ஒவ்வொரு விதைக்குள்ளும் கோடான கோடி விதைகள் உள்ளடங்கியிருக்கும் அற்புதத்தைத் தன்னுள் அடக்கி இருப்பதுதான் இயற்கை. இதனாலேயே, மகாகவி பாரதி “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா!” என்றார். அணுமுதல் அண்டம் அடங்க ஒவ்வொன்றுமே முரண்பட்ட நிலைமையில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. வியக்கத்தகுந்த முரண்பட்ட இந்த இயங்கியலின் ஊடாக ஒவ்வொன்றுமே தொடர்ந்து இருந்துவருகின்றன. இது ஓயாத மாறுதல் களுக்கு உள்ளாகி வருகிறது. இதனாலேயே “மாறுதல் என்பதுதான் மாறாதது” என்றார் காரல் மார்க்ஸ். இந்த இயற்கை சார்ந்த அறிவியலை அடையாளம் காண வரலாற்றில் காரல்மார்க்ஸ் வரை மாமனிதர்கள் நெடும் பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அதன் விளைவாக, இயற்கைக்குள் உள்ளடங்கியிருக்கும் மனிதனின் பயணம் வரலாற்றில் மிகுந்த அளவுக்கு வேகமடைந்தது.

மனிதன் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையில் வாழ்கிறான். எதார்த்தமான அவனுடைய நிகழ்காலம் பழமைக்கும், புதுமைக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவனுடைய நிகழ்காலம் கடந்த காலமாக மாறுகிறது. அவனுடைய எதிர்காலம் நிகழ்காலமாக வடிவம் பெறுகிறது. மனிதன் அவனுடைய பழமைக்கும், புதுமைக்கும், நன்மைக்கும், தீமைக்கும், இருப்புக்கும், வளர்ச்சிக்கும் இடையில் வாழ்ந்து கொண்டே தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். முழுமையான வாழ்க்கையைத் தேடித்தேடி முழுமையில்லாத அவன் அலைந்துகொண்டே இருக்கிறான். தனிமனிதனுக்கும், சமூக மனிதனுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அவன் நிரப்பத் தொடர்ந்து வரலாற்றில் முனைந்து வருகிறான். அதன் வாயிலாக அவன் தன்னைத்தானே மேலும், மேலும் முழுமைக்கு உரிய விதத்தில் வடிவப்படுத்துகிறான். முடிவில்லாத இந்தப் பயணம் தத்துவமாகப் பரிணாமம் கொள்கிறது. அந்தத் தத்துவத்தின் பரிமாணம் விரிவடைகிறது. புதிர் நிறைந்த இந்த மனிதனின் நெடும் பயணம் பல விதமான அடையாளங்களோடு மனித சமுதாயத்தில் தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது. அது, அவனுடைய ஆன்மிகப் பயணமாக அமைகிறது.

மனிதனின் ஆன்மிக நெடும் பயணம், கடந்த காலத்தில் எப்படித் தொடங்கி, எப்படியெல்லாம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தும் வகையில் முப்பால்மணி தன்னுடைய சிந்தனைக் கண்ணோட்டத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவைப் பற்றியே தொடக்ககாலச் சிந்தனைகள் இருந்திருப்பதை அடையாளப்படுத்துவதாகத் தத்துவப் போக்கு இருந்து வந்திருக்கிறது. அதை அடையாளப்படுத்துவதாகவே எல்லாவிதத் தத்துவங்களும் முனைந்திருக்கின்றன என்று கருதத் தோன்றுகிறது. அதற்கு எதிரான போக்கு இருந்த போதும் அது வலிமை அடையவில்லை. தத்துவங்கள் பொதுவாகவே மனிதனின் நிலையாமைத் தன்மையைக் குறித்தே ஆழ்ந்த அளவில் ஆய்வுகளை நிகழ்த்தியிருக் கின்றன. அதைச் சார்ந்தே வாழ்வியல் எதார்த்த உண்மைகள் விளக்கப்பட்டிருக்கின்றன; வலியுறுத்தப் பட்டிருக்கின்றன.

அவை எல்லாமே மனித சமுதாயத்தில் நில உடைமைச் சமுதாயம் இருந்து வந்த காலம் வரை வலிமைப்படுத்தப் பட்டு நடைமுறையில் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கின்றன. தொழிற் சமுதாயம் தோன்றி வளர்ந்த நிலைமையிலேயே அவை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு மறு ஆய்வு செய்யப்பட்டு அந்தத் தத்துவ வகையின் நீட்சியாக நவீன தத்துவச் சிந்தனைகள் மலர்ந்து புதிய வடிவில் பரிமாணம் கொண்டு வளர்ந்து வருகின்றன. இதைப் புலப்படுத்தும் அறிவியல் கண்ணோட்டத்தை முப்பால்மணி தன்னுடைய ஆய்வில் பின்பற்றியிருக்கிறார்.

‘தமிழகத் தத்துவப் போக்கு’ என்று தொடங்கி ‘உலகாயதம்’ வரை பதினைந்து தலைப்புக்களில் ‘தமிழகத் தத்துவச் சிந்தனை முறைகள்’ என்ற இந்த நூலை வடிவமைத்திருக்கிறார். ஒவ்வொரு தலைப்பின் உள் அடக்கத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் விதத்தில் பதிப்பாசிரியர் ஆர்.பார்த்தசாரதி ஒவ்வொன்றைக் குறித்தும் சாராம்சமான கருத்துக்களைத் தெளிவுபடுத்தி யிருக்கிறார். அதற்குக் காரணம், புத்தகத்தின் மாறுபட்ட உள்ளடக்கத்தையும், நூலாசிரியர் கையாண்டுள்ள நடையையும் குறிப்பாகச் சொல்லலாம். இதற்குரிய சிக்கல், நம்முடைய சராசரியான வாசிப்பு முறையாலும், சிந்தனைப் போக்காலுமே உருவாகின்றன. இதைக் குறித்து அமெரிக்க ஆன்மிகச் சிந்தனையாளரான ஆரிசன் ஸ்வெட் மார்டன் இப்படிச் சொல்லுகிறார்: “மனிதர்கள் பிறக்கிறார்கள்; வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள்; கடைசியில் இறந்து போய்விடுகிறார்கள். இதில், பரிதாபத்திற்கு உரியது எது வென்றால், அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களைத் தாங்களே ஒரு முறை கூடச் சந்தித்துக் கொள்வதில்லை.”

நவீன ஆன்மிகச் சிந்தனையாளரான அவரின் கருத்து, “தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கிடைக்கப் பெறும், தேடுங்கள் கண்டடைவீர்” என்ற இயேசுவின் கருத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த வகையான அகம் சார்ந்த தேடுதலே தொடக்க காலம் முதல் இன்றுவரை வரலாற்றில் தொடர்ந்து இருந்துவருகிறது. இடைவிடாத இந்தத் தேடுதல் நவீன காலம் வரை எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை முப்பால்மணி இதில் வடிவப்படுத்தியிருக்கிறார். இவருடைய கண்ணோட்டம் வரலாற்று ரீதியான வாழ்க்கை வளர்ச்சியின் அறிவியல் ரீதியான அணுகுமுறையை நமக்குப் புலப்படுத்துகிறது.

ஒரு காலத்தில் இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசிய தத்துவம் நவீன காலத்தில் எதார்த்தமான வாழ்வியலையும் தனக்குள் வசப்படுத்திக் கொண்டு பேசுகின்றது. தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள உறவில் மனித சிந்தனை ஒரு முழுமையை இனம் கண்டு வடிவப்படுத்த நவீன மனிதன் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறான். இயற்கையைப் பாதுகாத்து அதைச் சார்ந்து வாழ்ந்து வந்த மனிதன் அதைத் தகர்த்துத் தன்னுடைய விருப்பத்திற்குரிய விதத்தில் தாராளமாகப் பயன்படுத்தும் நிலையில் அவன் இயற்கையை விட்டு விலகிவிடுகிறான். இயற்கையின் அங்கமான மனிதன் இயற்கையிலிருந்து அந்நியமாவதோடு தன்னைத் தானே அழித்துக் கொள்ளவும் முனைகிறான். இது, நவீன வாழ்வின் எதார்த்தமான உண்மையாக இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளும் விதத்தில், நிலவுடைமைச் சமுதாயம் சார்ந்த தத்துவக் கண்ணோட்டம் நமக்கு உதவுவதாக உள்ளது. நவீன மனிதனின் இருப்பு நிலையை நமக்குப் புலப்படுத்துகிறது. இந்த வகையில் இந்த ஆய்வு நூல் தனித்த ஒரு முக்கியத்துவத்தை உடையதாக இருக்கிறது.

‘தமிழகத் தத்துவச் சிந்தனை மரபு’ எந்த வகையிலெல்லாம் உலகத் தத்துவங்களோடு வரலாற்று ரீதியாகத் தொடர்பு கொண்டு இன்று வரை வளர்ந்து வந்திருக்கிறது என்பதை நூலாசிரியர் நிறுவுகிறார். தத்துவ முரண்களை வரலாற்று இயங்கியல் கண்ணோட்டத்தில் இவர் ஆய்வு செய்திருப்பது இதனுடைய தனிச் சிறப்பு. கிழக்கும், மேற்கும் வரலாற்றின் தொடக்க காலம் முதலாகவே வணிக ரீதியாகத் தொடர்பு கொண்ட முறைகளைத் தகுந்த ஆவணங்களோடும், தகவுகளோடும் உறுதிப்படுத்துகிறார். அதன் விளைவாகவே தத்துவச் சிந்தனைகளின் பரிமாற்றம் நிகழ்ந்தன என்ற கருத்தையும் இவர் புலப்படுத்துகிறார்.  அதற்காக, தத்துவ நூல்களையும், தத்துவம் சார்ந்த இலக்கியங்களையும் அடிப்படையாகக் கையாளுகிறார். அவற்றிற்குள் பொதிந்துள்ள கலாசாரப் பண்பாட்டுத் தன்மைகளையும் இனம் கண்டு அடையாளப் படுத்துகிறார்.

காடுகளில் வாழ்ந்தபடி இருந்த வேட்டைச் சமுதாயம், உழவுச் சமுதாயம், புராதன கால பொதுவுடைமைச் சமுதாயம், அரசமைப்புச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் என்று தொடர்ந்து வளர்ந்து வந்த சமுதாயம் படிநிலைகளின் தன்மைக் கேற்பத் தத்துவம் வளர்ந்து வந்த வரலாற்றை பூத வாதத்திலிருந்து உலகாயதம் வரை இவர் சித்திரித்துக் காட்டுகிறார். அவற்றை நிலை நிறுத்துவதற்காக இயற்கைக்கு அப்பாலுள்ள ஓர் ஆற்றலைக் குறித்த கண்ணோட்டத்திற்கும், ஐந்து பூதங்களை உள்ளடக்கிய ஆற்றலின் கண்ணோட்டத்திற்கும் இடையில் கோட் பாட்டு அளவிலான அடிப்படைகளின் முரண் இயக்கங் களைப் படிப்படியாக விளக்குகிறார். அது தொடர்பாகப் புறநிலை சார்ந்த பொருட்களின் தாக்கங்களை அகநிலை சார்ந்த உள்மனம் உள்வாங்கி அவற்றிற்குரிய விதத்தில் எதிர்வினையாற்றுகிறது என்ற கருத்தையும் நிலைப்படுத்து கிறார்.

சங்ககால வாழ்வில் உலகாயதம் நிலவி வந்ததையும், வாழ்வு முறையையும் முப்பால் மணி இப்படிக் குறிப் பிடுகிறார்: “எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல் காப்பியம் ஆகியன வேட்டை வாழ்வு, கால்நடை மேய்ப்பு வாழ்விலிருந்து உழவு, வாணிப வாழ்விற்குத் தமிழ் மக்கள் மாறி வருவதைப் புலப்படுத்துகின்றன” அதைத் தொடர்ந்து தமிழகச் சூழலுக்குள் சமணமும், பௌத்தமும் நுழைந்ததை அடையாளம் காட்டுகிறார். சைவமும், வைணவமும் தோன்றிய சூழ்நிலைகளைக் காட்டுகிறார். பிராமணர்களின் வேதக் கருத்துக்களின் தாக்கத்தையும், ஆளுமையையும் இனம் காட்டுகிறார்.

கிறித்துவ சமயம் தமிழ்மொழியைச் சமஸ்கிருதத் தாக்கங்களிலிருந்து காப்பாற்றிய விதத்தையும், புதிய சூழ்நிலைமைக்குத் தகுந்தபடி தமிழ் இலக்கிய, இலக்கண வடிவங்களை கிறித்துவச் சபையினர் மாற்றி அமைத்ததைச் சித்திரிக்கிறார். மண்ணுலகம், விண்ணுலகம் பற்றிய நம்பிக்கையின் நீட்சியாக உருவ வழிபாடுகள் தோன்றிய விதத்தையும் முப்பால்மணி தெளிவுபடுத்துகிறார். மேற்கத்திய ரோமானியர், கிரேக்கர், யூதர் போன்றவர் களின் வருகையால் நிகழ்ந்த மாற்றங்களை அடையாளப் படுத்துகிறார். மேற்குக் கரை முதல், மத்திய தரைக் கடல் பகுதி வரை நிலவி வந்த சகல விதமான உறவுகளைப் பற்றியும் பேசுகிறார்.

தமிழகத்தில் சங்க காலம் முடியும் வரை நிலவி வந்த உலகாயதத் தன்மைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். அதைப் போலவே, மத்திய காலம், காலனி ஆட்சிக் காலம் பௌதிக வாத காலம் நவீன காலம் வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களுக்கு உள்ளாகிய உலகாயதத் தன்மைகளைத் தனித்தனியாகவும், படிப்படியாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். சாராம்சத்தில், மாயாவாதக் கண்ணோட்டத்திலிருந்து உலகாயதக் கண்ணோட்டம் வரை ‘தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள்’ உருவமாற்றம் பெற்ற வரலாற்றை முப்பால் மணி தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

தமிழ் இலக்கியத்தில், சிந்தனையில், வாழ்வியலில் மிகப் பெரிய அளவிற்கு மாற்றத்தை நிகழ்த்திய மகாகவி பாரதியின் முன்னோடியாக விளங்கிய ஆவுடை அக்காள் பற்றிய புதிய தகவல்களை ஆசிரியர் தகுந்த சான்றுகளுடன் விளக்குகிறார். சங்கரரின் அத்வைத தத்துவத்தை மறுத்து அதில் புதிய பார்வையைப் புகுத்திய சுவாமி விவேகானந்தரைப் பற்றிய புதிய தகவல்களை ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

“தமிழகத் தத்துவ மரபில் விவேகானந்தர் ஒரு நவீனக்குரல்” ஏற்ற பகுதியில் மேற்குக்கும், கிழக்கிற்கும் இடையில் உள்ள அடிப்படையான வேறுபாடு குறித்து விவேகானந்தர் தெரிவித்த கருத்தை ஓர் எடுத்துக்காட்டாக முன்வைத்துப் புதிய விளக்கங்களை அளிக்கிறார் ஆசிரியர்: “மேலை நாட்டுக் கல்வி முறையில் அறிவுப் பயிற்சிக்கு மட்டும் இடம் கொடுக்கப்பட்டு உணர்ச்சிப் பயிற்சிக்கு இடமே கொடாமல் இருப்பது ஒரு பெருங்குறை என விமர்சித்து ‘இந்த முறையினால்’ மனிதன் பத்து மடங்கு சுயநலம் உள்ளவன் ஆகிறான். இது கடைசியில் அவன் அழிவிலேதான் போய் முடியும்” என்ற கருத்தை வலுப் படுத்துகிறார். இந்த நிலையில் கார்ல் மார்க்ஸ் மதம் பற்றிக் கூறிய ஒரு கருத்து நினைவில் கொள்ளத் தகுந்ததாக உள்ளது. “இதயம் இல்லாத உலகிற்கு இதயம் போல விளங்குவது மதம்” என்று குறிப்பிட்ட காரல்மார்க்ஸ் நவீன யுகத்தைச் சார்ந்தவரே.

மகாகவி பாரதியாருக்குள்ளும் இழையோடிய இந்தப் புதிய கண்ணோட்டத்தையும் ஆசிரியர் அடையாளப் படுத்துகிறார். பிற்காலத்தில் மார்க்சியச் சிந்தனையாளர் களால் மாற்றம் செய்யப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ‘தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகளை’ப் பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். நவீன வாழ்வில் அறிவியலும், தொழில்நுட்பமும் மிகுந்த அளவுக்கு ஆளுமை செலுத்தி வருவதால் மனித வாழ்க்கை பல வகையான புதிய நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றது. உலகமயமாதல், தாராளமயமாதல், சந்தைப் பொருளாதாரம் என்ற நடைமுறைகள் நிறுவப் பட்டு வரும் இன்றைய சூழலில் மனிதன் உடல் உழைப் பிலிருந்து அந்நியமாகிறான். நுகர்வுக் கலாசார மோகத்தால் மனிதன் சிதைவடைகிறான். காரல் மார்க்ஸ் குறிப்பிட்டது போல நவீன மனிதன் ஒரு விற்பனைப் பண்டமாகி வருகிறான். அவன் தன்னுடைய வரலாற்றிலிருந்து விலகிச் சுய அடையாளத்தை இழந்துவருகிறான். அவனைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவைப்படும் இயற்கைச் சூழலை அவனே அழித்துச் சிதைக்கிறான். இயற்கையின் எந்த ஒரு அங்கத்தையும் அதற்கு அப்பாலிருந்து மனிதனால் படைக்க முடியாது.

நவீன உற்பத்தி முறையில், வரலாறு முழுவதுமாக மனிதன் தன்னைப் படைத்து வந்த தன்னுடைய தத்துவத்தை இழந்துவிட்டு இயந்திரமாக இயங்கப் போகிறான். அமைதி நிறைந்த இந்த உலகத்தில் மனிதன் தன்னுடைய அமைதியைத் தானே குலைத்துக் கொள்கிறான். இயற்கைக்கு அவன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்ற கருத்தை இந்த நூல் புலப்படுத்துகிறது. அதே சமயத்தில் மனிதர்களுக்கிடையில் காணப்படும் செயற்கையான பிரிவினைகளிலிருந்து எதார்த்தமான முறையில் மனித இனம் வாழ முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தையும் இது புலப்படுத்துகிறது.

விதவிதமான தனித்தன்மைகளை உள்ளடக்கி யிருக்கும் இயற்கையின் அம்சங்களுக்கிடையில் ஓர் ஒருங்கிணைவைக் காணவேண்டும். ஒவ்வொன்றின் தனித்தன்மையையும் பாகுபடுத்தி உயர்த்திப் பிடிக்கும் தன்னலப் போக்கிலிருந்து உலக மக்களின் மனப்போக்கு மாறவேண்டும்.காலத்தின் தேவையை உணர்த்தும் வகையில் வடிவம் பெற்றுள்ள இந்த நூலை வடிவப்படுத்த முப்பால்மணி தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணம் செய்திருக்கிறார் என்று கருதச் செய்கிறது. வியப்புக்கு மேல் வியப்பை அளிக்கக்கூடிய இந்த நூல் தமிழ் வாழ்வில் பல புதிய பார்வைகளை நிறுவுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இதுதான், இதன் தனிச்சிறப்பு.

தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள்

ஆசிரியர் : டாக்டர் கி.முப்பால்மணி

வெளியீடு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.,

விலை : ரூ.175.00

Pin It