Gunnel Cederlof (1997): Bonds Lost (கட்டவிழ்ந்த தளைகள்) MANOHAR, NEW DELHI

வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தமிழகக் கிராமங்களில் ஆதிக்க வகுப்பினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் என்ற இரு முரண்பட்ட பிரிவுகள் உள்ளன. இவ்விரு பிரிவினருக்கும் இடையே ஆழமான சமூக வேறுபாடு நிலவுகிறது. இவ்வேறுபாட்டிற்கு அடிப்படைக் காரணமாக அமைபவை நிலங்களின் மீதான உரிமையும் சாதியும்தான். இவை இரண்டும் இணைந்தே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அவலம் இன்று உருவாகியுள்ளது. 

பொருளியல் ஆதிக்கமும் சாதிய ஆதிக்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செயல்படுகின்றன. எனவே தமிழ் நாட்டுக் கிராமப்புறங்கள் குறித்த சமூகவியல் மற்றும் வரலாற்று ஆய்வியல் இவை இரண்டையும் இணைத்து ஆய்வு செய்வது தவிர்க்க இயலாத ஒன்று.  அரசியல் அதிகாரம் தொடர்பான ஆய்விலும் இவற்றைப் பிரித்துப் பார்க்க இயலாது.

கொங்குப் பகுதியின் நில உடைமையாளர்களான கவுண்டர்களுக்கும், ‘மாதாரியர்’ என்ற பெயரில் அழைக்கப்படும் அருந்ததியர்களுக்கும் இடையில் சென்ற நூற்றாண்டில் (1900-1970) நிலவிய சமூக உறவு குறித்தும், அதில் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்தும் ஆராயும் இந்நூல், பொருளியல் வாழ் வையும், சாதியப் பாகுபாட்டையும் இணைத்தே ஆய்வு செய்துள்ளது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த கன்னல் என்ற பெண்மணி,களஆய்வு மேற்கொண்டும்,பல நூல்கள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தியும் இந்நூலை 1997இல் எழுதியுள்ளார்.  பல்லடம், திருப்பூர் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்கள் அவரது ஆய்வுக்களமாகவும், 1900 தொடங்கி 1970வரையிலான காலம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலமாகவும் அமைந்துள்ளன.

கவுண்டர்,மாதாரியர் என்ற இரு சாதி யினருக்கும் இடையிலான சமூக உறவு என்பது வேளாண்மையை மையமாகக் கொண்டிருந்தது.  கவுண்டர்கள் நிலஉடைமையாளர்களாகவும், மாதாரியர் அவர்களின் பண்ணையாட்களாகவும் விளங்கியுள்ளனர். பயிர் செய்வதற்கு அடிப்படைத் தேவையான தண்ணீரைப் பெற்றமுறை, அதைப் பெறப் பயன்படுத்திய கருவி, பயிரிடப்பட்டபயிர்,இவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள்,இவ்விரு சமூகத் தினருக்குமிடையிலான உறவில் இவை ஏற்படுத்திய தாக்கம் என்பன இந்நூலின் அடிப்படைச் செய்திகளாக அமைந்துள்ளன.

கவுண்டர்

ஆய்வுக்களத்தில் பெருமளவிலான நிலங்கள் கவுண்டர்கள் அல்லது நாயுடு சமூகத்தினருக்கு உரிமையாய் இருந்தன. நிலவுடைமையாளர்கள் பண்ணாடி என்றழைக்கப்பட்டனர். ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டும் உரிமையாகக் கொண்டிருந்தோர் வேளாண் தொழிலாளிகளாகப் பணியாற்றினர்.

கவுண்டர்களில் ஒரு பிரிவினர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்;நூற்றுக்கணக்கில் கால்நடைகளை வளர்த்து அவற்றை இனப்பெருக்கம் செய்து, ஆதாயமடைந்து வந்தனர்.

மாதாரியர்

‘அருந்ததியர்’, ‘சக்கிலியர்’ என்ற பெயர்களில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அழைக்கப்படும் சாதியினரே மாதாரியர் என,கொங்குப் பகுதியில் அழைக்கப்படுகின்றனர். ஊரின் புறத்தே சேரி அல்லது வளவு என்றழைக்கப்படும் பகுதியில் இவர்களது குடியிருப்பு அமைந்திருந்தது.

இவர்கள் கவுண்டர்களிடம் மூன்று வகையான பணிகளைச் செய்துவந்துள்ளனர்.  முதலாவதாக,கவுண்டர்களின்கால்நடைகளைப்பராமரிப்பது.இரண்டாவதாக, பயிர்த்தொழிலில் துணைபுரிவது.  மூன்றாவதாக, தோல் தொழில் மேற்கொள்ளுவது.

இவை தவிர,வேறு சில பணிகளும் இவர்கள் மேல் சுமத்தப்பட்டிருந்தன. இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்துவதும்,அவற்றின் தோலால் செருப்புத் தைத்து,தாம் பணிபுரியும் நிலவுடைமையாளருக்குத் தருவதும் இவர்களது கடமையாக விதிக்கப் பட்டிருந்தது. தாம் பணிபுரியும் கவுண்டர் வீட்டில் இறப்பு நேர்ந்தால் இறப்புச் செய்தியை அவரது உறவினர் வாழும் ஊர்களுக்குச் சென்று தெரிவிப் பதும் இவர்களது பணியாகும்.

மேலும் ‘உரிமை’ என்ற பெயரில், கோவில் ஊர்வலங்களின் போது, தோல் கருவிகளை இசைப் பதும் இவர்களது சமூகக் கடமையாக இருந்தது. கிழடு தட்டிய மாடுகளை கவுண்டர்களிடமிருந்து இவர்கள் விலைக்கு வாங்கி இறைச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.

கவுண்டர்களின் நிலங்களுக்குக் கிணற்றில் இருந்து கவலையின் உதவியால் தண்ணீர் இறைத்தல், கவலைக்கான தோல் பறி செய்தல், கால்நடை மேய்த்தல் என்பன மாதாரியரின் வாழ்வாதாரமாக விளங்கின.

பண்ணைஆள்

கவுண்டர்களிடம் முன்பணம் வாங்கிக் கொண்டு அவர்களது பண்ணையில் பணிபுரியும் மாதாரியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் பண்ணையாள் அல்லது பண்ணையத்தாள் என்றழைக்கப்பட்டனர்.  வாங்கிய முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், தாம் பணிபுரியும் பண்ணையை விட்டுப் பண்ணையாள் செல்ல முடியாது.

மாதம் தோறும் சோளம்,ராகி ஆகிய தானியங்கள் ஊதியமாகப் பண்ணையாளுக்கு வழங்கப்படும். அத்துடன் மாமூல் என்ற பெயரில் அறுவடையின் போது பண்ணையாளின் பங்காகத் தானியம் வழங்குவர். இவ்ஊதிய முறையானது தம் உணவுத் தேவைக்காகப் பண்ணாடியைச் சார்ந்தே பண்ணை யாள் வாழும்படி செய்தது.

மாதாரிகளைப் போன்று தோல்தொழில் செய்யத் தெரியாததால் நிலமற்ற கவுண்டர்களைப் பண்ணையாளாக வைத்துக்கொள்ள நிலக்கிழார்கள் விரும்புவதில்லை; மாதாரியர்களையே பண்ணை யாளாக வைத்துக்கொள்ள விரும்பினர். ஒரு பண்ணையாள் பத்து ஏக்கர் அளவு நிலத்தைக் கவனித்துக் கொள்வார்.

கவலையும் பறியும்

மின்சாரத்தால் இயங்கும் நீர் இறவை யந்திரம் அறிமுகமாகும் முன்னர் வேளாண்மைத் தொழிலுக்குத் தேவைப்படும் அதிக அளவிலான தண்ணீரைக் கிணறுகளில் இருந்து இறைக்கப் பயன்பட்ட கருவி ‘கவலை’ (கமலை) ஆகும்.

இரண்டு மாடுகளின் துணையுடன் கவலை அல்லது கமலையால் நீர் இறைப்பர். ஒரு மணிக்கு இரண்டாயிரம் கேலன் அல்லது 9092லிட்டர் தண்ணீரை, கவலையைப் பயன்படுத்தி இறைக்க முடியும்.

இதை நம் பாரம்பரியத் தொழில்நுட்பத்தின் அடையாளம் எனலாம். கிணற்றினுள் நீரை முகக்கவாய் அகன்ற அண்டா போன்ற அமைப்புடைய கலன் பயன்பட்டது. இது உலோகம் (பெரும்பாலும் துத்தநாகத் தகடு) அல்லது தோலால் செய்யப்பட்டிருந்தது. இதுவே ‘பறி’ என்று கொங்குப் பகுதி யிலும், ‘கூனை’ என்று தென்மாவட்டங்களிலும் அழைக்கப்பட்டது.  தோலால் ஆன பறியே கொங்குப் பகுதியில் பரவலாக வழக்கில் இருந்துள்ளது.

பறியின் அடிப்பகுதியானது வாய்ப்பகுதியைவிடச் சிறிய அளவிலான துவாரத்தைக் கொண்டிருக்கும். இதன் வழியாகவே பறியிலுள்ள நீர் வெளியேறும். நீருடன் கிணற்றில் இருந்து மேலே வரும் பறியில் உள்ள தண்ணீர் கிணற்றுள் விழுவதைத் தவிர்க்கவும், கிணற்றின் தொட்டியில் அது முழுமையாக விழவும் ‘தும்பி’என்ற பெயரிலான தோலால் செய்யப்பட்ட உறுப்பு பறியின் அடிப்பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும்.  தென்மாவட்டங்களில் இதை வால் என்பர். இதன் வாய்ப்பகுதியும் அடிப்பகுதியும் மேலும் கீழும் தைக்கப்படாத நீண்ட பை போன்று இருக்கும்.

தண்ணீருடன் கூடிய பறியைக் கவலை மாடுகள் உயரே இழுக்கும்போது தும்பியின் வழியாக நீர் கொட்டுவதைத் தடுக்க அதன் அடிப்பகுதியின் இரு முனைகளிலும் கயிறு கட்டுவர். இக்கயிறு தும்பி மேலே வந்தவுடன் தளரும் வகையிலும் கிணற்றிலிருந்து மேலே வரும்போது தும்பியின் அடிப் பகுதியை இறுக்கும் வகையிலும் கட்டப்பட்டிருக்கும்.

இக்கயிறு ‘தும்பிக்கயிறு’என்று கொங்கு வட்டாரத்திலும்,‘வாலக்கயிறு’என்று தென்மாவட்டங்களிலும் அழைக்கப்படும். இக்கயிறு கட்ட தும்பியின் அடிப்பகுதியின் இரு முனைகளிலும் துவாரம் இருக்கும்.  இது தும்பிக்காது எனப்படும்.

தோலால் ஆன பறியில்,அதன் அடிப்பகுதியுடன் தும்பியானது இணைத்துத் தைக்கப்பட்டிருக்கும். இதனால் உலோகத்தாலான பறியில் தும்பியை இணைத்துக் கட்டுவதுபோல் கட்டவேண்டிய அவசியமில்லை. தொடர்ச்சியாகப் பறியைப் பயன் படுத்துவதால், பறியிலும், தும்பியிலும் சிறு பொத்தல்கள் ஏற்படுவதுண்டு. இவற்றின் வாயிலாக நீர் சிந்தி வீணாவதைத் தடுக்க, ‘பற்றாசு’ என்ற பெயரிலான துண்டுத்தோல்களைப் பயன் படுத்தித் தைப்பது அவசியமான ஒன்றாகும்.

கவலையின் முக்கிய உறுப்புகளான பறியும் தும்பியும் தோலால் செய்யப்படுவதால் இவற்றை உருவாக்குவதிலும் பழுதுபார்ப்பதிலும் தோல் தொழிலாளர்களான மாதாரியரின் பணி தவிர்க்க முடியாத ஒன்றாகும். பறி தொடர்பான தொழில் நுட்பத்தில் இவர்கள் மட்டுமே வல்லவர்களாய் இருந்தனர். இதனால் கவுண்டர்கள் மாதாரியர் உறவில் ஒரு முக்கிய கண்ணியாகப் பறி விளங்கியது.

பருத்தி

பணப்பயிரான பருத்தியை உள்நாட்டுத் தேவைக்காக மட்டுமே தமிழ்நாட்டில் பயிரிட்டு வந்தனர். உணவுத் தானியம் பயிரிடுதலே முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆங்கில ஆட்சியின் விளைவால் ஏற்றுமதிப்பொருளாகவும், உள்நாட்டு நூற்பாலைக் கான கச்சாப் பொருளாகவும் பருத்தி மாறியது.

பருத்தி உற்பத்தியில் ஆங்கில அரசு ஆர்வம் காட்டியது. அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது வழக்கமான அளவில் அங்கிருந்து நெட்டை இழைப் பருத்தியை இங்கிலாந்தால் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதை ஈடுகட்ட இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை அதிகரித்தது.

தமிழ்நாட்டில் கரிசல் நிலப்பகுதிகள் ‘வானம் பார்த்த பூமி’  என்றழைக்கப்பட்டன.  மழையை நம்பியே இப்பகுதிகளில் புன்செய்த் தானியங்கள்,பயறு வகைகள்,பருத்தி ஆகியன பயிரிடப்பட்டு வந்தன. இப்பயிர்கள் நேரடிப் பாசன முறை இன்றியே பயிரிடப்பட்டன.  இப்பகுதியில் விளைந்த பருத்தி,குட்டை இழைப் பருத்தியாகும். அமெரிக்கப் பருத்திக்கு இணையாக இது அமையவில்லை.

நெட்டை இழைப்பருத்தியான ‘கம்போடியாப் பருத்தியைப் பயிரிட ஆங்கில அரசு ஊக்கமளித்தது. இதனால் வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரும் தன்மைகொண்ட சோளம், கம்பு,ராகி ஆகிய உணவுத் தானியங்களைப் பயிரிடும் பரப்பளவு 63ரூ இல் இருந்து 50ரூ ஆகக் குறைந்தது. சில பகுதிகளில் புன்செய்த் தானியம் பயிரிடுதல் மறையத் தொடங்கியது.  பருத்தி பயிரிடும் பரப்பளவு அதிகரித்தது.

கம்போடியாப் பருத்திக்கு நீர்த்தேவை அதிகம் என்பதால் கிணறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.  கிணறுகள் எண்ணிக்கை கூட, பறியின் தேவையும் கூடியது.

கம்போடியாப் பருத்தி பயிரிடத் தொடங்கிய பின் அப்பருத்தி இந்தியாவின் பல பகுதிகளுக்கு - குறிப்பாக, மும்பை ஆலைகளுக்கு ஏற்றுமதியாகத் தொடங்கியது.  பருத்தியைக் கொள்முதல் செய்ய வட இந்திய வணிகர்கள் இப்பகுதிக்கு வரத் தொடங்கினர்.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சைதாப் பேட்டையில் 1876இல் இருந்து இயங்கிவந்த மாதிரி வேளாண் பண்ணை,1909-இல் வேளாண் கல்லூரியாக,கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்தது.

பருத்தி உற்பத்தியின் அதிகரிப்பானது,பருத்தி அரவை ஆலைகளும் (ஜின்னிங் ஃபாக்டரி) துணி ஆலைகளும் உருவாகக் காரணமாக இருந்தது. 1888இல் அய்ரோப்பியர்களுக்கு உரிமையான இரண்டு ஆலைகள் இருந்த நிலைமாறி 1920இல் அய்ந்து ஆலைகளும் அடுத்த 20 ஆண்டுகளில் 36 ஆலைகளும் கொங்குப் பகுதியில் உருவாயின.  பருத்தி அரவை ஆலைகளின் எண்ணிக்கை 149 ஆகியது.  பேக்கர் என்பவரது கருத்துப்படி,  இந்தியாவிலேயே குறைந்த ஊதியம், இப்பகுதி ஆலைத் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டது.

ஆலைகளின் மூலப்பொருளாகவும், பரந்து பட்ட சந்தைப் பொருளாகவும் பருத்தி மாறியதால் அதன் உற்பத்தி அதிகரித்ததுடன்,நீர்ப்பாசனத் தேவையும் அதிகரித்தது. இத்தேவையை, பழைய ‘கவலை’தொழில்நுட்பத்தால் முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை.  இத்தகைய சூழலில் மின் சாரத்தால் இயங்கும் நீர் இறைக்கும் கருவி அறிமுகமானது.

மின்சார இறவை எந்திரம்

1929 செப்டம்பரில் பைக்காரா நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்கு அன்றைய சென்னை அரசு அனுமதி வழங்கியது.  1930 இல் முதல் ஜெனரேட்டர் செயல் பட்டது.  பெரிய அளவிலான மின்திட்டம் என்பதால் நுகர்வோர்களின் தேவையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருந்தது.

இதனால்,வேளாண்மையின் பயன்பாட்டுக்காக 1930இன் தொடக்கத்தில் கிராமப்புறங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. 1940இல் தொலைதூரக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படலாயிற்று.

கோவை நகரில் உள்ள தொழிற்சாலைகள், மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தி வந்த பழைய இயந்திரங்களைக் கைவிட்டு மின்சாரத்திற்குமாற ஆயத்தமாகவில்லை. இத்தகைய நிலையில் வேளாண்மையில் மின்சாரப் பயன்பாட்டை ஆங்கில அரசு ஊக்குவித்தது.  மக்கள் கூடும் சந்தைகளில் மின்சார மோட்டார்களைக் குறித்த செயல்முறை விளக்கங் களை நிகழ்த்திக் காட்டியது. ஒரு கவலை 9,092லிட்டர் நீரை ஒரு மணி நேர அளவில் வெளியேற்ற 11/2குதிரை ஆற்றல் கொண்ட மின்சார எந்திரம் 13,638லிட்டர் நீரை வெறியேற்றியது.

மாடுகள், மாட்டுத்தீவனம், மரம், இரும்பு ஆகியன இரண்டாம் உலக யுத்தகாலத்தில் விலை உயர்ந்ததன் அடிப்படையில் கவலையைப் பரா மரிப்பது செலவு கூடியதாக இருந்தது.  இதனால் மின்சாரத்தால் இயங்கும் நீர் இறைக்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்து, கவலையின் பயன்பாடு படிப்படியாகக் குறையத் தொடங்கியது.  இம் மாறுதல் மாதாரியரின் வாழ்வாதாரத்தைப் பாதித்ததுடன்,கால்நடைகளின் பயன்பாட்டையும் குறைத்து மாதாரியர் இறைச்சி ஆதாரத்தையும் அழித்தது.

வறட்சியும் அதன் பாதிப்புகளும்

வழக்கமான மழை பொய்த்துப் போனமையால் 1947 முதல் 1953 வரையிலான காலத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது.  தானியப் பற்றாக் குறை, தானியக் கடத்தல், கள்ளச்சந்தை என்பன வறட்சியின் தாக்கத்தால் உருவாயின.

வேளாண் தொழிலாளர்கள் நகரங்களுக்கும் மலைத் தோட்டங்களுக்கும் இடம்பெயர்ந்தனர்.  தானியங்களாகக் கூலி வழங்க முடியாததால் கிராமப் புறங்களில் பண வடிவில் ஊதியம் வழங்கும் வழக்கம் அறிமுகமானது.

மழைபெய்து வறட்சி நீங்கியதும் பண்ணை யாட்களான மாதாரிகள் தம் கிராமங்களுக்குத் திரும்பினர்.  அவர்களில் சிறு பகுதியினரே மீண்டும் பண்ணையாட்களாக அமர்த்தப்பட்டனர்.  பெரும்பாலோர் நாள் ஊதியக்காரர்களாக மாறினர். பெரிய அளவிலான நிலங்களின் உரிமையாளர்கள் சிலர் மட்டுமே பண்ணையாள் முறையைப் பின் பற்றினர். விவசாயத் தொழிலாளர் சிலர் தானிய மாகவே ஊதியம் பெற விரும்பினாலும்,  பண வடிவில் ஊதியம் வழங்கவே நில உரிமையாளர்கள் விரும்பினர்.

கவுண்டர்கள் வீட்டிற்குச் சென்று, அன்று வேலை உள்ளதா? என்று வினவுவதை மாதாரியர் தவிர்த்தனர்.  வீட்டிற்கு வெளியில் கவுண்டரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.  கவுண்டர் வந்து அழைக்கும்போது அதிக ஊதியத்திற்குப் பேரம் பேசும் சக்தி இதனால் உருவானது.  வறட்சியின் போது வெளியூர் சென்று வாழ்ந்து திரும்பியவர்கள் பணவடிவில் ஊதியம் பெறும் நாள் வேலையையே விரும்பினர். 

எனவே இவ்வேலைக்கான ஊதியம் தானிய வடிவில் அல்லாமல் பணமாகவே வழங்கப் பட்டது. பண்ணையாட்களாகப் பணிபுரிந்த ஒரு சிலர் மட்டுமே தானிய வடிவில் ஊதியம் பெற்றனர்.தான் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பணமாக ஊதியம் பெறும் இப்புதிய முறை,பண்ணையாள் முறையை மறையச் செய்யலாயிற்று. இது வறட்சி தந்த நன்மை எனலாம்.

கவுண்டர்- மாதாரியர் உறவில் மாற்றம்

‘பண்ணையாள்’, ‘பண்ணையத்தாள்’, ‘ஆளுக் காரன்’ என்ற பெயர்களில் கவுண்டர்களின் நிலங் களுடனும் கால்நடைகளுடனும் பிணைக்கப் பட்டிருந்த மாதாரியர்கள் அப்பிணைப்பிலிருந்து படிப்படியாக விடுபட்டனர்.  தம் உழைப்பைச் செலுத்தி அதற்கு ஈடாக நாள் ஊதியம் பெறும் உழைப்பாளி என்ற நிலைக்கு மாதாரியர்களும்,அவர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலவுடைமை யாளர்கள் என்ற நிலைக்குக் கவுண்டர்களும் மாறினர்.

பண்ணையாள் என்ற சொல் அதன் முந்தைய பொருளைவிட்டு விலகி நின்றது. இதற்கு அடிப் படைக் காரணமாக அமைந்தனவற்றைப் பின்வரு மாறு தொகுத்துரைக்கலாம்.

* கம்போடியாப் பருத்தியின் அறிமுகமும் அதைப் பயிரிடும் பரப்பு அதிகரித்தமையும்.

* இப்பருத்திக்கு அதிக அளவில் நீர் தேவைப் பட்டமை.

* நீரை வழங்க, கிணறு, கவலை, பறி ஆகியன அதிகரித்தமை.

* இதன் அடுத்தகட்டமாக மின்சார மோட்டார் அறிமுகமானமை.

* மின்சார மோட்டாரின் அறிமுகத்தால் கவலையும், பறியும் பயன்பாடு ஒழிந்தமை.

* கவலையின் பயன்பாடு குறைந்தமையால் கால்நடைகளின் எண்ணிக்கை குறைதல்.

* இதனால்இறைச்சியுணவு மாதாரியருக்குக் கிட்டாமை. அவர்களின் பணி கவுண்டர்களுக்குத் தேவைப்படாமை.

* தொடர்ச்சியான வறட்சியும், மாதாரியரின் இடப்பெயர்ச்சியும்.

* தானிய வடிவில் வழங்கப்பட்டுவந்த ஊதியம் பணவடிவில் வழங்கப்படல்.  அடுத்தடுத்து நடந்த இந்நிகழ்வுகள்,பண்ணையாள் என்ற பெயரில் கவுண்டர்களைச் சார்ந்து நின்ற அருந்ததியினரை, தன்னுரிமை பெற்ற வேளாண் தொழிலாளர்களாக மாற்றின.

உற்பத்திப்பொருள் -உற்பத்திக் கருவி -உற்பத்தி உறவு என்ற மூன்றிலும்,படிப்படியாக நிகழ்ந்த மேற் கூறிய மாறுதல்கள், ‘பண்ணையாள்’ என்ற தளையில் இருந்து, மாதாரியர், தம்மைத் துண்டித்துக் கொள்ளத் துணைபுரிந்துள்ளன.  BONDS LOST(கட்டவிழ்ந்த தளை) என்று பொருத்தமாகவே நூலாசிரியர், தம் நூலுக்குத் தலைப்பிட்டுள்ளார்.

நன்றி

இந்நூலைத் தந்துதவிய முனைவர் சீ.பக்தவச்சல பாரதி அவர்களுக்கும்,பறி தொடர்பான விளக்கங்களைக் கூறியுதவிய பெருந்துறைத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என்.பெரியசாமி அவர்களுக்கும்,புகைப்படங்களைத் தந்துதவிய பேராசிரியர் பீட்டர் ஆரோக்கியராஜ், கணினிப்படியை ஒழுங்கமைத்த பேராசிரியர் முனைவர் நா.இராமச்சந்திரன் ஆகியோருக்கும் என் நன்றி உரியது.

Pin It