அமைதியும் போர்க்குணமும் இருவேறு அம்சங்கள். ஆனால் இரண்டும் ஒருவரிடமே இருக்கக்கூடியவைதான். வாசிக்கப்படும் இலக்கியம் வேறு வேறு உணர்ச்சிகளை வேறு வேறு மனிதர் களிடம் ஏன் ஏற்படுத்தாது, ஏற்படுத்தும் என நாம் லியோ டால்ஸ்டாயின் “மோகனராகம்” நூல் படிக்கையில் உணர்கிறோம். கதாநாயகனின் கதையை நமக்கு ஆசிரியர் சொல்வது ஒரு ரயில் பயணத்தில்.

mohana_raagam_450உலக வாழ்க்கைப் பயணம். அதைத் தொடர் வண்டிப் பயணத்தில் கதை நாயகன் கதையாக / உரையாக அவர் சொல்லிச் செல்லும் பாணி நமக்குப் புதுமையானது. காதல் பற்றி, காமம் பற்றி, அன்பு, கருணை, இரக்கம், சுயபச்சாதாபம், மூர்க்க குணம், நெருடல், வருடல், இவை பற்றியும் ஆசிரியர் கருத்து பல இடங்களில் மிக இதமாக நமக்குப் புரிய வைக்கப்படுகிறது.

அக்காலத்திய ரஷ்யாவின் கதைக்களனுக்குள் நாம் பயணிக்கையில் பல விஷயங்கள் நம் நெஞ்சில் குமிழியிட்டுக் கொப்பளிக்கின்றன. மது, நடனம், இசை, வேட்டையாடல், மீன் பிடிப்பு, பிரபுக்களின் வாழ்க்கை, கேளிக்கைகள் இவையெல்லாம் நம் பார்வைக்கு விரித்து வைக்கப்பெறுகின்றன.

வாஸ்யா, கதைத் தலைவன். அவன் வாய் மொழியாகவே கதை நமக்கு (குடைக்குள் நாமும் இணையாகச் செல்வது போல்) கூறப்படுகிறது. இக் கதையில் இணைந்தும் இணையாமலும் நாமும் கதை மழையில் நனைகிறோம். ஆனால் முழுதும் அல்ல.

இக்கதையில் வரும் சம்பவங்கள் அவர் மனத் தினில் நீண்ட காலம் அடை காத்து இருந்து வெளி வந்த குஞ்சாய், சிறகடித்து, ரயில் பயணத்தில் கதை வடிவில் நம்மிடையே பகிரப்பெறுகின்றன. சுருக்க மாகக் கூறின், கதை இதுவே. மனைவியை சந்தேகப் படும் கணவன், நண்பனை மனைவியின் கள்ளக் காதலனாய் எண்ணிக் கொலை செய்து சிறைக்குப் போய்த் திரும்பி வருகிறான். அந்தக் கொலை நடக்கும் முன் வாழ்க்கையில் தம்பதிகள் இருவருக் கிடையில் நேர்ந்த கோபதாபங்கள் / உடல் சம்பந்தங்கள் / பிரிவுகள், சச்சரவுகள் / உட்பட முழுவதையும் கதைநாயகன் சக பயணியிடம் சொல்வதே கதை.

இக்கதை மூலம் நாம் அக்கால ரஷ்ய பிரபுக் களின் வாழ்க்கையினை /இசை நாட்டத்தினை /பாடல் மேல் மேல்குடிகளின் விருப்பங்களின் தன்மை களை/பிரபுக்களின் உல்லாச வாழ்க்கை நாட்டத்தினைத் தெளிவுபெற உணர்கிறோம். அதே போல் கீழ்க் குடிகள் எவ்வாறு சமுதாயத்தில் நடத்தப் பெற்றனர் எனவும் அவர்கள் உடல் உழைப்பிற்கு ஊதியம் குறைவு எனவும் அறிகிறோம்.

பெண்களின் சமூக இணைப்பும், அவர் நாட்டங்கள், நோக்கங்கள் ஆண்களின் பலவீனம் பெண்களின் பலமாவது, அதனை ஒட்டி ஆண்கள் நடக்கவேண்டிய கட்டாயம், மகளிரின் சுய விருப்பங்கள், அவர்தம் பொறுப்பு ஆகியன மிக மிக அறிவு பூர்வமாகவே படைத்தளிக்கப் பெற்று உள்ளன.

சில இடங்களில் லியோ-அன்னாரின் வார்த்தை வசனங்களை அப்படியே கூறினால் இஃது அறியப் படும்.

“ஒருவரை ஒருவர் விரும்பாத-காதலிக்காத இருவரைக் கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள். பிறகு அவர்கள் மகிழ்ச்சியோடு வாழாவிட்டால் ஆச்சரியப்படுகிறார்கள்” (பக் 6)

“மிருகங்களை வேண்டுமானால் அவற்றின் எஜமானர்கள் விருப்பப்படி ஜோடி சேர்த்து விடலாம். மனிதர்களுக்கோ தனி, தனி ருசியும் ஆசைகளும் இருக்கின்றன” (பக் 7)

“எல்லாச் சுதந்திரங்களையும் ஆண்களாகிய நீங்களே எடுத்துக்கொண்டு விட்டுப் பெண்களைச் சிறையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள். நீங்கள் விரும்பும் எதையும் செய்துகொள்ள உங்களுக்கு உரிமை உண்டு, இல்லையா?” (பக் 8) (பெண் களுக்கு அவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சொல்லாமல் ஆசிரியர் சொல்லுகிறார்) (சிறையில் பெண்களைப் பூட்டிவைத்து அவர் மனங்களைப் பூட்ட முடியுமா? சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை-வள்ளுவர்)

“ஒரு பெண்ணும் மனித உயிர்தான் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்ளவேண்டும். அவளுக்கு உணர்ச்சிகள் உண்டு என்பதை ஏற்க வேண்டும். அவள் தன் கணவனைக் காதலிக்காவிட்டால் என்ன செய்வது?” (பக் 8)

“காதல், அன்பு இல்லாமல் நடக்கிற திருமணம், திருமணமே அல்ல; காதல்தான் திருமணத்தைப் புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதப்படுத்தப்படுகிற திருமணம் தான் (பக் 11)

ஆண் பெண் உறவு சமூகத்தில் ஒழுக்கமற்றே இருந்தது அந்தக் காலம். குறிப்பாக பிரபுக்கள்/செல்வந்தரிடையே இது சகஜம். கீழ்த்தரமான செயல் என்பது செயலில் இல்லை. அது என்ன? இதோ அவர் எழுத்துகளில்... தன்னையே என்னிடம் ஒப்புக்கொடுத் திருந்த ஒரு பெண்ணிற்கு நான் பணம் கொடுக்கத் தவறிவிட்டபோது என் மன வேதனையை நான் நன்கறிவேன்” (பக் 20)

“பெண் இன்பம் தரும் கருவி, அவள் தனக்குத் தேவை என ஆண்கள் நினைப்பதும் அவ்வாறு எண்ணுவதும் சரி என்பதால்தான் பெண்ணடிமைத் தனம் ஏற்படுகிறது. அவ்வாறு இருந்தும் பெண் விடுதலை என்று சொல்லிக்கொண்டு கிளம்பு கிறார்கள்.” (பக் 58)

பெண்டிருக்குக் கணிதம் தெரியும் என்பதோ கின்னரம் (வாத்தியம்) அறிந்தவள் என்பதோ அவர் களின் நிலையை எந்த விதத்திலும் மாற்றாது. பெண் களைப் பற்றி அவர்களே தெளிவு பெற வேண்டுமே அன்றி வேறு முறைகளில் அவள் விடுதலை வராது. (பக் 59)

சந்தேகம் இருவரின் வாழ்க்கையின் பெரிய எதிரி. துருகாசேவ்ஸ்கியின் வரவு வயலின் இசையை மட்டும் அல்ல, அவர்களின் வாழ்க்கையில் சந்தேக விதையையும் கொண்டு வந்தது. அவன் வாசிப்பு மனைவிக்குப் பிடித்ததென்றால், அவனைக் கணவனுக்குப் பிடிக்கவே இல்லை. மனைவிக்கு இரண்டு பேரின் நட்பைச் சந்தேகமுடன் பார்க்கும் அவன் அந்த இருவரின் இசைக்கலை ஒரு கொலையில் முடிவதினை மனதில் எதிர்கொண்டே வாழ்கிறான்.

ஒரு பயண இறுதியில் வீட்டுக்கு முன்னதாகத் திரும்பும் (கணவன்) தன் படுக்கை அறையில் நுழை கையில் அவர்கள் (துருகாவும், வாஸ்யாவின் மனைவியும்) பயமும் வேதனையும் கலக்கமும் கொண்ட அசையாப் பார்வையால் எதிர் நோக்க, கத்தியை மனைவி மேல் பாய்ச்சிக் கொலை செய்ய முயல்கிறான். துருகா ஓடி விடுகிறான். “எங்கள் இடையே எதுவும் இல்லை, ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை, நான் சத்தியம் செய்கிறேன்” என சோஃபாவில் குத்துப்பட்டுக் கிடக்கும் மனைவி கதற கதற வாஸ்யா மீண்டும் இடது விலாவில் குத்திக்கொலை செய்கிறான். இதற்குப் பிறகு இறப்பின் பின் டால்ஸ்டாய் வாஸ்யா மூலம் சவப்பெட்டியின் முன் கூறுவதைப்பாருங்கள். மிக அவதானியுங்கள். “அவளைக்கொன்று விட்டேன். நான்தான் கொன்றவன், அவள் உயிரோடிருந்தாள்” என்ன அற்புதமான சொல்-திறன்! பிணம் உயி ரோடும், வாழ்பவன் சவமாகவும் உள்ள மன நிலை இதைவிட கூர்மையாக யாரே சொல்வர். விசாரணை பற்றி அவர் சொல்வது ஏதுமில்லை. பதினொரு மாத தண்டனைக்குப்பின் திருப்பி வருகிறான் ரெயிலில். இரு நாள் பயணம். ஆக வழிப்பயணியிடம் கூறிய கதையாக இத்திடமிகு கதை சொல்லப் பெறு கிறது.

நடையழகு மிக்க கதை. திரு தா.பாண்டியன் அவர்களின் மொழியாக்கத்தில் நமக்குத் தெள்ளத் தெளிவான கதை சுவைமிக்க பாலாக நமக்குப் பருகக் கிடைக்கிறது. விடயங்களை விட மன ஆழங்களை வெளிக் கொணர லியோ அவர்கள் இதனைத் தெரிந்தே எழுதி உள்ளார் எனத் தெளிவோம்.

சரியான புத்தகங்களைச் சரியான நேரத்தில் பதிப்பிக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் இரண்டாம் பதிப்பாகத் தற்போது வெளி வந்து உள்ளது மோகனராகம்.

 ***

லியோ டால்ஸ்டாயின் மோகனராகம்

மொழிபெயர்ப்பு : தா.பாண்டியன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.80.00

Pin It