1950களில் எழுதத் துவங்கிய பிபன் சந்திரா, ‘காலனியம்’, ‘இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா,’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். 2012 இல் ‘நவீன இந்தியாவின் உருவாக்கம்: மார்க்சிலிருந்து காந்தி வரை’ என்ற அவரது நூல் வெளியானது. அதன்பின் அவர் மறையும் முன் பகத்சிங் பற்றிய ஒரு நூலை எழுதி முடித்திருந்தார். தனது சுயசரிதையையும் எழுதி முடித்திருந்தார். ரொமிலா தாப்பர், சர்வபள்ளி கோபால் போன்ற பேராசிரியர்களுடன் இணைந்து ஜே.என்.யு.வின் வரலாற்று ஆய்வு மையத்தை அமைத்தார். பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 2007 இல் தேசிய ஆய்வுப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 2004-2012 ஆண்டுகளில் தேசிய புத்தக அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டார்.

bibin chandraபிபன் சந்திரா இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆழமாக ஆய்வு செய்தவர்களில் மிக முக்கியமானவர். விடுதலைப் போராட்டத்தின் துவக்க காலத் தலைவர்கள் பொருளாதார தேசியவாதிகள் என்ற வாதத்தை ‘இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் அவர் வலுவாக முன் வைத்தார். இந்திய விடுதலை போராட்டம் 1857-1947, இந்திய தேசிய இயக்கத்தின் நீண்ட கால இயக்க விதிகள், ‘நவீன இந்தியாவில் வகுப்புவாதம்’ உள்ளிட்ட பல புத்தகங்களை பிபன் சந்திரா எழுதியுள்ளார்.

வரலாற்றுரீதியாகப் பார்த்தால், தேசியவாதத்தின் தோற்றத்தைப் பின்வரும் முக்கியமான ஐந்து நிகழ்வுப் போக்குகளுடன் இணைத்து அடையாளம் காணலாம்.

1. முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் கூடிய தேசியவாதம்.

2. காலனித்துவ நாடுகளில் தோன்றிய, குடியேறியவர்களால் முன்வைக்கப்பட்ட ‘கிரியோல்’ தேசியவாதம் 

3. குடியேற்ற நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டங்களுடன் கூடிய தேசியவாதம்.

4. வளர்ந்த தேச அரசுகளினுள் வாழ்ந்த புறக்கணிக்கப்பட்ட மக்களால், அக்காலனித்துவ முறைமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தேசியவாதம்.

5. காலனித்துவத்திற்கு பின்பான காலங்களில் விடுதலை அடைந்த நாடுகளில் ஒடுக்கப்பட்ட தேசங்கள் முன்வைக்கும் தேசியவாதம்.

இப்படியாக குறைந்தபட்சம் ஐந்து விதமான தேசியவாதங்களை வரலாற்றில் நாம் காண முடிகிறது. இப்படியாக வேறுபட்ட வரலாற்று நிலைமைகளின் கீழ் உருவான தேசியவாதத்தின் பண்புகளை, குறிப்பிட்ட ஒரு வரலாற்றுச் சூழலில் எழுந்த - முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் உருவான - தேசியவாதத்தின் அளவுகோல்களைப் பயன்படுத்தி மதிப்பிட முற்படும் போது பிரச்சனைகள் உருவாகின்றன.

பொருளாதாரத் தேசியவாதம்

உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து தீவிரமாகியுள்ள நிலையில், உலகம் முழுவதும் தெளிவாக அடையாளம் காணக்கூடிய பொருளாதார தேசியவாதத்தின் துர்நாற்றம் எழுச்சி பெற்றுள்ளது. வீழ்ச்சியடையும் தொழில்துறை மற்றும் வேலை இழப்புகளினால் ஏற்படும் பெருகிய சீற்றம் ஆகிய வற்றை எதிர்கொள்ளும் அரசாங்கங்கள் “உங்கள் அண்டை நாட்டை பிச்சைக்கார நாடாக்குக” என்ற கொள்கை 1930 களில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை கொடுத்தது என்றாலும் அதே பாதுகாப்புவாத நடவடிக்கைகளை எடுக்கின்றனர். வங்கியாளர்கள், நிதியமைப்பாளர்கள் மற்றும் உலகரீதியான மூலதனத்தின் போட்டிமிக்க பிரிவுகளுக்காக “தடையற்ற வணிகத்தை” முன்னெடுப்போர் பேசுகையில், போட்டித் தன்மை குறைந்த தொழில்துறைகளில் பாதுகாப்பு வரிக்கான ஆதரவு உறுதியாக உள்ளது. பொருளாதார தேசிய வெறியைத் தூண்டிவிட்டிருப்பது வேலை இழப்புக்கள் மற்றும் வாழ்க்கைத்தர சரிவுகளின் தீவிரம் இவற்றிற்கு எதிரான தொழிலாளர் மக்களின் சீற்றத்தை திசை திருப்பும் சிந்தனாவாதத்திற்கு உதவுகின்றது; ஆனால் உண்மையில் இலாபமுறை என்ற நெருக்கடிக்கு ஆதாரமான முறைக்கு எதிராக இது இயக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்திடம் இத்தகைய பிற் போக்குத்தன விஷத்தினை ஊட்டுபவர்கள் தொழிற் சங்கத்தினரும் அவற்றின் கூட்டுக்களான பல மத்தியதர தீவிரவாத அமைப்புக்களும்தான். வேலைகள், பணிகள் ஆகியவற்றைக் காப்பதற்குப் பதிலாக, பொருளாதார தேசியம் என்பது தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்து வறிய நிலையில் தள்ளுவதற்குத்தான் உதவும். அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ அல்லது எந்த நாட்டிலோ, இத் தொழிற்சங்க அதிகாரத்துவம், கடந்த மூன்று தசாப்தங்களாக உற்பத்தித் தொழில்துறை தாக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கு தலைமை தாங்கியவர்களாவர். இப்பொழுது அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களைக் காப்பதற்காக பாதுகாப்புவாத ஊக்கப் பொதிகளின் ஒரு பகுதியாக இன்னும் ஊதியக் குறைப்புகள், பணி நிலைமைகள் ஆகியவற்றை தியாகம் செய்யவேண்டும் என்று ஆதரவு கொடுக்கின்றனர்.

தேசிய பிரச்சனை தொடர்பாக திட்டவட்டமான சில கோட்பாட்டு வகைப்பட்ட நிலைப்பாடுகளை சரியாக வகுக்க முனைந்தவர் லெனின்தான். எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் பொருத்தமான ஒரு சூத்திரத்தைப் பற்றி சிந்திப்பதே ஒரு மார்க்சிய அணுகு முறையாகாது அல்லவா? அன்று ரஷ்ய போல்ஷ்விக்குகள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை எதிர் கொண்ட நிலைமைகளின் கீழ் ரஷ்யப் பேரரசினுள் இருந்த ஒடுக்கப்பட்ட தேசங்கள் தொடர்பாக நிலைப்பாட்டை மேற்கொள்வதே அவரது நோக்கமாக இருந்தது. அந்த முயற்சியானது தவிர்க்க முடியாத வகையில் தேசிய பிரச்சனை தொடர்பான ஒரு கோட்பாட்டை முன் வைப்பதை நிர்ப்பந்தித்தாலும் கூட, அவர் தேசியவாதம் தொடர்பாக ஒரு முழுமையான கோட் பாட்டிற்கான அடித்தளமிட்டார். அவர்களது உடனடி இலக்காக இருந்தது, ஒரு புரட்சியை நோக்கி முன்னேறும் கம்யூனிஸ்ட்டுக் கட்சியானது, தேசிய பிரச்சனை குறித்து எப்படிப்பட்ட நிலைப்பாட்டை முன்வைப்பது பற்றிய அக்கறையே. அதிலும் ஒடுக்கப்பட்ட தேசங்களது நம்பிக் கையைப் பெறும் நோக்கத்துடனேயே இந்த அணுகு முறைகள் முன்வைக்கப்பட்டன. இந்த வகையில் தேசங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய லெனினது நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. இந்த நிலைப் பாட்டை அப்படியே, ஒரு புரட்சிக்கு தயாரற்ற சூழ்நிலையில், ஒடுக்கும் தேசத்தின் இடதுசாரிக் கட்சிகளே தேசியவாதத்தின் கருவிகளாக செயற்படும் நிலைமைக்கு யாந்திரீகமாக பொருத்திப் பார்ப்பது என்பது மிகவும் பாதகமான நிலைமைகளை உருவாக்கி விடும். இது ஒடுக்கும் தேசத்தின் பாட்டாளி வர்க்கத்திற்கோ, ஒடுக்கப்படும் தேசத்திற்கோ எந்த விதமான நன்மைகளையும் தந்துவிடாது.

பேராசிரியர் பிபன் சந்திரா தனது முனைவர் பட்டத்திற்காக தில்லி பல்கலைக்கழகத்திற்கு 1963 இல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கை, 1880- 1905, மக்கள் வெளியீட்டகத்தால் 1966இல் ‘இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் எழுச்சியும், வளர்ச்சியும்’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட, மறு பதிப்பு செய்யப்பட்ட இந்நூல் ஆங்கிலேய ஏகாதி பத்தியத்திற்கான பொருளாதார அடித்தளம் மற்றும் சுதந்திர தேசப் பொருளாதாரத்திற்கான தேசியவாதிகளின் மாற்றுத் திட்டத்தின் தோற்றம் பற்றியதோர் புரிதலுக்கான முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.

Bipan-Chandraதெரிந்தெடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் (1880 - 1905) பிபன் தன் ஆய்வு மூலம் வெளிக் கொணர்ந்த விசயங்கள் மூன்று.

ஒன்று, வணிகம், தொழில், நிதித்துறை ஆகிய வற்றின் மூலம் நடைபெற்ற மூவகைப் பொருளாதாரச் சுரண்டல்களை தேசியவாதிகள் கண்டறிந்து இந்தியப் பொருளாதாரம் ஆங்கிலேயர் பொருளாதார நலனுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதாலேயே ஏகாதிபத்திய ஆட்சி தொடர்கிறது என்பதைப் புரிந்தனர்.

இரண்டு, கச்சாப் பொருட்கள் உற்பத்தி செய்யவும், ஆங்கிலேயரின் உற்பத்தி பொருட்களை விற்கவும் இந்தியாவை சந்தையாக மாற்றிடும் காலனி பொருளாதார அம்சங்களை வளர்த்திடும் அந்நிய ஆட்சியாளர்களின் எண்ணங்களையும், நடவடிக்கை களையும் அவர்கள் எதிர்த்தனர்.

மூன்று, அவ்வாறு எதிர்க்குரல் கொடுத்தபோது முன்வைத்த அனைத்து தேசியவாதிகளின் கோரிக்கை களும் ஓர் சுதந்திர இந்தியாவில் தீர்மானிக்கப்படும் தேசிய பொருளாதாரக் கொள்கைக்கான விருப்பம் வேர் விடுவதற்கு உதவின. இந்நூல் இந்திய தேசிய இயக்கத்தின் முன்னோடிகளான தாதாபாய் நௌரோஜி, கோகலே, திலகர், ஜி. சுப்ரமணிய ஐயர் போன்றோரின் அரசியல் நேர்மை, அறிவுத் திறமை மற்றும் இந்து, சுதேசமித்திரன், அம்ரித் பசார் பத்ரிகா, பெங்காலி, இந்து பேட்ரியாட் போன்ற பத்திரிகைகளின் தேசபக்தியையும் அறிய பெரிதும் உதவுகிறது.

இந்தியாவில் வறுமை, தொழில், அயல் நாட்டு வர்த்தகம், ரயில்வே, வரிக்கொள்கை, பணமும் பரி வர்த்தனையும், தொழிலாளர்கள், விவசாயம், பொதுநிதி, செல்வம் வடிந்து செல்லுதல் என 12 அத்தியாயங்களில் விரிவாக ஆராய்ந்து விட்டு இந்திய பொருளாதாரம், பொருளாதார தேசியம் என முத்தாய்ப்பாய் கடைசியாக 13,14 வது அத்தியாயங்களை தந்துள்ளார் நூலாசிரியர். பேரா.கா. அ.மணிக்குமார் எழுதிய காலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம் என்கிற - தமிழ் பதிப்பிற்காக இணைக்கப்பட்ட முன்னொட்டு ஆழ்ந்த வாசிப்புக்குரியது.

* * *

வரலாற்று ஆய்வாளர் “அய்ஜாஸ் அகமதுவின் கட்டுரைகள்/நூல்கள்”

தேசியவாதம், “கம்யூனிஸ்ட் பிரகடனம் அன்றும் இன்றும்”, “20ஆம் நூற்றாண்டு அரசியலில் இந்தியா” “ஜனநாயக எழுச்சிகளின் நூற்றாண்டு”, மற்றும் “வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும்.”

வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடதுசாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் குறித்தும், வகுப்பு வாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வரலாறுகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் பின்பற்றிய வகுப்புவாதக் கொள்கைகள் குறித்தும் மிகவும் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

வகுப்புவாதம், மதச்சார்பின்மை, தேசியம் அல்லது தேசியவாதம் போன்றவை குறித்து நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இது தொடர்பாக அடிப்படை நிலைப்பாட்டை மிகவும் கடுமையான வார்த்தைகளுடனேயே தொடங்கியிருக்கிறார்.

அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் ஓர் ஆரோக்கியமான அரசியலில் தீர்க்கப்பட முடியாத நோயல்ல. ஆர்எஸ்எஸ், சிவசேனை வகையறாக்கள் பரப்பிடும் வகுப்புவாத வெறி உணர்வுகளுக்கு எதிராக அதைவிட அதிகமான அளவில் மதச்சார்பின்மை, நாட்டுப்பற்று உணர்ச்சிகளைக் கொடுப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்திட முடியும். வகுப்புவாத நடவடிக்கைகள் என்று நாம் அழைத்திடும் - தற்போது மக்கள் பின்பற்றி வரும் - சில நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் சிக்கலான வரலாற்று வேர் களைக் கொண்டிருக்கின்றன. இந்திய சமூகத்தின் கட்டமைப்பிலும், நாள்தோறும் நாம் பின்பற்றும் நடைமுறை அரசியலிலும் நன்கு ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.

aijasநாம் பின்பற்றிவரும் தத்துவங்களை விமர்சனத் திற்குள்ளாக்குவது சந்தேகமற மிகவும் முக்கியமானது தான். ஆனால், எண்ணற்றோர் உயிர்கள் சூறையாடப் படுவதற்குக் காரணமாக விளங்கும் வகுப்புவாத வன்முறை சம்பந்தமான உண்மைகளையும், விவரங் களையும் திரட்டுவது அதைவிட மிகவும் முக்கியமான தாகும்.

அதுமட்டுமல்ல, வகுப்புவாத சிந்தனைகளும் நடைமுறைகளும் மிகவும் போற்றுதலுக்குரியவை என்றும், இவை நியாயமானவை மட்டுமல்ல, அவசிய மானவையும், பயனளிக்கக் கூடியதும் என்றும் நாட்டில் உள்ள மக்களில் மிகப் பெரும்பாலானோர் நம்பிக் கொண்டும் இருக்கிறார்களே, இவர்களின் நம்பிக்கை களை இவர்கள் மனம் கோணாதவாறு எவ்வாறு விமர்சிக்கப் போகிறோம் என்பது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மதச்சார்பின்மைக்கு ஆதரவான தத்துவார்த்த போராட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியுமாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வகுப்புவாதத்திற்கு மாற்று, கம்யூனிசம் அல்லது சோசலிசம்தான். இன்றைய தினம் நாட்டில் வகுப்புவாத சிந்தனைகள் மிகப்பெரிய அளவில் ஊட்டி வளர்க்கப்படுவதை முறியடிக்கக் கூடிய விதத்தில் மதச்சார்பின்மையையும் கம்யூனிஸ்ட்டுகளின் குணங்களில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிட வேண்டும்.

காலனிய நாடுகளில் உருவான தேசியவாத அல்லது நாட்டுப்பற்று சித்தாந்தம் காலனியத்திற்கு எதிரான ஒன்றுதான். ஆனால் இது பல சமயங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தமாக தவறான முறையில் தீர்மானிக்கப் படுகிறது. இவ்வாறு காலனியத்திற்கு எதிராக உருவான பல இயக்கங்கள் சோசலிஸ்ட் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்று சொல்ல முடியாது. இத்தகைய இயக்கங்களில் பல ஏகாதிபத்திய மூலதனத்தின் நவீன காலனிய வடிவங்களுடன் மிக வேகமாகத் தங்களை இணைத்துக் கொண்டு, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றன.

ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் பல இத்தகைய வரலாற்றால் நிரப்பப்பட்டுள்ளன. ஏன், நம் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் குறித்து கூறத் தேவையே இல்லை. இதில் மிகவும் சிக்கல் நிறைந்த வழக்குகள் எவை எனில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக மூர்க்கமான முறையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாலிபான்களாகும். ஆயினும் இவர்கள் மக்களுக்கான சோசலிச முற்போக்கு சக்தியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் நடைமுறையில் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயின. முழுமையான தேசிய வாதம் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவைகள் வலதுசாரி தேசியவாதங்களின் அனைத்து விதமான நச்சுத்தன்மை வாய்ந்த வடிவங்களையும் தம்முள் கொண்டிருந்தன. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பிய முதலாளித் துவத்தின் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது என்பது மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில்தான் ஐரோப் பாவில் தேசம் என்கிற வடிவம் உருவானது. இவ்வாறு கடுஞ்சிக்கல்கள் நிறைந்த நிலையில் தேசியவாதம் என்ற சொல்லை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் சமமாய்ப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது.

தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்ற சொல்லின் பின்னணியில் எந்தவித வர்க்க உள்ளடக்கமும் இல்லை. எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்கள் வர்க்க உள்ளடக்கத்தை அவற்றின் மீது ஏற்றுகின்றன லெனின், தொழிலாளி வர்க்கத்தின் கட்சியின் தலைவர் என்ற முறையில் காலனிய நாடுகளில் இருந்த நிலைமைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சனைக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். காலனிய எதிர்ப்பு தேசிய வாதத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கம் தமதாக்கிக் கொள்வதற்கு முன்பு தேசிய இனப்பிரச்சனை மீது மேலாதிக்கத்தை நிறுவிட விவசாய வர்க்கத்தின் கூட்டணியுடன் தொழிலாளி வர்க்கத்தால் சாத்திய மாகலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே லெனின் அவ்வாறு கூறினார்.

காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளிகளில் நாட்டுப்பற்று கொண்ட பிரிவினர் தலைமைப் பாத்திரம் வகிப்பதை ஏற்றுக் கொள்வது என்பது விரும்பத்தக்க ஒன்று அல்ல. தேசியவாத சித்தாந்தம் என்பது அடிப்படையில் “தேசிய-அரசு” வடிவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இணைக்கப் பட்டதாகும். தேசிய-அரசு என்ற வடிவம் இருக்கும் வரை, ஏதாவது ஒரு வகையிலான தேசியவாதம் ஒரு மெய்யான அவசியமாகும். நாஜி ஜெர்மனியின் பாசிஸ்ட் தேசியவாதம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய தேசியவாதம், வியட்நாம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர தேசியவாதம், மதச்சார்பற்ற அரசு தேசியவாதம், ஈரான் நாட்டின் சமயகுருமார்களின் தேசியவாதம் என்று எண்ணற்ற தேசியவாதங்கள்.

எங்கெல்லாம் தேசியவாதங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தேசியவாதம் குறித்த பொருள் குறித்தும் எண்ணற்ற சண்டை சச்சரவுகளும் உண்டு. தேசிய வாதத்தின் ஒரு வகை, மற்றோர் வகையால் தோற் கடிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதும் ஒரே நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதெல்லாம், உலகில் பலநாடுகளில், நாட்டின் குணாம்சத்தை வடிவமைப்பதில் அந்நாட்டில் பெரும் பான்மையாகவுள்ள மதத்தையும் இணைத்துக் கொள்வது என்பதும் புதுப்பாணியாக மாறி இருக்கிறது. யூத சமயத்தை ஒரு நாட்டினர் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், சில நாடுகளில் இஸ்லாமை தூக்கிப் பிடிக்கிறார்கள், இங்கே இந்துயிசத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். வேறொரு நாட்டில் கத்தோலிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமே இந்திய தேசியவாதத்திற்கான உண்மையான உள்ளடக்கமாக இருக்க முடியும்

முதலாளித்துவம் உலகளாவிய அளவில் செயல் பட்டாலும், தேசிய எல்லைக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்டு பிரகடனம் வலியுறுத்துவது, இன்றும் பொருத்தமாக உள்ளது.

அய்ஜாஸ் அகமது அவர்கள் “கோட்பாட்டில்: வர்க்கங்கள், தேசங்கள், இலக்கியங்கள்” (IN THEORY: Classes, Nations, Literatures)) எனும் புகழ்பெற்ற நூலில் “இந்தியா குறித்து மார்க்ஸ்” கட்டுரையில் (றி-230) பின்வருமாறு எழுதுகிறார்:

இந்திய வரலாற்று வரைவியலில் காலனியத்தின் முற்போக்கு வளர்ச்சிப் பாத்திரம் குறித்து, தொகுத் தெழுதியவரும், இந்திய பூர்ஷ§வா அறிவுஜீவிகளின் காலனிய எதிர்ப்புச் சிந்தனையை மிக விரிவாக ஆவணப் படுத்தியவரும் அதற்காகவே “அதிகம் தேசியவாதம் பேசுபவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளானவருமான முன்னணி வரலாற்றாசிரியர், பிபன்சந்திரா” எனக் குறிப்பிட்டுவிட்டு.

...பெரும்பாலான ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுத் தாளர்கள் மார்க்ஸை ஒத்துக்கொள்வர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அமைப்பு மாற்றங்கள் செய்தனர் என் கின்ற உண்மையை ஒருவர் விடாமல் எல்லோரும் ஒத்துக்கொண்டனர்; அம்மாற்றங்களை வரவேற்கவும் செய்தனர்... அவர்களுடைய விமர்சனமெல்லாம் இந்திய பாரம்பரிய சமூக ஒழுங்கை ஆங்கிலேயர் சிதைத்துவிட்டனரென குற்றஞ்சாட்டுவதிலில்லை. மாறாக அம்மாற்றங்கள்-புதிய கட்டுமானங்கள்- மந்தமாக நடைபெற்றன, வெறுப்பூட்டின, தடுக்கப் பட்டனவென்றுதான் விமர்சித்தனர்... ஸி.சி.தத், தாதாபாய் நௌரோஜி, மற்றும் ராணடே தொடங்கி ஜவஹர்லால் நேரு, R.P.தத் வரைக்குமான ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுத்தாளர்கள் எவரும் பிரிட்டிஷ§க்கு முந்தைய பொருளாதார அமைப்புகள் சிதைக்கப் பட்டதைக் கண்டிக்கவேயில்லை.

நேர்மையான மனிதனின் இரக்க குணத்தின்பால் மனிதாபிமான அடிப்படையில் உதாரணமாக மார்க்ஸ் ஒருவர்தான் “ஏழை இந்துக்கள் தங்களுடைய பழைய உலகை இழந்து நின்றனர்” என்று சுட்டிக்காட்டினார்...

“பிபன் சந்திராவின், “பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்திய பொருளாதார வரலாறு மறுவாசிப்பு” எனும் கட்டுரை - நவீன இந்தியாவில் தேசியவாதமும் காலனியமும் எனும் அவருடைய நூலில் மறு வெளியீடு செய்யப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டியுள்ளார்.

Pin It