கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போலுழைத்துப்
பாடுபட்ட ஏழைமுகம் பார்த்துப் பதைபதைத்துக்
கண்ணீர் துடைக்கவந்த காலமே நீ வருக!

மண்ணை, இரும்பை, மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர் பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி
கையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட
பொய்யர் குலம் நடுங்கப் பொங்கி வந்த மேதினமே!

மன்னர் முடிதரித்த நாட்கள் மடிந்தன காண்!
மின்னாய் எரியுற்ற மீனாய் விழுந்தனகாண்!
நாதம் கிளர்ந்துலகை நாள் முழுதும் ஆட்டிவைத்த
வேதம் பெயர் மழுங்கி வெற்றுடலாய் ஆனதுகாண்!
ஆனால்
ஏழைத் தொழிலாளர் ஏற்றி வைத்த தீபத்தில்
நின்னுடைய நாமம் நிலைத்ததுகாண் இவ்வுலகில்!

அமுதனையாய் அன்னாய் அருகுற்றாய் இந்நாள்
சமுதாயப் பந்தரிலே சந்திப்போம் வாராய் நீ!

மண்குளிரும், மக்கள் மனங்குளிரும், அன்னவர்தம்
கண்குளிரும், ஆனந்த வெள்ளம் கரைபுரளும்!

காவியத்தில் பார்த்ததில்லை, கண்டறியா ஓர் புதுமை!
சோவியத்தில் இன்று சுடர்மணிப்பொன் மாளிகையில்
ஏற்றி வைத்தார் உன்னை இசைந்தமலர் மாலைகளால்
சாற்றி வைத்தார் இன்பம் சமைத்து வைத்தார் எவ்விடத்தும்!

காரிருளை வென்று கலிதீர்க்க மேலெழுந்த
சூரியன்போல் மாமதிபோல் வையகத்தைச் சுற்றிவரும்
மேதினமே நீவருவாய் மின்னல் ரதமேறி
ஊதினோம் எக்காளம் உன்னை வரவேற்க!

வெள்ளமே நீவருக! மேற்குப் பனித்திரையில்
கொள்ளை கொலை நடத்தக் கூட்டணிகள் கூட்டுபவர்
மூடு திரை கிழித்து முன்னேறி வந்திடுக!
தேடும் வழித்துணையே தீபமே நீ வருக!

‘காடு நகராச்சு; காலம் பவுனாச்சு;
வீடு கலையகமாய் விண்ணகமாய் மின்னிற்று!’
தொழிலாளர் சாதனையைத் தூக்கிக் கொடி பிடித்து
வாராய் மணிவிளக்கே வந்திடுவாய் மேதினமே!

யுத்த ஒலி கேட்கிறது, ஊர்மிரட்ட எண்ணுபவர்
பித்தம் அணுகுண்டாய்ப் பேயாய் அலைகிறது;
ரத்த வெறிபிடித்த லாப அரக்கர்களின்
கத்தி, மனிதர் கழுத்தறுக்க நீள்கிறது!
இந்த இருட்டுலகை எற்றிக் கவிழ்த்திட நீ
வந்தாய் வருகின்றாய் வாழ்க்கையெனுந் தேரேறி!

நீல நெடுந்திரையாய் நீள்கின்ற கைகளினால்
ஞாலத் தொழிலாளர் நல்லரசைத் தோற்றுவிப்போம்
என்ற சபதமொடும் எண்ணரிய வேகமொடும்
குன்றா உறுதியொடும் கொள்கையோடும் நீ வருக!

புனிதமே! புத்துணர்n1வ! அன்பே! புதுமையே!
மனிதரெலாம் நின்நாமம் வாழ்த்தி வரவேற்க
ட்ரூமன், ஷுமன், மார்ஷல், சர்ச்சில் எனும் சண்டாளர்
வெந்து மனம் புழுங்கி வேதனையில் மூழ்கிட்டார்
வந்தாய் அவர் நெஞ்சை வாள்கொண் டறுத்தெறிய!

முன்னை இருள் கிழித்து முத்தமிட்டாய் இத்தரையை!
அன்னை உலகிற்கோர் ஆதரவு நீ தந்தாய்!
தூங்கும் குழந்தைக்குத் தொட்டிலென வந்தாய் நீ!
ஏங்கும் அகதிக்கோர் இன்பமென நின்றாய் நீ!

உன்னை வரவேற்க ஒவ்வொருவர் இல்லத்தும்
மின்னைப் பரப்பியவோர் மேடைபோல் எத்திசையும்
காற்றில் அணையாமல் காலத்தால் மாளாமல்
ஏற்றி வைத்த நாள் விளக்கின் தீபம் எழில்பரப்ப

வருக நன்னாளென்று வாழ்த்தொலிகள் பொங்கத்
தெருவில் தொழிலாளர் சிம்மக் குரல் எடுத்து
நின்னாமம் உச்சரிக்க நின்றார் அணியணியாய்
பொன்னாமம் வையம் புகழ் நாமம் நின்னாமம்!

ஆலையின் பக்கம் அணி பெற்ற மைதானம்;
சோலைப் பறவைகளாய்ச் சூழ்ந்த தொழிலாளர்
ஊர்வலமோ வெள்ளம்! ஒரு கடலின் நெடுங்கைகள்!
தேர் ஏறி வந்து திசையெங்கும் பாராய் நீ!

மாணவர்தம் சங்கத்து மாடிமிசை நின்வருகை
ஏற்க விரிகின்ற கைகள் கடலலையோ!
நீடு குயில் மொழிசேர் மாணவிகள் நெஞ்சுருகப்
பாடுகிறார், நானும் பறவையைப்போல் ஆகிவிட்டேன்!

ஆலைத் தொழிலாளி அன்புமகன் ஓடிவந்து
சோலைப் பறவையெலாம் சொன்னதுபோல் சொல்லி
வயிற்றுப் பசி மறந்து வாழ்த்துகிறான் உன்பெயரை;
பயில்கின்ற இவ்வுலகப் பாட்டும் நீ! பண்பும் நீ!

தாழ்வைத் தகர்க்கத் தலைநிமிர்ந்த மேதினியில்
வாழ்வின் சமாதானம் வாய்ந்த நெடுந்திரையில்
ஜீவியமாய் நின்றதொரு சித்திரம்நீ; வானமரர்
காவியம்நீ; கற்பனைநீ; காணுமொரு காட்சியும் நீ!

தீரா இருளொழிந்து திக்கு விளங்க இதோ
வாராய் வளர்பொருளே மேதினமே வாராய் நீ!

வெட்டுகின்ற மின்னொளிபோல் வீறிட்ட காற்றது போல்
சட்டச் சுவர்மீது தாவிப் போய் விண்மு கட்டின்
மேலே உனது கொடி வீசிப் பறந்து, புயல்
போலே எமக்குப் புதுச்செய்தி சாற்றியது!

நாசக் கிருமிகளாய் ஞாலப் பெருநோயாய்
வாசம் புரிகின்ற “வால் தெரு”வின் மூடருக்குக்
‘காலத் திறுதியாக காண்’ என்று செங்கொடியை
ஞாலத் தெருமுனையில் நாட்டுகின்றாய் வானுயர!

ஒல்லொலியாய்ப் பொங்கிடநின் காலடியின் ஓசையோடு
செல்கிறது செஞ்சேனை நாலுதிசை முழுதும்!
நீக்ரோவர் தம்முடைய நீள்கரத்தால் நல்லுளத்தால்
சீன இளைஞர்க்குத் தின்பண்டம் போலினிய
வாழ்த்தை அனுப்புகிறார் உன்னுடைய வண்டியிலே!

வாழ்த்தொலியால் மண்ணின் வசையின்று நீங்காதோ!
வானத் தரசியென வாகாய் வளர்கின்ற
சீனப் பெண் தந்த திருவாழ்த்தை ஏந்தி - வந்து
என்னெதிரே நீட்டி எகத்தாளம் போடுகிறாய்
பொன்னே! புதுமலரே! புத்தொளியே! வாழியநீ!

சோலைக்குயில் வந்து சொல்லிற்று நின்பெருமை!
ஆலைசங்கு நின்பெயரை ஆகாய வீதியிலே
முழக்கிக் கிடுகிடுக்க மூச்சுவிட்டு நிற்கிறது!
உழைக்கின்ற தோழர் உணர்ச்சியே நீ வருக!

கூட்டங்கள் கூட்டிடுவார் கும்பல் பெருக்கிடுவார்
‘ஆ’ என்பார் ‘ஊ’ என்பார் ஆயிடினும் சிப்பாய்கள்
கூடி தடி யெடுத்தால் கும்பிட்டுப் போய் விடுவார்!
உன்னுடைய கூட்டமிந்த ஓட்டைக் கழிசடைகள்

நாணித் தலைகுனிய ராணுவமாய் முன்னேறி
ஆயுதங்கள் தம்விழியும் அஞ்ச நகைக்குமொலி
ஞாலம் வெடித்துவிட்ட நாதமெனப் பாய்கிறது!
காலன் நடுங்கக் காலமே நீ வருக!

துறந்தார் சுகமுழுவதும்; தோள் கொடுத்தார் நின்பணியில்;
இறந்திட்ட எம் தோழர் இன்றைக் குயிர் பெறுவார்!
சுடுகாடும் நின்வரவால் சொர்க்கமாய் மாறாதோ!
தொடுகின்றாய் நின்கையால் தொட்டதெலாம் பூக்காதோ

பொந்தில் உயிர்வாழ்ந்தார்; போக்கற்றார்; இன்பமிலார்;
கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்
ஏற்றி வைத்த நின்பெருமை என்னுயிர்க்கும் மேலன்றோ!
போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக!

பொன்னார் நிறமுடையாள் பூவின் மணமுடையாள்
என்னருமைக் காதல் எழிலரசி நின்பெயரை
உச்சரிப்பாள்; அன்பால் உபசரிப்பாள் ஆகையினால்
எச்சரிக்கை இல்லில் இருந்து விருந்தருந்து!
காதலர் தம் இல்லில் கணநேரம் தங்கிவிடில்
போதம் பெறுவரவர் போர் வீரர் ஆயிடுவர்!

அமெரிக்க மாநகரில் அன்றொருநாள் மக்கள்
குமுறியெழுந்து குருதியெலாம் சிந்தியதால்
வான் சிவந்து மண்சிவந்து மாகடலும் தான் சிவந்து
ஊன் சிவந்து வந்தாய் உயிர் சிவந்த செந்தினமே!

உன்கொடியைப் போற்ற உயிர் விட்டார் அந்நாளில்,
வன்கொடியர்மாய வழிகண்டா ராதலினால்
வாழ்கின்றார் இன்றும்; வளர்கின்றார் நாள் முழுதும்;
சூழ்கின்றார் வானில்; சுடர்கின்றார் நீ வருக!

கண்ணின் கருமணியே.  காசினிக்கு மாமணியே,
கண்ணீர் துடைக்கவரும் காலமே நீ வருக!
அன்னை ஒருத்தியதோ அங்கே நெடுந்தொலைவில்
தன்மகனைத் தூக்கேற்றிக் கொல்லும் சதிகாரர்
வஞ்சமெண்ணி அஞ்சுகிறாள் வாராய் மணி விளக்கே!
அன்னவள்தன் நெஞ்சத்தின் ஆறுதலே வாராய் நீ!

தூக்குக் கயிறுதனைத் துச்சமென எண்ணுமகன்
கண்ணில், உளத்தில் களிப்பேற்ற வாராய் நீ!

உலகத் தொழிலாளர் ஒற்றுமையே, நல்லுணர்வே,
அன்பே, இருட்கடலின் ஆழத்திருந்து வந்த
முத்தே, முழுநிலவே, மேதினமே வாராய் நீ!
வாராய் உனக்கென்றன் வாழ்த்தை யிசைக்கின்றேன்!

‘முன்னணி’ - 1949

Pin It