இலக்கியம் படைப்பவர்களை மொழி, இனம், மதம், பால், வாழிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பகுத்துக் கூறுவர். அவ்வாறு பகுத்துக் கூறாது எழுத்தாளர்கள் என்ற பொதுத் தன்மையில் குறிப்பிட வேண்டும் என்ற கருத்து நிலவினாலும் பகுத்து வகைப்படுத்திப் பார்க்கும் பொழுதுதான் பொதுத் தன்மையில் இருந்து மாறுபட்டுச் சிறப்புக் கவனம் பெறுதல் சாத்தியமாகிறது.

இந்திய இலக்கியத் தளத்தில் ஆண் எழுத்தாளர்களைவிடப் பெண் எழுத்தாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்பெறுகின்றனர்.

ஐரோப்பியர்களின் வருகையினால் இந்தியாவில் ஏற்பட்ட கல்விக் கொள்கையின் மாற்றத்தால் பெண்கள் சுதந்திரமாக இலக்கியங்கள் படைக்கலாயினர். ஆனால் இன்றும் இந்தியச் சூழலில் பெண் எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட அளவே எழுதுகின்றனர். குடும்பம், மதம் முதலான சமூக நிறுவனங்கள் பெண்கள் எழுதுவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தி வருவதை இதற்குக் காரணமாகக் கூறலாம்.

குறிப்பாகக் கட்டுப்பாடுகள் மிகுதியும் உள்ள இஸ்லாம் சமூகத்திலிருந்து வெளிச்சத்திற்கு வரும் பெண் எழுத்தாளர்கள் அரிது. கட்டுப்பாடுகள் மிகுந்த சூழலிலிருந்து தடைகளையெல்லாம் கடந்து எழுத முன்வரும் எழுத்தாளர்களின் வாழ்வும் படைப்பும் வரலாற்று ஆவணமாக மாறுகிறது. காலம் கடந்து போக முடியாத பக்கங்களாக அவர்களது படைப்புகள் இருக்கும்.

வரலாற்றில் பெண் எழுத்தாளர்களின் பெருமிதமாக அவர்கள் மிளிர்வர். அவ்வாறான இலக்கிய ஆளுமைதான் உருது இஸ்லாம் பெண் எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய்.

இஸ்மத் சுக்தாயின் பிறப்பும் வாழ்வும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் மிர்ஜா காசிம் பெக் சுக்தாய், நஸ்ரத் பேகம்  தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் இஸ்மத் சுக்தாய். சிறு வயதிலிருந்தே தன்னுடைய சகோதரிகளால் வளர்க்கப் பெற்ற சுக்தாய் சகோதரிகள் திருமணமாகிச் சென்ற பின்னர் பெரும்பாலான நேரத்தைத் தன்னுடைய சகோதரர்களுடன் செலவழித்தார்.

சுக்தாய்க்கு அவரது சகோதரிகள் உருது மொழியும் குர் - ஆனும் கற்றுக் கொடுத்தனர். பதிமூன்றாம் வயதில் சுக்தாய்க்குத் திருமணம் செய்வதென்று பெற்றோர்கள் முடிவு செய்த பொழுது சுக்தாய் தந்திரமாகத் தன்னுடைய மாமா மகனுக்குக் கடிதம் எழுதி ஒரு பொய்யான நிச்சயத்தை நடத்தித் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார்.

சுக்தாயின் படிப்புக்குப் பெற்றோர்கள் தடை விதித்தபொழுது அந்தத் தடைகளையெல்லாம் களைந்து கல்வி பயின்ற சுக்தாய் இளங்கலை பட்டத்தை லக்னோவில் உள்ள இஸபெல்லா துருபன் கல்லூரியில் 1933 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். பின்னர் அதே ஆண்டு இஸ்லாமியப் பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

ஒரு சில ஆண்டுகள் கழித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டத்தை நிறைவு செய்த சுக்தாய், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரிலுள்ள ராஜ்மஹால் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து பணிபுரிந்தார். இரண்டு பட்டங்கள் பெற்ற முதல் இந்திய இஸ்லாமியப் பெண் என அறியப் பெறும் இஸ்மத் சுக்தாய் 1933 முதல் 1941 வரை ஒன்பது ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

சுக்தாய் பள்ளி, கல்லூரியின் கல்வி நாட்களில் பர்தா அணிந்து செல்ல மறுத்ததோடு மட்டுமல்லாது அதனைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டம் படிப்பதற்கு எந்தப் பெண்களும் முன்வராத நிலையில் ஆண்களுடன் சேர்ந்து படித்தார். வகுப்பறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கும்.

பெண்கள் அந்தத் திரைக்குப் பின்னால் இருந்துதான் பாடம் கேட்க வேண்டும். ஆனால் சுக்தாய் இதனைப் பின்பற்றாமல் ஆண்கள் பகுதியில் அமர்ந்தே பாடம் கேட்டார். 

வீட்டில் நிச்சயம் செய்த திருமணத்தை மறுத்த இஸ்மத் சுக்தாய் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஹாகித் லத்தீப் என்பவரை 1942 இல் வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சீமா, சப்ரினா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே எழுத ஆரம்பித்த சுக்தாய், தமது ஆசிரியத் தொழிலை விடுத்து மும்பையில் நிரந்தரமாகக் குடியேறி முழு நேர எழுத்தாளராக மாறினார். சுக்தாய் 1991 இல் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தமது 76ஆவது அகவையில் மும்பையில் காலமானார்.

கரம் ஹவா என்ற திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான குடியரசுத் தலைவர் விருதும் (1973), சிறந்த இலக்கியப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (1976), தன்ஹாய் கா ஜஹர் என்ற நாடகத்திற்கு காலிஃப் விருதும் (1977), ஆந்திரப் பிரதேச உருது அகாதமியின் மக்தூம் இலக்கிய விருதும் (1979) இஸ்மத் சுக்தாய் பெற்றுள்ளார். இஸ்மத் சுக்தாய்க்கு சோவியத் குடியரசு 1982 ஆம் ஆண்டு சோவியத் லேண்டு நேரு விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.

இஸ்மத் சுக்தாயின் படைப்புகளும் சிறப்புக் கூறுகளும் 

சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, தன்வரலாறு எனப் பல இலக்கிய வடிவங்களிலும் படைப்புகள் படைத்துள்ள இஸ்மத் சுக்தாய் கதாசிரியர், தயாரிப்பாளர், வசன ஆசிரியர், இயக்குநர், நடிகர் எனத் திரைத் துறையிலும் இயங்கியவர்.

சுக்தாய் எழுதுவதற்குத் தூண்டுகோலாய் இருந்தவை ரஷீத் ஜோஹன் என்ற உருதுப் பெண் எழுத்தாளரும், அவரின் எழுத்துகளுமாகும். ரஷீத் ஜோஹன் வெளிப்படையாகப் பேசும் திறனைப் பார்த்துத் தானும் அவரைப்போல ஆக வேண்டுமென்று விரும்பினார். அதனால் லக்னோவில் படிக்கும் போதே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார்.

சுக்தாய் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நூல்களை வாசித்தார். லக்னோவில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் தான் புகழ்பெற்ற உருது எழுத்தாளர்களான பிரேம் சந்த், ஸஜ்ஜத் ஜாஹீர், ரஷீத் ஜோஹன், அஹமத் அலி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். மேலும் மார்க்ஸ், பிராய்டு முதலானோரின் அறிமுகத்தைப் பெற முற்போக்கு எழுத்தாளர்களின் தொடர்பு சுக்தாய்க்கு உறுதுணையாக இருந்தது. இவ்வாறாகத் தனது படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டு இலக்கிய ஆக்கங்களைப் படைக்கலானார்.

இஸ்மத் சுக்தாயின் படைப்புகள் 

இஸ்மத்  சுக்தாயின்  முதல் படைப்பு  ஃபஸாதி என்ற நாடகமாகும். இந்நாடகத்தை 1938 இல் எழுதியுள்ளார். இஸ்மத் சுக்தாயின் முதல் சிறுகதையான  லீஹாப் இவரை இலக்கிய உலகில் தனிப்பெரும் ஆளுமையாக அடையாளப்படுத்தியது. இச்சிறுகதை 1942இல் வெளிவந்தது.

இஸ்மத் சுக்தாய் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.

அவை எட்டுத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள் ஏக்பாத், தோ ஹாத் என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் புகழ்பெற்ற படைப்புகளாகக் கருதப் பெறுகின்றன.

பதினொரு புதினங்களையும் ககஜி ஹை பைரஹன் என்ற தன்வரலாற்று நூல் ஒன்றினையும் எழுதியுள்ள இஸ்மத் சுக்தாய் ஒன்பது நாடகங்களையும் நான்கு கட்டுரைத் தொகுப்புகளையும் படைத்தளித் திருக்கிறார். மேரா தோஸ்த் மேரா துஷ்மன், ஹம் லோக் முதலிய கட்டுரைத் தொகுப்புகள் புகழ் பெற்றனவாகும். திரைப்படங்களில் பணியாற்றி இருக்கும் சுக்தாயின் கரம் ஹவா எனும் சிறுகதை திரைப்படமாகவும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றுள்ள இஸ்மத் சுக்தாயின் படைப்புகள் 

இஸ்மத் சுக்தாயின் படைப்புகள் தமிழில் முழுத் தொகுப்பாக மொழிபெயர்க்கப்படவில்லை. இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இஸ்மத் சுக்தாயின் கதைகள் தமிழில் பன்னிரண்டு மட்டுமே மொழிபெயர்க்கப் பெற்றுள்ளதை அறியமுடிகிறது. அவற்றுள் பெரும்பாலும் இந்தியின் மூலமாகவும் ஆங்கிலத்தின் மூலமாகவுமே தமிழுக்கு மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன. உருதுவிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு 'இல்லத்தரசி' என்ற கதை மட்டுமே மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது.   

பாலியல், சமூகப் பிரச்சினை, அரசியல், கடந்த கால அழகை மறைக்கும் உலகம், பெண்களின் பிரச்சினைகள், நடப்பியல் நிகழ்வுகள் முதலானவை சுக்தாயின் கதைக் களங்களாக அமைந்திருந்தன. சுக்தாயின் முதல் சிறுகதையான லீஹாப் உருது இலக்கியத்தில் மட்டுமின்றி இந்திய இலக்கியத்திலும் அனைவரின் கவனத்தை ஈர்த்தப் படைப்பாகும்.

இச்சிறுகதை ஒரு மனைவியின் பாலியல் ஏமாற்றத்தையும் வேலைக்காரப் பெண்ணுடன் பாலியல் தோழமை கொண்டுள்ள ஒரு பெண்ணின் உறவைப் பற்றியும் பேசுகிறது. பேகம் ஜான் என்ற பெண்ணுக்கும் அவளின் பணிப்பெண் ரப்புவுக்கும் இடையில் இருக்கும் பாலியல் உணர்வைக் கூறும் இச்சிறுகதையைப் படித்ததும் விளிம்புநிலை மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஓரினச் சேர்க்கை குறித்த கதைக்களத்தை முற்போக்கானவர்களால் கூட முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இச்சிறுகதையை எழுதியது ஒரு பெண் என்று பலருக்கும் தெரியாது. இக்கதைக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. இச் சிறுகதையைத் தடை செய்ய வேண்டுமென்று சுக்தாய் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால் நீதிமன்றத்தில் சுக்தாய்க்கு ஆதரவான தீர்ப்புக் கிடைத்ததால் லீஹாப் சிறுகதையைத் தடை செய்ய முடியவில்லை. இக்காலக் கட்டத்தில் இந்திய இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்கள் எவரும் துணிந்து பேச இயலாத சில கூறுகளை இஸ்மத் சுக்தாய் எழுதியதாக அறியப்பட்டார். இதன் மூலம் உருது இலக்கியத்தின் முற்போக்கு இயக்கத்துக்கு ஒரு புது வழியைக் காண்பித்தவராக இவரைக் கூறுவர்.

சுக்தாயின் கதைக்களம் முற்றிலும் புதியதொரு சிந்தனையை முன்வைத்தே அமைந்திருந்தது. பொது வாகப் பெரும்பாலான எழுத்தாளர்கள் வயதான செல்வச் செழிப்பான ஆண், இளம் வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதைத் தங்கள் எழுத்துகளில் பதிவு செய்வார்கள். ஆனால் சுக்தாய் எழுபது வயதான பெண் ஒருத்தி இருபத்தைந்து வயது இளைஞனைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நஈ துல்ஹன் என்னும் கதையில் எழுதியிருக்கிறார்.

இது இந்திய இலக்கியங்களில் புதியதொரு கதைக் களமாக அமைந்திருந்தது. இவ்வாறு அரிதான நிகழ்வுகளைக் கவனித்துத் தமது படைப்புகளின் வழி வெளிப்படுத்துவது சுக்தாயின் சிறப்பாக அமைகிறது.

இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பலரும் முற் போக்கான படைப்புகளைப் படைத்துள்ளனர். ஆனால் இஸ்மத் சுக்தாய் இதுவரை தொடாமல் இருந்த பெண்கள் தொடர்பான பாலியல் சிக்கல்களைப் பேசியுள்ளார். சுக்தாய் நடுத்தர வர்க்கப் பெண்களின் உளவியலைத் துணிச்சலான முறையில் ஆராய்ந்துள்ளார்.

மேலும் சுக்தாயின் பிமர், சோடி அபா, கைந்தா முதலான கதைகள் உளவியலையும் இளம் வயதுப் பெண்கள் ஆசையினால் குழம்பி அமைதி இழப்பதையும் சித்திரிக்கின்றன.

சுக்தாயின் தோ ஹாத் (இரண்டு கைகள்) என்ற சிறுகதை மக்களின் பாலியல் மனப்போக்கையும் கடையில் பொருட்களை வாங்குவது போலப் பெண்கள் சுரண்டப்படுவதையும் விவரிக்கிறது. இச்சிறுகதை பெண்கள் எதார்த்தமாகப் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வதைப் பேசுகிறது. பாலியல் என்பதற்கு உயிரியல் இனப்பெருக்கத்தில், முக்கியமாக ஒரு ஏழைக் குடும்பம் ரொட்டிக்கு வருமானம் ஈட்டும் ஒரு வழி யாகும் என்று பொருள் கூறுகிறார் சுக்தாய்.

மரபு சாராத ஆண் - பெண் உறவு முறைகளையும் பெண்களின் நுட்பமான உணர்வுகளையும் மிகவும் நேர்த்தியாகப் படைத்துள்ளார்.

பர்தா முறை

ஐரோப்பியர்கள் ஏற்படுத்திய கல்வி முறையினால் முற்போக்கான பெண்கள் பர்தாவுக்குள் தங்களை மறைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாகச் செயல் படலாயினர். முற்போக்கு எழுத்தாளர்கள், இருண்டு போயிருந்த பெண்களின் வாழ்க்கையை வெளிப் படையாகப் புனையத் தொடங்கினார்கள். பெண்களின் வளர்ச்சிக்கு பர்தா முதல் தடையாக இருக்கிறது என்று எழுதலாயினர்.

சுக்தாய் பள்ளிப் பருவத்திலிருந்தே பர்தா அணிய மறுத்ததோடு தன் தந்தையிடம் 'என் தலையை ஏதோ ஒரு முட்டாள்தனம் மறைத்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்' என்று கூறினார். இதன் மூலம் சுக்தாய் பர்தா முறை பற்றிக் கொண்டுள்ள கருத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. கணவன் மனைவியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பர்தாவை ஆயுதமாகக் கையாளுகிறான். கணவன், குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து வெளிவர விரும்பாத

அல்லது வெளிவர முடியாமல் தவிக்கும் பெண்கள், ஆண்களுக்கு அடி பணிந்து பர்தாவை அணிந்து கொள்கின்றனர் என்பதை நஈ துல்ஹன் (புதிய மணமகள்) என்ற சுக்தாயின் கதை தெளிவாக உணர்த்துகிறது.

பர்தா பற்றிச் சுக்தாய் தனது டினியின் பாட்டி கதையில் கூறும் போது ‘அவள் அணிந்து கொண்டிருந்த பர்தா தான் அவளது பெரிய பொய். அதனை அவள் செய்யக்கூடிய, செய்யவே இயலாத பல காரியங்களுக்குப் பயன்படுத்தி வந்தாள். அது அவளுக்குப் படுக்கை விரிப்பாகும். சுருட்டித் திரட்டப்படும்போது தலையணை ஆகும். எப்போதாவது அவள் குளிக்கும் சமயங்களில் துண்டாகும். ஐந்து வேளை தொழுகைக்கும் தொழுகைப் பாயாகும். உள்ளூர் நாய்கள் அவளைக் கடிக்க வரும்போது அவளைக் காக்கிற கேடயமாகும்’ என்று கூறுகிறார்.

மேலும் இக்கதையில் வரும் டினியின் பாட்டி பர்தாவைக் கொத்தமல்லித் தழையை மறைத்து எடுத்துச் செல்வதற்கும் படுக்கைக்காகவும் தலையணைக்காகவும் பயன்படுத்துகிறாள்.

இது பணக்காரர்கள் அணியும் பர்தாவிற்கும் ஏழைகள் அணியும் பர்தாவிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை விளக்குகிறது. இக் கதையின் வழி ஏழைகளின் பர்தாவைப் பற்றிய ஒரு புதிய சிந்தனையை முன்வைக்கிறார் சுக்தாய்.

திருமணம்

பெண்களின் வாழ்க்கையில் திருமணம் என்பதும் தாய்மை என்பதும் முக்கியமான ஒன்றாகக் கருதப் பெறுகிறது. உலகம் முழுவதிலும் எல்லாச் சமூகத்திலும் திருமணம் என்பது பொதுமையானதாக உள்ளது. விளிம்பு நிலையில் வாழும் இந்து, இஸ்லாமியர்களிடையே குழந்தைத் திருமணம் மிகுதியாக இருந்துள்ளது. பெண்கள் தங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குள்ளாகவே அவர்களின் அனுமதியின்றித் திருமணம் செய்து வைத்துவிடும் நிகழ்வுகள் நடந்தேறி வந்துள்ளன.

இஸ்மத் சுக்தாயின் கதைகளில் பெண்கள் திருமணமான பின் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் திருமணம் ஆகாத பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல் களையும் காணமுடிகின்றன. சுக்தாயின் சூதி கா ஜோர்ஹா (மணச்சேலை) எனும் கதை பெண்ணுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி வருந்தி ஏமாற்றமடைந்த குப்ராவின் தாயைப் பற்றி விளக்குகிறது.

தையல் தொழில் செய்யும் குப்ராவின் தாய் மகளின் திருமணத்திற்காகப் புதிய ஆடைகள் தைத்துப் பெட்டிக்குள் வைப்பதையும் அந்த ஆடைகள் பயன்படுத்தப் பெறாமலே மங்கிப் போவதையும் விளக்கும். சுக்தாய் திருமணம் நடைபெறாமல் இருக்கும் பெண்ணின் நிலையையும் தாயின் துயரத்தையும் கண் முன்னால் நிறுத்துகிறார். திருமணம் ஆகாத ஒரு பெண்ணின் மனத்துயரையும் தாயின் வேதனையையும் கூறுகிறது இக்கதை.

குப்ராவின் திருமணத்திற்காக தைத்து வைத்திருந்த உடை என்றாவது ஒருநாள் பயன்படுத்தப் பெறலாம் என்ற நம்பிக்கையில் குப்ராவின் குடும்பம் இருந்தது. சுக்தாய் இக்கதையில் வரதட்சனையைப் பற்றியும் பேசியுள்ளார்.

பெண்கள் வளர்ந்தவுடன் எப்பொழுது திருமணமாகி பிறந்த வீட்டைவிட்டுச் செல்வாளோ என்ற அழுத்தமான மனநிலையில் பெற்றோர்கள் இருப்பதை இக்கதை விவரிக்கிறது. மேலும் பெண் பிறந்ததும் அவளுக்கு வரதட்சனை கொடுப்பதற்குச் சிறுபருவத்திலிருந்தே பொருட்களைச் சேமித்து வைக்க ஆரம்பித்து விடுவதையும் இக்கதையின் வழி அறிந்து கொள்ள முடிகிறது.         

சுக்தாயின் லீஹாப் (கனத்த போர்வை), கூன்கட் (முகத்திரை), அமரபேல் (அமரவல்லி) ஆகிய கதைகள் பொருத்தமற்ற திருமணத்தைப் பற்றிக் கூறுகின்றன. பொருந்தா மணத்தினால் ஏற்படும் சிக்கல்களை இக்கதைகளில் சுக்தாய் விளக்கிக் கூறுகிறார்.

திருமணம், வரதட்சனை என்பது பெண் குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஆண் குடும்பத்திற்கும் சிக்கலுக்குரியதாகவே இருக்கிறது என்பதைத் தனது கதையில் (தோ ஹாத்) பதிவு செய்திருப்பது சுக்தாயின் நடுநிலைமைக்குச் சான்றாக அமைகிறது.

இவை தவிர இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றியும் தனது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார் சுக்தாய். பெண்கள் என்றாலே அழகாக இருப்பது போலப் படைக்க வேண்டுமென்ற சிந்தனையை மறுதலிக்கும் விதமாக அவரின் படைப்புகளில் கதை களின் நாயகிகளைப் பெரும்பாலும் அழகற்ற பெண் களாகவே படைத்திருக்கிறார். இதுவே இஸ்லாமியப் பெண் படைப்பாளர்களிடமிருந்து சுக்தாயை வேறு படுத்திக் காட்டுகிறது.

பெண்கள் ஆண்களினால் பாலியல் அடிப்படையில் சுரண்டப்படுவதைத் தனது கதைகளின் மூலம் விளக்கியுள்ளார். பர்தா முறையின் மூலம் சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளைத் தெளிவாகக் கூறுகிறார். இஸ்மத் சுக்தாயின் கதைகளில் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் வறியவர்களாகவும் எவ்வித ஆதரவற்றவர்களாகவும் இருப்பது கவனத்துக்குரியது. ஓரினச் சேர்க்கை கதை, எழுபது வயதுப் பெண் இருபத்தைந்து வயது ஆணைத் திருமணம் செய்துகொள்வது போன்ற கதைகளைப் படைத்திருப்பதன் மூலம் சிறந்து விளங்குகிறார்.

இந்திய இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்களுள் உருது இஸ்லாம் பெண் எழுத்தாளர்களே முன்னோடி களாகத் திகழ்கின்றனர். அவர்களுள் இஸ்மத் சுக்தாய், கதையைத் தேர்வு செய்யும் முறையிலும் அதை வடிவமாக்கும் விதத்திலும் சிறந்து விளங்குகிறார். மேலும் இஸ்மத் சுக்தாயின் வாழ்க்கை, பெண்களுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

சுக்தாயின் வாழ்க்கை ஓர் ஆவணமாக பலரையும் ஆற்றுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. அவரது படைப்புகள் ஓர் அடி முன்னே நகர்ந்திருக்கிறோம் எனப் பெண் எழுத்தாளர்கள் பெருமிதம் அடையத்தக்கவை. தடைகள், வழக்குகளைக் கடந்து நடப்பியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்பெற்றுள்ளன. அந்த வகையில் இஸ்மத் சுக்தாயின் படைப்புகள் ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. இவ்வரலாற்று ஆவணத்தை அடுத்த தலை முறைக்குக் கடத்திச் செல்வது பலருக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

Pin It