ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளி லிருந்து 14 கதைகளைத் தெரிவு செய்து, இத்தொகுப்பினை மொழியாக்கமாகத் தந்துள்ளார் இரா.கதைப்பித்தன். சிறுகதை ஆசிரியராக விளங்கும் கதைப்பித்தனின் இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இது. தமிழ்ச் சிறுகதையாளர் ஒருவர், இந்திய ஆங்கிலம், மலையாளம், ஒடியா, அஸ்ஸாமி, இந்தி, வங்காளி மொழிகளிலிருந்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, இந்திய அளவில் சிறுகதையின் போக்கும் வளர்ச்சியும் எப்படி உள்ளது என்று ஒரு பார்வையை வாசகன் உருவாக்கிக் கொள்ளும் வகையில் இத்தொகுப்பினை அளித்திருப்பது பாராட்டத்தக்கது.

kadaisi punnagaiமேல் மத்தியதர வர்க்கப் பெண் ஆகிய ஷீலாவின், கணவன் இறந்தபின், தனிமையை எதிர்கொள்ள இயலாது தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறாள். இவ்வளவுக்கும் வேறு பிரச்சினைகள் இல்லை. பிள்ளைகள் காட்டும் அக்கறையும் பாசமும் குறைந்து வருவது ஒன்றுதான் குறை. அதற்குத் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போக வேண்டுமா? அந்த அளவு நெருக்கடியும் மன அழுத்தமும் இருக்கிறது என்பதை உணர்த்திவிடுகிறார் ‘கடைசிப் புன்னகை’ என்னும் ஆங்கிலச் சிறுகதையின் ஆசிரியர் மீனு மெஹ்ராத்ரா.

உலகெல்லாம் சுற்றி வந்தும் உலகியல் வாழ்வில் ஒத்துப்போக முடியாத சுகுமாரன்நாயர், நூதனமான வியாபாரம் செய்யத் தொடங்குகிறார். விதவித மான கனவுகளை வரவழைக்கும் மாத்திரைகளை விற்பது என்று. சில மணி நேரங்களுக்கேனும் மனிதன் ஆறுதலடையட்டும் என்று அப்போது இந்து - முஸ்லீம் கலவரம் ஏற்பட்டு, ஒரு முஸ்லீமை அடித்துப் போட்டு விடுகிறார்கள். அதற்கென்ன நிவாரணம் என உன்னி ஆசான் கேட்கும்போது வாயடைத்துப்போகிறான் சுகுமாரன் நாயர். இது ‘மந்திரக்கடை’ என்னும் மலையாளக் கதையில்.

காஷ்மீரில் சவக்குழி தோண்டுவதை பாரம் பரியத் தொழிலாகக் கொண்டுள்ள ஒரு முஸ்லீம், தன் மகன் ஹமீது படித்துத் தகுதியிருந்தும், வேலை கிடைக்காத சூழலில், பாகிஸ்தான் சென்று தீவிர வாதியாகி, மரணமடைவதை எதிர்கொள்ள வேண்டி யுள்ள அசாதாரணநிலையினை காஷ்மீரின் சவக் குழி தோண்டுபவன்’ கதையில் விவரிக்கிறார் ஜஸ்வீந்தர் ஷர்மா.

நிராதவரான நிலைக்கு ஒரு யுவதி ஆட் படுகையில் அவளை இச்சமூகம் பகடைக் காயாக்கி உருட்டிவிடவே செய்கிறது. ஜானு என்னும் அபலைப் பெண்ணை இளைஞர்கள் சீண்டி அவமானப் படுத்துவது மட்டுமின்றி, தாயே, எப்படியாவது யாராவது ஒருவனிடம் தள்ளி, தன்பொறுப்பைத் தட்டிக் கழிக்கப்பார்ப்பதை சி.ஜி.பை என்பவர் இந்திய- ஆங்கிலக் கதை ‘சிவப்பு மற்றும் மஞ்சள் வளையல்கள்’ கதையில் எடுத்துரைக்கிறார். ஏறக் குறைய அவள் பைத்தியக்காரி ஆகி விடுகிறாள் என்றே சொல்லலாம்.

‘புலியும் பெண்ணும்’ என்னும் ஒடியக் கதை வாய்மொழிக்கதையினை மறு எழுத்தாக்கி, அதி காரம் கொண்டது ஆணாகிலும் சரி, புலியாகிலும் சரி, பெண் அடங்கிப் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நிலையில், தந்திரத்தின் மூலமே தப்பமுடிவதைச் சொல்கிறது.

பைத்தியக்காரியாக்கப்பட்ட ஒருத்திக்குப் பிறந்த பெண்ணும் பைத்தியமாக, இரயில் நிலைய நடைமேடையிலேயே இருந்து தவிக்கையில், ஒரு இரயில்வே பணியாளர் பரிவுணர்வுடன் ஆதர வளித்தாலும், அவளால் விடுபட முடியாத அவ மானத்தைப் பதிவு செய்கிறார் ரவிகிரன் சாஸ்திரி என்னும் இந்தி எழுத்தாளர்.

இத்தகைய கதைகளைத் தொகுத்துப் பார்க் கையில், இந்தியச் சூழலில் தனிமனித வாழ்வின் வெறுமை மனிதர்களைத் துரத்தியடிக்கிறது; பைத்திய மாக்குகிறது; வாழ்வை மாய்த்துக் கொள்ள வைக் கிறது; தப்பித்தலை மேற்கொள்ள வைக்கிறது.

ஒரு பக்கம் வறுமையும் நெருக்கடியும் மனிதர்களை உருக்குலைத்தாலும், சமூக அமைப்பும் மேலாதிக்கமும் தான் மிகுதியும் காரணமாயிருக் கின்றன. சிறுபான்மையினர் என்பதால் இஸ்லா மியர் வாழ்க்கை அவலங்களைச் சகித்துக் கொள்ள முடியாது தீவிரவாத அரசியலுக்கு ஆளாகின்றனர் அல்லது அடிபட்டு இறக்கின்றனர்.

‘ஒன்று, இரண்டு, மூன்று’ மற்றும் ‘யானை, சுண்டெலி, திமிங்கிலம்’ என்னும் கதைகள் வாய் மொழிக் கதைகளை மறுஎழுத்தாக்கமாக்க முற்படு கின்றன.

‘வேண்டாத குழந்தை’ கதையில், தம் உலகியல் சௌகர்யங்களுக்காக, முன்னேற்றத்திற்காக, கருக்கொண்ட குழந்தையைக் கருவில் கலைக்க முற்படும் / விரும்பும் தம்பதியினர் காட்டப்படுகின்றனர். இதனைப் புதிய கதையாடலில் கூர்மை யான அங்கதத்துடன் விவரிக்கிறார் கே.பி. ராமுண்ணி என்னும் மலையாள இலக்கியவாதி, நகர சுத்தித் தொழிலாளியும் திருடனும் ஆன தத்தா என்பவன், சந்தர்ப்ப சூழலால் சாமியார் ஆக்கப்பட்டு, கவலை களைப் போக்கி சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு போக்கிரியால் வஞ்சிக்கப்படும்போது குறைந்த பட்சம், அறியாமை நிரம்பியுள்ள கிராமத் தினரிடம் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று உறுதி பூணுவதை எடுத்துரைக்கிறது ‘ஒரு துறவி பிறக்கிறார்’ சிறுகதை.

இத்தொகுப்பிலுள்ள தலைசிறந்த கதை என்று ‘மைனா’வைக் குறிப்பிடலாம். ஒரு நிறுவனத்தின் மேலதிகாரியான சத்ய பிரதா பாபு அலுவலக வேலை, வேலை முடிந்தால் சீட்டாட்டம், அதன் பின் வீட்டுக்கு வருவது என்று ஆண்டுகளைக் கழித்துவிட்டவர். ஓய்வுபெற ஐந்து ஆண்டுகளே உள்ள நிலையில் குழந்தையும் இல்லாது தனிமையில் பொழுதைக் கழிக்க முடியாது அவஸ்தைப்படும் அவர் மனைவி, நாய் வளர்க்க ஆசைப்பட்டால் பாபு இடந்தரமாட்டார்.

ஒன்று விட்ட தம்பி சுபாஷினைப் பராமரித்தாலும், சொல்படி கேட்க வில்லை என்றால் துரத்திவிடத் தயங்கமாட்டார். இந்நிலையில் எப்படியோ வற்புறுத்தி, அவர் மனைவி வாங்கி வளர்க்கும் மைனாவே அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களிடம் பரிவு காட்டுமாறும் சூழலில் அக்கறை கொள்ளுமாறும் செய்கிறது. சுபாஸும் மாறிவிடுகிறான். மனிதன் இயல்பாய் இல்லையென்றால், ஒரு துரும்பையும் அசைக்க முடியாது போவதுடன், வாழ்வையும் நரகமாக்கிக் கொள்வது இக்கதையில் சொல்லப்படுகிறது.

மைனாவைத் தன்னிடமே சிறைப் பறவையாக வைத்துக்கொள்வது சரியல்ல என்று உணரும் பாபுவின் மனைவி உமாதேவி, ஒரு நாள் கூண்டைத் திறக்கையில் இப்படிக் கூறுகிறாள்:

“துணிச்சலுடைய என் மீட்டுவே நீ, மிகவும் பெரியவன். முடியாத காரியத்தை மாற்றியிருக் கிறாய். இந்த வீட்டை சொர்க்கமாக மாற்றி யிருக்கிறாய். இந்தவீடு முழுவதும் நீதான் நிறைந் திருக்கிறாய். எனக்குக் குழந்தை இல்லையென்று யார் சொல்கிறார்கள்? நீதான் எனது சொந்தக் குழந்தை.”

‘மொழியாக்கம் அந்நியமொழியால் தன் னுடைய மொழியை விரிவாக்கவும் ஆழமாக்கவும் செய்யும்’ என்பார் பான்விட்ஸ். அத்துடன் பிற பண்பாடுகளில் உள்ள சீரிய தன்மைகளையும் தன்னிலிருந்து வித்தியாசப்படும் அம்சங்களையும் கவனித்து உள்வாங்கிக் கொள்ள வைக்கும். மொழி மூலமான இந்நடவடிக்கை மொழியின் வளத்தைத் தூண்டி, பண்பாட்டை வளமாக்குவதாக விரிவு கொள்ளும்.

இந்த வகையிலான ஒரு முயற்சியாகக் கதைப் பித்தனின் இத்தொகுப்பு இருப்பதை அறிய முடிகிறது. நடுத்தரவர்க்கப் பிரச்சினைகள் தொடர்பாகக் குறைந்த கதைகளும், பெண் சார்ந்தும் சிறுபான்மையினர் சார்ந்தும் விளிம்புநிலை சார்ந்தும் அதிகக் கதை களும் இடம் பெற்றிருப்பது நல்ல விஷயம். இக்காலகட்டத்தில் மேலதிகக் கவனம் கோரும் தளத்தில் இவர் இயங்குவது சரியான செயலாகும்.

கடைசிப் புன்னகை

இரா.கதைப்பித்தன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை : ` 100.00

Pin It