வாய்மொழி இலக்கியமே இலக்கியத்தின் துவக்கநிலை. எழுத்துக்கள் தோன்றி இலக்கியம் அச்சு வாகனம் ஏறும் காலம் வரை அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள், வாழ வைத்தவர்கள் கதை சொல்லிகளாகத்தான் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நமது இதிகாசங்களும் புராணங்களும் இவ்வாறு தான் காலங்கடந்து வாழ்ந்தன. கதாகாலட்சேபங்கள், கூத்துகள் என்று மக்களை விடிய விடிய கதை கேட்கப் பழக்கியவர்கள் நம் கதை சொல்லிகள். கதை கேட்காதவர்கள் மனிதர்கள் இல்லை என்றே எல்லோரும் நம்பினார்கள்.

மகுடி இசைக்குப் பாம்பு மயங்கியது போல மனிதர்கள் கதைக்கு மயங்கினார்கள் என்பது உண்மை. கதைக்குரிய ஆற்றலை நிரூபித்த ஒன்று ஆயிரத்தொரு இரவுக்கதைகள். சாமர்கண்ட் நாட்டின் அரசன் ஷாரியர் பெண்களை வெறுப்பவன். தினமும் ஒரு பெண்ணை மணந்து முதலிரவிற்குப் பின் அப்பெண்ணைக் கொன்று விடுவான். நாட்டிலே பெண்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. மந்திரி திகைத்தார். அரசரைத் திருத்த முயன்றார் முடியவில்லை.

இப்பிரச்சினைக்கு முடிவு காணப் புத்திசாலியான மந்திரியின் மகள் ஷகர்ஜத் முன்வந்தாள். தைரிய மாக மன்னனை மணந்தாள். முதலிரவில் ஷகர்ஜத் மன்னனுக்கு ஒரு கதை கூறினாள். கதை கேட்பதில் ஆர்வங்கொண்ட மன்னன் விடியும்வரை கதை கேட்டான். புத்திசாலியான ஷகர்ஜத் கதையை முடிப்பதில்லை. தொடரும் போட்டுவிடுவாள். கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளும் ஆர் வத்தில் மன்னன் ஷகர்ஜத்யைக் கொல்லவில்லை. 1001 இரவுகள் கதைகள் சொல்லப்பட்டன. இறுதியில் மன்னன் மனம் மாறிக் கொலைத் தண்டனையை நிறுத்தி விட்டான்.

கதையின் வலிமைக்கு இக்கதை நல்ல சான்று. கதையின் நோக்கம் மகிழ்ச்சிப்படுத்துவது மட்டு மல்ல, நல்வழிப்படுத்துவதுமாகும். பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமும் கதைகள் தன் செல் வாக்கை நிலை நாட்டியுள்ளது. கதை கேட்க விரும் பாத குழந்தைகள் இருக்க முடியாது. குழந்தைகளை வளர்ப்பதற்கும் வசப்படுத்துவதற்கும் கதை சொல்லு தலைச் சிறப்பாக நம் முன்னோர். பயன்படுத்தினர். நம் குழந்தைகளின் கதை சொல்லிகளாகப் பாட்டியும் தாத்தாவும் இருந்தார்கள்.

நிலா முற்றத்தில் வைத்து பாட்டி பால் சோற்றைக் குழந்தைக்குக் கதை சொல்லி ஊட்டிய காலம் இருந்தது. பேரக் குழந்தைகள் தாத்தாவின் மார்பில் படுத்துக்கொண்டு கதை கேட்டு மகிழ்ந்தார்கள். அவையெல்லாம் கனவாய் பழங்கதையாய்ப் போய்விட்டன. கூட்டுக் குடும்ப சிதைவிற்குப் பிறகு தாத்தாவும் பாட்டியும் நம் குழந்தைகளுக்குக் கதை சொல்லிகளாக இல்லாமல் போய்விட்டனர்.

முன்பெல்லாம் பக்கத்து வீட்டு அக்காவும் அண்ணன்களும் கதை சொல்லிகளாக இருந்தார்கள். ‘கடைக்குப் போய் வா, கதை சொல்லு கிறேன்’ என்று கதையைக் கூலியாகக் குழந்தைகளுக்கு கொடுத்தார்கள். மரத்தின் நிழலிலும் மொட்டை மாடியிலும் வாண்டுகள் வட்டமாக உட்காரக் கதை சொல்லி மகிழ்ந்த அக்காக்கள் இன்றில்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

பாரம்பரியமாக குழந்தைகளுக்குக் கதை சொல்லி களாக இருந்தவர்களுக்கு இன்று சந்தர்ப்பம் இல்லாத நிலையில் குழந்தைகள் இன்று யாரை நம்பி இருக் கிறார்கள்2 குழந்தைகள் அதிக நேரம் வீட்டிலும் பள்ளியிலும்தான் இருக்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பொறுப்பு பெற்றோரையும் ஆசிரியரையும் சாரும் என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.

குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கதை சொல் கிறார்களா? கதை சொல்ல நேரமில்லை என்று வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் கூறிவிடு வார்கள். ஏன், கதை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்? தொலைக்காட்சியில் வரும் கார்ட்டூன் சேனல்கள் போதாதா? டேப் ரிக் கார்டரை போட்டு விட்டால் அது கதை சொல்லிவிட்டுப்போகிறது. இண்டர்நெட் யுகத்தில் கதை சொல்லிக்கொண் டிருப்பது அவசியமா? என்று கேள்வி எழுப்பு கிறவர்கள் இருக்கிறார்கள்.

இதற்குப் பதில் பெற்றோர் குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் உள்ள முக்கியத்துவத்தை உணர வில்லை என்பதேயாகும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லிகளாக இருப்பது மிகுந்த நன்மைகளைத் தருவதாகும். அவர்களுக்கிடையே நல்உறவை வளர்க்க அது உதவுகிறது. தொலைக்காட்சி, இண்டர் நெட் இவற்றிலுள்ள தீய விளைவுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உதவுகிறது. குழந்தை களுக்காகக் கதை சொல்லச் சிந்திக்கும்போது பெற் றோர் படைப்பாளிகளாக மாறி விடுகிறார்கள். அதன் தாக்கம் குழந்தைகளிடமும் எதிரொலிக் கிறது. பெற்றோர்கள் குழந்தைகளை நவீன பொழுது போக்குக் கருவிகளிடம் ஒப்படைப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால் அது குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கிறது என்பதை சிந்தித்தால் புரிந்துகொள்ள முடியும்.

முன்பெல்லாம் பள்ளிகளில் கதை சொல்லும் நேரம் என்று ஒரு வகுப்பு இருந்தது. அது இப் போது இல்லாமல் போய்விட்டது. ஆசிரியர்கள் தங்களைக் கதை சொல்லிகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற அவசியம் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை.

ஆசிரியர் கதை சொல்லியாக இருந்தால் தனது பணியில் வெற்றி பெறுவதற்கான திறவுகோல் அவருடைய கையில் இருக்கிறது என்று நான் சொல்லுவேன். கதை சொல்லியாக இருக்கும் ஆசிரியரை ஒரு மாணவன் தனது நண்பனாக நினைக்கிறான்.

பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கதை சொல்லிகளாக உருவாக்குவதற்கு சிங்கப்பூர் அரசு அதற்கான பயிலரங்குகளை நடத்தி வருகிறது என்பதை இங்குக் குறிப்பிடவேண்டும்.

அமெரிக்காவில் நான் பார்த்த ஒன்றையும் சொல்ல வேண்டும். அங்குள்ள நூலகங்களில் கதை அறை (story room) இருக்கிறது. அங்கு வயது வாரியாக குழந்தைகளுக்குத் தொழில் ரீதியாக கதை சொல்லிகள் (story Tellers) கதை சொல்லுகிறார்கள். அதற்கு அமோக வரவேற்பு இருக்கிறது. அங்கு வாழும் நம் நாட்டினர் தங்கள் குழந்தைகளை தவறாது கொண்டுபோய் விடுகிறார்கள். நம் நாட்டிலும் நூலகங்களில் இத்தகைய கதை சொல்லி களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதற்கு இது பெரிதும் உதவும்.

கதை சொல்லுவதற்குக் கதை தெரிந்திருந்தால் போதும் என்று சாதாரணமாகச் சொல்லி விட முடியாது. கதை சொல்ல நீங்கள் தயாராக இருக் கலாம். அதைக் கேட்க குழந்தைகள் தயாராக இருக்க வேண்டுமே! கதை கேட்க விரும்பாத குழந்தை களையும் கதை கேட்க வைப்பதற்குப் பல உத்திகளை கதை சொல்லிகள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

கதை சொல்லுவதற்கு நன்றாகக் கதையை படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு உங்கள் சொந்த வார்த்தைகளில் கதை சொல்வது சிறந்தது. கதையில் முக்கியமாக இடம்பெறும் கருத்துக்களை மட்டும் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகளில் சொல்வது வரவேற்கத் தக்கது.

கதையின் தொடக்கம், முடிவு என்ற வரிசையை மாற்றிக் கூட கதை சொல்வது புதுமையாக இருக்கும். சிங்கம், எலி கதையை மாற்றிச் சொல்ல முடியும். காட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தின் மேல் எலி ஏறி விளையாடுகிறது. கோபம் கொண்ட சிங்கம் எலியைக் கொன்று விடுவேன் என்று கூறுகிறது.

என்னை விட்டு விடு. ஆபத்துக் காலத்தில் உதவுவேன் என்று எலி சொல்லுகிறது. சிங்கம் சம்மதிக்கிறது. ஒரு சமயம் வேடனின் வலையில் சிங்கம் மாட்டிக் கொள்கிறது. உதவி கேட்டுச் சிங்கம் எலியை அழைக்கிறது. எலி வந்து வலையைக் கடித்துப் போட்டு சிங்கத்தைக் காப்பாற்றுகிறது. இந்த கதையை வேடனின் வலையில் சிங்கம் மாட்டிக் கொண்டது என்று கதையின் நடுவிலிருந்து ஆரம் பித்து கதையைச் சொல்லிப் பாருங்கள். இன்னொரு பரிமாணம் கிடைக்கும்.

கதையில் இருக்கும் மர்மம் தொடர்ந்து நீடித் திருக்குமாறு கதையைச் சொல்லுவது சுவாரசியத் திற்கு வழி வகுக்கும். அதே போல் கதை வலியுறுத்தும் நெறியை அடிப்படையாகக் கொண்டும் கதை சொல்ல லாம். சிங்கமும் நான்கு எருதுகளும் கதை ஒற்றுமை வலிமை என்ற நெறியை வலியுறுத்துகிறது. அந்த நெறியின் அடிப்படையில் கதையை அமைத்துக் கொண்டு சொல்ல வேண்டும். நான்கு எருதுகளும் தனித்தனியாகப் பிரிந்தது தவறு என்பதைக் குழந்தைகள் உணர்ந்து கொள்ளும் போதே கதையிலுள்ள நெறியைக் குழந்தைகள் அறிந்துகொள்ள முடியும்.

ஆகையால் எருதுகள் பிரிந்து செல்லும் நிகழ்வை சோக சித்திரமாக மனக் கண்ணில் காணும் விதத்தில் சொற்களில் ஏற்றத்தாழ்வும் உணர்ச்சியும் காட்டிக் கதை சொல்லுதல் வேண்டும். நான்கு எருதுகளை நரி பிரித்து விட்டது என்ற ஒற்றை வரியில் சொல் லாமல் நரிக்கும் எருதுகளுக்கும் இடையில் ஓர் உரையாடலை உருவாக்கிக் கதை சொல்லுவது ஒரு காட்சியை ஏற்படுத்தும்.

வெற்றிகரமான கதை சொல்லிகள் குழந்தை களைக் கதையைக் காணவும் உணரவும் வைத்து விடுகிறார்கள். இதுவே முக்கியம்.

அமெரிக்க நூலகத்தின் கதை அறையில் 6 வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நானும் அங்கு சென்றிருந்தேன். அங்கிருந்த கதை சொல்லி அன்று சிண்டர்லா கதையைச் சொல்லியிருந்தார். ஓர் இளவரசிக்குரிய ஆடை அணிகள் மேசையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கதை சொல்லியின் கையில் ஓர் அலங்காரமான செருப்பு இருந்தது. குழந்தைகள் அதை ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர்கள் முகத்தில் நிறைய கேள்விக்குறிகள், அந்த ஒரு செருப்பு குழந்தைகளின் மனதில் பல எண்ணங் களை உருவாக்குகிறது. சிண்டர்லா கதையின் மையமே அந்த ஒற்றைச் செருப்புதான். தனது மனங் கவர்ந்தவளை கண்டுபிடிக்க இளவரசனுக்கு இருக்கும்

ஒரே ஆதாரம். சிண்டர்லாவின் அதிர்ஷ்ட சீட்டு. குவி மையமான அந்த ஒற்றைச் செருப்பை வைத்துக் கொண்டு கதைசொல்லி வெற்றிகரமாக கதைப் பயணத்தைத் தொடருகிறார். அன்று குழந்தைகள் சிண்டர்லாவின் சுக துக்கங்களில் நிச்சயம் பங்கெடுத் திருப்பார்கள்.

குழந்தைகள் கதை கேட்பதற்கு ஆயத்தப்படுத்த, அவர்களை ஈர்க்க கதை சொல்லிகள் சில உத்தி களைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதிலொன்று ஒப்பனை, இன்னொன்று நடிப்பு. கதை தொடர் பான ஒரு வேடத்தை போட்டுக்கொண்டு சொன்னால் குழந்தைகள் கதையோடு ஒன்றிப் போகிறார்கள். தேவையான அபிநயங்கள், உடல் அசைவுகளுடன் சிறிது நடித்துக் கொண்டு சொன்னால் கதை உலகத் திற்குள்ளே குழந்தைகள் சென்று விடுகிறார்கள்.

கதை சொல்லிகள் ஒரு மேடையை உருவாக்க வேண்டும். உண்மையான மேடை (ளவயபந) அல்ல. ஒரு மேடைத்தனம். குழந்தைகளிடம் கதை கேட்கும் மனநிலையை ஏற்படுத்த ஒரு பாடலைப் பாடலாம். அல்லது இசைக் கருவிகளை மட்டும் இசைக்கலாம். குழந்தைகள் கூடி இருக்கும் அறையில் ஒரு மேடைச் சூழலை உருவாக்கும்போது குழந்தைகள் கதை கேட்க ஆயத்தமாகிவிடுகிறார்கள்.

கதைசொல்லிகள் ஏதோ ஒரு உத்தியைக் கடைப் பிடிக்க வேண்டும். அது மிகச் சாதாரணமாகக் கூட இருக்கலாம். ஒரு கேள்வியைக் கேட்டுக் கூட கதை தொடங்கலாம்.

‘குழந்தைகளே, காட்டுக்கு ராஜா யார்?’ என்று கதை சொல்லி கேள்வி கேட்டுத் தொடங்குகிறார்.

குழந்தைகள் சிங்கம் என்று பதில் சொல் கிறார்கள். குழந்தைகளுக்குப் பதில் தெரியாத நிலையில்கூட கதைசொல்லியே பதில் சொல்லித் தொடரலாம். இவ்வாறு ‘பேசும் குகை’ கதையை கேள்வி- பதில் முறையில் சொல்வது குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரிக்க உதவுகிறது.

கதை சொல்வதற்கு முன் கதை சொல்லி குழந்தை களின் கவனத்தைக் கவரப் பல்வேறு விநோத ஒலி களை எழுப்பலாம். ஒன்றுமில்லையா! கை தட்டக் கூட செய்யலாம். அமெரிக்கா நூலகத்தில் நான் பார்த்த ஒரு கதை கூறல் நிகழ்ச்சியில் கதை சொல்லி ஒரு மேசை மறைவில் ஒளிந்துகொண்டு வண்ண வண்ண சோப்பு குமிழ்களை ஊதி ஊதிப் பறக்க விட்டுப் பிறகு மேசை மறைவிற்கு வெளியே முதலில் கைகளையும் பிறகு கால்களையும் காட்டு கிறார். குழந்தைகள் திகைப்புடன் பார்க்கிறார்கள். பிறகு கதை சொல்லி தன் முகத்தைக் காட்டுகிறார். பிறகு ஆடிக்கொண்டே குழந்தைகளின் முன் வரு கிறார். அவருடைய மேசையில் அன்று சொல்லி யிருக்கும் கதாபாத்திரங்கள் பொம்மைகளாக இருக்கின்றன. ஒரு திரைமறைவில் பொம்மைகளை தன் விரல்களால் இயக்கிக் காட்டிக்கொண்டே கதை சொல்லுகிறார். குழந்தைகள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே கதை கேட் கிறார்கள். கதை சொல்லி முடிந்த பின் குழந்தைகள் அவரை ஆவலுடன் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். அன்று அந்தக் கதை சொல்லி தனது பணியில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன்.

கேட்கும் கதையைக் குழந்தைகள் தங்களுக்குள் கற்பனையாகக் காண வேண்டும். அந்தக் கற்பனை குழந்தைக்குக் குழந்தை வேறுபடக்கூடும். வேறுபட வேண்டும். (The Power of Story telling is in helping children become so involved that they use their own to visualize the story for themselves)

குழந்தை இலக்கியத்தில் கதைசொல்லிகள் கதைகளுக்குப் புதிய வாழ்வைத் தருகிறார்கள். தலை முறை தலைமுறையாகக் கதைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாடோடிக் கதையான சிண்டர்லா இன்றும் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் கதைசொல்லிகளே காரணம். கிழக்காசியாவில் பிறந்த காகமும் நரியும் கதை ‘பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள். ஒரு காகம் திருடிக் கொண்டு போனது’ என்று நம் மண்ணின் கதையாக மாற்றப்பட்டுச் சொல்லப் பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம் நம் கதை சொல்லிகள்தான்.

தமிழ் குழந்தை இலக்கியச் சூழலில் முன்பு இயல்பாக, வளமாக இருந்த கதை சொல்லும் நிகழ்வுகள் இன்று அருகிக் காணப்படுகின்றன. தமிழ் குழந்தை இலக்கிய வளர்ச்சி வீறு கொண்டு வளருவதற்குக் கதை சொல்லிகள் நமக்குத் தேவை. உள்ளூரிலே நமது அக்காக்களும் அண்ணன்களும் திறமையான கதை சொல்லிகளாக இருக்கிறார்கள். அவர்களைப் பயிற்றுவித்து தொழில்ரீதியாகக் கதை சொல்லிகளாக நூலகங்களில் பயன்படுத்தும் காலம் வரவேண்டும். அது தமிழ் குழந்தை இலக்கிய மறுமலர்ச்சிக்கு உத்வேகத்தைத் தரும்.Ÿ

Pin It