைய உலகமயமாக்கல் போர்வையாகிறது. இந்த நூல் அந்தப் பின்னணியைத் தெளிவாக்குகிறது.

விமர்சகர் : ஐ.நா. அமைப்பின் சார்பாக 23 அரசுகளுக்கு ஆலோசகராக இருந்தவர்.

 
ஓர் அடிமையின் வரலாறு
பிரடெரிக்கு டக்கிளசு
தமிழினி வெளியீடு
டி.டி.கே.சாலை, சென்னை -18.
176 பக்கங்கள், ரூ.50
Pin It