“மிக்சி கிரைண்டர் உங்களுக்கு

லட்சம் கோடி எங்களுக்கு”

 

“35 கிலோ அரிசி உங்களுக்கு

35 ஆயிரம் கோடி எங்களுக்கு”

 

“பெற்றவர்களுக்கு டாஸ்மாக்கு

பிள்ளைகளுக்கு லேப்டாப்பு”

 

“கிழவர்களுக்கு பஸ்பாசு

எங்களுக்கு பெருங்காசு”

 

“அரசுப் புறம் போக்கெல்லாம்

ஆளுகிற எங்களுக்கு”

 

“அரிசிக் கடத்தல் மணல்கடத்தல்

60 ஆயிரம் கோடி அடித்து விட்டோம்

அடுத்தபடி தேர்வு செய்தால்

அடிப்போம் இனி பெருங்கொள்ளை”

-     திமுக தேர்தல் அறிக்கையில் கலைஞர் வாக்குறுதிகளை படிக்கிறபோது இப்படித்தான் நமக்குள் தோன்றுகிறது.

 

"ஐநூறு ரூபாய் நோட்டுகளை

அள்ளித் தருவோம் உங்களுக்கு

டாஸ்மாக்கும் பிரியாணியும்

தாகம்தீரத் தந்திடுவோம்"

-எனும் விதத்தில் திமுக மக்களின் மீது அவநம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது. தேர்தல் கமிஷனையே கலைஞர் மிரட்டுவது அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது.

வைகோ கோபம்

ராஜிவ் காந்தியைக் கொலை செய்த பிரபாகரனையும் அவரது புலிப் படைகளையும் சோனியாகாந்தி, ராஜபக்சே மூலம் அழித்துவிட்டார். பழிவாங்கும் உணர்ச்சியோடு, பிரபாகரனை ஆதரித்ததற்காக ஈழத்தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொல்லவும், லட்சம் பேரை முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கவும் சோனியா ஆசி வழங்கியுள்ளார். தமிழக மீனவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்காக சோனியா அவர்களையும் பழிவாங்கி வருகிறார். கொடியவன் ராஜபக்சே குலநாசம் செய்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு சோனியாவுடன் துணை நிற்பவர் கருணாநிதி.

இத்தகு சூழலில் தமிழகத் தேர்தலில் சோனியா, கருணாநிதி கூட்டை அம்பலப்படுத்தி திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டிய வைகோ களமிறங்காமல் தனித்து ஒதுங்கியிருப்பது பெரிய சோகம். பொதுப் பிரச்சனைகளில் தனிப்பட்ட கோபங்கள் ஒதுங்குவதற்குக் காரணமாகக் கூடாது என்பது வைகோ அறியாததல்ல. கருணாநிதிக்கு எதிராக ஐந்தாண்டுகள் ஒலித்த அவரது போர்க்குரல் அடங்கி வீழ்வது அவருக்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நல்லதல்ல.

ஜப்பானின் சோகம்

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் இரண்டு அணுகுண்டு வீச்சினால் ஏற்பட்ட சேதத்தைவிட அண்மையில் நிலநடுக்கச் சுனாமியால் ஏற்பட்ட சேதம் மிகப்பெரியது. போதாக்குறைக்கு அணு உலைகள் வெடித்ததால் கதிர்வீச்சு அபாயமும் ஜப்பானிய மக்களைச் சூழ்ந்துள்ளது. இயற்கையின் முன் மனிதன் இன்றும் பலவீனமானவன் தான் என்பது நிரூபணமாகியுள்ளது. உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டினாலும் ஜப்பான் எழ நாள் பிடிக்கும் போலிருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அம்மக்களுக்கு ஆதிரவாக உதவிக்கரங்களை நீட்ட வேண்டும்.

மல்லிகைப் புரட்சியும் கொள்ளைக்கார அமெரிக்காவும்

டுனீசியா முதல் ஏமன் வரை பரம்பரை ஆட்சிகள், குடும்ப ஆட்சிகள், சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக 15 நாடுகளில் மல்லிகைப்புரட்சி தொடர்கிறது. டுனீசியா, எகிப்தில் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டனர். லிபியாவில்  கடாபி மட்டும் எதிர்ப்புரட்சியில் ஈடுபடுகிறார். இதைக் காரணமாகக் காட்டி அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும் லிபியா மீது படையெடுத்து இராக்கைப் போல அந்த எண்ணெய் வள நாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன. அமெரிக்காவை உலகம் கண்டிக்கிறது. அமெரிக்கா தனது எடுபிடியான சவூதியின் மன்னராட்சியையும் போரில் இறக்கியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு கொலைக் காட்சி

முன்னாள் அமைச்சர் ராசாவின் பினாமியும் கூட்டாளியுமான சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டதாகவும், இல்லை இல்லை கொலைதான் என்றும் செய்திகள் வருகின்றன. அன்று மாலையில் அவர் தில்லி சென்று வழக்கில் அப்ரூவர் ஆக இருந்ததாகவும் அதற்குள் மதியமே அவரை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ராசாவும் சிறைக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தால் தான் தப்புவார் என்றும் இல்லையேல், அவர் சோலியையும் முடித்து விடுவார்கள் என்றும் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

திமுகவுக்கு இது வழக்கமான செயல்தான் என்றும் செய்திகள் வந்துள்ளன. துணை முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான அண்ணாநகர் ரமேஷ் குடும்பம், தா.கிருட்டிணன், தினகரனில் மூன்று பேர் என அது போலத்தான் சாதிக் பாட்சாவும் என்கின்றனர். தேர்தல் முடிந்ததும் கனிமொழி, ராஜாத்தியம்மாள், தயாளு அம்மாள் மூவரும் கைது செய்யப்படலாம் என்ற கருத்துப் பின்னணியில் இது நடந்துள்ளது.

ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலின் சூத்திரதாரிகளான சோனியாவும், கருணாநிதியும் தப்பி விடுவார்கள் போலும். தமிழக வாக்காளர்கள் இதைப் புரிந்து வாக்களிக்க வேண்டும்.

Pin It