கத்தோலிக்க சமயப் பணியாளர்களில் இயேசு சபையினர் தனி வகை. பெரும்பான்மையும் கல்வி யாளர்களாக வளர்க்கப்படுபவர்கள், பணிக்கப்படு பவர்கள் அவர்கள். கல்வித் தொண்டோடு, சமயத் தொண்டும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப் படுபவர்கள். பலர் சமய மையங்களினுள் சுருங்கிப் போய்விடுகிறார்கள். ஆனால் சிலரோ, அந்த மையங்களிலிருந்து விலகித் தேடல் உணர்வோடு விளிம்பு நிலைகளுக்கு நகர்ந்து விரிந்த அளவில் உண்மையைத் தேடி அலைகிறார்கள். நிறுவனங் களை மீறிய ஆன்மிகவாதிகளாக அடையாளங்களை விசாலப்படுத்தி, மனிதநேயச் சிந்தனையாளர்களாக, சமூகத் தொண்டர்களாக, தேவைப்படும் காலங்களில் போராளிகளாக, தியாகிகளாகப் பரிணமிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை உண்மையைத் தேடுதலே, கண்டறிந்த உண்மையில் கரைந்து போதலே, அதில் தன்னை இழந்துவிடுதலே. இப்படிப்பட்ட மாமனிதர் களால்தான் இன்றும் கத்தோலிக்க சமயம் உயிர்த் துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

jayapathy_450இம்மாதிரியான தேடல் நிறைந்த மனிதர் ஒருவர் நம்மிடையே, நம்மோடு வாழ்ந்து மக்கள் பணி செய்துகொண்டிருக்கிறார். ஜெயபதி என அன்போடு அழைக்கப்படும் இந்த அருட்பணியாளர் பிரான்சிஸ் ஜெயபதியைப் பற்றி சண்முக ராஜாவும் சச்சிதானந்த வளனும் அருமையான நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயபதி யோடு பல்வேறு சூழல்களில் இவர்களும், சொக்க லிங்கம், பிரசாத், முஸ்தபா ஆகியோரும் நடத்திய நேர்காணல்கள் பெரும் பகுதிகளாகவும், டி.தர்மராஜ், வறீதையா, கான்ஸ்தந்தீன், ஆ.கா.பெருமாள் ஆகி யோரின் கட்டுரைகள் சிறுபகுதிகளாகவும் இணைத்து நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டிகளின் ஊடாக அருட்பணி ஜெயபதியின் ஊரான குமரி மாவட்ட ராமபுரம், பரவசம் தரும் அதன் சுற்றுச்சூழல், ஜெயபதியின் தாத்தா, உறவினர்கள், அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள் என அவர் வாழ்வை வடிவமைத்த ஒவ்வொரு கூறும் நம் கண்முன்னே காட்சியாகி விடுகிறது. சமய ஈடுபாடு மிக்க கத்தோலிக்கக் குடும்பம் அவருடையது. குடும்பத்தி லுள்ள ஒவ்வொருவரும் அவர் உருவாக்கத்தில் எப்படிப் பங்களித்தார்கள் என நூலில் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.

இவருக்கு உழவு மாடுகள் நிரம்பப் பிடிக்கும். சிறுவயதிலேயே எப்படி உழக் கற்றுக் கொண்டார், சித்தப்பா, உழவுத் தொழிலையும் மாடுகளைப் பேணும் தொழில்நுட்பத்தையும் எப்படிக் கற்றுக் கொடுத்தார் என்பவற்றை ரசனையோடு விவரிக்கிறார் அருளாளர். தாத்தாவின் அரவணைப்பையும் அப்பாவின் சிடுசிடுப்பையும் வளர்ப்பு முறையின் இரு வேறு கூறுகளாக விளக்கிக் காட்டுகிறார்.

மூன்றாம் வகுப்பில் படிக்கும் காலத்தில் “சாதி இரண்டொழிய வேறில்லை...” என்னும் வரியை இவர் வாசிக்கையில், இவர் அன்னையார் கேட்டார், “இரண்டு சாதி என்னப்பா?” என்று. வெள்ளாளரும் நாடாரும் என்று இவர் சொன்ன பதிலுக்கு, ‘ஆணும் பெண்ணுமென இரண்டடா’ என்று திருத்திய அவர் தலையில் ஓங்கி ஒரு குட்டும் வைத்தார். தாயாரின் அந்தக் குட்டு அவரை இன்று வரை வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. அதே போல, மாடுகளைப் பற்றி சித்தப்பா சொல்லித் தந்தவையிலிருந்து சக மனிதர்களின் திறமைகளை மதிப்பிட்டுப் பயன்படுத்த அவர் கற்றுக் கொண்டதும் மிக முக்கியமான ஒரு கல்வி.

அதே போல, தன் இளமைக்கால நண்பர்கள், ஆசிரியர்கள், இவர்களைப் பற்றியெல்லாம் விளக்கு கையில், தன் ஆளுமையைச் செதுக்குவதில் இவர்கள் எப்படிப் பங்களிப்புச் செய்தார்கள் என்று விவரித்துக் கொண்டு போகிறார்.

இயேசு சபை இவருடைய வாழ்வை ஒழுங்க மைத்ததில் மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறது. மார்க்சியம் உட்பட உலகத் தத்துவங்கள் பெரும் பான்மையும் அவர் இங்குக் கற்றார். இறையியல் கல்வியில் அவருக்கு உதவிய துறவியர்களைப்பற்றி எல்லாம் அருமையாகப் பதிவு செய்கிறார். காப்பன் என ஒரு துறவி, பார்ப்பவை எல்லாம் மாயை என் பவர் அவர். இது சங்கரரின் மாயை அல்ல. வெளித் தோற்ற மாயை பற்றியது. இதில் மயங்கிவிடாமல், உள்கட்டுமானத்தினுள் நுழைந்து பார்த்து, அதனுள்ளே இயங்கும் இயக்கவியலைப் புரிந்துகொண்டால் தான் சமூக இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பது அவர் கொள்கை. நம் அருளாளர் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம் இது.

எங்கும் எதிலும் தேங்கி நிற்கவில்லை அவர். தேடலே அவரை முன்னோக்கி நகர்த்தியது. நிறைய வாசித்திருக்கிறார். காணிக்காரர்களைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார். ஊடகம் பற்றிக் கற்று, அதனுள் செயல்பட்டிருக்கவும் செய் கிறார். லண்டனுக்குப் படிக்கப் போய், தன் ஆராய்ச்சியை முடித்தும் ஆய்வுத் தொகுப்பை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெறாமல் திரும்பி இருக்கிறார்.

பல விசயங்களில் இவர் சால் அடிப்பவராக அதாவது முன்னத்தி ஏராக இருந்து வந்திருக் கிறார்; இன்றும் இருந்து வருகிறார். தமிழகத்தில் ஊடகக் கல்வி என்ற ஒன்றை உருவாக்கி, அதற்குப் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுத் தந்த முதல் சாதனையாளர் இவர். தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தைத் தொடங்கி, தென் மாவட்டங்களின் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளைச் சேகரிக்கவும், ஆவணப் படுத்தவும், ஆய்வுகளுக்கு உட்படுத்தவும் அவர் செய்த முயற்சிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் சேகரிக்கப் பட்டிருக்கும் சுவடிகளும், பண்பாட்டுக் கலைப் பொருள்களும், இதர ஆவணங்களும் அபூர்வ மானவை. அடித்தள மக்கள் பண்பாடு, அடித்தள மக்களின் எழுச்சிக்கான ஆயுதமாக எப்படி மாற்றப் படவேண்டும், பேணப்பட வேண்டும் என்னும் பார்வையை இளைஞர் சமுதாயத்திற்கு ஊட்டி, அடித்தளத்தில் பேரெழுச்சியை உருவாக்கியவர் இவர்.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் ஒரு வெளியீட்டகத்தை அமைத்து, அபூர்வமான பல நூல்களை வெளியிட்டார். அழகியநாயகி அம்மாள், தன் முதுமைக் காலத்தில் எழுதிய ‘கவலை’ என்ற நூலே அதன் முதல் வெளியீடு. அயோத்திதாசர் பண்டிதர் வெளியிட்ட இதழ்களை எல்லாம் தொகுத்து அவர் எழுத்துக்களை இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டு, அயோத்தி தாசர் மூலம் அடித்தள மக்கள் எழுச்சிக்கு உந்துவிசை அளித்தார்.

விநாயகர் ஊர்வலத்தின் நோக்கையும் போக் கையும் பல இடங்களில் ஆய்வு செய்யக் களப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்து அனுப்பினார். அவர்கள் திரட்டிக் கொண்டு வந்த தகவல்கள் அதிசயிக்கவைப்பவை. விநாயகர் ஊர்வலங்கள் சமய மோதல்களைத் தூண்டும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொதுமக்கள் கலவரத்துக்குத் தயாராக இருப்பதில்லை. அமைதியாக வாழ விரும்பும் அவர்கள், காலப் போக்கில் இந்தச் சிக்கலை அவிழ்க்க எளிய வழிகளைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவரின் நோக்கம் பிசு பிசுத்துப் போகிறது.

கடற்புற மக்களைப் பற்றியும் நுட்பமாக ஆய்வு செய்திருக்கிறார் ஜெயபதி. கன்னியாகுமரி மாவட்டக் கடற்புற மக்கள் பெரும்பான்மையும் கத்தோலிக்கர் களே. கத்தோலிக்கத்தில் நெடிய பாரம்பரியம் கொண்டவர்கள் அவர்கள். ஆனால் அவர்களுடைய நம்பிக்கைகளும் பண்பாட்டுக் கூறுகளும் கத்தோலிக்க சமய எல்லைகளைத் தாண்டி, மண் சார்ந்த மக்கள் சமயங்களுக்குள் விரிவாகப் பரவிக் கிடக்கின்றன என்பதைத் தன் ஆய்வுகள் மூலம் தெளிவாகக் கண்டறிந்தார். இது “வெகுஜனக் கத்தோலிக்கம்” பற்றிய விரிவான ஆய்வாக வெளிப்பட்டுள்ளது. மக்களைப் புரிந்து கொள்வதற்கு மிக நுட்பமான கருவியாக இது நமக்கு உதவுகிறது.

சமய நம்பிக்கைகளையும் பண்பாட்டுக் கூறு களையும் எப்படி நாம் அணுகுவது? அறிவின் துணை கொண்டு நம்பிக்கைக்குள்ளும், நம்பிக்கை சார்ந்த உணர்வுகளுக்குள்ளும் பயணம் செய்ய இயலாது. நம்பிக்கையாளர்களுக்கும் அறிவுப் புலத்துக்குள் பயணம் செய்ய இயலாது. இந்த இரண்டும் ஒன்றுக் கொன்று முரணானவை. ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு கிடப்பவை. முனைகளில் மெல்லிய இழை களாக மாறி, ஒன்றில் ஒன்று பின்னிக் கிடப்பவை. ஊடாட்டம் உடையவை. சுத்த அறிவாளர்களும், சுத்த நம்பிக்கையாளர்களும் இந்த ஊடாட்டத்தில் நுழையத் தடுமாறிப் போவார்கள். பண்பாடு ஏற்படுத்தும் பெருஞ்சிக்கல் இது. பண்பாட்டு நம்பிக்கையில் இயங்கும் மக்களைப் புரிந்துகொள் வதில் ஏற்படும் சிக்கலும் இது. சமூகச் செயற் பாட்டாளர்களும், இலக்கியவாதிகளும் மயக்கம் தரும் இந்த இடத்தில் கவனமாக நடக்க வேண்டும்.

சுனாமிப் பணிக்குழு உறுப்பினராக அவர் கடற்புறத்துக்குப் பணியாற்றச் சென்ற போது, இந்தப் புரிதல் அவருக்குப் பேருதவியாக இருந்தது. எல்லாம் இழந்த அந்த மக்கள், காப்பிடங்களில் பசியோடும் பட்டினியோடும் இருந்தபோது, பல இந்துப் பெரியவர்கள் அவர்களுக்குச் சாம்பார் சோறும் தயிர்ச் சோறும் கொடுத்தார்கள். மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாகக் கடற்புற மக்கள் எரிச்சல் அடைந்தார்கள். பலர் காரணம் தெரியாமல் முழிக்க, அல்லது பழிக்க, ஜெயபதிக்கு விஷயம் தெளிவாகப் புரிந்துவிட்டது. மீனவர்களின் உணவுமுறை முற்றிலும் வேறானது. மீனைச் சமைப்பதிலும் அவர்களுடைய முறை மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டது. எனவே சமைத்த உணவைக் கொடுப்பதற்குப் பதில், சமைப்பதற்கான ஆதாரப் பொருட்களைக் கொடுத்து, அவர்களையே அவர் தங்கள் முறைப்படி சமைத்துக் கொள்ள வழி சொன்னார் ஜெயபதி.

குடியைப் பற்றி அவருடைய அனுபவங்களும் முக்கியமானவை. சிலர் மதுவைக் குடிக்கிறார்கள். இன்னும் சிலரை மது குடித்து விடுகிறது. ஜெயபதி முதல் நிலையில் தொடங்கி, இரண்டாம் நிலையில் சிக்கிக் கொண்டவர். ஒரு கட்டத்தில் மது அவரைக் கிட்டத்தட்ட விழுங்கியே விட்டது. அவருடைய அளப்பரிய ஆற்றல்கள் மங்கத் தொடங்கின. இதை உணர்ந்து, வருந்தி, பலமுறை குடியிலிருந்து விடுபட முயன்றார் ஜெயபதி. இறுதியில் எப்படியோ விடு பட்டார். குடிநோயை மாற்றும் ஒரு மையத்தில் சேர்ந்து, குடிநோயில் இருந்து தப்பிக்கப் போராடிய பலரோடு தொடர்ந்து உரையாடி, குடி என்பது ஒரு நோய் என்ற தெளிவுக்கு வந்தார். குடியைப் பற்றி ஏராளமான நூல்களை வாசித்தார். படிப்படியாகக் குடியிலிருந்து விடுபட்டார். குடிநோய் மருத்துவராக வாழ்வைத் தொடங்கினார். இன்றும் அப்பணியில் தொடர்கிறார்.

இந்த நூல் ஒரு கத்தோலிக்க சேசு சபைப் பணி யாளரின் அறுபது ஆண்டு வரலாறு. அவருடைய அனுபவங்களின் தொகுப்பு. ஆனால், அதையும் மீறி, வாழ்வாங்கு வாழ முயலும் ஒருவரின் தவிப்பு நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது; நம்மை வடிவமைக்கிறது. தான் ஒரு கத்தோலிக்கர் என மகிழ்ச்சியோடு சொல்லுபவர் அவர். ஆனால் தான் திருச்சபையின் விளிம்பில் இருப்பவர் என்கிறார். நிறுவனத் திருச்சபையையும், அது கட்டமைக்கும் உலகத்தையும் தாண்டிய ஒருமைதான் தனக்கு முக்கியம் என்கிறார். “நான் எப்பொழுதும் திருச் சபையின் விளிம்பில், இயேசுவின் இறையரசும் உலகமும் சந்திக்கும் இடத்தில் என்னை இருத்திக் கொள்ள முயல்கிறேன்” என்னும் அவருடைய சொற்கள் மிகுந்த பண்பாட்டு ஆழம் உடையவை; எல்லாருக்கும் பொருந்துபவை. தன்னை உருவாக்கிக் கொள்ள விரும்புவோரும், தன் உருவாக்கத்தின் மூலத்தைத் தேடுவோரும் இந்த நூலுக்குள்ளே அலையும் போது, நிறைய அனுபவம் பெறுவர்.

தேடலே அவர் ஆதாரவிசை. முழுமை என்று ஒன்று இல்லை. அந்த லட்சியத்தை, அல்லது கனவை, அல்லது கற்பனையை நோக்கி முன்னேறுகிற அனு பவங்களும் சாதனைகளுமே வாழ்க்கை. இதைப் புரிந்துகொள்ள இந்த நூல் வழிகாட்டுகின்றது.

நேர்காணல் பலவகை. ஒருவரை முழுமையாக அறிமுகப்படுத்தவும், சமூகத்துக்குப் பயன்படுத்தவும் நேர்காணலாம். திணற அடித்துத் தன் திறமையை நிலைநாட்ட விரும்பியும் நேர்காணலாம். இங்கே நேர் கண்டவர்கள் நேர்காணலுக்கு நேர்மையாக நடந்திருக்கிறார்கள்.

இந்நூலில் சில இடங்கள் தொடர் விவாதங் களுக்கு இடம் தருகின்றன. முக்கியமாகப் பரவர் களும் முக்குவர்களும் சாதியினரா, இனக்குழுக்களா என்பது; இன்னொன்று கன்னியாகுமரி மாவட்டக் கத்தோலிக்கத் திருச்சபையை இரு பகுதிகளாக எப்படிப் பிரிப்பது என்பது.

மொத்தத்தில் அருட்பணியாளர் ஜெயபதி அவர்களின் அறுபதாண்டு வாழ்வைத் திரட்டித்தரும், கொண்டாடும் மிகச் சிறந்த ஆவணம் இந்த நூல். முருகேஷின் நேர்த்தியான முன் அட்டை! சாதி சமயம் கடந்து எல்லாருக்குமான அனுபவப் புத்தகமாக இது உருவாகி இருக்கிறது. உருவாக்கத்துக்கு உழைத்த அத்தனை பேரும் பாராட்டத்தக்கவர்கள்.

சால்

தொகுப்பு : சண்முகராஜா

சச்சிதானந்த வளன்

வெளியீடு : நிகழ் நாடக மய்யம்

விலை : ரூ.100/-

Pin It