anjadhi book 450அஞ்ஞாடி

ஆசிரியர்: பூமணி

வெளியீடு: க்ரியா பதிப்பகம்

3, 19வது கிழக்குச்சாலை,

திருவான்மியூர், சென்னை - 41

விலை: ரூ. 925/-

பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு 2014  ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடெமி விருதுக்கான பட்டியலை செயலாளர் ஸ்ரீநிவாச ராவ் டெல்லியில் வெளியிட்டார். இருபத்திரண்டு இந்திய மொழி களுக்கான விருதுப் பட்டியலை அவர் அறிவித்ததில் தமிழில், எழுத்தாளர் பூமணி, 2012 ஆண்டில் எழுதிய அஞ்ஞாடி என்ற நாவல், விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடெமி விருது 2015 மார்ச் 9 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

எண்பதுகளின் துவக்கதிலிருந்தே எழுதிக் கொண் டிருக்கும் படைப்பாளி பூமணி. தமிழில் தலித் இலக்கியப்பரப்பு தீவிர எழுச்சி பெறுவதற்கு முன்பாகவே இவரது, பிறகு நாவல் தலித்திய வாழ்வியலை கலை நுட்பத்தோடு பிரதியாக்கம் செய்திருந்தது. பிறகு, வெக்கை, வரப்புகள், வாய்க்கால், நைவேத்தியம் நாவலுக்குப் பிறகு ஐந்தாவது நாவல் அஞ்ஞாடி. 2012 ஆம் ஆண்டு கிரியா பதிப்பகம் இதனை வெளி யிட்டுள்ளது.

அஞ்ஞாடி என்ற சொல்லுக்கு என்ன பொருள்... ஒரு மர்மத்தன்மை பொருந்திய தலைப்பாகவே இருக்கிறது எனச் சிலர் நினைக்கலாம். இது வட்டார மொழி வழக்குச் சொல். அஞ்ஞ என்பதற்கு அம்மா என்பது பொருள். அம்மாடி என்றும் அன்னை என்றும் பொருள் கொள்ளத்தக்க சொல்லாக இருக்கிறது. மழைக் கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புதினத்தைத் தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருந்தார்.

‘வயிறு’, ‘ரீதி’, ‘நொறுங்கல்கள்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. கருவேலம்பூக்கள் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். கோவில்பட்டி கரிசக்காட்டு நிலவியல் சார்ந்த எழுத்துலகம் இவரது படைப்புகளின் தொனியாகி இருக்கிறது. பூ.மாணிக்க வாசகம் தமிழ் புதினத்தின் பூமணியாக நெடிது வளர்ந்த வரலாறு அவரது இடைவிடாத பெருமூச்சு கலந்த எழுத்துப் பயணத்தின் அடையாளமாகவே கருதலாம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தில்(1879) தமிழின் நாவல் எழுத்து துவங்கியது. நவீன இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிற கார்க்கியின் ‘தாய்’ நாவல் இந்திய மொழிகளில் 1930களில் அறிமுகமாகிறது. இந்தி இலக்கியத்தில் பிரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த் எனவும், மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளையின் படைப்புகளாகவும் சமூக யதார்த்தவியல் எழுத்து உருவாகிறது.

தமிழில் சமூக வரலாறுகளை புனைவாக எழுதிப் பார்க்கும் யதார்த்த வகைப்பட்ட எழுத்துமுறை தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் (1953) நாவலில் நெசவாளர்களின் வாழ்வியல் சார்ந்து புதுமாதிரியாக வெளிப்படத் துவங்கி யிருந்தது. இது கு.சின்னப்ப பாரதி, (தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, சுரங்கம் நாவல்கள்) டி.செல்வராஜ், (மலரும் சருகும், தேநீர், தோல்) பொன்னீலன், (கரிசல், புதிய தரிசனங்கள், மறுபக்கம்) என்பதான ஒரு நீண்ட பாரம்பரிய துவக்கம் கொண்டது.

தமிழ் நாவல் படைப்பாளிகள் என்ற விதத்தில் கவனத்திற்குரிய முக்கிய படைப்பாளிகள் இந்த சாகித்திய அகாடெமி விருதினைப் பெற்றுள்ளனர். 1956 களில் கல்கி கிருஷ்ணமூர்த்தியிலிருந்து நாவல் இலக்கிய வகைமை கவனம் பெறத் துவங்குகிறது. நா.பார்த்தசாரதி (1971), ஜெயகாந்தன் (1972), ராஜம் கிருஷ்ணன் (1973), இந்திரா பார்த்தசாரதி (1977), தி.ஜானகிராமன் (1979), தொ.மு.சி.ரகுநாதன் (1983), சு.சமுத்திரம் (1990), என்பதாக இது நீட்சி பெறுகிறது.

தொண்ணூறுகளுக்குப் பிறகான விருது பெற்ற நாவலாசிரியர்களில் கி.ராஜநாராயணன் (1991), பொன்னீலன் (1994), பிரபஞ்சன் (1995), அசோகமித்ரன் (1996), தோப்பில் முகமதுமீரான்(1997), சா.கந்தசாமி (1998), திலகவதி (2005), நீல பத்மநாபன் (2007), மேலாண்மை பொன்னுசாமி (2008), நாஞ்சில்நாடன் (2010), சு.வெங்கடேசன் (2011), டி.செல்வராஜ் (2012), ஜோ டி குரூஸ் (2013) என்பதாக விருது பெற்றவர்களின் பெயர்களை வரிசைப்படுத்திப் பார்க்கலாம்.  

இந்த நாவலாசிரியர்கள் அவர்களது தலைசிறந்த படைப்பை எழுதிய காலத்தில் இந்தப் பரிசை பெற்றிருக் கின்றார்களா என்பது ஒரு கேள்விக்குரிய வாதமாகவே மிஞ்சி நிற்கிறது. இந்த விருது எல்லைப் பரப்புக்குள் வராத ஆனால் மிகவும் காத்திரமாக எழுதிக் கொண் டிருக்கிற ஒரு முப்பது நாவலாசிரியர்களையாவது சமகாலச் சூழலில் நம்மால் கண்டெடுக்க முடியும் பூமணியின் அஞ்ஞாடி இத்தகைய படைப்புச் சூழலில் என்னவிதமான வாழ்வின் தரிசனத்தை முன் வைக்கிறது என்பது முக்கியமானது. அஞ்ஞாடி.

1050 பக்கங்களையும் 22 படலங்களையும் கொண்ட பெரும்வடிவப் புனைவு. அஞ்சாடியின் நாவல் களம் தமிழகத்தின் தெற்குப்பகுதியில் உள்ள கலிங்கல்  என்னும் கிராமமாக இருக்கிறது.

பள்ளக்குடியின் ஆண்டி குடும்பன், வன்ணாக்குடியின் மாரி என்னும் இருவேறு ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விலிருந்து உருவாகி யிருக்கும் இப்படைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. நவீன இந்திய சுதந்திர வரலாற்றுக் கதைகளின் பயணத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையில் முடிவதாக அமைகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக் களமாக இருக்கும் நிலையில் தமிழக சமூக வரலாற்றின் பக்கங்கள் புனைவெழுத்தின் நினைவோட்டமாய் உருப் பெறு கின்றன. ஆண்டிக் குடும்பன், மாரி வண்ணான், கழுகு மலை பெரிய நாடார் ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் வழியாக நாவல் பயணிக்கிறது. ஆண்டி, மாரியின் இளம்பிராய ஞாபகங்களும், கதைகளின் உணர் வோட்டமாகிறது.

வண்ணார்குடி பையனான மாரி கொண்டுதரும் பலவீட்டு சோற்றின் ருசியில் மயக்கம் ஏற்படாமல் இல்லை. வண்ணார் பையன் மாரியோடு சேர்ந்து விளையாடும் ஆண்டிக்கு அடியும் உதையும் கிடைத்தாலும் இருவரின் உறவிலும் விரிசல் ஏதும் எழவில்லை. ஓடை ஒன்றின் சகதியில் மாட்டிக் கொண்டு போராடும் ஆண்டியையும் மாரிதான் காப்பாற்றுகிறான். ஆண்டிக்கும் மாரிக்கும் இடை யிலான பேச்சு உரையாடலும் விளையாட்டுக்களும், உணவுத் தின்பண்டங்களும் ஒரு வாழ்வியல் கலாச்சார இணைப்பின் கூறுகளாக வெளிப்படுகின்றன.

மாரி ஆண்டிக்கு சொல்லும் கதைகள் பலப்பல. அதில் ஒன்று மாரி கழுதையோடு நிலவுக்குச் சென்றுவரும் கதை, தண்ணிப் பேயின் கதை மரணத்தின் தறுவாயில் கூட இயல்பான தனது கதைச் சொல்லலை விட்டுக் கொடுக்காமல் கிணற்றில் சந்தித்த முனியசாமி அனுப்பிய முனிப் பேய்களைப் பற்றிய கதைகளைச் சொல்லுகிறான். இறந்து போன மாரி கதைகளோடு ஆமையின் மீதேறி வருவது ஆண்டியின் கனவிலும் வருகிறது. கதைப் புனைவுகளின் உலகம் பல்கிப் பெருகுகிறது.

உணவுக்கு எதிர்மறையான உலகம் பஞ்சம். இந்த நாவலில் தாதுவருஷப் பஞ்சத்தில் அடித்தள மக்கள் அவதியுற்ற உலகமும் பதிவாகிறது. எங்கும் மரண ஓலங்கள் கேட்கின்றன. காலையில் மரணமடைந்த வனின் பிணத்தை எடுத்துச் சென்றவர்கள் மாலையில் மரணமடைந்துவிடுகிற துர்பாக்கிய வாழ்தலின் அழிப்பாக காட்சிகள் நகர்கின்றன.

பள்ளர், வண்ணார், நாடார் சமூகங்களின் வம்ச வரலாறும் ஒடுக்குமுறைக்கு ஆளான சமூக வரலாறும், புனைவு எழுத்தாக உருவாகி உள்ளன. தென்னகத்தின் அடித்தள மக்களான நாடார் சமூகத்தின் உரிமைகளுக்கான போராட்டங்களும் மறுபடைப் பாக்கம் பெற்றுள்ளன. பனையேறி சண்முகத்தின் கதையும் இதில் உண்டு. சகோதரர்கள் இருவரும் பனைமரத்தின் மேலிருந்து கொண்டே சண்டை போட்டு ஒருவரை ஒருவர் கொலைசெய்து வீழ்ந்து மாய்ந்து விடும் சம்பவங்கள் பகைப் புலன்களின் கருவறுப்பை பேசிச் செல்கின்றன. ஆண்டியின் குடும்பத்தோடு சண்முகத்தின் குடும்பமும் பந்தம் கொள்கிறது.

இதில் கழுகுமலை வரலாறும் சைவர்கள் எண்ணூறு சமணர்களை கழுவிலேற்றி கொலைசெய்த துன்பியல் சம்பவமும் இடம்பெறுகிறது. பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் ஆட்சி யதிகாரம், பிரிட்டிஷாருக்கு எதிரான கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர் போன்ற பாளையக் காரர்களின் விடுதலைப் போராட்ட யுத்தங்கள், எட்டயபுரம் ஜமீன் வரலாறும் அதிகாரமும் அடக்கு முறைகளும், என்பதாக இது விரிவடைகிறது.

தமிழ் சமூக வரலாற்றில் முக்கியமாக நிகழ்ந்த கழுகுமலைக் கோயில் ரதவீதிகளில் பல்லக்கு தூக்கிச் செல்லும் உரிமைக்காக நாடார் சமுதாயம் நடத்திய கழுகுமலைப் போராட்டமும், சிவகாசிநாடார்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொள்ளைச் சம்பவ சாதிக் கலவரங் களும், தலித்துகள் கிறிஸ்தவத்திற்கு மதமரிய வரலாறு களும் இந்த நாவலின் சமூகவியல் பரிமாணத்தை துலக்கிக் காட்டுகிறது. நவீனகால வரலாற்றின் துவக்கமாக சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வரவு, கல்வி, மருத்துவம், ஊடக சினிமாவின் தோற்றங்கள் குறித்த வரலாறும் இயைந்து நாவலின் காலத்தை முன்பின்னாக நகர்த்திப் போடுகிறது.

அஞ்ஞாடி நாவலில் வரலாற்றியல் கதைகளின் உலகமாக அமணர், அப்பர், அருகர், நாயன்மார், பிள்ளையாண்டவர், வைகுண்டசாமி, சமயப் பண் பாட்டு கதையாடல்களும், கான்சாகிப், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், விடுதலைப்போரின் சரித்திரக் கதையாடல்களும் எட்டயபுர வம்சம், கிறிஸ்தவப் பண்பாட்டின் விரிவாக்கம் என்பதாகவும் இந்த நாவல் பிரதி பல்வேறு வரலாற்றியல் குறுங் கதையாடல்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஒரு ஆயிரம் ஆண்டுக்கால சமுக வரலாற்றின் சாரம் புனைவெழுத்தாக வடிவெடுத்துள்ளது.

3) தூரன் குணா தனது விமர்சனப் பதிவில் அஞ்ஞாடி நாவலின் உச்சத்தைத் தொடும் இரு காதல் கதைகள் பற்றி இவ்வாறாகக் கூறுகிறார்.

“அஞ்ஞாடி நாவலில் வரும் இரண்டு காதல் கதைகள் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஒன்று மரபான தன்மை கொண்ட வீரம்மா-கருத்தையன் காதல். இரண்டாவது மரபுக்கு எதிரான தன்மை கொண்ட ஆண்டாள்-அல்லுண்டு காதல். வீரம்மாளின் வாழ்வு ஒளிந்து வாழும் கணவன் கருத்தையனுக்காகக் காத்திருந்து கழிகிறது. இறுதிவரை அவளுக்குக் குழந்தை யில்லை. சற்றே காவியத்தன்மை மேவிய காதல்.

ஆனால் கணவனை இழந்த ஆண்டாளுக்கும் அல்லுண்டுக்குமான காதல் யதார்த்தமானது. உறவில் கூடும் கர்ப்பத்தை ஒவ்வொருமுறை கலைக்கும்போது அதன் எச்சங்களைச் சுமந்து சென்று அல்லுண்டு புதைப்பதும் பிறவாமல் அழிந்த சிசுக்கள் உயிர்த்தெழுந்து ஆண்டாளை வதைப்பதுமான இந்தக் கதையை நாவலின் உச்சமான பகுதிகளில் ஒன்றாகச் சொல்லலாம். மனதின் ஆதார உணர்ச்சிகளையும் மனித வாழ்வின் பல்வேறு நிலைகளையும் தொட்டுத் தொட்டுச் செல்லும் அஞ்ஞாடியில் வாசித்துத் துய்ப்பதற்கும் விவாதித்து அறிவதற்கும் திறப்புகள் உள்ளன.

மற்றுமொரு பதிவாக பெங்களூர் ரஞ்சித் பரஞ் சோதியின் விமர்சனக்குறிப்பு யதார்த்தவியல் பாங்கு கொண்ட அஞ்ஞாடிக்குள் அதீத கனவின் சித்திரங்கள் எவ்வாறு கட்டமைப்பு கொண்டிருக்கிறது என்பதை சொல்லிச் செல்கிறது. சமயப் பண்பாட்டின் புனித பிம்பங்கள் மேரிமாதா, முருகன், வள்ளி, எல்லோரும் உயிர்பெற்று நாவலுக்குள் நடமாடுகிறார்கள். அவரது விமர்சன சித்திரிப்பு இவ்வாறாக இடம் பெறுகிறது.

“சர்ரியலிசத் தன்மை கொண்ட நாவலின் பகுதி களான கனவுகளும், பேய்களின் உரையாடல் களும், கோடங்கிப் பாடலும், கழுதைகள், எறும்புகள் மற்றும் பட்சிகளின் பேச்சுக்களும், அரவக் கருடனார் உலா என்ற படலமும் மொழியின் உச்சங்களைத் தொட்டு நம்மைக் கிறங்கடிக்க வைக்கின்றன.

ஆண்டிக் குடும்பன், தன் நண்பன் மாரி வண்ணானைப் பற்றிக் காணும் கனவு, கொடுமை யான பஞ்ச காலத்தில் மருதன் காணும் கனவு, வேதமுத்து நாடார் காணும் பைபிள் கதைகளின் கனவு, பள்ளர்குடி மூக்காயி காணும் கனவு என நிறைய கனவுகள் இடையில் வந்து போகின்றன. இந்தக் கனவுகள் கதை மாந்தர்களின் உள வியலையும், சம்பவங்களையும் நம்முன் வெட்டிப் போட்டுக் காட்சிப்படுத்தி கதையுடனான நம் அனுபவத்தை மெருகேற்றி விடுகின்றது.” எனக்கு மிகப்பிடித்த கனவு கழுகுமலை பள்ளர் குடியில் வசிக்கும் மூக்காயி காணும் கனவுதான்.

பங்குனி உத்திரத் திருநாளன்று கழுகுமலை கலவரத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எட்டயபுரத்து சமீன் மேனேஜர் கொலை செய்யப்படுகிறார். கேட்பாரற்று முருகனின் தேர் வீதியில் கிடக்கிறது. எதிரில் கிறித்தவ நாடார்களின் கோயில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் மூக்காயி கனவு காண்கிறாள். எரிந்து கொண்டிருக்கும் வேதக் கோவிலை விட்டு மேரி மாதா வெளியேறி மூக்காயி வீட்டில் தஞ்சம் அடை கிறாள். மூக்காயிக்கு சந்தோசம் சொல்லி மாளவில்லை. அவளால் கோவிலுக்குள் வந்து பார்க்கமுடியாத  மாதா அவளுடைய வீட்டிற்கே வந்த ஆனந்தத்தை எல்லோருக்கும் சொல்கிறாள். அமைதியான இடம் தேடி அலைவதாய் மேரி மாதா சொல்ல மூக்காயும்  இன்னும் சிலரும் மாதாவை யார் கண்ணிலும் படாமல் மலையைச் சுற்றி அனுப்பிவைக்கிறார்கள். அந்த வழியில் ஆம்பலூரணிக்கருகில் உள்ள மண்டபத்தில் ஒரு கூட்டம் இருக்கின்றது. அக்கூட்டத்தில் தேரை விட்டு இறங்கி வந்த முருகனும் வள்ளியும் நிற்கிறார்கள்.

முருகனைப் பார்த்ததும் மாதாவுக்கு தன் மகனைப் பார்த்தது போன்ற சந்தோசம். முருகன் தன் வாகனமான மயிலை மாதாவுக்குக் கொடுத்து பத்திரமாக வேறு ஊருக்கு அனுப்பிவைக்கிறான். வேதமுத்து நாடாரின் கனவில் கழுகுமலையின் மலையில் நோவாவின் கதை நிகழ்கிறது. மலையைச் சுற்றிய பகுதிகளில் ஏசு புதுமைகள் செய்கிறார். மலையின் சமணக் குகை இருக்கும் இடம் யூத மதகுருக்களின் தலைமைச் சங்கமாக இருக்கின்றது. மலையடிவார மரத்தில் யூதாஸ் தற்கொலை செய்கிறான். பைபிள் கதைகள் கழுகுமலையில் நிகழ்கின்றன.

அஞ்ஞாடியின் கொட்டிக் குவிக்கப்பட்ட கரிசல் மண்ணின் கதைகளும் கதைமொழிகளும், கதைப் பேச்சுகளும் வெவ்வேறு பண்பாட்டுக்குள் கிளைபரப்பி வித விதமான ரூபங்கொண்டு வாசகனிடத்தில் நெருக்க மாக உரையாடுகின்றன. அடித்தள மக்களின் மொழியால் சொலவடைகளால், கதைகளால், பேச்சுக்களால், ஏசல்களால், உரையாடல்களால் உயிரோட்டம் பெற்ற அஞ்ஞாடியைப் படைத்த பூமணிக்கு நாமும் வாழ்த்துச் சொல்லுவோம்.

Pin It