படித்துப்  பாருங்களேன்...

(BIRENDRANATH DATTA, (2002), FOLKLORE AND HISTORIOGRAPHY, NATIONAL FOLKLORE SUPPORT CENTRE, CHENNAI)

நாட்டார் வழக்காறுகள் தொடக்கத்தில் சேகரிப்புக்கு உரியனவாக மட்டுமே விளங்கின. பின்னர் பண்பாட்டு மானிடவியலின் ஓரங்கமாயின. இதன் அடுத்த கட்டமாக நாட்டார் வழக்காறுகளை மையமாகக் கொண்டு ‘நாட்டார் வழக்காற்றியல்’ ((FOLKLORISTICS) என்ற தனி அறிவுத்துறை உருவானது. இதன் விளைவாக நாட்டார் வழக்காறுகள் ஆய்வுப் பொருளாயின.

ஓர் அறிவுத்துறையானது தனித்துவமான தன்மை களுடன் விளங்கினாலும் பிற அறிவுத்துறைகளுடன் அதை இணைத்து ஆராயும் ‘பல்துறைச் சங்கம ஆய்வு’ என்ற பெயரிலான ஆய்வுமுறை இன்று செல்வாக்குப் பெற்றுள்ளது. இவ்வகையில் வரலாறு என்ற அறிவுத் துறைக்கும், நாட்டார் வழக்காற்றியல் என்ற அறிவுத் துறைக்கும் இடையிலான உறவின் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது.

வரலாறு குறித்த கல்வியில் ‘வரலாற்று வரைவியல்’  (HISTORIOGRAPHY) என்பது ஓர் அடிப்படையான இடத்தை வகிக்கிறது. கல்விப்புலம் சார்ந்த வரலாற்றுக் கல்வியில் இது முக்கியமான ஒன்றாக அமைகிறது. ‘வரலாற்றை வரையும்’ கலையைக் (Craft of writing of History)) கற்றுக் கொடுக்கும் அறிவுத்துறையாக இதைக் கருதுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றை எவ்வாறு எழுதுவது என்பதற்கு வழிகாட்டும் வரலாற்று வரைவியலானது, வரலாறு எழுதத் துணைபுரியும் பல்வேறு சான்றுகளைக் குறிப்பிடுகிறது. இச்சான்றுகளில் ஒன்றாக, நாட்டார் வழக்காற்றியல் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் அது எழுத்துவடிவம் பெறாததுதான். எழுத்து வடிவம் பெற்றிருந்தாலும் அது சாமானிய மனிதரின் வாய்மொழிப்பதிவு என்ற காரணத்தால் புறந்தள்ளப் படுகிறது.

இத்தகைய அறிவுச்சூழலில் பிரேந்திரநாத் தத்தாவின் இந்நூல் வெளியாகியுள்ளது.

* * *

இந்நூலாசிரியர் பிரேந்திரநாத் தத்தா இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘அஸ்ஸாமின் கோல்புரா மாவட்டத்தின் நாட்டார் பண்பாடு’ ((Study on the Folk Culture of Goalpara District of Assam)) என்ற தலைப்பில் ஆய்வு செய்து கௌகாத்திப் பல்கலைக்கழகத்தில் 1957இல் முனைவர் பட்டம் பெற்றவர். இதே பல்கலைக் கழகத்தில் 1979ஆம் ஆண்டிலிருந்து நாட்டார் வழக்காற்றுத் துறையில் பேராசிரியராக இருந்துள்ளார். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தேஜ்பூர் பல்கலைக் கழகத்தின் பாரம்பரியக் கலைகள் துறையில் ஆலோச கராகப் பணிபுரிந்துள்ளார். பல ஆய்விதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் அஸ்ஸாமிய மொழியிலும், ஆங்கிலத்திலும் நாட்டார் வழக் காற்றியல் தொடர்பான நூல்களையெழுதியுள்ளார்.

* * *

Affinities Between Folkloristics And Historiography Some Theoretical Implications in The Context of Medieval And Modern History of North East India என்ற தலைப்பில் 1999ஆம் ஆண்டு மார்ச் 17, 18ஆம் நாட்களில் கல்கத்தாவின் ஜதாவ்பூர் பல்கலைக்கழகத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவே FOLKLORE AND HISTORIOGRAPHY என்ற  தலைப்பில் நூல்வடிவம் பெற்றுள்ளது.

உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்நூலை இரு பிரிவுகளாகப் பகுக்கலாம். அறிமுக உரையையடுத்து வரும் முதல் அய்ந்து இயல்களும் வரலாறு, வரலாற்று வரைவியல், நாட்டார் வழக்காறு, வரலாற்றிய லாளருக்கும் நாட்டார் வழக்காற்றியலாளருக்கும் இடையிலான உறவுக்கான பொதுக்களம் என்பனவற்றை அறிமுகம் செய்கின்றன. இவ்விரு துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் விரிவாகப் பதிவாகியுள்ளன.

ஆறாவது ஏழாவது இயல்கள், வடகிழக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த வரலாறு எழுதுவது தொடர்பாகவும், அதற்குத் துணைபுரியும் அப்பகுதியின் வாய்மொழித் தரவுகள், அவற்றின் வரலாற்று மதிப்பு குறித்தும் சில தரவுகளை முன்வைக்கின்றன.

இப்பகுதியின் புராணங்கள், பழங்குடிப் புராணங்கள், நாட்டார் பாடல்கள் ஆகியனவற்றின் சுருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பு பின்னிணைப்பில் இடம்பெற்றுள்ளது.

* * *

நூலின் அறிமுக உரை

பெர்னாட் கோன் என்ற மானுடவியலாளர் வரலாற்றில் ஈடுபாடு கொண்டு மானுடவியல், வரலாறு என்ற இரு துறைகளையும் இணைத்து ஆய்வு செய் துள்ளார். அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து 1994இல் ஒரு நூலாக வெளியிட்டபோது, அந்நூலுக்கு அவர் கொடுத்த ‘An Anthropologist among the Historians and other Essays’ என்பதாகும். அவரைக் குறித்து:

“பெர்னார்ட் கோன் அடிப்படையில் மானுட வியலாளர், மானுடவியலையும், வரலாறையும் நெருக்கமாக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் வரலாற்றியலாளர்களிடையே அதிலும் குறிப் பாகப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைகளில் நீண்ட காலம் பணியாற்றினார். இதனால் வரலாற்று முறையியலிலும் நுட்பங்களிலும் தெளிவுபெற்றார். இதன்        அடிப்படையில் பல கட்டுரைகள் எழுதினார். எனவே வரலாற்றிய லாளர்களிடையே ஒரு மானுடவியலாளர் என்ற பட்டத்திற்கு அவர் தகுதியானவர்.”

என்று கூறிவிட்டு வரலாற்றியலாளர்களிடையே ஒரு நாட்டார் வழக்காற்றியலாளன் (FOLKLORIST among the Historian) என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், இதனையடுத்து வரும் இயல்களில் நாட்டார் வழக்காற்றியலாளனுக்கும், வரலாற்றிய லாளனுக்கும் இடையில் பொருள்பொதிந்த உரை யாடலைத் தாம் உருவாக்கப் போவதாகக் குறிப்பிடு வதுடன், மிகுதியான அளவில் மேற்கோள்களைக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறி இதனைப் பொறுத்துக் கொள்ளும்படி வாசகர்களை வேண்டுகிறார்.

வரலாறு

கடந்த காலத்தைப் பற்றிக் கூறுவதுதான் வரலாறு என்பது பரவலாக நிலவும் ஒரு கருத்தாகும். அகராதி யன்று தரும் பொருளின்படி, ‘ஒரு நாடு மற்றும் தனிமனிதனின் கடந்த கால நிகழ்வுகளைக் கோவை யாகக் கூறுவதே வரலாறாகும்’. மற்றொரு அகராதி, ‘கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப்படியான பதிவே வரலாறு’ என்கிறது. கல்விப்புலம் சார்ந்த வரை யறையின்படி, நிகழ்வுகளைப் பற்றிப் பயிலும் பள்ளி அல்லது பல்கலைக்கழகப் பாடமாகும். இதையே வேறு வகையில் சொன்னால் ஒரு நாடு அல்லது அதன் மக்களைப் பாதிக்கும் நிகழ்வுகளின் கால வரிசைப் படியான பதிவாகும். இப்பதிவானது சான்றுகளை ஆழமாக ஆராய்ந்து அதன் காரணங்களை விளக்குவதாய் அமையும்.

வரலாற்று வரைவியல்

கல்விப்புலம் சார்ந்ததாகவே வரலாற்று வரை வியலைக் கருதுகின்றனர். வரலாற்றை வரையும் கலை என்று இதைக் குறிப்பிடலாம். வரலாற்று வரை வியலானது வரலாற்றை எழுதுவது தொடர்பான கோட்பாடுகளையும் அவற்றின் வரலாற்றையும் கூறுவதாகும். வரலாற்று வரைவியல் என்பது கல்விப் புலத்தில் ஒரு பாடமாக அறிமுகமாகி ஏறத்தாழ இருநூறு அல்லது இருநூற்றைம்பது ஆண்டுகள்தான் ஆகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்புவரை கல்விப்புலத்தின் முக்கிய அங்கமாகவோ மனித வாழ்க்கை குறித்து விளக்கம் தரும் ஒன்றாகவோ அதைக் கருதவில்லை.

வரலாறும் பழமையும்

பழமையுடன் தொடர்புடைய ஓர் அறிவுத் துறையாக மட்டுமே வரலாறு தொடக்கத்தில் கருதப் பட்டது. இது குறித்து முன்னர்க் கண்டோம். ஆனால் இக்கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. சான்றாகக் காலிங்வுட் என்பவரின் பின்வரும் கூற்றைக் குறிப்பிடலாம்.

“வரலாற்றாய்வாளன் ஆராயும் கடந்த காலம் என்பது இறந்துபோன பழமையல்ல. ஒரு வகையில் இன்றும் நிகழ்காலத்தில் வாழ்வதாகும்”.

ஈ.எச்.கார் என்ற வரலாற்றறிஞர் வரலாற்றுக்கும், பழமைக்குமான தொடர்பு குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுவார்.

“வரலாற்று ஆசிரியருடைய வேலை கடந்த காலத்தை நேசிப்பதல்ல. கடந்த காலத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுமல்ல. ஆனால் நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்குத் திறவு கோலாகக் கருதிக் கடந்த காலத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்த காலத்தைப் பற்றி வரலாற்று ஆசிரி யருடைய பார்வையில் நிகழ்காலப் பிரச்சினைகள் பற்றிய நுண்ணறிவு ஒளிவீசுகின்றபோதுதான் மாபெரும் வரலாற்று நூல்கள் எழுதப்படுகின்றன”.

இக்கூற்றுகளின் அடிப்படையில் நோக்கினால் பழமையைப் பேசும் ஓர் அறிவுத்துறையாக வரலாற்றைக் காண்பது பொருத்தமற்றது என்ற உண்மை புலனாகும். இச்செய்திகளை மனதில் இறுத்திக்கொண்டு ‘நாட்டார் வழக்காறு’ குறித்தும், வரலாற்று வரைவியலில் அதன் பங்களிப்புக் குறித்தும் ஆராய்வது பொருத்தமாயிருக்கும்.

நாட்டார் வழக்காறு

ஜான் தாம்ஸ் என்ற ஆங்கிலேயர் நாட்டார் வழக்காற்றைக் குறிக்கும்  ‘FOLKLORE’  என்ற ஆங்கிலச் சொல்லை 1846ஆம் ஆண்டில் உருவாக்கினார். கடந்த காலத்தின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழிகள், பாடல்கள், கதைகள் ஆகியன வற்றைக் குறிப்பதாக இச்சொல்லுக்கு அவர் விளக்க மளித்தார். அவரது விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் நாட்டார் வழக்காறென்பது கடந்த காலத்தின் பதிவாகும். எனவே கடந்தகாலம் தொடர்பான பதிவுகள் விரைவாக அழிந்து வரும் சூழலில் இவற்றைச் சேகரித்துப் பாதுகாப்பது நாட்டார் வழக்காறுகளில் ஆர்வம் கொண்டோரின் கடமையாயிற்று. மேலும் இவ்வழக்காறு களைக் கிராமப்புறக் குடியானவர்களைச் சார்ந்ததாகவே கருதினார்.

ஜேம்ஸ் ஃபிரேசர் என்ற மானுடவியலாளர் நாட்டார் வழக்காறு தொடர்பாக 1908ஆம் ஆண்டில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“பண்பாட்டு நிலையில் உயர்ந்து விளங்கும் மக்களிடையே புராதனச் சிந்தனைகள் நடை முறைகள் ஆகியன எஞ்சி நிற்கும்போது அது நாட்டார் வழக்காறாகும்.”

இவ்வாறு கடந்த காலத்தின் மிச்சங்களைச் சுமந்து நிற்கும் ஒன்றாகவே நாட்டார் வழக்காறு பார்க்கப் பட்டது.

வரலாறும் நாட்டார் வழக்காறும்

வரலாற்றியலாளர்கள் பலர் நாட்டார் வழக்காறு என்றாலே அதை ஒதுக்கிப் புறந்தள்ளுகின்றனர். ஆனால் வரலாற்றின் தந்தையெனப்படும் ஹெராடாட்டஸ் என்பவரைக் குறித்து பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“வரலாற்றின் தந்தையென்றழைக்கப்படும் ஹெராடாட்டஸின் படைப்பைப் பல காரணங் களுக்காகப் படிக்க வேண்டும். முதலில் அவரிடம் பல சுவையான கதைகள் உண்டு. இக்கதைகளை வரலாற்றுக் கண்கொண்டு அவர் பார்க்கவில்லை. அதேபோல் வரலாற்றியலாளர் என்பதால் அவற்றைத் தவிர்க்கவுமில்லை அவருடைய காலத்தில் நிலவிய பல காட்டுமிராண்டிப் பழக்கங்களை அவர் வருணிப்பதை மானுட வியலை ரசிக்கும் அனைவரும் விரும்புவர். பயணிகளின் கதைகளைத் தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஆனால் இவற்றை நவீன ஆய்வுக்குட்படுத்துகிறார். இவர் அறிந்த நாடுகள் மற்றும் இனங்கள் பற்றிய இவரது ஆய்வுகள் நிதானமானவை, ஆழமானவை. இவற்றைப் பற்றி அதிக மறியாதவர்களுக்கு இவை நல்ல அறிமுகமாகும்”.

கடந்த காலம் தொடர்பானதாக வரலாற்றையும், கடந்த கால மிச்சங்களின் பதிவாக நாட்டார் வழக் காறையும் நோக்கியதன் விளைவாக இவ்விரண்டு அறிவுத் துறைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகக் கருதும் நிலை உருவானது. இதன் தொடர்ச்சியாக வரலாற்றுப் பண்பு ((Historical sense) ) கொண்டதாக நாட்டார் வழக்காற்றைக் கருதும் போக்கு உருவானது. ஜியார்ஜ் லாரன்ஸ்கோம் என்பவர் 1908இல் ‘ஒரு வரலாற்று அறிவியலாக நாட்டார் வழக்காறு’ ((FOLKLORE as an Historical Science) ) என்ற நூலை எழுதினார்.

இதையடுத்து வரலாற்று நிலவியல் என்ற சிந்தனை உருப்பெற்று அய்ரோப்பாவில் செல்வாக்குப் பெற்றது. இச்சிந்தனை வளர்ச்சியுற்றுச் சீரமைக்கப்பட்டு பின்லாந்து நாட்டில் பின்லாந்து கருத்துப்பள்ளி என்ற நிலைக்கு உயர்ந்தது. இக்கருத்துப்பள்ளி ‘பரவல் கோட்பாடு’ (Diffusionist theory) என்ற கோட்பாட்டை உருவாக்கியது. நாட்டார் வழக்காறுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முதலில் தோன்றிப் பின்னர் பல இடங்களுக்கும் வாய் மொழியாகப் பரவுகிறது என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படையாகும். இதுவே பின்னர் ‘வரலாற்று நிலவியல் கோட்பாடு’ (Historical Geographical Method) என்பதற்கு வித்திட்டது. மற்றொரு பக்கம் ‘வரலாற்று மீட்டுருவாக்கக் கோட்பாடு’ (Historical Reconstructional School) என்ற கோட்பாடு உருவானது.

கடந்த காலத்துடனோ நாகரிகத்திற்கு வெளியில் வாழும் விளிம்புநிலை மக்களுடனோ நாட்டார் வழக்காற்றியலாளர் நின்றுவிட முடியாது என்ற கருத்து, பின்னர் வளர்ச்சியடைந்தது. ‘கடந்த காலத்தின் மிச்சங்களைக் கொண்டதே நாட்டார் வழக்காறு’ என்ற கருத்தில் மாற்றம் ஏற்படலாயிற்று. ஜாக்கப் என்பவரின் கூற்றின்படி, “எஞ்சி நிற்பவை நாட்டார் வழக்காறு. ஆனால் எஞ்சி நிற்பவை அனைத்தையும் நாட்டார் வழக்காறு கொண்டிருக்க வேண்டிய அவசிய மில்லை”:

காலவெள்ளத்தில் நாட்டார் வழக்காறு மாறு தலுக்கு ஆட்பட்டும் புதிய வடிவங்களை எடுத்துக் கொண்டுமுள்ளது. நகரங்களிலும் ஆலைத்தொழில் நகரங்களிலும் நாட்டார் வழக்காறுகள் உருவாகின்றன. ஊடகங்கள் வாயிலாகப் பரவுகின்றன. இதனால்தான் நகரங்களைக் குறித்து நாட்டார் வழக்காற்றியலாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று ரிச்சர்டு எம்.டார்சன் குறிப்பிடுகிறார். சுருங்கக் கூறின் பழம்பொருள் சேகரிப்பவன் போன்று  நாட்டார் வழக்காற்றியலாளன் இருக்கக்கூடாது. “நாட்டார் வழக்காறென்பது கடந்த காலத்தின் எதிரொலிதான். அதேநேரத்தில் நிகழ் காலத்தின் உயிரோட்டமுள்ள குரலும் ஆகும்” என்று சுக்லோவ் என்ற ருசியா நாட்டார் வழக்காற்றிய லாளர் குறிப்பிடுகிறார். இவ்வாறு நாட்டார் வழக்கா றென்பது கடந்த காலத்துடனும் நிகழ்காலத்துடனும் தொடர்புடையதாக விளங்குகிறது.

மரபு

மரபுடன் தொடர்புடையதாக நாட்டார் வழக்காற்றியலாளர்கள் இன்றும் நாட்டார் வழக்காறு களைக் கருதுகின்றனர். வரலாறு குறித்தும் இதே கருத்துண்டு. மரபுக்கும் வரலாற்றுப் பழமைக்கும் இடையிலான இணைப்புக் குறித்து டி.எஸ்.எலியட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“பாரம்பரியம் என்பது ஒரு சில இறுக்கமான நம்பிக்கைகளைக் கட்டிக்காப்பதல்ல. பழைய பாரம்பரியத்தை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும் அல்லது பழைய பாரம்பரியத்துக்குப் புத்துயிர் தரும் முயற்சியில் நாம் இறங்கக்கூடும். அதே போன்று அவசியமானதையும் அவசியமற்ற தையும் பிரித்தறிய முடியாமல் குழப்பி விடக் கூடும்.

மாற்றத்திற்கு அப்பாற்பட்டதாகவும் மாற்றத் திற்கு எதிரானதாகவும் பாரம்பரியத்தைக் கருதி கடந்த கால நிலைக்குத் திரும்ப முயற்சி செய்யலாம். அக்கடந்த காலச் சூழலில் இருந்த வாழ்வுக்கு உயிர் கொடுக்காமல் அந்தச் சூழலுக்கு மட்டும் உயிர்கொடுக்க நினைக்கும் தவறைச் செய்துவிடலாம்”.

வரலாற்றுப் பழமை குறித்துப் பேசும் போது ரஸ்ஸலின் இக்கூற்றை நினைவில் கொள்வதவசியம். மேலும்          ‘வரலாற்றுணர்வில் மரபு இடம் பெறுகிறது. அதேநேரத்தில் வரலாற்றுணர்வில் பழங்காலம் மட்டுமின்றி நிகழ்காலமும் இடம்பெறுவதவசியம்’ என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

வரலாறும் மக்களும்

நாட்டார் வழக்காறு, வரலாறு, வரலாற்று வரை வியல் தொடர்பாக இதுவரையறிந்துகொண்ட செய்திகளின் பின்புலத்தில் மக்களுக்கும் வரலாற்றுக்கு மான தொடர்பைக் கண்டறிய வேண்டும்.

காலனிய ஆட்சிக்காலத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுத் தரப்பட்ட வரலாற்றுப் பாடம் குறித்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாம் எழுதிய கட்டுரையில் ரவீந்திரநாத் தாகூர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

“தேர்வுகளுக்காக நாம் படித்து மனப்பாடம் செய்யும் இந்திய வரலாறு நம்மை அச்சுறுத்தும் நடுநிசிக் கதைகளாகவே உள்ளது. மர்ம மனிதர்கள் திடீரெனத் தோன்றுகின்றனர். வன்முறையும், கொலைகளும் தொடர்கின்றன. தந்தைக்கும், மகனுக்கும், அண்ணன், தம்பிகளுக்குமிடையே அரியணைக்காகப் போட்டிகள் நடைபெறு கின்றன.  ஒரு கும்பல் வெளியேறினால் மற் றொன்று வருகிறது. ஆப்கானியர், முகலாயர், போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர் மற்றும் ஆங்கிலேயர் என்று பலரும் சேர்ந்து இந்தப் பயங்கரக் கதைகளை மேலும் சிக்கலாக்கு கின்றனர். பளபளக்கும் வண்ணங்களால் தீட்டப் பட்ட                 காட்சிகளால் மங்கிப் போன இந்தக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தால் உண்மை யான இந்தியாவைக் காணமுடியாது. உண்மை யான இந்தியர்கள்       இந்திய வரலாற்றில் எங்கே இருக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு மேற்கூறிய வரலாற்றில் பதிலில்லை. வன்முறைகளிலும் கொலைகளிலும் ஈடுபட்டவர்களைத் தவிர வேறு இந்தியர்கள் இருந்ததில்லையென்ற எண்ணம் தான் இந்த வரலாற்றைப் படிப்பவர்களுக்குத் தோன்றும்”.

தாகூரின் இக்கூற்றில் இந்திய வரலாற்றில் மக்களுக்கு இடமில்லை என்ற உண்மை வெளிப் படுகிறது. மக்களுக்கு இடம் மறுக்கப்பட்ட வரலாற்று வரைவுக்கு மாறாக, மக்களை முன்னிலைப்படுத்தும்  வரலாறு என்ற கருத்துநிலை உருவாகியுள்ளது. ‘அடித்தளத்தில் இருந்து வரலாறு’ என்ற கருத்து நிலையின் வெளிப்பாடாகக் கீழ் நிலையில் இருந்து வரலாறு ((History from Below)) என்ற சிந்தனையை முன்னர்க் குறிப்பிட்ட பெர்னாட் கோன் என்ற மானுட வியலாளர் முன்வைக்கிறார். அவரது கருத்துப்படி எழுத்து வடிவ ஆவணங்கள், தொல்லியல் சான்றுகள் போன்ற நேரடி  மூலங்களில் இருந்து வரலாற்றாய்வாளர் விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது. இத்தகைய சான்றுகள் இல்லாத அரிதான களங்களை நோக்கி வரலாற்றியலாளர் சென்று மானுடவியலாளருடன் இணைந்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்ட தென்பது அவரது வாதமாகும். ‘வரலாற்றாய்வாளருக்குக் குறைவான மூலங்களும் கடினமான செருப்புகளும் தேவை’ என்று ஆர்.எச்.டானி கூறுவதை கோன் ஏற்றுக்கொள்கிறார். இது தொடர்பாக அவர் முன்வைக்கும் கருத்துக்களைப் பின்வரும் நீண்ட மேற்கோளாக இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு:

“பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அய்ரோப்பியரிடமிருந்து விலகிய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் குறித்த ஆய்வுகளுக்கு மானுட வியலாளர் தள்ளப்பட்டனர். மாற்றம் அடையாத அல்லது மெதுவாக மாறும் சமூகங்கள் அதாவது வரலாற்றுக்கு அப்பாற்பட்டவரின் வாழ்க்கை இவர்களது களமாக இருந்தது. இச்சமூகங் களிடையே மாற்றமில்லாததால் இவர்களுக்குக் காலமும் வரலாறும் இல்லையென்று கூறப் பட்டது.

ஆசியர், ஆப்பிரிக்கர், அமெரிக்காவின் பழங் குடிகள், மற்றவர் என்று கொள்ளப்பட்டபோது இவர்களுக்கிடையே மற்றொரு ‘மற்றவர்’ இருந்தனர்.  நாகரிகமடைந்த அய்ரோப்பியரிட மிருந்து இவர்கள் வேறொரு வகையில் வேறு பட்டவர்கள். அதாவது முன்னர் நாகரிமாக இருந்து பின்னர் அதைத் தொலைத்த இந்தியரும், சீனரும். இவர்கள் நாகரிகமடைந்த அய்ரோப்பி யருக்கு இணையாகச் சொல்லமுடியாதவர். இவர்களுக்கு எழுத்தறிவிருந்தாலும் தமக்கென வரலாற்றாவணங்கள் இல்லாதவர்.  இந்தியர், சீனர் போன்றவரின் வரலாற்றைப் பின்னோக்கிய வரலாறாக அய்ரோப்பியர் கருதினர். அய்ரோப்பியர் முன்னோக்கி நகர்பவர். இவர்கள் பின்னோக்கி நகர்பவர்.

இந்தியர், சீனர் மற்றும் இஸ்லாமியரின் வரலாற்றை அய்ரோப்பியர் எழுத முற்பட்ட போது, அய்ரோப்பிய அளவுகோல்களையும் முறைகளையும் பயன்படுத்தினர். முன்பொரு காலத்தில் வலுவாக, வளமாக இருந்த இவர் களுடைய வரலாறும், வாழ்வும் பாதை மாறி திசையிழந்து பின்னோக்கி நகர்ந்ததாக இவர் களுடைய வரலாறு கட்டமைக்கப்பட்டது. சுழியம், சதுரங்கம் போன்றவற்றை உருவாக்கிய நாகரிகங்கள் இன்று ஒரு தேக்கநிலைக்கு வந்துவிட்டன. எனவே வினோதமானவற்றை ஆய்வு செய்வோர் மட்டுமே இவற்றை ஆய்வு செய்வர் என்ற கருத்தும் அய்ரோப்பியர் களிடையே வலுப்பெற்றது.

பொதுவாக வரலாற்றியலாளர்கள் காலத்தை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு செய்வர். நிகழ்வுக்கு வெளியே நிற்கும் காலம், நாள் போன்ற           கூறுகளைக் கொண்டோ நிகழ்வுகளை வரிசைப்படுத்தியோ ஆய்வு செய்வர். அய்ரோப்பியரின் கணிப்பின்படி காலத்தை அளவிட முடியும். அதற்குத் தொடக்கமும் முடிவும் உண்டு. நிகழ்வுகளைக் காலவரிசைப்படி முறைப்படுத்துவது அய்ரோப்பிய மரபு. காலத்தைப் பகுதிகளாகப் பகுத்து புத்தொளிக் காலம், புரட்சிக்காலம் என்றெல்லாம் பகுப்பது மேற்கத்திய சமூகமுறை. ஒரு காலத்திற்குட்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் ஒருவித ஒற்றுமையைக் காண அய்ரோப்பிய வரலாற்றுமுறை எத்தணிக் கிறது. ஆனால் அதேகாலத்தில் இத்தகைய ஒரு மித்த போக்கிற்கு மாறாகவும் எதிராகவும் செயல் பட்ட சிறு குழுக்களும் நிகழ்வுகளும் உண்டென் பதை அய்ரோப்பிய வரலாற்று முறை கண்டு கொள்வதில்லை”.

இக்குறையைப் போக்கும் வகையில் வட்டார வரலாறு (Local History),, அடித்தள வரலாறு  (Protological History), இனவரலாறு (Ethno History)  என்ற புதிய வரலாற்றுக் கருத்துப்பள்ளிகள் உருவாகியுள்ளன.

அடித்தளத்தில் இருந்து வரலாறு

இவற்றுள் அடித்தளத்தில் இருந்து வரலாறு என்பதை முன்னர்க் குறிப்பிட்ட பெர்னாட் கோன் என்ற மானிடவியலாளர் Protological History என்றழைக்கிறார். இதை அடித்தள வரலாறு அல்லது கீழ்நிலை வரலாறு என்று தமிழில் அழைக்கலாம். இவ்வரலாறு குறித்து அவர் தரும் விளக்கம் வருமாறு:

“சாமானிய மக்களைக் குறித்துப் படிப்பதே  அடித்தள வரலாறாகும். குரல் எழுப்ப முடியாதவர், வலுவிழந்தவர், அதிகாரமற்றவர், சுரண்டப்பட்டவர் ஆகியோர் முந்தைய மேல்தட்டு வரலாற்றாய்வாளர்களால், மௌன மானவர்களாக, வரலாற்றின் நாயகர்களாகும் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். எனவே வரலாற்றின் பின்னால் இவர்கள் தள்ளப்பட்டனர். நாகரிகமும் முன்னேற்றமும் ஏற்பட்டபோது, இவற்றால் பயன்பெற்றோராக மிதவாத வரலாற்றி யலாளர் இவர்களை நோக்கினர். நாகரிகத்திற்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்படும் களங்கமாக பழமைவாத வரலாற்றியலாளர் இவர்களைக் கருதினர். இக்குழுக்களை ஆய்வு செய்வது சிரமம். ஏனென்றால் பெண்கள், தொழிலாளர், கறுப்பர், சிறு இனக்குழுக்கள் குறித்த தரவுகள் குறைவு. பெரும்பாலும் வரலாற்றாய்வுகளில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட குழுக்கள் குறித்த ஆய்வுகள் கடந்த சில ஆண்டுகளில்            அதிகரித்துள்ளன. இம்மக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட வரலாற்றியலாளர்கள் முழுமையான வரலாற்றை உருவாக்கியுள்ளனர்.”

இவ்வாறு அடித்தள வரலாறு குறித்துக் குறிப்பிடும் பெர்னாட் கோன், சமூக நிறுவனங்கள் குறித்ததாகவும், பெரும்பாலும் அரசியல் அமைப்பு சார்ந்ததாகவும் நமது வரலாற்றாய்வாளர்களின் நடைமுறை இருந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவரது கருத்துப்படி பண்பாட்டு அமைப்பு நிர்வாக அமைப்பைத் தீர்மானிக்கிறது.

வரலாற்றுச் சான்றாக நாட்டார் வழக்காறு

இப்புதிய வரலாற்றுப்பள்ளிகளுக்கு நாட்டார் வழக்காறு சான்றாக அமைகிறது. எனவே வரலாற்றிய லாளனுக்கும் நாட்டார் வழக்காற்றியலாளனுக்கும் இடையிலான பொதுவெளி குறித்தும், இவ்விரு துறையினருக்கும் இடையிலான ஒத்துழைப்புக் குறித்தும், ஆராய்வது அவசியமாகிறது.

வாய்மொழி அல்லது எழுதப்படாத சான்றுகளை ஏற்றுக்கொள்வதற்கு வரலாற்றியலாளர் தயங்குகின்றனர். இத்தயக்கத்திற்குப் பின்வரும் மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

i. எழுதப்படாதனவும் வாய்மொழி மரபும் நம்பத் தகாதனவாகும்.

ii. ஆவணங்கள், பிற சான்றுகளின் துணையுடன் எழுதப்படும் உண்மைகளே நல்ல வரலாறாக இருக்க முடியும்.

iii.  கல்வியறிவில்லாத மக்கள் காலவரிசை முறையைப் பொருட்படுத்துவதில்லை. இதனால் நாட்டார் வழக்காறுகளில் வரலாற்றுணர்வு இருப்ப தில்லை.

இக்காரணங்களைக் கூறி வரலாற்றுச் சான்று களாகும் தகுதி நாட்டார் வழக்காறுகளுக்குக் கிடையாது என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களைப் பொருத்தஅளவில் எழுத்து மரபு சார்ந்த, மேற்கத்திய வரலாற்று வரைவியல் முறைப்படி எழுதப் பட்ட வரலாறுதான் அறிவியல் பூர்வமான வரலாறாகும். வாய்மொழிச் சான்றுகளுக்கும், எழுத்துவடிவிலான சான்றுகளுக்கும் இடையே ஊடாட்டம் உண்டு என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர். எழுத்து வடிவிலான ஆவணங்களைக் கண்மூடித்தனமாகப் போற்றும் இப்போக்கை ஈ.எச்.கார் என்ற வரலாற்றறிஞர் ‘புனிதப்பொருள் வழிபாடு’ (Fetishism) போன்றது என்கிறார். எது வரலாற்றுண்மை? என்ற வினாவை யெழுப்பி அதற்கு விடை தருகிறார். அவரது கருத்துப் படி சில அடிப்படையான விவரங்கள் அனைத்து வரலாற்றாசிரியர்களுக்கும் பொதுவானவை. வரலாற்றா சிரியனின் மூலப்பொருள் போன்றவை. இவை வரலாற்றைச் சார்ந்ததல்ல. இவ்விவரங்களை நிறுவ வேண்டிய அவசியம் விவரங்களின் தன்மையில் இல்லை. ‘காரணம்’ ‘விளைவு’ குறித்த ஆசிரியனது முடிவுதான் காரணம். இவ்வாறு குறிப்பிட்டுவிட்டு ‘விவரங்கள் தாமே பேசும்’ என்ற கருத்து தொடர்பாகப் பின்வரும் விளக்கத்தைத் தருகிறார்:

“விவரங்கள் தாமே பேசும்’ என்று சொல்லப் படுகிறது. இது உண்மையல்ல.  வரலாற்றாசிரியன் அழைத்தால்தான் உண்மைகள் பேசுகின்றன. எந்த வரிசையில் அல்லது எந்தச் சூழலில் என்று முடிவு செய்வது வரலாற்றாசிரியரே.

வரலாற்றாசிரியர் விவரங்களைப் பொறுக்கி எடுக்கிறார். வரலாற்று விவரங்கள் என்ற உட்கரு புறநிலையானது வரலாற்றாசிரியனது விளக்கத்தி லிருந்து சுதந்திரமானது என்ற நம்பிக்கை முற்றிலும் தவறாகும். ஆனால் அந்த நம்பிக் கையை ஒழிப்பது மிகவும் கடினம்”.

ஈ.எச்.காரின் இம்மேற்கோளைக் குறிப்பிடும் நூலாசிரியர் வாய்மொழி மரபானது வரலாற்றாய்வுக்கு உதவும் மதிப்பு வாய்ந்த விவரங்களைக் கொண்டுள்ளது என்கிறார். மரபார்ந்த வரலாற்றில் பொதுவான தளத்தை வரலாற்றியலாளரும் நாட்டார் வழக்காற்றியலாளரும் கண்டறிய முடியும் என்ற ரிச்சர்ட் எம்.டார்சனின் கூற்றையும் வெகுசன நினைவு வாயிலாக வரலாற்று ஆவணங்களில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்ப முடியும் என்ற அவரது கூற்றையும் சுட்டிக்காட்டுகிறார். ஒரு பொதுத்தளத்தில் நாட்டார் வழக்காற்றியலாளருக்கும் வரலாற்றியலாளருக்கும் இடையிலான ஒத்துழைப்பின் தேவையைக் குறிப்பிடுகிறார்.

* * *

இறுதியாக வடகிழக்கு இந்தியாவினது பாரம்பரியத் தரவுகளின் வரலாற்று மதிப்பை எடுத்துக்காட்டுகிறார். மணிப்பூர் மக்களிடையே வழங்கும் இடப்பெயர்ச்சி தொடர்பான கதைகள், வடகிழக்கு மாநில மக்களது வாய்மொழித் தரவுகளின் வரலாற்று மதிப்பு, அஸ்ஸா மியர்களிடையே வழங்கும் கதைப்பாடல்கள் ஆகியன குறித்துக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஆட்சியின்போது நிகழ்ந்த வரி எதிர்ப்புப் போராட்டம், றிஷீஜீஜீஹ் என்ற தாவரம் பயிரிடுவதை ஆங்கிலேயர் தடைசெய்ததை எதிர்த்து நடந்த போராட்டம், ஆங்கிலப்படையுடன் நிகழ்த்திய ஆயுதம் தாங்கிய போராட்டம், அதில் கலந்து கொண்டோர், அந்தமான் தீவுக்கு நாடு கடத்தப் பட்டமை ஆகியன குறித்த செய்திகள் துண்டுதுண்டாகக் கதை வடிவில் உள்ளன.

அந்தமான் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட பாகு கைபர்த்தா என்பவர் திரும்பி வந்து தம் அனுபவங்களை விவரித்துப் பாடலாகப் பாடியுள்ளார். வாய்மொழியாக வழங்கி வந்த இப்பாடல்கள் சேகரிக்கப்பட்டு முழுமையற்ற நிலையில் நூல்வடிவம் பெற்றுள்ளன.

இதுபோன்றே மணிப்புரிப் பகுதியில் ஏராளமான வரலாற்றுக் கதைப்பாடல்கள் மரபு சார்ந்த முறையில் பாடப்படுகின்றன.

ஊர்ப்பெயர்கள் சிலவும் கூட சில வரலாற்றுண்மை களைக் கொண்டுள்ளன. மணிப்புரி மக்கள் தம் தொல்சமயத்தைக் கைவிட்டு இந்துக்களாக மாறியதன் விளைவாக அவர்களின் பாரம்பரிய புராணக்கதை களிலும், பழமரபுக் கதைகளிலும் பிராமணியப் பண்பாட்டின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இம்மக்களின் பாரம்பரியமான தெய்வங்கள் இந்து சமய தெய்வங் களுடன் இணைக்கப்பட்டுள்ளன. கிறித்தவத்தின் பரவலும் இவர்களது நாட்டார் வழக்காறுகளை அழித்து வைத்தது.

* * *

நூலின் அறிமுகவுரையில் மேற்கோள்களின் அணிவகுப்பு (Arrays of Quotations) என்று தம் நூலின் உள்ளடக்கம் குறித்து நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது மிகவும் உண்மை. என்றாலும் வரலாற்று மாணவர்களும் நாட்டார் வழக்காற்றியல் மாணவர்களும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பல புதிய செய்திகளை இம்மேற்கோள்கள் வாயிலாக அறியமுடியும். ஈ.எச்.கார் எழுதிய ‘‘What is History என்ற நூலையும், பெர்னாட் கோன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘‘An Anthropologist among the Historians and other Essays’’ என்ற நூலையும் முழுமையாகப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வத்தை இம்மேற்கோள்கள் தூண்டுகின்றன.

குறிப்பு

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள பெர்னாட் கோனின் மேற்கோள்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதில் துணை நின்ற அன்பு நண்பர் பேராசிரியர். ரகு அந்தோணி அவர்களுக்கு என் நன்றி.

Pin It