பதினாறாம் நூற்றாண்டில், தமிழில் உருவான அச்சுப் பண்பாடு, பதினெட்டாம் நூற்றாண்டு முடிய பெரும் வளர்ச்சி பெற்றதாகக் கூறமுடியாது. கிறித்தவ சமயம் தொடர்பான அச்சு நூல்கள், அரசாங்க நிர்வாகம் தொடர்பான அறிக்கைகள், கிழக்கிந்திய கம்பெனியின் வணிகம் தொடர்பானவை ஆகிய பிற அச்சு வடிவம் பெற்றன. 266 நூல்கள் அச்சு வடிவில் வெளிவந்திருப்பதை அறிய முடிகிறது. எனவே, பதினெட்டாம் நூற்றாண்டு முடிய, தமிழ்ச் சூழலில் அச்சு பெரும் புழக்கத்தில் இருந்ததாகக் கூற முடியாது. எனவே இக்கட்டத்தில் அச்சுப் பண்பாடு வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள்

மிக மிகக் குறைவு. அச்சு நூல்களை, ஓலைகளில் படி எடுத்துக்கொண்டதும் நடைபெற்றது. ஏனெனில் அச்சு என்பது எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. 1556 - 1800 காலத்தில் வெளிவந்த தமிழ் அச்சு நூல்களில் பெரும்பாலானவை பைபிள் தொடர்பான நூல்களே ஆகும். அதுவும் வெகுமக்கள் பயன்படுத்தும் நூல்களாக அமையவில்லை. மாறாக சமயத்தைப் பரப்பும் ஊழியர்களுக்குப் பயன்படும் வகையில் அவை இருந்தன. இத்தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சூழல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. தமிழ் அச்சுப் பண்பாட்டின் பல்வேறு தன்மைகளைக் கண்டறிய இந்நூற்றாண்டில் முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான அச்சுப் பண்பாட்டின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் வகையில், நமது வசதிக்காகப் பாகுபடுத்திக் கொள்ளலாம்.

கிறித்தவ நிறுவனங்கள் வழி அச்சிடப்பட்டு வெளிவந்த சிற்றறிக்கைகள் (Tracts)

கிறித்தவம் தொடர்பான, குறிப்பாகப் பைபிள் தொடர்பான மொழியாக்கம் மற்றும் பிற நூல்கள்.

பிரித்தானியர்கள், தமிழ்மொழி மற்றும் பண் பாட்டை அறிந்து கொள்வதற்காக உருவாக்கிய நூல்கள்.

ஓலைகளிலிருந்து அச்சு வடிவம் பெற்ற தமிழ் நூல்கள்.

பள்ளிப் பாட நூல்கள்

பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள்.

மேற்குறித்த வகையில் அச்சிடப்பட்ட தமிழ் நூல்கள் வழி, தமிழில் எவ்வகையான வாசிப்பு மரபு உருவானது என்பது குறித்து அறிய முடியும். 19 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நூல்களை அறிந்துகொள்ள உதவும் அடிப்படையான தரவுகள் பின்வருவன:

1865இல் ஜான் மர்டாக் (1819 - 1904) என்பவர் உருவாக்கிய அச்சிட்ட தமிழ் நூல்களின் பட்டியல். (Classified catalogue of Tamil Printed Books With introducing Notices)

பிரித்தானிய நூலகத்தில் உள்ள தமிழ் நூல்கள் பட்டியல் (1904, 1939) இரண்டு தொகுதிகள். (மூன்றாம் தொகுதி பிற்காலத்திய நூல்கள்)

தமிழக அரசு உருவாக்கிய தமிழ் நூல் விவர அட்டவணை (முதல் தொகுதி - ஐந்து பகுதிகள் - 1867-1900)

1948ஆம் ஆண்டில் நூலகச் சட்டம் ஒன்றை அவினாசிலிங்கம் அமைச்சரவை கொண்டு வந்தது. இதன்மூலம் தமிழ்ச் சூழலில் நூலகங்கள் வளருவதற்கான வாய்ப்புகள் உருவாயின. 1959ஆம் ஆண்டில் உருவான தமிழ் வளர்ச்சி மன்றம் தமிழ் நூற்பட்டியல்கள் அச்சாக்கம் பெறுவதற்குப் பெரிதும் உதவியது. இப்பின் புலத்தில் 1867ஆம் ஆண்டு முதல் தமிழில் வெளிவந்த நூல்களின் பட்டியல் தமிழ் நூல் விவர அட்டவணை ஏழு தொகுதிகளாக 23 பகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றை நாம் கட்டமைக்க முடியும்.

1867இல் பிரித்தானிய அரசு கொண்டுவந்த நூல் பதிவுச் சட்டத்தின் மூலம்தான், நூல்கள் வெளிவந்ததற்கான தரவுகளைப் பெறமுடிகிறது. 1867ஆம் ஆண்டுக்கு முன் வெளிவந்த அச்சாக்கங்கள் பற்றி அறிவதற்கு 1865இல் ஜான் மர்டாக் உருவாக்கிய நூல் அட்டவணை உதவுகிறது. இந்த அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, இக்கட்டுரையின் தொடக்கத்தில் காட்டியுள்ள அடிப் படையில், தமிழ் அச்சுப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். 1865ஆம் ஆண்டுக்கு முன் தமிழில் உருவான அச்சுப் பண்பாட்டை மட்டும் இங்கு உரையாடலுக்கு உட்படுத்துவோம். ஜான் மர்டாக் 1865இல் தான் தொகுத்த அச்சிட்ட தமிழ்நூல் பட்டியல் குறித்துப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

“ஓலை வடிவத்தில் இருந்த நூல்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில், அச்சு வடிவம் பெறத் தொடங்கின. 1865இல் அச்சிட்ட தமிழ் நூல்களை நான் பட்டியல் இட்டபோது 1765 நூல்களைப் பட்டியல் இட்டேன். அவை: சீர்திருத்தக் கிறித்தவ சமய நூல்கள் 587; ரோமன் கிறித்தவ சமய நூல்கள் 87; இந்து நூல்கள் 508; முகமதிய நூல்கள் 36; பிற சமய நூல்கள் 19; தத்துவம் 50; இயற்கை அறிவியல் மற்றும் மருத்துவம் 62; கலைகள் 6; கவிதைகள் 72; நாடகம் 25; உரைநடைப் புனைகதைகள் மற்றும் பிற 50; மொழிநூல் மற்றும் பாடநூல்கள் 176; பூகோளம் மற்றும் வரலாறு 12; நாளிதழ்களும் பருவ இதழ்களும் 26; ஐரோப்பியர்கள் தமிழ் கற்றுக் கொள்ள உருவாக்கிய நூல்கள் 34. வட்டார மொழிகளில் அமைந்த நூல்கள் அனைத்தும் ஓலையிலிருந்து மறுஅச்சு பெற்றவை ஆகும்.” (John Murdoch Catalogue of the Christian Vernacular Literature - 1870)

மேற்குறித்த நூல்களை வெளியிட்ட நிறுவனங்கள் பின்வருமாறு:

தரங்கம்பாடி சமய நிறுவனம்.

கிறித்தவ சமயக் கருத்துப் பரப்பல் நிறுவனம் (S.P.C.K)

சென்னை நகர சமய சிற்றறிக்கை மற்றும் புத்தகம் வெளியிடும் குழு. (The Madras Religious Track, and Book Society)

தென் திருவாங்கூர் சிற்றறிக்கை வெளியிடும் நிறுவனம்.

நெய்யூர் சமயச் சிற்றறிக்கை வெளியிடும் நிறுவனம்.

திருநெல்வேலி சமயச் சிற்றறிக்கை வெளியிடும் நிறுவனம்.

கிறித்தவ வட்டாரக் கல்வி நிறுவனம் (The Christian Vernacular Education Society)

சென்னை - மதுரை தொண்டூழிய நிறுவனங்கள்.

ஆற்காடு தொண்டூழிய நிறுவனம்.

யாழ்ப்பாண தொண்டூழிய நிறுவனம்.

மேற்குறித்த பெயரில் அமைந்த சமய நிறுவன அறிக்கைகள் அச்சிடும் (Tracks) அமைப்புகள், அச்சிடுதலில் பெரும் சாதனை நிகழ்த்தியவை எனலாம். இவை மூலம் உருப்பெற்றவற்றைப் பின்வரும் வகையில் பார்க்க முடியும். அச்சு வடிவங்களில் கூசயஉவள எனப்படும் சிற்றறிக்கை வடிவங்களே மிக மிக அதிக அளவில் அச்சிடப்பட்டன. புதிதாக எழுத்தறிவைப் பெற்ற மக்கள் எளிதாகப் படிக்க இவைகள் உதவும். இவ்வகையான சிற்றறிக்கைகளைப் பாதுகாத்து நூலகங்களில் வைத்துக்கொள்வது இயலாது. ஆனால் இவை சமகாலச் சூழலில் மக்களிடம் எவ்விதம் சென்றடைந்தன, அதனை மக்கள் எவ்விதம் வாசித்தார்கள்? ஆகியவை தொடர்பான உரையாடல்கள், அச்சுப் பண்பாட்டை அறிய உதவும்.

சென்னை சிற்றறிக்கை மற்றும் நூல் உருவாக்கச் சங்கம் மூலம் வெளியிடப்பட்ட சிற்றறிக்கைகள் குறித்த பட்டியல் ஒன்றை ஜான் மர்டாக் (மேற்குறித்த நூல்: ப.147) வெளியிட்டுள்ளார். இதன்படி 1819-1868 முடிய உள்ள ஆண்டுகளில் 5,495,895 அறிக்கைகள் வெளியிடப்பட்டதை அறிகிறோம். ஆண்டிற்குச் சராசரியாக 109918 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. சுமார் ஒரு இலட்சம் அச்சிட்ட அறிக்கைகளை மக்கள் வாசித்தனர் என்று கூறமுடியும். இவ்வகையில், கிறித்தவ சமயப் பரப்பலுக்கான சிற்றறிக்கைகள் அச்சிடுதல் தான் மிகுதியாக நடைமுறையில் இருந்ததைக் காண்கிறோம். அன்றைய சூழலில் இவ் வகையான அச்சுச் செயல்பாடு மக்களிடம் ஒரு வகையான வியப்புடன் கூடிய ஆர்வத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் தமிழில் வாசிப்புப் பழக்கம் உருப்பெற்று வளருவதற்கும் அடிப்படையாக அமைந் திருக்கக்கூடும். அச்சு வடிவத்தில் செயல்படும் இவ் வகையான சமயப் பரப்பல் செயல் மூலம், அச்சு உருவாக்க மரபிற்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குமான உறவைப் புரிந்துகொள்ள முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே, இவ்வகையான செயல்பாடுகள் நடைபெற்றதைக் காண்கிறோம். அச்சிடுதல் என்பது சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் தனித்தனியாக நிகழ்த்தப்பட்டன. “கிறித்தவச் சமயப் பரப்பலுக்கான சிற்றறிக்கை (கூசயஉவள) அச்சிடுதலும் தமிழ் அச்சுப் பண்பாடும்” என்ற பொருளில் விரிவாக உரை யாடுவதற்கு இடமுண்டு.

அச்சு நடைமுறைக்கு வந்த காலம் முதல் மொழி யாக்கம் செய்யப்பட்ட பைபிள் தொடர்பானவைகளே தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்தது. தரங்கம்பாடியில் தொடங்கிய இப்பணி பல வடிவங்களில் தொடர்ந்தது. பைபிளிலிருந்து பல்வேறு நூல்கள் உருவாக்கப்பட்டன. அவை சமயப் போதனைகளாகவும் சமயப் பாடல் களாகவும் அச்சிடப்பட்டன. தமிழில் அச்சிடப்பட்ட கிறித்தவ தன்னுணர்ச்சிப் பாடல்கள் தொடர்பாக விரிவாக எழுத வாய்ப்புண்டு. சீர்திருத்தக் கிறித்தவம் மற்றும் கத்தோலிக்கக் கிறித்தவத்தில் உருவாக்கப்பட்ட தன்னுணர்ச்சிப் பாடல் களை அச்சிட்டுப் பரப்பினர். இப்பாடல்களைப் பாடும் போது அச்சிட்ட வடிவத்தையும் கையில் வைத்திருந்தனர். பின்னர் தமிழில் கிறித்தவ தன்னுணர்ச்சிப் பாடல் மரபு ஒன்று உருவானது. இதற்கு இக்காலத்தில் அச்சிடப்பட்ட பாடல் நூல்கள் உதவின. கிறித்தவம் தொடர்பான வினா - விடை வடிவத்தில் மிகுதியான நூல்கள் அச்சிடப்பட்டன. இவ்விதம் கிறித்தவப் பரப்புதல் தொடர்பான செயல் பாடுகளால், தமிழில் அச்சான வடிவங்களைத் தொகுப்பாகப் பின்வருமாறு கூறலாம்.

கிறித்தவம் தொடர்பான சிறுசிறு சம்பவக் கோவைகளை உள்ளடக்கிய சிறு நூல்கள் உருப்பெறுதல்.

கிறித்தவம் தொடர்பான பல்வேறு செய்திகளை வினாவிடை அமைப்பில் அமைந்த, உரையாடல் வடிவில் அமைந்த சிறு நூல்கள்.

தன்னுணர்ச்சிப் பாங்குடன் கூடிய அச்சிடப்பட்ட இசைப் பாடல்கள்.

கிறித்தவமே, பேச்சு வடிவத்தை அச்சுக்குக் கொண்டு வந்தது என்று கூறமுடியும். இதன் மூலம் உரைநடை உருவாக்கம் மற்றும் புனைகதை உருவாக்கம் ஆகியவை தமிழ்ச் சூழலில் கால்கொண்டன. இவ்விதம் உருவான தமிழ் அச்சுப் பண்பாட்டை விரிவான உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும்.

கிழக்கிந்திய கம்பெனி வணிகர்கள், ஆட்சியதி காரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆட்சி செய்த நிர்வாகிகள், சமயப் பரப்பலுக்கான பாதிரியார்கள் எனப் பல நிலைகளில் ஐரோப்பியர்கள் இங்கு வாழத் தலைப் பட்டனர். இவர்களுக்கு வட்டார மொழிகளை அறிந்து கொள்வது என்பது தவிர்க்க முடியாத தேவையாகி விட்டது. எனவே, மொழியைக் கற்றுக் கொள்வதற்கான நூல்கள், ஒரு மொழியைப் பிறமொழியோடு ஒப்பிட்டுக் காணும் நூல்கள், மொழி குறித்த ஆராய்ச்சி நூல்கள் எனப் பலவகையில் நூல்கள் உருப்பெறத் தொடங்கின. கால்டுவெல் உருவாக்கிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்கள்” (1856) என்னும் நூல், மேற்குறித்த மொழி தொடர்பான நூல்களின் உச்சமாக அமைந்தது. இந்நூலிலிருந்து பலமுறை மேற்கோள் காட்டுகிறார்

ஜான் மர்டாக். பல்வேறு அகராதிகளும் இவ்வகையில் உருவாயின. சீசன் பால்கு தொடங்கி, போப் வரை பலர் உருவாக்கிய மொழி கற்றல் நூல்களை இவ்வகையில் அடக்கலாம். இதன் மூலம் தமிழ் மொழி கற்றல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிய போக்கில் உருப்பெற்றதை அறிகிறோம். ஐரோப்பியர்கள், வட்டார மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கென நூல்களும் அச்சிடப்பட்டன. இவ்வகையில் மொழி கற்றல் தொடர்பான செயல்பாடுகளுக்கும் அச்சு நூல் உருவாக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை உணர முடியும்.

கிறித்தவர்கள் சமயப் பரப்பலுக்கான அச்சிடப்பட்ட ஆக்கங்கள் பெரும் பகுதியாகத் தமிழில் வெளிவந்தன; அப்படியானால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்பாதி முழுவதும், கிறித்தவம் சார் அச்சுப் பண்பாடு தான், தமிழ் அச்சுப் பண்பாடு என்று கூறலாமா? என்ற கேள்வி நியாயமானது. ஆனால், வட்டார மொழிகளிலும் அச்சிடுதல் தொடங்கியது. 1935இல் அச்சுத் தடைச் சட்டம் நீக்கப்பட்டபின், வட்டார மொழி நூல்கள் அச்சிடுதல் அதிகரித்தது. தமிழில் எழுதப்பட்டிருந்த ஓலைகளிலிருந்து அச்சுக்குக் கொண்டுவருவது என்பது தொடங்கியது. 1812இல் திருக்குறள் அச்சிடப்பட்டது. தொடர்ந்து தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் அச்சாகின. 1865க்குள் அகப்பொருள் இலக்கணம், இலக்கணக் கொத்து, அணியியல் விளக்கம், இலக்கணச் சுருக்க வினாவிடை, காரிகை, முத்துவீரியம், நன்னூல், பிரயோகவிவேகம், பொருத்தப்பாட்டியல், தண்டியலங் காரம், தொன்னூல், தொல்காப்பிய நன்னூல், உவமான சங்கிரகம், வெண்பாப் பாட்டியல், விருத்தப் பாட்டியல், வீரசோழியம் ஆகிய இலக்கண நூல்கள் ஓலையிலிருந்து அச்சு வடிவம் பெற்றிருப்பதை ஜான் மர்டாக் (ப.199-203) குறிப்பிடுகிறார்.

இதன்மூலம், ஓலையிலிருந்து பதிப்பித்தல் என்னும் பணி தொடங்கப்பட்டிருப்பதை அறிகிறோம். இந்நூல்கள் பாட நூல்களாகவும் பயன்படுத்தப்பட்டதை அறிகிறோம். நன்னூல் பல வடிவங்களில் அச்சிடப் பட்டதன் மூலம் தமிழ்க்கல்வி வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, தமிழ் அச்சுப் பண்பாடு, வெறும் கிறித்தவம் தொடர்பானவையாக மட்டும் இல்லை. கிறித்தவம் தொடர்பான அச்சுப் பண்பாடு, வெகுசனப் பண்பாடாக அமைந்திருந்த வேளையில், சுவடிகளிலிருந்து அச்சிடப்பட்ட தமிழ் இலக்கண நூல்கள் மூலம் புலமைசார் அச்சுச் செயல்பாடுகளும் உருப்பெற்றிருந்தன. இதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதி, சமயம் சார் வெகுசன தமிழ் அச்சுப் பண்பாடும், கல்விசார் புலமை நூல்கள் அச்சிட்ட பண்பாடும் ஒரே நேரத்தில் செயல்பட்டதைக் காண்கிறோம்.

வாய்மொழிப் பாரம்பரியத்தில் உருவான கதைகளும் அச்சிடப்பட்டதை அறிகிறோம். இவை தமிழில் உரைநடைப் பண்பாடு வளருவதற்கு அடித்தளமிட்டன. அஸ்வமேதபர்வம், காமராஜன் கதை, கதாசிந்தாமணி, கிளிக்கதை, கோவலன் கதை, முப்பத்திரண்டு பதுமைகதை, நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரக் கதை, தமிழறியும் பெருமாள் கதை, தேசிங்கு ராஜா கதை, வேதாளக் கதை மற்றும் விநோதரச மஞ்சரி ஆகிய கதை நூல்கள் 1865க்கு முன் அச்சிடப்பட்டதை அறிகிறோம். இக்கதைகள் முன்னரே ஓலைகளில் எழுதப்பட்டு, அச்சு வடிவம் பெற்றனவா? அல்லது வாய்மொழி வடிவத்தில் இருந்தவை அச்சாக்கப்பட்டனவா? என்பதை அறியும் தேவையுண்டு. இவை பெரும்பகுதி வாய்மொழியாகப் புழக்கத்தில் இருந்த கதைகளாகவே இருக்க வேண்டும். வாய்மொழி வடிவம் அச்சு வடிவம் பெற்றபோது தமிழில் புதிய உரைநடை உருவானது. இவ்வகையில், தமிழ் அச்சுப் பண்பாடுதான், தமிழ் உரைநடை உருவாக மூலமாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

கிறித்தவம் தொடர்பானவை மற்றும் ஓலைகளி லிருந்த தமிழ் நூல்கள் ஆகியவை அச்சான சூழலில் பள்ளிக் கூடங்கள் உருவாக்கப்பட்டன. 1840களில் பள்ளிக் கூடங்கள் உருவாயின. 1870இல், ஜான் மர்டாக் தமிழ்ச் சூழலில் - பள்ளிக்கூடங்கள் செயல்பட்டமை தொடர்பாக பின்வரும் விவரத்தைத் தருகிறார். “1868 இல் சென்னை இராஜதானியில் 1687 அரசாங்கப் பள்ளிக் கூடங்கள் இருந்தன. இவற்றில் 62,975 மாணவர்கள் படித்தனர். இதற்காக மாநில அரசு ரூ.843,398 செலவழித்தது. இதில் ரூ.710740ஐ மகாராணியார் வழங்கினார்; ரூ.132,658 உள்ளூர் நிதி வசதிகள் மூலம் பெறப்பட்டன. ஆங்கில வழிப் பள்ளிகளை அரசாங்கம் நடத்தியது. வட்டார மொழிப் பள்ளிகளைத் தொண்டு நிறுவனங்கள் நடத்தின. வட்டார மொழிக் கல்வி பயிலுதலில் கவனம் கூடியது.” (ஜான் மர்டாக் : 1870 : 147)

இதன் மூலம் பள்ளிக்கூடங்கள், தமிழ்ச்சூழலில் உருவானதை அறியமுடிகிறது. இப்பள்ளிகளுக்கென நூல்கள் அச்சிடப்பட்டன. பள்ளி நூல்கள் அச்சிடுதல் பல தளங்களில் நிகழ்ந்தன. ஆசிரியர்களுக்கான நூல்கள், சமய போதனை சார்ந்த பள்ளி நூல்கள், அடிப்படை மொழி கற்றல் நூல்கள் மற்றும் பல்வேறு பாடங்கள் தொடர்பான நூல்கள் என அச்சிடப்பட்டன. பள்ளி நூல்கள் அச்சிடுதல் என்பது, தமிழ் அச்சுப் பண்பாட்டு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை உருவாக்கியுள்ளது. பள்ளிக்கூடங்கள் உருவானதன் மூலம் எழுத்துப் பயிற்சி பரவலாகும் வாய்ப்பு உருவானது. எழுத்தறிந்தோர் எண்ணிக்கை கூடியது. இதன் உடன் விளைவாக வாசிப்புப் பழக்கம் உருவானது. இதனால் இதழியல் துறை உருப் பெறும் சூழல் உருவானது. தமிழில் ‘தினவர்த்தமானி’ என்னும் இதழ் 1855இல் வெளிவந்ததாக பெர்சிவில் குறிப்பிடுகிறார். (ஜான் மர்டாக் நூல் : 1865 : 226) கெசட்டியர்கள் அச்சிடப்பட்டு, பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டன. ‘தமிழ் மெகசின்’, உள்ளிட்ட பல

தமிழ் இதழ்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. ‘அருணோதயம்’, ‘திருச்சபைப் பத்திரிகை’ ‘வேத சமாஜம்’, ‘தத்துவ போதினி ஆகிய இதழ்கள் இக்காலத்தில் வெளிவந்தன. ஆக, தமிழில் இதழியல் என்னும் அச்சுப் பண்பாடு இக்காலங்களில் உருப்பெற்றது. இவை பெரிதும் சமயப் பரப்பல் தொடர்பானதாக இருந்தன. இதழ் வாசிக்கும் வாசிப்பாளன் தமிழில் உருப்பெறுதல் நடந்தேறியது. ஜான் மர்டாக் கொடுத்துள்ள விவரங்கள் சார்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி (1865)யில் உருவான தமிழ் அச்சுப் பண்பாட்டைக் கீழ்க்காணும் வகையில் நாம் தொகுத்துக் கொள்ள முடியும்.

கிறித்தவ சமயப் பரப்பல் தொடர்பான சிற்றறிக்கை, வினா-விடை அமைப்பில் அமைந்த சிறுநூல்கள் (Catechism), பைபிள் மொழியாக்கம், கிறித்தவ தன்னுணர்ச்சிப் பாடல்கள்  ஆகியவை அச்சிடப்பட்டன. இதன் மூலம் சமயம்சார் அச்சுப் பண்பாடு உருவானது. சென்னைக் கல்விச் சங்கம் போன்ற அமைப்புகள் மூலம், தமிழ்மொழி கற்பதற்கான நூல்கள் அச்சிடப்பட்டன. தமிழ் இலக்கண / இலக்கிய நூல்கள் சுவடிகளிலிருந்து அச்சிடப்பட்டன. இதன் மூலம் தமிழ்ப் புலமைசார் அச்சு நூல் உருவாக்கம் ஏற்பட்டது. பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. பள்ளி நூல்கள் தமிழ் அச்சுப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றன. இதழியல் உருவானது. அச்சு - எழுத்தறிவு - வாசிப்பு என்ற பரிமாணங்களில் இப்பண்பாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Pin It