இலக்கிய இலக்கண வளப்பங்களால் உலகிற்கே பண்பாடுகளைப் பரப்பிப் பறைசாற்றிய மொழி தமிழ். விழியாக மொழியைக் கொள்ளுவோமானால் இமைகளாக இலக்கண நூல்களைக் கருதவேண்டும். விழிகளுக்கு இமைகள் பாதுகாப்பாக இல்லையென்றால் கண்களின் பாதுகாப்பு காணாமல் போய்விடும். இமைக்காப்பைப் போல மொழிவளர்ச்சிக்கு இலக்கணக் காப்பு இன்றியமையாததாகிறது. ஆனால் உலகம் இலக்கணத்தை வேம்பின் பைங்காய் என இக்காலத்தில் கருதுகின்றது. மேலும் மகளிர்க்கு நிறைகாப்பைப் போல மொழிக்கு இலக்கணக் காப்பின் தேவையை அறிந்து இன்றைய தமிழகத்தில் பலரும் இலக்கண ஆய்வுத்துறையில் பெரிதும் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்னூல்

தொல்காப்பியத்தினை முதல் நூலாய் ஏற்று நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலைச் சமண சமயத்துறவி பவணந்தி எழுதியுள்ளார். எழுத்துகள் தோன்ற முதற்காரணம் அணுத்திரளே என்று கூறியமையாலும் அசோகமரத்தின் நிழலில் அமர்ந்த அருகக்கடவுளை வணங்குவதாலும் இவர் சமணம் சார்ந்த ஒரு துறவி என்பது புலப்படும். மைசூரில் நாசபுரம் தாலுக்காவிலுள்ள சனகை என்னும் சனநாதபுரத்தில் தோன்றியவர் பவணந்திமுனிவர். பவணந்தியாரை ஆதரித்தவன் கங்க நாட்டினை ஆண்ட சீயகங்கன் என்னும் குறுநிலமன்னன். இவருடைய காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் இறுதியும். 13ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் (கி.பி. 1178-1218) ஆகும். மூன்றாம் குலோத்துங்கச் சோழனுடைய ஆட்சியில் சிற்றரசனாக இருந்தவன் சீயகங்கன். இவனுடைய வேண்டுகோளுக்கிணங்கிப் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றிப் புகழ்பெற்றார். இவர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திற்கும் இலக்கணம் எழுதியிருக்கலாம் என்ற ஐயம், இவர் பாயிரத்தில் ‘‘அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர” எனச் சுட்டியிருப்பதால் இது தெரிகிறது. ஆனால் எழுத்து, சொல், என்னும் இரண்டிற்கு மட்டுமே நன்னூலில் இலக்கணம் எழுதப்பட்டுள்ளது.

நன்னூல் பாயிரத்தில் 55 நூற்பாக்களும், எழுத்ததிகாரத்தில் 202 நூற்பாக்களும், சொல்ல திகாரத்தில் 205 நூற்பாக்களும் என 462 நூற்பாக்களைக் கொண்டும் எழுத்ததிகாரம் ஐந்தியல்களையும் சொல்லதிகாரம் ஐந்தியல்களையும் கொண்டும் உள்ளது. இந்நூல் சிறப்புப் பாயிரமாக ஏழு மதம், பத்து குற்றம், பத்து அழகு, ஆசிரியர் வகை, மாணாக்கர் வகை ஆகியன கூறப்பட்டுள்ளன.

“ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும்

பாயிரமில்லாபனுவலன்றே” (நன்னூல் - 54)

என்பர். ஒரு நூல் பலவேறு வகையான பொருள்களில் எழுதப்பட்டிருந்தாலும் பாயிரம் என ஒன்று கூறப்பெறாவிட்டால் அதனைச் சிறந்த நூலாக ஏற்றுக்கொள்ள இயலாது.

எழுத்து

மொழியைப் பிழையின்றிப் பேசவும், எழுதவும், படிக்கவும் இலக்கணத்தைக் கற்க வேண்டும். இதற்குப் பேருதவியாக இன்றைய தமிழர்களுக்குக் கிடைத்த பெரும்சொத்துதான் நன்னூலாகும். எழுத்திலக்கணப் பகுதிகளாக எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ச்சி எனப் பன்னிரண்டு கூறுவார்.

“உயிரும் உடம்புமாம் முப்பதுமுதலே”                                       (நன்னூல் -59)

என்று முதலெழுத்துக்கு இலக்கணம் கூறும் ஆசிரியர் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் எனப் பத்து வகை சார்பெழுத்துகளையும் சுட்டி நம்மைத் தெளிவுபடுத்துகிறார்.

“உயர்திணை என்பனார் மக்கட் சுட்டே” (தொல்-பொருள்-நூற்பா-1)

எனும் நூற்பாவால் உயர்திணை என்று சொல்லப்படுபவர்கள் மக்களைச் சுட்டும் பெயர்களுக்குரியவர்கள் என்ற தொல்காப்பியரின் கருத்தை நாம் அறிந்துள்ளோம். ஆனால் பவணந்தியார்

“மக்கள் தேவர் நரகர் உயர்திணை    

மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை” (நன்னூல் - 261)

எனக் குறிப்பிடுகிறார். மக்களையும் தேவர்களுக்குரிய பெயர்களையும் உயர்ந்த ஒழுக்க முடையவர்களெனக் கொள்ள நேரும்போது, நரகர் என்பவர்களை உயர்ந்த பண்பாளர்கள் பட்டியலில் சேர்த்து உயர்திணையாய்க் கொள்வது எங்ஙனமாகும் எனப்பலர் ஐயுறும் நிலை ஏற்படுகிறது. இருந்த போதிலும் பவணந்தி முனிவர் துணிந்து பகரும் பாங்கு அன்றிருந்த சமணசமயத்தின் வலிமைப் போக்கைக் காட்டுகிறது.

பெயர்ச்சொற்களைப் பொதுவாகச் சுட்டும்போது தொன்றுதொட்டு வழங்கப்படும் பெயர்களை இடுகுறிப்பெயர் என்றும் ஏதேனும் காரணத்தால் பெயராக வருவது காரணப்பெயர் என்றும் சொல்வர்.

இதனை மரம், கல், மண், நீர், இடுகுறிப்பெயர். உழவர், அழகர், தொழிலாளர், திருடர் - காரணப்பெயர்கள்.

“இடுகுறிகாரணப் பெயர்ப்பொதுச் சிறப்பின” (நன்னூல் - 62)

என்று நன்னூலார் கூறுகிறார். ஓசையளவால் குறைந்து ஒலிப்பதைக் குறிலென்றும், நீண்டு ஒலிப்பதை நெடில் என்றும் பகுத்துரைத்துத் தமிழிசை உலகிற்குப் பேருதவி புரிந்துள்ளார். குறுக்கங்களும், அளபெடைகளும் மொழியாராய்ச்சி மற்றும் இசையாராய்ச்சி செய்வோருக்குப் பெரிதும் பயனளிக்கின்றன.

உலக மொழிகளிலேயே எழுத்துகளின் பிறப்பிடங்களைக் கண்டறிந்து இலக்கணம் கூறியுள்ளது தமிழ்மொழியே. தொல்காப்பியமும் நன்னூலும் எழுத்துகளின் பிறப்புப் பற்றி இறுமாந்து கூறியுள்ளன.

சான்றாக

“முயற்சியுள் அ ஆ அங்காப் புடைய”

(நன்னூல் -76)

எனும் நூற்பாவால் அ ஆ எனும் ஈரெழுத்துப் வாயின் அங்காப்பில் தோன்றும் என நன்னூல் இயம்புகிறது.

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணர்ச்சியின்போது அடையும் மாற்றங்கள் பல நூற்பாக்களால் கூறப்பட்டுள்ளன. பத வகைகளுள் பகுபதத்தின் உறுப்புகளான பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் முதலியவற்றின் பணிபற்றி மிகச் சிறப்பாக இங்குக் கூறப்பட்டிருப்பது மொழிவளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் முதலான செய்யுள் விகாரங்களும் எடுத்தாளப்பெறுகின்றன. இருமொழி இணைவில் உயிரெழுத்துகள் இருக்கும்போது ஆங்கு உடம்படுமெய் தோன்றும் எனவும் கூறுகிறார்.

“ இஈஐவழியவ்வுமேனை

உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்

உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்”

(நன்னூல் - 162)

இகர, ஈகார, ஐகார, ஏகாரங்கள் நிலைமொழி ஈற்றில் நிற்க வருமொழி முதலில் உயிர்எழுத்து வரின் ‘யகர’ மெய் உடம்படுமெய்யாகத் தோன்றும். ஏனைய உயிரெழுத்துகளும் ஏகாரமும் நிலைமொழிஈற்றில் நிற்க ‘வகர’ மெய் உடம்படுமெய்யாகத் தோன்றும் என்று இயம்புகிறார்.

சான்றுகள்;

மணி + அழகு = மணியழகு

பூ           + அழகு = பூவழகு

சே + அடி = சேவடி

சே + அடி = சேயடி

நன்னூல் சொல்லதிகாரத்தில் பெயரியல் முதலாக ஐந்து இயல்களும் பின் அணியிலக்கணமும் கூறப்பட்டுள்ளன. தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழியும் திணை, பால், எண், இடம், காலம் பற்றியும் கூறியிருப்பது தமிழின் சிறப்பைத் தரணிக்குக் காட்டுவதாகும்.

இலக்கணமுடையது, இலக்கணப்போலி மரூஉ என்னும் மூன்று இயல்பு வழக்குகளும் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்னும் மூன்று தகுதிவழக்குகளும் பேசப்படுவதோடு,

“செந்தமி ழாகித் திரயாதுயார்க்கும்

தம்பொருள் விளக்கும் தன்னை இயற்சொல்” (நன்னூல் -271)

என்றும் கூறிச் சொற்களின் பாகுபாட்டைத் தெளிவுபடுத்துகிறார். பெயர்ச்சொற்களின் வகைகள், வினைமுற்றுகள், எச்சங்கள், வேற்றுமைகள் பற்றி எல்லாம் நன்னூல் திறம்படப் பேசுகிறது. வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை முதலான தொகைநிலைத் தொடர்கள் ஈண்டுக் கூறப்பட்டு மேலும்,

“எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே” (நன்னூல் - 388)

என்றெல்லாம் இலக்கணக் கோட்பாடுகளை வகுத்துச் சான்றோர்களால் இயற்றப்பெற்ற செய்யுள்களுக்குப் பொருள் கொள்ளுகின்ற பொருள்கோள்களின் வகைகளாகிய யாற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிரை, பூட்டுவில், தாப்பிசை, கொண்டுகூட்டு, அளைமறிபாப்பு, அடிமறிமாற்று என்பனவற்றால் உணர்த்துகிறார் பவணந்தி.

உயிராகிய பொருளையும் உயிரற்ற பொருள்களையும் உலகத்துள்ள பொருள்களின் இருவகைகளாகப் பிரித்தறிந்து அவற்றின் குணங்களையே பண்புகளாக உரைப்பார்கள். இவற்றுள்ள நிலையில் உயிர்ப்பொருள்களின் வகைகளை

“மெய்ந்நா மூக்குநாட்டம் செவிகளின்

ஒன்று முதலாக்கீழ்க் கொண்டுமேல் உணர்தலின்

ஓரறிவு ஆதியா உயிர் ஐந்தாகும்”

உற்றறியும் மெய்யும், சுவைத்தறியும் நாவும், நுகர்த்தறியும் மூக்கும், கன்டறியும் கண்ணும், கேட்டறியும் செவியும் முறையே ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஓசை என்னும் ஐந்தும் அறியும் புலன்களாகும். நிரல்நிரையாக ஒவ்வோர் அறிவையும் பெற்று ஓரறிவுயிர் முதலாக ஐந்துயிர்கள் என நன்னூல் சிறப்பாகக் கூறுகிறது. இன்று நாம் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் சிந்தனைத் திறனை ஆறாம் அறிவாகக் கொண்டு பகுத்தறிவு என்கிறோம்.

முடிவுரை

இவ்வாறு எளிமையும், இனிமையும் அமைய இலக்கண நூல் வடித்துத் தந்த பவணந்தி முனிவர் உயிர்களுக்கு நன்மையை வழங்குகின்ற சமயமாகிய சமணத்தைச் சார்ந்தவர். எவ்வுயிர்க்கும் தீங்கு நேராதவாறு நன்மையையும் இன்பத்தையும் வழங்குகின்ற சமண மதத்தின் உயரிய கோட்பாடுகளை உள்ளத்தில் கொண்டு வாழ்ந்த முனிவராகிய பவணந்தி படைத்த இலக்கண நூலாகிய நன்னூல் ஓர் இனிமைபயக்கும் இன்னூலாகும். மொழியறிவு பெற்றுச் சிறக்க விழைவோர் யாவரும் நன்னூலார் தந்துள்ள எளிய இலக்கண நூலைக் கற்றிட வேண்டும். இந்த இனிய நூலின் பயனை எல்லாரும் துய்க்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.

- மு.சத்யா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயாராய்வுத் துறை, மருதுபாண்டியார் கல்லூரி, தஞ்சாவூர்.

Pin It