A.R.Venkatachalapathy - The Provice of the Book (புத்தகத்தின் பெருநிலம்) Permanent Black

‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்பது தமிழில் மலினப்படுத்தப்பட்ட ஓர் அறிவுத்துறையாக இன்று விளங்குகிறது.  ‘கலம்பகம் பார்த்தொருகலம்பகம் தன்னையும்’ என்று பாரதிதாசன் பாடியது போல் ஓர் இலக்கிய வரலாற்றைப் பார்த்து மற்றொரு இலக்கிய வரலாறு,என இலக்கிய வரலாற்று நூல்கள் ‘கலகலவெனப் பொல பொலவெனப்’புற்றீசல்களாக வெளிவந்து கொண்டுள்ளன. நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுள் விரல்விட்டு எண்ணத்தக்க நூல்களே தரமான நூல் களாக அமைகின்றன. இது ஒரு புறமிருக்க - தமிழ் இலக்கிய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட பகுதி யொன்றும் உள்ளது.

venkatachalapathy_450ஓலைச்சுவடியில் இருந்து,அச்சுப் புத்தக வடிவத்தைத் தமிழ்நூல்கள் அடைந்த வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள் வெளிவரவேண்டியுள்ளன. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல் காலனிய ஆட்சியில் அச்சுவடிவம் பெற்ற தமிழ் நூல்கள் குறித்த அறிமுகத்தையும் ஆய்வையும், சுராமர்,தனிநாயக அடிகள்,இராசமாணிக்கம் ஆகிய கத்தோலிக்கத் துறவியர் செய்துள்ளனர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இன்றைய நாகை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் டேனிஷ் மிஷனரியான சீகன்பால்க் நிறுவிய அச்சுக்கூடம் மற்றும் அதில் அச்சான நூல்கள் குறித்து, டேனியல் ஜெயராஜ் என்ற கிறித்தவ மிஷனரி எழுதியுள்ளார்.

இத்தொடக்ககால முயற்சிகளை எல்லாம் உள்ளடக்கியதாக,கேசவன் என்பவர் எழுதிய 'History of printing and publishing in India , Vol.1, South Indian Orgins of Printing and its Efflorescene in Bengal'  என்ற நூல் அமைந்துள்ளது. மயிலை சீனி.வேங்கட சாமி,மா.சு.சம்பந்தம்,அ.மா.சாமி ஆகியோர் ஆங்கிலக் காலனிய ஆட்சியில் தமிழ்நூல்களும்,இதழ்களும் அச்சான வரலாற்றை எழுதியுள்ளனர். தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் அச்சிடப்பட்ட வரலாற்றை உ.வே.சாமிநாதைய்யரின் ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்’,அவரது தன் வரலாறான ‘என் சரித்திரம்’ ஆகிய நூல்களாலும், அவரது உரைநடை நூல்கள் சிலவற்றின் வாயிலாகவும் ஓரளவு உணரமுடிகிறது. இலங்கைத் தமிழறிஞரான சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்த செவ்விலக்கிய நூல்களின் முன்னுரைகளின் வாயிலாகவும் இது தொடர்பான சில செய்திகளை அறியமுடிகிறது.

மேற்கூறியன எல்லாம் தமிழ் அச்சாக்க வரலாறு குறித்த முன்னோடி முயற்சிகள் என்பதில் ஐயமில்லை.  அதே நேரத்தில் அச்சாக்க வரலாறு என்பது, அச்சுத் தொழில்நுட்பம் என்பதுடன் முடிந்து விடவில்லை.  நூல் அச்சான காலத்திய சமூக அமைப்பு, நூலாசிரியர் குறித்த செய்திகள்,அச்சாக்கத்திற்கான மூலதனம் திரட்டப்பட்ட முறை, நூலின் உள்ளடக்கம், வாசகர் களை அது சென்றடைந்த முறை ஆகியன குறித்தும் ஆய்வு செய்து எழுதப்பட வேண்டும்.

ஆங்கிலக் காலனிய ஆட்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று பத்தாண்டுகள் வரை யிலான காலத்தில் தமிழ் நூல்களின் அச்சாக்கம் குறித்த ஆய்வு நூலாக ‘The Province of the Book' என்ற தலைப்பிலான இந்நூல் அமைந்துள்ளது. இந்தி யாவின் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவரான கே.எம். பணிக்கரின் மேற்பார்வையில் ‘A Social History of Tamil Book - Publishing , Circa 1850-1939’ என்ற தலைப்பில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நூலாசிரியர் மேற்கொண்ட ஆய்வு நூலே மேற்கூறப்பட்ட தலைப்பில் வெளியாகியுள்ளது.

நூலாசிரியர்,சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் (MIDS)வரலாற்றுப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.  பாரதி, வ.உ.சி.  தொடர்பான ஆய்வுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு, ஆழமான நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். ‘இந்தியா’ இதழில் பாரதி வெளியிட்டு வந்த கருத்துப் படங்களைத் தொகுத்து நூல் வடிவம் தந்துள்ளார்.  புதுமைப்பித்தன் சிறுகதைகளைக் காலவரிசைப் படித் தொகுத்து,முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிட்டு செம்பதிப்பாக ‘புதுமைப்பித்தன் கதைகள்’என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.  ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ என்ற நூல் இவரது சமூக வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பாகும்.இனி தமிழ்நூல் அச்சாக்கம் தொடர்பான இவரது நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளின் சாரத்தைக் காண்போம்.

புரவலர்களின் பங்களிப்பு

தமிழ் நூல்கள் அச்சாக்கம் பெறத் தேவையான நிதியுதவியைப் பெறுவதில்,தொடக்க நிலையில் புரவலர்கள் தேவைப்பட்டனர். சமீன்தார்கள்,சைவ மடங்களின் அதிபர்கள், கோவில்களின் அறங் காவலர்களாக விளங்கிய நிலக்கிழார்கள், சாதி களின் நாட்டாமைகள் ஆகியோர் புரவலர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

மடத்தின் ஆதரவுபெற்ற தமிழ் அறிஞர்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876)19ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெறுகிறார். புனிதத் தலங்கள்,கடவுளர்கள்,கோவில்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தல புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் எழுதிய இவர்,சைவமடங்களில் புகழ்பெற்ற திருவாவடு துறை மடத்தின் ஆதீன வித்வானாக விளங்கினார். அம்மடத்தின் பண்டாரசந்நிதியாக விளங்கிய அம்பல வாணதேசிகரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ‘கலம்பகம்’எழுதியமைக்காக அவருக்கு ‘மகாவித்துவான்’என்ற பட்டம் வழங்கப்பட்டது.  தருமபுரம், குன்றக்குடி மடங்களின் ஆதரவும் அவ்வப்போது இவருக்குக் கிட்டியது.

பெருநிலக்கிழார்கள், வணிகர்கள், சாதி நாட்டாமைகள், தாசில்தார்கள் ஆகியோர் இவர் எழுதிய தல புராணங்களுக்குப் புரவலர்களாயிருந்தனர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் படைப்புகளில் பெரும்பாலானவை புராணங்களாகவேயிருந்தன.  சைவத்தலங்களில் வாழ்ந்த மக்கள்,தம் ஊரைக் குறித்து ஒரு புராணத்தையோ,சிற்றிலக்கியத்தையோ அவர் எழுதவேண்டுமென்று எதிர்பார்த்ததாக உ.வே.சா.  குறிப்பிடுகிறார்.  தருமபுர மடத்து ஆதீனம் ஒருவர்,தேவாரத்தைவிட தலபுராணம் முக்கியமானது என்று கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை, ராமநாதபுரம் மன்னர்களும், எட்டையபுரம் சமீன்தாரும் நூல் அச்சாக்கத்தின் புரவலர்களாக விளங்கினர். சேசைய்ய சாஸ்திரி (1878-1886), என்பவர் புதுக்கோட்டையின் திவானாக இருந்தபோது,கவிஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் நவராத்திரி விழாவின்போது நூறு ரூபாய்வரை அன்பளிப்பாக வழங்கி வந்தார். சி.வை.தாமோதரம் பிள்ளையின் கலித்தொகைப் பதிப்புக்கும், உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளுக்கும் அவர் பண உதவி செய் துள்ளார்.  பாரதியாருக்கு எட்டையபுரம் சமீன் தார் நிதியுதவி செய்துள்ளார்.

இராமநாதபுரம் மன்னனின் சகோதரரான பொன்னுசாமித்தேவர் (1837-1870) தில்லையாம்பூர் சந்திரசேகர கவிராயர்,மாம்பழக்கவிராயர்,மகா மகோபாத்தியாயா ராஜு சாஸ்திரிகள், வித்துவான் தியாகராஜ செட்டியார் ஆகியோரின் புரவலராக விளங்கினார். ஈழத்துத் தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலரின், ‘திருக்குறள் பரிமேலழகர் உரை’, ‘திருக் கோவையார் உரை’, ‘சேதுபுராணம்’, ‘தருக்க சங்கீரகம்’, ஆகிய நூல்களின் பதிப்புகட்கு நிதி உதவி செய்துள்ளார்.  சந்திரசேகர கவிராய பண்டிதரின் ‘தனிச் செய்யுட் சிந்தாமணி’என்ற பெயரிலான தனிப்பாடல் திரட்டு வெளிவரவும் இவர் நிதியுதவி செய்துள்ளார்.  இந்நூலில் மரபு சார்ந்த புரவலர் களைப் புகழும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பொன்னுசாமித் தேவரின் இப்பணியை அவரது மகன் பாலவநத்தம் சமீன்தார் பாண்டித்துரைத் தேவரும் (1867-1911) தொடர்ந்துள்ளார்.  நாராயண அய்யங்கார், எட்டையபுரம் வீராசாமி அய்யங்கார்,மு.இரா.கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் இவரது அவைக்களப் புலவர்களாயிருந்துள்ளனர்.  உ.வே.சா. புறநானூற்றைப் பதிப்பிக்க ஐந்நூறு ரூபாய் வழங்கி யதுடன் அவரது மணிமேலைப் பதிப்பு,இராமசாமிப் பிள்ளையின் தேவாரம் தலமுறைப் பதிப்பு, சிவஞான முனிவரின் நூல்தொகுப்பு, சபாபதி நாவலரின் ‘சிவ சமணவாதமறுப்பு’, சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் படைப்புகள் ஆகியன வெளிவரப் பண உதவி செய்துள்ளார். சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்ற நூலுக்கும் இவரது பண உதவி உண்டு. எல்லா வற்றிற்கும் மேலாக 1901இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார்.

ஊற்றுமலை சமீன்தார் ஹிருதாலய மருதப்பத் தேவர்,சிறுவயல் சமீன்தார் ராமலிங்கத்தேவர், நாமக்கல் சமீன்தார் துரைசாமிரெட்டியார், சொக்கம்பட்டி சமீன்தார், ஆண்டிப்பட்டி சமீன்தார், பெத்தாச்சி செட்டியார் ஆகியோரும் குறிப் பிடத்தக்க அளவில் நூலாக்கத்திற்குத் துணை புரிந்துள்ளனர்.

எட்டையபுரம் சமீனுக்கென்று சொந்தமாக ஓர் அச்சுக்கூடம் இருந்தது. சமீனின் ஆதரவு பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் இதில் அச்சிடப்பட்டன.

இதுபோன்ற பணியைச் சைவமடங்களும் மேற்கொண்டுவந்தன. திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், காஞ்சி ஞானப்பிரகாசர், மதுரை திருஞான சம்பந்தர், மயிலம் ஆகிய மடங்கள் தமிழ் நூல் வெளியீட்டுக்குத் துணை நின்றுள்ளன.

ஆறுமுக நாவலரின் ‘இலக்கணக் கொத்து’, ‘தொல்காப்பிய சூத்திர விருத்தி’ ஆகிய நூல்கள் வெளியாக உதவியதுடன் ‘நாவலர்’ என்ற பட்டத் தையும் திருவாவடுதுறை மடம் அவருக்கு வழங்கியது. உ.வே.சா.வின் சிலப்பதிகாரப் பதிப்பு வெளியாக திருவாவடுதுறை, திருப்பனந்தாள், திருவண்ணா மலை மடங்கள் நிதிவழங்கியுள்ளன.  சி.வை. தாமோ தரம் பிள்ளையின் ஒவ்வொரு பதிப்புக்கும் ரூபாய் நூறு வழங்கியதுடன் விலை கொடுத்துச் சில படி களையும் திருவாவடுதுறை மடம் வாங்கி வந்தது. இதனால்தான் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கால அடிப்படையில் பகுக்கும் போது ‘ஆதீன காலம்’என்று அவர் குறிப்பிடுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமீன்தார்களும் மடாதிபதிகளும் செல்வாக்கை இழக்கத் தொடங்கினர். இவர்களது ஆதரவு குறைந்து போன நிலையில் இந்த இடத்தைக் காலனிய ஆட்சியின் விளைவால் உருவான புதிய மத்தியதர வர்க்கத்தினர் பிடித்துக் கொண்டனர். மடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு மாறாக நவீன கல்வி பெற்ற புதிய அறிவாளிகளை நோக்கி விண்ணப்பிக்கலாயினர்.  இம்முயற்சியில் சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களும் துணைநின்றன.சி.வை.தாமோதரம் பிள்ளை கலித்தொகையைப் பதிப்பிக்கும் போது ‘இந்து’நாளேட்டின் வாயிலாகத் தம் புத்தகப் பதிப்பிற்கு நன்கொடை வழங்க வேண்டு கோள் விடுத்தார்.  வெளியான வேண்டுகோளுக்கு இணங்கிப் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறி ஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என ஆங்கிலக்கல்வி கற்று மாத ஊதியம் பெறும் மூளை உழைப்பாளிகள் புரவலர்களாயினர்.

மேலும் 30 அல்லது 31 பாரங்களுக்கு (16 பக்கங்கள் = ஒரு பாரம்) மிகாமலிருந்தால் அந் நூல்களை இலவசமாக வெளியிடுவதாக ‘இந்து’ நிர்வாகம் தம்மிடம் கூறியதாக தாமோதரம் பிள்ளை தம் கலித்தொகைப் பதிப்பின் முன்னுரையில் குறிப் பிட்டுள்ளார்.இதுபோன்றே உ.வே.சா.வின் சீவகசிந்தாமணிப் பதிப்பும் நன்கொடைகள் துணையுடன் வெளியானது.  திருவாவடுதுறை மடம் முதல் கொடையாளரானது. கும்பகோணத்தில் மட்டும் எழுபது சந்தாதாரர்கள் சேர்ந்தனர். தாம் சந்தாதாரானதுடன் மட்டுமின்றி மற்றவர்களிடம் பெற்றும் கொடுத்தனர்.  பழைய கையெழுத்துப் படிகளை அச்சிடும் பணியில் உ.வே.சா.  ஈடுபடும்படி தூண்டியவரும் நீதிபதியாகப் பணியாற்றி வந்தவருமான சேலம் இராமசாமி முதலியார், பலரிடம் சந்தாசேர்த்துக் கொடுத்தார். 

இலங்கை அரசில் செல்வாக்குப் பெற்றிருந்த சர் பொன்னம் பலம் இராமனாதனும், அவரது சகோதரரும் உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளுக்கு நிதி உதவி புரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.இத்தகைய நிதியுதவி பத்தொன்பதாம் நூற் றாண்டின் இறுதிப் பகுதியில் வளர்ச்சி பெற்றதை உ.வே.சா.வின் சுயசரிதை வாயிலாக அறிய முடிகிறது. 

சென்னை நகரில் நீதிபதிகளும்,வழக்கறிஞர்களும் அவரது புரவலர்களாக மாறியுள்ளனர்.ஆங்கிலக் கல்விகற்று உயர்பதவிகளில் இருந்தோர் மட்டுமின்றி,வளம்பெற்ற புதிய சமூகமாக விளங்கிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் இம்முயற்சியில் துணை நின்றுள்ளனர்.  ஆறுமுகம் பிள்ளை பதிப்பித்த ‘சோடசபிரபந்தம்’என்ற நூலை வெளியிட உதவிய 180 சந்தாதாரர்களில் நூறுபேர் இச்சமூகத்தினர். நகரத்தாரின் இக்கொடைச் சிறப்பை உ.வே.சா.வும் வியந்து பாராட்டியுள்ளார்.இவ்வாறு 19ஆம் நூற்றாண்டின் இறுதி இருபதாண்டுகளில் தமிழ் நூல்வெளியீடு சந்தாதாரர் களின் ஆதவைப் பெற்று வளர்ந்தது.

புரவலரிலிருந்து பொதுமக்களுக்கு

காலனிய ஆட்சியின் விளைவால் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாறுதல்களின் தாக்கத்தால் மேற்கூறப்பட்ட புரவலர்களின் ஆதரவால் நூல் அச்சிடுவதில் சுணக்கம் ஏற்படலாயிற்று.  பண்டைய இலக்கியங்கள், சமய நூல்களுக்கு மாறாக நிகழ் காலத்திற்குப் பொருத்தமான நூல்களைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் வெளியிட வேண்டும் என்ற விமர்சனம் மத்தியதர வர்க்க அறி வாளிகளிடமிருந்து வந்தது.

இவ்வகையில் புரவலர்களின் துணையுடன் அச்சாக்கம் நிகழும் காலமாகவும், அது குறித்த மாற்றுக்கருத்துக்கள் உருவான காலமாகவும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் அமைந்தது.  இதனால், மாறுதல் நிகழும் காலம் என்று இக் காலத்தைக் குறிப்பிடலாம்.இக்காலத்தின் அச்சாக்க முயற்சிகளுக்கு எடுத்துக் காட்டாகப் பாரதியாரும், எம்.வி. ராமானுஜாச்சாரி யாரும் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடலாம்.

‘நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்’

என்று 1918இல் எழுதிய பாரதியின் கவிதை வரி களில் முதல்வரி கவனத்திற்குரியது.  எட்டையபுரம் அரசவைக் கவிஞனாக 1902இல் தன் வாழ்வைத் தொடங்கிய பாரதி 1921இல் சுதேசமித்திரன் நாளிதழின் துணையாசிரியராக மரணமடைந்தான். நூறுநாட்கள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களைத் தவிர அவனது வாழ்க்கை, நூலாசிரியர், கவிஞர், பத்திரிகையாசிரியர் என்றே கழிந்தது. தன் வாழ்க்கைக் காலத்தில் இருபது நூல்களை அவன் வெளியிட்டான். அவற்றுள் நான்கு நூல்கள் மட்டுமே இரண்டாம் பதிப்பைக் கண்டன.  அவை ஒவ்வொன்றும் ஆயிரம் படிகளுக்கும் குறைவாகவே அச்சிடப்பட்டன.

அவனது முதல் நூல் விலையில்லாமல் வழங்கப் பட,காங்கிரஸ் மகாசபை வரலாறு என்ற நூலின் மொழிபெயர்ப்பு ஒரு ரூபாய் என விலையிடப்பட்டது. ஏனைய நூல்கள் ஒவ்வொன்றும் இரண் டணா (12 காசு) விலைக்கு விற்கப்பட்டன. அவனது தொடக்ககால நூல்களை அவனே சொந்தமாக வெளியிட -பின்னர் அவனது ஆதரவாளராலும் அவை வெளியிடப்பட்டன.  தனது சுயசரிதையான ‘கனவு’ என்ற கவிதை நூலின் முன்னுரையில், ‘அச்சு நேர்த்தியாக விழாதிருப்பது எனது பிழையன்று, நமது நாட்டுச் செல்வர்களின் பிழை’ என்று எழுதியுள்ளான்.  பாஞ்சாலிசபதம் நூலில் ‘ஸமர்ப் பணம்’ என்ற தலைப்பில்,

தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும்
இயலுமாறு, இனிப்பிறந்து காவியங்கள்
செய்யப்போகிற வரகவிகளுக்கும்
அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள்
செய்யப் போகிற பிரபுக்களுக்கும், இந்நூலைப்
பாத காணிக்கையாகச் செலுத்துகின்றேன்.

என்று எழுதியுள்ளான். ‘கனவு’என்ற தலைப்பிலான தன் சுயசரிதை நூலுக்கு எழுதிய முன்னுரையில்,இச்சிறிய செய்யுள் நூல் விநோதர்த்தமாக எழுதப்பட்டது. ஒரு சில பாட்டுக்கள் இன்ப மளிக்கக் கூடியன.  பதர் மிகுதியாகக் கலந்திருக்கக் கூடும்.  இதன் இயல் தலைவன் கூற் றெனப்படும்-அதாவது, கதாநாயகன் தனது சுயசரிதையைத் தான் நேராகவே சொல்லும் நடை.  இப்புதியவழி தமிழறிந்த மேலோர்கள் அங்கீகரிக்கத் தக்கதுதானா என்று பார்வை யிடும் பொருட்டுச் சிறிய நூலொன்றை முதலில் வெளியிடுகிறேன். இதனைப் பதம்பார்த்து மேலோர் நன்றென்பாராயின் இவ்வழியிலேயே வேறு பல வெளியாக்குவேன்.”

என்று எழுதிய பாரதி இரண்டு வருடங்கள் கழித்து எழுதிய பாஞ்சாலி சபதம் முகவுரையில்,“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு-இவற்றினையுடைய காவிய மொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனா கின்றான்.  ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்க முள்ள தமிழ் மக்களெல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத் துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்.”

என்று எழுதியுள்ளான்.  ‘கனவு’ நூலின் முன்னுரையில் ‘மேலோர்’ என்று குறிப்பிட்ட முந்தைய தலை முறை அறிவாளிகளிடமிருந்து விலகிப் புதிய வாசகர் களை நோக்கி அவன் திரும்பியுள்ளான் என்பதை பாஞ்சாலிசபதம் முகவுரையால் அறியமுடிகிறது.  புரவலர், பொதுமக்கள் குறித்த பாரதியின் அணுகு முறையில் காணப்படும் ஊசலாட்டத்தை மேற் கூறப்பட்ட மேற்கோள்கள் உணர்த்துகின்றன. உறுதியில்லாத இருமனப்போக்கு என்பது மாறுதல் நிகழும் காலத்தின் முக்கிய பண்பாகும். புரவலர் குறித்து அவனது கருத்தில் ஏற்பட்ட தெளிவான மாறுதலை 1916ஆம் ஆண்டில் அவன் எழுதிய கட்டுரையில் இடம்பெறும் பின்வரும் பகுதிகள் உணர்த்துகின்றன.

“இப்பொழுது உலக முழுவதிலுமே ராஜாக் களையும் பிரபுக்களையும் நம்பி, வித்தை பழகும் காலம் போய்விட்டது.  பொதுஜனங் களை நம்பவேண்டும்.  இனிமேல் கலைகளுக் கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வான்களுடைய கடமை.  பிறகு நல்ல போஷணை கிடைக்கும்.

ஒரு பிரபு மாதம் ரூபாய் நூறு கொடுப்பான்.  ஊர் சேர்ந்தால் தலைக்குக் கால் ரூபாயாக (25 காசு) வசூல் பண்ணி மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும்.  ஊரையே யஜமானனாகக் கொள்ள வேண்டும்.

ஊர்தான் ராஜா. இந்த ராஜாவுக்கு ஆரம் பத்திலே கொஞ்சம் ஞானம் அளித்துப் பழக்கங் கொடுத்தால் வித்தைகளுக்கு எவ்விதமான குறைவும் ஏற்படாது.”

தன் படைப்புகளுக்கான புரவலர்களாகக் கல்வி யறிவு கொண்ட பொதுமக்களை நம்பிய பாரதி, அவர்களிடம் தன் நூல்கள் சென்றடையவும், தன் வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் எட்டையபுரம் சமீன்தாரை நாடவேண்டிய அவலம் ஏற்பட்டது.

‘என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்’ என்று பாடிய பாரதி தன் ஏழ்மையைப் போக்க 1919இல் எட்டையபுரம் சமீன்தாருக்குச் சீட்டுக்கவிகளும் கடிதங்களும் எழுத வேண்டிய அவலத்திற்கு ஆட்பட்டான். ஆனால் பயன் ஒன்றும் கிட்டவில்லை. தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் 1920ஜூன் 21இல் தன் நூல்களைத் தொகுத்து வெளியிடும் பெரிய திட்டம் ஒன்றை ஆங்கிலத்திலும்,தமிழிலும் வெளியிட்டு நன்கொடைகளும் கடனும் வேண்டினான். தன் நூல்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி நாற்பது புத்தகங்களாகப் பிரித்து,ஒவ்வொரு புத்தகத்திலும் பத்தாயிரம் படிகள் அச்சிடவேண்டுமென்பது அவனது விருப்பம். இதை அவன் வெளிப்படுத்தியுள்ளது வருமாறு:

40 X 10,000 (நாற்பதைப் பத்தாயிரத்தால் பெருக்கும்போது நாலுலட்சம் சுவடிகளா கின்றன.)  இந்நான்கு லட்சம் புஸ்தகங்களும் தமிழ்நாட்டில்,மண்ணெண்ணெய் தீப்பெட்டி களைக் காட்டிலும் அதிக சாதாரணமாகவும் அதிக விரைவாகவும் விலைப்பட்டுப்போகும் என்பதில் சிறிதேனும் சந்தேகத்திற்கிடமில்லை.  இங்ஙனம் நிச்சயமாக அறிந்துகொள்ள எத் தனையோ காரணங்களிருக்கின்றன. இவற்றுள் முக்கியமான சில காரணங்களை இங்குக் குறிப் பிடுகிறேன்.முதலாவது,இந்நூல்களில்பெரும்பகுதிவசன நூல்கள்,நேர்த்தியான,ஆச்சர்யமான, ரஸமான, வாசிக்க வாசிக்கத் தெவிட்டாத கதைகளடங்கிய வசன கிரந்தங்கள். மிகவும் தெளிவான,இனிய,எளிய தமிழ்நடையில் குழந்தைகளுக்குங் கூட நன்றாக விளங்கும்படி எழுதப்பட்டன.

இரண்டாவது, தமிழ்நாட்டிலும், தமிழர் சென்று குடியேறியிருக்கும் வெளித்தீவுகளிலும் தமிழ் வாசிப்பவரின் ஜனத்தொகை நாளுக்கு நாள் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகிக் கொண்டு வருகிறது.

மூன்றாவது,இந்த நூல்கள் அச்சிடப்படும் மாதிரியே இவை ஏராளமாக விலைப்படுவதற் கொரு சாதனமாகும். அமெரிக்கா,அய்ரோப்பா கண்டத்துப் பதிப்புகளைப் போல் நேர்த்தி யாகவும் மனோரம்யமாகவும் நல்ல காயிதத்தில் தெளிவான எழுத்துக்களில் தெளிவாகப் பதம் பிரித்து,ஆச்சர்யமான தகுந்த சித்திரங்கள் பதிப்பித்து வெளியிடுவதால்,இந்நூல்கள் ஜனங்களுக்குள்ளே மிகுந்த வியப்பையும், பிரியத்தையும் விளைவித்து லட்சக் கணக்காக விலையாகும் என்பதில் சந்தேகமில்லை.

நான்காவது,ஏழை எளியவர் உட்பட சகல ஜனங்களும் வாங்கும்படி இவற்றின் விலை மிகவும் குறைவாக ஏற்படுத்தப்படும். சராசரி ஒரு புத்தகத்தின் விலை அரைரூபாய் (அய்ம்பது காசு)

பாரதியின் இத்திட்டம் நிறைவேறவில்லை. பாரதியின் சிறந்த படைப்பான குயில்பாட்டில், பெண்ணாக மாறிய குயிலை,

"நண்ணித் தழுவி நறுங்கள் இதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சில போழ்து"

ஆழ்ந்திருப்பதாகக் கனவுகண்டு கவிஞன் விழித்தெழுகிறான். விழித்துப் பார்க்கும்போது ஏற்பட்ட உணர்வை, 

'சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்
பத்திரிகைக் கூட்டம் பழம்பாய் வரிசையெல்லாம்
ஒத்திருக்க ‘நாம் வீட்டில் உள்ளோம்’ எனவுணர்ந்தேன்"
என்று பாரதி பாடியது அவனது நூல் வெளி யீட்டுத் திட்டம், கனவாய்ப் போனதை வெளிப் படுத்துகிறதோ?

பாரதியைப் போன்றே பொதுமக்களை நம்பி நூல் வெளியீட்டு முயற்சிக்குத் திட்டமிட்டவர் எம்.வி.ராமானுஜாச்சாரி (1866-1940). தஞ்சை மாவட்டம் மணலூரில் பிறந்த இவர் தொடக்கத்தில் திருச்சியில் தலைமைத் தணிக்கையாளர் அலுவல கத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.  தமிழாசிரிய ராகவும், தன் சொந்தக் கிராமத்தில் கிராம அதி காரியாகவும் பணிபுரிந்து இறுதியில் கும்பகோணம் அரசு கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பண்டித ராகவும் பணியாற்றி 1921இல் பணி ஓய்வு பெற்றார்.

வியாசரின் மகாபாரதத்தை வடமொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பிக்கும் பணியில் 1907 வாக்கில் ஈடுபட்ட இவர் 1908 இல் அதன் முதல் பகுதியை வெளியிட்டார்.  இருநூறு பக்க அளவில் இரண்டு மாத இடைவெளியில் தொடர்ச்சி யாக வெளியிட வேண்டுமென்பது அவரது விருப்ப மாக இருந்தது. இதற்கான செலவை சந்தாக்கள் வாயிலாகப் பெறுவது அவரது திட்டமாகும்.  உ.வே.சா.  முப்பது ரூபாய் அனுப்பினார்.  பேரா சிரியர் கே.சுந்தரம் அய்யர் இருநூறு ரூபாய் கொடை யாக வழங்கியதுடன் ஒவ்வொரு பகுதிக்கும் பத்து ரூபாய் வழங்குவதாகவும் ஒப்புக்கொண்டார்.

தனியொருவரால் செய்யமுடியாத வேலை என்பதால் சமஸ்கிருத அறிஞர்களைக் கொண்ட குழுவை, மொழிபெயர்க்கவும், சரிபார்க்கவும் மாத ஊதியத்தில் நியமித்தார்.  இப்பணியில் இவர்களுக்குதவ உதவியாளர்களையும் நியமித்தார். அவரது முயற்சிக்கு ஆதரவைவிட இடையூறுகளே அதிகமாகக் கிட்டின.  பதிப்பாளர் ஒருவரின் தூண்டுதலின்பேரில், மொழி பெயர்ப்பின் ஒரு பகுதியை,அவர் நியமித்த மொழி பெயர்ப்பாளர்களில் ஒருவர் தன் பெயரில் வெளியிட்டுவிட்டார்.

மொழிபெயர்ப்புப்பணி நேரத்தை விழுங்கு வதாய் அமைந்தது.  பாரதத்தின் ஒரு குறிப்பிட்ட பர்வம் ஓர் அறிஞரால் மொழிபெயர்க்கப்படும்.  பின், மொழிபெயர்த்தவரே மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து திருத்தங்கள் செய்து ராமானுஜாச்சாரி யாரிடம் தருவார்.  இக்கையெழுத்துப்படி மற்றொரு அறிஞரிடம் ஒப்பிட்டுப்பார்க்கத் தரப்படும். அவர் தரும் விமர்சனங்களின் அடிப்படையில் மொழி பெயர்ப்பாளர் திருத்தங்கள் செய்து கையெழுத்துப் படிக்கு இறுதிவடிவம் தருவார். இதை மற்றொரு அறிஞர் மூலத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து திருத்தங்கள் செய்வார். இவ்வாறு பல அறிஞர்களின் பங்களிப்பு இருந்தாலும் முதலில் மொழிபெயர்த்தவரின் பெயரிலேயே நூல் வெளியாகும்.

16 ஜனவரி 1914இல் பாரதம் நூல் வெளியீடு தொடர்பான விவர அறிக்கையை ‘இந்து’ நாளேட்டில் வெளியிட்டார். அதில் இராமாயணத்தைவிட பாரதம் ஐந்து மடங்கு பெரியது என்று குறிப் பிட்டிருந்தார்.  இதற்குப் பெரிய அளவில் ஆதரவு கிட்டவில்லை.  1915 ஜூன் மாதம் சாந்திபர்வத்தி லுள்ள மோட்சதர்மம் அச்சுக்குத் தயாரானது. தொடக்கத்தில் 800 சந்தாதாரர்கள் இருந்தனர்.  ஆதிபர்வம், சபாபர்வம், விராடபர்வம், சாந்தி பர்வம் என்ற நான்கு பர்வங்களும் மொத்தம் மூவாயிரம் பக்க அளவில் 1915க்குள் வெளியாயின. சாந்திபர்வம் இரு தொகுதிகளாக வெளிவந்தது.

நிதி உதவி கேட்டு அரசுக்கு அவர் அளித்த விண்ணப்பத்தால் பெரிதாகப் பயன் எதுவும் கிட்டவில்லை.  நான்கு பகுதிகளையும் சேர்த்து ரூபாய் 25 விலையில் 40 படிகள் வாங்க அரசு உத்தர விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ராமானு ஜாச்சாரி தமது நூல் வெளியீட்டுத்திட்டத்தின் வரவு-செலவுக் கணக்குகளை அரசுக்கு அனுப்பினார்.  அதன்படி 1915 ஏப்ரல் முடிய 29,900 ரூபாய் செலவாகியுள்ளது.  எதிர்காலச் செலவுக்கு 25,860 தேவையாயிருந்தது. வாசகர்கள் அனுப்பிய கட்டணம் வாயிலாக 12,600ரூபாயும், நன்கொடை வாயிலாக 3200 ரூபாயும் கிட்டியிருந்தன.  ஆயிரம் தொகுதிகள் கையிருப்பில் இருந்தன.  இவற்றின் மதிப்பு மூவாயிரம் ரூபாயாகும். அரசு அவரது கணக்கைப் பொருட் படுத்தவில்லை.  முதலில் கூறிய 40 படிகளுடன் மேலும் 35 படிகள் (மொத்தம் 75படிகள்) வாங்க உத்தரவிட்டது.

1921இல் ராமானுஜாச்சாரி கும்பகோணம் கல்லூரிப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற போது 27 பகுதிகள் வெளியாகியிருந்தன.  மேலும் பல சந்தா தாரர்களைச் சேர்க்க வாய்ப்பான இடம் என்ற நம்பிக்கையுடன் சென்னையில் குடியேறினார். ஆனால் ஏமாற்றம்தான் கிட்டியது.  நான்கு பகுதிகள் மட்டுமே அவரால் வெளியிட முடிந்தது.  நகர வாழ்க்கைச் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தாம் பிறந்த ஊரான மணலூருக்கு 1923 மே இல் இடம்பெயர்ந்தார்.

இதன் பின் ஓரளவு நன்கொடைகள் கிடைத்தன;இதனால் மேலும் அய்ந்து பகுதிகளை அச்சிட முடிந்தது. தனித்தனியாக விற்றதால் கையிருப்பில் உள்ள படிகளைக் கொண்டு விற்பனைக்கான முழுமையான தொகுதிகளை உருவாக்க முடியவில்லை. இதனால் முன்னர் அச்சிட்ட பகுதிகளை மீண்டும் அச்சிடும் சுமை ஏற்பட்டது.

1928 மார்ச்சில் மீண்டும் சென்னை சென்றார்.  அங்கு மேலும் நான்கு பகுதிகளை வெளியிட்டார். மாத வருவாய்க்காரர்களிடமிருந்து-குறிப்பாக, வழக்கறிஞர்களிடமிருந்து சந்தாக்கள் கிடைத்தன. இரண்டாவது வேண்டுகோளை வெளியிட்டபோது அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் மட்டுமே சந்தா அனுப்பினார்.

1929 செப்டம்பருக்குப்பின் மீண்டும் மணலூர் சென்றார்.  அறிவார்ந்த சூழல் அங்குக் கிட்டாத நிலையில் கும்பகோணம் சென்றார்.  அங்கு இறுதிப்பகுதியை வெளியிட்டார்.

1930இல் பாரத நூல் முற்றுப்பெற்றபோது ஒன்பதினாயிரம் பக்கங்களுக்கு மேல் டெம்மி ஆக்டோவா அளவில் அச்சாகியிருந்தது. ஒரு லட்சத்து முப்பத்தி அய்யாயிரம் ரூபாய் செலவாகியிருந்தது. தம் சொந்தப் பணத்தில் பதினைந்தாயிரம் ரூபாய் வரை செலவழித்திருந்தார். தொடக்கத்தில் 800 சந்தா தாரர்கள் இருந்த நிலையில் இறுதியில் 250க்கும் குறைவான சந்தாக்களே முற்றுப்பெற்ற நிலையில் இருந்தன.

நூல் வெளியீடு முடிந்த நிலையில் பொருளா தார நெருக்கடிக்கு ராமானுஜாச்சாரி ஆளாகி யிருந்தார். இதைத் தீர்க்க அவரது மனைவியின் பூர்வீகச் சொத்துக்கள் பயன்பட்டன.  ஆங்கிலேயர் களுக்கு உரிமையான லாங்மென்கிரின் அன்கோ என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது மகன்,தன் தந்தையின் நூல் வெளி யீட்டில் உதவும் பொருட்டு வேலையை விட்டு வந்தார்.

ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நூலைப் பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் பொருளடைவு தயாரிக்கத் திட்டமிட்டார்.  இதற்கு இரண்டாண்டுகள் வரை ஆகுமென்று கணக் கிட்டார்.  அதே நேரத்தில் கடனாளியாக அவர் விரும்பவில்லை. நிதி உதவி இன்றி இதைச் செயல் படுத்த முடியாது என்பதை வனபர்வத்தின் முன்னுரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

புரவலர்காலத்திற்கும் சந்தைப்பொருளாகப் புத்தகம் மாறிய காலத்திற்கும் இடையிலான மாறுதல் நிகழும் காலத்தில் குறிக்கோளுடன் கூடிய செயலாக இருந்த அவரது இம்முயற்சி அவரது மறைவுக்குப் பின் வியாபார அளவில் வெற்றிபெற்றது. அவரது மகன் எம்.ஆர்.இராஜகோபாலன் 1950இல் அனைத்துத் தொகுதிகளையும் மீண்டும் அச்சிட்டார்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் பாரதியும் இராமானுஜாச்சாரியும் புரவலர்களை நம்பாது, வளர்ந்து வந்த மத்தியதர வர்க்கத்தை நம்பிச் செயல்பட்டுள்ளனர்.  மேலும் கருத்துநிலையில் மரபுவழியிலான புரவலர் ஆதரவை பாரதி எதிர்த்து வந்துள்ளான். ‘ஜமீன்தார்கள் மீதும் பிரபுக்கள் மீதும் ‘காமாசோமா’என்று புகழ்ச்சிப் பாட்டுக்கள் பாடினால் கொஞ்சம் ஸன்மானம் கிடைக்கிறது’என்று 1916இல் எழுதி யுள்ளான். ‘காக்கை இலக்கணம் கற்ற கதை’ என்ற தலைப்பில் அவன் எழுதிய கதையில் இடம்பெறும் ஆண் காகம் ‘நான் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவன், ராஜ சபையில் வாங்கும் சன்மானங்கள் எனக்கு அவசியமில்லை’ என்கிறது.

இத்தகைய புரவலர்களுக்கு மாற்றாக ‘இங்கிலீஸ் படித்த தமிழ் மக்கள்,முக்கியமாக வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும்’புதிய புரவலர் களாகப் பாரதிக்குக் காட்சியளித்தனர்.  இவர்களை மையமாகக் கொண்டே தன் நூல் வெளியீட்டுத் திட்டத்தை பாரதி 1920இல் அறிவித்துள்ளான். ஆனால் இம்மக்களிடம் சமூக விழிப்புணர்வு தோன்றாத நிலையில் பாரதியும் ராமனுஜாச்சாரியும் பழைய புரவலர்களை நாடிச் செல்லும்படி நேர்ந்தது.

காலனிய ஆட்சியில் உருப்பெற்ற புதிய மத்திய தர வர்க்கத்தின் ஆதரவு இவ்விருவருக்கும் கிட்டாதது போலவே வ.வே.சு.அய்யருக்கும் கிட்டவில்லை. ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலைத்தொகுத்து உருவாக்கிய சிங்காரவேலு முதலியாரால்,பாண்டித் துரைத் தேவரின் உதவிகிட்டியதால்தான் அதை வெளியிடமுடிந்தது. எழுத்தாளர்கள் புரவலர்களையும், சந்தாதாரர்களையும் நாடிச் சென்றமையானது மத்தியதர வர்க்கத்தினரிடம் புத்தகச்சந்தை சென்றடை யாமையின் வெளிப்பாடுதான். இந்நிலை குறித்து பாரதி,

தமிழ்நாட்டிலே புஸ்தகம் எழுதுவோரின் நிலைமை இன்னும் சீராகவில்லை. பிரசுரத் தொழிலை ஒரு வியாபாரமாக நடத்தும் முதலாளிகள் வெளிப்படவில்லையாதலின் சங்கடம் நீங்காமலிருக்கிறது... இந்த வியா பாரத்தை நமது முதலாளிகள் தக்கபடி கவனி யாமலிருப்பது வியப்பை உண்டாக்குகிறது.  புஸ்தகங்கள் வெளிவரத்தான் செய்கின்றன.  பெருந்தொகையான மக்கள் வாங்கிப் படிக்கத் தான் செய்கிறார்கள். ஒரு ஒழுங்கான பிரசுர வியாபாரம் நடந்தால் ஜனங்களுக்கு நல்ல புஸ்தகங்கள் கிடைக்கும்...மேன்மேலும் ஊக்கத்துடன் நடத்தினால் பிரசுர வியாபாரத்தில் நிறைய லாபம் உண்டாகுமென்பதில் சந்தேக மில்லை

என்று எழுதியுள்ளான்.  மேலும் முதல் உலகயுத்தம், நூல் வெளியீட்டைப் பாதித்தது. யுத்த காலத்தில் ராமனுஜாச்சாரியார் தம் பாரத வெளியீட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். 2ரூபாய் 13அணாவுக்கு விற்ற ஒரு ரீம் தாள் ஏழரை ரூபாயாக உயர்ந்துவிட்டதாக மறைமலையடிகள் குறிப்பிட்டு உள்ளார்.யுத்தம் முடிந்த பின்னர் புரவலர்-பொது மக்களுக்கு இடையிலான மாறுதல் நிகழும் காலம் முடிவுற்றது. 

சந்தையை நோக்கி

காலனி ஆட்சியின் விளைவுகளில் ஒன்றாக நாவல் என்ற இலக்கிய வகைமை உருப்பெற்றது. தமிழில் அதிக எண்ணிக்கையில் நாவல்கள் வெளி வரத்தொடங்கின.  பத்திரிகைகளில் நாவல்கள் தொடர்பாக வெளிவந்த விளம்பரங்கள் இதை உணர்த்துகின்றன.  இவற்றுள் பெரும்பாலானவை துப்பறியும் நாவல்கள்.  ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி முதலியார் ஆகியோரது நாவல்கள் பலபதிப்புகளைக் கண்டன.  இந்நாவல்களில் சில நாடக வடிவில் மேடையேறின.  வளர்ந்து வரும் மத்தியதர வர்க்கத்தின் கலை வடிவ மாக மாறிய நாவல் புரவலர்களைத் தாண்டி சந்தைப் பொருளாகியது. அதே நேரத்தில் மத்தியதர வர்க்க அறிவாளிகள் வெகுசன நாவல்களைக் கடுமையாகச் சாடினர். நாவல் வாசகர்களில் பெண்வாசகர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.

‘சுதந்திரச்சங்கு’ என்ற இதழில், பிரபலமான முறையில் நாவல் எழுதுவது குறித்துப் பின்வரும் பகடியான அறிவுரைகள் வெளியாயின.

1) நாவலின் தலைப்பு பெண்ணைச் சார்ந்து, புதுமையான பெயர்களில் ‘மிஸ் லீலா காமினி’,  ‘நாகரிக வள்ளிபாய்’ என்பது போல் அமைய லாம்.

2) கதையைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.  ரெயினால்ட்ஸ் அல்லது லீயூக்ஸ் நாவல்களைத் தழுவிக் கொள்ளுங்கள்.  குறைந்தது ஒரு டஜன் காதலர்கள், அரை டஜன் விலை மகளிர், பத்து டஜன் திருடர்கள், கொஞ்சம் துப்பறி வோர் இருக்கவேண்டும்.

3) நாவலின் தொடக்கத்தில் ஒரு கொலை நிகழ்ந்திருக்க வேண்டும்.  அடுத்தடுத்து இடையில் சுவையான திருப்பங்கள் இடம்பெறவேண்டும்.  நவீன நாவலின் பண்புகள் இவைதாம்.

4) பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும்.  மாதவையா, ராஜம் அய்யர் போன்று எழுதினால் உங்கள் நூல்கள் விற்பனை யாகாது என்பதில் எச்சரிக்கையாயிருங்கள்.

எள்ளல் தன்மையுடன் கூடிய இவ் அறிவுரைகள் சந்தைப் பொருளாக வெளியான நாவல்களின் உள்ளடக்கத்தை நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன.

1930களில் நாவல்களின் உள்ளடக்கத்தில் மாறுதல் ஏற்படலாயிற்று.  இதில் கல்கியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தமிழ் நூல் வெளியீடானது மத்தியதரவர்க்கத்தின் சந்தைப் பொருளாக மாறியது.

நூலாசிரியர்- வெளியீட்டாளர்- அச்சகத்தார்

மரபுவழிப்பட்ட இலக்கியங்களையும் தல புராணங்களையும் படைப்போர்,ஓலைச்சுவடி களில் இருக்கும் நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவோர் என இருதரப்பட்ட எழுத்தாளர்களையடுத்து வேறு வகையான இலக்கியப் படைப்பாளிகள் பெரும்பாலும் ஆசிரியர்களிடமிருந்து தோன்றினர். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கல்விமுறையிலிருந்து இலக்கண அரிச்சுவடிகள், அகராதிகள், தேர்ந்தெடுக்கப் பட்ட இலக்கியப் பகுதிகள், வழிகாட்டி நூல்கள், தேர்வுக்கான வினாவிடை நூல்கள் என்பன வெளி யாயின. ஆதாயம் தரும் இத்தொழில் குறித்து உ.வே.சா.,

அந்தக் காலத்தில் காலேஜ் வகுப்புகளுக்குத் தமிழ்ப் பாடம் வைக்கும் முறை மிக விசித்திர மானது.  பேர்மாத்திரம் தெரிந்த நூலிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியைப் பாடமாக வைத்து விடுவார்கள்.  ஏட்டுச் சுவடியைத் தேடியெடுத்து, உள்ளது உள்ளபடியே யாரேனும் பதிப்பிப் பார்கள்.  அதை வைத்துக் கொண்டு தெரிந்ததோ தெரியாததோ எல்லாவற்றையும் குழப்பித் தமிழாசிரியர்கள் பாடம் சொல்லுவார்கள்.

இத்தகைய சூழலில் ஆதாயம் கருதி தமிழாசிரியர் களும் அறிஞர்கள் சிலரும் புத்தகத்தைத் தாமே அச் சிட்டு விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டனர். இவ்வகையில் வை.மு.சடகோபராமானுச்சாரி என் பவர் முக்கியமானவர். இவர் பதிப்பித்த நன்னூல் ஆயிரம் படிகள் வரைவிற்றது. சோடசவதானம் சுப்பராய செட்டியார், டி.டி.கனகசுந்தரம்பிள்ளை, மு.இரா.கந்தசாமிக் கவிராயர், பின்னத்தூர் நாராயண சாமி அய்யர் ஆகியோர் இவ்வரிசையில் இடம்பெற்ற முக்கிய அறிஞர்கள்.  பாடநூல் தேர்வுக்குழு, மற்றும் அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களைச் சார்ந்தே இப்பாட நூல்களின் விற்பனை அமைந்தது.  உ.வே.சா. தம் சுயசரிதையில், “சோடசவதானம் சுப்பராய செட்டியார் தமது நூல்களைக் கும்பகோணம் அரசு கல்லூரியில் பாடமாக வைக்கவேண்டி,தமக்கும் வித்துவான் தியாகராசசெட்டியாருக்கும் கடிதங்கள் எழுதுவார்” என்று எழுதியுள்ளார்.

குறைந்த உழைப்பு,உடனடியான பொருளாதார பலன் என ஆதாயமிக்கவையாக இவ்வெளியீடுகள் அமைந்தன. தமது கலித்தொகைப் பதிப்பின் முன்னுரையில், “எழுத்தாளர்களும் அவற்றை வெளி யிடுவோரும் விரைவில் பணம் ஈட்ட, அறிஞர்கள் செவ்விலக்கியங்களை வெளியிட வாய்ப்பிழந்து நிற்கிறார்கள்”என்று சி.வை.தாமோதரம் பிள்ளை யெழுதியுள்ளார்.

நூலாசிரியர்களே வெளியீட்டாளர்களாகவும் சில போழ்து அச்சக உரிமையாளர்களாகவும் விளங்கி யுள்ளனர்.  பாரதியார், உ.வே.சா., மறைமலையடிகள், திரு.வி.க., அ.மாதவைய்யா என்போர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்.  1920இல் ‘பிரசுரகர்த்தா’ என்ற பெயரில் நூல் வெளியீட்டாளர்கள் தோன்றலாயினர். நூலாசிரியர்களுக்கு இவர்கள் முறையாக மதிப்பூதியம் வழங்கவில்லை. தமிழறிஞர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை,அவ்வை துரைசாமிப்பிள்ளை ஆகியோர் முறையான மதிப்பூதியம் பெறாத நிலையைத் தம் வெளியீட்டாளருக்கு அவர்கள் எழுதிய கடிதங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மதிப்பூதியம் வழங்கப் பட்டாலும் அது அற்பமானதாகவே இருந்தது.

மறுபக்கம் வடுவூர் துரைசாமி அய்யங்கார்,ஜே.ஆர்.ரங்கசாமி,வை.மு.கோதை நாயகி அம்மாள் ஆகிய வெகுசன எழுத்தாளர்கள், தம் நூல்கள் விற்பனையால் ஈட்டிய பணத்தில் சொந்தமாக வீடுகட்டியும் அச்சகம் வைத்தும் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆனால் ஆரணி குப்புசாமி முதலி யாரின் நூல்களின் மொத்த விற்பனை லட்சம் படி களைத் தாண்டியிருந்தாலும் அவர் பணக்காரராக வில்லை. கு.ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன் ஆகிய மணிக்கொடி எழுத்தாளர்கள் வறுமை வாய்ப்பட்டவர்களாகவே வாழ்ந்து மறைந்தார்கள்.

புரவலர்கள் மற்றும் சந்தாக்கள் துணையுடன் நூல் வெளியிடும் வழக்கம் மறைந்தபோது நூல் வெளியீட்டாளர்கள் என்ற பிரிவினர் உருவாயினர். தொடக்ககாலப் பதிப்பாளர்கள் பத்திரிகை உரிமையாளர்களாகவேயிருந்தனர். 1920வாக்கில் தான் நூல் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் அல்லாத பிரிவினர் பதிப்பாளர்களாயினர். இவர் களில் பலர் எளிதில் ஆதாயம்கிட்டும் வெளியீட்டி லேயே ஆர்வம் காட்டிவந்தனர்.

உள்ளாட்சித் துறையின் தலைவர்களை நிறைவு செய்தே பாடநூல்களைப் பாடமாக வைக்க முடிந்தது. இதனால் தகுதி அடிப்படையில் பாடநூல்கள் தேர்வு செய்யப்படவில்லை.  தேசியஇயக்கம் சார்ந்தும்,திராவிட இயக்கம் சார்ந்தும் இக்காலகட்டத்தில் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் உருவாயின. இவ்வகையில் பெரியாரின் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் குறிப்பிடத்தக்க ஒன்று.
*
இந்தியர்கள் அச்சகம் நடத்துவது தொடர் பான கட்டுப்பாடுகள் 1835 இல் தளர்த்தப்பட்ட பின் இந்தியர்களால் அச்சுக் கூடங்கள் நிறுவப்படலாயின. சில நூலாசிரியர்களும் அச்சகம் நிறுவினர். அச்சகஊழியர்களின் ஊதியம் குறைவாகவேயிருந்தது. ஈயத்தாலான எழுத்துக்களைக் கையாளுவதால் அச்சுத் தொழிலாளர்கள் ஈய நச்சுத் தாக்குதலுக்கு ஆளாயினர். வயிற்றுப்புண்,காசநோய் என்பன அச்சுத் தொழிலாளிகளின் தொழில்வழி நோய் களாக இருந்தன.  உலோகத்திற்கு மதிப்பிருந்ததால் ஈய எழுத்துக்கள் திருடுபோயின.

வெகுசனக் குறுநூல்கள்

மேற்கூறப்பட்ட பதிப்பு முயற்சிகளில் இருந்து விலகி நின்று, பெரும்பாலும் அடித்தளமக்கள் பிரி வினரை வாசகர்களாகக் கொண்ட குறுநூல்கள் பல வெளிவரலாயின. நாலணா, ஓரணா என மிகக் குறைந்த விலையில் அமைந்த இந்நூல்கள் விலையின் அடிப்படையில் ஓரணாப்புத்தகம், ஆறுபைசாப்புத்தகம், ஒன்பதுபைசாப்புத்தகம் என்றும்,பெரும்பாலும் பாடல்வடிவில் இருந்தமையால், ‘தன்னானப் பாட்டுகள்’ என்றும் அழைக்கப்பட்டன.

கொலை,கொள்ளை,தீவிபத்து, பரபரப்பான வழக்குகள் என்பன இந்நூல்களின் உள்ளடக்கமாக இருந்தன.  சமயம், கதைப்பாடல்கள், ஒப்பாரி, வழி நடைச்சிந்து, புறாப்பாட்டு, சேவல்பாட்டு, கொலைச் சிந்து, நாடகங்கள், கீர்த்தனை, மருத்துவம், சோதிடம், பெரிய எழுத்துப் புத்தகம், என இவை பல தரப்பட்டன. தேசிய இயக்கம்,சுயமரியாதை இயக்கம் என்ற இயக்கங்கள் சார்ந்தும் குறுநூல்கள் வெளிவந்தன. நாகை சாமிநாதன், வெ.நா.திருமூர்த்தி என்ற இருவரும் இயற்றிய சனரஞ்சகத் தன்மை வாய்ந்த பொதுவுடைமை இயக்கப்பாடல்களும் குறுநூல் வரிசையில் இடம்பெற்றன. அய்ந்து அல்லது பதினாறு பக்கங்களில் டெம்மி அல்லது கிரவுண் வடிவில் இவை அச்சிடப்பட்டன.

தெருமுனையில் நின்றுகொண்டு, பாடி, கூட்டம் சேர்த்து, அக்கூட்டத்தில் இப்புத்தகங் களை விற்பர் என்று திருநெல்வேலி மாவட்ட நீதிபதி 1935 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.  இந் நூல்களில் உள்ள பாடல்களை உரக்கப் பாடிய வாறு இரவலர்கள்,யாசிப்பதும் உண்டு.  இதனால் ‘பிச்சைக்காரன் பாட்டு’ என்ற பெயரையும் இந் நூல்கள் சில பெற்றன.  சென்னை செண்ட்ரல் இரயில் நிலையம் அருகில் குஜராத்திகள் வாழும் பகுதியில் இருந்த கடைத்தெரு குஜிலிபஜார் என அழைக்கப்பட்டது.  குஜராத்திகளை குச்சிலியர் என்றழைத்து, அதுவே குஜிலி என்றாகி,பின் அப் பகுதி குஜிலிபஜார் என்றாயிற்று. இப்பகுதியில் இந்நூல்களை அச்சிட்டு வெளியிடுவோரும் விற்பனை யாளரும் இருந்தமையால், குஜிலிக்கடைப்பதிப்பு என்ற சொல்லாட்சியும் உருவானது.

சென்னையில் மூர்மார்க்கெட், சூளை, மண்ணடி ஆகியன இந்நூல்களின் முக்கிய விற்பனை மையங் களாக விளங்கின. இந்நூலாசிரியர்கள் சிலர் ‘சூளைக் கவிஞர்’என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.  மதுரையில் ‘புதுமண்டபம்’ பகுதி இந்நூல்களை விற்குமிடமாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டு மின்றி கர்நாடகத்தில் கோலார் தங்கச் சுரங்கத்தில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தமிழர்களிடமும்,இலங்கை மலையகத் தமிழர்களிடமும், இந்நூல்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. சென்னையில் தொழி லாளர்கள் மிகுதியாக வாழும் பகுதிகள் இந்நூல் களின் விற்பனைக் களங்களாக அமைந்தன.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் மத்திய தரவர்க்கத்தின் வளர்ச்சியும்,வெகுசன ஊடகங்களின் வளர்ச்சியும் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்தன.  இதனால் இந்நூல்கள் மெதுவாக மறையத் தொடங்கின. 1942இல் தொடங்கப்பட்ட‘தினத்தந்தி’நாளிதழ் குறுநூல் வாசகர்களின் வாசிப்புத் தளத்தைப் பிடித்துக்கொண்டது.

தினத்தந்தி நாளிதழ் தன் பரபரப்பான செய்திகளுக்காக அடித்தளமக்களிடம் பரவலாகியுள்ள தென்று 1956இல் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அரசுக்கு எழுதியுள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. வாசிப்போரை மட்டுமின்றிப் பிறர் உரக்க வாசிக்கக் கேட்போரையும் வாசகர்களாகக் கொண்டதாக தினத்தந்தி விளங்கியதன் அடிப்படையில் அது குறுநூல் வாசகர்களை எளிதில் சென்றடைந்தது.

புத்தகங்கள் மீதான கண்காணிப்பு

காலனிய ஆட்சியானது அச்சு நூல்களைக் கண் காணிக்கும் பணியை மேற்கொண்டது.  1867இல் ‘அச்சகம் மற்றும் புத்தகப்பதிவுச் சட்டம்’ என்ற சட்டம் உருவானது.  இச்சட்டத்தின்படி அச்சடிக்கப் பட்ட ஒவ்வொரு நூலிலும் மூன்று படிகள் அரசுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது கட்டாயமானது. ‘புத்தகப் பதிவாளர்’என்ற பதவி உருவானது.  நூல்களில் ஆபாசம், அரசு எதிர்ப்பு ஆகியன இடம் பெற்றுள்ளனவா என்பதைக் கண்காணிப்பது இவரது பொறுப்பானது.  1910 வாக்கில் குற்றப்புலனாய்வுத் துறையும் இதில் ஈடுபட்டது. இதே ஆண்டில் உருவான இந்திய அச்சகச் சட்டம் அரசியல் சார்பான நூல்களின் மீதான கண்காணிப்பை மேலும் உறுதிப்படுத்தியது. அச்சக உரிமையாளர்கள் காப்புத்தொகை கட்டவேண்டியிருந்தது. 

ஆங்கில அரசு எதிர்ப்பு நூல்களை மட்டுமின்றிப் பொது வுடைமைக் கருத்துக்கள் தொடர்பான நூல்களையும் புழக்கத்தில் இல்லாமல் செய்வதில் குற்றப் புலனாய்வுத் துறை ஈடுபட்டது. 1910இல் சென்னை மாநில கூட்டுறவு ஒன்றிய நூலகத்திலிருந்தும்,1940இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்திலிருந்தும் கம்யூனிச நூல்களும்,கம்யூனிச எதிர்ப்பு நூல்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

கிறித்தவ மிஷனரிகளின் பார்வையில் உருவ வழிபாடு குறித்தவை, ஆபாசமானவை என்று கருதப் பட்டவை பாட நூல்களில் இருந்து நீக்கப்பட்டன. ஒழுக்கம் சார்ந்த இறுக்கமான மதிப்பீடுகளால் சி.வை.தாமோதரம் பிள்ளை தாம் பதிப்பித்த கலித் தொகை நூலில் ‘அல்குல்’ என்று வரும் சொல்லை நீக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

காலனிய ஆட்சியின் கண்காணிப்பினால் தேசிய இயக்கம்,சுயமரியாதை இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களின் வெளியீடுகள் அவ்வப்போது பாதிப்புக்குள்ளாகிவந்தன.  நூல்களைப் பறிமுதல் செய்தல், சிறைத்தண்டனை, அபராதம், அச்சக உரிமையை நீக்கல் என காலனிய அரசின் அடக்குமுறைகள் பாய்ந்தன.

வாசகர்களின் சமூகநிலை,மரபுவழியிலான வாசிப்புமுறை, மௌனவாசிப்பு, நாவல்கள் பெண் களிடம் பெற்றிருந்த செல்வாக்கு,ஒருவர் உரக்கப் படிக்கப் பலர் அதைக் கேட்கும் முறை இருந்தமை-இவ்வழக்கமானது செய்திப்பத்திரிகையைப் பிறர் உரக்கப் படிக்கக்கேட்கும் வழக்கத்திற்கு மாறியமை என்பன நூலின் இறுதிப் பகுதியில் விரிவாகக் கூறப் பட்டுள்ளன.  கட்டுரையின் நீட்சி கருதி அவை இங்குக் குறிப்பிடப்படவில்லை.

ஆவணக்காப்பக ஆவணங்களுடன் நின்று விடாமல் நேர்காணல்கள்,பழமையான செவ்விலக்கிய நூல்கள்,பாடநூல்கள், வெகுஜன இலக்கியம், இயக்க வெளியீடுகள், நாவல்கள் எனப் பரந்து பட்ட நிலையில் தரவுகளைத் திரட்டி சமூகவியல் கண்ணோட்டத்துடன் காலனிய ஆட்சிக் காலத்திய புத்தக அச்சாக்க வரலாற்றை நூலாசிரியர் எழுதி யுள்ளார். தரவுகளின் தொகுப்பாக அமைந்து வாசிப் பவரைச் சலிப்படையச் செய்யவில்லை.  இதற்குக் காரணம் புத்தகத்தையும் அது அச்சாக்கம்பெற்று மக்களிடம் சென்றடைந்ததையும், சமூகவளர்ச்சிப் போக்குடன் இணைத்து நோக்கும் ஆசிரியரது பார்வைதான்.

இந்நூலில் விடுபட்டுப் போன செய்தி ஒன்று உள்ளது. தம் சாதியின் தோற்றம் குறித்துப் பல்வேறு சாதியினர் புராணங்களை உருவாக்கி நன்கொடையாளர்கள் உதவியுடன் அச்சிட்டு வெளியிட்டதையும் தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், பொது வுடைமை இயக்கம் வரிசையில் தலித்துகளிடமிருந்து வெளியான வெளியீடுகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.

Pin It