“.... அறிவு வேட்கையிலிருந்து விடுபட்ட என் மார்பு இனிமேல் எந்த வேதனையையும் மறுக்காது. மானுடத்தின் விரிவையெல்லாம் என் அகத்தில் தழுவிக்கொள்வேன். அற்பமானதையும் மேலானதையும் சாராம்சத்தில் பற்றிக்கொள்வேன். அதன் வருத்தத்தையும் ஓலத்தையும் என் மார்பில் குவித்துக்கொள்வேன்; என்அகத்தை மானுடத்தின் அகத்தின் அளவிற்கு விரிவடையச் செய்து, இறுதியில், மானுடத்தைப் போலவே தூள்தூளாகிப் போவேன்”

- கதேயின் ஃபாஸ்ட்

இன்றைய தமிழ்க்கலை - இலக்கியச் சூழலில் தஸ்தயெவ்ஸ்கியைப் பேச வேண்டிய அவசியம் என்ன?

dostoyevsky_400கலை இலக்கியத்தின் பாத்திரம் பற்றிய அதிகப்படியான கணிப்பும் எதிர்பார்ப்பும் கொண்டு, அதனை முற்றிலுமான அரசியல் கருவியாக மாற்றிடும் போக்கு ஒரு புறம், தேடல், தூயகலை என்ற பெயரில் மன உளைச்சல்களையும் விகாரப்பாடுகளையும் வெளிப் படுத்துவது இன்னொரு புறம், அறிவு வாதத்தில் திளைத்து மானுடத்தின் மீதான அன்பு வற்றிப்போவது வேறொரு புறமும்-உண்மையை அடைவதில் அன்பை விட்டு விடுவதும், விஷயத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் கண்டு, அதனையே முழு உண்மையாக வற்புறுத்துவது மற்றொரு புறமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தஸ்தயேவ்ஸ்கியைப் படிக்கும் போதும் பரிசீலிக்கும்போதும் இவ்விஷயங்கள் தெளிவுபடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

ருஷ்ய இலக்கியத்தில் மட்டுமல்லாது உலக இலக்கியத்திலும் ஒரு சிகரமாக விளங்கும் தஸ்த யேவ்ஸ்கியின் பரிச்சயம் தமிழுக்கு நிச்சயமாக வளம் சேர்க்கும். சேர்க்க வேண்டும். தஸ்தயேவ்ஸ்கியின் பெயரைப் பலர் கூறிக் கொண்டிருந்தாலும் அவரது பேச்சையும் மூச்சையும் தனதாக்கிக் கொள்ளவோ, தமிழுக்கு ஆழம் சேர்க்கத்தக்க வகையில் அவரது நூல்களை அறிமுகம் செய்யவோ யாரும் அக்கறைப் படவில்லை. தஸ்தயேவ்ஸ்கியிடம் மிகுந்த ஈடுபாடு காட்டிய சம்பத் கூட ‘சாவு’ போன்ற அடிப்படை விஷயங்களில்தான் சிந்தனையைச் செலுத்தினார். இந்த அம்சத்தை வைத்துத்தான் அவர் தஸ்தயேவ்ஸ்கியை மதிப்பீடும் செய்கிறார்:

“... சாவின் வாயிலேயே சென்று திரும்பியவர் என்னும் விதத்தில் தஸ்தயேவ்ஸ்கி சாவையும் பற்றி ஏதாவது முடிவாக நிச்சயமாகச் சொல்லுவார் என்று தினகரன் எதிர்பார்த்தார். ஆனால் தஸ்த யேவ்ஸ்கி பல நாவல்களிலும் சாவைப் பற்றிப் பேசியிருந்தாலும், அவரால் சாவைப் பற்றித் திட்ட வட்டமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. காரணம், அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதல்ல; ஒரு சட்டம், இன்னொரு உயிரை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சாவை ஒரு சமுதாயப் பிரச்சினையாகக் கண்டு அதில் முழுத் தீவிரத்துடன் பிரவேசித்துவிட்டதுதான் அதற்குக் காரணம் என்று நினைத்தார்.” (இடைவெளி, பக்.10)

பகுதி உண்மைகளைக் கண்டுவிட்ட மாத் திரத்தில் அவற்றையே முழுமையான தரிசனங் களாகக் கொண்டு, அவற்றுடன் மாறுபடுபவற்றையும் வேறுபடுபவற்றையும் சரியல்ல என்பதுடன் சத்தியமும் அல்ல எனக் கட்சி கட்டி வாதிடுவதற்கு முற்றிலும் எதிரானவர் தஸ்தயேவ்ஸ்கி. “மனிதன் முற்றிலும் நல்லவனுமல்லன்; அதேபோல முற்றிலும் கெட்ட வனுமல்லன். வாழ்க்கையும் முற்றிலும் கசப்பானது மல்லன். அதே போல முற்றிலும் இனிமையானது மல்ல. ஒருவனிடமே நேரியதான குணபாவங்களின் அதீதமும் எதிர்மறையான போக்குகளின் அதீதமும் அடைந்து கிடக்கின்றன. சிலர் இதில் ஒரு பக்கத்தை மட்டும் வெளிப்படுத்தி நல்லவன் - கெட்டவன் என்று பெயர் கொண்டு விடுகின்றனர். இது தோற்றமே. சாராம்சத்தில் விஷயம் வேறாக இருக்கிறது. குற்றம் செய்பவன் கருவி மட்டுமே. இதில் சுற்றியுள்ள அனைவருக்கும் பங்கும், பொறுப்பும் உண்டு. சமூகம் முழுதிற்கும் பதில் சொல்லும் கட்டாயம் இருக்கிறது” என்பதனை வலியுறுத்தியவர் தஸ்த யெவ்ஸ்கி.

“கரமஸோவ் சகோதரர்”களில் தந்தை கரம ஸோவ் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார் என்பது இறுதிவரை நேரடியாகச் சொல்லப் படவில்லை; மூன்று பிள்ளைகளில் யார் செய் திருக்கக்கூடும்? சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து டிமிட்ரி விசாரிக்கப்படுகிறான், தண்டிக்கப்படு கிறான். உண்மையில் கொலை செய்தவன் ஸ்மெட்ரி யாகோவ் என்னும் கள்ளக்குழந்தை. அதற்கான திட்டம் தீட்டியவன் இவான். தூண்டியவன் டிமிட்ரி, மௌன சாட்சியாக இருந்தவன் அல்யோஷா.

மேலும் குற்றம் மற்றும் துயரத்தின் மூல காரணம் பாவம் செய்தது என மதவாதிகளைப் போல அவர் கருதவில்லை. ‘பாவத்தின் மன்னிப்பிற்கு அவசிய மானது மனதால் வருந்துதல்’ என்று நம்பினார். ஆண்டவன் முன்னும் அவனது வடிவமான உலகோர் முன்னும் குற்றத்தை ஒப்புக்கொள்வதன் மூலம், வருந்துவதன் மூலம் மீட்சி பெறலாம் என்று நம்பினார்.

தந்தையைக் கொலை செய்தவன் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் டிமிட்ரி, வயதான கிரிகோரியைத் தாக்கிக் கொன்றுவிட்டோம் என்னும் குற்ற உணர்வினால் வருந்திக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக்கப்படுகிறது. அக்கணமே டிமிட்ரி ஊற்றுப் பீறிடுவதுபோலக் கொட்டுகிறான்: 

“என் மீது சிதறியதாக நான் கருதிக்கொண்டிருந்த குருதிக்கறை இப்போது கழுவப்பட்டுவிட்டதாகவும், நான் கொலையாளி இல்லை எனவும் அவளிடம் (க்ரூஷென்காவிடம்) கூறவே விரும்பினேன்! அதனை அவளிடம் கூறிடும் உரிமை எனக்குண்டு-அவள் எனது எதிர்கால மனைவி! கனவான்களே, எப்படியும் நான் உங்களிடம் மிகுதியும் நன்றி பாராட்டுகிறேன். நீங்கள் என்னைப் புதியவனாக்கிவிட்டீர்கள் நொடிப் பொழுதில்! நான் சிறுவனாயிருக்கையில் வயதான கிரிகோரி என்னைத் தோள்களில் தூக்கிக் கொள்வார். மூன்று வயதாயிருக்கையில் என்னைக் குளிப் பாட்டுவார். எனக்கு என்ன நேர்ந்தாலும் யாரும் கவலைப்படாத சமயம் அது,... அவர்தான் எனக்கு உண்மையில் அப்பா!”

- கரமஸோவ் சகோதரர்கள், பக்: 554, 55 (Bantam Books)

மனதில் சூதும் வாதும் மண்டியிருப்பினும் அவற்றையெல்லாம் கழுவிக் கறை நீங்கியவனாகத் தன்னை உணர்ந்தவன் பேசுவது இது.

நம்பிக்கை - நம்பிக்கையின்மை என்ற பிரச் சினையும் தஸ்தயேவ்ஸ்கியை வாழ்நாளெல்லாம் வாட்டியிருக்கிறது. அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் ஏசுவிடம் மட்டற்ற நம்பிக்கை கொண்ட அவருக்கு யதார்த்த உலகம் அதனைப் பொய்யாக்கும் விதத்திலும் அசைத்து உலுக்கும் விதத்திலும் ஆயிரம் சம்பவங்களை, நடப்புகளை, எதிர்மறை உண்மைகளை முன்வைப்பதற்காக இருந்தது.

“சர்வசக்தி வாய்ந்த ஒருவர் ஏன் இருக்க வேண்டும்?”

“பூமியில் ஒழுக்க நியதிகள் சாத்தியமில்லை, வாழ்க்கை சகிக்க முடியாததாகி விடும் என்பதால்.”

“அப்படியானால், உலகம் நெறி வழியாக கச்சிதமாக இணக்கமாக இயங்கிச் செல்கிறதா?”

“அதுதான் யோசிக்க வைக்கிறது, திக்கு முக்காட வைக்கிறது, சந்தேகப்பட வைக்கிறது” இதுதான் தஸ்தயேவ்ஸ்கியின் பிரச்சினை.

“ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து நல்ல தண்ணீரும் கெட்ட தண்ணீரும் சுரக்க முடியுமா?” என்னும் விவிலியத்தின் சந்தேகத்திற்கு தஸ்தயேவ்ஸ்கியின் பதில் “ஆம்” என்பதே.

சகமனிதனை நேசி என்று கூற விரும்பிய போதும், அவ்வாறு நேசிப்பது சாத்தியமில்லாத படிக்கு வாழ்வு இறுக்கம் கொண்டுள்ளது, கோர மிகுந்துள்ளது, தீமை மண்டியுள்ளது. மனிதனிடம் அன்பு சுரக்காத பட்சத்தில் இறைவனை நம்புவதோ நம்பாததோ ஒரு பொருட்டல்ல. நம்பிக்கை மனிதனை மையமிட்டதாக இருக்கவேண்டுமே யல்லாது மகேசனை அல்ல. மனிதனை நேசித்து இறைவனை நம்பக்கூடியவனே ஆத்திகன், நேச மில்லாத நம்பிக்கையாளன் நாத்திகனே என்பார். நாத்திகன் என்பவன் முதலில் மனிதனின் மீதும் அடுத்து இறைவனின் மீதும் நம்பிக்கை இழந்தவன் என்கிறார். இவான் இத்தகையதொரு பாத்திரம்; “சுயற லுடிரவா” நாவலுக்கான பூர்வாங்க திட்டத்தில் குறிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட ஃபியோதர் ஃபியோட்ரோவிச் இன்னொரு பாத்திரம். ஃபியோதர் வயது வந்தும் குழந்தை போன்று இருப்பவன், உள்ளுணர்வு நிரம்பியவன், ஆனால் நாத்திகன், வெறிகொண்ட புரட்சியாளன். நிராதரவான குழந்தையொன்றைக் கண்டதும் அவன் கிறித்த வனாக மாறி விடுவதாகக் கற்பனை செய்திருந்தார் தஸ்தயேவ்ஸ்கி - அந்த எண்ணமே புதுமையானது. தத்துவார்த்த நோக்கிலும் தர்க்க விசாரத்திலும் கருத்துக்களின் அணுகு முறையிலும் இது மிகவும் துணிச்சலானதாகக் கருதப்படுவது. இவ்விடத்தில், “உண்மையான கிறித்தவனே நல்ல நாத்திகனாக முடியும்; உண்மையான நாத்திகனே நல்ல கிறித்த வனாக முடியும்” என்னும் ஏர்னெஸ்ட் பிளாக்கின் வாசகமும் வார்த்தை விளையாட்டல்ல, பொருள் மிக்கதுதான் என்பது தெளிவாகும். மனிதனை மறந்த கடவுள் கோட்பாடும் மனிதனை மறந்த நாத்திகமும் பயனற்றவை மட்டுமல்ல; அவை அபாயகரமானவை.

பெரும் குழப்பத்திலும் தத்துவார்த்தச் சிக்கலிலும் அறிவார்ந்த திகைப்பிலும் மாட்டிக்கொண்ட அவரது பாத்திரங்கள் சிறிய, அற்பமான சம்பவங்கள் மற்றும் சாதாரண நிகழ்வுகள் மூலம் திருப்புமுனை அடைந்து வாழ்வினைப் புதியதொரு திசை நோக்கி நகர்த்துகின்றன, விடுதலை உணர்வு பெறுகின்றன. ஃப்யோதர் போன்றே “அப்பாவின் கனவு” நாயகனும். தன்னை வித்தியாசமானவனாகக் கருதி ஆணவமும் தற்பெருமையும் கொண்டு இவ்வுலகில் இயைந்து இயங்கமுடியாதுபோய் தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருந்தவன், நிராதரவான சிறுமியைச் சந்தித்தபோது உதவிசெய்யாது உதறியெறிந்து விட்டு வந்தசெயல் தனக்குள் சிப்பியின் மணலாக அரிப்பதை உணர்கிறான். அதன் பிறகு மனித நேயம், உயிர்களின் இணக்கம், இயற்கையின் இசைவு - இவையெல்லாம் ஒருங்கிணைந்த பிரபஞ்ச இணக்கத்தை அடையத் துடிக்கிறான்.

“சைத்தான்கள்” நாவலின் நாயகனான ஸ்டீபன் டிரோஃபிமோவிச் எதனுடனும் ஒத்திசைய இயலாத படிக்கு வாழ்வை வெறுமனே ஓட்டிக்கொண்டிருக் கிறான். சூழலை விட்டு நீங்கி வேறெங்காவது போய் ஏதாவது செய்யவேண்டும் என்று மட்டும் கருதி வெளியேறிச் செல்கிறான். ஓரிடத்தில் தங்கி யிருக்கையில் ஜுரத்தால் பீடிக்கப்பட்டு அரற்றும் நிலையில் இருக்கையில், சுவிசேஷ வெளியீடுகளை விற்பனை செய்த தேவசேவையில் நிறைவு காணும் பெண் ஒருத்தி, இயல்பாக உதவி செய்து குணப் படுத்துகிறாள். அவள் காட்டும் அன்பும் வாழ்க்கை பற்றிய அவளது பார்வையும் இயல்பான போக்கும் அவனிடத்தில் பெரியதொரு மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன. நீரோட்டமாகப் பொழிந்து தள்ளுகிறான் :

“நிரந்தரமாக ஒருவர் நேசிக்கக்கூடிய ஒரே ஒருவராக இருக்கும் பட்சத்தில்தான் தேவன் எனக்கு அவசியமாகிறார்...

“அநீதியால் மாசுபடாதவராகவும் என்னுள் தூண்டப்பட்ட அன்பின் சுடரை அணைத்து விடாதவராகவும் இருந்தாலே, எனது நித்யம் அவசியமானதாகும். அன்பைவிட உயர்ந்தது எது? அன்பு, இருத்தலை விடவும் மேலானது, அன்பு இருத்தலின் சிகரமாகும்; இருத்தல் அன்பின் ஆதிக்கத்தில் இல்லாது போவது எப்படிச் சாத்திய மாகிறது? அவரை ஒருபோது நான் நேசித்திருந்து என் நேசத்தில் திளைத்திருந்தால், அவர் என்னையும் என் ஆனந்தத்தையும் அழித்து வெறுமையில் ஆழ்த்துவது சாத்தியமா? தேவன் என ஒருவர் இருப்பின், அப்போது நான் அமரன்.....” இவை யெல்லாம் வழக்கமான மதவாதியின் கூற்றல்ல. சம்பிரதாயபூர்வமான ஆன்மிக - தத்துவவாதியின் பகுப்பாய்வு அல்ல. மரபானதையும் ஆசாரமான தையும் விலங்காகப் பூட்டிக்கொள்ள மறுத்து எதிர்ப்புக்குரல் கொடுக்கும் சித்தனின் குரல்; தன்னிலும் தேவனிலும் தோய்ந்து மானுடத்திற் காகக் கசிந்து சுரந்திடும் சூஃபியின் தரிசனம்; பேருவகையிலும் அனுபூதியிலும் ஆழ்ந்துவிட்டாலும் சூழ்ந்திருக்கும் சமுதாயத்தை மறந்துவிடாது அதன் பால் தனது இதயச்சுரப்பைத் திருப்பிவிட்டு மேன்மையடைய விரும்பிடும் ஞானப்பறவையின் கீதம். தூசும்தும்பும் நிரம்பிய மண்ணை விட்டு விண்ணில் சஞ்சரித்தாலும் அதன் பார்வையும் பரிவும் மானுடத்தின் மீதே. தன்மீது படிந்த சேற்றையும் அழுக்கையும் கழுவித் தாய்மையடைந்ததுடன் நின்றுவிடாது சகமனிதர்களும் அதனை எய்த அவாவிடும். ஃபெட்கா என்பவன் “சைத்தான்கள்” நாவலில் வரும் சிறியதொரு பாத்திரம். சைபீரிய சிறைவாசத்திலிருந்து தப்பிவந்த கைதி. பணத்திற்காக எந்தக் கொலைப் பாதகத்தையும் செய்யக் காத்திருக் கிறான். மாதாகோயிலில் ஏன் கொள்ளையடித்தாய் என்று கேட்கப்படும்போது அவனது பதில் நம்மைச் சிலிர்க்கச்செய்கின்றது.

“உண்மை. மாதா கழுத்திலிருந்து முத்துக்களை எடுத்தது உண்மை. ஏன்? வேறு புகலிடம் இன்றி நிராதரவாகத் திரியும் எனது வேதனையைத் தீர்ப்ப தற்காக, எனது கண்ணீரே மாதாவின் உலைக் களனில் முத்தாக உருமாற்றம் கொண்டிருக்கலாம். முன்னொரு காலத்தில், வியாபாரத்தில் நட்ட மடைந்த வியாபாரி ஒருவன் மாதாவின் கழுத்தில் இருந்து ஒரு முத்தைத் திருடிவிட்டான். பின் எல்லோர் முன்னிலையிலும் அதற்கான பணத்தை அவளது காலடியில் சமர்ப்பித்தபோது, புனிதமாதா அவனை அரவணைத்துக் கொள்ளவில்லையா?” - பக். 509. (The Devils)

“கரமஸோவ் சகோதரர்”களில் ஜோஸிமா பாதிரியார் மற்றும் அல்யோஷாவின் கடவுள் இருப்பு வாதங்களைவிட இவானின் கடவுள் பழிப்பு ஆற்றல் மிக்கதாக உள்ளது. மிஷ்கினையும் அல்யோஷாவையும் எந்த அளவு நேசத்துடன் வடித்தாரோ அதில் எள்ளளவும் குறையாதபடி டிமிட்ரியையும் இவானையும் ரோகோஸினையும் ரோஸ்கோல்னிகோவையும் படைத்தார். கடவுளின் இருப்பு என்னும் கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு “பெரும்பாவி ஒருவனின் வாழ்வு” என்னும் நாவல் எழுதத் திட்டமிட்டிருந்தார். அது நிறைவேறவில்லை. தனது குழப்பத்தை ஒரு கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் -

“நான் ஒரு காலத்தின் குழந்தை, நம்பிக்கை யின்மை மற்றும் சந்தேகவாதத்தின் குழந்தை என்றே என்னைக் கூறுவேன்: இதுவரையிலும் இப்படியே இருந்து வந்திருக்கிறேன், இறுதி வரையும் இப்படியே இருப்பேன். நம்பிக்கை மீதான இவ்வேட்கை எவ்வளவு இடர்ப்பாடுகளை எனக்கு அளித்து வந்திருக்கிறது, அளித்துக் கொண்டு இருக்கிறது; அதற்கு எதிராக எவ்வளவு பிரதி வாதங்கள் என்னிடம் இருந்தபோதும் அது அவ்வளவு வலுவாக என் ஆன்மாவில் உள்ளது. இருந்த போதும், நான் முற்றிலும் சாந்தமாக இருக்கக்கூடிய கணங்களைச் சமயங்களில் அருளவே செய்கிறார்: அக்கணங்களில் நான் நேசிக்கிறேன், நேசிக்கப்படுவதாக உணர்கிறேன், மற்றும் அத்தகு கணங்களில் அனைத்தையும் பிரகாசமாகவும் புனிதமாகவும் எனக்கு ஆக்கிக் காட்டும் ஒரு நம்பிக்கை அடையாளத்தைப் பதித்து வைக்கிறேன். அது இதுதான்: கிறிஸ்துவைவிட அழகானதாகவும் ஆழமானதாகவும் நேசிக்கக்கூடியதாகவும், பகுத் தறிவுக்குட்பட்டதாகவும், துணிச்சல் மிக்கதாகவும், பரிபூரணமிக்கதாகவும் உள்ள இன்னொன்று இல்லை. கிறிஸ்துவின் நிலை உண்மையானதாக இல்லை என்று யாராவது ஒருவர் நிரூபித்தாலும், கிறிஸ்துவிடம் உண்மையில்லை என்பது யதார்த்த மாகவே உண்மையாயினும், நான் உண்மையின் பக்கத்தை விட கிறிஸ்துவின் பக்கமே இருப்பேன்....” - பக், 217, (Dostoyevsky, E.H.Carr, Unwin Books)

உண்மைக்கு எதிராக அன்பை நிறுத்தக் காரணம் என்ன? உண்மையை விடவும் மானுடத்திற்கு மிகுதியும் தேவைப்படுவது அன்பே என்று அவர் கருதுவதுதான். மானுடத்தின் மீது அக்கறை கொள்ளும்போது, மனிதனை நேசிக்கத் தொடங்கும் போது, அன்பு சுரக்கத் தொடங்கிவிட்டால் உண்மை தானே பிடிபடும் என்பது அதன் உள்ளுறை. உண்மையை நிராகரிப்பது இங்கு நோக்கமல்ல. அன்பை இழந்து, கை விட்டு விட்டு உண்மையை அடைய எத்தனிக்கவேண்டும் என்று வற்புறுத்துவது தான் நோக்கம். ‘முட்டாள்’ நாவலில் இயேசுவின் மாசற்ற அன்பு வெல்லும் என்று உணர்த்தக் கருதியிருந்தார். ஆனால் உணர்த்தியதோ அதற்கு எதிரிடையானதாக உள்ளது. ஸ்விஸ்ஸிலிருந்து குணமடைந்து ருஷ்யா வரும் மிஷ்கின் உலகில் தூய அன்பின் ஆற்றலை நிலைநிறுத்த முடியாது திக்குமுக்காடி மீண்டும் ஸ்விஸ் திரும்புகிறான். இது தான் தஸ்தயேவ்ஸ்கியின் தனிச்சிறப்பு.

முரண்படும் உண்மைகளை எதிரெதிர் நிறுத்தி விடுவார். எதை வற்புறுத்துகிறார் என்னும் கேள்வி எழும். கலைஞனின் பணியும் அதுதான். யதார்த் தத்தின் எல்லாப் பக்கங்களையும் அவற்றின் தீவிரத் தோடும் உக்கிரத்தோடும் வெளிப்படுத்துவதுதான். அதைக் கச்சிதமாக செய்துவிட்டால் கலைஞனின் கடமை நிறைவேறிவிட்டாகிவிடும். தகிக்கின்ற வாழ்வைச் சுடுகின்ற வகையில் முன் வைத்து விட்டாலே, வாசகனின் பிரக்ஞையைக் கூராக்கி தார்மீகக் கோபத்தை உசுப்பிவிட முடியும். அதற்கு மேல் சென்று தான் கண்ட பக்கங்களில் எதுசரி, எது தவறு என்று மதிப்பீடு செய்வதோ, ஒன்றை வற்புறுத்துவதோ, பிரச்சினைகளுக்கு வழி தேடுவதோ கலைஞன் வேலையல்ல. அது சமூக ஆய்வாளனின் வேலை; அரசியல் நிர்வாகியின் காரியம்; தத்துவ வாதியின் கடமை. அதனைச் செய்ய முற்படுகையில் கலைஞன் படைப்புத்தளத்திலிருந்து நீங்கி விடுகிறான்.

கார்க்கி, தஸ்தயேவ்ஸ்கியை விமர்சிக்கும் போது இப்பிரச்சினை தான் எழுகின்றது. இருண்ட பக்கங்களை எடுத்துரைத்த தஸ்தயேவ்ஸ்கி மனித எழுச்சிக்காக ஒன்றும் கூறவில்லை என்பதுதான் கார்க்கியின் வருத்தம். படைப்பாளியாகவும் இருந்த கார்க்கி சோசலிச யதார்த்தவாதத்தைத் தூக்கிப் பிடித்த காலத்தில் இப்படி எழுத முடிந்தது எத்தகைய முரண்பாடு! வாழ்வின் ஆதர்ச விஷயங்களையும் மனிதனுக்கு உற்சாகம் ஊட்டக்கூடியவற்றையும் கூறுவது கலைஞனின் பணியில்லையா? மனிதனிடம் நேசம் கொண்டு, அவனது அவலத்தைக் கண்டு புழுங்கிப் பொறுக்கமாட்டாமல்தானே எழுதத் தொடங்குகிறான். பிரச்சினையை அதன் வீர்யம் குன்றாத வகையில் உணர்த்திவிட்டாலே போதும், அது விளைவைத் தொடங்கி வைத்துவிடும்.

பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்யவேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் - என்பவற்றையெல்லாம் மக்கள் தாங்களே வகுத்துக் கொள்வர். மேலும், தீர்வு என்பது காலதேசவர்த்தமானங் களுக்கு ஏற்ப அப்போதைக்கப்போது தீர்மானிக்கப் பட வேண்டிய விஷயம். அதனை முன்கூட்டியே கூறுவது சரியில்லாதது. இதனைக் கலையின்பால் சுமத்திக் கலையின் ஜீவனை நசுக்கிவிடுவது அழகல்ல. அரசியல்வாதியின் பணியைக் கலைஞனிடம் சுமத்தக்கூடாது. கலைஞன் செயல்வீரனாகவும் பொங்கி எழலாம், அது அவனது அடுத்தகட்டப் பணியே தவிர கலைஞனாக நின்று கலைக்குள் ஆற்றும் பணியல்ல. ஒவ்வொரு சாதனம், ஒவ்வொரு வடிவம் - இவற்றின் வரம்புகளை உணர்ந்து அதற் கேற்ப செயல்பட்டாலே அதனதன் வெற்றி சாத்தியம்.

நூற்றாண்டுகளாக ருஷ்ய ஆன்மா பட்ட பாடுகளை, சித்திரவதைகளை வெளிப்படுத்தி நசிந்து வரும் அய்ரோப்பா முழுவதையுமே மீட்டெடுக்கும் ஆற்றல் ருஷ்ய ஆன்மாவுக்கு உண்டு என்று நம்பிய வரை, “வாழ்வின் இருண்ட அம்சங்களை வலியுறுத்தி அவநம்பிக்கைக்கும் அநுபூதி போன்றவற்றிற்கும் இட்டுச்செல்லக்கூடியவர்” என்று மதிப்பிடுவது எப்படிச் சாத்தியமாயிற்று? சக மனிதன் பாலான நேசம், தான் சார்ந்த சமூகம், பின்னர் தான் சார்ந்த நாடு, பின்னர் இப்பிரபஞ்சம் முழுமைக்குமாக விரிவு கொண்டு பிரபஞ்ச இணக்கம் காண வேண்டும் என்று கருதியவரை அவநம்பிக்கைவாதி என்று முத்திரைகுத்துவது சரியாகுமா?

“இந்தப் பூமியில் வாழ்கின்ற திறமையை இழந்துவிடா மலேயே மனிதர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தீமையே மனிதனின் இயற்கையான நிலைமை என்பதை நான் நம்பமாட்டேன்” என்று கூறிய வரை எதிர்மறை விமர்சனத்திற்குள்ளாக்குவது சரியாகுமா? “அங்கே மாதாகோவில்கள் இல்லை. ஆனால் அவர்கள் பிரபஞ்சத்தின் ஆக மொத்தத்திலும் உயிர்த்துடிப்பான, நெருக்கமான, தொடர்ச்சியான தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்களிடம் கோட் பாடுகள் இல்லை; ஆனால் அதற்குப் பதிலாக, இவ்வுலக வாழ்க்கையென்னும் பேரின்பம் அதன் இவ்வுலகத் தன்மையின் முடிவான அளவுக்கு நிறைவு பெறும்பொழுது அவர்கள் அனைவரும் - வாழ்பவர்களும் மரணமடைந்தவர்களும் - பிர பஞ்சத்தின் ஆக மொத்தத்துடன் இன்னும் மிக நெருக்கமான தொடர்பை அடைவார்கள் என்ற அசைக்க முடியாத அறிவைக் கொண்டிருந் தார்கள்.” ஸஅப்பாவியின் கனவு, “ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி - சிறுகதைகளும் குறுநாவல்களும்,” ராதுகா பதிப்பகம், மாஸ்கோ, (பக். 370)] என்ற வாறு பிணக்கற்ற இணக்கத்தை மானுடம் அடைய வேண்டும் என்று கனவுகண்ட கலைஞனை விரல் நுனியில் ஒதுக்கிவிடுவது துரோகமாகும்.

“பிறக்காமல் இருக்க எனக்கு அதிகாரம் இருக்குமாயின் இந்த முட்டாள்தனமான வாழ்வை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன்.”

“முட்டாள்” நாவலில் இப்பொலைட்டின் கூற்று இது.

“மற்றவர்களின் பகைவன் என்பதைவிட எனக்கு நானே பகைவன் என்பதே பொருந்தும். ஒவ்வொரு வரையும் புண்படுத்துவதில், தாக்குவதில் எனக்கு மகிழ்ச்சி.... ஆனால், நான் தீக்குணம் நிரம்பிய வனல்லன். எந்தத் தன்மையினனும் அல்லன். அன்பானவனா? இல்லை. கொடூரமானவனா? இல்லை. வில்லனா? இல்லை. ஞானியா? இல்லை. நாயகனா? இல்லை. பூச்சியா? இல்லை. பத்தொன் பதாம் நூற்றாண்டின் மனிதன் நிறமற்ற பிராணி, கடந்த நாற்பதாண்டு வாழ்வு என்னை இப்படி யாக்கியிருக்கிறது. நாற்பது வருடமே என் வாழ் நாள். வாழ்வின் அதீத எல்லையே நாற்பது வருடங்கள் தாம். அதைத் தாண்டி வாழ்வது அநாகரிகமானது, ஒழுங்கீனமானது, கீழ்த்தரமானது....” - “கீழுலகிலிருந்து கடிதங்களி”ன் பாத்திரம் ஒன்றின் பிரகடனம் இது.

இவற்றின் மத்தியில் வேறொரு சுருதியில் ஒரு குரல்:

“அடுத்தவனை நேசி. அதுதான் அவசியமானது. மற்றது எதுவும் வேண்டாம்” (“அப்பாவியின் கனவு”) இப்படி எதிரும் புதிருமான பார்வைகளை முன் வைப்பதால், எது சரியென வாதிடுகிறார் என்றறிவது எப்படி?

எது சரி என்பதே பிரச்சினையல்ல. வாழ்க்கை யோட்டத்தில் என்னவெல்லாம் நிகழ்கின்றன, என்னவெல்லாம் காணக்கிடைக்கின்றன என்பதை துல்லியமாக எடுத்து வைக்க வேண்டும். அது போதும். அப்படிச் செய்ததால்தான் அவர் இன்றளவும் பொருத்தப்பாடு உடையவராக, பேசப்படக் கூடிய வராக, விவாதிக்கப்படக் கூடியவராக இருக்கிறார். ஜார்ஜ் லூகாக்ஸ் அவரை நன்றாகவே அடையாளம் காட்டுகிறார்:

“...தஸ்தயேவ்ஸ்கியின் பெரும்பான்மையான அரசியல் - சமுதாய விடைகள், தீர்வுகள் தவறானவை. தற்கால யதார்த்தத்திற்கும் அவற்றுக்கும் தொடர்பே இல்லை. அவை வழக்கிழந்தவை; பிற்போக் கானவைகூட. இருந்தாலும் கூட தஸ்தயேவ்ஸ்கி உலகச் சிறப்புப் பெற்றவர். ஏன்? மானுட சமுதாய நெருக்கடி, அரசியல் கொந்தளிப்பு ஏற்படுங்கால் கேள்விகளைத் தீர்மானகரமாகவும் சரியாகவும் முன்வைப்பது எப்படி என்று அறிந்திருந்தார்.... செகாவ் குறிப்பிட்டதுபோல், கேள்விகளுக்கு விடை காண்பது ஒரு புறம் இருக்க, அவற்றைச் சரியான முறையில் முன்வைப்பது மிகவும் முக்கிய மானதொன்றாகும். நாகரிக உலகின் தார்மிக, ஆன்மிக வளர்ச்சிபற்றிய அவரது எதிர்பார்ப்பு அவரது படைப்புகளுக்கு ஆற்றல் வழங்கியது. இதனாலேயே அவரது இலக்கியம் காலந்தோறும் புதுமை பெற்றதாக, பொருத்தம் உடையதாக விளங்குகிறது.” (Quoted by Rene Wellek, Ed: “Dostoyevsky” PP 147)

இருபதாம் நூற்றாண்டில் அவரது பொருத்தப் பாட்டையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து தான் மாக்ஸ் எர்னெஸ்ட் என்னும் எக்ஸ்பிரஷனிச ஓவியர் தனது சுய சித்திரிப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் மடியில் தான் உட்கார்ந்திருப்பதாகக் காட்டினார்.

ருஷ்யனது ஆன்மிக ஆற்றலின் மீது மதிப்பும், நம்பிக்கையுடனான எதிர்பார்ப்பும் புஷ்கினிடம் காணப்படுவதால்,

ருஷ்யனது சகோதரத்துவம் அய்ரோப்பாவை மீட்டெடுப்பதுடன் நில்லாது உலகையே காக்கும் என்று புஷ்கின் நம்பியதால்,

ருஷ்ய தேசிய உணர்வு வரலாற்று ரீதியில் அவசியமாயினும் அதனைத் தாண்டிச் சென்று பிரபஞ்ச இணக்கத்தை அடைய புஷ்கின் விரும்பியதால்,

புஷ்கினைப் பெரிதும் போற்றினார் தஸ்த யேவ்ஸ்கி. அவரது புஷ்கின் சொற்பொழிவே அவரை ருஷ்ய மக்களுக்கு அடையாளங்காட்டியது. அவரது படைப்புகள் மூலமாக அவரைப் புரிந்து கொண்டிருந்ததைவிட, இச்சொற்பொழிவு மூலமே தங்களின் பிரதிநிதியாகப் புரிந்துகொண்டனர். ‘இன்னொருவரை அழித்து ஒருவன் சந்தோஷமாக இருக்கக்கூடாது’ என்பதை அவர் வழங்கிய செய்தியாகக் கொண்டனர்.

இனங்கள் சேர்ந்துவாழ்வது முடியாதுபோய், விடுதலைக்குரல் எழுப்பும் இனத்தை நசுக்கி எறிந்து விட கூர்நகங்கள் நீள்வதும்,

சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால், அரசியல் சாயத்தின் பெயரால், கடவுளின் பெயரால் மனிதர்கள் வதைபடுவதும்,

சித்தாந்தங்கள் பெயரால் மனித விடுதலை ஒடுக்கப்படுவதும்,

நிராசையும் தோல்வியும் கசப்புணர்வும் வாழ்க்கையின் பொதுப்போக்காக இருப்பதும் -

இன்றைய நிலையாக இருக்கிறது. தஸ்த யேவ்ஸ்கி பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம். இதுதான் தகுந்த நேரம். அது தஸ்தயேவ்ஸ்கி பற்றிய புரிதலுக்கு மட்டுமல்லாது வாழ்வின் அடி நாதம் பற்றிய விளக்கத்திற்கும் வழிகோலும்.

நன்றி : கல்குதிரை

Pin It