temlpe 350செந்தமிழ்க் கோயிலின்

சிந்தனைச் சிற்பம்

ஆசிரியர்: .முருகேசன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098.

விலை: ரூ. 120/-

சங்க, பக்தியிலக்கியப் பரப்பிலிருந்தும், பாரதியின் கவிதைகளை மையமிட்டும் ஆய்வு நோக்கிலான கட்டுரைகளாய் ஒன்றிணைந்த பிரதியென வெளி வந்துள்ளது ‘செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்’ எனுமொரு தொகுப்பு நூல். தமிழ்ப் பேராசிரியர் க.முருகேசன் அவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இலக்கியங்களின் பதினொரு கட்டுரைகள் உள்ளடங்கிய இத்தொகுப்பு நூல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2012 வெளியீடாகும். இத்தொகுப்பு நூலானது 172 பக்கங்களுடன் திகழ்கிறது.

தமிழிலக்கியப் பேராசிரியர்களின் அல்லது கல்வியாளர்களின் இலக்கிய ஆய்வென்பது கல்விப் புலஞ்சாராத இலக்கியத் திறனாய்வாளர்களாலும் விமர்சகர்களாலும் ‘ஆழஅகலமின்மை’, ‘வறட்சி’ என்பதான குறுகிய மனோபாவத்துடன் விவாதிக்கப் படுவதுடன் அவர்களின் திட்டமிட்ட அங்கதச் சொல்லாடல்களுக்கும் ஆட்பட்டு வரும் ஆரோக்யமற்ற தருணமிது. இது கல்விப்புலஞ் சாராதவர்களின் விஷமத்தனமான, அறிவதிகார அரசியல் பின்புலத் திலான பொருளியல் பார்வை கொண்ட தன்முனைப் பெனலாம். எவ்வாறாயினும் இப்படியானதொரு அறிவுலகச் சூழலில் கல்விப்புலஞ் சார்ந்த ஆய்வு முறையியலோடு காத்திரமான ஆய்வுகளும் வெளி வருகின்றன என்பதற்கான அடையாளமே பேரா.

க.முருகேசன் அவர்களின் ‘செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்’ என்கிற ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

‘பாரதியின் பார்வையில் பிரபஞ்சம்’ (பக்.1-19) எனும் தொடக்கக் கட்டுரையில் புத்திலக்கிய வகையான பாரதியின் பாடல்களில் ஊடாடும் பிரபஞ்ச, வானவியல் குறிப்புகள் பதிவுகளாகியுள்ள தன்மையை நூலாசிரியர் புலப்படுத்திக் காட்டுகிறார். இதற்கேற்ப அறிவியல் தவிர்த்த மொழி, இலக்கியத்தில் மானுடவாழ்வை நோக்குதலென்பது சிறப்பற்ற செயலெனக் கருதும் நூலாசிரியர் அறிவியலின் அடிநாதம் குறளில் திகழ் வதைச் சுட்டிச் (ப.2) செல்கிறார்.

குறிப்பாக இலக்கிய கர்த்தாக்கள் அறிவியலராகத் திகழ்ந்ததை நூலாசிரியர் எடுத்துரைக்கையில் (ப.3) தஸ்தயேவ்ஸ்கியின் ஆக்கங்களின் வழி ஐன்ஸ்டீன் தான் கண்டடைந்ததாக விளக்கும் ‘சார்புநிலைக் கோட்பாடு’ (Relativity Theory) வாசிப்போருக்கு நிழலாடும். மேலும் பண்டைய, பக்தி, காப்பிய இலக்கியங்களில் பொதிந்துள்ள அறிவியல் கருத்தாக்கங்கள் அவரின் மரபுவழி இலக்கிய வாசிப்புச் செழுமையையும் நமக்குள் உணர்த்திவிடுகிறது.

பேரண்டங்களின் எண்ணிக்கை (ப.6) அணுக்களின் சுழற்சி (ப.6), விஞ்ஞான முன்நகர்வு (ப.6), சுழற்சி மிக்க அண்டங்களின் வியத்தகு செய்திகள் (ப.6), உயிருள்ள உலகம் அதனியக்கம் (ப.6), பஞ்ச பூதங்கள் (ப.6), விண்ணொளி (ப.6), வால்நட்சத்திரம் (ப.8), தூமகேது (ப.8), வாலின் நீளம் (ப.10), தொழில்நுட்பவியல் (ப.11), பொறியியலறிவு (ப.11), நீர்வரப் பங்கீடு பற்றிய வளர்ச்சித்திட்டம் (ப.11), அண்ட விரிவெளிக் கொள்கை (ப.14), பேரண்டக் கருத்துக்கள் (ப.17) என, பாரதியின் படைப்பினூடாக அவர் தொட்டுச் செல்லும் பிரபஞ்சச் செய்திகளை நூலாசிரியர் வெளிப்படுத்துவது மகாகவியின் மீதான பிரமிப்பைக் கூடுதலாக்குகிறது.

பாரதிக்கான பிரபஞ்ச அறிவைப் புலப்படுத்தவும் கட்டுரைக்கு வலுச் சேர்க்கும் முயற்சியாகவும் பாஞ்சாலி சபதம் (ப.5), சாதாரண வருசத்துத் தூமகேது (ப.8), இந்தியா இதழ் (ப.8), கோமதிமஹிமை (ப.15), சுதேசமித்திரன் இதழ் (ப.17) ஆகியவற்றைச் சான்றாதாரமாக்கியுள்ளார் நூலாசிரியர். மேலதிகமாகத் தன்னாய்வுச் செய்திகள் அழுத்தமுற மாணிக்கவாசகர் (ப.11), திரு.வி.க. (ப.15), விவேகானந்தர் (ப.15), ஒளவையார் (ப.7), பாவேந்தர் (ப.7), வள்ளலார் (ப.12), ரஷ்ய விஞ்ஞானி காட் (ப.13) ஆகியோரின் அறிவியல் சிந்தனைகளையும் பாரதி

யோடு இயைபுறுத்துவது நூலாசிரியரின் ஆய்வுலகப் பயணிப்பாகும். குறிப்பாக பாரதியைப் பிரபஞ்சவியல் அறிஞனாகவும் எதிர்காலவியல் கவியாகவும் தத்துவ நெறியாளராகவும் தன்னாய்வில் நூலாசிரியர் முன்நிறுத்துவது (ப.18) மகாகவியின் மீதான புதியதொரு வெளிச்சமாகும்.

இரண்டாவது ஆய்வுக்கட்டுரையான ‘கம்பனின் விழுமிய வாழ்வியல்’ மிகக் கூடுதலான பக்கங்களில் வெளிப்பட்டுள்ளது. இக்கூடுதல் பக்க வெளிப்பாடு நூலாசிரியருக்குக் கம்பன் மீதான அளப்பரிய ஈர்ப்பைப் புலப்படுத்துவதாகும். இக்கட்டுரை கம்பன் பதிவுகளாக்கி யுள்ள மானுட மதிப்புகளை எடுத்துக்காட்டும் நோக்கிலானது.

குறிப்பாகத் தயரதன் வழி வாக்குத்தவறாமை (ப.21), சடாயு (ப.21), குகன்(ப.23), சுக்ரிவன்(ப.23), விபீடனண் (ப.23) ஆகியக் காப்பிய வார்ப்புகளை முன்னிறுத்தத் ‘தோழமை’, கோசலநாட்டின் தானத் தன்மை (ப.23), இராமாயண மகளிரின் பண்புநலன் (ப.24) ஆகியவற்றோடு சடாயு உயிர்த்துறப்பு உவமை களையும் (ப.24) விருந்தோம்பலெனும் வாழ்வியல் மதிப்பையும் கம்ப சூத்திரமாக்கியுள்ளதை நூலாசிரியர் வெளிப்படுத்திக்காட்டியுள்ளார்.

மேலும், கற்பின் மேன்மையைச் சீதை (பக்.25-26), அகலிகை (ப.27) பாத்திர வார்ப்பில் கம்பர் உருவாக்கியுள்ளதை நூலாசிரியர் விளக்கியிருப்பது தமிழினத்தின் மரபார்ந்த வாழ்வியலுக்கு அவரளிக்கும் மதிப்பாகும். தொடர்ந்து ஒழுக்கம் (ப.31), கடமையுணர்வு (ப.37) என்பதான மானுட மதிப்புகளை இராமாயணக் காப்பியத்தி னூடாகக் கம்பர் முதன்மைப்படுத்துவதை நூலாசிரியர் குறித்துச் செல்கிறார். இடையீடாக இயைபுடைய வள்ளுவர் (ப.22), தொல்காப்பியர் (ப.23), கணியன் பூங்குன்றனார் (ப.23), பாரதிதாசன் (ப.24), வள்ளலார் (ப.30), திருநாவுக்கரசர் (ப.26), சாத்தனார் (ப.26) ஆகிய ஆளுமைகளின் ஆக்கங்களைச் சுட்டிச் செல்வதென்பது நூலாசிரியரின் பரந்துபட்ட வாசிப்புத்தளத்தை உணர்த்துகிறது.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் ‘கல்வி’ பெறுமிடம் எடுத்துரைக்கும் நூலாசிரியர் அதிலிருந்து கிளைத்துப் பரவிய கட்டடக்கலையை முதன்மைப்படுத்தி ஆய்வுச் செய்திகளை விவரிப்பது ‘கட்டடக்கலையைத் தொட்டிடும் சிலம்பில்’, நடன அரங்கமைவு சிற்ப வல்லுநர்களின் சிந்தனையின் பாற்பட்டு உருவாகியதை இளங்கோவடிகள் எடுத்துரைக்கும் பாங்கை இக்கட்டுரை விதந்தோதியுள்ளது. ஏழடுக்கு மாடிகளின் உருவாக்கம் (ப.50), சுடு மண்ணாலான மேற்பகுதிக் கூரை (ப.51), கலைஞர்களுக்கான தனிவீதி (ப.51), பதினாறுகால் மண்டபம் (ப.52), சித்திர மண்டபம் (ப.51), போர்க் கருவிகளுடைய மதுரக்கோட்டை (ப.53), கட்டடங் களில் பொருத்தப்படும் பொறிகள் (ப.53) என்கிற பதிவு களையெல்லாம் நூலாசிரியர் சிலம்பு வழிப்புலப்படுத்தி நம்மை வியப்புறச் செய்கிறார். மேலை நாட்டினர் கட்டடங்கள் சிலப்பதிகாரக் கட்டடக்கலை நுட்பத்தை ஒத்திருக்கும் (ப.50) எனும் நூலாசிரியரின் செய்தி நம்மைப் பரவசப்படுத்துகிறது (ப.50).

கம்பன் பற்றிய நீண்டதொரு ஆய்வுச் சிந்தனைக்கு நிகரான மற்றொரு நெடிய கட்டுரை (28 பக்கங்கள்)  மணிமேகலையில் ‘அறம்’ பற்றியது. மக்களுக்கான அறமென உணவு, உடை, மற்றும் வசிப்பிடத்தைச் சுட்டிச்செல்லும் மணிமேகலை (ப.61), சமூகப்பாலினச் சமத்துவம், சமூக மேம்பாடு, புதிதான நீதி என வெளிப்படுத்துவதையும் நூல் எடுத்துரைப்பதோடு ‘தனிமனிதன்’, ‘சமுதாயம்’ என்ற இருவேறான நோக்கில் திகழும் பாங்கையும் (ப.61) குறிக்கிறது.

ஒழுக்கம், பண்பு, இரக்கம், கற்பு, பழிக்கஞ்சுதல், விருந்தோம்பல் ஆகிய வற்றைத் தனிமனித அறமென நூலானது பொழிய, பேரறமாகப் பசிப்பிணியழிப்பை மணிமேகலை கருதுவதையும் பதிவாக்கியுள்ளது. மேலும், உயிர்க் கொலையையும் கற்புத் திறனையும் சாத்தனார் காப்பியம் அறமெனச் சுட்டச் சான்றுகளோடும் இந்நூல் நிறுவி யுள்ளது. புறநானூறு, மனுமுறை கண்ட வாசகம் என்பதான ஆக்கங்களையும் வள்ளுவர், ஒளவையார், வள்ளலார் ஆகியோரின் பாடல் வரிகளையும் பொருத்தப் பாட்டுடன் இணைத்திருப்பது நூலாசிரியரின் ஆய்வுச் செழுமைக்கான உழைப்பை நல்குவதாகும்.

இலக்கிய உத்தி முறையை முன்னெடுத்து ஒப்பிட்டமைந்ததோர் கட்டுரை ‘இலக்கியங்களில் கொடியசைதல்’. வில்லிபாரதம் (பக்.83-84), சிலப்பதிகாரம் (பக்.84-85), கம்பராமாயணம் (பக்.85-86), தேம்பாவணி (பக்.83-88) ஆகிய நால்வகை இலக்கியங்களில் ஊடாடும் கொடியசைதலைப் புலப் படுத்தி இலக்கிய உத்தியின் நேர்த்தியை விளக்குவ தோடமையாமல் ஒப்பிட்டாய்விற்கும் முயன்றுள்ளார் நூலாசிரியர். அனிச்சை நிகழ்வான ‘கொடியசைதல்’, நன், தீ நிமித்தக் காரணங்களுக்காய் இருவேறான கோணமுடையது என எடுத்துரைக்க முயன்ற கட்டுரையது.

மற்றுமொரு கட்டுரையானது குறுந்தொகையின் இலக்கிய நயங்களை நமக்கு கவனப்படுத்தியுள்ளது. குறிப்பாகப் புகழ்மிக்க உவமைத் தொடர்களைத் தன்னுள் கொண்டமைவதோடல்லாமல் அதன் பாற்பட்டு பெயரமைந்த பிரபலப் புலவர்களோடும் திகழ்வதாகக் குறுந்தொகை சிறப்பிக்கப்படுகிறது.

மேலதிகமாக முழவு (ப.92), பதலை (ப.93), பறை (ப.93), முரசொலி (ப.93), குழல் (ப.93), சிலம்பு (ப.93), நகவருடொலி (ப.93), மலரதிர்வோசை (ப.93) என்பதான எடுத்துரைப்பில் இசைநயத்தோடு ஒலி களுக்கான உவமையும் அமைந்துள்ள தன்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இயற்கை (ப.94), மலர்கள் (ப.95), உயிரினங்கள் (ப.96) ஆகியவை குறுந்தொகையில் உவமித்துக் காட்டப்படும் பாங்கு நமக்கு விளக்கப் படுவதோடு உயர்வுநவிற்சி(ப.9), உள்ளுறை உவமம் (ப.97), உருவகம் (ப.99), உவமை வழிக் கதைகள் (ப.100), படிமம் (பக்.101-103), முரண்தொடை (பக்.103-104) ஆகிய நயங்களும் சிறப்புற நூலாசிரியரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் புலமையோர் வாழ்வியல் நோக்கு நிலைப்பட்ட உவமைநயமே மிகுதி யெனும் ஆய்வுச் சிந்தனையையும் நமக்குத் தந்துள்ளார் நூலாசிரியர். இக்கட்டுரையில் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் (ப.101), சி.சு.செல்லப்பா (ப.101), தமிழண்ணல் (ப.101) ஆகியோரை ஆய்வின் போக்கைப் பொலிவாக்கப் பயன் படுத்துவதோடல்லாமல் ஏங்கெல்சின் தத்துவத்தையும் (ப.103) இணைத்து விளக்கமளித்திடுவது நூலாசிரியரின் விசாலச் சிந்தனையை நமக்குப் பறைசாற்றுகிறது.

ஏழாவது கட்டுரையானது பண்பாட்டுப் பதிவு களடங்கும் நற்றிணை பற்றியது. இக்கட்டுரையில் ‘பண்பாடு’ என்பதற்குப் பலதிறப்பட்ட விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. விருந்தோம்பல் (ப.11), வாழ்த்துதல் (ப.112), நன்றி பாராட்டுதல் (ப.115),

பிற உயிர் நேசிப்பு (ப.116), செல்வமேன்மை (ப.117), தலைவனில்லாச் செயல்கள் (ப.118), தலைவனின் உள்ளப்பக்குவம் (ப.119), தன் தகுதியறிந்தாசை (ப.121), நட்புமேன்மை (ப.121) என்று நற்றிணையின் பன்முகப் பட்ட பண்பாட்டுப் பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். குறிப்பாக அன்பு, அருள் பற்றி வேறான புரிதலை நமக்கு உணர்த்துவதோடு (ப.116) பண் பாட்டுப் பிழிவாகவும், பெண்ணின் தனிப்பெருமை பேசும் பனுவலாகவும் நற்றிணை விளங்குவதாய் நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.

புரவலர்-புலவர் மரபு புறப்பாடல்களில் மையங் கொண்டுள்ளதைச் சொல்கிறது எட்டாவது கட்டுரை. ‘ஈகை’ பற்றிய சொல் விளக்கமானது (பக்.126-127) பார்வை நூல்கள் வழித் திறம்பட விளக்கமளிக்கப் படுவதுடன் அந்தணர்கள் (ப.130), புலவர்கள் (பக்.131-132), கலைஞர்கள் (ப.132) ஆகியோருக்கு மன்னர்கள் அளிக்கும் கொடைத்திறன் பற்றிப் பண்டைய இலக்கிய வழி விவரித்துக் காட்டப்படுகிறது. மேலும் வள்ளல்கள் (ப.133), பெருநிலக்கிழார்கள் (ப.134), மறவர்கள் (ப.135), ஐந்நிலமக்கள் (ப.135), மகளிர் (ப.136) ஆகியோர் வழங்கும் கொடைத்தன்மை எடுத்துரைக்கப் படுகிறது. பொன், பொருள், நாடு, சுவர்க்க வாழ்வு (ஒன்பது வேள்வி செய்தல்), (ப.130), நாடு, அரசுரிமை, பெற்றமகள், அரசு கட்டில், அணிகலன் (ப.131), கள், தேர், யானை, பொற்பூ, அருங்கலங்கள், குதிரை, பாகனோடு தேர், நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட பொன்தேர் (ப.132), ஊனும் சோறும் கலந்த உருண்டை, தன் சிரம் (ப.133), நெல்லிக்கனி (ப.133) எனக் கொடைப்பொருட்கள் நூலாசிரியரால் எடுத் துரைக்கப்படுவது வாசிப்போருக்கு வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன. மேலதிகமாகக் கொடையளிக்கும் பாங்கு (ப.137), ஈகையின் சிறப்பும் பயன்பாடும் (பக்.138-139), புலவர்கள் கொடை வேண்டும் இயல்பும் (ப.140) கனகச்சிதமாக நூலாசிரி யரால் சுட்டப்படுவது புரவலர்-புலவர் ஆகியோரின் சமூக உறவை நமக்குத் தெளிவாக்கிவிடுகிறது.

திருத்தொண்டர் புராணத்தினூடாகச் சேக்கிழார் பேசிடும் ஐந்தெழுத்து, திருநீற்று மகிமைகளைப் பதிவாக்கியுள்ளது ஒன்பதாவது கட்டுரை. சம்பந்தர், நாவுக்கரசரை முன்னிறுத்தி ஐந்தெழுத்தின் மகிமையைச் சொல்லிடும் நூலாசிரியர் (ப.144) நோய்களும் பிறவிப் பிணிகளும் அம்மந்திர ஓதலினால் நெருங்காதெனச் சேக்கிழார் கூறுவதையும் (ப.145) எடுத்துக்காட்டி யுள்ளார். மேலும் இடர்களைதல், மங்களத்தொடக்கம், இறைக்காப்பு என நாயன்மார்களுக்கு ‘எழுத்து’ பயன்பட்ட முறையினைச் சுட்டிக் (ப.144) கண்ணொளி பெற்ற நிகழ்வையும் (ப.147) நமக்குரைக்கிறார் நூலாசிரியர் மட்டுமல்லாமல் திருநீற்றின் வகைகள், தயாரிப்பு முறைகள் (ப.149), திருநீறு அணியலாகாத இடங்கள் (ப.149), திருநீறு அணியும் விதம் (ப.149) பற்றியும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

பத்தாவது கட்டுரை மணிவாசகரின் அறிவியல் சிந்தனைகளைப் பேசுகிறது. அண்டத்தின் அகண்ட பெருவெளிக் காட்சியினைக் காட்டும் மாணிக்க வாசகரின் (ப.153) சிந்தனையோடு சமகால அறிவியலை ஒப்பிட்டுள்ளார் நூலாசிரியர் (ப.153). அண்டத்தின் விரிவு வேகத்தை ஐன்ஸ்டீன் கருத்துடன் இயைந்தும் வலுக்கூட்டப் பாரதி (ப.154), திருவிளையாடல் புராணம் (ப.155) வரிகளோடும் நேர்த்தியாகப் பொருத்திக் காட்டியிருப்பது சிறப்பானதொரு ஆய்வுப் பயணத்தை நூலானது நமக்குத் தந்துவிடுகிறது.

தொடர்ந்து மாணிக்கவாசகரின் விரிவெளிக் கொள்கை (பக்.155-156), அணுபிரிதல் (ப.156), அணுவின் வியத்தகு ஆற்றல் (ப.156), பொருள்களில் அடங்கியுள்ள இருவகையாற்றல் (ப.156), இறைவனைக் காலத்தோடும் (ப.157) அணுவின் இயக்கத்தை இறைநடனத்தோடும் ஒப்பிடுதல் (ப.157), கூர்தலறம் (ப.156), மாறுபட்ட உயிரினங்களின் உறவுமுறை (ப.158), உடம்பெனும் கூடு (ப.159) எனச் செய்திகளை எடுத்துரைத்து எதிர் காலவியல் களனாகவும் மாணிக்கவாசகர் திகழ்வதையும் இந்நூலாசிரியர் வழிப்பட்டு உய்த்துணரலாம்.

இறுதிக் கட்டுரையானது ஆண்டாள் பாசுரங்களில் ஊடாடுகின்ற அகப்பொருள் கூறுகளை வலுவான சான்றுகளோடு அலசுகிறது. அதாவது குறிப்புணர்த்தல், காமமிக்க கழிபடர்கிளவி, பசலையுறுதல், பிரிவுத்துயர் என்கிற அகத்திணைக் கூறுகளையெல்லாம் ஆண்டாளின் பாடல்களில் எடுத்துக்காட்டி நிரூபணமாக்கியுள்ளார் இந்நூலாசிரியர். சிறப்பானதொரு செய்தியாகக் குறிப்புணர்த்தலெனும் அகமரபே மேலதிகப் பதிவென அறுதியிடுவதாகவும் நூலானது எடுத்தியம்புகிறது.

‘செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்’ ஆய்வுக் கட்டுரைகள் நூலானது பதினொரு தலைப்புகளில் அமைந்திருப்பினும் அது குறித்த விமர்சனப்பூர்வமானச் சிற்சில எதிர்வினைகளையும் இங்கு பதிவாக்குவது தவிர்க்கவியலாதது. குறிப்பாக ஒரு சில கட்டுரைகளில் (ப.37, பக்.124-125) விலகலான ஆய்வுப்போக்கும் மேற்கோள்களைக் கிரமமாக அடுக்கியெழுதுதலும் வாசிப்போரை மனச்சோர்வடையச் செய்கிறது.

கவிதையென்பது புனைவா? (ப.20), சங்க இலக்கியங்கள் உண்மை மக்களைக் கதைமாந்தர்களாக்கியுள்ளதா? (ப.125) என்பதான கேள்விகளையும் நூலானது நமக்குள் எழுப்புகிறது. நூலில் ப.3, ப.4 ஆகிய பக்கங்களின் செய்திகள் மீண்டுமொருமுறை ப.14, ப.15 இல் இடம் பெற்றிருப்பதும் ப.50 இல் எழுத்துருமாற்றமும் நூலாசிரியர் கவனங்கொள்ள வேண்டியவை.

இரண்டாவது கட்டுரை தெளிவற்றத் தலைப்போடு திகழ்வதும் நூலினூடாகப் பண்டித மரபு நடையும் மரபான புனித, வைதீக மனோபாவமும்(ப.11) ‘செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்’ நூலில் மேலோங்கியே காணப்படுகின்றன. இருப்பினும் இந்நூலானது தமிழாய்வு மாணவர்களுக்குத் தக்கதொரு காத்திரமான ஆய்வுநூலாக உருவாகி வெளிவந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தேதுமில்லை.

Pin It