tikav 250x250 ungalnoolagamஉலகமயச் சூழலின் விளைவால் நமது மரபான கைத்தொழில்கள் மெல்ல மெல்ல வழக்கிலிருந்து மறைந்து வருகின்றன. இதன் இழப்பு அவைசார்ந்த வழக்குச் சொற்களையும் வழக்கொழிந்து மறைத்து விடுகின்ற நிலையை ஏற்படுத்துகிறது. நம்மிடமுள்ள கைத்தொழில்கள் இழப்பால் எண்ணற்ற வளமையான தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்து போய்விட்டன. மொழியின் வளங்களுள் ஒன்றாகவிருக்கும் வழக்குச் சொற்களின் இழப்பு மொழிக்குப் பெரும் இழப்பாகவே மொழியியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

புதிய அறிவியல் வளர்ச்சிகளையும் அதனோடு இயைந்த மாற்றங்களையும் துணையாகக்கொண்டு நமது மொழியின் சொல்வளங்களைக் காப்பாற்றும் வழி முறைகள் என்ன என்பதை விரைந்து நாம் சிந்தித்தாக வேண்டும். நமது மரபு சார்ந்த தொழில்கள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உற்பத்தியில் ஈடுசெய்ய முடியாத நிலையைச் சந்தித்து நிற்கின்றன. இதனால் புதிய வளர்ச்சியைப் புறந்தள்ள முடியாத நிலையில் மரபான உற்பத்திச் சமூகம் வலுவான சிக்கலை எதிர் நோக்கியுள்ளது. உலகின் எல்லா தேசிய இனங்களும் இந்தச் சிக்கலை எதிர்நோக்கித்தான் நிற்கின்றன. இந்தச் சிக்கல் அந்தந்தத் தேசிய இனங்களுக்குரிய மொழி வளங்களில் பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளன/உருவாக்கி வருகின்றன.

மாறிவரும் சூழலுக்கேற்ப வழக்கிழந்து வேகமாக மறையும் தன்மையுடையதாகத் தொழில்முறைச் சொற்கள் உள்ளன. குறிப்பாக வேளாண், மட்பாண்டம், தச்சு, சலவை, மீன்பிடி முதலான தொழில்முறைச் சொற்கள் வேகமாக வழக்கிழந்து வருகின்றன. இவ்வகைத் தொழில்களில் மட்டுமே புதிய கருவிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மரபு சார்ந்த நமது உற்பத்திச் சமூகம் இந்த மாற்றங்களைப் புறந்தள்ள முடியாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன. இதனால் இத் தொழில்முறைச் சொற்கள் புதிய வடிவம் பெற்று விட்டன. பழைய சொல்வளங்கள் மெல்ல மெல்ல இதனால் வழக்கிழந்தன. இன்னொருபுறம் நமது மரபு சார்ந்த பல தொழில்கள் போதிய வருமானத்தை ஈட்ட இயலாத நிலையாலும், சமூக அங்கீகாரமின்மை என்ற மனநிலையாலும் கைவிடப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகவும் அத்தொழிற்முறை சார்ந்த சொற்கள் வழக்கிலிருந்து வேகமாக மறைந்துவருகின்றன.

இந்தவகையில் எண்ணற்ற வழக்குச் சொற்கள் தமிழில் வழக்கொழிந்து போயுள்ளன. அந்த வரிசையில் மறைந்துபோன சொற்களுள் ஒன்றாக உள்ளகம்மியன்என்ற சொல் பற்றிய சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

தமிழில் வழக்கொழிந்து போன எண்ணற்ற சொற்களுள்கம்மாளன்என்ற சொல்லும் ஒன்றாகும். உழவுத் தொழிலுக்குரிய கருவிகளை உற்பத்தி செய்து கொடுப்போரை எங்கள் பகுதியில் (திருவண்ணாமலை) ‘கம்மாளன்என்பார்கள். அவரின் மனைவிமாரைக்கம்மாளச்சிஎன்று அழைக்கும் வழக்கம் இருந்தது. இவர்கள் வசிக்கும் தெருவைகம்மாளத் தெருஎன்றே சுட்டி அழைத்தார்கள். இந்தச் சொல் எங்கள் ஊரில் வழக்கில் இருந்ததை நான் கண்டுள்ளேன். உழவுத் தொழிலில் டிராக்டர் போன்ற பெரும் எந்திரங்கள் பயன் பாட்டிற்கு வந்துவிட்டமையால் உழவுக் கருவிகளை உற்பத்தி செய்யும் அந்தத் தொழில் சார்ந்த குடும்பங்கள் வேலையிழந்து வருவாயின்றி தாம் செய்த தொழிலைக் கைவிட்டுவிட்டு வேறு தொழிலைத் தேடிப் புலம் பெயர்ந்து நகரத்தை நோக்கிச் சென்றுவிட்டன. இப்படி எண்ணற்ற கைத்தொழில் சார்ந்த குடும்பங்கள் பூர்வீகத் தொழிலையும் ஊரையும் இழந்து நகரத்தை நோக்கி நகர்ந்துவிட்டன/நகர்ந்தும் வருகின்றன. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு அந்தத் தொழில்

சார்ந்த வழக்குகள், சொற்கள் நினைவற்றுப் போகின்றன. அடுத்த தலைமுறையினருக்கும் இவற்றைக் கையளிக்க முடியாமல் இடையீடு ஏற்பட்டுவிட்டன.

பொன்நகைத் தொழில் செய்பவரைக்கம்மியர்என்ற சொல்லால் தமிழில் குறித்திருக்கின்றனர். சங்க காலத்தில் கைத்தொழில் புரிவோர் அனைவரையும்கம்மியன்அல்லதுகம்மியர்என்ற பொதுச் சொல்லால் சுட்டியிருப்பதைச் சங்க இலக்கியங்கள்வழி அறிய முடிகிறது. இது குறித்த செய்திகள் சிலவற்றை இங்குக் காண்போம்.

கம்மியன்: சொல்லும் பொருளும்

கம்மியன்என்ற சொல் சங்க இலக்கியத்தில் நற்றிணை, புறநானூறு, நெடுநல்வாடை, மலைபடு கடாம் ஆகிய நான்கு நூல்களுள் ஆறு இடங்களிலும், ‘கம்மியர்என்ற சொல் இரண்டு இடங்களிலுமாக எட்டு இடங்களில் பயின்று வருகின்றன. அச்சொல் வெவ்வேறு கைத்தொழில் சார்ந்தவர்களைச் சுட்டுவதாக சங்க காலத்தில் வழங்கியுள்ளது.

நெடுநல்வாடையில்,

கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த

செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்

சிலம்பி வானூல் வலந்தன தூங்க  (நெடு. 56 - 59)

எனும் பாடலடியில் இச்சொல்லாட்சியைக் காண முடிகிறது. இந்தப் பாடலடிகளுக்கு நச்சினார்க்கினியர் கீழ்வரும் உரைவிளக்கத்தை எழுதியிருக்கிறார்.

கையாற் புனைதல்வல்ல உருக்குத்துகின்றவனாலே அழகுபெறப் பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம் உறையிடப்பட்டு சிலந்தியினது வெள்ளிய நூலாற் சூழப்பட்டனவாய் வளைந்த முளைக்கோலிலே தூங்க (நச்சர். உரை, .வே.சா. பதிப்பு, 1889, . 250).

கையால் புனைதல் வல்லவனாலே அழகுறச் செய்யப்பட்ட சிவந்த நிறத்தையுடைய விசிறிகள் உறையிடப்பட்டுச் சிலந்தியினது நூலால் சூழப்பட்டது போன்ற வளைந்த முளைக்கோலிலே தொங்கினஎன்கிறது நச்சினார்க்கினியரின் உரைக்குறிப்பு.

ஆலவட்டம் என்பது தெய்வங்கள் மற்றும் அரச பிரதானிகளின் ஊர்வலங்களின் போது இருபுறமும் ஏந்தப்பட்டுவரும் அலங்கார மரியாதைப் பொருளாக இருந்துள்ளது. இது வட்டவடிவிலான கேடய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் இறகுகள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் கோவில் விக்கிரகம் அல்லது பெருமக்கள் ஊர்வலத்தில் தாங்கிச் செல்லக்கூடியதாக இது இருந்துள்ளது. துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட வட்டமான பெருவிசிறி போன்று இது இருந்திருக்க வேண்டும். இதனால்தான் சிலந்தியினது வளையைப் போன்றது என்கிறார் நச்சினார்க்கினியர்.

பெருவிசிறி போன்ற ஆலவட்டத்தைச் செய்யக் கூடியவரைக்கம்மியன்என்று சங்கப் புலவர் நக்கீரரும்கையாற் புனைதல்வல்ல உருக்குத்துகின்றவன்என்று நச்சினார்க்கினியரும் சுட்டியிருக்கின்றனர். இதே நெடுநல்வாடையில் மற்றுமோர் இடத்தில் மரப் பொருளைச் செய்யும் தச்சரையும்கம்மியன்என்று சுட்டுகிறார் நக்கீரர். அரசனுடைய மாளிகையின் சிறப்பைச் சுட்டும் பகுதியில் மாளிகையின் வாயிற் பகுதியை முதலில் விவரிக்கிறார். அங்கு கைத்தொழிலில் சிறந்த தச்சன் பற்றிய குறிப்பைப் பதிவு செய்கிறார். தச்சனின் சிறப்பு இவ்வாறு சுட்டப்படுகிறது.

கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்

தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை

(நெடு. 85 - 86)

இதற்கு நச்சினார்க்கினியர்கைத்தொழில் வல்ல தச்சன் காடாவுகையினாலே வெளியற்றுப் பலமரங்களும் தம்மிற்கிட்டுதலமைந்த கூட்டத்தினையுடைய நெடு நிலை’ (நச்சர். உரை, .வே.சா. பதிப்பு, 1931, . 453) என்று உரையெழுதுகிறார்.

கைத்தொழிலில் சிறந்த தச்சனால் திறம்பட உருவாக்கப்பட்ட நெடுநிலைகள், வெளியற்றுப் பல மரங்களும் தம்மில் இறுகச் சேர்ந்து இருந்ததாக நச்சினார்க்கினியர் சுட்டுகிறார். நச்சினார்க்கினியர் காலத்திலேயே மரப் பொருள்களை வடிவமைக்கும்/ உற்பத்தி செய்யும் கைத்தொழிலாளர்களைத்தச்சர்என்று சுட்டும் வழக்கம் உருவாகிவிட்டுள்ளது. இங்குக்கம்மியன்என்பது மரப் பொருட்களை உற்பத்தி செய்யும் தச்சர்களைச் சுட்டுகிறது

நற்றிணையில் மட்டும் மூன்று பாடல்களில்கம்மியன்என்ற சொல் பயின்று வந்துள்ளது. புறநானூற்றுப் பாடலொன்றிலும் இச்சொல் இடம் பெற்றுள்ளது. இந்த நான்கு இடங்களிலும் பொன் நகைகள் வடிவமைத்துத் தரும் பொற்கொல்லர்களைச் சுட்டிநிற்கிறது. தலைவி கூற்றாக உள்ள நற்றிணை 94ஆம் பாடலில் கீழ்வருமாறு அச்சொல் பயின்று வந்துள்ளது.

கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ

மண்ணாப் பசுமுத் தேய்ப்ப”      (நற்.94- 4, 5)

அதாவதுகைத்தொழில் வல்ல கம்மியன் அழகு பொருந்தக் கழுவித் தூய்மை செய்யாத பசியமுத்து தனது ஒளியை வெளியே செலுத்தாது மறைத்தாற்போல நானும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப் படாமல் அரிதாகத் தாங்கி என் பெண்மையால் தடுத்துக் கொண்டேன்” (கு.வெ.பா. உரை, என்.சி.பி.எச்., 4ஆம் பதிப்பு, 2011, . 170,) என்பது இதற்குப் பொருளாகும். இங்கு முத்துநகை செய்பவரைக்கம்மியன்என்று சுட்டியுள்ளார் புலவர். நற்றிணை 313ஆம் பாடலில் பொன் செய்யும் பொற்கொல்லனைச் சுட்டுகிறது.

கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப்

பொன்செய் கம்மியன் கைவினை கடுப்ப

(நற். 313 - 1, 2)

வேங்கைப் பூ எப்படி இருந்ததாம்தடைமுழுதும் அழித்துக் கரிய கிளைகளையுடைய வேங்கை மரத்தில் நாட்காலையின் மலர்ந்த மிக்க புதிய பூபொன்னைப் பணிசெய்யும் பொற்கொல்லனுடைய கைவினையைப் போல மிக அழகுபொருந்தி காணப்பட்டது” (. நாராயணசாமி ஐயர் உரை, 1915, . 419). இங்கு பொன்வேலை செய்யும் பொற்கொல்லன்கம்மியன்என்று சுட்டப்பட்டுள்ளார். அதே நூலின் 363ஆம் பாடலிலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது. இது தோழி கூற்றாக அமைந்த பாடலாகும்.

உறுவினைக்கு அசாவா உலைவுஇல் கம்மியன்

(நற். 363 - 4)

 “தழையுடை சிதையவும் தலைமாலை வாடவும் நேற்று மாலைப் பொழுதிலே நின்னொடு நல்லபடியாக, கைவளையல்கள் நெகிழ்தோட, நண்டுகளை ஆட்டி விளையாடியவளது காற் சிலம்பானது உடைந்து போயிற்று. “எத்துணையளவேனும் தான் செய்யும் மிக்க கம்மத்தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத கம்மியன் கலன் பொறியற்றுப்போயின் இணைத்துச் சந்துஊதிக் கூட்டுதற்கு மண்கட்ட வேண்டிய தன்றேஆதலால் தாழைகளை வேலியாகக் கொண்ட கொல்லை களையுடைய நெய்தல் நிலத் தலைவன் நான் என்று கூறும் நீ போதலை மேற்கொள்வையாயின் அச் சிலம்பினைக் கட்டுதற்கு நும் துறையிலுள்ள மணலைக் கொண்டு வந்து தந்து செல்வாயாக” (கு.வெ.பா. உரை, என்.சி.பி.எச்., 4ஆம் பதிப்பு, 2011, . 578,). இப்பாடலில் பொன் நகைகளை வடிவமைப்போர்உலைவுஇல் கம்மியன்என்று சுட்டப்பட்டுள்ளது. புறநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இவ்வாறே சுட்டப் பட்டுள்ளது. மகட்கொடை கேட்டுவந்த வேந்தன் ஒருவன் போரில் தோற்ற செய்தியைச் சுட்டும் 353ஆம் பாடல் வரிகளில் இச்சொல் பயின்று வருகிறது.

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

பொலஞ்செய் பல்கா சணிந்த வல்குல்

(புறம். 353-1,2 )

குற்றம் இல்லாத பொற்கொல்லன், பழுது அறச் செய்த பொன்னால் ஆகிய பல பொற்காசுகளால் அமைந்த மேகலையும் பொன்னாலாகிய மாலையும் அணிசெய்து கொண்டு நடந்து செல்பவளுடைய சாயலை நோக்கினை (கு.வெ.பா. உரை, என்.சி.பி.எச். 4ஆம் பதிப்பு, 2011 . 766). இங்குப் பொற் கொல்லனைக் கம்மியன் என்ற சொல்லால் சுட்டப் பட்டுள்ளதை அறிகிறோம்.

சங்க இலக்கியத்தில் கம்மியர் என்ற சொல்லும் பயின்று வந்துள்ளது. இச்சொல் நற்றிணை, பத்துப் பாட்டில் மலைபடுகடாம் ஆகிய இரண்டு நூல்களில் இடம்பெற்றுள்ளது. நற்றிணை 153ஆம் பாடலில்

குணகடன் முகந்து குடக்கேர் பிருளி

மண்டிணி ஞாலம் விளங்கக் கம்மியர்

செம்புசொரி பானையின் மின்னி.....  (நற். 153 - 1-3)

என்ற வரிகளில் இச்சொல் பயின்று வந்துள்ளது.

கீழ்கடலிலே சென்றிறங்கி நீரைமுகந்தெழிந்து மேல்பாலேகி யாங்கும் இருளடையும்படி இருண்டு அணுத்திணிந்த இவ்வுலகம் அவ்விருளினின்று புலப் படுமாறு கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற் போல மின்னி (.நாராயணசாமி ஐயர் பதிப்பு, 1915, . 209) என்று காணப்படுகின்றது. அதாவது செம்பினால் பொருட்களைச் செய்யும் குழுவினரைக்கம்மியர்என்று சுட்டியுள்ளதை இங்கு பார்க்க முடிகிறது. மலைபடுகடாம் பாடலில் பயின்றுவந்துள்ளகம்மியர்என்ற சொல் நெசவாளரைச் சுட்டுவதாக காணப்படுகின்றது.

தெண்டிரை அவிரறல் கடுப்ப ஒண்பல்

குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச்

சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ

நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்

(மலை. 520 - 523)

இதற்கு நச்சினார்க்கினியர்தெளிந்த திரையில் விளங்குகின்ற அறலையப்ப ஒள்ளிய பலவாகிய சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து சிறியோரும் பெரியோருமாகிய நெய்தற்றொழிலைச் செய்வார் திரண்டு நான்காய் வேறுபட்ட தெருவுகடோறும் ஒருவர்காலோடு ஒருவர்கால் நெருங்க நிற்றலைச்செய்ய’ (நச்சர் உரை, .வே.சா. பதிப்பு, 1889, . 217) என்று உரைப்பொருள் எழுதுகிறார். இதனோடுஇஃது அந்திக்கடையிற் றெருவிற் புடவை விற்பாரைக் கூறிற்றுஎன்ற குறிப் பையும் அவர் தருகிறார். இந்த இடத்தில் கம்மியர் நெய்தல் தொழில் செய்வாரைக் குறித்து நிற்கிறது.

இச்சொல் பற்றிய சில கருத்துக்கள்

சங்க காலத்தில் மரப்பொருளை உற்பத்தி செய்யும் தச்சர்; பொன்னிலும் முத்திலும் நகைகளை வடித்துத் தரும் பொற்கொல்லர், நூலால் துணிகளை நெய்யும் நெசவாளர், செம்பினால் பொருள்களை வடிவமைப் போர் ஆகிய கைத்தொழில் புரிவோர் அனைவரையும் கம்மியன், கம்மியர் என்ற சொற்களால் சுட்டும் மரபு இருந்துள்ளது.

பத்துப்பாட்டுத் தொகுப்பினுள் சுட்டப்படும் கைத் தொழில் சார்ந்த குறிப்புச் சொல்லாகிய கம்மியன்; விசிறி செய்பவர், மரத்தால் பொருட்களை வடிவமைக்கும் தச்சர், துணி நெய்யும் நெசவாளர் ஆகியவர்களை மட்டும் குறிப்பனவாக உள்ளன. அதே சொல் சங்க எட்டுத்தொகை நூல்களுள் பொன், முத்துக்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு அணிகலன்கள் செய்யும் கைத்தொழிலாளர்களைக் குறித்து நிற்கிறது. இவ்வேறுபாடுகள் சிந்திக்கக் கூடியனவாக உள்ளன.

இவ்வகை வேறுபாடுகள் இருந்தாலும் சங்க காலத்தில் கம்மியன் என்ற சொல் கைத்தொழில் சார்ந்த அனைத்துப் பிரிவினரையும் சுட்டி நிற்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்திற்குப் பின்னர் உரை யாசிரியர் காலத்தில் கைத்தொழிலாளரைக்கம்மியன்என்பதுடன்தச்சன்என்ற சொல்லால் சுட்டும் வழக்கம் நிலைபெற்றுள்ளன. இதற்கு நச்சினார்க்கினியர் உரைக்குறிப்புகள் சான்றாக உள்ளன.

தற்காலத்தில் பொன்நகை செய்பவரைத் தட்டான் என்றும் மரப்பொருள் செய்பவரைத் தச்சன் என்றும் சுட்டுகின்ற வழக்கம் நிலவுகிறது. சங்க காலத்தில் இருந்த வழக்கத்தைப் போன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மரப்பொருள் செய்யும் கைத்தொழிலாளரைக் கம்மாளன் என்றும், பொன்நகைகள் செய்யும் கைத்தொழிலாளரைக் கம்மியர் என்றும் சுட்டும் வழக்கம் நிலவுகிறது. ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒரு சொல் நிலைபெற்று வந்துள்ள வரலாற்றை இச்சொல் வழக்கு காட்டுவதாக உள்ளது.

சான்றாதார நூல்கள்

1. சாமிநாதையர், .வே. (..). 1889. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், சென்னை: திராவிடரத்நாகர அச்சுக்கூடம்.

2. நாராயணசாமி, . பின்னத்தூர் (பதிப்பும், உரையும்). 1915. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய நற்றிணை, சென்னபட்டணம்: சைவவித்தியாநுபாலன யந்திரசாலை.

3. பரிமணம், .மா.; பாலசுப்பிரமணியன், கு.வே. 2011(4ஆம் பதிப்பு). நற்றிணை மூலமும் உரையும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

4. பரிமணம், .மா.; பாலசுப்பிரமணியன், கு.வே. 2011(4ஆம் பதிப்பு). புறநானூறு மூலமும் உரையும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

Pin It