தமிழ் எழுத்துலகில் சிறப்புக் கவனம் பெறும் சுப்ரபாரதிமணியனின் எட்டுக் குறுநாவல்களின் தொகுப்பான ‘வேறிடம்’ கதை சொல்லும் உத்தி யால் குறிப்பிடத்தக்க வித்தியாசமானதொரு அனு பவத்தை வாசகருக்குத் தருகிறது.

subrabharathimanian_400இவரது கதைகள் ஒரே தாவலில் படித்து முடித்து விடுகிற ரகமல்ல. கொஞ்சம் மெனக்கெட வேண்டும். மறு வாசிப்புகளில் மேலும் மேலும் கிளைக்கும் தடங்கள்.

புகைப்பட நுணுக்கங்களில் சொல்லில் விரியும் அனுபவங்கள். ‘பொறியில் அகப்பட்டுக் கொண்ட எலி’ போல் வாசகனது மனதை அலைக்கழிக்கும். படபடவென மூச்சுத் திணற வைக்கும் முடிவுகளின் அழுத்தம், மனதில் துளைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். அவ்வகையில் அமைக்கப் படும் முன் புனைவுகளின் நிர்ப்பந்தம் புரிபடுகின்றது.

அதிகார வர்க்கத்தினரின் அகோரப் பசிக்கு இரையாகும் உயிர்ப்பலி விளையாட்டை அப் பட்டமாகச் சொல்லும் ‘நகரம் 90, நித்திய கண்டம் பூர்ணாயுசுமாக கர்ப்பியூ காலத்து அவதிப்படும் ‘நரக’வாழ்க்கையைக் கண்முன் நிறுத்துகிறது. நித்தம் நடக்கும் கொலை, கொள்ளை, அடாவடித் தனத்தைக் காரணம் காட்டி ஆளும் கட்சியின் எதிர் குரூப் முதலமைச்சரைக் கவிழ்த்துவிட்டு நாற்காலியைப் பிடுங்கிக் கொள்கிறது. அதற்கான விலையாகத்தான் அப்பாவி மக்களின் உயிர்ப் பலிகள்.

கஞ்சாத் துணையுடன் இலக்கின்றித் திரியும் வேலையற்ற இளைஞனும், புதுயுகப் பெண்டாட்டி யின் ராட்சசத் தனத்தால் வெறுத்துப் போய் புட்டி யுடன் அலையும் முதியவரும், தற்கொலைக்கு முயலு கையில் சந்தித்துக்கொள்கின்றனர். கணவன் மற்றும் மகனால் கைவிடப்பட்டு நிர்க்கதியாகி, வாழவும் பிடிக்காமல் சாகவும் துணியாமல், தங்கும் விடுதி நடத்திப் பிழைக்கும் மூதாட்டி ரூபியிடம் வரு கின்றனர். மூவரும் சாகத் தயார். ஆனால் திடீ ரென்று ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்குண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றத் துணிந்து செயல்படும் தருணத்தில், வாழ்வின் தீர்வைக் கண்டு கொள்கிறார்கள். ‘வாழ்வின் தீர்வு’ என்ற இக்கதையில் தான் எத்தனை உள்மனப் போராட்டச் சிக்கல்கள்!

நீண்ட காலத்திற்குப் பிறகு சொந்த ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்ற புல்லாங்குழல் கலைஞனைச் சீந்துவாரில்லை. அடையாளம் இழந்து எந்திரத் தனமாக எப்படியெல்லாமோ மாறிப் போன கிராமத்தில் இவனைக் கண்டுகொண்ட கல்யாணமும் வாசலிலேயே நிற்க வைத்து தண்ணீர்கூடக் கொடுக் காமல் அவனமானப்படுத்துகிறான். குளிக்கப் போய்ப் சேற்றைப் பூசிக்கொண்ட கதை. மன அசதி மண்டிக் கிடக்க, கச்சேரி முடித்த அலுப்பில் நிற்கிறான் ‘இருள் இசை’ கதையின் நாயகன். கால மாற்றத்தில் மனித நேயமும் மரத்துத்தான் போய் விடுமோ?

சீட்டாட்டமும் திண்ணைக் கச்சேரியுமாய்ப் பொழுதைக் கழிக்கும் ஊர்க் கவுண்டர் தனது இரக்க சுபாவத்தால் ஒருவனது டீக் கடையை விலைக்கு வாங்கிச் சொந்த ஊரில் கவுண்டர் கிளப் என்ற பெயரில் காபிக் கடை வைக்கிறார். கடை அனுபவம் இல்லாததால் விரைவில் மூடுவிழா நடக்கிறது. அந்தச் சமயத்தில் கனகம் என்ற இளம் விதவை அவர் வாழ்வில் நுழைகிறாள். பஞ்ச காலத்தில் ஒரு மூட்டை நெல் கனகத்திற்கு அனுப்பி வைக்கிறார். பொங்கி எழுந்த மனைவி, கனகத்தைத் தலைமயிரைப்பிடித்து வெளியே இழுத்து வந்து கைகலப்பு செய்கிறாள். மனமுடைந்த கனகம் தூக்கில் தொங்கிச் சாகிறாள். நின்றுபோன தனது டைம் பீஸின் மேலிருந்த அழுத்தமான தழும்பு களைக் கவுண்டர் தடவிக்கொண்டார் என்று முடியும் கவுண்டரின் மனநிலையில் தான் நாமும் ‘கவுண்டர் கிளப்’ கதையை அசைபோட வேண்டி யுள்ளது.

சிவப்பு நாடாத்தனமான அஞ்சலக ஊழியர் களின் அலட்சியப் போக்கால் எரிச்சலுற்று எம். ஓ. பாரத்தையே பந்துபோல் சுருட்டி கவுண்டரில் இருந்தவன் தலையில் வீசி விட்டு வருவது, சுகந்தியின் உறவினர் ரவீந்திரனின் நச்சரிப்பு, லாரித் தண்ணிப் போராட்டம், குழாயடிச் சண்டை, ஹோலிப் பண்டிகை வசூல் அடாவடித்தனம், தோயம்மா, ராமண்ணா வரலாறு. ராமண்ணா கொடுத்த கல்யாணப் பத்திரிகையைத் தேடிப் பிடித்து தோயம்மாவிடம் விநியோகிப்பது, போன்ற தற்காலிகச் சிக்கல்களிலிருந்து தப்பிக்க சினிமா, சிகரெட், லிக்கர், பீர் என்று அலைபவர்களின் அனுபவ ஓட்டமே ‘வேறிடம்’சொல்லும் கதை....

ஆளும் கட்சித் தொண்டர்கள், குருடர்கள் நடத்திய ஊர்வலத்தில் புகுந்து வெறியாட்டம் போட்டதை அச்சு அசலாக ஓவியத்தில் வடிக் கிறான் சுரேஷ். அதற்குப் பதிலடியாய் அவனது அறை சூறையாடப்படுகிறது. அடுத்தது அவனது உயிர்தான் என்பதை உணர்ந்த உயிர் நண்பன் தியாகு அவனை அந்த ஊரை விட்டுப் போகச் சொல்கிறான். ஆனால் சுரேஷ் வரும் போராட்டங் களையும், பிரச்சினைகளையும் சவாலாக ஏற்றுக் கொண்டு அங்கேயே இருக்கப் போவதாய்க் கூறு வதன் மூலம் அசல் கலைஞனின் மன உறுதியை ‘வர்ணங்களின்’ வழியே சுரேஷ் பிரதிபலிக்கிறான்.

‘இன்னொரு நாளை’ கதை நெடுக ஹைதரா பாத் நகரின் கர்ப்பியூவின் கோரத்தாண்டவம் பல்லிளிக்கின்றது...

‘இந்த வாழ்க்கை யாரைத்தா நிதானமாக இருக்க வுட்டுருக்குது...’ என்பாள் சுகந்தி முதலில். “வெறுமையும் அநீதியுமாக இருந்தாலும் இருக் கறதை வெச்சு வாழ்க்கையைத் தேறுதல் பண்ணிக் கனுமுன்னு தோணுது...” என்பாள் முடிவில்.

காலந்தோறும் நெசவாளர்கள் படும் சீரழிவும், நசிந்துபோன தொழிலால் தூசி படிந்து நிர்வாண மாய் நிற்கும் தறிகள், பசிக்கொடுமையால் கோவை யிலிருந்து கேரளாவிற்கு அரிசி கடத்தி வயிறு கழுவும் அவலம், போலீசால் பிடிபட்டு அடிபட்டு தப்பித்த கதை, காணாமல் போன ஆண்களும் பெண்களும், அரிசி கடத்தலில் அகால மரணம் கண்ட ஆறுமுகம் என அடுக்கடுக்காய் அவலங்களை சோக சித்திரங் களாய் மரபு கலந்த உவமைகளுடன் நூலின் மற்ற கதைகளிலிருந்தும் மாறுபட்டு மனதைத் தைக் கின்ற வகையில் ‘மரபு’ கதையில் சொல்லிப் போகிறார் ஆசிரியர்.

நிகழ்வுகளை இருந்ததை இருந்தபடி எழுதிக் காட்டி உணர்வுகளைச் சொல்லாமல் சொல்லி உணர வைக்கும் வித்தை கற்றவர் என்பதை இவரது குறுநாவல் தொகுப்பு நிரூபிக்கிறது.

Pin It