வர்க்கப் பிரச்சினையின் ஊடே, ஆதிக்கப் பிரிவினர் பாதிக்கப்படும் பிரிவினரின் மீது செலுத்தும் அடக்குமுறை பண்பாடு, அரசியல், பொருளாதாரம் ஆகிய மூன்று கூறுகளையும் உள்ளடக்கியது. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று துணை செய்து, ஆதிக்கப் பிரிவினருக்குக் காவடி தூக்கும் நிலையிலேயே சமுதாயப் போக்கு சென்றுகொண்டிருப்பதைக் கண்டறிந்து தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் அதனை மிக அழகாக மடைமாற்றிய முன்னோடி களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் இலக்கியப் பேராசான் ஜீவா.

‘கண்டதையும், கேட்டதையும் அப்படியே மெய்சிலிர்க்கிற வகையில் இலக்கியம் படைப்பது பொழுதுபோக்கிற்கே உதவும். அப்படிப் படைப் பதும் பொழுதைப் போக்கத்தான்’ என்ற நிலையை மாற்றுகிற நோக்கில் - அதாவது, ‘கலை கலைக்காக அல்ல; கலை வாழ்க்கைக்காக, இலக்கியம் வாழ்க் கைக்காக’ என்ற குறிக்கோளில் கலை இலக்கியத்தின் மீது தனது நோக்குநிலையை நிறுவினார் தோழர் ஜீவா. திட்டமான, வரையறைக்குட்பட்ட அமைப்பின் மூலம் வழிகாட்டப்பட்டு, அந்த வழிகாட்டுதலின் படியே கலை இலக்கியம் வெளிக்கொணரப்பட வேண்டும், அந்தப் படைப்புகள் சமூக முன்னேற்றத் துக்கு வழிவகை செய்யப் பயன்பட வேண்டும் என்ற உயர்நோக்கில் தோழர் ஜீவா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

ஜீவா கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இயங்கினாலும், இந்தக் கலை இலக்கியப் பெருமன்றத்தில் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்படாமல், யாரும் மன்றத்தில் பங்கு பெற்றனர்.

கோவையில் பேராசான் ஜீவா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு இலக்கியப் பெரு மன்றத்தின் பொன்விழா சிறப்பு மாநாடு, அதே கோவை நகரில் ஆர்.எஸ்.புரத்திலுள்ள பாரதிய வித்தியாபவன், பேராசிரியர் கார்த்திகேசு சிவத் தம்பி அரங்கில் மே 12, 13 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட அறிஞர் பெருந்தகைகள் பங்கேற்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் கலை இலக்கியப் பெருமன்றப் பொறுப்பில் தாம் திடீரென தோழர் ஜீவா அவர்களால் நியமிக்கப்பட்ட வரலாற்றைக் கூறிய பின்னர், தேசிய குழு உறுப்பினர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களும் தோழர் தா.பா. அவர்களும் கலை இலக்கியப் பெருமன்ற சாதனை யாளர்களைப் பாராட்டிப் பரிசுகளையும், விருது களையும் வழங்கினர்.

மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் உரையாற்றுகையில், பண்பாட்டைப் பரப்ப வேண்டிய திரைப்படத்துறை பண்பாடு கெட்டு, இளம் கலைஞர் களைப் படுகொலை செய்கிறது என்று சுட்டிக் காட்டி, இந்தச் சீர்கேட்டுக்குக் காரணம் உலகமய மாக்கல் என்ற போர் அரக்கன்தான் என்று சாடினார்.

வரலாற்றுப் பேரறிஞரான கே.என்.பணிக்கர் இன்றைய பண்பாட்டு ஊடுருவல் அதன் அரசியல் நகர்வு, அதைக் கண்டறிந்து சமுதாயத்தைக் காப் பாற்றுதல் உள்ளிட்ட கூறுகளை விளக்கி மிக விரிவாக உரையாற்றினார்.

தோழர் சி.மகேந்திரன், பேராசிரியர் கே.என். பணிக்கர் ஆகியோரின் கருத்துநிலைகளை அறிகையில் ஏகாதிபத்தியம் அதன் தாக்கத்தைச் சமுதாயத்தில் விரிவாக்கம் செய்வதற்கான புதிய கருத்துநிலையையும், அறிவுத்துறைக் கருவியையும் அவ்வப்போது புதுப் பித்து, மக்களிடையே எளிதில் பரப்ப முனைந்து வருகிறது என்பதை எளிதில் அறியமுடிகிறது. அதற்கு ‘தினுசு தினுசாக’ சிந்திப்பதற்கென்று அறிவுக் குழுமமும் உண்டு. இத்தகைய நிலையில், ஏகாதிபத்தியம் பண்பாட்டு அடிப்படையில் தன் கொடுங்கரத்தை மக்கள் சமூகத்திடையே விரிக்க முனைவதைத் தடுப்பதற்கு முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் சுய மறு ஆய்வு செய்வதில் மேலும் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம் என்பதைக் கோவை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்துவதை நாம் கவனத்திற் கொள்வோம்.

Pin It