Silappathikaram 400தமிழ் இலக்கிய உலகில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.  நாடகக் காப்பியம் என்றும் முத்தமிழ்க் காப்பியம் என்றும் தேசிய காப்பியம் என்றும் அறிஞருலகம் சிலப்பதிகாரத்தைப் பலவாறு சிறப்பித்துக் கூறும். 

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு, என்பது கவியரசர் பாரதியாரின் வாக்கு.  இவ்வாறு போற்றப்படும் சிலப்பதிகாரக் காப்பி யத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.

இவர், சங்க கால மன்னரான இமயவரம்பன் நெடுஞ்சேரலா தனின் மகன், சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றெல்லாம் இன்றுவரை இளங்கோவடிகள் பற்றிக் கூறப்பட்டு வந்த நிலைபெற்ற பல கருத்துக் களைத் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் ‘இளங் கோவடிகள் யார்’ என்ற நூலின் மூலம் முற்றாக மறுத்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.  அவர் இளங்கோவடிகள் பற்றிக் கூறியுள்ளதை இக் கட்டுரையின் வழிக் காண்போம்.

இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி அல்ல

இளங்கோவடிகள் இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனின் மகன், சேரன் செங்குட்டுவனின் தம்பி என்று சிலப்பதிகார வரம்தரு காதையில் கூறப்பட்டிருக்கிறது.  சேரன் செங்குட்டுவனுக்கு இளங்கோ என்று ஒரு தம்பி இருந்ததாகக் கூறு வதற்கு வரந்தரு காதைப் பகுதியைத் தவிர வேறு சான்று எதுவும் இல்லை என்றும், சேரர் புகழ் பாடும் பதிற்றுப்பத்தில் இமயவரம்பனுக்கு இளங் கோ என்ற மகன் இருந்ததாகக் குறிப்பில்லை.

அதே போல் செங்குட்டுவனுக்கு இளங்கோ என்ற தம்பி இருந்ததாகவும் குறிப்பில்லை.  மேலும் வரலாற்று செய்திகளைப் பிரதிபலிக்கக் கூடிய புலவர்கள் என்று கருதப்படும் கபிலர், பரணர் இருவரும் ஒரு பாடல்களில் கூட இளங்கோவடிகள் பற்றிப் பாட வில்லை என்று குறிப்பிட்டுவிட்டு வையாபுரிப் பிள்ளையின் பின்வரும் கூற்றைஎடுத்துக்காட்டியுள்ளார்.

“சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் செங்குட்டுவனது தம்பியென்றால் கற்பிதமே”1 இவ்வாறு மேலும் பல சான்றுகளை எடுத்துக் காட்டி இளங்கோவடிகள் சேரன் செங்குட்டு வனின் தம்பி அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

பதிகம் இளங்கோவடிகள் எழுதியது அல்ல:

குணவாயிற் கோட்டத்தில் துறவறம் பூண் டிருந்த இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்றும், சாத்தனார் கண்ணகி கதையைக் கூற இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார் என்றும், கூறப்படும் செய்திகளும் ஆதாரமாக இருப்பது சிலப்பதிகாரப் பதிகமும், மணிமேகலைப் பதிகமும்தான் என்பதைச் சுட்டிக் காட்டி.

சிலப்பதிகாரப் பதிகம்

“குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த

குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்குக்

குன்றக் குறவர் ஒருங்குடன் கூடடி,

பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்

ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு

அமரர்க் கரசன் தமர் வந்து ஈண்டி அவள்

காதல் கொழுநனைக் காட்டி அவளோடு என்

கண்புலம் காண விண்புலம் போயது”             (வரிகள் 1-8)

இப்பதிகத்தில் குன்றக் குறவர்கள் இளங் கோவடிகளிடம் கண்ணகி கதையைக் கூறிய தாகவும், காட்சிக் காதையில் குன்றக் குறவர்கள் சேரன் செங்குட்டுவனிடம் கூறியதாகவும் உள்ள முரண்பாடுகளையெல்லாம் எடுத்துக்காட்டி விட்டு சிலப்பதிகாரப் பதிகத்தை யார் எழுதியது என்ற வினாவை எழுப்பிக்கொண்டு ஆராய்ந்துள்ளார்.

“சிலப்பதிகாரத்துக்குக் கிட்டியுள்ள ஆகப் பழைய உரையான அரும்பத உரையில் பதிகத்தை இளங்கோவடிகளே எழுதினார் என்று கொள்ளத் தக்க குறிப்பு எதுவும் இல்லை.  ஆனால் சிலப்பதி காரப் பதிகத்தையும் சரி, மணிமேகலைப் பதிகத் தையும் சரி முறையே அந்த நூல்களின் ஆசிரியர் களான இளங்கோவடிகளும் சாத்தனாரும் இயற்றினர் என்று கொள்ளும் விதமாகவே அவற்றுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரின் உரை உள்ளது”2

இவ்வாறு அடியார்க்கு நல்லார் கொண்ட தன் காரணமாக சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியத்தின் பதிகத்தையும் அதன் அதன் ஆசிரியர்களே எழுதியுள்ளனர் என்று அறிஞர்கள் கொண்டு விடுகின்றனர்.  ஆனால் இந்தக் கருத்துத் தவறானது என்று சிலப்பதிகாரப் பதிகத்துக்கும், நூலுக்கும் உள்ள முரண்பாட்டின் வழியே அறிந்து கொள்ளலாம் என்று கூறி யுள்ளார் தொ.மு.சி.

“தன் ஆசிரியர் தன்னொடு கற்றோன்

தன் மாணாக்கன் தகும் உரைகாரர் என்று

இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே” (பாயிரவியல்- 51)

என்ற நன்னூல் சூத்திரத்தின்படிப் பார்த்தால் இளங்கோவடிகள் பதிகம் எழுதியிருக்க வாய்ப் பில்லை என்கிறார்.  மேலும் பதிகத்தை இளங் கோவடிகள் எழுதவில்லை என்பதற்குச் சான்றாக “மூவேந்தர்களிடமேயன்றி, வடவேந்தர்களுள்ளிட்ட பாரத வேந்தர்கள் எல்லோரிடமும் காணப்பட்ட சீர்கேடுகளை அகற்றவும் அவர்களிடமிருந்த சிறப்பு களை மக்களுக்குப் புலப்படுத்தவுமே சிலப்பதி காரத்தை இயற்றினார் என்று கூறி இந்த உண்மையைப் பதிக ஆசிரியர் ‘திரையிட்டு மறைக் கிறார்’ என்ற முடிவு கட்டி பதிகத்தைச் சிலப்பதி கார ஆசிரியர் பாடவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.  இறுதியில் இளங்கோவடிகளுக்கும், அரும்பத உரைகாரருக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தயாரோ ஒருவரால் பதிகம் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கூறி முடிக்கிறார்.  (சிலப்பதிகாரத் திறனாய்வு- பக் 22: 29)”3 என்று கூறி, மேலும் சிலப்பதிகாரப் பதிகத்தில்

“இவ்ஆறு ஐந்தும்

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

உரைசால் அடிகள் அருள கேட்டனர்”    (பதிகம் 86-89)

என்று படர்க்கை நிலையில் கூறப்பட்டுள்ளதைச் சாட்டிக்காட்டி “இளங்கோவடிகள் இவ்வாறு கருதுவது சரியில்லை தம்மைப் பற்றி ஒருவர் படர்க் கையில் வரைவது உலகியலுக்கு முரணானது”4 என்று மேலும் பல விளக்கங்கள் மூலம் பதிகம் இளங்கோவடிகள் எழுதவில்லை என்பதை நிரூபித் துள்ளார்.

இளங்கோவடிகள் சமண சமயத்தவர்:

தொ.மு.சி அவர்கள் இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதற்குக் கூறும் சில சான்றுகளைக் காண்போம்.

1.  கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் காலத்தில் அவர்களுக்கு வழித்துணை யாய் கவுந்தியடிகள் என்ற சமணப் பெண் துறவியை வரச்செய்து அவர் வாயிலாகச் சமயம் வாய்த்த போதெல்லாம் சமண சமயக் கொள்கையை எடுத்துரைப்பதன் மூலமாக இளங்கோவடிகள் தமது சமண சமயப்பற்றை நன்கு புலப்படுத்திக் கொள்கிறார் என்றும்

“ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்

திருமொழிக்கு அல்லது என் சைவியகம் திறவா;

கானமனை வென்றோன் ஆயிரத்து எட்டு

நாமம் அல்லது நவிலாது என் நா;

ஐவரை வென்றோன் அடியிணை அல்லது

கைவரைக் காணினும் காணா என் கண்

-----------------

அருகன் அறவன் அறிவோற்கு அல்லது என்

அருகையும் கூடி ஒருவழிக்குவியா”5

இப்பாடலை இளங்கோவடிகளின் சமண சமயப் பற்றுக்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.

2. சிலப்பதிகாரத்தின் தலைமை மாந்தர்களான கோவலன், கண்ணகி இருவரையும் இளங்கோ வடிகள் சமண சமயத்தாரில் இல்லறத்திற்குரிய சிராவக தருமத்தைக் கடைப்பிடித்து வந்த சமணர் களாகவே காட்டியுள்ளார் என்றும்.

3. “-----கண்ணகியும் கோவலனும் புகார் நகரை விட்டுக் கிளம்பிச் செல்லும்போது, இருவரும் மணிவண்ணன் (திருமால்) கோவிலை வலஞ் செய்து கடந்தும் ----  புத்த சைத்தியத்தின் இந்திர விகாரை ஏழையும் கடந்து சென்றும் --- இறுதியில் “உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதலம்” (வரி 24-25)  ஆன சமணர் கோயிலை மட்டுமே தொழுது வலங்கொண்டு ----  சென்றனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.  இதன்மூலம் கோவலனும் கண்ணகியும் ஏனைய கோவில் களையும், தெய்வங்களையும் மதித்தாலும், தமது சமயச் சிலாதலமான சமணக் கோவிலையே தொழுது சென்றனர் என்று தெரிய வருகிறது.  இதனால் இருவரும் சமண சமயத்தவரே என்ற குறிப்பும் நமக்குக் கிடைக்கின்றது”6  என்றும்,

மேலும் பல சான்றுகளை எடுத்துக்காட்டி இளங்கோவடிகளும் அவர் படைத்த தலைமை மாந்தர்களும் சமண சமயத்தவர்களே என்று குறிப்பிட்டுள்ளார்.

இளங்கோவடிகள் வணிக வர்த்தகச் சார்ந்தனர்:

தொ.மு.சி அவர்கள் சிலப்பதிகாரம் ஒரு வர்க்க இலக்கியம் என்கிறார்.  இவ்விலக்கியம் நிலவுடைமைச் சமுதாயத் தலைமைக்கு எதிராக வணிக வர்க்கத்தின் மேலாண்மையை நிலைநாட்ட எழுந்த இலக்கியம் எனவே அரச வர்க்கத்துக்கு எழுதப்பட்ட இலக்கியத்தை அரச வர்க்கத்தைச் சேர்ந்த இளவரசரோ, வேறு எவருமே எழுதி யிருக்க முடியாது.

சங்ககாலத்துச் சேர மன்னர்களின் இளைய புதல்வர்கள் இளங்கோக்கள் எனக் குறிப்பிட்டனர் என்றும் பிற்காலக் கல்வெட்டுகளிலும் இளவரசர் களை ‘இளங்கோ’ என்று குறிப்பிட்டதற்கான ஆதாரங்கள் உண்டு என்று சான்றுகளை எடுத்துக் காட்டி விளக்கங்களை அளித்து விட்டு மேற்கண்ட அனைத்திலிருந்தும் இளங்கோ என்ற சொல் பொதுவாக இளவரசர்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என் றெல்லாம் குறிப்பிட்டு இளங்கோவடிகளின் பெயரில் உள்ள ‘இளங்கோ’ என்ற சொல் அரச பரம்பரையைச் சார்ந்தது அல்ல என்கிறார்.  அதற்குக் காரணம்.  தொ.மு.சி. சிலப்பதிகாரத்தை ஒரு வர்க்க இலக்கியமாகக் கண்டதே.

அவ்வாறாயின் இளங்கோ என்ற பெயர் யாரைக் குறிக்கிறது என்ற வினாவுக்கு உண்மையில் இளங்கோ என்ற சொல் வணிகர்களைக் குறிக்கும் சொற்களில் ஒன்றாகும் என்கிறார்.  இளங்கோ என்ற சொல் வணிகரைக் குறிக்கும் என்பதற்குப் பல சான்றுகளை எடுத்துக்காட்டியுள்ளார் அவற்றுள் ஒரு சில சான்றுகளை இங்குக் காண்போம்.

சேந்தன் திவாகரம்:

இந்த நிகண்டில் ‘செட்டிகள் பெயர்’ என்ற பெயரில்,

“இப்பர், பரதர் வைசியர் கவிப்பர்

எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர்

ஓப்பில் நாயகர் வினைஞர் வணிகர் என்று

அத்தகு சிரேட்டிகள் - செட்டிகள் பெயரே”           (சூத்- 32) என்றும்

பிங்கலந்தை நிகண்டில்

“தாளாளர், இப்பர் தருமக்கிழார்

வேளாளர் இளங்கோக்கள் வைசியர் பொதுப்பெயரே” (சூத்- 68) என்றும்

கயாதர நிகண்டில்

“பட்டம் புனையும் அமாத்தியர், ஏனாதி, காவிதி என்று ஓட்டிய பேர் மந்திரி

தந்திரிக் கென்பர் ஓங்கு இளங்கோ எட்டிய இப்பர் பரதர் வயிச்சியர் ஏர்த்தொழிலாளர் செட்டிகள், நாயகர், கவிப்பர் வணிக சிரேட்டிகளே”

என்றும், சான்றுகள் மூலம் வைசியர்களுக்கு அதாவது வணிகர்களுக்கு உரிய குலப் பெயர் களில் இளங்கோ என்பதும் ஒன்றாகும் என்பது திட்டவட்டமாகத் தெரிய வருகிறது.  என்று மேலும் பல விளக்கங்களின் மூலம் இளங்கோ வடிகள் வணிக வர்க்கத்தைச் சார்ந்தனர் என்ற தமது கருத்தை நூலில் பதித்துள்ளார்.

இளங்கோவடிகள் துறவியா?

தொ.மு.சி அவர்கள் இளங்கோவடிகள் துறவி அல்ல என்ற கருத்தையும் கூறியுள்ளார்.  அடிகள் என்ற பெயர் கொண்டதால் இளங்கோவடிகள் துறவியாகத்தான் இருந்தார் என்று முடிவுகட்டி விட முடியாது என்று குறிப்பிட்டு சிலப்பதி காரத்தில்,

‘அடிகள் நீரே அருளுதிர் ஆயின்’

என்று கோவலன் கவுந்தியடிகளையும்,

‘அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்’

என்று மாதவி கோவலனையும்,

‘சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்’

என்று மாதிரி, கோவலன் கண்ணகியைக் குறிப் பிடும் போதும்,

‘அமுதம் உண்க அடிகள்! ஈங்கு’

என்று கண்ணகி கோவலனையும் அடிகள் என்று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டி

“இவற்றிலிருந்து சிலப்பதிகாரத்தில் அடிகள் என்ற சொல் மூத்தவர்களையும் மரியாதைக்குரிய வர்களையும் குறிப்பிடுவதற்கும் விளிப்பதற்குமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது

--- இவற்றையெல்லாம் பார்க்கும் போது இளங் கோவடிகள் துறவியாகவே இருந்தார் என்று அறுதியிட்டுத் துணிவதற்கு இடமேயில்லை.  மாறாக அவர் கல்வியறிவும் கவித்துவ சக்தியும் மிகுந்து எல்லோரது மதிப்புக்கும் மரியாதைக்கும் வணக்கத்துக்கும் உரிய வணிகப் பெருமகனாகவே, இருந்திருக்கக் கூடும் என்றும், அதன் காரண மாகவே அவர் அடிகள் எனக் குறிப்பிடப்பட்டார் என்றும் கொள்வதே பொருத்தமாகத் தோன்று கிறது”7  என்கிறார் தொ.மு.சி.

இவ்வாறு தொ.மு.சி அவர்கள் ‘இளங்கோ வடிகள் யார்?’ என்ற நூலை சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்து சிலப்பதிகாரத்தை அறிஞருலகம் நோக்கிய பார்வையிலிருந்து விலகி புதுமையான முறையில் சிலப்பதிகாரத்தை அணுகியிருக்கிறார்.  இளங்கோவடிகள் அரசர் குலத்தைச் சார்ந்தவர் அல்லர், அவர் ஒரு துறவியும் அல்லர், சிலப்பதி காரத்துப் பதிகத்தை எழுதியவரும் அல்லர், சேரன் செங்குட்டுவனின் தம்பியும் அல்லர் என்பதை ‘தொ.மு.சி.  ஆய்வில் இளங்கோவடிகள் என்ற தலைப்பின் வழி அறிந்துகொள்ளலாம்.

துணை நூல்கள்

1.தொ.மு.சி. ரகுநாதன், இளங்கோவடிகள் யார்? பக்- 48

2.தொ.மு.சி. ரகுநாதன், இளங்கோவடிகள் யார்? பக்- 34

3.மேலது பக்- 36

4.மேலது, பக்- 39

5.சிலப்பதிகாரம், நாடுகாண் காதை (வரி 94-103)

6.தொ.மு.சி. ரகுநாதன், இளங்கோவடிகள் யார்? (பக் 62- 63)

7.மேலது (பக் 930- 931)

Pin It