செப்டம்பர், 13, 2012 அன்று காலை, தொலை பேசி வாயிலாகக் கிடைத்த அந்தத் தகவல் தமிழகத்தின் பல உழைப்பாள உள்ளங்கள், தலைவர்கள், சிந்தனை யாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. துயரத்தில் தோய்ந்த அவர்கள் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும், இந்திய விடுதலைப் போராட்டத்திலும், பிரெஞ்சு விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுப் பாடுபட்டவரும், இறுதிவரை தொழிற்சங்கப் பணிகளில் உழைத்தவருமான தோழர் ஏ.எம்.கோபு அன்று தனது 82-ஆவது வயதில் இயற்கை எய்தினார். தகவல் கிடைத்ததும், உள்ளூரிலிருந்தும், வெளியூர் களிலிருந்தும் ஏராளமானோர் ஏஐடியுசி அலுவலகத் திற்குச் சென்று இறுதி வணக்கம் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் வட்டத்தில் உள்ள திருநீலக்குடி என்னும் கிராமத்தில் 1930-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று மாணிக்கம் பிள்ளை, கமலம் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் கோவிந்த ராஜ் என்னும் கோபு.

அரைக்கால் சட்டை போட்டு, வீதியில் கபடி விளையாடிக் கொண்டிருக்கிற பருவத்திலேயே, இந்திய விடுதலையின் தேவையையும், அதற்கான போராட்டத்தில் காட்ட வேண்டிய தீவிரத்தையும் கண்டறிந்த கோபு, நேரடியாகக் களத்தில் இறங்கி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையறைக் கதவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

திருநீலக்குடிக்கு அருகிலுள்ள பள்ளிகள் அறிந்து இவரது மூர்க்கத்தனத்தை அறிந்து, பள்ளியில் சேர இடம் கொடுக்கவில்லை.

அதனால், நாகப்பட்டினம் சென்று பள்ளிப் பள்ளிப் படிப்பைத் தொடருகிறார், கோபு. அங்கே சென்றும், அவர் அமைதியுறவில்லை; ‘பைந்தமிழ் இளைஞர் கழகம்’ என்னும் இலக்கிய அமைப்பைத் தோற்றுவித்து ‘பைந்தமிழ்ச் சாரல்’ என்ற பெயரில் கையெழுத்து இதழைத் தொடங்குகிறார். இந்தப் பணி இலக்கிய நிலையிலிருந்து, அரசியல் முனைவுக்குப் பரிணாமம் பெற்ற வேளையில்தான் கோபுவின் ஆளுமை உருவெடுக்கிறது.

அதன் பிறகு, தஞ்சை மாவட்டத்தில் நில வுடைமைக் கொடுங்கோலர்கள், காவல்துறை யினர், அரசாங்கம் நிகழ்த்திய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போரிட்டதன் விளைவாக, இளம் வயதிலேயே கொலை, கொள்ளை வழக்குகளை கோபு சந்திக்க நேர்ந்தது. மாவீரன் வாட்டாக்குடி இரணியனுக்கு எதிரான வழக்கில் கூட ஏ.எம்.கோபுவின் பெயர் இடம்பெற்றது.

வழக்குகளின் விளைவாக திருவாரூர் அருகே ஏ.எம்.கோபுவைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர் இறந்து விட்டதாகக் கருதி அப்படியே அவரை விட்டுவிட்டுச் சென்றனர். அப்போது, மரண வாயிலுக்குச் சென்று தப்பிய அரவது உடலில் குண்டுத் துகள்கள் இறுதி வரை உறுதியுடன் ஒட்டிக் கொண்டிருந்தன.

திருச்சி மத்திய சிறைச்சாலை, சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆண்டுக்கணக்கில் துயருற்ற கோபு, இந்திய விடுதலைக்குப் பின்னர் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர், ஏஐடியுசி பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர். ஏராளமான போராட்டங்களை நடத்தி, தொழிலாளர் களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்தவர்.

மார்க்சிய, பொதுவுடைமை இலக்கியங்களையும், மேடையுரைகளையும் மொழிபெயர்த்தல், இயக்கச் செய்திக் கட்டுரைகளை எழுதுதல் என்று பொது வுடைமையாளருக்கேயுரிய பன்முகச் செயல்பாடு களுடன் செறிவாக இயங்கியவர் கோபு.

தியாகத்தின் அடையாளமாக வாழ்ந்த தோழர் ஏ.எம்.கோபுவின் இறப்புக்குப் பின் அவரது உடல் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. தாம் சிந்திக்கிற வரை பாட்டாளி வர்க்கத் துக்காக உழைத்த ஏ.எம்.ஜி. தமது இறப்புக்குப் பிறகு சமுதாயத்தின் பிற உயிர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், தனது உடலுறுப்பு களைத் தானமளிப்பதாகப் பதிவு செய்திருந்தார். அவ்வாறே, அவரது உடலுறுப்புகளும் வெவ்வேறு உயிர்களில் இணைந்து தத்தமது தொண்டைத் தொடர்ந்தன.

Pin It