பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 1872 முதல் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இக்கணக்கெடுப்பில் 19 கேள்விகள் கேட்கப்பட்டு, 35 வகை தகவல்கள் பெறப்படுகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் பதிவேடும் தயாரிக்கப்பட உள்ளது. இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்ட அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட உள்ளது.

இக்கணக்கெடுப்புடன் சாதி வாரியான விவரங்களையும் திரட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எதிர்க் கட்சிகள் முன் வைக்கப்பட்டது. இந்தியாவில் 1931-ஆம் ஆண்டு வரை சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு நிறுத்தப்பட்டு விட்டது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்போது முன்னேறிய வகுப்புகள் இடைஞ்சல் தரும் விதமாக 1931-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு சலுகைகள் வழங்கக் கூடாது என்று பலத்த குரல் எழுப்பும்.

மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்தும் போதும் இதே நிலைதான் ஏற்பட்டது. பலத்த போராட்டத்திற்குப் பிறகு தான் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் அமுல்படுத்தப்பட்டன. அதன் காரணமாகத்தான் எதிர்க் கட்சிகள் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. ஆளுங்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக வசம் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தபோது அக்கட்சிகளில் இருந்த உயர்சாதி தலைவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்ட வண்ணம் இருந்தனர்.

பாஜகவின் பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் சொன்ன கருத்துகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.ம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. பாஜகவின் மூத்த தலைவர்கள் சாதிவாரியான கணக்கெடுப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்று கூறி வந்தனர். இந்தப் பிரச்சினை கட்சிக்குள்ளேயே பிரச்சினையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜகவின் மக்களைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை பாஜக அரசு ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சாதி வாரி கணக்கெடுப்பிற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் ஆதரவு தெரிவித்திருப்பது பாஜகவிற்குள் பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் கை ஓங்குவதையே காட்டுகிறது.

- அபு சுபஹான்

Pin It