அரசன் எவ்வழி - குடிகள் அவ்வழி என்னும் நிலையிலிருந்து குடிகள் எவ்வழி - அரசு அவ்வழி என்னும் நிலை மாற்றத்தில் குடிமக்கள் படும் அவதிகள் இத்தலையங்கத்தில் எடுத்துச்சொல்லப்படுகின்றன.

அம்பும், வேலும், வாளும் எடுத்துப் போரிட்ட இனக் குழுக் காட்டுமிராண்டி நிலையிலிருந்து அணுகுண்டு பயன்பாடு வரை மானுட சமுதாயம் வளர்ச்சி கண்டது.

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்னும் கொள்கைக்கு முடிவு கட்டி மக்களாட்சியை மனித சக்தி உருவாக்கியது. இவ்வரலாற்றுப் போக்கில் அரியணைகள் சாய்ந்தன. அரசுகள் வீழ்ந்தன. மணிமகுடங்கள் கவிழ்ந்தன. புரட்சி வெடித்து இரத்த ஆறு வழிந்தோடிற்று. இந்த மாற்றத்துக்காகப் பல இலட்சம் மக்கள் இன்னுயிரீந்தனர். குடியாட்சி மலர்ந்தது. “குடிமக்கள் சொன்னபடி குடிமை நீதி” என்று பாரதி பாடிய சமூகம் மலர்ந்தது.

அடிமைச் சமுதாயம், நிலமானிய சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் என்னும் வர்க்க வேற்றுமை சமுதாயங்களைக் கடந்து ஏற்றத்தாழ்வற்றதொரு சமத்துவ சோஷலிச சமுதாயம் காணவேண்டும் என்னும் மனித குலத்தின் இலட்சியத்துக்கு இன்று சோதனை.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் காலனி நாடுகளில் எழுந்த சுதந்திரப் போராட்டங்களும் சோஷலிசத்தையே இலட்சியமாகக் கொண்டன. ஆனால் இந்த இலட்சியத்தை நாடிச் சென்றடைவதற்கு இன்று எத்தனை எதிர்ப்புகள் - இடர்ப்பாடுகள்! சொல்லி முடியா.

கடந்த நியூ செஞ்சுரியின் “உங்கள் நூலகம்” மாத இதழ் தலையங்கத்தில் பத்தொன்பதாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் சம்பந்தமாக நடைபெற்ற குழறுபடிகள், முறைகேடுகள், ஊழல்கள் பற்றி எழுதியிருந்தோம். இன்று அவை பலதுறைகளை ஊடுருவி அலைமோதிப் பாய்ந்து நிற்கின்றன எனச் செய்திகள் வருகின்றன. இது பற்றி விசாரணை நடைபெறுவதாகவும் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய விளையாட்டு வீரர்களை உங்கள் நூலகம் மனமாரப் பாராட்டுகிறது. இவர்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்த நல்லவர்கள். ஆனால் இந்திய நாட்டில் முதலாளித்துவம் வளரும் போது அதன் உடன்பிறப்பாக விளைவன இத்தகைய தீங்குகள் எனவும் சுட்டிக்காட்டினோம். அதேபோது இந்த ஊழல் உலகமயமானது, அதாவது பல நாடுகளோடு தொடர்புடையது என்னும் உண்மை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

இமயம் முதல் குமரி வரை ஊழல்களும் முறை கேடுகளும் வரம்புமீறல்களும் நிரம்பி வழிகின்றன. ஊழலும் வன்கொடுமைகளும் தாண்டவமாடுவது பற்றிய செய்திகளை ஊடகங்கள் தாங்கி வருகின்றன. மணல் முதல் வீடுகட்டும் கட்டுமானப் பொருள்கள் கிரானைட் சிமெண்ட், செங்கல், உணவுப் பொருட்கள், காய்கறிகள் விற்பனை வரை வஞ்சகம், சூழ்ச்சி நிரம்பிய வாணிபம் ஆட்சி செலுத்துவது காணலாம். தரிசு நிலங்களும், புறம்போக்கு நிலங்களும் அதிகாரவர்க்கத்தினாலும் செல்வாக்குப் பெற்ற அரசியல் வாதிகளாலும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. உண்மையான நில, மனை உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். குடிப்பதற்கும் வேளாண்மை செய்வதற்கும் நீர் இல்லை. நீர் அரிய விலை பொருளாகிவிட்டது.

காவல்துறை அதிகாரி ஒருவர் தம் தோட்டத்திலேயே கஞ்சா பயிரிட்டதாகப் பத்திரிகைச் செய்தி வருகிறது. வேலியே பயிரை மேய்கிறது.

சுயமரியாதை இயக்கம் வலுப்பெற்ற காலத்தில் எந்த மூடப்பழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போகவேண்டும் என்று எதிர்த்துப் பிரச்சாரம் செய்து மக்களைப் பகுத்தறிவாளர்களாக ஆக்கவேண்டும் என்று முனைந்ததோ, அதே பகுத்தறிவு இயக்கம் சார்ந்த வாரிசுகளும், சினிமா கதாசிரியர்களும், படப்பிடிப்பாளர்களும், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்களில் பலரும் முன்னிருந்ததைவிடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவற்றை மீட்டெடுக்க முனைவதும், எதார்த்தம் எனச் சொல்லி மூடப்பழக்கவழக்கங்களை உரிமை கொண்டாடுவதும் வியப்பூட்டுகின்றன.

மக்களை மடமை, அறியாமை, இருண்மை என்னும் அவலங்களிலிருந்து மீட்டு அறிவியல்வழி நிற்க முயற்சி மேற்கொள்ள வேண்டிய ஊடகங்களின் பணம் குவிக்கும் பாங்கு இது.

இமயம் முதல் குமரி வரை ஆட்சி நடத்தும் எந்த அரசும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் முறைகேடுகளுக்கும் விதிவிலக்கில்லை. இடதுசாரி அரசுகளை ஓரளவு விலக்கு என்று சொல்லலாம். பீகார், உத்தரப்பிரதேசம், ஒரிசா மாநிலங்களில் நடந்த ஊழல்கள் நாறி நாற்றம் எடுக்கின்றன. கார்கில் போரில் உயிர்நீத்த போர்வீரர்களின் குடும்பங்கள் வாழ மும்பையில் எழுப்பப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்புக் கட்டடங்கள் அனுமதியின்றி எழுப்பப்பட்டுள்ளனவா? என்னும் வினா எழுந்துள்ளது. கார்கில் போரில் மடிந்த வீரர்கள் குடும்பங்கள் ஓரிரண்டு தவிர பிற வீடுகள் எல்லாம் பணியிலிருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் மகாராஷ்டிர முதல் அமைச்சர் உறவினர்களுக்கும் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளன என்னும் செய்தி நாட்டையே உலுக்கி வருகிறது.

கர்நாடகத்தில் சுரங்க முதலாளிகள் ரெட்டி சகோதரர்களின் அட்டூழியங்களும் அவற்றுக்குத் துணைபோகும் பா.ஜ.க. அரசின் முறையற்ற செயல்பாடுகளும் அவற்றால் எழுந்த நிலையற்ற தன்மையும், குதிரை பேரங்களும் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அமைதிப் பூங்காவென உரிமை கொண்டாடப்படும் தமிழகத்தின் நிலை கவலை தருகிறது. வயோதிகர்கள் தாம் வாழும் வீடுகளில் அவர்கள் கொலை செய்யப்பட்டு நகை, பணம் சொத்து கொள்ளையடிக்கப்படுதல், இளம் மாணவிகள் கடத்தப்பட்டுக் கற்பழித்துக் கொலை செய்யப்படுதல், பணம் பறிக்கக் குழந்தைகளைக் கடத்துதல், அரசியல்வாதிகளை மிரட்டுதல், கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் கொலை செய்தல், மிரட்டுதல், தெருக்கள் தோறும் கட்டப் பஞ்சாயத்துக்கள் அரங்கேற்றப்படுதல் என்பனவெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டன. அரசியல்வாதிகளுக்கு நாட்டைக் காக்கும் காவலாளிகளே எடுபிடிகளாக மாறிக் குற்றவேல் செய்யும் வேலைக்காரர்களாக மாற்றப்பட்டுவிட்ட அவலநிலையைச் செய்தித்தாள்கள் காட்டுகின்றன. அரசு தேர்வாணையம் தேர்வுகள் நடத்திப் பணிகளில் அமர்த்தும் வேலைகளை இன்று அமைச்சர்கள் செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகம் சார்ந்த மத்தியத் தொலைத்தொடர்பு அமைச்சர் ஊழலுக்குக் காரணமானவர் என்று ஊடகச் செய்திகள் வலுவாகத் தெரிவிக்கின்றன. தொலைத்தொடர்பு ஊழியர் சங்கங்களும் இந்த ஊழலை உரிய காலத்தில் அம்பலப்படுத்தித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தன. ஆயினும் இந்திய ஜனநாயக அரசு சட்டைசெய்யவில்லை; விரலசைக்கவில்லை. நடுவண் அரசு தணிக்கைக் குழு இந்தக் குற்றச்சாட்டு உண்மையே என்பதனை இன்று உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றம் அரசு மற்றும் புலனாய்வுத்துறையின் மெத்தனத்தைச் சாடியுள்ளது.

இந்தப் பின்புலத்தில் மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் குற்றங்கள் குறைவு எனப் புள்ளிவிவரங்கள் தந்து மாற்றார் வாய் அடைப்பது நீண்ட காலத்துக்குப் பயன் தராது. அந்நிய நாட்டு முதலாளிகள் தமிழகம் வந்து தொழில் தொடங்குகிறார்கள் என்பது வரவேற்றுப் பாராட்டத்தக்க சாதனையே. அதேபோது தனியார் ஆதாயம் பெறுவது கூடாது. இவற்றையெல்லாம் நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் எடுத்துச் சொல்வதற்கு மனம் கூசுகிறது. ஒழுக்கம் விழுப்பம் தரலான். தமிழ்நாட்டு மக்களின் ஒழுக்கம் பற்றியும் நேர்மையான எதிர்காலம் பற்றியும் உள்ள அக்கறையோடு இதை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளது நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்.

தனியார் பள்ளிகள் பற்றிக் கடந்த இதழ் தலையங்கம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம். நீதிபதி கோவிந்தராஜன் யாது காரணத்துக்காகவோ விலகிவிட்டார். அதற்குப் பதிலாக நீதிபதி ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். காரணம் எதுவாயினும் தனியார் நடத்தும் பள்ளிகளில் சீரழிவுகள் நடந்தே தீரும். பள்ளிகளை அரசே எடுத்து நடத்த வேண்டும் எனவும் மக்களுக்குக் கல்வி நல்குதல் அரசு கடமை என்பதனையும் வலியுறுத்தினோம். இடைப்பட்ட காலத்தில் தனியார் நடத்தும் பள்ளிகளுக்கு ஒரு சிறு பங்காவது ஆசிரியர்களுக்குத் தரும் ஊதியத்திற்காகவாவது மானியம் வழங்கிப் பள்ளிகளை அரசு தம்வயப்படுத்தி முதற்படியாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகிகளால் வஞ்சிக்கப் படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், தரமான கல்வி தருவதற்கு ஆசிரியர்களுக்குத் தெம்பூட்டுவதற்காகவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். படிப்படியாக சில ஆண்டுகளில் மிகச் சாதாரணமான பட்டக் கல்வி வழங்கும் கல்விச்சாலைகள் முதல் தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் வரை அரசு செல்வாக்கின் கீழ் வரும். கல்வி வழங்குவது என்பது அரசின் முதற் கடமையாக இருக்க வேண்டும்.

சோஷலிசம் என்னும் இலட்சியத்தை அடைவதற்கு நெடுங்காலமாகும். இடைப்பட்ட காலத்தில் இப்பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு, அறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் கொள்கைவழி நிற்பது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. இது உண்மை யென்றால் பெயரளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் இக்கொள்கை உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என நியூ செஞ்சுரியின் “உங்கள் நூலகம்” மாநில அரசைப் பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறது.

Pin It