கீற்றில் தேட...

வை.மு. கோதைநாயகி அம்மையார் இலக்கியம், இசை, நாடகம், நாவல், பத்திரிக்கை, கவிதை புனைதல், மொழிபெயர்ப்பு, தேசபக்தி, தெய்வபக்தி, அரசியல், சமூக சேவை, சமூக சீர்திருத்தம், மகளிர் முன்னேற்றம் என்று பல துறைகளில் தனிமுத்திரை பதித்தவர்.

‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு’ என்று பெண்ணடிமைக் கொடுமைகள் தலைவிரித்தாடிய காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்ப் பல்துறை வித்தகராய் விளங்கியவர். மழைக்காகவும் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத கோதைநாயகி சிறந்த எழுத்தாளராக, பத்திரிக்கை ஆசிரியராக, விளங்கியமை வியந்து பாராட்டத்தக்கது. சிறந்த ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருந்த கோதைநாயகி, பொதுவாழ்வில் இருந்தபோதும் குடும்ப வாழ்வைப் போற்றினார். தனது கலை, இலக்கியப் பணிகளாலும் அரசியல் பணிகளாலும் பிற்காலச் சமூகத்திற்கும் பெண் இனத்திற்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

தந்தை என்.எஸ்.வெங்கடாச்சாரியார் தாய் பட்டம்மாள் இவர்களுக்கு இரண்டாவது பெண் குழந்தையாக கோதைநாயகி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாளன்று சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது, தாய் பட்டம்மாள் இறந்துவிட்டார்.

novel rani 350வெங்கடாச்சாரியாரின் தம்பி மனைவி கனகம்மாள்தான் குழந்தையைத் தாய்போல் இருந்து வளர்த்தார். கோதைக்கு ஐந்தரை வயது நிரம்பிய போது 1907-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி சீனிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயதுடைய வை.மு. பார்த்தசாரதியுடன் திருமணம் செய்து வைத்தனர்.மாமன் மகனையே திருமணம் செய்து கொண்டார்.

இவர் பிறந்த குடும்பமும் புகுந்த குடும்பமும் புகழ்பெற்ற வைணவக்  குடும்பங்களாக விளங்கின. “வைத்தமாநிதி முடும்பை குடும்பம்” என்று பெயர் பெற்ற அக்குடும்பம் அக்காலத்தில் மதிப்புடன் வாழ்ந்த குடும்பமாகும். நம்மாழ்வார் பிறந்த திருக்கூருக்கு (நெல்லை மாவட்டம்) அருகில் இருக்கும் ஊர் திருக்கோளுர் அங்கே குடிகொண்டுள்ள இறைவன் பெயர் வைத்தமாநிதி. அதில் உள்ள ‘வை’ என்ற எழுத்தையும், முடும்பை என்பது அவர்களது பூர்வீக ஊராகும். அதில் உள்ள ‘மு’ என்ற எழுத்தையும் சேர்த்து ‘வை.மு’ என்று வைத்துக் கொள்வது அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வழக்கமாக இருந்தது. அதனால் கோதைநாயகி வை.மு. கோதைநாயகி ஆனார்.

கோதைநாயகி சிறுவயதிலிருந்தே பிறருக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய கற்பனைத் திறனால் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் புதிய புதிய கதைகளைப் புனைந்து மொழிந்தார். அதைக் கண்ட அவரது கணவர் அவரது படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்காக அவரைப் பல நாடகங்களுக்கும் கச்சேரிகளுக்கும் அழைத்துச் சென்றார். கச்சேரிகளில் இசையுடன் பாடும் பாடல்களைக் கேட்ட உடனே அதை   மனதில் பதித்துக் கொண்டு அப்படியே பாடும் பேறாற்றல் படைத்தவர் கோதைநாயகி. காலப்போக்கில் கோதை நாயகியின் இசை அறிவும் கதை புனையும் திறனும் மேன் மேலும் வளர்ச்சி அடைந்தன.கோதை நாயகியின் கதைகளைக் கேட்டவர்கள் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினர். இதைப் புத்தகமாகப் போடலாம் என்று ஊக்கமளித்தனர்.

கோதை நாயகிக்கு நாவல் எழுத ஆசைதான் ஆனால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாமையால் மனம் வருந்தினார். பின்பு எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதலாம் என்று முடிவு செய்து தனது தோழியும் பக்கத்து வீட்டுப் பெண்ணுமாகிய பட்டம்மாளிடம் கதை சொல்ல அவர் அதை எழுதி முடித்தார். 1924 இல் வெளிவந்த அக்கதை நாடக வடிவில் இருந்தது. அந்நாடகத்திற்கு ‘இந்திர மோகனா’ என்று பெயரிட்டு வெளியிட்டார். அந்நாடகத்தைப் படித்தவர்கள் பாராட்டினர். அக்காலத்தில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர்களாய் விளங்கிய பம்மல் சம்பந்த முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜே.ஆர். ரங்கராஜி, மகாகவி பாரதியார், டி.ரெங்காச்சாரி, வி.பாலாம்பாள் எனப் பலருக்கும் அனுப்பி வைத்தார். அவர்கள் கோதைநாயகியின் முயற்சியைப் பாராட்டியதோடு நிறை குறைகளைத் தெரிவித்தனர். அக்காலத்தில் புகழ்பெற்ற பத்திரிக்கைகளாக விளங்கிய இந்து, சுதேசமித்திரன், சுவராஜ்யா, நியூ இந்தியா, டெல்லி எக்ஸ்பிரஸ், மெயில் முதலான பத்திரிக்கைகள் கோதைநாயகியின் இந்திர மோகனாவைப் பெரிதும் பாராட்டி எழுதின. கோதை நாயகியின் பெயரும் இலக்கிய உலகில் இடம் பிடித்தது.

கோதைநாயகி தனது முதல் படைப்பு வெற்றி பெற்றதால் மேலும் ஊக்கம் பெற்றார். தனது இரண்டாவது கதையைத் தானே எழுத வேண்டும் என்ற மன உறுதிகொண்டு மிகுந்த முயற்சியும் பயிற்சியும் செய்து எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். பின்னர் தேவதாசிகளின் வாழ்க்கை அவலத்தை விவரிக்கும் ‘வைதேகி’ என்ற தனது இரண்டாவது நாவலை தன் கையாலேயே எழுதி வெளியிட்டார்.

எழுதப்படிக்கக் கற்றுக்கொண்ட பின்னர் கோதைநாயகிக்கு பழம்பெரும் இலக்கியங்களைக் கற்கும் ஆர்வம் தோன்றியது. திருக்குறள், திருவாசகம், தேவாரம், திருவாய்மொழி, கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம் முதலான தமிழ் இலக்கியங்களைத் தன்னுடைய சிறிய தந்தையாகிய திருத்தேரி இராகவாச்சாரியிடம் கற்றுத்தேர்ந்தார். பல்வேறு இலக்கியங்களில் புலமைபெற்ற கோதைநாயகி தான் எழுதும் நாவல்களின் ஊடே இலக்கியப் பாடல்களை இணைத்து எழுதும் புதுமையைக் கையாண்டார்.

திருக்குறள், நீதிநெறிவிளக்கம், நன்னெறி, குமரேச சதகம், மணிமேகலை, கூர்மபுராணம், தாயுமானவர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள், பாரதியின்  பாடல்கள் போன்றவற்றைத் தம் நூலில் இணைத்துள்ளார்.ஒவ்வொரு நாவலின் இறுதியிலும் திருக்குறளால் முடித்துள்ளார். தாமே சுயமாக கவிதை எழுதியும் நாவல்களின் இடையில் இணைத்து வெளியிட்டார். கோதைநாயகி தன்னுடைய படைப்புகளைத் தானே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதற்குத் தாமே ஒரு பத்திரிக்கையைச் சொந்தமாக நடத்த வேண்டும் என்று விரும்பினார். அப்போது ‘ஜகன் மோகினி’ என்னும் பத்திரிக்கை நட்டத்தில் இயங்கி வருவதை அறிந்து 1925-ஆம் ஆண்டு அதனை விலைக்கு வாங்கி தானே நடத்தத் தொடங்கினார். அப்பத்திரிக்கையில் நாட்டு நடப்பை, அரசியல் சிந்தனைகளை, சுதந்திரப் போராட்ட உணர்வை, சீர்திருத்த சிந்தனைகளை எழுதிவந்தார்.

 கோதைநாயகியின் எழுத்துகள் எளிய இனிய நடையில் சுவைமிக்கதாய் இருந்தது. தம் இதழில் பல பெண் எழுத்தாளர்களுக்கும் எழுதும் வாய்ப்பளித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். நட்டத்தில் இயங்கி வந்த ‘ஜகன் மோகினி’ பத்திரிக்கை கோதைநாயகி கைவசம் வந்ததும் விற்பனையில் முன்னேற்றம் கண்டது. அப்பத்திரிக்கையை 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திப் பெரும் சாதனை படைத்தார். ‘வைதேகி’ என்னும் நாவலும் ‘பாலசுந்தரம்’ என்னும்  நாவலும் ஜகன் மோகினி இதழில் தொடராக வெளிவந்து புகழ்பெற்றன. தனியரு பெண்ணாய்ப் பத்திரிக்கை நடத்தி வெற்றிபெற்ற கோதைநாயகியைக் கண்டு பலரும் வியந்தனர்.

“வெண்பா, விருத்தப்பா, குறட்பா யாப்பில் பாடல்களை அமைக்கும் பெரும் ஆற்றல் படைத்தவர் வை.மு.கோ. பள்ளி செல்லாமல், தமிழ் பயிலாமல் தமிழ்ப் பத்திரிக்கை நடத்தியும் அதில் தோற்றுவாய்ப் பாடல்களை எழுதியும், நாவல்களில் பொருத்தமான பாடல்களைச் சேர்த்தும் துதிப் பாடல்களைத் தாமே இயற்றி நாவல்களின் தொடக்கத்தில் அல்லது ஊடே அமைத்துச் சேர்த்தும் எழுதி வரும் பேராற்றல் படைத்தவர் வை.மு.கோதை.”1 என்று பாராட்டியுள்ளார் தாயம்மாள் அறவாணன். சிலர் ஜகன் மோகினி இதழில் வெளிவந்த முற்போக்கு சிந்தனைகளைக் கண்டு வெறுப்படைந்து கண்டனம் செய்தனர். ஜகன் மோகினி இதழை வாங்கி நெருப்பில் கொளுத்தவும் செய்தனர். ஆனால் கோதைநாயகி இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது இலட்சியத்தை நோக்கிப் பயணித்தார்.

இசையுடன் பாடுவதில் வல்லவராகிய கோதைநாயகி, திருவல்லிக்கேணி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அனைத்திந்திய பெண்கள் சங்கம், திருப்பதி நவராத்திரி விழா, மைசூர் அரண்மனை, அரவிந்தர் ஆசிரமம் முதலான இடங்களுக்கு அடிக்கடிச் சென்று பாடினார். திருவாங்கூர் மகாராணி, கொல்லங்கோடு மகாராணி, விஜயநகர மகாராணி ஆகியோரிடம் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். பாரதியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த கோதைநாயகி, பாரதியாரின் மகள்களான தங்கம்மாள், சகுந்தலா ஆகியோருடன் சேர்ந்து பாரதியார் பாடல்களையும் பாடியுள்ளார்.

“அம்மையாருக்கு காங்கிரசில் இருக்கும்போதுதான் மூதறிஞர் இராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி போன்ற பெரும் தலைவர்களின் நட்பு கிடைத்தது. அவர்களும் அம்மையாரின் குரல் வளமறிந்து அவரைக் கூட்டங்களில் தேசியப் பாடல்களைப் பாட வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, காங்கிரஸ் கூட்டங்களில் அம்மையார் தேசபக்திப் பாடல்களையும், பாரதி பாடல்களையும் பாடி கூட்டத்தைக் கூட்டுவார். ஒலிபெருக்கி இல்லாத அக்கால கட்டத்தில் அம்மையாரின் குரல் கணீரென்று பொது மக்களைக் கவர்ந்திழுத்தது.”2 இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் அரசியாகவே கோதைநாயகி விளங்கினார்.

1925-ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூருக்கு வருகை தந்த மகாத்மா காந்தியடிகளை கோதைநாயகியும் சில பெண்களும் பட்டாடை உடுத்தி கைகளிலும் கழுத்திலும் நகைகள் அணிந்து சென்று சந்தித்தனர். அவர்களின் ஆடம்பரத்தைக் கண்ட மகாத்மா காந்தியடிகள் மனம் வருந்தினார். எளிமையை வலியுறுத்தினார். கதராடைகளின் அருமை பெருமைகளை

எடுத்துரைத்தார். அன்று முதல் கோதைநாயகி பட்டாடைகள் அணிவதையும் ஆடம்பர நகைகள் அணிவதையும் தவிர்த்துவிட்டார். அரசியலிலும் கோதை நாயகிக்கு ஈடுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரானார். அம்புஜம்மாள் ஜானாம்மாள் இவர்களுடன் சேர்ந்து கதர் பிரச்சாரத்திலும் காங்கிரஸ் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். கதராடைகளையே அணிந்து கொண்டார். கதராடைகளை விற்பனை செய்து பிறரையும் கதராடை உடுத்தும்படித் தூண்டினார். தமிழ் நாடெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசியல் மேடைகளில் பேசினார். அக்காலத்தில் ஒரு பெண் மேடை ஏறிப் பேசியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. “பேச்சுக்கு ஒரு சத்திய மூர்த்தி என்று போற்றப்படும் தீரர் சத்திய மூர்த்தியே கோதையின் பேச்சாற்றலைப் புகழ்ந்திருக்கிறார். இப்படி பேச்சு, பாட்டு என மக்களைக் கவர்ந்திழுக்கும் திறன் படைத்தவராய் கோதை விளங்கினார்.”3

 1931 இல் காந்திஜி கள்ளுக்கடை மறியலில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த போது கோதைநாயகி முன்னின்று போராட்டத்தில் ஈடுபட்டார். திருவல்லிக்கேணியில் கள்ளுக்கடைகள் இருந்தன. கோதைநாயகி அவ்விடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடையின் உரிமையாளரான சண்முகசுந்தர கிராமணி, கோதைநாயகியின் உயிருக்கு ஆபத்து விளைவிப்போம் என்று மிரட்டினார். அதற்கெல்லாம் அசராத கோதைநாயகி அச்சமில்லை, அச்சமில்லை எனற மகாகவி பாரதியின் பாடலைப் பாடியபடி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். லோதியன் கமிஷனை எதிர்த்து நடந்த ஊர்வலம் ஒன்றில் காங்கிரஸ் உறுப்பினர்கள் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆங்கிலேய அரசின் அடக்குமுறையை எதிர்த்து 1932ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் சென்னை என்.எஸ்சி. போஸ் ரோட்டில் கே. பாஷ்யம் அய்யங்காரின் தலைமையில் வை.மு. கோதைநாயகி உள்ளிட்டோர் கோஷமிட்டு ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டனர். கோதைநாயகி தோழிகளோடு சிறைசென்றார்.

கோதைநாயகிக்கு சிறையில் இருக்கும் போது பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. அங்கிருந்த பெண் கைதிகளுடன் அன்பாகப் பேசி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டார். தமது பேச்சுச் திறனால் அவர்களை மனம் மாற்றி காந்திய நெறியில் ஈடுபடுத்தினார். சிறையில் இருக்கும் போதும் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்தார். கைதிகளின் வரலாற்றை மையமாகக் கொண்டு ‘சோதனைகளின் கொடுமை’ என்னும் நாவலை எழுதினார். பிற்காலத்தில் இந்நாவல் இராஜாஜியை மிகவும் கவர்ந்தது. கோதை நாயகி சிறையில் இருந்த போது ‘ஜகன் மோகினி’ இதழைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பை அவரது கணவர் பார்த்தசாரதி ஏற்றுக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் கோதை நாயகி எழுதித் தந்திருந்த கதைகள் தீர்ந்துவிட்டன. இதழில் வெளியிட கதைகள் இல்லாமையால் அவரது கணவர் செய்வது அறியாது திகைத்தார். சிறையில் இருக்கும் தன் மனைவிக்கு மாதந்தோறும் தின்பண்டங்களை எடுத்துச் சென்று கொடுப்பது அவரது வழக்கம். ஒருநாள் வழக்கம் போல் பையில் தின்பண்டங்களை எடுத்துக்கொண்டு சிறைச்சாலைக்கு வந்து மனைவியிடம் கொடுத்தார். கோதைநாயகி பையில் இருந்த தின்பண்டங்களை உண்டு முடித்ததும் பையினுள் தான் எழுதிய ‘உத்தம சீலன்’ என்ற நாவலை வைத்து அதற்கு மேல் சில தின்பண்டங்களையும் வைத்து கணவரிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.

பார்த்தசாரதி வீட்டிற்கு வந்ததும் பையைத் திறந்து பார்த்தார். அதில் ‘உத்தம சீலன்’ என்ற நாவல் இருந்தது. பார்த்தசாரதிக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. உடனே‘உத்தம சீலன்’ நாவலை ஜகன் மோகினியில் தொடராக வெளியிட்டார். கோதைநாயகி தான் சிறையிலிருந்த காலத்திலும் பத்திரிக்கைப் பணிக்கு இடையூறு நேரா வண்ணம் பார்த்துக்கொண்டார். விடுதலையான பின்பு பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சென்று கலந்து கொண்டார். தனது அரசியல் பணிகளாலும் இலக்கியப் பணிகளாலும் மூதறிஞர் இராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, அன்னி பெசன்ட் அம்மையார், கவிக்குயில் சரோஜினி தேவி போன்றோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

சிறையிலிருந்து விடுதலையான பின் தியாகக் கொடி, நளின சேகரன் ஆகிய இரண்டு தேசியப் புதினங்களை எழுதி வெளியிட்டார். இந்த இரண்டு புதினங்களிலும் காந்தியக் கொள்கைகளான கதராடை, தீண்டாமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், மது விலக்கு, நாட்டுப்பற்று முதலியன இடம்பெற்றன. சிறந்த நாவலாசிரியை என்று இனம் காணப்பட்ட கோதைநாயகி 117 நாவல்களை எழுதி சாதனை படைத்துள்ளார். இவரது எழுத்துத் திறனைக் கண்டு வியந்த சுத்தானந்த பாரதியார் இவரை ‘நாவல் ராணி’ என்று பாராட்டினார். ‘கதாமோகினி’ என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.

பல பெண் வாசகர்களையும் பெண் எழுத்தாளர்களையும் ‘ஜகன் மோகினி’ இதழ் வாயிலாக உருவாக்கிய பெருமை கோதை நாயகி அம்மையாருக்கு உண்டு. “வை.மு.கோ. அம்மையார் நடத்திய ஜகன் மோகினி பத்திரிக்கை தமிழ்நாட்டின் கலாச்சார அரங்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரிய சேவை செய்துள்ளது. எழுத்தறிவு பெறாது ‘வீடே உலகம்’, ‘சமையலே கதி’ என்று முடங்கிக் கிடந்த பெண்மணிகளிடையே எழுத்து வாசனை ஊட்டி வெளியுலக அறிவைக் கொடுத்தது.

பத்திரிக்கையின் மூலம் தேசிய, பொதுநல சேவையில் ஈடுபட்ட வை.மு.கோ. பின்வந்த பத்திரிகையாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் பெண்ணுரிமையும், பெண் விடுதலைக் குரலும் எந்த அளவு ஒலித்து உள்ளது என்பதை அறிய ஜகன்மோகினி இதழ்கள் மிகப் பெரிய பதிவுகளாக அமைந்துள்ளன.”4 1949ஆம் ஆண்டு ‘ஜகன் மோகினி’ இதழுக்கு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அப்போதைய தமிழக முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பாராட்டுகள் கோதை நாயகிக்குக் குவிந்தன.

இந்தியா 1947இல் விடுதலை அடைந்த பின் அம்மையார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். 1948 ஜனவரி 30ஆம் நாள் காந்தியடிகள் மறைந்த 13ஆம் நாள் அவரது அஸ்தி நாடெங்கும் கடலில் கரைக்கப்பட்டது. சென்னையில் நடந்த அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மையார் மகாத்மா காந்தியடிகளின் நினைவாக ‘மகாத்மா ஜி சேவா சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அச்சங்கத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கும் பெண்களுக்கும் தொண்டாற்றினார். பெண்கள் எழுத்துத் துறையிலும், இசைத் துறையிலும், நாட்டியத் துறையிலும் முன்னுக்கு வரவேண்டும் என்று பாடுபட்டார்.

பெண்களுடைய திறமைகள் வெளியே தெரிவதில்லை. அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள் என்று உணர்ந்து வை.மு.கோ அம்மையார் அத்தகைய பெண்களை தானே அடையாளம் கண்டு வீடு தேடிச் சென்று அழைத்து வந்து தம்மோடு கச்சேரிகளில் பாட வைத்தார். பெண்களின் தனித்திறனை வெளிக் கொணர்வதற்காக அவர்களை மேடையேற்றினார். அதற்காக அப்பெண் குழந்தைகளின் தாய் தந்தையரிடம் போராடியும் வாதாடியும் அனுமதி பெற்றார்.

இன்று பெண்கள் இசை மேடைகளிலும் நாட்டிய மேடைகளிலும் பிரகாசிக்க வை.மு.கோதை நாயகி அம்மையாரின் முயற்சியும் உழைப்பும் முக்கியக் காரணமாகும். மகளிர் அனைத்து உலக விசயங்களையும், சிறுதொழில்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தையல் வகுப்பு, இந்தி வகுப்பு, தட்டச்சு வகுப்பு, சுருக்கெழுத்து வகுப்பு, பாட்டு வகுப்பு, வீணை வகுப்பு, வயலின் வகுப்பு, பகவத்கீதை வகுப்பு, தோத்திரப் பாடல் வகுப்பு என்று பல வகுப்புகள் நடத்தியுள்ளார். சங்கத்தின் மூலம் அன்னதானம் செய்வது, இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், ஏழைப் பெண்களின் திருமணத்திற்குப் பணம் கொடுத்து உதவுதல், திருமாங்கல்யம் வாங்கித் தருதல், கூறைப்புடவை எடுத்துத் தருதல், கண் சிகிச்சை, அறுவை சிகிச்சை முதலியவற்றுக்கும் நன்கொடைகள் வழங்குதல் முதலான அறப்பணிகளும் சங்கத்தின் சார்பில் சுதந்திரத் திருநாள், குடியரசு நாள், காந்தி பிறந்த நாள், காந்தி நினைவு நாள் முதலான நிகழ்வுகளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. தீபாவளி, கார்த்திகை, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ஆடிப்பூரம், ராமநவமி முதலிய பண்டிகைகளும் சங்கத்தின் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. சங்க உறுப்பினர்களைக் கொண்டு ‘தயாநிதி’ என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்பு ‘வசந்த குமார்’ என்ற  தனது புதினத்தையும் நாடகமாக்கினார். இந்த இரண்டு நாடகங்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு மகாத்மா ஜி சேவா சங்கத்திற்குச் சொந்தக் கட்டிடம் ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.

 திரைப்படத்துறையிலும் இவர் காலடி எடுத்து வைத்தார். இவர் எழுதிய ‘தயாநிதி’ என்ற நாவல் சித்தி என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. இவரது ‘அனாதைப் பெண்’ என்ற நாவலை ஜூபிடர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. இவர் எழுதிய ‘தியாகக் கொடி’,‘ராஜமோஹன்’,‘நளினி சேகரன்’ போன்ற நாவல்களும் பிற்காலத்தில் திரைப்படமாக வெளிவந்தன. திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். இவரது ‘சித்தி’ படத்திற்காகச் சிறந்த கதாசிரியை விருது கிடைத்தது. ஆனால் அவ்விருதினைப் பெறுவதற்கு இவர் உயிருடன் இல்லை.

அவருடைய காலத்தில் பரத நாட்டியத்திற்கு மதிப்பில்லை. ‘சதிர்’ என்றும் ‘கூத்து’ என்றும் வழங்கப்பட்ட இக்கலை தேவதாசிகளுக்கு மட்டுமே உரிய நடனம் என்று கருதப்பட்டது. இந்த எண்ணத்தை மாற்றி பரதநாட்டியம் உயர்ந்த தெய்வீகக் கலை என்பதை எடுத்துரைத்து பரதக்கலை அனைத்து சிறுமியர்களுக்கும் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தவர் வை.மு. கோதைநாயகி அம்மையார். அம்மையாரின் இக்கருத்துக்குக் கல்கி அவர்கள் தொடக்கத்தில் இருந்தே பெரும் ஆதரவு தெரிவித்து வந்தார்.

அம்மையாரின் முயற்சியாலும் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான வடுவூர் இராமையாபிள்ளை, வைதீஸ்வரன் கோயில் வி.என். முத்துசாமிபிள்ளை முதலியோரின் முயற்சியாலும் நடனக் கலைக்கும் பொது மக்களிடையே நல்ல அங்கீகாரம் கிடைத்தது. சிங்கப் பெருமாள் கோயில் என்னும் ஊர் அமைந்த முதன்மைச் சாலையில் காந்தியடிகளுக்குச் சிலை நிறுவியுள்ளார். அச்சிலையின் கீழ் கோதை நாயகியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அம்மையாரின் தேசிய சேவையைப் பாராட்டி காங்கிரஸ் அரசாங்கம் இவருக்கு செங்கல்பட்டுக்கு அருகே 3 ஏக்கர் நிலமும் மற்றொரு இடத்தில் 7 ஏக்கர் நிலமும் பரிசளித்துப் பாராட்டியது. கோதை நாயகி அம்மையார் அரசாங்கம் தந்த 7 ஏக்கர் நிலத்தைப் பூமிதான இயக்கத்திற்காக வினோபாபாவேயிடம் வழங்கி விட்டார். எழுத்து, இசை, அரசியல், பேச்சு, சமூக சேவை, பெண்கள் முன்னேற்றம் எனப் பல துறைகளில் முத்திரைப் பதித்துச் சிகரம் தொட்டவர் வை.மு. கோதை நாயகி அம்மையார். இவருடைய வாழ்வு மனித சமூகத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

சான்றெண் விளக்கம்

1) தாயம்மாள் அறவாணன், இலட்சிய பெண்டிர், ப.107

2)  இரா. பிரேமா, வரலாற்றின் வெளிச்சம், ப.51

3)  ஜெயந்தி நடராஜன், மங்காப் புகழ்ப் பெற்ற மங்கையர் திலகங்கள், ப.108

4)  இரா. பிரேமா, வரலாற்றின் வெளிச்சம், ப.52