irratai theravargal 450

இருட்டைத் தின்றவர்கள்

ஆசிரியர்: இலா.வின்சென்ட்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை,

தேனாம் பேட்டை, சென்னை 600 018

விலை: ரூ 90.00

மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதில் எழுது வதில் மிகுந்த அக்கறை கொண்டவர் எழுத்தாளர் இலா. வின்சென்ட். ஆய்வுகள், கட்டுரைகள் என பல தளங்களில் இயங்கி வந்தாலும் சிறுகதைகள் ஆக்கத்தில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். ‘மீண்டெழுதல்’ சிறுகதைத் தொகுப்புக்குப் பின் மீண்டு எழுந்து எழுத்தாளர் இலா. வின்சென்ட் தந்திருக்கும் தொகுப்பு ‘இருட்டைத் தின்றவர்கள்’. இருட்டிலிருந்து மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயற்சித்துள்ளார்.

‘விதைகள் உறங்காது’ என்னும் முதல் சிறு கதை இரண்டு வரலாற்று நிகழ்வுகளை இணைத்து எழுதப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. கம்யூனிஸ்டுகளைச் சிறைப் பிடித்தது. சிறைப்பட்ட சிவப்புச் சிந்தனையாளர்கள் சிறையில் குற்றவாளிகளாக நடத்தாதே என்று போராட்டம் நடத்தினர். இதனால் 22 கம்யூனிஸ்டுகள் சேலம் சிறையில் கொல்லப்பட்டனர். மற்றொரு நிகழ்வு நெசவாளிகள் வாழ வழியில்லாத சூழலில் கஞ்சித் தொட்டி வைத்து கஞ்சி காய்ச்சி மக்களுக்குக் கொடுத்தனர். இதில் நெசவாளிகள் கைது செய்யப் பட்டனர். தனித் தனியாக எழுத வாய்ப்பிருந்தும் ஒன்றாக்கி, ஒன்றாக எழுதி கவனத்தை ஈர்த் துள்ளார். போராளிகள் புதைக்கப்பட்டாலும் அவர்கள் விதைத்த ‘விதைகள் உறங்காது’ என்கிறார்.

மனிதக் கழிவை மனிதரே அள்ளும் முறையை ஒழித்ததாகப் பெருமைப்படும் நாம் மனித மலத் தொட்டிகளைச் சுத்தப்படுத்த மனிதர்களையே பயன்படுத்தும் நிலையைக் கைவிடாதது வெட்கத் திற்குரியது. மனிதக் கழிவைச் சுத்தப்படுத்தும் ஒரு தொழிலாளியைக் கண்ட அவள் மகளே வெறுப் பதும் பின் மகளே உணர்ந்து தந்தையை ஏற்பது மான கதை ‘மருந்து’. இச் சிறுகதை சமூகத்திற் கான மருந்தாக உள்ளது. அந்தத் தொழிலாளியின் மகள் மூலம் மற்றவர்களுக்கும் உணர்த்தியுள்ளார்.

“நிலம் விழுங்கும் கரை வேட்டிகளிடம் சிக்கி அடி தின்னும் எளிய மக்களின் போராட்டத்தை விரிவாகப் பேசும் ‘இருட்டைத் தின்றவர்கள்’ என்கிற தலைப்புக் கதை தமிழகத்தின் பல நகரங் களிலும் நடக்கும் உண்மைச் சம்பவமாகும்” என்று எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ‘அணிந்துரை’யில் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சேலத்தவர்களுக்கு அதன் உண்மை தெரியும். வலம்புரியார் எவர் என்று தெரியும். இலா. வின்சென்ட் அவர்கள் அன்றைய நிலையை வைத்து கதையை முடித்துள்ளார். அதன்பின் விளைவு களை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளார்கள். இந்த கதையை எழுதியதற்கும் அதையே தொகுப்பின் தலைப்பாக வைத்திருப்பதற்கும் ஆசிரியருக்கு ஒரு துணிச்சல் இருந்திருக்க வேண்டும்.

புகுந்த வீட்டுக்குத் திருமணமாகிச் செல்லும் பெண்களின் நிலை இன்னும் மாறாமலே உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது ‘விசாரணைக் கூண்டு’. கணவனும் மாமியாரும் கை கோர்த்துக் கொண் டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எத்தகைய சோகத்திற்கு உள்ளாகும் என விவரிக்கிறது. இது இந்துப் பெண்ணின் கதை. முஸ்லிம் மதத்தில் ஓர் ஆண் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அப்படி இருந்தும் ‘என்று தணியும்’ கதை நாயகி ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தும் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்துப் போராடி கணவனை மீட்கிறார். ஆனால் அவளுக்குக் கணவன் மீது இரக்கம் ஏற்படுகிறது. அப் பெண்ணின் மீதும் பரிதாபம் உண்டாகிறது. ஒரு புயல் பூவாக மாறி விட்டது.

பெண்ணைப் போராளியாகக் காட்டிய கதை ‘ஒரு முக்கிய அறிவிப்பு’. தாய் மண்ணில் உற்பத்தி யாகும் தண்ணீரை அந்நிய நாட்டு நிறுவனங்கள் அல்லது பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது. தஞ்சை மக்களின் விவசாயத்திற்கும், சேலம் மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை வற்றிவிட்டதால் விற்பனைக்குத் தயார் என்னும் அறிவிப்பை எதிர்த்துப் போராடிய ஒரு பெண்ணின் கதையைக் காட்டுகிறது. முந்தைய கதைகளை விட போராட்ட குணம் மிக்கவளாக சித்திரித்துள்ளார்.

சாதியம் இன்னும் ஆதிக்க சாதி மனிதர்களிடையே புரையோடியிருப்பதைக் குறித்து பேசும் கதையாக உள்ளது ‘ஒதுக்கல்’. கொலை செய்யும் அளவிற்குக் கொடியவர்களாக உள்ளார்கள் என் பதையும் காட்டுகிறது. மேல் சாதியன், கீழ் சாதி யாளை மணக்கிறார். எதிர்ப்பு வலுக்கிறது. நோயால் இறக்கிறான். அப்பனின் ஆசைப்படி மகன் கொள்ளி வைக்க முயல தடுக்கிறது ஆதிக்க சாதி. கொலை செய்ய முடிவு செய்து பின் அப்படியே விட்டுச் சென்று விடுகின்றனர். சாதி வெறியைச் சமாதியாக்க முடியாத நிலையே தொடர்கிறது என்கிறார்.

மனிதர்கள் ஒன்றாக இருந்தாலும் மதங்கள் விடாது என்பார்கள். மதம் சார்ந்த மனிதர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தாலும் அரசியல் விடாது என்பதும் உண்டு. ஆனால் ‘மண் கரடு’ கதையில் காவல்துறை மதத்தால் வேறுபட்டு மனத்தால் இணைந்து வாழும் மனிதர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்கிறது என்னும் உண்மையை உணர்த்தியுள்ளார். சட்டங்கள் ஆயிரம் இருந் தாலும் ஆட்சி எவர் செய்தாலும் காவல்துறை யினரின் ஆட்சியே நடப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்தாசையால் வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க நினைப்போருக்கு சாட்டை யடியாகவும் சவுக்கடியாகவும் உள்ளது ‘கை நழுவிப் போனது’. வீடு கட்ட வேண்டும் என்னும் ஆசையில் வெளிநாடு சென்றவரின் குழந்தை திரும்பி வருவதற்குள் வீடு கட்ட வந்த மேஸ்திரியை அப்பா என்றழைப்பது மனத்தைப் பாதிக்கச் செய் கிறது. பாசத்தை இழக்கச் செய்யும் பணம் தேவையா என்னும் கேள்வி எழுகிறது. ஆனாலும் வீடு கட்ட வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளதையும் தெரிவித்துள்ளார்.

மனம் வளர்ச்சி பெற்ற மாபெரும் மனிதர்களே திருந்தாத சமூகம் இது. மனம் வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட குழந்தைகள் மீது மனிதர்கள் எவ்வாறு அன்போடும் அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் கதையே ‘இன்னதென்று அறியாமலே’. எழுத்தாளர் இன்னதென்று அறிந்தே எழுதியுள்ளார்.

கல்விக்காகவே சிறுபான்மை கிருத்துவ நிறுவனங்கள் கல்வி நிலையங்களைத் திறந்தன. கல்விக் கண்ணையும் திறந்தன. அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களிலும், பந்தம், பாசம், பணம் நுழைந்து ஆட்டுவிப்பதை விவரிக்கிறது ‘இலக்கணம் மாறுதோ’ கதை. ஒரு கிருத்துவப் பெண்ணே அந் நிறுவனத்திற்கு எதிராகப் போராடுவது குறிப்பிடத் தக்கது. தூய்மையான சிறுபான்மை நிறுவனத் திலும் அரசியல் எவ்வாறு ஆக்கிரமிக்கிறது என் பதைச் சுட்டிக் காட்டுகிறது தொகுப்பின் இறுதிக் கதையான ‘சிறப்பு விருந்தினர்’. இதில் எதார்த்தம் குறைவு.

ஒரு கதை எழுதுவது கடினம். அதைவிட கடினம் இதழ்கள் வெளியிடுவது. இதை விடவும் கடினம் தொகுப்பாக்குவது. இவை எல்லாவற்றையும் விடக் கடினம் கதைகளை மக்களிடம் கொண்டு செல்வது. எழுத்தாளர் இலா. வின்சென்டின் இறுதி நோக்கம் கதைகளை மக்களிடம் கொண்டு செல் வதே ஆகும். அம்முயற்சியில் வெற்றி பெற்றும் வருகிறார். மற்றும் பிரச்சினைகளுக்கு மக்களும் தீர்வு காண வேண்டும் என்பது எழுத்தாளரின் விருப்பமாக உள்ளதை அறிய முடிகிறது. தமிழ் ஓர் உன்னதமான மொழி. உரைநடைத் தமிழ் வேறு. உச்சரிப்புத் தமிழ் வேறு. ஒவ்வொரு மாவட்டத் திற்கும் ஒவ்வொரு உச்சரிப்பு. வழக்குச் சொற்களாகவும் சிலரால் பேசப்படுகின்றன. எல்லா மாவட்டங்களையும்விட சேலத்தில் பேசப்படுவது உரை நடைக்கு ஒத்திருக்கும்.

எழுத்தாளர் இலா. வின்சென்டின் கதைகள் சேலத்தைச் சுற்றியே நடைபெறுவதால் அவர்களின் பேச்சு மொழியை, உச்சரிப்பு விதத்தை நன்கு கிரகித்து கதைகளில் புகுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார். சேலத்திற்கும் ஒரு வட்டார மொழி உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார். எழுத்தாளர் வின்சென்ட் ஒரு சமூகத்தில் ஓர் அங்கமாக நின்று சமூகத்தைக் கூர்ந்து கவனித்து வருவதில் தேர்ந்தவராக உள்ளார். அவருக்கு ஒரு கரு கிடைத்தால் போதும். அந்தக் கருவை உருவாக்கிக் கதையாக்கித் தருவதில் சிறந்தவர் என்பதைத் தொகுப்பில் உள்ள கதைகள் மூலம் அறிய முடிகின்றது.

கதை சொல்வதில் ஒரே உத்தியை மட்டுமே கையாள்வதைக் கைவிட்டு பல்வேறு உச்சிகளின் வழி கதை சொல்வதன் மூலம் மேலும் பேசப்பட வாய்ப்புள்ளது. எனினும் மக்கள் வாழ்வையே மையப்படுத்திய கதைகள் உள்ளது என்பதால் ‘இருட்டைத் தின்றவர்கள்’ தொகுப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் வெளிச்சப்படும் என்னும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.

 

Pin It