முன்னுரை:

பழங்காலத்தில் மனிதன் இயற்கையில் ஏற்படும் மாறுதல்களாக கண்டு அஞ்சினான். அம்மாறுதல்கள் ஏற்படுவதற்கு, தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாக கருதினான். எனவே, சக்தியை வழிபட ஆரம்பித்தான். அச்ச உணர்வால் சில நம்பிக்கைகளைக் கற்பித்துக் கொண்டான். மக்களிடையே வழக்கத்தில் உள்ள நம்பிக்கைகளில் அதிகமானவை தெய்வம் தொடர்பானவை ஆகும். 'அவனின்று ஓர் அணுவும் அசையாது' என்ற உணர்வுடன், உலகத்தை படைத்த இறைவனை சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வழிபட்டான். அந்த அடிப்படையில் முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை வடித்த இளங்கோவடிகள் தன்னுடைய கால மக்கள் வணங்கிய தெய்வங்களுள் ஒன்றான இயக்கி தெய்வத்தைப் பற்றி எழுதியதை இக்கட்டுரையில் காண்போம்.

இயற்கைப் பொருள்களில் தெய்வங்கள்:

இயற்கை வழிபாடு மக்கள் சமுதாயத்தில் தோன்றிய முதல் வழிபாடு ஆகும். சங்ககால மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். பண்டைத் தமிழர்கள் தங்களைச் சுற்றி காணப்படுகின்ற இயற்கைப் பொருள்கள் அனைத்திலும் எண்ணற்ற தெய்வங்கள் இருப்பதாக கருதினர். மலை, காடு, மரம், நீர் ஆகியவற்றில் தெய்வங்கள் இருப்பதாக எண்ணி நம்பினர். இதனை,

“காடே கடவுள் மேனபுறவே ஒள்ளிழை மகளிரோடு

மள்ளர் மேன ஆறே அவ்வனைத்து”. - (பதிற்றுப்பத்து 13:20-23)

“அணங் கொடு நின்றது மலை             - (நற்றிணை 165:3)

மேல் குறிப்பிட்ட பாடல்கள் இயற்கை வழிபாட்டிற்குச் சான்றாகின்றன. மரத்தில் தெய்வங்கள் உறைந்துள்ளதாக நம்பிக்கை இன்றும் நாட்டுப்புற மக்களிடையே காணப்படுகின்றது.அரசமரம்,ஆலமரம், வேப்பமரம், வில்வமரம் முதலிய மரங்களை மக்கள் வழிபட்டு வந்ததைக் கண்கூடாகக் பார்க்கலாம். இத்தகைய நம்பிக்கை இருந்துள்ளது என்பதை,

“எம்ஊர் வாயில் உன்துறைத் தடைஇய

கடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய” - (நற்றிணை.83:1-2)

“தெய்வம் சேர்ந்த பராரை வேம்பு” - (அகநானூறு 309:4)

 போன்ற பாடல்களின் வழி அறிய முடிகின்றது. இயற்கைத் தோற்றங்களாகிய பொருள்கள் கதிரவன், மதி, மழை, மின்னல் முதலான பொருட்களை கண்டு ஏற்பட்ட வியப்பு, அதிர்ச்சி, அச்சம் என்னும் உள்ளத்து உணர்வுகளே சமயம் தோன்ற காரணமாயின எனக் கூறும் மாக்ஸ் முல்லரின் கருத்து சிந்திக்கத்தக்கது.

நால்வகை நிலங்களின் தெய்வங்கள்:

மக்கள் தாங்கள் வாழுகின்ற நிலத்திற்கு ஏற்றவாறு தெய்வத்தினை வகுத்துக் கொண்டு வாழ்ந்தனர். தொல்காப்பியர் நான்கு நிலங்களுக்குரிய தெய்வங்களை,

“மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என

சொல்லிய முறையார் சொல்லவும் படுமே” - (தொல்.பொருள்.நூ.5)

எனக் கூறியுள்ளார். இயற்கையிடமும், மரணத்திற்குப் பின்வரும் நிலையிடமும் மனிதன் கொண்ட அச்சமே வழிபாட்டிற்கு அடிப்படைக் காரணம் என்று சிக்மண்ட் பிராய்டு குறிப்பிடுகிறார். இத்தகைய நிலப்பகுப்பின் தெய்வங்களை சிலப்பதிகார மக்களும் வழிபட்டு வந்தனர். ஆய்ச்சியர்க்குரவையில் திருமால், குன்றக்குரவையில் முருகன், கடலாடு காதையில் வருணன், இந்திரவிழவூர் எடுத்த காதையில் இந்திரன், வேட்டுவவரியில் கொற்றவை என நிலத்திற்கு ஏற்ப மக்கள் தெய்வத்தினை வழிபட்டு வந்தனர்.

காப்பியங்களில் தெய்வங்கள்:

மனிதர்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் தெய்வங்களை மனிதனைப் போலவே கருதி அதிகப்படியாக நம்பி வழிபட்டுள்ளனர். சிலப்பதிகாரத்தில் காணப்படும் தெய்வங்கள் ஒற்றுமைத் தன்மையுடன் காணப்படுகின்றன. நாட்டார் தெய்வங்களாக நாட்டுப்புறங்களில் வழிபடப்படுகின்றவர்கள் இயல்பான மனிதர்கள் எனலாம். சமுதாயத்தில் செயற்கரிய செயல்களைச் செய்தும், சாதனைகள் பல புரிந்தும், பல நன்மைகளைச் செய்தும், வாழ்ந்து மறைந்தவர்களை அவர்களின் தலைமுறையினர் நாட்டார் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். வீரத்தின் வெளிப்பாடாக தெய்வங்கள் உள்ளன எனலாம். வனசாரினி, வரோத்தம்மை, பாவை, இயக்கி, கொற்றவை போன்ற தெய்வங்கள் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலா, கந்திற்பாவை போன்ற தெய்வங்கள் மணிமேகலையிலும் வழிபடப்பட்டன.

வழிபடுவதன் காரணம்:

மக்களையும் பயிர்களையும் நோயிலிருந்து காத்தல், மனிதனின் துன்பத்தைச் சரி செய்தல், நோயிலிருந்து காத்து மீண்டும் வராமல் தடுத்தல், குழந்தைப்பேறு வரம் தருதல், பயிர் விளைச்சல் அதிகமாகக் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காக தெய்வங்களை மக்கள் வழிபடுகின்றனர்.

சங்க இலக்கியங்களில் இயக்கி:

இயக்கி வழிபாடு வளமைச் சடங்குகளுடனும், செல்வச் செழிப்பின் சின்னமாகவும், நீர்வள தெய்வமாகவும் நாட்டுப்புற மக்களால் வழிபடப்பட்டது. சங்க இலக்கிய நூல்களில் கடல்கெழு செல்வி, வரையற மகளிர், சூலி, சூர் மகள், சூரர மகளிர், கானமர் செல்வி, பாவை, அணங்கு போன்ற தெய்வங்கள் இயக்கி வழிபாட்டோடு ஒப்புமை உடையனவாகும்.

சிலப்பதிகாரத்தில் இயக்கி:

சிலப்பதிகாரத்தில் இரண்டு வகையான இயக்கி தெய்வங்களைக் காணலாம். ஒன்று, தமிழகத்தின் வட்டாரப் பண்புகளோடு கூடிய இயக்கி வழிபாட்டு முறையாகும். இவை சிலம்பில் வரும் பாவை, கானுறைத் தெய்வம், வரோத்தமை போன்றவையாகும். மற்றொன்று, இயக்கி என்ற பெயரில் ‘பூங்கண் இயக்கி’ என்ற பெயரில் வழிபடப்பட்டது. இது சமண சமயம் தமிழ்நாட்டில் வந்ததற்கான அடையாளம் எனலாம். இன்றளவிலும் பூம்புகாரில் சாயாவனம் எனப்படும் பகுதியில் உள்ள சம்பாதி கோயிலை அந்த ஊர் மக்கள் பிடாரி கோயில் என்று வணங்கி வருவது இயக்கி வழிபாட்டின் எச்சத்தினைக் காட்டுகிறது.

பாவை தெய்வம்:

பாவை வழிபாடு சங்ககாலத்தில் இருந்தே வந்துள்ளது. பாவைகள் மண், மரம், புல், வைக்கோல் கொண்டும், சிறுவர் சிறுமியரின் விளையாட்டுப் பொருளாகவும் பாவை விளங்கியது. பாவையை சிறுமியர் தனது மகளாக நினைத்து விளையாடிய செய்தியை,

“உறாஅ வருமுலை மடாஅ

உண்ணாப் பாவையை ஊட்டுவோனே”. - (ஐங்கு-128:2-3)

என ஐங்குறுநூறு கூறுகிறது. மணலால் பாவை செய்து விளையாடுவதை,

“வண்டற்பாவை வரிமணல் அயர்ந்தும்” - (அகம்.330:2)

என வண்டற் பாவையை வைத்து விளையாடிய செய்தியை அறிந்து கொள்ள முடிகின்றது. சிலம்பில் ஆண்பாவைக் குறிப்பு உள்ளது. அதில் காவிரிக் கரையில் செய்து வைத்த மணற்பாவையைப் பெண்களின் கணவனாக கூறுவதாக,

“...... பொன்னி கரையில் மணப்பாகை நின் கணவனாம்”                           - (சிலம்பு.21: 6-7)

என்ற பாடலின் மூலம் ஆண்பாவையையும் வழிபாடு செய்த நிகழ்வினை அறிந்து கொள்ள முடிகின்றது. வேட்டுவவரியில் பாவை என்னும் சொல் பல பெண் தெய்வங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை

ஆய்கலப்பாவை அருங்கலைப் பாவை” - (வேட்டுவவரி 70-71)

இந்த வரிகளில் பாய்கலைப்பாவை என்பது உமாதேவியையும், ஆய்கலைப் பாவை சரஸ்வதியையும் குறிக்கிறது. சிலப்பதிகாரத்தில் ஐவகை மன்றங்களில் ஒன்று பாவை மன்றம். இதில் உள்ள பெண் தெய்வம், அரசும், அறங்கூறும் அவயமும் நீதி தவறி நடந்தால் வாய் பேசாமல் கண்ணீர் விட்டு அழும் தன்மை உடையது. இதனை,

“அரைசு கோல்கோடினும் அறம் கூறு அவையத்து

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்

நாவொடு நவிலாது நவைநீர் உகுத்து

பாவை நின்ற அழூஉம் பாவை மன்றமும்” - (சிலம்பு 5:135-138)

பாடலின் மூலம் பாவை மன்றத்தில் இருந்த பாவை தெய்வீக ஆற்றல் பெற்ற செய்தி வெளிப்படுகிறது.

வனசாரணி (அ) கானுறை தெய்வம்:

காட்டிடைத் தெய்வம் வனசாரணி. இந்த அணங்கு காட்டில் செல்வோரை அச்சுறுத்தும் தன்மை கொண்டது. இதனை காடுறை தெய்வம் அல்லது கானுறை தெய்வம் என்ற பெயரால் அழைத்தனர். நினைத்தபோது வேண்டிய உருவத்திற்கு மாற்றம் கொள்ளும். கோவலன் பொய்கையினை நாடி வந்தபோது வனசாரணி, வயந்தமாலை உருவம் கொண்டு கோவலனை மயக்க முற்பட்டது. அப்போது கோவலன் வெற்றியைத் தரும் பாய்கலைப் பாவையான கொற்றவையின் மந்திரத்தை உச்சரிக்கிறான். பயந்து போன வனசாரணி தன் உருவத்தை கலைத்து காட்டில் வாழும் இயக்கி நான் இன்று உரைக்கிறது. இந்த வழியாக செல்வோரை மயக்கும் தன்மை உடையவள் நான் என்கிறது. இதனை,

“….. கோவலன் நாவில் கூறிய மந்திரம்

பாய்கலைப் பாவை மந்திரம் ஆதலின்

வனசாரணி யான் மயக்கம் செய்தேன்

புனமயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்

என்திறம் உறையாது ஏகுஎன்று ஏகத்” - (மதுரை காண்டம்.11: 195-200)

என்ற பாடலில் தான் செய்த பிழையை உன் மனைவியிடமும், கவுந்தியடிகளிடமும் கூறி விடாதே என உரைத்து கோவலனிடம் இருந்து விடைபெறுகிறது இயக்கி.

வரோத்தமை:

வரை என்ற மலையில் உறையும் இயக்கி, வரோத்தமை தெய்வமாகும். சிலம்பில் மதுரைக்கு செல்லும் பெருவழிகளில் இடப்பக்கத்தில் அமைந்துள்ள நெடுமால் குன்றத்தின் பெரும் பிலமொன்றில் சிலம்பு ஆற்றின் தலையருவிக் கரையில் அமைந்திருந்த வரோத்தமையே இயக்கி தெய்வமாகும். இந்த தெய்வம் சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோனால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது நகர எல்லை தெய்வமாக கருதப்பட்டிருக்க வேண்டும். அந்த வழியாக செல்வோரிடம் இது வாழ்வில் அழிவற்ற இன்பம் எது? என்ற வினாவிற்கு விடையளித்தால் மட்டுமே மதுரைக்குள் செல்லும் கதவினைத் திறந்து விடுவதாக சிலம்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை,

“கடிமலர் அவிழ்ந்த கன்னி காரத்துத்

தொடிவளை தோழி ஒருத்தி தோன்றி

இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும்

இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர்

செம்மையில் நிற்பதும் செப்பு மின் நீயீர்இவ்

வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்”  - (மதுரை காண்டம் 11:108-115)

உரிய பதிலை உரைப்பதற்குப் பல வாயிற் கதவினைத் திறந்து விடுவதாக வரோத்தமை தெய்வம் கூறுவதாக சிலம்பில் இளங்கோவடிகள் கூறுகிறார்.

வரையாகிய மலையில் உறைந்து வந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பூங்கண் இயக்கி:

தென்னிந்தியாவில் இயக்கி என்னும் பெயரில் கிடைக்கும் இலக்கியச் சான்றுகளில் பழமையானது சிலப்பதிகாரத்தில் வரும் பூங்கண் இயக்கி ஆகும். பூ போன்ற கண்களைப் பெற்றதால் இப்பெயர் பெற்றது எனலாம். சமண சமயத்தைச் சாராத ஆயர் குலமக்கள் இத்தெய்வத்தினைப் போற்றியும், வணங்கியும் வாழ்ந்தனர். மதுரையின் புறத்துப் பகுதியில் தவச்சீலர்கள் தங்கி இருக்கும் மூதூரில் பூங்கண் இயக்கி கோயில் அமைக்கப்பட்டிருந்தது. சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்பே இந்த இயக்கி வழிபாடு இருந்ததை,

“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய

புறம்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப்

பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்

ஆயர் முதுமகள் மாதிரி என்போள்” - (மதுரை காண்டம் 15:115-118)

சிலப்பதிகார வரி எடுத்து இயம்புகிறது. மாதிரி என்ற ஆயர் குலமகள் மாலைநேரங்களில் இத்தெய்வத்திற்குப் பால் சோறு வைத்து வழிபடுகின்றாள். இந்த இயற்கை வழிபாடு மதுரைப் பகுதிகளில் பெரும் செல்வாக்குடன் இருந்ததை சிலப்பதிகாரத்தின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

முடிவுரை:

இயற்கை வழிபாடு தாய் தெய்வ வழிபாட்டுடனும், வளமைச் சடங்குகளுடனும் அதிகம் தொடர்புடையது. சமண சமயத்தின் அதிக செல்வாக்கே தமிழ்நாட்டில் இயக்கி வழிபாட்டிற்கு வித்திட்டது. தீப்பாய்ச்சி அம்மன், நீலியம்மன், ராக்காயி அம்மன், பிடாரி, செல்லியம்மன் போன்ற நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் சமண சமய இயக்கிகளே ஆகும். இதனையே சிலம்பில் வரும் பூங்கண் இயக்கி காட்டுகிறது. தொன்மையான இயக்கி வழிபாடு தமிழ்நாட்டில் இருந்தன என்பதற்குப் பாவை, வனசாரணி, வரோத்தமை தெய்வங்கள் சான்றுகளாகின்றன. பழங்காலத் தமிழ்நாட்டில் பெருவழிபாடாக நிகழ்ந்து வந்த இயக்கி வழிபாடு சமண, புத்த சமய நுழைவால் பெரு வளர்ச்சி பெற்று, இச் சமயங்களின் வீழ்ச்சியால் நாட்டுப்புற, தெய்வங்களான இயக்கி வழிபாடு சிறுமைப்படுத்தப்பட்டதைத் தற்போதைய வழிபாடுகள் காட்டுகின்றன.

துணைநூற்பட்டியல்:

1.      புலியூர்க் கேசிகன் – சிலப்பதிகாரம் மூலமும் உரையும், முதல் பதிப்பு, மார்ச்-2021, ஸ்ரீ பாரதி பப்ளிகேசன்ஸ், சாய்சுவாதி பிளாட்ஸ், நக்கீரர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.

2.      தொ. பரமசிவன் – பண்பாட்டு அசைவுகள், பதினான்காம் பதிப்பு, ஆகஸ்ட்- 2016, காலச்சுவடு பப்ளிகேசன்ஸ்(பி)லிட்., 669 கே.பி. சாலை, நாகர்கோவில்-629001.

3.      டாக்டர் த. ரெஜித்குமார் – நாட்டுப்புற இயல் முதல் பதிப்பு, அக்டோபர்- 2017, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்., 41- பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.

4.      முனைவர் மு. அருணாச்சலம் – சிலப்பதிகாரம் ஒப்பாய்வுகள், பிப்ரவரி – 2020, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்., 41- பி, சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.

5.      உரையாசிரியர் முனைவர் அர. சிங்காரவடிவேலன் – ஐங்குறு நூறு மூலமும் உரையும், மூன்றாம் பதிப்பு , டிசம்பர் – 2022, வர்த்தமானன் பதிப்பகம் , 21 , இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை – 17.

6.      உரையாசிரியர்கள் கவிஞர் நா. மீனவன், முனைவர் சுப அண்ணாமலை – அகநானூறு மூலமும் உரையும், மூன்றாம் பதிப்பு, டிசம்பர் – 2022, வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை – 17.

7.      முனைவர் சு. பார்வதி – சிலப்பதிகாரச் சிந்தனைகள், முதல் பதிப்பு, டிசம்பர் 2009, மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்- 608001.

8.      முனைவர் பெரி. அழகம்மை – சிலம்பில் மக்கள் வாழ்வும் வழிபாடும், உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி -1.

9.      டாக்டர் சு. சக்திவேல் - நாட்டுப்புற இயல் ஆய்வு, பதினொன்றாம் பதிப்பு, பிப்ரவரி 2011, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரி முனை, சென்னை – 600 108.

கட்டுரையாளர்கள்: சோ. வெண்ணிலா, முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10

நெறியாளர்: முனைவர் நா. மாலதி, உதவிப் பேராசிரியர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.