அயல்தேசப் படைப்புகளிலிருந்து தமிழுக்குக் கிடைத்திருக்கிற உன்னதங்களின் பட்டியலில் சீன எழுத்தாளர் யூ ஹூவா எழுதிய ‘ரத்தம் விற் பவனின் சரித்திரம்’ என்ற நாவலுக்கும் முக்கிய மானதொரு இடமுண்டு. தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள இந்நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சீனா சந்தித்த அரசியல் மாற்றங் களின் பின்னணியில் மக்களின் வாழ்வியல் சூழலை அதன் பாடுகளோடு விரித்துச் செல்கிறது. சீனதேச கிராமப்புற மக்களின் அறியாமை, ஆணாதிக்கம், பழைமையான சடங்குகள், நம்பிக்கைகள், வசவுகள் எனப் பலவும் ஏறத்தாழ இந்திய கிராமங்களின் வாழ்நிலையையொத்ததாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது.

yuma vasuki 400புதுமையான கதைக்களனாகவுள்ள இந்நாவலில், வேலையின்மை, வறுமை, போதிய கல்வியறி வில்லாத நிலையில் ரத்தத்தை விற்றுப் பணம் சம்பாதிப்பது அதிக வருமானத்திற்கான ஒரு வழி முறையாக நடைபெறுகிறது. மாதம் முழுதும் நிலத்தில் வேலை செய்தால் கிடைக்கும் வருமான மளவுக்கு ரத்தம் விற்றுப் பணம் பெறமுடிவதால் கிராமங்களிலுள்ள திடகாத்திரமான மனிதர்கள் அடிக்கடி ரத்தம் விற்பதை வழக்கமாகக் கொண்டனர். தொடர்ந்து ரத்தம் கொடுப்பதால் உடல் நலிவதும் அதைத் தொடர்ந்து மரணமடைவதும் நிகழ்ந்த படியிருந்தாலும் அதற்கு ரத்தம் விற்பதுதான் காரணம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வில்லை.

தங்களின் ரத்தத்தை விற்றுப் பணம் பெறு வதற்காக கிராமத்திலிருந்து நகரத்துக்கான நடை பயணத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. ரத்தம் பெற்றுக்கொண்டு பணம் தரும் அதிகாரிக்கான லஞ்சப் பண்டமாக சில தர்பூசணிகளுடனும், நீர் அருந்தும் கிண்ணங்களுடனும் அவர்கள் நடக் கிறார்கள். நிறைய தண்ணீரைக் குடித்தால் உடலில் தண்ணீரளவுக்கு ரத்தம் சேர்ந்துவிடும் என்று நம்புவதால் வழிநெடுக கணக்கற்ற கிண்ணங் களில் தண்ணீரைக் குடித்துக்கொண்டே செல் கின்றனர்.

‘தங்கள் உடலில் ரத்தத்தைக் கூடுதலாக சேர்த்துக் கொள்வதற்காக கர்ப்பிணிகளின் வயிறு அளவுக்குத் தண்ணீர் குடித்துவிட்டு நடக்கமுடியாது திணறும் நிலையிலும் சிறுநீர் கழிக்கக்கூடாது. அப்படி சிறுநீர் கழித்துவிட்டால் ரத்தம் குறைவாகவே உடலில் சேரும். ரத்தம் கொடுத்த பிறகு ரெண்டு கிளாஸ் மஞ்சள் அரிசி ஒயினும், வறுத்த பன்றி ஈரல் ஒரு பிளேட்டும் சாப்பிட்டுவிட்டால் கொடுத்த ரத்தம் திரும்பவும் உடம்புக்குள் சேர்ந்துவிடும்.’ இவை அவர்களது நிலைத்த நம்பிக்கைகள்.

குடும்பத்துக்கு அவசியமாக பணம் தேவைப் படும் போது மட்டுமே ரத்தம் விற்கும் ஸூ ஸன்க்வான், அவனது மனைவி ஹூ யுலான், அவர்களது மகன்களான யீலி, ஏள், ஸான்லி மற்றும் யுலானின் திருமணத்திற்கு முன்பான அவளது காதலன் ஹீ ஸியோயோங் ஆகியோரே இந்நாவலின் மையப் பாத்திரங்கள்.

ஸூ ஸன்க்வானின் மூத்தமகன் யீலி அவனது தந்தையின் முகஜாடையில் இல்லை என்ற ஊர்ப் பேச்சிலிருந்து குடும்பத்தில் பிரச்சினை எழும்பு கிறது. மனைவியை அடித்து மிரட்டிக் கேட்கிற போது அவள் தன் முன்னாள் காதலனுடன் ஒரே ஒருமுறை உறவு கொண்டதாகவும், ஆனால் அவன் பலவந்தமாக நடந்துகொண்டதுதான் அதற்குக் காரணம் என்றும் சொல்லி அழுகிறாள். அப் போதிலிருந்து யீலி எனும் பத்துவயதான மூத்த மகனை வேசி மகன் என்றும் அவன் ஹீ ஸியோ யோங்கின் மகன், தன் மகனில்லை என்றும் தீர் மானிக்கும் ஸன்க்வான் வஞ்சிக்கப்பட்ட வேசியின் கணவன் என்பதாக ஊரில் அடையாளங் கொள் கிறான். அப்போதிலிருந்து மனைவி மற்றும் குடும்பத்தோடு வீட்டு வேலை எதுவும் செய்யாமல் ஒத்துழைக்க மறுப்பது என அவனது நடவடிக் கைகள் மாற்றமடைகிறது. இதன் உச்சமாக மனைவியைப் பழிதீர்க்கும் எண்ணத்தில் இன் னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள் கிறான்.

நீ என் மகனில்லை என்று அவனை மனைவியின் முன்னாள் காதலன் வீட்டுக்கு இவன் அனுப்பு வதும், எனக்கு நீ மகனில்லை என்று அவன் திருப்பி விரட்டுவிடுவதுமான அலைக்கழிப்பின் உச்சமான ஒரு காட்சியில்,யீலி சொன்னான் : ‘உண்மையில் ஸூ ஸன்க் வான் என் அப்பா அல்ல. என் உண்மையான அப்பா ஹீ ஸியோயோங்தான். எனக்கு ஒரு அப்பா இல்லை. அதனால்தான் நான் அழுகிறேன்.’

.... கொல்லன் ஃபாங் கேட்டான் : ‘யீலி நீ இப்போது வீட்டுக்கு செல்வதுதான் நல்லது.’

யீலி கேட்டான் : ‘கொல்லன் ஃபாங்கே, எனக்கு ஒரு கிண்ணம் நூடுல்ஸ் வாங்கித் தருகிறீர்களா? அப்புறம் நீங்கள் என் உண்மையான அப்பாவாக ஆகலாமே.’

கொல்லன் ஃபாங் சொன்னான் : ‘நீ என்னடா முட்டாள்தனமாகப் பேசுகிறாய்? நான் பத்து கிண்ணம் நூடுல்ஸ் வாங்கித் தந்தாலும் ஒரு போதும் என்னால் உன் அப்பாவாக முடியாது.’

அங்குக் கூடி நின்றவர்கள் கேட்டனர். ‘வீட்டுக்குப் போகவில்லையென்றால் பிறகு நீ எங்கே செல்கிறாய்?’

யீலி சொன்னான் : ‘நான் எங்கே போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் வீட்டுக்குப் போகவில்லை என்று மட்டுமே எனக்குத் தெரியும்.’

யீலி இதையும் சேர்த்துச் சொன்னான் : ‘உங்களில் யாராவது எனக்கு ஒரு கிண்ணம் நூடுல்ஸ் வாங்கித் தந்தால் நான் அவருக்கு மகனா யிருப்பேன். எனக்கு நூடுல்ஸ் வாங்கித் தர வேண்டும் என்று யாருக்காவது தோன்றுகிறதா?’

வாழ்வியல் நிகழ்வுகளோடு பழைமையான சடங்குகளையும் சொல்லும் காட்சிகளுக்கிடையில் கலாச்சாரப் புரட்சியின்போது மக்களிடையே நிலவிய அச்சம், ஆவேசம், பஞ்சம், பசி, அலைக் கழிப்பு, தண்டனை எல்லாவற்றையும் இயல்பாகப் பதிவு செய்கிறது நாவல்.

சில வருடங்களுக்கு முன் ஹூ யுலான் என் பவள் கணவனல்லாத ஒருவருடன் உறவு கொண் டிருந்த குற்றத்துக்காக அவள் கழுத்தில் ‘நான் வேசி’ என எழுதப்பட்ட அட்டையைத் தொங்க விட்டு தெருக்கள் கூடும் சந்தியில் ஒரு ஸ்டூலில் நிற்க வைக்கிறார்கள். தொடர்ந்து அவர்களின் வீட்டி லுள்ள குடும்ப உறுப்பினர்களே தங்களை புரட்சிக் காரர்களாக பாவித்துக்கொண்டு குற்றவாளியை விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தப் படுகிறது.

அப்படியான ஒருவேளையில் ஸூ ஸன்க்வான் தன் வீட்டில் மூன்று மகன்களுக்கு முன்னால் மனைவியைக் குற்றவாளியாக்கி விசாரணையைத் தொடங்குகிறான்.

‘... அதனால் கொஞ்சம் வார்த்தைகளால் நானே தொடங்கி வைக்கிறேன். ஹூ யுலான் ஒரு வேசி என்று அவர்கள் சொல்கிறார்கள். அவள் எல்லா இரவுகளிலும் வாடிக்கையாளர்களைப் பார்க் கிறாள் என்றும் அதற்கு இரண்டு யுவான் வாங்கு கிறாள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இதைப் பற்றி நீங்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’

தன் மகன்களின் முன்னால், அவளுக்கு கண வனல்லாத இன்னொரு ஆடவனுடன் நடந்தேறிய உடல்உறவின் தருணங்களை காட்சிப்படுத்தி விளக்கிச் சொல்கிறாள். கவனமாகக் கேட்டு எதிர் கேள்வி கேட்கும் மகனின் செய்கையைப் பார்த்து ஸன்க்வான் மிகவும் பதட்டமடைகிறான். விசாரணை என்பது விபரீதமாகிக் கொண்டிருப்பதை சகிக்க இயலாமல் அவளும் கலவரமடைகிறாள்.

இந்த விசாரணை நிகழ்வுக்குப் பிறகு மனைவி மற்றும் மகன்களுடனான அவனது உறவில் அழுத்த மானப் பிணைப்பு ஏற்பட்டுவிடுகிறது. அவள் முச்சந்தியில் குற்றவாளியாக நிற்கிறபோது ரகசிய மாக அவளுக்கு உணவளிக்கிறான். உறவுகளில் ஏற்படும் மனத்தாங்கல்கள், பழிவாங்கல்கள், நிர்ப் பந்தங்கள் இவற்றினூடே தொடரும் அன்பும் பற்றுதலும் முற்றாகத் தொலைந்துவிடுவதில்லை என்பதை அழுத்தமான சில காட்சிகள் விளக்கு கின்றன. மனைவி மற்றும் மகன்களின் நெருக்கடி யான தருணங்களில் ஆத்மார்த்தமான பிரியத்தை வெளிக்காட்டும் ஸன்க்வானின் அன்பு தன் தகுதிக்கும் மேலானதாக உருப்பெறுகிறது. வெகு தூரத்தில் புரட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் மகன்களின் நலனுக்காக அவன் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் ஒரு தந்தையின் அதிகபட்ச அன்பை நிலைநிறுத்தும் போராட்டங்கள். உணவுக்கு வழி யற்ற ஒரு இரவில் வெறுங்கைகளால் காற்றினிடையே சைகையாக உணவு சமைப்பது போன்ற பாவனையில் இறைச்சி வெட்டுவதாகவும், சமைத்ததை அனை வருக்கும் பரிமாறுவதாகவும் சாப்பிட்டபின்பு ஏப்பம் விட்டும் பசிஉணர்வைப் போக்கமுயலும் காட்சி பஞ்சகாலத்தின் சாட்சியாகிறது.

தன் மகன்களுக்காக ஒவ்வொரு முறையும் ரத்தத்தை விற்றே குடும்பக் காரியங்களை செய லாற்றுகிறான். தன் மகனுக்கான மருத்துவச் செலவுக்காக தொடர்ந்து பல ஊர்களில் ரத்தம் விற்றுவிற்று பணத்தை சேகரித்துக்கொண்டே செல்கிறான். இந்நேரங்களில் அவன் பன்றி ஈரலுக்கும் ஒயினுக்கும்கூட பணம் செலவழிக்க வில்லை. எனினும் மகனுடைய சிகிச்சைக்குத் தேவையான பணம் சேராததால் அடுத்தடுத்த ஊர்களில் சின்னச்சின்ன இடைவெளியில் ரத்தம் விற்க முயல்கிறான். அப்போது அவனது உடலுக்கு ரத்தத்தை ஏற்றவேண்டிய அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறான். செலுத்தப்பட்ட ரத்தத்துக்காக அவனிடமிருந்த பணத்தை திரும்பத் தரவேண்டி நேர்கிறது. விபரம் தெரிந்த பிறகு மருத்துவர் களிடம் தன் ரத்தத்தை மீண்டும் எடுத்துக்கொண்டு பணத்தைத் தருமாறு கெஞ்சுகிறான்.

மகன்கள் வளர்ந்து திருமணம் முடித்தவர்களாக பிரச்சினைகள் இல்லாத வயதான காலத்தில் நல்ல ஆடைகள், உணவு என்பதோடு மனைவியும் அவனும் அமைதியான வாழ்க்கையைத் தொடர் கிறார்கள்.

ஒருநாள் நகரத்துக்கு செல்லும்போது ஒரு பிளேட் வறுத்த பன்றி ஈரலும், ரெண்டு கிளாஸ் ஒயினும் சாப்பிட ஆசைப்படுகிறான். அதற்காக ரத்தம் விற்றுப் பணம் பெறலாம் என நினைக் கிறான். பற்கள் விழுந்த கிழவனான அவன் ரத்தம் கொடுக்கத் தகுதியில்லாதவன் என்று கூறி மருத்துவர் நிராகரிக்கும்போது சாலையில் நின்று அழுகிறான். தன் ரத்தம் விற்பனைக்கு தகுதி யில்லாதது என்பதையும், தன்னால் பன்றி ஈரலும், ஒயினும் அருந்தமுடியாமற் போனதையும் எண்ணி சாலையில் நின்று கதறிக்கதறி அழுகிறான். பல வருடங்களாக ரத்தத்தை விற்றே குடும்பத்தை நடத்தியிருந்த அவனுக்கு தற்போது அவசிய மில்லாதபோதும் ரத்தம் கொடுக்கும் மனநிலை அவனுள் ஆழமாக தங்கிவிட்டிருப்பதையே இந் நிகழ்வு உணர்த்துகிறது. வாழ்வின் அனைத்துத் தேவைகளும் நிறைவடைந்த வேளையிலும் தன் அதிகபட்ச லட்சியமான வறுத்த பன்றி ஈரலுக்கும், இரண்டு கிளாஸ் ஒயினுக்காகவும் தன் ரத்தத்தை விற்க முனையும் அறியாமையும் பரிதவிப்பும் ஒரு காலத்தின், ஒரு சமூகத்தின் நெருக்கடியையும் அதன் கனத்தையும் நமக்கு வலிந்து உணர்த்து கின்றன.

சாலையில் நின்று கதறி அழுவதைக் கேள்வி யுற்ற மகன்கள் அங்குகூடி அவனைக் கடிந்து கொள் கின்றனர். அனைவரையும் சமாதானப்படுத்தி விட்டு ஸன்க்வானின் பிரியத்துக்குரிய மனைவி தன் கணவனை அன்போடு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறாள். அவனது வாழ்வின் உயரிய லட்சிய மாக அப்போது அவன் நினைக்கிற, வறுத்த பன்றி ஈரல் ஒரு பிளேட்டும் ரெண்டு கிளாஸ் ஒயினையும் அவள் தன்னிடமிருந்த பணத்திலிருந்து வாங்கித் தருவதை ஸன்க்வான் ருசித்துச் சுவைப்பதோடு நாவல் முடிவடைகிறது.

சீனக் கலாச்சாரப் புரட்சியின் மறுபக்கத் தையும், மக்கள் எதிர்கொண்ட மனநிலையையும், அன்றைய வாழ்நிலையையும் சற்றே இழையோடும் நகைச்சுவையோடு, துயரத்தையும், அவலத்தையும் சொல்வதோடு, எதிர்கருத்துகளையும் அடர்த்தி யான மௌனத்தோடு மொழியும் இந்நாவல் இதுவரை அறிந்திராத மாவோ காலத்தைய சீன தேசத்து வாழ்வியல் கனங்களைப் பதிவு செய் கிறது. வேற்றுமொழி நாவல் என்ற எண்ணமெழாத வகையில் சிறப்பான நடையில் அற்புதமான மொழியாக்கத்தை யூமா வாசுகி வழங்கியிருக்கும் இந்நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ரத்தம் விற்பவனின் சரித்திரம்

ஆசிரியர்: யூ.ஹுவா

தமிழில்: யூமா வாசுகி

வெளியீடு: சந்தியா பதிப்பம்

53வது தெரு, 9வது அவென்யு,

அசோக் நகர், சென்னை - 83

விலை: ரூ. 250/- 

Pin It