“மணிமேகலைக்கு இணையான இலக்கியம் உலக இலக்கியங்களிலேயே இல்லை எனலாம்” என்றார் பெரும்புலவர் ஒளவை துரைசாமி பிள்ளை.

“மணிமேகலை சமுதாயத் தொண்டைக் கூறும் அமுதக் காப்பியம்” என்றார் அ.கி. பரந்தாமனார்.

“சொல்லின்பமும் பொருளின்பமும்

        சொட்டும் கலை அமுதம்

வெல்லும் கலை இன்பத்துடன் விரவும் கவியின்பம்

புல்லும் சுவை நல்கும் அருள்பொலியும் உயிர் அமுதம்

நல்கும் கதையமுதாவது மணிமேகலை அமுதம்”

எனப் பாடுவார் கவியோகி சுத்தானந்த பாரதியார்

“குன்றத்துக் கொம்புத் தேன் முல்லை வாழைப் பழத்தேன்

மன்றத்து மாப்புலவர் செந்தமிழ்த்தேன்

என்ற முத்தேன் உண்டாலே தேன்!

இம்மணிமேகலை ஒருத்தி கண்டாலே தித்திக்கும் தேன்”

எனப் பாடி பெருமை சேர்த்தார் பாரதிதாசன்.

“மக்கள் குலத்தை அல்வழி நீக்கி நல்வழிப் படுத்த எழுந்த ஒரு சீர்திருத்தக் காப்பியம் மணி மேகலை” என்பார் அறிஞர் வ.சுப. மாணிக்கனார்.

மணிமேகலைக் காப்பியம் பற்றிய அறிஞர் களின் கருத்துக்களை தொகுத்தால் அதுவே ஒரு நூலாகிவிடும். மானுட நேயமும் மக்கள் தொண்டும் கொள்கையாகக் கொண்ட சாத்தனார் பற்றியும் அறிஞர்கள் புகழ்ந்துள்ளனர்.

“வித்தக கவித்திறம் வாய்ந்த மேதக்கார்” என்பார் வேங்கடசாமி நாட்டார்.

இயற்கையின் இன்ப வாழ்வை இலக்கிய மாக்கியவர் சாத்தனார் என்பார் திரு.வி.க.

manimekalaiதமிழ் இலக்கிய வரலாற்றில் பெண்மைக்கு முதலிடம் தந்து ஒரு கணிகை குலப்பெண்ணை காவிய நாயகியாக்கி முதல் புரட்சி செய்தவர்தான் சாத்தனார்.

இலக்கியம் என்பது மனிதனுக்காக; மனித வர்க்கத்தின் நன்மைக்காக; மனிதன் நல்வாழ்க்கை வாழ மகிழ்வுடன் நிம்மதியாக இருக்க, கவலைகள் போய் துன்பம் விலகி, இன்பமாய் இருக்க உதவுவதே நல்ல இலக்கியம்.

ஓவிய, சித்திர, சிற்பக்கலைகள், ஆடல் கலைகள் யாவும் கண்கள் மூலமாக மனதிற்கு உவகையூட்டி திருப்தி தருபவை. பாடலாகிய இசைக்கலை காதுகளின் மூலம் மனதை இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்பவை.

படைப்பு இலக்கியம் என்பது படிக்கையில் கேட்கையில் உள்ளத்தில் தங்கி சிந்திக்கச் செய்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஏணியாக, தோணி யாகப் பயன்பட்டு உதவுகின்றது.

அரிச்சந்திரன் கதை ஒரு காந்தியடிகளை உருவாக்கியது. அங்கிள்டாம் நாவல், உலக கருப்பு இன மக்களின் விடுதலைக்கு வித்திட்டது. கே.ஏ. அப்பாஸின் ‘இருதுளி நீர்’ என்ற நாவல் ராஜஸ் தான் பாலைவன மக்களுக்கு தண்ணீர் கொண்டு தரும் கால்வாய் வெட்டித்தர உதவியது.

சோவியத் நாட்டின் ஒரு கவிஞரின் இரண்டு கவிதை வரிகள் கால்வாய் வெட்டி பல கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழிகாட்டியது.

தாமரை, செம்மலர், தீபம் இதழ்களில் வந்த மலை வாழ் மக்கள் பற்றிய கதைகள் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே. சுப்பு அவர்களால் அமைச்சர் சத்தியவாணிமுத்து அம்மையாரிடம் தரப்பட்டு அதைப் படிக்க அவர்கள் விருதுநகர் மாவட்ட மலைஅடிவார மக்களுக்கு வீடுகள் கட்டித்தர உதவியது.

இலக்கியங்களில் கூறப்படும் புதிய செய்திகள் அரிய வரலாறு, உவமை நயங்கள், கவித்துவ வரிகள், ஓசை நயங்கள், இப்படிப் பல்வேறு விதங் களில் படிப்பவர்களை மகிழ்வித்து இன்பமடையச் செய்கின்றன.

நண்பர்களிடையே ஏற்படும் பிணக்குகள், குடும்பச் சிக்கல்கள், ஆள்வோர்க்கு ஏற்படும் இடையூறுகள், மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், கல்வி பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு இலக் கியங்களில் தீர்வு சொல்லப்பட்டுள்ளன. நமது பண்டைய இலக்கியங்களில் அறிவியல் கருத்துக் களும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கற்ற நாம் ஆய்ந்து செயல்படுத்தும் முறைகளைப் பற்றி சிந்திக்காமல் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து பேசி நடைமுறைப்படுத்தாமல் விட்டு விட்டோம்.

இராமாயண காவியம் சகோதர பாசம், பெற்றோரை மதித்தல், அநீதியை எதிர்த்துப் போரிடுதல் போன்ற ஒருமைப்பாடு, ஆட்சித்திறன் செய்திகளை வழங்கி நமக்கு வழி காட்டுகிறது.

இப்படியே பல இலக்கியங்கள் வாழ்க்கைக்கு ஏதேனும் ஒரு வழியில் நலம் பயக்கின்றன. மனித குலத்தை துன்பங்களாலும் தொல்லைகளாலும் ஆட்டிப் படைப்பவை, நோய்கள், தன்னலம், போட்டி பொறாமை இவற்றோடு முக்கியமாகப் பசிப்பிணி. இன்றைய விஞ்ஞான சமத்துவ கால கட்டத்தில் கூட, உலகின் சில நாடுகளில் உணவு இன்றி மக்கள் எலும்பும் தோலுமாக துன்பப் படுவதை செய்திகளில், தொலைக்காட்சிப் படங் களில் பார்க்கிறோம்.

மக்களின் அடிப்படைத் தேவையானது உணவு; துவக்க காலத்தில் மனித சமுதாயம் கிடைத்த உணவை பங்கிட்டு உண்டது. பின்னர் சுயநல உணர்வு வளர்ந்ததால், வலுவான மனிதன் தனக்கு என்று சேர்த்து வைக்கத் துவங்கினான். இதனால் ஏற்றத்தாழ்வு பெருகி வறுமைப் பேய் மக்களை ஆட்டிப்படைத்தது.

“மனிதன் பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டும் என்றால் இந்த உலகத்தைப் படைத்த இறைவன் கெட்டு ஒழியட்டும்” என்றார் வள்ளுவப் பெருந் தகை.

“நேற்று என்னை வாட்டிய பசி இன்றும் வந்துவிடுமோ” என்று அச்சப்படுகிறார்.

“ஒருவன் பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டும் என்றால் இந்த உலகினையே அழித்துவிடுவோம்” என்று கூறுகிறார் பாரதியார்.

“பசி என்று வந்தால் ஒரு பிடிச்சோறு புசி என்று தந்து பாரப்பா” என்று பாடினார் பாரதி தாசன். ஆக பசி என்பது இன்றைய உலகின் தீர்க்க இயலாத பெரும் பிரச்சினையாக உருவாகி விட்டது.

இந்த பசிப்பிரச்சினையை தீர்க்க உலக இலக்கி யங்கள் பலவும் வழிவகைகளைக் கூறினாலும், சாத்தனார் இயற்றிய மணிமேகலை ஒன்றுதான் முழுக்க முழுக்க பசியற்ற உலகைப் படைக்க வழி காட்டுகிறது. பசியே இல்லா உலகில்தான் மனிதன் மனிதனாக வாழ முடியும்.

இதற்கெனவே படைக்கப்பட்ட உன்னத கதாபாத்திரமே ஆபுத்திரன். ஆபுத்திரன் போன்ற ஒரு அற்புத கதாபாத்திரம் எந்த இலக்கியத்திலுமே இல்லை. அதனால்தான் ஆபுத்திரனை கதாநாயக னாக்கி தமிழில் மூவர் காவியம் செய்தனர்.

புலவர் ஆ. பழனி - சாலியின் மைந்தன்.

பன்மொழிப்புலவர் ஜகந்நாதராஜா - ஆபுத்திர காவியம்

வறுமையின் காரணமாக கற்பொழுக்கம் தவறிய சாலிக்கு குழந்தை பிறக்க அவள் குழந் தையை ஒரு தோட்டத்தில் விட்டு செல்கிறாள் (கர்ணனைவிட்ட குந்தியைப் போல.)

அழும் குழந்தையைக் கண்ட பசு ஒன்று குழந்தையை நாவால் நக்கி பால் தந்து காத்தது. ஆவால் காக்கப்பட்டது. ஆபுத்திரன் என பெயரா யிற்று. குழந்தை இல்லா அந்தணத்தம்பதி அக் குழந்தையை கண்டெடுத்து வளர்த்து வந்தது. அந்த பையனுக்கு வேதநூல்கள் கற்பிக்கப்பட்டன.

ஒருநாள் அந்தணர் தெருவில் வேள்வி செய்ய வேண்டி அதில் பலியிட ஒரு பசுவை கட்டிப் போட்டிருந்தனர்.

பசுவின் அலறைக் கேட்ட ஆபுத்திரன் பசுவை விடுவித்து அழைத்துச் சென்றான். பசுவைத் தேடிய அந்தனர்கள் அவனை அடித்தனர். அடித்தவர் களை பசு கொம்பால் குத்தி தள்ளியது.

சாலியின்மைந்தன் என்று அறிந்த அந்தணர்கள் அதைச் சொல்லி அவனைத் திட்டினர்.

அதற்கு ஆபுத்திரன் “உங்கள் முனிவர்கள் பற்றி தெரியாதா, அசல முனிவன் பசுவுக்குப் பிறந்தான். சிருங்கி முனிவன் மானுக்குப் பிறந்தான். விரிஞ்சி முனிவன் புலியின் மகன். கேசகம்பயன் நரியின் மகன். வசிட்டரும் அகத்தியரும் தேவதாசி திலோத்த மைக்குப் பிறந்தவர்கள்தானே, இப்படியிருக்க சாலியை மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள்” என்று வாதிட்டான்.

ஆபுத்திரன் மதுரை வந்து கலைமகளான சிந்தாதேவி கோவிலை அடைந்தான். தெருக்களில் பிச்சை எடுத்து உணவை அங்கிருந்த குருடர், செவிடர் முடவர் அனாதைகள், நோயாளிகள் ஆகியோருக்கும் தினமும் பகிர்ந்தளித்து தானும் உண்டு அங்கேயே படுத்துக் கொள்வான்.

ஒருநாள் இரவில் பெரு மழையில் கோவிலில் ஒதுங்கிய வெளியூர்காரர்கள் பசியால் வருந்தினர். ஆபுத்திரனிடம் உணவு கேட்க அவன் கலை மகளை வேண்ட கலைமகள் அமுத சுரபி பாத்திரம் தந்து ‘இதில் அள்ள அள்ளக் குறை யாது உணவு வந்துகொண்டே இருக்கும். இதனால் மனிதர்களின் பசிப்பிணி தீர்ப்பாயாக’ என்று கூறினாள்.

அன்று முதல் ஆபுத்திரன் பல இடங் களுக்கும் சென்று எல்லா உயிரினங்களுக்கும் உணவளித்து வந்தான்.

(சிந்தாதேவி என்பது அறிவுக் கடவுளின் குறியீடு. அறிவின் மூலமே உணவுற்பத்தி செய்து பசிப்பணியை போக்க முடியும் என்பதே சாத்தனின் கொள்கை)

ஆபுத்திரன் அறப்பணியால் இந்திரனின் சிம்மாசனம் நடுங்கியது. இந்திரன் அச்சமுற்று அந்தணர் வேடத்தில் வந்து “உன் தொண்டால் உனக்கு சுவர்க்கலோக கதவு திறந்துள்ளது வா” என அழைக்க “பசியே இல்லா அந்த உலகம் எனக்கு வேண்டாம் பசி போக்கும் என் பணிக்கு இந்த உலகமே போதும்” என்றான்.

இராமாயண காவியத்தில் நாம் வணங்கும் இராமனேகூட மனைவி கேட்டாள் என்று எளிய உயிரான மானையே கொல்லத் துணிந்தான். ஆனால் ஆபுத்திரனோ இந்தச் செயலால் இராமனை விடவும் மேலானவனாகிவிட்டான்.

நளவெண்பாவில் மன்னன் நளன் தேரில் வருகிறார். தேர்ச் சக்கரத்தில் உள்ள மணிகளின் ஓசையால் பாறையின் இருபுறம் உள்ள மலர்ச் செடிகளில் மலர்ந்துள்ள பூக்களில் தேன் அருந்திக் கொண்டிருந்த வண்டுகள் அச்சத்தில் பறந்து செல்கின்றன. பார்த்த மன்னன் தேரினின்று இறங்கி மணிகளை ஓசை எழாமல் கட்டி விட்டு தேரைச் செலுத்துகிறான். இது ஒரு உயிரபி மானம். ஆபுத்திரனோ ஒரு உயிரையே காப்பாற்றி உத்தமோத்தமனாக காட்சி அளிக்கிறான்.

இந்திரன் செயலால் நாடு செழிக்க ஆபுத்திரனின் உதவிப்பயன் நின்று போகிறது. சாவக நாட்டில் பஞ்சம் நிலவுவதாக இவனுக்குத் தகவல் வர கப்பலில் செல்கிறான். புயலால் கப்பல் மணிபல்லவ தீவின் கரையில் தங்க ஆபுத்திரன் இறங்கி சுற்றிப் பார்க்க, தங்கவேண்டி வருகிறது. மற்றவர்களின் பசியைப் போக்க முடியவில்லையே; தான் மட்டும் அமுதசுரபி தரும் உணவை உண்டு வாழ்வதா? என்று வருந்தி பட்டினி கிடந்து அமுத சுரபியை கோமுகிப் பொய்கையில் போட்டுவிட்டு உயிர் விடுகிற இப்படி ஒரு உயர் குண பாத்திரம் எந்த இலக்கியத்திதும் வருகிறதா? என்று யோசித்துப் பாருங்கள்!

காந்தியடிகள் தொண்டும், வள்ளலார் தொண்டும் ஆபுத்திரன் செயல்களை நினைவுக்கு கொண்டு வருகிறதல்ல.

உலக இலக்கிய நிகழ்ச்சிகளில் உள்ளம் உருக்கும் உயர்ந்த நிகழ்ச்சி ஆபுத்திரன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த காட்சியாகும். தனது கையில் வற்றாத உணவளிக்கும் அமுத சுரபி இருந்தும் கூட தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக பசிப்பிணி நீக்கும் மருத்துவனாகிய ஆபுத்திரன். உண்ணாது உயிர் துறந்த வரலாறு உயர்வான சரிதமாகும். மதுரையில் பிறந்த ஆபுத்திரன் உலகம் முழுதும் ஒன்றெனக் கருதிய மானுடநேயன் எங்கோ இருக்கும் சாவகத்தீவு மக்களின் பசி போக்க முடியவில்லையே என்பதாலேயே தானும் பசியாலே உயிர்விட்ட உன்னதமான பண்பாடு மனிதகுலத்துக்கே வழிகாட்டும் உயர் பண்

பாடாகும். இத்தகைய ஓர் உயர்ந்த லட்சிய பாத்திரத்தைப் படைத்த மாகவிஞன் சாத்தனார் உலக இலக்கியத்தில் ஒப்பற்ற படைப்பாளியாவார்.

ஒரு சமயம் தமிழகம் வந்த வினோபா பாவே “உங்கள் தமிழ் இலக்கியங்களில் கோமாதாக்களை பற்றி சிறப்பாக சொல்லப்பட்டுள்ளதா?” என்று கேட்டார் அருகிலிருந்த ஒரு தமிழறிஞர்.

“ஐயா எங்களது ஆண்டாள் ஒரு பெண்பால் புலவர்.”

“வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்று பாடி பசுக்களை வள்ளல் என்று சிறப்பித்து பாடியுள்ளார்” என்றாராம். அதைக் கேட்ட வினோபா “அருமை” என்றாராம்.

பசுவின் உயிரையே மீட்டான் ஆபுத்திரன் மணிமேகலை இலக்கியத்தில் என்று சொல்ல, அங்கே பல புலவர்கள் மணிமேகலையை படிப்பது இல்லையே; பாரதியாருக்கே அக்காலத்தில் மணி மேகலை படிக்கக் கிடைக்கவில்லை. அவர் படித் திருந்தால் சாத்தனைப் போல் ஒரு புலவன் சரித் திரத்தில் இல்லை என்றுதான் பாடியிருப்பார்.

“பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்த

பசுமிக நல்லதடி பாப்பா”

என்று பாரதியாரும் பசுவைப் பாராட்டியுள்ளார்.

ஆபுத்திரனால் கோமுகிப் பொய்கையில் போடப்பட்ட அமுத சுரபி மணிமேகலையிடம் வந்து சேர்கிறது.

அந்தப் பாத்திரத்தில் முதன்முதலில் ஒரு கற்புக்கரசியிடம் பிச்சை வாங்கினால் அள்ள அள்ளக் குறையாத உணவு அதில் வரும் என்று அறிகிறார் மணிமேகலை. முதலில் ஆதிரை என்ற கற்பரசியிடம் பிச்சை வாங்குகிறாள். எவ்வளவு சாப்பிட்டாலும் பசியடங்காத ஆனைத் தீ என்ற நோயால் காய சண்டிகை என்ற பெண் துன்புறு கிறாள். அவளுக்கு முதலில் உணவளித்து அவளது நோயைப் போக்கி, சமுதாயத்தை துன்புறுத்தும் பசிப்பிணியையே சாத்தன் காயசண்டிகையாக குறியீடு செய்து உருவகித்துள்ளான். ஆதிரையின் கணவனே சாதுவன். அவன் நல்லவன் தான். ஒரு கணிகையிடம் சிக்கி அவள் அழகில் மயங்கி பொருள் இழந்து வருந்தி பின்பொருள் தேட, கப்பலில் செல்கிறான். புயலால் கப்பல் சேத மடைய ஒரு பலகையைப் பிடித்து நீந்தி ஒரு மலைவனத்தீவில் கரை சேர்ந்தான். அந்தத்தீவில் உடை அணியாத நாகரீகம் அறியாத மலை இன மக்கள் மனித மாமிசம் உண்பவர்கள். மதுவும் மங்கையுமே அவர்களது வாழ்வின் முக்கிய அம்சம். கப்பலில் தப்பி தீவை அடைந்தவர்களின் உடைகள் வணிகப் பொருட்களைப் பறித்து அந்த மனிதனை கொன்று உண்பவர்கள். அவர்கள் சாதுவனைப் பிடித்துக் கொண்டார்கள். சாதுவன் ஏற்கெனவே நாகர்களின் பேச்சு மொழியை அறிந்திருந்தான். அவன் அவர்களிடம் பேச அவர்கள் வியந்து போய் சாதுவனை தலைவனிடம் அழைத்துச் செல்கிறார்கள். தலைவனிடம் சாதுவன் அவர்கள் மொழியில் பேச அவன் மகிழ்ந்து சாதுவனுக்கு கள்ளும் பெண்ணும் தருமாறு காவலர்களிடம் கூற, சாதுவன் அவற்றை வேண்டாம் என்றான்.

‘மதுவும் மாமிசமும் மங்கையும் இல்லாத வாழ்க்கை இந்த உலகத்தில் எந்த பயனைத் தரும்’ என்கிறான்

உடன் சாதுவன் தலைவனிடம் பல நீதிமொழி களுடன் மது மங்கை மாமிசம் இவற்றின் தீமை பற்றியும் வாழ்வின் உண்மைநிலை ஆன்மாநிலை ஆகிய யாவும் கூறி அவனுக்கு தெளிவை உபதேசிக் கிறான்.

உண்மையை உணர்ந்த நாகர் தலைவன், இனி நாங்களும் மது மாமிசங்களை விட்டு விடுவோம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறியில் வாழ்வோம் என்று கூறி ஏற்கனவே கவிழ்ந்த கப்பல்களால் கிடைத்த பட்டாடைகள் அணி கலன்கள் பொருட்கள் தந்து சாதுவனை அனுப்பி வைக்கிறான்.

பிறமொழிகளைஅறிவதால் ஏற்படும் நன்மை களையும் சாத்தனார் இதன் மூலம் விளக்கி அறிவுறுத்துகிறார். பிறமொழிகளின் அறிவு மூல மாக உலகின் வரலாறு, பிற மக்களின் நாகரிக, பண் பாட்டு கலாச்சாரங்களையும் அறிந்துகொள்ளவும், அதுவே மானிட ஒற்றுமைக்குப் பாலம் அமைத்து உலக சமாதானத்துக்கும் வழிவகுக்கும் என்பதே சாத்தனாரின் கொள்கை.

இன்று பலமொழிகளை அறிந்த அறிஞர் களால் உலகில் பல மொழிகளின் இலக்கியங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு இலக்கியம் மூலம் உலக ஒற்றுமைக்கு வழி செய்கிறார்கள்.

பல ஊர்களுக்கு பயணம் செய்து நாடுகளைக் காண்பவர்கள் கூட மொழியாக்க நூல்களைப் படித்து உலகத்தையே அறிந்துகொள்கின்றனர்.

இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தை ஒரு குழுவை, ஒரு குடும்பத்தை ஒரு மனிதனை ஏதேனும் ஒரு விதத்தில் பாதித்திருக்கவேண்டும் அந்த இலக்கியத்தில் ஒரு காட்சி, ஒரு சம்பவம், ஒரு கதாபாத்திரம் படிக்கும் வாசகரை ஆட்கொண்டு வழிகாட்டி உதவி இருக்கவேண்டும். அதுவே உன்னத இலக்கியம்.

மணிமேகலை இலக்கியத்தில் சாதுவன் அப்படி யாரை எப்படி ஆட்கொண்டான் என்பதைப் பார்க்கலாம். எல்லா இலக்கியங்களிலும் வரும் கதாபாத்திரங்கள், எங்கோ எப்படியோ பலரை பாதித்து வழிகாட்டி இருக்கலாம். நான் அறிந்த ஒரு சம்பவத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

அஸ்ஸாம் மாநிலத்தில் வடகிழக்கு மலை பிரதேசப் பகுதியில் எங்கள் இராஜபாளையத்தை சேர்ந்த திரு.கே.ஏ.ஏ. ராஜா அவர்கள் படைத் தளபதியாக பணியாற்றினார்கள். அந்த மலைப் பகுதியில் பல்வேறு பகுதிகளில் மலைவாழ் மக்கள் பலப்பல இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு பகுதி மனிதன் அடுத்த பகுதி மனிதனைப் பார்த்து விட்டால் உடனே அம்பு எய்து கொன்றுவிடும் அளவில் அவர்கள் எல்லாம் பகை உணர்வோடு தான் வாழ்ந்து வந்தனர்.

திரு ராஜா அவர்கள் அங்கே படைத் தளபதி யாக பொறுப்பேற்றுக்கொண்ட சமயம் ஒரு நாள் எமது மணிமேகலை மன்ற விழாவுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்கள்.

மணிமேகலை பற்றிய பலரது சொற்பொழிவுகள் கவனமுடன் கேட்டார்கள். அப்போது சாதுவன் ராஜா மனதில் இடம்பிடித்துவிட்டான்.

அந்தப் பகுதிக்கு சென்ற ராஜா அவர்கள் முதலில் அங்கு வாழும் மலை மக்களின் மொழியை கற்றுக் கொண்டார்கள். பின் ஒவ்வொரு பகுதி மலை மக்கள் குழுவையும் சந்தித்து அவர்கள் மொழியில் அவர்களோடு பேசினார்கள். “நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் ஒவ்வொரு மனிதனும் நமது சகோதரன் தான். யாரும் நமக்கு பகையில்லை; எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அனைவரிடமும் கூறி எல்லோரையும் ஒரே இடத்திற்கு அழைத்து அவர்களுக்குள் உறவை உண்டாக்கி விருந்து வைத்து பேசினார்கள். அங்கு மலைவாழ் பிரிவு மக்கள் பகை களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந் தார்கள்.

இது அரசுக்கு தெரிய பிரதமர் இந்திரா அம்மையார் அவரை அழைத்து பாராட்டி “அந்த மக்களுக்கு மேலும் என்ன செய்யலாம்” என்று கேட்டார்கள்.

“அந்த மலைப் பகுதியை தனி மாநிலம் ஆக்க வேண்டும். அங்கே நிறையப் பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்” என்றார்கள்.

“அப்படியே செய்யலாம். அந்த மாநிலத்திற்கு நீங்கள் ஆளுநர் ஆக பணிசெய்ய வேண்டும். மாநிலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கூறுங்கள்” என்றார். அதற்கு ராஜா “இந்தியா விலேயே சூரியன் முதலில் அங்குதான் உதிக் கிறான். அதனால் அதற்கு ‘அருணாசலப் பிரதேசம்’ என்று பெயர் வைக்கலாம்” என்றார்.

அதே பெயரில் புதிய மாநிலம் உருவாகி ராஜா அவர்களே ஆளுனராக இருந்து அந்த மக்களுக்கு எவ்வளவோ நற்பணிகளை செய் தார்கள்.

மணிமேகலையின் சாதுவனின் மொழி அறிவு தான் இந்த பெரும் நற்செயலுக்கு உதவியது. சாதுவன் பெருமைப்படத்தக்க ஒரு கதாபாத்திர மாகி நம் நெஞ்சில் நிறைந்து நிற்கிறான்.

Pin It