மானாமதுரை நகரம் பிருந்தாவனம் தெருவில் இருக்கிற 14ம் நம்பர் “வேலு நாச்சியார் இல்லம்” பேசுகிறேன். “என்ன வீடு பேசுகிறது” என்று வியப்படைகிறீர்களா...? ஆறு தன் வரலாறு கூறுவதாக... அந்தக்கால ஆரம்பப் பள்ளி தமிழ் பாடத்தில் படித்திருப்பீர்களே...! ஆறு பேசும் போது... ஏன் இந்த வீடு பேசக்கூடாது...? முப்பத்தோறு வருடங்களுக்கு முன் இருந்த நிலமை போல் இருந்தால்... நான் ஏன் பேசப் போகிறேன்...? அப்போது எனது வாசல் கதவுகளைப் பூட்டுப் போட்டுப் பூட்டியதே இல்லை. இன்று...! வருடத்தில் முக்கால் வாசி தினங்கள் மூடியே வைக்கப்படும் போது... என்னிடம் முணுமுணுப்புக்கள் வராமல் இருக்குமா...?.

“எப்படி இருந்த நான்... இப்படி ஆகிட்டேன்” பிரபலமான விவேக்கின் வசனம் யாருக்குப் பொறுந்துகிறதோ... இல்லையோ... எனக்கு நூறு சதவிகிதம் பொருந்துகிறது.

1980-ம் ஆண்டு என்னை விற்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. என்னுள் வசித்த அய்யருக்கும் மாமிக்கும் வயதாகிவிட்டதால்... மகனோடு போய் வாழ சென்னை போகிறார்கள். அதனால் என்னை விற்க முடிவு செய்து விட்டார்கள். யார் வாங்கப் போகிறார்களோ தெரியவில்லை. இதுவரை பட்ட சோம்பு வாடை கூட நுகராத விஜிடேரியனாக இருந்து விட்டேன். இனிமேல் எப்படியோ...? இப்படியே தொடர்ந்தால்... இதமாக இருக்கும். வாங்கப் போகிற புண்ணியவானைப் பொறுத்தல்லவா... வாசனை சுவாசிப்புக்கள் அமையும்.

நல்ல வேளை வாங்கியவர் நான்விஜிடேரியன் இல்லை. சுத்தமான சைவர். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஹெட்கிளார்க்காக இருப்பவர். வைகையாற்றின் அழகில் மயங்கி தனது பெயரையே வைகைவாணன் என்றாக்கிக் கொண்டவர். அப்போ தெல்லாம் வைகையாறு அசுத்தமானதாக இல்லை. ஊரின் குப்பைகளை தாங்கும் இடமாக... கழிவுநீர் வடிகாலாக இல்லை. சென்னை மெரினாவைப் போல்... இதமான இலவசக் காற்று ஆற்றுக்குள் போவோரின் மேனியைத் தழுவும். வைகைக்குள் இரு சக்கர வாகனங்களை இயக்க இயலாத வகையில் மணல் குவியல்கள் நிறைந்திருக்கும். தினமும் மாலை நேரங்களில் பொழுது போக்கப் போகும் ஜனக்கூட்டம் மிகுந்திருக்கும். இப்படிப்பட்ட ஆற்றங்கரையில் இருக்கும் என்னை அவருக்கும் அவரது குடும்பத் தாருக்கும் பிடித்துப் போயிற்று.

“பணம் கிடைக்கிறது என்பதற்காக குறுக்கு வழியில் சம்பாதித்தவரிடம் கொடுக்காமல்... நல்ல குடும்பத்தினரிடம் வீட்டை விற்று விட்டுப் போகிறேன்”- என்கிற மனநிறைவோடு..அய்யரும் மாமியும் பத்திரம் பதிந்து தந்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரிடம் வீட்டுச் சாவியை வழங்கி விடை பெற்றனர்.

என் மீது இருந்த சின்னச் சின்ன சிராய்ப்புக்களை சிமிண்ட் பூசி வெள்ளையடித்து... அழகுபடுத்தப் பட்டேன். வயதான தம்பதியர் வாழ்ந்ததால்... பராமரிப்பு அதிகமின்றிக் கிடந்த நான் இப்போது சற்று எடுப்பான தோற்றத்தில்... எல்லோரும் ஏறெடுத்துப் பார்க்கிற நிலமைக்கு உயர்ந்தேன்.

சுபயோக சுபதினம் ஒன்றில் பால் காய்ச்ச தேதி குறிக்கப்பட்டது. பால் காய்ச்சும் நிகழ்ச்சியன்று பத்துப்பேர் வந்தார்கள். தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று நினைத்தேன். மறுநாள்தான் தெரிந்தது பத்துப்பேர்களும் குடும்ப உறுப்பினர்கள்... எல்லோரும் இங்குதான் இருக்கப் போகிறவர்கள் என்பது. இதனை அறிந்து நான் அடைந்த ஆனந்தம் அளவிடற்கறியது. ஆள் நடமாட்டம் அதிகம் இருந்தால்... எனக்கு சந்தோஷந்தானே...! வெயில் காலங்களில்... தனியாய் நிற்கும் வேப்பமரத்திற்குக் கீழ் இளைப்பாறுதலுக்கும் வேப்பந் தோப்பிற்குள் இளைப்பாறுதலுக்கும் வேறு பாடு உண்டல்லவா..?

நிறையச் சாமான்கள் வந்து இறங்கின. அத்துடன் அதிக அளவில் புத்தகங்களும் வந்தன. எவ்வளவு வந்தால்தான் என்ன... எனது முகக்கண் பிருந்தாவனம் தெருவில் இருக்கிறது. நகக்கண் வைகையை ஒட்டி ஓடும் ரோட்டில் அல்லவா உள்ளது...? என்னுள்தான் எத்தனை அறைகள்... வாசலில் நுழைந்தவுடன் நீண்ட வராண்டா... அதனைத் தாண்டியவுடன் வலப்பக்கம் இரண்டு அறைகள்... அதையும் தாண்டி வந்தால்... நீண்ட முற்றம்... முற்றத்திற்கு வலது பக்கம் முதலில் பூஜையறை... அதையடுத்து சமயலறை... தொடர்ந்து... வலது பக்கம் ஒரு அறை... அதற்கடுத்து கிணற்றடி... அப்பறம்... குளியலறை... கழிப்பறை முதலியனவைகள். பத்துப்பேர்களும் விருப்பம்போல் அலைந்து திரியலாம்.

இந்த பத்து நபர்களுக்குள் உள்ள உறவு என்ன என்பது இரண்டு தினங்களுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது.

வைகைவாணன் என்ற இராமசாமி... தாலுகா அலுவலக தலைமை குமாஸ்தா, எவரிடமும் இயல் பாகப் பேசிப் பேசி நெகிழ வைப்பவர். புதிய நட்பை உருவாக்குவார். உருவான நட்பைப் பலப்படுத்திக் கொள்வார். மரபுக் கவிதை எழுதும் மனிதநேயர். வருவாய் துறையில் பணியாற்றுவதால்... வேலைப் பளு அதிகந்தான்... ஓய்வு கிடைக்கும் சொற்ப நேரத்தில் புத்தகம் படிக்க சில மணி நேரங்களைத் திருடிக் கொள்வார். இவரின் நட்பு வட்டத்தில் இலக்கிய ஆர்வலர்களுக்கு தனியானதொரு முக்கியத்துவம் உண்டு. வயது நாற்பதைத் தொட்டு நான்கு மாதங்களானாலும் முகத் தோற்றம் வயது முப்பத்தைத்துக்கு மேல் முன்னேற்ற வில்லை. இவர்தான் இந்தக் குடும்பத்தின் தூண்.

இந்தத் தூணின் துணைவியாகப்பட்டவள்... ...இராமனுக்கேற்ற சீதா தேவி மாதிரி இராமசாமிக் கேற்ற சீதாக் கல்யாணி. இவரின் இருபதாவது வயதில் இவரின் கரம் பற்றியவள். கரம் பிடித்த பிறகு மதுரை திருப்புவனம் திருப்பத்தூர் நாச்சியார்புரம் ஊர்களில் குடித்தனம் நடத்திவிட்டு அறுபத்தி எட்டாம் வருடம் வாக்கில்... இந்த வைகைக் கரைக்கு வந்தார்கள். வைகைக்கரை நகரமாம்... இந்த மானாமதுரை பிடித்துப் போனதால்... இங்கயே தங்கி விட்டார்கள். இவர்களுக்கு முத்தமிழாய் மூன்று பிள்ளைகள். மணிவேலன், தேன் மொழி, இரத்தினவல்லி என்று பெயரிட்டிருந்தனர். ஆம் ஆணொன்று... பெண்கள் இரண்டு. மகன் கல்லூரியில் காலெடுத்து வைத்த முதலாண்டு மாணவன். பெண்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் மாணவிகள். பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் நான்கு வயதுகள் வித்தியாசம் இருக்கலாம்.

அடுத்து இந்தக் குடும்பத்தூணைப் பெற்றவர்கள். வயது எழுபதுகளில் இருப்பவர்கள். வேலாயுதம்--நாச்சியார். இவர்களது பெயர்களை இணைத்துத்தான்... என்னை வாங்கியதும் எனக்கு “வேலு நாச்சியார் இல்லம்” என்கிற பெயரை வைத்து... முகப்பிலும் பெயரை பதித்து இருக்கிறார். வேலாயுதம் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கண்டிப்பான ஆசிரியர் எனப் பெயர் பெற்றவர். கண்பார்வைகள் சரி இல்லாத காரணத்தால்... வெளியில் எங்கும் போகாதவர். தேவராம் திருவாசகம் திருப்புகழ் வள்ளலார் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். அதிகாலை ஐந்தரைக்கே எழுந்து இந்தப் பக்தி இலக்கியப் பாடல்களை ராகமாய்ப் பாடத் தொடங்கி விடுவார்.

“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே”

சுந்தரரின் இந்தப் பாடலை அவர் உரத்துப் பாடும் பொழுது தெருவில் போவோர் நின்று நிதானித்து கேட்டு விட்டு நகர்வதை தினமும் காணமுடியும்.

கண்டிப்பான ஆசிரியராக இருந்து... பலருக்கும் ஏற்றிவிட்ட ஏணியாக கரை சேர்த்த தோணியாகத் திகழ்ந்த இவரின் மனைவி நாச்சியார் பள்ளிப் பக்கமே போகாதவள். ஆம். மழைக்குக் கூட பள்ளிப் பக்கம் ஒதுங்கியதில்லை. ஆனால் நாட்டுப்புற இலக்கியத்தில்... பி.எச்டி பண்ணியோர் அளவிற்கு பரந்த பட்டறிவுக்குச் சொந்தமானவள். சொலவடைகள் பழமொழிகள் சேர்க்காத பேச்சுக்களை அவளிடமிருந்து கேட்க முடியாது. தாலாட்டு ஒப்பாரி வகையறாக்கள் அவளுக்குத் தலைகீழ் பாடம். மனதில் பட்டதை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் வெள்ளந்தி மனது அவளுடையது. தவறெனப் பட்டதை தயக்கமின்றி தெரியப்படுத்தி விடுவாள்.

இனிமேல் சொல்லப் போகிற மூவர் இரக்கத்திற்கு உரியவர்கள். கண்ணீர் துளிகள். இந்த குடும்ப ரயிலில் கழற்றிவிட முடியாத... கழன்று போகத் தெரியாத கேரேஜ்கள். இந்த குடும்பத்தூணின் மூத்த சகோதரி சண்முக வடிவு... அவளது மகன் நாராயணன்... மகள் மங்கை... இளம் வயதில் கணவர் இறக்க தாய் தந்தையரிடம் தஞ்சம் அடைந்து... பிறந்த ஊரில் பிள்ளைகளுடன் பிழைப்பை நடத்தி... பெற்றவர்கள் தனயனிடம் வந்து சேரும் போது... அவர்களுடன் ஒட்டி வந்த வெட்டிவிட முடியாத ரத்த உறவுகள். இவர்களின் துயர மனதுகளை எப்படிச் சொல்வது...? “சொல் லொண்ணா துயரங்கள்” என்பார்களே... அப்படிப்பட்ட துயரங்களைத் தேக்கி வைத்துத் திரிபவர்கள்.

நாராயணன் வயது இருபத்தி ஐந்தைத் தொட்டு விட்டான். அவனது தங்கை மங்கை இவனுக்கு ஐந்து வயது இளையவள். நாராயணனுக்கு நிரந்தர வேலை வேண்டும். மங்கைக்கு சிறந்த இடத்தில் திருமணம் முடிக்க வேண்டும். நிரந்தர வேலை இல்லை என்றாலும் அவன் ஒரு நாளும் சும்மா இருந்ததில்லை. புகுமுக வகுப்பு முடித்ததோடு பத்திரம் எழுதினான். பிறகு பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் கிராமத் தபால்காரர் பணியில் சேர்ந்து... இன்று வரை பணி புரிகிறான். வார்த்தைகளை சிக்கனமாக செலவளிப்பதில் வல்லவன். வருடம் முழுவதும் அவன் பேசுவதை ஆர்ட் ஃபிலிம் சினிமா வசனம் மாதிரி ஓரிரு பக்கங்களில் அடக்கிவிடலாம். பேசாத சொல்லிற்கு நாம் எஜமான் பேசிய சொல் நமக்கு எஜமான் என்பார்களே... அதனை உணர்ந்து இவன் எஜமானாக இருப்பதையே விரும்பி விட்டான். மொத்தத்தில் அவன் இயக்குநர் மணி ரத்தினத்தின் மலிவுப் பதிப்பு.

காலம் மாறும். விடிவு விரைவில் பிறக்கும்... கடவுள் கைவிட மாட்டான்... இப்படி நம்பிக்கை இழையோட... இறைவன் மீது எல்லாப் பாரத்தையும் போட்டு விட்டு தாயும் மகளும் அவ்வப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவர். அவனுக்கோ அந்த கடவுள் நம்பிக்கையும் இல்லாததால் துயரமனநிலையை நிமிட நேரம் கூடத் துடைத்து எரியத் தெரியாமல் தவித்தான்.

காலம் மாறியது. குறிப்பிட்ட கால இடைவெளி களில் குறிக்கோள்கள் நிறைவேறின. மாறுவது ஒன்று தானே மாறாதது.

மங்கைக்கு திருமணம் முடிந்து திருச்சிக்குப் போனாள்.

நாராயணனுக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைத்து சென்னை பயணமானான்.

மணிவேலனுக்கு கல்லூரி முடித்த கையோடு கலெக்டர் ஆபிசில் வேலை கிடைத்தது.

குடும்பத்தூண் இராமசாமிக்குப் பதவி உயர்வு கிடைத்தது.

அறை நண்பர் முயற்சியில் நாராயணனுக்கு “பெண்” செட்டிலாகி கல்யாணம் முடிந்தது.

தாயை அழைத்துக் கொண்டு தலைநகரில் தனி குடித்தனம் கண்டான்.

“என்னுள்” வந்ததால் யோகம் என்றார்கள். ஆம் வீட்டுராசி வேகமாய் வேளை வந்துவிட்டது என்றனர்.

தொடர்ந்து இராமசாமியின் முதல் மகள் தேன்மொழி திருமதியாகி மதுரை போனாள்.

அடுத்த ஆண்டு மணிவேலனுக்கு மனைவி வந்தாள்.

இரண்டாவது மகள் இரத்தினவல்லிக்கு வியாழ நோக்கு வந்தது. திருமணமாகி அவளும் புகுந்த வீட்டுக்குப் பறப்பட்டாள்.

1995ஆம் வருடத்திய நிலவரப்படி பத்து நபர் களோடு பயணப்பட்ட இந்தக் குடும்ப ரயில் ஆறு பயணிகளோடு மட்டும் பயணத்தைத் தொடர்ந்தது. ஆம் தொண்ணூறு எண்பத்தியாறு வயதுகளில் மூன்றாண்டு இடைவெளிகளில்... வேலாயுதம் நாச்சியார் இறந்துவிட்டனர். இவர்கள் இழப்பை ஈடுசெய்யும் வகையில் மணிவேலனுக்கு வாரிசுகள் பிறந்தனர். இராம்குமார் சீதைப்பிரியா பெயர்களில் மழலையர் என்னுள் வலம் வந்தனர். எல்லோரையும் மகிழ்வித்தனர். என்னை விட்டு வெளியேறியோர் தமது பிள்ளைகளுடன் தாம் கரம் பிடித்த இணைகளோடு அவ்வப்போது வந்து கலகலப்பு கலந்த உற்சாகத்தை உருவாக்கினர். இந்தப் பல்கலைக்கழகம் இப்படியே பயணப் பட்டிருந்தால்... நன்றாக இருந்திருக்கும். நானும் இவ்வளவு தூரம் வேதனையில் புலம்பித் தவிக்க மாட்டேன். ஆம் பயணம் பாதை மாறிப் போயிற்று.

மணிவேலன் பணி நிமித்தம் பெரம்பலூர் இடம் பெயர... பங்குச் சந்தையில் விழுந்த சரிவு போல்... என்னுள் இருப்போர் இரண்டே நபராகிப் போனார்கள். பத்துப் பேர்களுடன் பயணித்தவர்களால்... இங்கு இரண்டு பேர்களாக இருக்க இயலவில்லை. பேரன் பேத்திகள் அவ்வப்போது நினைவுகளில் நிழலாட... இவர்களும் பெரம்பலூருக்குப் போய் அங்கொரு பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்து விட்டார்கள்.

இப்போது எனது நிலைமைதான் பரிதாபகரமானதாய் போயிற்று. தனிமை... தனிமை... இருட்டுக்குள் இருப்பு... என்றுமே பூட்டுப் போட்டு பூட்டப் படாத நான்... எந்தநேரமும் பூட்டப்பட்ட நிலையிலேயே காட்சி தருகிறேன். வருஷத்தில் இரண்டொரு முறைகள் திறக்கப்பட்டு வெளிச்சக் காற்று வருகிறது. இருபது... முப்பது தினங்களே ஆளரவங்களை அனுபவிக்கிறேன்.

அதன்பிறகு...

எப்போதும் சோர்வும்... துயரமும்... என்னுள் கிளர்ந்தெழுகிறது.

வாய்விட்டு அழவேண்டும் போல தோன்றுகிறது.

செய்வதறியாமல் திகைக்கிறேன்... திணறுகிறேன் என்று மாறுமோ எனது இந்த இருட்டு நிலை!

Pin It