ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு குழுவோ சமூகத்தில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தனக்குக் கீழ் ஆதரவற்றுக் கிடக்கும் பலவீனமானக் குழுக்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பதற்காக மிருகத்தனமான முறையில் செயல்பட்டிருப்பதை உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால் நாம் தெரிந்து கொள்ள முடியும்.  இம்மாதிரியான பாசிச உணர்வை சக மனிதர்களுக்கும் ஊட்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், அரசியல் அதிகாரம் வகுப்புவாதக் கைகளில் போய்ச் சேர்ந்த பிறகு, மேற்குறிப்பிட்ட பாசிஸ வெறி, புற்றுநோய் போல் தேசமெங்கும் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

இவற்றை நம் மார்க்சீயப் பண்டிதர்கள், வரலாற்றறிஞர்கள், கலை இலக்கியவாதிகள், தத்துவ வாதிகள், பண்பாட்டியலாளர்கள் போன்றவர்கள் அவ்வப்போது நமக்கு எடுத்துரைத்து வருகிறார்கள்.  பல துறைகளில் பாசிஸப் போக்கைப் பின்பற்று பவர்கள் கூட, இன்று சாதி, மதப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு தேசத்து மக்களைப் பற்றியும், தேச நலனைப் பற்றியும் உரக்கப் பேசி வருவதைக் கேட்க முடிகிறது. 

சில வேளைகளில் இந்த கபட ஜனநாயகப் பேச்சில் இடதுசாரியினர் கூட ஏமாந்து போகிறார்கள்.  அந்த அளவுக்கு, அந்தப் போலி யானப் பேச்சு, உண்மை போல் ஜொலிக்கிறது.

இவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் இன்றைய உடனடித் தேவை யாகும்.  அதற்கு, டாக்டர் கே. என். பணிக்கர் தன் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையாக சில அபாய அறிகுறிகளை நமக்கு எடுத்துக்காட்டு கிறார்.

டாக்டர். கே.என். பணிக்கர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“நான், ஜெ.என்.யு-வில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் என்னுடைய பழைய மாணவன் ஒருவனிடமிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.

அந்த மாணவன் பதற்றத்தோடு பேசுவதை என்னால் உணரமுடிந்தது.

அவன் சொன்னான்: ‘சார், நீங்க கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேணும்.  எங்கிட்டெ கேட்டால் இப்பொ இருக்கிற சூழ்நிலையிலே, நீங்க வெளியே இறங்கவே கூடாது!’ - என.

‘காரணம் என்ன தம்பி?’ என, நான் கேட்ட போது, பி.ஜே.பி கட்சிச்சார்புள்ள அந்த இளைஞன் சொன்னான்,

‘நான், இப்போது வி.பி ஹவுசில் நடை பெற்ற கட்சி மீட்டிங்கில் பங்கெடுத்துக் கொண்டு வருகிறேன்.  அந்த மீட்டிங்கில் சாரைப்பற்றியும், ரொமிலா தாப்பரைப்பற்றியும் விவாதம் நடை பெற்றது.  பி.ஜே.பி-க்கு கருத்தியல் ரீதியாக நிரந்தர மாகத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிற உங்க இரண்டு பேரையும் அடித்துக் கொல்ல வேண்டும் என்று, முக்கியத் தலைவர்களில் ஒருவர் வெகுண்டெழுந்து கட்டளையிட்டார்.

அந்தப் பிரபலமான தலைவரின் பெயரை இப் போது நான், இங்கே வெளிப்படுத்தப் போவ தில்லை’, என்றும், அந்த மாணவன் சொன்னான்.

இந்தச் சம்பவம் நடந்து முடிந்து சில வருடங் களுக்குப் பிறகு, ஒரு நாள், டாக்டர் கே.என். பணிக்கர் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு வெளியே, குடும்பத்துடன் காரில் பயணம் செய்யவே, ஒரு ட்ரக்கர் அவரைப் பின்தொடர்ந்தது.  அபாயம் ஏற்படுத்தும் வகையில் அது குறுக்கும், நெடுக்கும் சென்றதை தற்செயலானது என்று நினைத்து அவர் சமாதானம் அடைந்து கொண்டாராம்! மறுநாள் காரில் பயணம் செய்யும் போதும் சாலையில் வைத்து கிட்டத்தட்ட இதே அனுபவம் அவருக்கு ஏற்பட்டதாம்!

இதுவும் தற்காலிகமாக நிகழ்ந்ததாகத்தான் கருத வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண் டாராம்! காரணம், தன்னைக் கொலை பண்ணு வதற்காகத் திட்டமிட்டு வந்ததிற்கான எந்தவித தடயங்களோ, அல்லது அடையாளங்களோ இல்லாத வரையில் அந்தச் சம்பவத்தை நாம் தற்செயலானது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது டாக்டர் கே.என். பணிக்கரின் கருத்தாகும்.  சான்று களுடன் நிரூபிக்க முடியாத ஊகாபோகங்களை டாக்டர் கே.என். பணிக்கர் நம்புவது கிடையாது!”

கருத்தியல் ரீதியாகத் தங்களுக்குத் தொல்லை தரக்கூடிய எதிரணியிலுள்ள அறிவு ஜீவிகளைத் தொலைத்துக் கட்டும் சங்கபரிவாரின் ‘சகிக்க இயலாத உணர்வினை’ப்பற்றி, மோடி அதிகாரத் திற்கு வந்த நாளிலிருந்தே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை என்கிறார், டாக்டர்.  கே.என். பணிக்கர் ஏப்ரல் 26-ல், 80 வயது நிறைவடையும் இந்த வேளையில்.

அண்மையில் கொலை செய்யப்பட்ட தாபோல்கர், பன்சாரே, கல்புர்கி போன்ற அறிவாளிகளின் மார்பைப் பிளந்த துப்பாக்கி, இதற்கு முன்பும் பலருடைய நெற்றிக்கு நேராகக் குறிவைத்துத் தாக்குவதற்கு முயன்றிருக்கிறது என்பதை நாம், அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 

தனது 80-ஆம் வயதிலும் கூட, கூர்மையானப் புத்தியோடும் நிரந்தரமான வாசிப்பினூடேயும் சமூகத்தில் தான் காணும் தீமைகளுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக டாக்டர் கே.என். பணிக்கர் போராடிக் கொண்டிருக்கிறார்.  தொடர்ச்சியான வாசிப்பினூடே அவர், மென்மேலும் தனது உலகக் கண்ணோட் டத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

சமூகத்தில் நாம் சந்திக்கப் போகிற தீமைகளை (நம் பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்ட ‘அந்த நல்ல நாட்களை’) தன் கூர்மையான புத்தியினால் கண்டுபிடித்து, நம் மக்களுக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தியிருக்கிறார், டாக்டர் கே.என். பணிக்கர். 

2004-லிலும், 2009-லும் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பி.ஜே.பி தோல்வியடைந்த போது டாக்டர் கே.என். பணிக்கர் குறிப்பிட்டார்: “வரவிருக்கும் 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது நாம் மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்” என்று.

தனது 80 வயது வாழ்க்கை அனுபவங்களை வரலாற்றின் பிரதானப்பட்ட சம்பவங்களோடு இணைத்து, நினைவுபடுத்திப் பார்க்கிறார், நம் நாட்டின் பிரபல வரலாற்றாசிரியர்களில் ஒருவரான டாக்டர் கே.என். பணிக்கர் அவர்கள்.  மட்டுமின்றி நாம் மேலும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதையும் அவரது அனுபவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

நன்றி: தேசாபிமானி வாரமலர், ஏப்ரல் 24.

Pin It