அனுப்புனர்: புரசை கோ. தமிழேந்தி, ஆ/வ-33, அமைப்பாளர் - திருவள்ளுவர் செந்தமிழ்ப் பேரவை, 155, 5ஆவது தெரு, 'ஆஃ பகுதி, சிவசண்முகபுரம், புரசைவாக்கம், சென்னை - 600 007.

பெறுநர்: ஆசிரியர் "கவிதாசரண்”

பெருமதிப்பிற்குரிய அய்யா,

பொருள் : சாதிவெறியர் மற்றும் காவல்துறையின் அதிகார அத்துமீறலுக்கு எதிராக இப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ள செய்தியை தங்கள் இதழ் செய்தியில் வெளியிட்டு, எங்களுக்கு நீதி பெற்றுத்தர கோருதல் தொடர்பாக.

வணக்கம். மேற்கண்ட புரசை கோ. தமிழேந்தி, என்னும் நான் 22.03.2007, வியாழக்கிழமை காலை சுமார் 10.15 மணியளவில், எண்.2, சிறுவள்ளூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை-600 011 இல் உள்ள பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தில், தென்னக இரயில்வே தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்.

எண்.285-ஏ, பணந்தோப்பு இரயில்வே குடியிருப்பு 5ஆவது தெரு, அயன்புரம், சென்னை-600 023 இல் குடியிருக்கும் மேற்கண்ட தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், ரயில்வே ஊழியருமாகிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த வித்யாவதி, பெ/வ-48 (க/பெ. மனோகரன்) என்பவர் என்னிடம் கொடுத்து கொடுக்கச் சொன்ன (ஏன் தயங்குகிறீர்கள் விரைவில் தீர்வு காணுங்கள் 6500 உறுப்பினர்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்) என்கிற தலைப்பில் அடங்கிய விளக்க அறிக்கையை (இரண்டு பக்கம் கொண்டது), நானும் (கோ. தமிழேந்தி) எனது மனைவியும் (சென்னம்மாள்) மற்றும் எங்கள் பகுதியில் குடியிருக்கும் அய்யனார் என்கின்ற தம்பி ஆகிய மூன்று பேர் மேற்படி பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தின் நுழைவாயில் (கேட்டில்) நின்றுகொண்டு தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கச் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த உறுப்பினர்களிடம் கொடுத்துக்கொண்டு இருந்தோம்.

அப்பொழுது அங்கே இருந்த ஆச்சாரி சாதியை சார்ந்த தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வி. ஆறுமுகம், ஆ/வ-77, மற்றும் முதலியார் சாதியைச் சார்ந்த மேற்படி சங்கப் பொதுச் செயலாளர் சூரியபிரகாசம், ஆ/வ-43 மற்றும் இணைப் பொதுச் செயலாளர், பிள்ளை சாதியைச் சார்ந்த நல்லதுரை, ஆ/வ-43 ஆகியோரும் மற்றும் (பெயர் தெரியாத, அடையாளம் காட்டக்கூடிய பலர் எங்களை தர தரவென்று சங்க அலுவலகத்திற்குள் இழுத்துச்சென்று ''பறை நாய்களே இங்கே ஏண்டா வந்து இதை கொடுக்கிறீங்கள்” என்று சாதிப் பெயரைச் சொல்லி, மிகவும் இழிவாக ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்கள். மேலும் எங்களை சூழ்ந்து நின்றுகொண்டு சராமாரியாக அடித்து உதைத்தார்கள். மேலும் எனது மனைவி சென்னம்மாளை ஆளுக்கு, ஆள் கையை பிடித்தும், மேலாடையையும், தலைமுடியையும் பிடித்தும் இழுத்து மிகவும் கேவலமாக கொச்சையான ஆபாச வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தினார்கள்.

அப்பொழுது அங்கே வந்த கே-1, செம்பியம் காவல்நிலைய தலைமைக் காவலர் இரத்தினசாமி மற்றும் ஓட்டுநர் (பெயர் தெரியவில்லை. ஆனால் அடையாளம் காணக்கூடிய) ஆகியோரிடம் நடந்த நிகழ்வை சொல்லி புகார் கூறினோம். ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் எங்கள் மூவரையும் தர தரவென்று இழுத்துக்கொண்டு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மேற்படி கே-1, செம்பியம் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்கள்.

காவல் நிலையத்தில் அடைத்து வைத்து மேற்கண்ட தலைமைக் காவலர் எங்களைப் பார்த்து கண்டார ஓழிமொவனே, புண்ட மொவனே, வேசிமொவனே என்று தரக்குறைவான ஆபாச வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்தும், முதுகில் ஓங்கி, ஓங்கி குத்தினார். மேலும் ஓட்டேரி, சிவசண்முகபுரம் ஏரியா புத்தி அதான் உங்களை இப்படிச்செய்யச் சொல்லுது என்று திட்டி எட்டி, எட்டி பூட்ஸ் காலால் உதைத்தார். (இப்பகுதி முழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பறையர் சாதி மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) மேலும் என் பாக்கெட்டில் இருந்த கைபேசி, ரூபாய், முகவரி அட்டை மற்றும் அடையாள அட்டைகளை எடுத்துக் கொண்டார்.

மேலும் என் மனைவியை (சென்னம்மாள்) பார்த்து பொம்பளையாடி நீ தேவடியா மாதிரி இருக்க, தேவடியா தொழில் செய்யறத்துக்கா வந்தே என்றும், இன்னும் மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொடுமைப்படுத்தினார். மேலும் உங்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளிடுவோம் என்றும் எங்களை கடுமையாக மிரட்டினார். அப்பொழுது சிறிது நேரத்திற்குள் காவல் நிலையத்திற்கு வந்த நிலைய ஆய்வாளர் கே. சிவமணி மற்றும் உதவி ஆணையாளர் கே. ராஜாராம் ஆகியோரும் மேற்படி வார்த்தைகளால் திட்டினார்கள்.

அப்பொழுது நான் சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் எழுதிக்கொடுத்தேன். ஆனால் என் புகாரை பதிவு செய்யாமல் எங்களைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசிய நல்லதுரை தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கும்பல் காவல் நிலையத்திற்குள் வந்து காவலர்கள் முன்னிலையிலேயே எங்களை மிரட்டித் தாக்கினார்கள். மேலும் தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சாதி வெறியர்களுக்கு சாதகமாக அவர்களிடம் புகாரைப் பெற்று பதிவு செய்து, ரசீதும் கொடுத்து அனுப்பினார்கள். ஆனால் தலைமைக் காவலரே ஏற்கனவே எழுதி வைத்திருந்த தாளில் என்னிடம் வற்புறுத்தி கையெழுத்து பெற்றுக்கொண்டார். மேலும் எங்களை (அடையாளம் காட்டக்கூடிய) காவலர்கள் மாறி மாறி விசாரித்து துன்புறுத்தினார்கள். எங்கள் தரப்பு நியாயத்தையும், நாங்கள் கொடுத்த புகாரையும் பதிவு செய்ய மறுத்ததுடன் எங்களை கடுமையாக மிரட்டினார்கள்.

மேலும் எங்கள் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கவும் அனுமதி மறுத்து விட்டார்கள். மேலும் என்னையும், என் மனைவியையும் மற்றும் என்னுடன் வந்திருந்த அய்யனார் ஆகிய மூன்று பேரையும் காலையில் இருந்து மாலை வரை தண்ணீர் கூட கொடுக்காமல் காவல் நிலையத்திலேயே அடைத்துவைத்திருந்து வெள்ளைத் தாளிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்கள்.

எனவே இதன் தொடர்பாக தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி), சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், மாநில மனித உரிமை ஆணையம், மாநில மகளிர் ஆணையம், மாநில தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம் ஆகியோருக்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் - 1889 (சட்ட எண்.33/1989) பிரிவு 3, (III), X, XI. பிரிவு-4இன் படியும் “Harrasment Act ”இன் படியும் ''இந்திய தண்டனைச் சட்டத்தின்” நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனுவை தந்தி மூலமாகவும் தொலைநகல் மூலமாகவும் கூரியர் மூலமாகவும் அனுப்பி வைத்தோம். ஆனால் இதுவரையில் புகார் மனுமீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியதால் கே.1, செம்பியம் காவல் நிலைய காவலர்கள் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும், புகாரில் குறிப்பிட்டுள்ள சாதி வெறியர்கள் எங்களை கொலை செய்வதாகவும் மிரட்டி வருகிறார்கள். எனவே சாதிவெறியர் மற்றும் காவல்துறையின் அதிகார அத்துமீறலுக்கு எதிராக இப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ள செய்தியை தங்கள் இதழ் செய்தியில் வெளியிட்டு, எங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள
(கோ. தமிழேந்தி)
நாள் : 22.3.2007
இடம் : சென்னை-7.

Pin It