இந்த ஆண்டு ஏப்ரல் 5ம் நாளன்று இரவு சுமார் 10 மணியிருக்கும். தொலைபேசி அலறியது. நான் எடுத்துப் பேசியபோது மறுமுனையில் தோழர் சந்திரசேகரன் என்னிடம் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அவர் தனது உரையாடலில் முல்லைத்தீவில் லட்சக்கணக்கான மக்கள் படும் துயரங்கள் பற்றியும் போரில் நூற்றுக்கணக்கான புலிகள் சொல்லப் பட்டது குறித்தும் தனது மனவேதனைகளை கொட்டினார். தமிழகத்தில் புரட்சிகர இயக்கங்களும் தேசிய இன விடுதலைக்கு குரல்கொடுக்கும் இயக்கங்களும் ஒன்றுபட்டு ஏதேனும் செய்யவேண்டும் என மனக்குமுறலுடன் கூறினார். ஒன்றுபட்ட புரட்சிகரக் கட்சி ஒன்று இல்லா விட்டால் புரட்சியை சாதிக்க முடியாது என்று உறுதிபடக் கூறினார். அதற்கு நாமெல்லாம் முயற்சி எடுக்க வேண்டு மெனவும் வற்புறுத்தினார்.

ஏப்ரல் 7ஆம் நாள் அதிகாலையில் மீண்டும் தொலைபேசி அலறியது. தோழர்கள் சந்திரசேகரன் மாரடைப்பால் மாண்ட செய்தியை தெரிவித்தனர். நான் சில நிமிடங்கள் செயலற்று அதிர்ந்து போனேன். ஈழப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தின் இழப்புகளால் ஏற்பட்ட மனக்குமுறல் அவரின் இதயத் துடிப்பை நிறுத்தி விட்டது.

மரணம் என்பது சாதாரண நிகழ்வுதான் - இயற்கையின் நியதிதான் என்றாலும் சிலரின் மறைவுகள் - பிரிவுகள் நம்முடைய உணர்வுகளில் ஆழமான சோக முத்திரைகளை பதிக்கத்தான் செய்கிறது. அப்படித்தான் அவரது மறைவும்.

தோழர் சந்திரசேகரன் மயிலாடுதுறைக்கு அருகில் ஒரு கிராமத்தில் ஓரளவு வசதியுள்ள நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாயார் ஒரு ஆசிரியராவார். சந்திர சேகரன் தனது படிப்பிலோ படுசுட்டி. ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரிப் படிப்புவரை முதல் மாணவராகவே திகழ்ந்தார். கல்வியில் அபாரத் திறமையுடன் விளங்கிய அவர் எதிர்காலத்தில் ஒரு மிகப் பெரிய அரசு அதிகாரியாக ஆவார் என்பதே அவரது குடும்பத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் வரலாற்றுச் சக்கரத்தின் சுழற்சி அவரை வேறுதிசையில் கொண்டு சென்று விட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு அப்பல்கலைக் கழகத்தில் மார்க்சிய - லெனினியக் கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பி வந்தவரும் மாணவர்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தவரு மான தோழர் கணேசனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவரால் தோழர் சந்திரசேகரன் மார்க்சிய - லெனினிய இயக்கத்தை நோக்கி கவர்ந்திழுக்கப்படுகிறார்.

இதற்கிடையில் பட்டப்படிப்பையும் குடும்பத்தையும் துறந்து தலைமறைவாகி தன்னை புரட்சிகரப் பணிக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர் கணேசன் பெண்ணாடத்தில் எதிர்பாராது நடந்த வெடிவிபத்தில் தோழர்கள் காணியப்பன், சர்ச்சில் ஆகியோ ருடன் உயிரிழந்து புரட்சித் தியாகி யானார்.

கணேசனின் மறைவு அவருள் மேலும் புரட்சித் தீயை கனன்றெழச் செய்தது. புரட்சித் தலைவர் சாருவின் அழைப்பை ஏற்று படிப்பைத் துறந்து சொந்தங்களையும் பிரிந்து புரட்சிக்குத் தங்களை அர்ப்பணித்த பலரைப் போன்றே அவரும் படிப்பைத் துறந்து தலைமறைவாகி புரட்சிகரப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அப்போதைய புரட்சிகர இயக்கத்தின் வழியான அழித்தொழிப்பு வழியை தமிழகத்தில் நடை முறைப் படுத்திய புரட்சித் தோழர் தமிழரசனுடன் கரங்கோர்த்து பெண்ணாடம், ஓரத்துhர் ஆகிய பகுதிகளில் உயிருக்கு அஞ்சாது அழித்தொழிப்பு வழியை நடைமுறைப் படுத்தினார். கட்சியின் மீது கடும் அடக்குமுறை தலைவிரித் தாடிய அந்த நேரத்தில் உளவுப் பிரிவு ஆய்வாளர் ராஜாராமன் என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

அப்போது நீதிமன்றப் புறக்கணிப்பு என்பதே கட்சியின் நடைமுறையாக இருந்தது. நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்போது நீதிபதியின் வினாக்களுக்கு விடையளிக்க மறுப்பதும் புரட்சி முழக்கங்களை எழுப்புவதும் புரட்சிப் பாடல்களை முழங்குவதுமே நீதி மன்றப் புறக்கணிப்பின் நடைமுறையாக இருந்தது. இவ்வாறு நீதிமன்றத்தில் அதிரச் செய்த பாடல்கள் பலவற்றை தோழர் சந்திர சேகரன் எழுதியுள்ளார். இதுபற்றிய நினைவை அவருடன் அப்போது துhக்கு தண்டனைக் கைதியாகச் சிறையில் இருந்த தோழர் தனது “சமூக நீதி தமிழ்தேசம்” என்ற இதழில் வருமாறு பதிவு செய்கிறார்.

“இந்த முயற்சியில் தொடர்ச்சியாக நெய்வேலித் தோழர்களும் சில புதிய பாடல்களை எழுதி கடலூர் நீதிமன்றத்தில் பாடினார்கள் என்று தெரிந்துகொண்டோம். இவற்றில் பெரும்பாலானவற்றை-அநேகமாக அனைத் தையும் - எழுதியவர் தோழர் சந்திரசேகர். இந்தப் பாடல் களில் ஒன்று “ஜன கண மன” மெட்டில் அமைந்த ஒரு பாடல் - ‘பசி பஞ்சம் பட்டினி இதுதான் இந்தியா’ என்று தொடங்கியதாக நினைவு. இந்தப் பாடலைக் குற்றவாளிக் கூண்டில் நின்று தோழர்கள் பாடியபோது காவற்துறை யினர் தேசிய கீதம் பாடப்படுவதாக நினைத்து விரைத்து நின்றனராம்”.

சிறையில் இருந்தபோது தோழர்கள் கலியபெருமாள் உட்பட மற்றுமுள்ள தோழர்களோடு இணைந்து சிறைக்கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட் டங்களில் தனக்கே உரிய மாவீரத்துடன் கலந்து கொண்டார். சிறைச்சாலை அதிகாரவர்க்கம் ஆணவ வெறியுடன் மிளகாய் பொடியைத் துhவியும், கொதிநீரைக் கொட்டியும், போராடிய புரட்சியாளனைக் கொடுமைப் படுத்தியது. இக்கொடுமைகளுக்கெல்லாம் அஞ்சாது ஆடாது அசையாது நெஞ்சு காட்டியவர் தோழர் சந்திரசேகரன்.

1979ஆம் ஆண்டு சேலம் சிறையில் இருந்தபோது அழித்தொழிப்பு மட்டுமே ஒரே போராட்ட வடிவம் என்பதிலிருந்து மாற்றமடைந்து மக்கள் திரள் போராட்டத் துடன் கூடிய அழித்தொழிப்பு என்றவாறு தமிழரசன், தமிழ்வாணன் ஆகியோரின் தலைமையிலான கூட்டக் குழுவின் அரசியல் வழியை தோழர் சந்திரசேகரன் ஏற்றுக் கொண்டார்.

1979இல் விடுதலை ஆன பின்னர் கூட்டக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அவ்வமைப்பில் முழுநேரப் புரட்சி யாளராகப் பணியாற்றினார்.

பின்னர் கூட்டக்குழு ஆந்திர மாநிலத்திலுள்ள கொண்ட பள்ளி சீதாராமய்யா தலைமையிலான மைய அமைப்புக் குழுவுடன் இணைந்து மக்கள் யுத்தக் கட்சியாக மாறிய பின்னர், அக்கட்சியின் முழுநேரப் புரட்சியாளராக களப்பணியாற்றிய அவர் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் மக்கள்யுத்தக் கட்சியை வளர்த் தெடுக்கும் பணியில் தன்னை முற்றாக ஈடுபடுத்திக் கொண்டார். முற்போக்கு இளைஞரணி, முற்போக்கு மாணவர் சங்கம் ஆகியவற்றை அன்றைய கட்டத்தில் உயிரோட்டத்துடன் செயல்பட வைத்ததில் இவரது பங்கு அதிகம்.

அன்றைய கட்டத்தில் தமிழக மக்கள் யுத்தக் கட்சியின் தலைமைக் குழுவில் ஏ.எம். கோதண்டராமனுக்கு அடுத்த நிலையில் தத்துவார்த்த தலைமை வழங்கும் பாத்திரத்தை அவர் வகித்தார். ஓயாத வாசிப்புப் பழக்கம் கொண்ட அவர் மார்க்சிய - லெனினிய - மாவோவின் சித்தாந்தங்களை ஆழமாக கற்றறிந்தவராக விளங்கினார். கட்சியின் ஏடான சமரன், புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் இதழான செந்தாரகை ஆகியவற்றின் ஆசிரியர் குழுவிற்கு சிறப்பாக வழிகாட்டுதலை வழங்கினார்.

அகில இந்திய புரட்சிப் பண்பாட்டுக் கழகத்தின் (AILRC) அங்கமாக இருந்த தமிழகப் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் மாநிலக் குழுவில் கோ. கேசவன், அ. மார்க்ஸ், கோ. சடை, பழமலை, கல்யாணி போன்ற பேராசிரியப் பெருமக்களும் மற்றும் என்னையும் உள்ளிட்டு நீண்ட பயணம் சுந்தரம் போன்றோரும் இடம் பெற்றிருந்தோம். இக்குழுவில் நடைபெற்ற ஆழமான விவாதங்களுக்கு விளக்கங்களை தந்து வழிநடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். இதற்கு சித்தாந்த வளமையும், தலைமைக்கான ஆளுமையும் அவசியமாகும். இத்தகைய ஆற்றல்களைப் பெற்றிருந்த தோழர் சந்திரசேகரன் ஐயங்களை அகற்றி, எவர் மனமும் புண்படாமல் கருத் தொற்றுமையை ஏற்படுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் தலைமறைவாக இருந்த நேரத்தில் கலைக்குழுவில் பணியாற்றிய சரோஜா என்ற பெண் தோழரை வாழ்க்கை இணையாக ஏற்றுக் கொண்டார். அவரது திருமணம் ஒரு சாதி மறுப்புத் திருமணமாகும். அவர் தனது ஒரே மகனுக்கு புரட்சித்தியாகி கணேசனின் பெயரையே சூட்டியிருந்தார். அவரது மகன் கணேசன் ஒரு பொறியியல் பட்டதாரி.

இத்தகைய அனைத்து ஆற்றல்களையும் பெற்ற அவர், புரட்சிகர இயக்கத்திற்கு தன் இளமையை முற்றாக அர்ப்பணித்த அவர், அமைப்பிலிருந்து விலக நேரிட்டது வரலாற்றுச் சோகமாகும்.

அமைப்பிலிருந்து விலகிய பின்னரும் அவரது அரசியல் ஆர்வம் குறையவில்லை. தோழர்களைச் சந்திப்பதிலும் அரசியல் விவாதங்களை நடத்துவதிலும் ஆர்வமுடையவ ராகவே இருந் தார். வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்ட அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்ற பெண்ணாடத்தில் ஒரு கோயிலில் கணக்கெழுதிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டாலும் அவரது சிந்தனை எப்போதும் சமுதாய மாற்றத்திற்கான புரட்சியைப் பற்றியதாகவே இருந்தது. அவர் சென்னை வரும்போ தெல்லாம் எனது வீட்டில்தான் தங்குவார். வந்துவிட்டால் இரவு முழுவதும் புரட்சிகர அரசியலைப்பற்றிய விவாதம் தான் நடக்கும். கடைசிக் கட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா - லெ) செங்கொடியில் மாற்றுப் பெயரில் கமுக்கமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் அந்த அமைப்பிலும் நிறைவின்றி வெளியேறினார். வெளியேறிய பின்னரும் அவரது ஆர்வம் குறையவில்லை.

நீண்டகாலம் தலைமறைவாக இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள சாமிநாதன் என்ற தாஸ், சுந்தர விநாயகம் போன்ற தோழர்களுடனும் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவருடனும் இணைந்து தமிழ் ஈழப்போராட்டத்தில் பெரும் அக்கறை காட்டிய தோடு இறுதியாக ஒரு துண்டுப்பிரசுரத்தையும் வெளியிட்டார். அவர் இறுதிக்கால வேட்கையாக எனக்குத் தெரியப்படுத்தியது என்னவெனில் புரட்சியாளர் ஐக்கியமும் ஒன்றுபட்ட புரட்சிகரக் கட்சியுமே ஆகும். தனிமனித ஆர்வங்களால் இத்தகைய ஒற்றுமையை உருவாக்கிவிட முடியாது என்பதையும் அவர் புரிந்தே வைத்திருந்தார். அதற்கான பௌதிக சூழலை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்பதே அவரது இறுதி விருப்பம். புரட்சியை விரும்பும் நாம், அந்த திசை வழியில் பயணிக்க சந்திரசேகர் பெயரால் சபதமேற்போம்.

                                    - கோவை ஈஸ்வரன்

Pin It