வருக புத்தர் வருக!

ஆப்பிரிக்க தலைபோல் முடியும்
அரை மயக்கம்போல் மூடிய விழியும்
தொள்ளைக் காதும்
ஏதோ சொல்ல வரும்
உன் புன்னகையுமே
அடையாளப்படுத்தியது
எனக்கு உன்னை

buddha_450உன் இதழ் பேசும்
புன்னகை மொழி மட்டும்
எப்போதும்
புரிவதேயில்லை எனக்கு

பாலக வயதில்
உண்டியல் புத்தனாய்
இருந்தாய்

ஞானம் நிறைந்த சிரசில்
சில்லரை நிறைந்த
சிரிப்பெனப் புரிந்துகொண்டேன்

வாலிப வயதில்
வாஸ்து புத்தனாய்ப்
பிறந்தாய்

புத்த மதக் கொள்கைகளைப்
புறந்தள்ளிய பாரதத்தில்
பொம்மைபோல் புகுந்த
சந்தோஷமென எடுத்துக் கொண்டேன்

பகுத்தறிவுப் புத்தகங்கள் என்னைப்
பற்றிகொண்ட பருவத்தில்
தாடியில்லா பெரியாராய்த்
தோன்றினாய்

பற்றி எரியும்
பகுத்தறிவுத் தீயால்
வெண்ணெய் மூடிய உன்
கருத்துக் கத்தி
வெளிவந்து ஒளிவீசும்
புன்னகையோவெனப் புரிந்துகொண்டேன்

இதுபோல் ஒரு நாள் நான்
குழம்பித் தவிப்பேன் என்றுதான்
புன்னகைக்கிறாயோ என்று
புதிதாய் வேறு புரிந்துகொள்கிறேன்

இப்படியாக....
புரிவதேயில்லை உன்
புன்னகை எனக்கு

ஆகவே கொஞ்சம்
அர்த்தத்தோடு சிரிக்கலாம் வா

அந்நியனை விரட்டிவிட்டு
அவன் கொள்கைகளால்
தனக்குத் தானே அடிமைப்பட்டுக் கிடக்கிறானே
இவனைப் பார்த்துச் சிரிக்கலாம் வா

தாய்நாட்டுப் பசி போக்கி
தன் வயிறு ருசி போக்கி
எலி தின்று செத்தானே
அதை நினைத்துச் சிரிக்கலாம் வா

கள்ளுக்கடையை
அரசு ஆள்வோரும்
கல்விக்கடையை
காசு ஆள்வோரும் நடத்தும்
வித்தியாசமான
முரண் கண்டு சிரிக்கலாம் வா

சட்டத்தின் முன்
நீதி அநீதி
அனைத்தும் சமம்

கோடியும் மாடியும்
போட்டிப்போட்டு உயரும்
ஒரு பக்கம்

ஒண்டிய நிழலும்
ஓட்டைக் கோவணமும் சேரும்
ஒரு பக்கம்

எது குறித்தும் கவலைப்படாமல்
தன்வரை உலகைச் சுருக்கும் சுயமும்

எப்போது புரட்சி வரும் என்று
எதிர்பார்த்து ஏங்கும் மனமும்
நிறைந்த எங்கள் சமூகத்தில்
இன்னும் ஏராளம் காண
சீக்கிரம் வா புத்தர்
என்னுடன் சேர்ந்து சிரிக்கலாம்.

Pin It