statues 450மனித வளமும், நில வளமும், நீர் வளமும் நிறைந்த இந்தியா மிக நீண்ட ஒரு வரலாற்றுப் பெருமையுடையது. இந்திய வரலாற்றைப் பொது வாகத் தகவல்களின் அடிப்படையில் ஒருங்கிணைத்து ஒரு வகையான ஊக வடிவத்தைக் கொடுப்பதே கல்வியாளர்களின் நடைமுறைச் செயலாக இருந்து வருகிறது. இதனால், நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்திய வரலாறு குறித்த தெளிவான ஒரு கண்ணோட்டம் அமையவில்லை. இதுவே, உலகின் பொதுவான மரபாக இருப்பதை அறிஞர்கள் அங்கங்கே, அவ்வப்போது இனம் கண்டு அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே இந்த வகையில் அறிஞர் ஹெகல் வரலாறு குறித்து வெளிப்படுத்தும் கருத்து ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டக்கூடியதாக உள்ளது. “வரலாற்றிலிருந்து நாம் எந்த ஒன்றையும், எந்தக் காலத்திலும் கற்றுக் கொள்வதே இல்லை” என்கிறார் அவர்.

ஆழ்ந்து, கூர்மையான ஈடுபாட்டுடன் கவனத்திற்கு உள்ளாக்கப்படக்கூடிய ஒன்றாக வரலாறு உள்ளது. காரணம், வரலாற்றினூடாக மனிதன் தான் வாழும் உலகத்தைத் தொடர்ந்து புதுப்பித்து மாற்றங்களை நிகழ்த்தி வருகிறான். வியக்கத் தகுந்த மனித ஆற்றல்களை வரலாற்றின் வழியாக மட்டுமே நாம் உணர முடிகிறது. மனித இன வரலாற்றின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது. தனித்தன்மை வாய்ந்தது. இதை சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் தகுந்த அடிப்படைகளிலிருந்தும் ஆவணங்களிலிருந்தும் சேகரித்து ஆர்.எஸ். சர்மா ‘பண்டைய இந்தியா’ என்ற வரலாற்று ஆய்வை வடிவமைத்திருக்கிறார். இது இந்தியாவின் தனித்தன்மையை ஆழமாகவும், விரிவாகவும் புரிந்துகொள்ள வழி வகுக்கிறது. இனம், மொழி, நிறம், கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை போன்றவற்றில் பன்முகத்தன்மை கொண்டது இந்திய மக்களின் வாழ்க்கை. அனைத்துத் தனித்தன்மைகளும் தாராளமான முறையில் ஒருங் கிணைக்கப்பட்டு இந்திய வரலாறு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அதைப்பற்றி ஆர்.எஸ். சர்மா தெளிவாகவே இந்த வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்: “பண்டைய இந்திய வரலாறு சுவைமிக்கது. மிகுந்த ஆர்வத்தைக் கிளர்த்திவிடக் கூடியது. பலதரப்பட்ட இனமரபுக் குழுக்களின் ஒரு அடக்குகையாக இந்தியா திகழ்ந்து வந்திருப்பதே இதற்குக் காரணம். ஆரியர்களுக்கும் முற்பட்ட இனத்தவர்கள், இந்தோ - ஆரியர்கள். கிரேக்கர்கள், சிந்தியர்கள், ஹீணர்கள் முதலான பலரும் இந்தியாவைத் தாயகமாக வரித்துக் கொண்டனர். இந்தியாவின் சமூக அமைப்பும், கலையும், இலக்கியமும், கட்டிடக் கலையும் பரிணாம வளர்ச்சியுறுவதற்கு ஒவ்வோர் இனமரபுக் குழுவும் துனக்குரிய பங்கை ஆற்றியிருக்கிறது. இந்த மக்களும், அவர்களுடைய கலாச்சாரத் தனித்தன்மை களும் பிரிக்க முடியாதபடி பரஸ்பரம் பின்னிப் பிணைந்துள்ளன. ஒன்றுடன் ஒன்று கலந்து போய் உள்ளன. இதனால், தற்போது இவற்றில் எதையும் தங்களது ஆதிவடிவம் என எவரும் பிரித்து இனம் காண முடியாது”. ஆகவே இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் இயல்புடைய ஒரு நாடாக வரலாற்றில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. இந்தக் கண்ணோட்டத்தையும், மதிப்பீடுகளையும் நிறுவி ஒரு சமூக வரலாற்றை அறிவியல் வடிவில் வழங்கி யுள்ளார் ஆர்.எஸ். சர்மா.

இந்த அடிப்படைகளில் பண்டைய இந்திய வாழ்க்கையைக் குறித்துத் தனது மதிப்பீடுகளைத் தகுந்த ஆதாரங்களோடு இவர் நிறுவுகிறார்: பண்டைய இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் அல்லது கூறு, வடக்கையும், தெற்கையும், கிழக்கையும், மேற்கையும் சேர்ந்த கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, பிணைந்து கலந்திருப்பதாகும். ஆரிய அம்சங்கள் வடபுலத்தின் வேதகால மற்றும் சமஸ்கிருதக் கலாச்சாரத்தையும் ஆரியரல்லாத அம்சங்கள் தென்புலத்தில் திராவிட மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தையும் குறிக்கின்றன. ஆனால், கி.மு. 1500- 500 காலப் பகுதியைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் வேத நூல்களில் ஆங்காங்கு பல திராவிடச் சொற்களும், சமஸ்கிருதமல்லாத சொற்களும் இடம் பெற்றிருக்கின்றன. அவை வேத காலத்தைச் சாராது இந்திய தீபகற்பத்துடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கருத்துக்களையும், அமைப்புக்களையும், விளை பொருள்களையும், குடியேற்றங்களையும் குறிப்பவை.

இவ்வாறே கங்கைச் சமவெளியில் உருவான அநேக கருத்துக்களையும் அமைப்புக்களையும் குறிக்கும் பல பாலி மொழிச் சொற்களும், சமஸ்கிருதச் சொற் களும் ஏறத்தாழ கி.மு. 300- கி.பி. 600 காலப் பகுதியைச் சேர்ந்த சங்க கால இலக்கியம் எனப்படும் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. ஆரியர்கள் அல்லாத பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்த கிழக்குப் பிராந்தியமும் இதில் தனது பங்கை ஆற்றியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் முண்டா அல்லது கோலர் மொழிகளைப் பேசி வந்தனர். பருத்தி, நீர் வழிப் போக்குவரத்து, தோண்டு கருவி போன்றவை சம்பந்தப்பட்ட பல சொற்கள் முண்டா மொழியி லிருந்தே இந்தோ - ஆரிய மொழிகளில் எடுத்தாளப் பட்டிருக்கின்றன என்று மொழியியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.”

தொடர்ந்து, இந்தியாவில் தோன்றி வளர்ந்து, நிலைபெற்ற சமயங்களைப் பற்றிய கருத்துக் களையும் ஆர்.எஸ்.சர்மா தெளிவுபடுத்துகிறார்: “தொன்னெடுங்காலமாகவே இந்தியா பற்பல சமயங்களைத் தன்னகத்தே கொண்ட நாடாக இருந்து வந்திருக்கிறது. பண்டைக் கால இந்தியாவில் இந்து சமயம், ஜைனம், பௌத்தம் ஆகிய சமயங்கள் பிறந்தன. எனினும் இந்தக் கலாச்சாரங்கள், சமயங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால், மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசிய போதிலும், வெவ்வேறு சமயங்களை ஆதரித்த போதிலும், பல தரப்பட்ட சமூகப் பழக்க வழக்கங் களைக் கடைப்பிடித்த போதிலும் அவர்கள் நாடெங்கிலும் ஒரு குறிப்பிட்ட பொது வாழ்க்கைப் பாணியைப் பின்பற்றி வருவதைக் காண்கிறோம். மிகுந்த வேறுற்றுமைக்கு இடையேயும் ஆழமான ஒற்றுமை நிலவுவதை நமது நாடு காட்டுகிறது.”

மேலும், அவர் இந்தியாவின் கீழ்நிலைமையைப் பற்றியும் தொடர்ந்து குறிப்பிடுகிறார்: “பண்டைய இந்தியர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இத்தகைய முன்னேற்றங்கள் இன்றைய விஞ்ஞான தொழில் நுட்ப சாதனைகளோடு நாம் போட்டியிடுவதற்கு நமக்குத் துணை புரிய முடியாது. பண்டைய இந்திய சமுதாயம் சமூக அநீதி என்னும் மிகக் கொடிய, படு மோசமான நோயால் பீடிக்கப்பட்டிருந்தது என்பதை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. கீழ்த்தட்டு வர்க்கத்தினர், அதிலும் குறிப்பாக, சூத்திரர்களும், தீண்டப்படாதவர்களும் எண்ணற்ற கோரக் கொடுமை களுக்கு, அக்கிரமங்களுக்கு ஆளாகியிருந்தனர். அவற்றை நினைத்தால் இன்றைய உள்ளம் மிகுந்த அதிர்ச்சியுறும். பழைய வாழ்க்கை முறையை மீண்டும் கொண்டு வருவது அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் புத்துயிரூட்டி அவற்றை மேலும் வலுவடையவே செய்யும் நாகரிகத்தை நோக்கி பண்டைய இந்தியாவின் முன்னேற்றத்துடன் கூடவே சமூக ஏற்றத் தாழ்வு களும் வளர்ந்து வந்தன.”

“கடந்த காலத்தின் இத்தகைய எச்சங்கள் சமுதாயத்திலிருந்து அகற்றப்பட்டாலொழிய இந்தியா துரித கதியில் முன்னேற முடியாது. சாதி அமைப்பு முறையும், குறுகிய மனோபாவமும், ஜனநாயக ரீதியில் நாடு முன்னேறுவதற்கும், தேச ஒருமைப்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக உள்ளன. சாதியத் தடையங்களும், தப்பெண்ணங்களும் படித்த வர்க்கத்தினர்கூட உடல் உழைப்பின் உண்மையான மதிப்பைப் பாராட்டாதபடி தடுக்கின்றன. பொது இலட்சியத்துக்காக நம்மிடையே ஒற்றுமை ஏற்படு வதற்குக் குறுக்கே நிற்கின்றன. பெண்களுக்கு, வாக்குரிமையும் தன்னுரிமையும் அளிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களது பன்னெடுங்காலக் கீழ்ப்பட்ட நிலைமை சமூக முன்னேற்றத்தில் தமக்குரிய பங்கை ஆற்ற முடியாதபடி அவர்களைத் தடுக்கிறது. பண்டைய இந்தியா பற்றிய ஆய்வு இந்தச் சீர்கேடுகளின் மூல காரணங்களை, ஆணிவேர்களைக் கண்டறிவதற்கு உதவுகிறது.

பண்டைக்கால வரலாறு பதிவு செய்யப்பட்ட முறைகளை ஆர்.எஸ். சர்மா விவரிக்கிறார்: கல்வி கற்ற இந்தியர்கள் தங்கள் நாட்டின் மரபுவழி வரலாற்றைக் கையால் எழுதப்பட்ட இதிகாசங்கள், புராணங்கள், வாழ்க்கை வரலாறுகள் என்னும் வடிவத்தில் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், பண்டைக்கால இந்திய வரலாறு குறித்த தற்கால ஆராய்ச்சி பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமாயிற்று. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அமைத்த காலணியாதிக்க நிர்வாகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டே இந்த ஆய்வு தொடங்கியது.

1765-இல் வங்காளமும், பீகாரும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுமையின்கீழ் வந்தபோது, இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருப்பதைக் கண்டனர். எனவே, அந் நாட்களில் மிகவும் அதிகார உரிமை படைத்ததாகக் கருதப்பட்ட மனுதர்ம நூல் 1976-இல் இந்தச் சட்டத் தொகுப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர், இந்துக்களின் சிவில் சட்டங்களைச் செயல்படுத்து வதில் இந்து சமய சாத்திர வல்லுநர்களான பண்டிதர்களும் முஸ்லீம் சட்டங்களை நடைமுறைப்படுத்து வதில் மௌல்விகளும் பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு துணையாக இருந்தனர். பண்டைய சட்டங்களையும் பழக்க வழக்கங்களையும் புரிந்து கொள்ளும் ஆரம்ப கால முயற்சிகள் அநேகமாக பதினெட்டாம் நூற்றாண்டு வரை நீடித்தன.

இதன் விளைவாக 1784-இல் கல்கத்தாவில் வங்காள ஆசியக் கழகம் நிறுவப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த சர். வில்லியம் ஜோன்ஸ் என்ற அதிகாரிதான் இந்தக் கழகத்தை நிறுவினார்.” காலனிய ஆதிக்கத்தின் விளைவாக பழமை வாய்ந்த இந்திய வாழ்க்கையும், வரலாறும் புதிய வடிவங்களைப் பெறத் தொடங்கின.

தொடர்ந்து “இந்தியவியல் ஆராய்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் ஜெர்மன் அறிஞரான எப். மாக்ஸ் முல்லரே. அவர் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இங்கிலாந்தில் கழித்தார். 1857-ஆம் வருட எழுச்சி பிரிட்டிஷாருக்குப் பல உண்மைகளை உணர்த்துவதாக இருந்தது. தாங்கள் ஆளவேண்டி யுள்ள அன்னிய மக்களின் பழக்க வழக்கங்களையும், சமூக அமைப்புக்களையும் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம் என்பது பிரிட்டனில் பெரிதும் உணரப்பட்டது. இதே போன்று, கிறித்துவ மயத்திற்கு பல இந்துக்களை ஈர்க்கும் பொருட்டும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தும் பொருட்டும் இந்து சமயத்திலுள்ள பலவீனமான அம்சங்களைக் கண்டறிய கிறித்துவ சமயப் பரப்பாளர்கள் விரும்பினர்.

இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மாக்ஸ் முல்லரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பண்டைய இந்து சமய நூல்கள் பிரம்மாண்ட அளவில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. கீழை நாட்டுப் புனித நூல்கள் வரிசையில் மொத்தம் ஐம்பது தொகுதிகள் பிரசுரிக்கப்பட்டன. இவற்றில் சில தொகுதிகள் அநேக பாகங்களைக் கொண்டவை. இவற்றில் சில சீன, ஈரானிய நூல்கள் அடங்கியிருந் தாலும் உண்மையில் பண்டைய இந்திய நூல்கள்தான் இந்த வரிசையில் பிரதான இடத்தை வகித்தன. இத்தகைய பொதுவான கருத்துக்களில் பல வின்சென்ட் ஆர்தர் மித் எழுதிய ‘இந்தியாவின் ஆரம்பகால வரலாறு’ என்ற நூலில் இடம்பெற்றன.

இரத்தினச் சுருக்கமாகக் கூறினால், இந்திய வரலாறு குறித்த பிரிட்டிஷ் கண்ணோட்டங்கள், இந்தியாவின் குணநலன்களை இழிவுபடுத்துவ தாகவும், இந்தியாவின் சாதனைகளைச் சிறுமைப் படுத்துவதாகவும், காலனியாதிக்க ஆட்சியை நியாயப்படுத்துவதாகவுமே இருந்தன. சீனர்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் காலக்கணிப்பு உணர்வு எதையும் வலுமிக்க வகையில் வெளிப்படுத்தி யதாகத் தோன்றவில்லை. ஆரம்ப கட்டத்தில் கௌதம புத்தரின் மறைவை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் காலக் கணிப்புச் செய்யப்பட்டன. இது, எப்படியிருந்த போதிலும் வரலாற்றாசிரியர்கள் தெரிவித்த பொதுக் கருத்துக்கள் தவறானவையாகவோ அல்லது பெரிதும் மிகைப் படுத்தப்பட்டவையாகவோ இருந்தன.

இது போன்ற ஓர் அறிதலையும், புரிதலையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பிற வகையான பல்வேறு இந்திய வரலாறுகளில் காணப்படும் ஆதாரங்களையும், ஆவணங்களையும் முறைப்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் தொகுத்து ஒரு புதிய கண்ணோட்டத்தில் தனது பண்டைக்கால இந்தியாவை வடிவப்படுத்தியிருக்கிறார் ஆர்.எஸ். சர்மா.

centurystatues 600அரசியல் சார்பற்ற வரலாற்றுக்கு மாறுபட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து அவர் தனது மதிப்பீட்டை முன்வைக்கிறார்:

“சமஸ்கிருத நிபுணரான ஏ.எஸ். பாஷாம், பண்டைக்கால இந்தியாவை இன்றைய கண்ணோட்டத்தி லிருந்து நோக்குவது விவேகமல்ல என்று கருதினார். சில புறக்கோட்பாட்டுப் பிரிவினரின் லோகாயுதக் கோட்பாட்டில் அவர் ஆழ்ந்த அக்கறை காட்டி வந்ததை அவரது ஆரம்பகால எழுத்துக்கள் காட்டுகின்றன. பின்னர் ஆர்வத்தின் பொருட்டும் மன மகிழ்வுக்காகவும் கடந்த கால வரலாற்றைப் படிக்க வேண்டுமென்று அவர் கருத்துத் தெரிவித்தார். ‘இந்தியா என்ற அவரது நூல் இந்தியக் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் பல்வேறு அம்சங்களைப் பரிவுணர்வோடு ஆராய்கிறது. வி.ஏ. ஸ்மித் போன்ற ஏனைய பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் நூல்களில் தொற்றிக் கொண்டிருக்கும் ஒருதலைப்பட்சமான கருத்துக்களை இந்நூலில் காண முடியாது.

“பாஷாவின் நூல் அரசியல் வரலாற்றிலிருந்து அரசியல் அல்லாத வரலாற்றுக்கு மேற்கொள்ளப் பட்ட ஒரு மாபெரும் மாற்றத்தைக் குறிக்கிறது. ‘இந்திய வரலாற்று ஆய்வுக்கு ஒரு முன்னுரை’ என்ற டி.டி. கோசாம்பியின் நூலிலும் இந்த மாற்றத்தைக் காணலாம். வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பண்டைக் கால இந்தியாவின் நாகரிகம் என்ற நூலும் இதே மாற்றத்தைப் பிரதிபலித்தது. கோசாம்பி இந்திய வரலாற்றில் ஒரு புதிய தடத்தைப் பின்பற்றினார்.

வரலாற்றைப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தி லிருந்து அவர் ஆராய்ந்தார். காரல் மார்க்சின் நூல் களிலிருந்து இந்தக் கண்ணோட்டத்தை அவர் பெற்றார். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மற்றும் அவற்றிடையேயான உறவுகள் என்ற அடிப் படையில் பண்டைய இந்திய சமுதாயம், அதன் பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றின் வரலாற்றை அவர் முன்வைக்கிறார். குலமரபு மற்றும் வர்க்க இயக்க நிகழ்வுகளின் அடிப்படையில் சமூக, பொருளாதார வளர்ச்சிக் கட்டங்களைக் காட்டும் முதல் ஆய்வு நூலாகும் அவருடைய இந்த நூல். பாஷாம் உட்பட பல ஆராய்ச்சி அறிஞர்களின் கடும் விமர்சனத்திற்கு அவர் ஆளானாலும், அவரது நூல் தொடர்ந்து ஏராளமானோரால் படிக்கப்பட்டு வருகிறது.” அதைச் செழுமைப்படுத்தும் வகையில் ஆர்.எஸ். சர்மாவின் ‘பண்டைக் கால இந்தியா’ அமைந்துள்ளது.

தன்னுடைய நூலான இதற்குத் தகுந்த ஆதாரங்களை அடையாளம் காட்டித் தெளிவான கண்ணோட்டத்தை முதன்மைப்படுத்துகிறார். தகுந்த அளவில் தடயங்கள், நாணயங்கள், செதுக்குப் பொறிப்புகள், இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டுத் தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து தனது மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.

‘இந்தியாவின் நிலவியல் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்ளாமல் அதன் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது’ என்ற கருத்தை முன்வைத்து அதன் பின்னணியையும், தனித்தன்மையையும் அடையாளப்படுத்துகிறார். இந்தியத் துணைக் கண்டம் நன்கு ஒழுங்கமைப்பட்ட ஒரு நிலவியல் அமைப்பாகப் பெரும்பாலும் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் வரலாற்றில் பருவக் காற்று ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்பதை குறிப்பிட்டு இயற்கை வேளாண்மையே இந்தியாவின் அடிப்படைத் தொழில் என்பதையும் இனம்காட்டு கிறார்.

‘கற்காலம்: ஆதிமனிதன்’ என்ற தலைப்பின்கீழ் ‘பழங்கற்காலம்: வேட்டையாடுபவர்களும் உணவு சேகரிப்பவர்களும்’ பற்றித் தனது விரிவான ஆய்வை பழங்கற்காலக் கருவிகள், கைக்கோடரிகள், வெட்டுக் கத்திகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு விளக்குகிறார்.

அதைப் போலவே, புதிய கற்காலத்தில் உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் தோன்றி வளர்ந்த முறைகளையும் தெளிவுபடுத்துகிறார்.

தொடர்ந்து, ‘புதிய கற்காலத்தில் இறுதியில் உலோகங்கள் பயன்படுத்தலாயின. இவ்வகையில் செம்புதான் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோக மாகும். இதனைத் தொடர்ந்து கற்கருவிகளையும், தாமிரக் கருவிகளையும் பயன்படுத்துவதை அடிப் படையாகக் கொண்ட கலாச்சாரங்கள் தோன்றின’ என்று வரலாற்று வளர்ச்சியை அடையாளப்படுத்து கிறார்.

மேலும், ‘ஹரப்பா கலாச்சாரத்தில் வெண்கல யுக நாகரிகம் நிலவி வந்ததைக் குறிப்பிட்டுக் கலாச்சார வளர்ச்சியை இனம் காட்டுகிறார்.’

அதன் பின்னணியில் பிராணிகள் வளர்ப்பு, தொழில்நுட்பம், கைவினைத் தொழில்கள், வாணிகம், அரசியல் அமைப்பு, சமய வினை முறைகள் போன்றவற்றின் மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் தகுந்த ஆதாரங்களோடு விவரிக் கிறார்.

தொடர்ந்து ‘ஆரியர்களின் வருகையையும், ரிக் வேத காலத்தையும்’ விளக்கி வரலாற்றின் தொடர்ச்சியை இனம் காண்கிறார்.

தனித்தனியான இயல்களாக தனது ‘பண்டைக் கால இந்தியா’வை வடிவமைத்துள்ள ஆர்.எஸ். சர்மா ஒவ்வொரு இயலின் கீழும் வரலாற்று மாற்றங்களை விவரிக்கிறார். பிந்தைய வேதகாலம், ஜைனமும் பௌத்தமும், பிரதேச அரசுகளும், முதல் மகதப் பேரரசும், ஈரானிய மற்றும் மாசிடோனியப் படையெடுப்புகள், புத்தர் காலத்தில் அரசும் வருண சமுதாயமும், மௌரியர்கள் காலம், மௌரிய ஆட்சியின் முக்கியத்துவம், மத்திய ஆசியத் தொடர்பு களும் அவற்றின் பயன்களும், தாதவாகனர் காலம் தொலைநோக்கில் வரலாற்றின் விடியல், மௌரியர் களுக்குப் பிந்திய காலத்தில் கைவினைத் தொழில் களும் வணிகமும், நகரங்களும், குப்தப் பேரரசின் தோற்றமும், வளர்ச்சியும், குப்தர் காலத்திய வாழ்க்கைப் பாணி, கிழக்கு இந்தியாவில் நாகரிகம் பரவுகிறது, ஹர்ஷரும் அவருடைய காலமும், தீபகற்கத்தில் புதிய அரசுகளின் உதயமும் கிராமப்புற விரிவாக்கமும், வேறுபட்ட சித்தாந்தப் போக்குகள், ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் கலாச்சாரத் தொடர்புகள், பண்டைய வளர்ச்சிக் கட்டத்தில் மாற்றம், சமூக மாற்றங்களின் நிகழ்வுப் போக்குகள், விஞ்ஞானத்திலும், நாகரிகத்திலும் மரபு வழி அம்சம்’ போன்ற தலைப்புக்களின் வாயிலாக, ஏராளமான தகவல்களையும், ஆதாரங்களையும், ஆவணங்களையும் முன் வைத்து இதுவரை அறியப் படாத ஒரு ‘பண்டைக்கால இந்தியா’வை ஆர்.எஸ். சர்மா அடையாளப்படுத்துகிறார்.

“இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவராகத் திகழ்ந்த பெருமையும் ஆர்.எஸ். சர்மாவைச் சேரும். ‘பண்டைக்கால இந்தியா’ என்பது அவரது பேனாமுனையிலிருந்து உதித்த மிகவும் புகழ்பெற்ற நூல். பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால், ஆன்றோர்களால், சான்றோர்களால் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்ட இந்த அறிய நூலுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை இந்திய அரசு 1977-இல் திரும்பிப் பெற்றுக் கொண்டுவிட்டது. எனினும் தவறு உணரப்பட்டு, 1980-ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.”

வாசித்து முடித்த பின் ‘பண்டைய இந்தியாவை’ப் பற்றிய புதிய புரிதல்களுக்கும், அறிதல்களுக்கும், தெளிவான உணர்தலுக்கும் உள்ளாவோம். வாசிப் பதற்கு உகந்த வகையில் தெளிவான மொழிநடையில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

பண்டைக்கால இந்தியா

ஆர்.எஸ்.சர்மா

தமிழில்: ரா.ரங்கசாமி (மாஜினி)

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொலைபேசி எண் : 044-26359906

ரூ. 320/-

Pin It