உதயை மு. வீரையன் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறிந்த எழுத்தாளர்; கவிஞர்; நாடக ஆசிரியர். சென்னை வானொலி ஒலிபரப்பிய ‘இராஜா தேசிங்கு’ நாடகம் நம் நினைவைக் கட்டியாண்டது. தினமணி உள்ளிட்ட இதழ்களில் நடப்புலகக் கட்டுரைகளை எழுதிவருபவர் இவர். கவிதை, நவீனம், குழந்தை இலக்கியம் போன்ற பன்முகப் படைப்புகள் இவரது பெருமையைப் பறைசாற்றுவன.

‘உரிமைக்குரல்’ என்ற புதிய கட்டுரைத் தொகுப்பு நூல் இவரது அண்மைப் படைப்பு.

uthai mu veeraiyanஇன்றைய சிக்கல்களை இழைபிரிக்கும் கட்டுரைகள் இவை. இவ்வகைக் கட்டுரையில் நுனிப்புல் மேய முற்பட்டால் தகவல் அளிப்புத் திறன் குறைபாட்டை அம்பலப்படுத்திவிடும். நிகழ் கால நேர்வுகளை அலசும் இக்கட்டுரைகள் குறை செய்திகளையோ, மிகைத் தகவல்களையோ கொண் டிருக்குமானால், அவை வரவேற்பைப் பெறாது போகும். கட்டப்பட்ட கயிற்றின்மீது நடக்கிற கவனத்துடன் எழுத வேண்டிய இவ்வகைக் கட்டுரைகள் எழுதுவதில் வெற்றி பெறுகிறவர் உதயை மு. வீரையன்.

முப்பது கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் நம் கவனத்திற்கு வருகிறது. உள்ளூர் முதல் உலகம் வரை எதிர்ப்படும் பல பிரச்சனைகள் இதில் அலசப்படுகின்றன.

நம் அரசியல்வாதிகள் பிரச்சனைகளைக் கோணிக்குள் இட்டு இறுக்கமாய்க் கட்டிவைப்பர். உள்ளே உயிருள்ள பிரச்சனைகள் துணி முடிச்சிற்குள் அடைத்த பூனைக் குட்டிகள்போல் சீறிச் செருமிப் பீறிப் பிறாண்டிக்கொண்டிருக்கும். எடுத்த எடுப்பில் பிரச்சனை தீர்க்கப்பட்டால் அரசியல் நேர்ப்படும். அரசியல்வாதி தேவையற்ற வனாகி விடுவானே! கண்ணகி கோவில் தமிழக எல்லைக்குள். அதற்குப் போகும் வழி கேரளக் கட்டுப்பாட்டில். போதாதா அடிக்கடி சீறிச் சினந்துகொள்ள?

அரசியல்வாதிக்கு அறிக்கைவிட வாய்ப்பிருக்க வேண்டும். எங்காவது புகைந்தால்தானே அது கைகூடும். இங்கு மலையாளி- தமிழனிடை நேய மற்ற உரசலை அரசியல் தந்திரம் சீண்டிவிடுகிறது. சில நேரம் இவ்வாறு முட்டவிடும் வித்தை சர்க்கஸ் காரனையே பலிகொண்டுவிடுகிறது. இதற்குத் தெலுங்கானாப் பிரிவினை பொருத்தமான எடுத்துக் காட்டு.

அரசியலையும் அதனை அவ்வப்போது ஆக்கிப் போடும் அடுக்களையாகிய கூட்டணியையும் அணுகுகிற கட்டுரைகள் சில. 2009 தேர்தலை யொட்டி எழுதிய கட்டுரை பா.ஜ.க. காங்கிரஸ் இடையில் எழுந்த பிரசார முழக்கங்களை அலசு கிறது. கறுப்புப் பணந்தான் தேர்தலை ஜனநாயகத் தேரில் பூட்டிச் செலுத்துகிறது. (2014 தேர்தலை கார்பரேட்கள்தான் நிர்ணயித்தன.) வெற்றி முடிவையும் கறுப்புப் பணமே முடிவுசெய்கிறது. இந்தப் பகடைக் காய்கள் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதாகக் கரணம் போடுகின்றன. நாடகத்தில் இராவணனே இராமனாக வேடங் கட்டினால், சீதை (ஜனநாயகம்) என்னாவாள்? வெளிநாட்டுக் கல்வி நிறுவனக் கட்டுப்பாட்டுச் சட்ட முன்வரைவு, சிறப்புப் பொருளாதார மண்டலம், மரபணுமாற்ற விதைத் தொழில்நுட்பம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்- இவை யெல்லாம் நம் அரசியல் தலைவர்களின் சாதனை. யாருக்காக என்று கேட்கக்கூடாது. கேட்டால் அது தேசத்துரோகம்.

தேர்தல் நேரந்தவிர ஆளவந்தார் மனத்தில் அம்பானியும் அதானியுந்தான் இந்தியக் குடிமக்கள்.

அந்திய முதலாளிகளைக் ‘காந்தியின் பேரன்கள்’ அந்நிய முதலீட்டுக்காகப் பரிசம் போட்டுவருவது ‘இரண்டாவது சுதேசி இயக்கம்!’ பாரதி பார்த்தால் இவர்களை என்ன செய்வார்?

இந்திய அரசியலில் கூட்டணிகள், உண் மையில் கூத்தணிகள். ‘அரசியலில் நிரந்தரப் பகை வரும்/ நண்பரும் இல்லை.’ எவ்வளவு வசதியான விளக்கம்! அரசியற்குட்டையை வசதியாகச் சேறு குழப்பப் பொருத்தமான ஓடக்கோல். “உங்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு உத்தரவிடுங்கள்!” என்ன சேவை? தாமிரபரணியில் ‘ஜலசமாதி’யா? வேளாண் கல்லூரி மாணவிகளுக்காகப் பேருந் துடன் ‘அக்கினி ஆகுதி’யா? கூண்டோடு அழிக்கச் சிங்களவனுக்கு படையும் பயிற்சியும் ஆயுதமும் உத்திதானமும் வழங்கியதா?

தேர்தலோடு மோதும் தேர்வுகள் பற்றியது ஒரு கட்டுரை. இவை இரண்டுமே திருத்தப்பட வேண்டியவை. இரண்டும் குறைபாடு மலிந்தவை. எனினும் தற்போது இவற்றைவிட மாற்று வழி இல்லை. குறைகள் திருத்தப்படவேண்டும்.

உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21. மொழி தேசிய இனத்தை வரையறுக்கும் முதற்கூறு. தாய் மொழிக் கல்வி மனிதனின் இதயப் பசி. குழந்தை மன வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே ஏற்றது. இது காந்தியின் வாக்குமாகும். தமிழன் இன்று ‘எங்கே தமிழ்?’ என்று தேடுகிறான். எங்கும் தமிழ் இல்லை. கல்வி நிலையங்களிலிருந்து தமிழை வெளியேற்றி விட்டார்கள். இது சதி; வன்முறை. ‘உயிர் தமிழுக்கு!’ ஆம். உயிர் மட்டும்; கல்வி அன்று; இந்தி எதிர்ப்பு மொழிப் போரை ஆங்கிலத்திற்கு ஆதாயமாக்கியவர்களை நம்மால் அடையாளம் காட்டமுடிகிறது. தமிழை மந்திரித்துக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தவர்கள் தமிழைப் பயிற்று மொழி, ஆட்சிமொழி, வழக்கு மன்ற மொழி ஆக்கினார்களா? யார் கையைப் பிடித்துத் தடுத்தவர்? தமிழிற் பாடங்களைப் படிக்க, தமிழையாவது படிக்கச் சட்டம் ஏன் கொண்டு வரவில்லை? தமிழில் படித்தவர்க்கு மட்டுந்தான் தமிழகத்தில் அரசு வேலை என்று சட்டம் கொண்டு வருவதை யார் மறித்தது?

ஆட்சி பீடம் ஏறியவர்க்குள்ள ஆங்கிலப் பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் தமிழுக்குப் பயன்படவில்லையே!’ ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்ற அலங்காரத்தினை அகற்றிப் பார்த் தால், ‘எங்கே தமிழ்?’ என்பதுதான் உள்ளீடு. வாயளவில் செம்மொழி மாநாடு. தேர் திருவிழா போல் கூட்டம், ஊர்வலம். நடப்பில் ‘சுழி’. ‘ஏன் இந்தத் தமிழ் மாநாடு?’ என்ற கட்டுரையும் இதையே வெளிப்படுத்துகிறது. இனப்படுகொலையின் இரத்தக் கறை உலருமுன், மரத்துப்போன மனங் களின் கொண்டாட்டம்.

இந்நூலில் கல்வியைப் பற்றி நான்கு கட்டுரைகள் இடம் பெறுவன. நாட்டில் மாற்றம் ஏற்படக் கல்வியே நாற்றங்கால். கல்வித் தொண்டாக விளங்குதல் வளரும் நாட்டுக்கு அவசியமாகும். இன்று கல்வி தொழிலாக, கண்முன் நடக்கும் கொள்ளையாக மாறிவிட்டது. தமிழில் கல்வித் தரம் திட்டமிட்டே தாழ்த்தப்படுகிறது. ஆங்கிலக் கல்வி அமெரிக்கக் கனவுக் கருவூலத்தைத் திறக்கும் திறவுகோல்.

ஆசிரியப் பணியின் மாண்பு எத்துணை வீழ்ச்சியடைந்துவிட்டது. வகுப்பறையை அறிவுக்கு நாற்றங்காலாக்கிய ஆசிரிய உழவர்கள் எண்ணிக் கை குறைந்து வருகிறது. வகுப்பறைக்குள் மலைப் பாம்பு கிடப்பதுபோல் அஞ்சி ஒதுங்கும் ஆசிரி யர்கள் எண்ணிக்கைக் கூடிவருகிறது. இத்துணை எதிர்மறைச் சூழலிலும் தனியார் கல்வி வணிக விளம்பரங்களுக்கு முன்னால் சாதனை மாணவர் களை முன்னிறுத்தும் ஆசிரியர்கள் நம்பிக்கை விளக்காக விளங்குகின்றனர். குக்கிராமங்களில் நூற்றுக்கு நூறு சாதனை! எல்லா வகுப்பிற்கும், எல்லாப் பிரிவேளைக்கும் ஆசிரியர் என்ற நிலை வந்தால், அரசுப் பள்ளிகள் சாதனை பெருகும். வணிகப் பள்ளிகளும் கட்டுக்குள் அடங்கும். செய்யுமா அரசு?

‘குழந்தைத் தொழிலாளர்’ என்ற தொடரே மனித சமுதாயத்திற்கு அவமானம் தருவதாகும். குழந்தைகள் வாழ்வதற்கு அபாயமான நாடுகள் மூன்று. அவற்றுள் மூன்றாவது இடம் இந்தியா விற்கு, இந்த இழிநிலையிற் கொதிநிலை தற்போது பரவி வரும் பெண் குழந்தைகள் பாலியல் வன் முறை, சத்துணவுப் பற்றாக்குறை, வறுமை முதலியன இக்கொடுமைக்கு அடிப்படைகள். ‘குழந்தைகள் நம் சொத்து’ என்ற கொள்கை ஆவணங்களுக்குக் குறைவில்லை. இங்குதான் நாட்டின் தொழிலாளர் சக்தியில் 55 விழுக்காட்டைக் குழந்தைத் தொழி லாளர்களே நிரப்புகின்றனர். 1.1 கோடிக் குழந் தைகள் ஆதரவின்றித் தெருவில் திரிகின்றனர். இது பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும்.

இரண்டாம் உலகப் போருக்கு ‘பட்டா பிஷேகம்’ செய்து வைத்தவை அமெரிக்காவின் இரு அணுகுண்டுகள். ஹிரோஷிமா, நாகசாகியில் அவை இரண்டு இலட்சம் மக்களை எரித்துக் கருக்கின. 2006-ல் அதே ஜப்பானில் சுனாமி தாக்கியது. அதனால் புகுஷிமா அணுமின் நிலையம் வெளிப்படுத்திய கதிர் வீச்சு 2.5 இலட்சம் மக்களை முகாங்களுக்கு விரட்டியது. அணுமின்சாரம் தயாரிப்பில் 31 நாடுகளில் 443 அணுமின் உலைகள் ஈடுபடுகின்றன. 482 உலைகள் வரக் காத்திருக் கின்றன. இந்த மின் நிலையங்களின் ஆபத்து கழுத்திற்குக் குறிவைத்துத் தொங்கும் கத்தி.

நிகழ்கால இந்தியச் சிறைகள் நிலையைப் படம்பிடிக்கிறது ஒரு கட்டுரை. சில புள்ளி விவரங்களும் பணம் சிறைக்களம் வரை பாயும் செய்திகளும் அரசின் அலங்கோலம் காட்டுவன. செல்வமும் ஆட்சிப் பின்பலமும் இருந்தால் சொந்த வீட்டைவிடச் சிறை வசதி மிக்கதாகிறது. ஊழலும் இலஞ்சமும் சிறையைச் சொர்க்கமாக்கு கின்றன. நீதிபதியின் பரிசோதனையைப் பார்த்து இவ்விதிமீறல்கள் அலட்சியமாகக் கண்சிமிட்டு கின்றன. சிறை சீர்திருத்த இலக்கு எப்போதோ மறதிச் சகதியில் விழுந்து ஆழ்ந்தது.

ஊதியத்திற்குச் செய்யும் வேலைக்குச் சேவை என்ற சொல் அதிகப்படி. கொத்தமங்கலம் அஞ்சல் ஊழியர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கடிதங் களையும் ஆவணங்களையும் குப்பைமேட்டிடம் பட்டுவாடா செய்திருக்கிறார். அரசு ஊழியத் திலும் சேவை மனப்பான்மை அவசியமாகிறது.

சாதியை ஒரு கட்டுரையில் சோதிக்கிறார் ஆசிரியர். காந்தி போன்றோர் சாதியைச் சாப மாகப் புறக்கணித்தனர். கலப்பு மணம் என்றால் கத்தி தீட்டும் சாதிச் சங்கங்கள். ‘சமுதாயம்’ என்ற சொல் பரந்த பொருளுடையது. அதைச் சாதியைக் குறிக்கும் ஒன்றாக இவை குறிப்பது வேடிக்கை யானது. ஒருபுறம் கலப்பு மணம் ஊக்குவிப்பு, சமத்துவபுரம். மறுபுறம் சாதியத்தின் கூர்நகங் களால் சமுதாயத்தைக் கிழித்துக் களிப்பது. எங்கே போகிறோம்?

கவிஞர் தமிழ் ஒளி இந்திய மொழிகளில் மே தினம் பற்றிய முதற்கவிதையை (1948-ல்) வடித்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தமிழகம் அடையாளம் காணத் தவறிவிட்டது. பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் மனந்திறந்து இவரைப் பாராட்டித் தமிழகத்திற்கு அறிமுகம் செய்தார். காலங்கடந்து நிற்கும் கவிஞரின் தனித்தன்மையை ஆசிரியர் விளக்கியுரைக்கிறார்.

இத்தொகுப்பில் அயல்நாடுகளைப் பற்றி ஐந்து கட்டுரைகள் உள்ளன. ‘வெள்ளை ஆஸ்திரேலியா’வின் இனவெறிக்கு ஒரு சான்று இந்திய இளைஞர் படுகொலை. அங்கு செல்கிற இந்தியரின் உயிர் உடைமையைக் காக்க வேண்டிய இந்தியா கைபிசைவது இன்னும் கொடுமை.

ஜுன் 20 உலக அகதிகள் தினம். உலகில் 4.37கோடி மக்கள் அகதிகள். சோமாலியாவும் இலங்கையும் அகதிகள் உற்பத்திக்கூடங்கள். அவற்றின் அதிபர்கள் ஆள்வது பிணக்காடுகளை. இலங்கை தன் தேசிய இனத்தவரான தமிழர் களைக் கொன்று குவிக்க உதவிய இந்தியாவின் செயல் உலகத்தால் மறக்கமுடியாதது.

மலேசியா பல இனத்தவர் வாழும் நாடு. இங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் பனிப்போர். எதிர்க்கட்சித் தலைவர் சிறையில். அண்மையில் காணாமற்போன விமானத் துடன் இவ்வரசியற் பகைமையை இணைத்துப் பேசின ஊடகங்கள்.

பெட்ரோல் வாசம் அமெரிக்காவை வெறி கொள்ள வைக்கும். அப்போது உலக நீதிநெறிகள் கண்டு கொள்ளப்படாதவை. முன்பு ஈராக், பின்பு ஆப்கானிஸ்தானம். இப்பொழுது சிரியா எதிர்ப்புப் படைக்கு துருக்கி, கத்தார் வழியாக அமெரிக்கப் போர்க்கருவிகள்.

பல தலைப்புகள்; 30 கட்டுரைகள். அவற்றின் உரு, பொருள் யாவும் தலைப்புக்கேற்பக் கருத்துப் பந்தி வைப்பன. நீரோட்ட நடை, புள்ளி விவரம், அரசியல் சமுதாயச் சிந்தனைக்கேற்ற சொற் கோவை, செய்தி வரிசை இவை அணிவகுக்கும் திறமையும் அனுபவச் செறிவும் நூலாசிரியரின் சாதனைக்குக் கட்டியம் கூறுகின்றன.

உரிமைக் குரல்

ஆசிரியர்: உதயை மு.வீரையன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்

16 (142), ஜானி ஜான் கான் சாலை,

இராயப்பேட்டை, சென்னை - 600 014

விலை: ரூ. 110/-

Pin It