கீற்றில் தேட...

தமிழ்நாட்டில் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடக இசைக்குரிய சாகித்தியங்கள் நிறையவே இருந்தன. இந்த நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில் சங்கீதப்பயிற்சி வழக்காற்றில் இருந்தாலும் சாகித்தியங் களுக்குத் தமிழகத்தை எதிர்பார்க்கும் நிலையில் படைப்பாளிகள் இங்கே இருந்தார்கள்.

தமிழகத்தில் வாழ்ந்த பச்சைமரியன் ஆதிப்பையர், சாமா சாஸ்திரி, தியாகையர் போன்றோர் தெலுங்கிலும் முத்துசாமி தீட்சதர் வடமொழியிலும் ஆனை அய்யா, ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசன், கனம் கிருஷ்ணையர், சண்பக மன்னார் போன்றோர்கள் தமிழிலும் பிறமொழிகளிலும் கீர்த்தனைகள் இயற்றி உள்ளனர்.

சங்கீத மும்மூர்த்திகள் எனப் பாராட்டப்படும் தியாகையர் (1767 - 1867) முத்துசாமி தீட்சதர் (1776 - 1895) சியாமா சாஸ்திரிகள் (1762 - 1827) ஆகியோர் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் வாழ்ந்தார்கள்.

சங்கீத மும்மணிகளின் சமகாலத்தவர் சுவாதித் திருநாள். மூவர்களின் இசைப்பரிமாணமும் ஆன்மிக ஒளியும் தமிழகத்தில் உச்சகட்டத்தில் வீசிக்கொண்டிருந்த போது அந்தத் தாக்கம் சுவாதித்திருநாளின் தீட்சண்யத்திற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. சுவாதித்திருநாளின் இசைஞானத்திற்குத் தமிழகமும் முக்கிய காரணம் என்பதை அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் ஒத்துக்கொள்ளுகின்றனர். கேரளத்து இசைக் கலைஞர் களும் இதை மேற்கொள்காட்டுகின்றனர்.

மலையாள இலக்கியங்கள் இசையை உள்ளடக்கியவை தான், திருவாதிரைப் பாட்டு, சர்ப்பப்பாட்டு, அம்மானைப் பாட்டு, புள்ளுவன் பாட்டு, நந்துனிப் பாட்டு, போன்ற வற்றில் இசைக்கூறுகள் - உள்ளன. என்றாலும் மலையாள இலக்கிய விமர்சகர்கள் அவற்றை இலக்கிய வகையில்தான் அடக்கிக் காட்டுகின்றனர்.

கேரளத்தின் ராமபுரத்து வாரியாரின் கீதா கோவிந்தமும், அசுவினித் திருநாள் அமைத்த சில கீர்த்தனைகளும் சுவாதித் திருநாளுக்கு முந்திய காலத்தில் உள்ளவை. கேரளச் சங்கீதக் கிருதிகள் என்ற நிலையில் இவற்றிற்கு இடம் உண்டு. சுவாதித்திருநாள் காலத்துக்கு முன்பு கேரளத்தில் கர்நாடக இசை மந்த நிலையில் இருந்தது. பெருமளவு பரவலாக நிலவிய நாட்டார் இசை வடிவங்களும் சோபன சங்கீதமும்தான் அப்போது வழக்காற்றில் இருந்தன. கதகளி என்னும் கலை அப்போது நடைமுறையில் இருந்தாலும் அதில் பயன்படுத்திய பாடல்கள் இலக்கணமுடைய இசைவடிவத்தின் அடிப் படையில் இருந்தன. ஆனால் அதில் பயன்படுத்திய பாடல்கள் இலக்கணமுடைய இசைவடிவத்தின் அடிப் படையில் உருவாக்கப்பட்டவை என்று கூற முடியாது, கதகளிப் பாடல்களில் இசைத்தன்மையை விட இலக்கியத் தன்மை விஞ்சிநின்றது. சுவாதித்திருநாளின் தோற்றத்திற்குப் பிறகு மலையாள நாட்டின் இசையிலும் மோகினிஆட்டம் என்ற நடனத்தின் வடிவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் கேரளக் கலைக்குப் புதிய மெருகைக் கொடுத்தன.

செம்மங்குடி ரா. ஸ்ரீனிவாசய்யர் சுவாதித்திருநாளை அரசர்களில் சங்கீத வித்துவானாகவும் சங்கீத வித்துவான் களில் அரசராகவும் விளங்கியவர் எனப் போற்றுகின்றார். அவர் அரசர் என்ற நிலையிலும் கலைஞர் என்ற நிலையிலும் தன் முழு முத்திரையைப் பதித்தவர் எனத் திருவிதாங்கூர் வரலாற்றை எழுதிய நாகம்அய்யா குறிப்பிடுகிறார்.

சுவாதித்திருநாள் என்ற ராமவர்மா (1813 - 1846) திருவிதாங்கூர் அரசவம்சத்தின் ஆறாவது அரசர். அவரது தந்தை சங்களாச்சேரி ராஜராஜவர்மா கோயில் தம்புரான் என்ற பரணித்திருநாள் மலபார் அரச வம்சத்தைச் சார்ந்தவர். இவர் சமஸ்கிருத மொழியில் வல்லுநர். தத்துவம், கலை, அரசியல், தர்க்கம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து கற்றவர். சுவாதித்திருநாளின் தாய் கௌரி லட்சுமிபாய் கோலத்து நாட்டிலிருந்து திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு வந்தவர். லட்சுமிபாயின் தங்கை பார்வதிபாய்.

சுவாதித்திருநாள் பிறந்தநாளில் (1813 ஏப்ரல் 13) திருவிதாங்கூர் அரசவம்சம் இந்திய நாட்டில் பெரும் மதிப்பைப் பெறப் போகிறது என்பதை அவரது தாய் லட்சுமிபாய் நம்பினார். அன்று நடந்த நிகழ்ச்சி அதற்குக் காரணமாக அமைந்தது. அவர் பிறந்த அன்று சாத்த மட்டம் மலையில் வெள்ளைநிற யானை ஒரு குழியில் தானாக வந்து விழுந்தது என்ற நிகழ்ச்சி லட்சுமிபாய் ராணியைப் பரவசமடையச் செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் சுவாதித்திருநாள் பிறந்ததையும் தொடர்பு படுத்தி அது நாட்டிற்கு நல்ல சகுனம் என ராணி நம்பினார். இதை அன்றைய ஆங்கிலக் கம்பெனி ரெசிடென் கர்ணல் மன்றோவுக்கு ஒரு கடிதம் வழி தெரிவித்திருக்கிறார்.

சுவாதித்திருநாள் பிறந்த நான்காம் மாதத்தில், அவருக்கு இளவரசுப் பட்டம் கட்டினார்கள். அந்த விழாவின் ராஜசபையில் ராணி லட்சுமிபாய் “என் புதல்வனாகிய இச்சிறுகுழந்தையைக் கம்பெனியின் வசம் ஒப்படைக்கிறேன். இவனையும் இந்த நாட்டையும் பாதுகாக்க வேண்டியது கம்பெனியின் பொறுப்பு” என அறிவித்தார். கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் திருவிதாங்கூர் அரசு என்றும் விசுவாசம் உடையதாக இருக்கும் என்றும் உறுதி கூறினார். சுவாதித்திருநாளின் ஐந்து வயதில் தாய் லட்சுமிபாய் இறந்தார்.

திருவிதாங்கூர் அரசு வழக்கப்படி லட்சுமி பாய்க்குப் பின் அவரது தங்கை பார்வதிபாய் நாட்டின் அரசியாகப் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது பதின்மூன்று தான். பார்வதிபாய் சுவாதிக்குத் தாயாகவும் இருந்தார். பிற்காலத்தில் அவரை அரசராக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பார்வதிபாயின் அரசியல் நிர்வாகத்தில் சுவாதித்திருநாளின் தந்தை ராஜ ராஜவர்மா மிகவும் உதவியாக இருந்தார்.

சுவாதித்திருநாள் ஐந்தாம் வயதில் ஹரிப்பாட்டு கொச்சுபிள்ளை வாரியாரிடம் மலையாளமும் சமஸ் கிருதமும் கற்றார். கேரளத்தில் சிறந்த படைப்பாளியும் கவிஞருமான ராஜராஜவர்மாவும் தன் மகனுக்குக் காவியங்களையும் சாத்திரங்களையும் கற்பித்தார்.

மன்னர் ஆங்கில மொழியை அவசியம் அறிந்திருக்க வேண்டும் என திருவிதாங்கூரின் கிழக்கிந்தியக் கம்பெனி ரெசிடென் கர்ணல் மன்றோ விரும்பியதால் இளவரசர் ஆங்கிலம் கற்க தஞ்சாவூர் சேஷாபண்டிதர் சுப்பராயர் என்பவரை சிபாரிசு செய்தார். சுவாதித்திருநாள் 7 வயதில் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்துவிட்டார்; 14 வயதில் மொகைதீன் சாயிப் என்பவரிடம் பாரசீகம் கற்றார்.

இக்காலகட்டத்தில் திருவிதாங்கூரின் அரசியல் நிர்வாகப் போக்கை அறிய ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி சார்பாக கர்ணல் வெல்ஷ் என்பவர் திருவனந்த புரத்திற்கு வந்தார். அவர் இளவரசரின் படிப்பறிவு குறித்து ஒரு அறிக்கையைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுப்பினார் (1827). அதில் “நான் அந்த இளவரசரைச் சந்தித்தபோது Malcolms Central India என்ற நூலின் ஒரு இயலையும் ரங்கூனை ஆங்கிலேயர் பிடித்த வரலாறு குறித்த பார்சியக் கட்டுரையையும் எனக்குப் படித்துக் காட்டினார். யுக்லிட்டின் 97ஆம் சித்தாந்தத்தைக் கரும்பலகையில் எழுதிக்காட்டினார். ஜியாமெட்ரி என்ற சொல் ஜயாமாத்ரா என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்ததென்றும் ஷெக்கையின் (எண்கோணம்) ஸெப்டகன் (எழுகோணம்) ஆக்டகன் (எண்கோணம்) டெக்ககன் (பத்துகோணம்) முதலிய கணிதச் சொற்கள் வடமொழிச் சிதைவுதான் என்றும் விளக்கிச் சொன்னார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினாலும் அது கொஞ்சம் பிழையுடையதாக இருந்தது. இவர் இந்தியாவில் மிகவும் உன்னதநிலையை அடைவார்” என்கிறார்.

சுவாதித்திருநாள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பார்சி, இந்துஸ்தானி, மராட்டி, சமஸ்கிருதம் போன்ற 18 - மொழிகளைக் கற்றவர் என ராமவர்ம விஜயம் என்னும் மலையாள நூல் கூறும். இவர் கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கீர்த்தனைகள் இயற்றும் அளவுக்குப் புலமை பெற்றிருந்தார்.

கர்ணல் கோலன் திருவிதாங்கூர் ரெசிடென்டாக வந்தபின்பு சுவாதித்திருநாள் நிரந்தரமாக அமைதி இழந்தார். இசையும் இறைவழிபாடும் அவருக்கு நிம்மதியைக் கொடுத்தன. திவான்களின் சூழ்ச்சி, ஊழல், திவான்கள் அடிக்கடி மாறியது, தந்தை இழப்பு, அக்காவின் குழந்தை இறப்பு எல்லாம் மன்னரை நிலைகுலையச் செய்தது. ஒருநாள் (1846) அவர் உறக்கத்தில் அமரரானார்.

18 ஆண்டுகள் ஆட்சி செய்த இவர் திருவிதாங்கூரில் பல மாற்றங்கள் செய்திருக்கிறார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் விளைச்சல் நிலம் அளக்கப்பட்டது (1838), மக்கள் தொகை கணக்கிடப்பட்டது (1837), மராமத்து இலாகா ஆரம்பித்தது (1836), இலவச அலோபதி மருத்துவ மனை நிறுவியது (1840), ஆங்கில மாதிரிப்பள்ளி உருவாக்கியது (1834) என்பன இவர்காலச் சாதனைகள்.

சுவாதி இந்தியாவின் பல இடங்களில் உள்ள கலைஞர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார். திருநெல்வேலி வெங்கு அய்யர், ஸ்ரீரங்கம் நாகரத்தினம், திருச்செந்தூர் ராமநாத மாணிக்கம் என்னும் தமிழர்கள் இவர் அவையில் நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

மன்னரிடம் பரிசும் விருதும் பெற்ற கலைஞர்களின் பட்டியலைச் சூரநாடு குஞ்சம் பிள்ளை தயாரித்திருக்கிறார். இவர் “மன்னரின் ராஜசபையில் இருந்த சங்கீதக்காரர்களில் பெருமளவினர் தஞ்சாவூர்க்காரர்கள். வடிவேலு, பொன்னையா, சின்னையா, சிவானந்தா சகோதரர்கள், தஞ்சாவூர் சிந்தாமணி (ஸாரங்கி கருவி இசைத்தவர்) மோகினி ஆட்டக்காரி நீலாள் என இவர்களுக்கு நிரந்தரமாய்ச் சம்பளம் கொடுத்திருக்கிறார் அரசர். கர்நாடக சங்கீதத்திற்குப் பக்கவாத்தியமாக முதன்முதலில் வயலினை அறிமுகம் செய்த வடிவேலுவிற்குத் தந்தத்தால் ஆன வயலினைப் பரிசளித்திருக்கிறார்.

தியாகராஜரின் சீடரான கன்னையா பாகவதர், வீணைவித்துவான் சுப்புக்குட்டி அய்யா ஆகியோர் மன்னரின் அவையில் இருந்தனர். தஞ்சையில் புகழ்பெற்ற மேருசாமி என்பவர்தான் திருவிதாங்கூரில் கதாகால nக்ஷபத்தை அறிமுகப்படுத்தினார்.

சுவாதித்திருநாள் ஓவியம், சிற்பம் இரண்டிலும் ஈடுபாடுள்ளவர், தஞ்சை தாசனி என்ற ஓவியர் திருவனந்த புரத்தில் சிலருக்கு அவரே ஓவியப் பயிற்சியளித்திருக்கிறார். முத்துசாமி தீட்சதரின் சீடரான வடிவேலுவும், மற்றும் பொன்னையா, பழனியாண்டி ஆகியோரும் தஞ்சை தேவதாசிப் பெண்களைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் மன்னரின் 60 பதங்களுக்கும் ஆடிக் காட்டியிருக்கின்றனர். இதன் பின்னர்தான் மோகினி யாட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. கேரள மோகினி யாட்டம் வளர்ச்சியடைந்ததற்கு திருச்செந்தூர் ராமநாத மாணிக்கம் காரணமாயிருந்திருக்கிறார்.

கார்த்திகைத் திருநாள் ராமவர்மா என்ற திருவிதாங்கூர் அரசரின் காலத்திற்குப் பின்னர்தான் மோகினியாட்டம் முறைப்படுத்தப்பட்டது என்பர். இந்த மன்னரின் பாலராம பரதம் என்ற சமஸ்கிருத நூல் மோகினியாட்டத்தின் இலக்கண நூலாகக் கருதப்பட்டது. சுவாதித்திருநாளின் பதங்களும், தஞ்சை வடிவேலு பொன்னையாவின் உழைப்பும் மோகினியாட்டத்தை வரன்முறைப்படுத்தியிருக்கின்றன.

சுவாதித்திருநாள் வாழ்ந்தது 35 ஆண்டுகள்தாம். இதில் 18 ஆண்டுகள் ஸ்ரீபத்மநாபதாசனாக மட்டுமன்றிக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் தாசனாக வாழ்ந்தார். இவர் கலைஞர்களுக்கு அள்ளிக்கொடுக்கிறார் என்ற குற்றச் சாட்டு அறிக்கை சென்னை கவர்னருக்குச் சென்றது. நாட்டில் ஏற்பட்ட பெரும்மழையால் அழிவு, கிழக்கிந்திய கம்பெனியின் கொடூர வரிப்பிரிப்பு, ஆங்கிலச் சிப்பாய் களை ஆடம்பரமாகப் பராமரிப்பது போன்ற செயல் களால் கஜானா காலியாகிக் கொண்டுவந்த நேரத்திலும் 3085 ரூபாய்க்கு (1842ல்) ஒரு இசைக்கருவியை வாங்கியிருக்கிறார். தமிழ்நாட்டு சங்கீத வித்துவான்களுக்கும், நடனப்பெண்களுக்கும் அவர் அள்ளிக் கொடுக்கிறார் என்று மலையாளிகள் முணுமுணுத்தனர்.

சுவாதித்திருநாள் எழுதிய நூற்கள் பெரும்பாலும் வடமொழியில்தான் உள்ளன. அவர் எழுதியவையாக பக்தி மஞ்சரி, சியாளந்தூர புரவர்ணம், பத்மநாப சதகம், முகனாப்பிராசா, அந்த்ய பிராசவ்ய வஸ்தா, நவரத்தின மாலா, குசேலாபாக்கியானம், அனூமிளொ பாக்கியானம் ஆகிய நூல்கள் கிடைத்துள்ளன.

சுவாதித்திருநாளின் 175 ஆம் ஆண்டுவிழா (1988) திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்ட போது அவர் 394 கீர்த்தனங்களை எழுதியுள்ளார் என்ற செய்தியை ஆதாரபூர்வமாக வெளியிட்டனர். இவரது கீர்த்தனைகள் விஷ்ணுவின் பெருமையைக் கூறுவன. எல்லாக் கீர்த்தனை களின் முடிவிலும் பத்மநாபா என்ற முத்திரை இருக்கும். இவர் நாட்டியம் தொடர்பாக பதம், பதவர்ணம், ஜாவளி, தில்லானா போன்ற கீர்த்தனைகள் 80 இயற்றியுள்ளார். இவை எல்லாமே தஞ்சைமண் செல்வாக்கால் பாடப் பட்டவை.

சுவாதித்திருநாள் சங்கராபரணம், சாரங்கா, நாட்டை என 34 அபூர்வராகங்களைக் கையாண்டுள்ளார். சுவாதித்திருநாள் இசைக்கும் நடனத்திற்கும் செய்த பணிக்குத் தமிழகம் பெரும் அளவில் உதவியிருக்கிறது. மோகினியாட்டத்தின் நெறிப்படுத்தலுக்குத் தமிழகத்தின் உதவி அதிகம். முந்திய திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் இதைஎல்லாம் ஒத்துக்கொண்டு எழுதினர். இன்றைய நிலையில் தஞ்சைமண்ணின் கேரளநன்கொடை பெரும் அளவில் மறைக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.